விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/ இந்தியாவிலும் இல்லாமல் இல்லை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
11. இந்தியாவிலும் இல்லாமல் இல்லை!


யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் இந்த நெடுந்தூரப் போட்டியில் என்ற அறிவிப்பு வெளியானது.ஓடிமுடிக்கக்கூடிய தூரத்தின் அளவை பார்த்ததும், பார்த்த வேகத்தில் பின்புறமாகவே ஓடிப்போனவர்கள் அநேகம். நம்மால் முடியுமா என்று முன்வந்து முயல்வேகத்தில் ஓடி மறைந்தவர்களும் அநேகம்.

அப்படி அயரவைக்கும் அந்த ஓட்டப் போட்டியின் தூரம் என்ன? 160 கிலோ மீட்டர் தூரம்தான். ஒலிம்பிக் பந்தயத்தில் மாரதான் ஓட்டப் போட்டிக்குரிய தூரமே 40 கிலோ மீட்டர்தான். அதைவிடநான்கு மடங்குதூரம் அதிகம் என்றால் நடக்கக்கூடிய காரியமா இது!

என்றாலும், போட்டி நடைபெறாமல் போகவில்லை. பயிற்சி உள்ளவர்கள், பலம் நிறைந்தவர்கள், பயமில்லாமல் ஒருகை பார்க்கலாம், என்று வந்தவர்களுடன் தொடங்கி, 24 மணிநேரம் கழித்து முடிவெல்லையை வந்தடைந்தார் ஒரு வீரர்.

இவரா முதலாவதாக வந்தார் என்றால் யாரும் நம்பவில்லை, நம்பவும் முடியவில்லை. இனிக்கும் இருபதுக்குள்ளான வயதுக்குரியராகவா அந்தவீரர் இருந்தார்? இல்லையே! முடிந்துபோன முதுமை என்கிறோமோ அந்த வயதுக்காரராகவே விளங்கினார்.

அவர் சமீபத்தில்தான் தனது 67வது பிறந்தநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடி முடித்தாராம்! அந்த 67 வயது இளைஞர் இதற்குமுன் ஓடிஎங்கேனும் பரிசுபெற்றிருக்கிறார். வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறாரா என்று கேட்டால்,  அவர் இதற்குமுன் எந்தப் போட்டிகளிலும் கலந்து கொண்டதே கிடையாதாம்.

160 கிலோ மீட்டர் தூரத்தை 24 மணி நேரத்திற்குள் ஓடிமுடித்த 67 வயதுக்காரரான வீரரின் பெயர் K.S. சாண்டு (K.S. Chandu) என்பதாகும். இந்திய நாட்டிலே இப்படியும் உடல் திறமும் உள்ள உரமும் உள்ள மக்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்; இந்தியாவில் நல்ல வீரர்கள் இல்லாமல் இல்லை.

இயற்கையே தந்த வளமான மலைப்பகுதிகளையும், வயல்வெளிகளையும், ஜீவநதிகளையும் வைத்துக் கொண்டு பஞ்சம், பசிக்கொடுமை, பற்றாக் குறை என்று பேசிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறோமே, அதேநிலையில் தான் நாமும் விளையாட்டுத்துறையில் இருக்கிறோம்!

விளையாட்டு என்பது பொழுதை வீணடிக்கக் கூடிய, பொருளை விரயமாக்கக்கூடிய காரியமல்ல, ஏதோ சிறிய பரிசைப் பெறுவதற்காகவும், அதேநேரத்தில் பாராட்டைப் பெறுவதற்காகவும் செய்யக்கூடிய செயலுமல்ல. சக்திமிக்க, திறம் மிகுந்த, மக்களை உருவாக்கி உழைக்கும் வல்லமையை அவர்களுக்குக் கற்பித்து ஒற்றுமை உணர்வை வளர்க்கக்கூடிய வகையிலே அனுபவங்களைத் தந்து, சந்தோஷம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கும் பயிற்சி மேடைதான் விளையாட்டுக்களாகும்.

ஒரு நாட்டின் செல்வம் என்பது பணத்தாலும் பொருளாலும் வருவதல்ல. சக்திமிக்க மக்களால்தான் நாட்டின் செல்வம் என்பதை நம்மை ஆள்பவர்கள் உணர்ந்து கொண்டால், இந்தியா உலகநாடுகள் திலகமாகத் திகழுமே சக்திமிக்கவர்கள் இந்தியாவில் இல்லாமல் இல்லை அவர்களைப் பயன்படுத்துபவர்கள் தான் இல்லை. இல்லை இல்லை.