வீரசோழியம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வீரசோழியம்
(புரவலன் வீரசோழன் பெயரால் பாடப்பட்ட இலக்கண நூல்)

பொன்பற்றிக் காவலர்
புத்தமித்திரனார் இயற்றியது

திருநெல்வேலித் தென்னிந்திய
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 1
வெளியீடு 1970

பாயிரம்[தொகு]

கட்டளைக் கலித்துறை

1

மிக்கவன் போதியின் மேதக்(கு) இருந்தவன் மெய்தவத்தால்
தொக்கவன் யார்க்கும் தொடர வொண்ணாதவன் தூயன் எனத்
தக்கவன் பாதம் தலைமேல் புனைந்து தமிழ் உரைக்கப்
புக்கவன் பைம்பொழில் பொன்பற்றி மன் புத்தமித்திரனே

2

ஆயும் குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண்டமிழ் ஈங்கு உரைக்க
நீயும் உளையோ எனில் கருடன் சென்ற நீள் விசும்பில்
ஈயும் பறக்கும் இதற்கு என்கொலோ சொல்லுவது ஏந்திழையே

3

நாமே எழுத்துச் சொல் பொருள் யாப்பு அலங்காரம் எனும்
பா மேவு பஞ்ச அதிகாரமாம் பரப்பைச் சுருருக்கித்
தே மேவிய தொங்கல் தேர் வீரசோழன் திருப் பெயரால்
பூ மேல் உரைப்பன் வடநூல் மரபு புகன்றுகொண்டே

முதலாவது - எழுத்து அதிகாரம்[தொகு]

சந்திப் படலம்[தொகு]

1[தொகு]

அறிந்த எழுத்து அ முன் பன்னிரண்டு ஆவிகள் ஆன, க முன்
பிறந்த பதினட்டு மெய், நடு ஆய்தம், பெயர்த்து இடையா
முறிந்தன அம் மூவாறும், ஙஞணநமன என்று
செறிந்தன மெல்லினம் செப்பாத வல்லினம், தேமொழியே.

2[தொகு]

இறுதிமெய் நீக்கிய ஈராறில் ஐந்து குறில் நெடில் ஏழ்
பெறு வரியான் நெடு நீர்மை அளபு பிணைந்த வர்க்கம்
மறு அறு வல்லொற்று மெல்லொற்றும் ஆம் வன்மை மேல் உகரம்
உறுவது நையும் தொடர்மொழிப் பின்னும் நெடில் பின்னுமே

3[தொகு]

அகரம் வகரத்தினோடு இயைந்து ஔ ஆம் யகரத்தினோடு
அகரம் இயைந்து ஐ அது ஆகும் ஆ ஏ ஓ வினா அந்தம் ஆம்
எகர ஒகர மெய்யில் புள்ளி மேவும் அ இ உ சுட்டாம்
இகரம் குறுகி வரும் குற்றுகரம் பின் ய வரினே

4[தொகு]

ஏயாஎச் சொன்முன் வினாஎடுத் தல்படுத் தல் நலிதல்
ஓயா துரப்பல் எனநால் வகையிற் பிறக்குமெய்கள்
சாயா மயக்கந்தம் முன்னர்ப் பிறவொடு தாமும்வந்து
வீயாத ஈரொற்று மூவொற் றுடனிலை வேண்டுவரே

5[தொகு]

குற்றெழுத் தொன்(று) ஒன் றரையாகு மையௌ இரண்டுநெடில்
ஒற்றெழுத் தாய்தம்இ உஅரை மூன்றள (பு) ஓங்குயிர்மெய்
மற்றெழுத் தன்றுயிர் மாத்திரை யேபெறும் மன்னுகின்ற
ஒற்றெழுத் தின்பின் னுயிர்வரின் ஏறும் ஒளியிழையே

6[தொகு]

உந்தி முதலெழுங் காற்றுப் பிறந்துர முஞ்சிரமும்
பந்த மலிகண் டமுமூக்கும் உற்றண்ணம் பல்லுடனே
முந்து மிதழ்நா மொழியுறுப் பாகு முயற்சியினால்
வந்து நிகழு மெழுத்தென்று சொல்லுவர் வாணுதலே

7[தொகு]

ஆவி யனைத்தும் கசத நபமவ் வரியும்வவ்வில்
ஏவிய எட்டும்யவ் வாறும்ஞந் நான்கும் எல் லாவுலகும்
மேவிய வெண்குடைச் செம்பியன் வீரரா சேந்திரன்றன்
நாவியல் செந்தமிட் சொல்லின் மொழிமுதல் நன்னுதலே

8[தொகு]

ஈறும் மகர ணகரங்க டாமும் இடையினத்தில்
ஏறும் வகரம் ஒழிந்தைந்தும் ஈரைந் தெழிலுயிரும்
வீறுமலிவேங் கடங்கும லிக்கிடை விகாரம்வந் தெய்திடும் மேவிற்றென்று
கூறுந் தமிழினுக் கீற்றெழுத் தாமென்பர் கோல்வளையே

9[தொகு]

நின்றசொலு லீறும் வருஞ்சொன் முதலும் நிரவித்தம்முள்
ஒன்றிடும் போதும் ஒரோமொழிக் கண்ணு முலகிற்கொப்பி
னன்றிய மும்மை விகாரம்வந் தெய்திடும் நன்கியல்பிற்
குன்றுத லின்றி வருதலு முண்டென்று கூறுவரே

10[தொகு]

ஆன்றா முலோபத்தொ டாகம மாதேச மாரியத்துள்
மூன்றா மொழியோ டெழுத்து விகாரம் முதனடுவீ
றேன்றாம் வகையொன்ப தாகலு முண்(டு)அவையெவ் விடத்துந்
தோன்றா வுலகத் தவர்க்கொத்த போதன்றித் தூமொழியே

11[தொகு]

சொன்ன மொழிப்பொருணீக் குநகாரம் அச் சொன்முன் மெய்யேல்
அந்நிலை யாக வுடல்கெடும் ஆவிமுன் னாகிலது
தன்னிலை மாற்றிடும் ஏஓ இரண்டும் தனிமொழிமுன்
மன்னிய ஐஔவு மாகும் வடமொழி வாசகத்தே

12[தொகு]

ஆவும் அகரக் கிரகத்துக் கையும்ஔ வும்உகரக்
கேவும் இருவினுக் காரும் விருத்தி எழிலுகரக்
கோவும் இகரத்திற் கேயுங் குணமென் றரைப்ப வந்து
தாவும் இவைதத்தி தத்தினுந் தாதுப் பெயரினுமே

13[தொகு]

மூன்றொடு நான்கொன்ப தாமுயிர்ப் பின்னுயிர் முந்தின்டு
ஆன்ற மகாரம்வந் தாகம மாகும் அல் லாவுயிருக்
கேன்ற வகாரம் எட் டேற்கும் இரண்டும் இறுதிகெட்டுத்
தோன்று நிலையும் ஒரோவிடத் தாமென்பர் தூமொழியே

14[தொகு]

ஆறா முடலின்பின் தவ்வரின் ஆங்கதைந் தாமுடலாம்
ஊறார்ந்த நவ்வரின் முன்பின தாம் குறிற் பின்புமெய்கள்
ஏறா வுயிர்பின் வரவிரண் டாகும் யவ் வோடுரழ
ஈறா வரில்வன்மை பின்பில்வர்க் கத்தொற் றிடைப்படுமே

15[தொகு]

நான்கொடு மூன்றொன்ப தாமுயி ரின்பின்பு நவ்வருமேல்
ஏன்ற ஞகாரம தாகும் பதினைந்தொ(டு)எண்ணிரண்டாய்த்
தோன்றுடற் பின்னர்த் தகாரம் வரினிரண் டுந்தொடர்பால்
ஆன்றவைந் தாமுடல் ஆம் முன்பி லொற்றுக் கழிவுமுண்டே

16[தொகு]

எண்ணிரண் டாமொற்று வன்மைவந் தாற்பின் பியைந்தவைந்தா
நண்ணிய வொற்றாம் நகரம் வரின்முன்மெய் ணவ்வதுவாம்
தண்ணிய மவ்வந் திடினு மஃதே தனிநெடிற்பின்
பண்ணிய வொற்றுப்பின்றான்வரப் போமொரு காற்பயின்றே

17[தொகு]

பன்முன்ற தாமுடல் நப்பின் வருமெனி னீற்றெழுத்தாம்
பன்னேழதாம் வன்மை பின்வரின் ஆயிடைத் தவ்வுமஃதாம்
பின்னா மிகீரா மதுபன்னொன் றாமுடல் பின்வருமேல்
சொன்னா ரியலின்பின் றோன்று நகார ஞகாரமென்றே

18[தொகு]

ஐம்மூன்ற தாமுடல் வன்மைபின் வந்திடில் ஆறொடைந்தாம்
மெய்ம்மாண்பதாம் நவ் வரின் முன்னழிந்து பின்மிக்கணவ்வாம்
மம்மேல் வரினிரு மூன்றா முடல் மற் றியல்புசந்தி
தம்மா சகலங் கிடப்பின்க ளாமென்ப தாழ்குழலே

19[தொகு]

வன்மைவந் தாற்பின்பு பத்தா முடல்வன்மை யின்வருக்கத்
தன்மையொற் றாகும் ஞநமக்கள் பின்வரிற் சாற்றும்பபோம்
முன்வயிற் கால்வவ் வரின் பதின் மூன்றா முடலழியும்
பின்வயின் தவ்வுங் கடைவன்மைப் பெறுறுமே

20[தொகு]

ஈற்றின்பின் நவ்வரி னீற்றெழுத் தாம் எழில் தவ்வரில் தவ்
வேற்றுப் பதினேழ தாமுட லாம் எய்தும் ஆவியின் பின்
ஆற்றுந் திறல்வல் லினம்வந் திடிலவற் றின்வருக்கம்
போற்று மிவையென்ற வல்லொற்று மெல்லொற்றும் புக்கிடுமே

21[தொகு]

ஆவிபின் றோன்றக் கேடுங்குற் றுகரம் அவற்றின் மெல்லொற்
றேவிய வாறெழில் வல்லொற்று மாம் இனி வன்மையொற்று
மேவி யதன்முன் விளைதலும் வேண்டுவர் ஆவிவந்தாற்
பாவிய முற்றுக ரத்தின் சிதைவும் பகர்ந்தனரே

22[தொகு]

ஈறாம் லகார மதவந் தெதிர்ந்திடில் ஈற்றெழுத்தேல்
ஆறாங் கடைவன்மை யாம்வன்மை தோன்றில் ஐந் தாமுடலாம்
ஆறா முடல்வல் லினம்வரின் ஆவிமு னாவியொடுங்
கூறா ழகார மழிந்து டகாரங் குறுகிடுமே

23[தொகு]

ஒன்றுக் கொருவோர் இருவீர் இரண்டுக்கு மூன்றுமும்மூ
அன்றுற்ற நாலுக்கு நான்கைந்தை யாறறு ஏழெழுவாம்
தொன்றுற்ற எட்டுக்கெண் ணொன்பதொன் பானொடு தொண்டொள்ளும் பான்
பன்றுற்ற நூறு பதுபஃது பத்து நூ றாயிரமே

24[தொகு]

ஆவிக் குறிற்பின் ஞநமவத் தோன்றிலவ் வொற்றிடையாம்
மேவிய பன்னொன்று தோன்றில்வவ் வாம் மெய்யில் ஐந்திருமுன்
றாவது முண்(டு)ஒற் றொரோவழித் தோன்றிடும் ஆவுமவ்வாய்த்
தாவிய வைந்தா முயிர்பின் பெறுவன தாமுமுண்டே

25[தொகு]

நின்றசொல் லீற்றுமெய்ம் முன்னா முதலுயிர் நீண்டுமெய்யும்
பொன்று முயிரொ டுயிர்மைவந் தால் வந்த ஆவியும்போய்க்
குன்று மொரோவழி கூறிய ஆவி யொரோவழிப்போம்
அன்றி லனள ணமனக்க ளொன்றுக்கொன் றாவனவே

26[தொகு]

கூறிய சுட்டின்பின் னாய்தமுங் கூடும் சுட் டீற்றுகரம்
மாறி யுயிரிரண் டாவது மாம் வந்த சுட்டொருகால்
வீறுடை நெட்டெழுத் தாகும் அளபும் விரிந்துநிற்கும்
நூறுடை வெள்ளிதட் டாகரைக் கோயி னுடங்கிடையே

27[தொகு]

துப்பார் பெயர்வேற் றுமையி னகத்துந் தொகையின்கண்ணுஞ்
செப்பார் மொழிமுதற் பின்சாரி யைவரிற் றேர்ந்தவற்றுள்
ஒப்பார் மொழியீ றுயிரொடும் போமொரு காலுடல்போம்
தப்பா வுயிர்மெய் கெடுமொரு காலென்பர் தாழ்குழலே

28[தொகு]

எண்ணிரண் டாமொற்றுப் பன்மூன்று மெய்நின் றிவற்றின் பின்னே
அண்ணிய தவ்வரின் தட்டற வாம் அவை யாய்தமுமாம்
பண்ணிய சந்தி பகரா தனவும் பகர்ந்தவற்றாற்
கண்ணி யுரைக்க மதியால் வனசக் கனங்குழையே

2 சொல்லதிகாரம்[தொகு]

1 வேற்றுமைப் படலம்[தொகு]

29[தொகு]

எட்டாம் எழுவாய் முதற்பெயர் வேற்றுமை ஆறுளவாம்
கட்டார் கருத்தா முதற்கா ரகம் அவை கட்டுரைப்பின்
ஒட்டார் கருத்தா கருமங் கரணமொண் கோளியொடும்
சிட்டா ரவதியொ டாதாரம் என்றறி தேமொழியே

30[தொகு]

ஒருவ னொருத்தியொன் றாஞ்சிறப் போடுபல் லோர்பலவைக்
கருது முறையிற் கலப்பன வேற்றுமை காண்முதல்சு
மருவும்அர் ஆர்அர்கள் ஆர்கள்கள் மார்முதல் வேற்றுமையின்
உருவம் விளிவேற் றுமையொழித் தெங்கு முறப்பெறுமே

31[தொகு]

ஒருவ னொருத்தி பலரொன் றொடுபல வஞ்சிறப்பின்
உருபுகண் மூன்று முடன்வைத்துப் பின்னெட்டு வேற்றுமையும்
மருவ நிறுவி யுறழ்தர வாங்கா ரகபதங்கள்
உருவு மலியு மறுபத்து நான்குள ஒண்டொடியே

32[தொகு]

ஆதியி லா ண்பெ ணலியென்று நாட்டி யதினருகே
ஓதிய வேற்றுமை யேழையுஞ் சேர்வித் தொருங்க தன்பின்
வாதிய லொன்றொ டிரண்டு பலவென வைத்துறழத்
கீகிய லாத வறுபத்து மூன்றுறந் தேர்ந்தறியே

33[தொகு]

கூறிய சொற்பின் பொருண்மாத் திரத்திற் குலவெழுவாய்
வீறுடை வேற்றுமை யெய்து மொருவ னொருத்தியொன்றின்
ஏறிய சுப்பல விற்சுவ்வுங் கள்ளுமெங் கும்மழியும்
ஊறிய சுச்சிறப் புப்பல ரிற்கள் ளொழிந்தனவே

34[தொகு]

ஐயென் பதுகரு மத்திரண் டாவ ததுவொருகாற்
பைய வழிதரும் மூன்றோடொ டாலாம் பகர்கருத்தா
வைய நிகழ்கர ணத்தின் வரும் குப் பொருட்டென்பல
மெய்திகழ் வேற்றுமை நான்காவ தாமிக்க கோளியிலே

35[தொகு]

ஆனாளா ரார்க ளதுவின வாறிற் குடைப்பின் குவ்வேல்
நூனா டியபத மாநூவ லாதார மேழினிற்கே
தானா முழைவயின் பக்க லுழியில்கண் சார்பிறவும்
வானா மலிநின்ற வற்றில் வரூஉமைந் தவதியிலே

36[தொகு]

ஆயாளி யேயவ்வொ டாவானோ லோயீ ரளபெடைகாள்
மாயா விளியி னுருபுகள் மற்றிவை முன்னிலைக்கண்
ணேயாகும் முன்சொன்ன வேழ்வேற் றுமையுமெல் லாவிடத்தும்
ஓயா தியல்கை யுணர்பெரி யோர்த முரைப்படியே

37[தொகு]

உன்னுமென் னுந்தன்னும் யாவுமவ் வும்மிவ்வு முவ்வுமெவ்வு
மென்னு மிவற்றின்முன் னீநான்றான் சுவ்வரில் யாமுதல
வன்னும்வள் ளுந்துவ்வும் வையிஞ் சிறப்பினீர் நாமொடுதாம்
பின்னிலைந் தும்வர் பலரிற்கள் ளோடுவர் கள்ளென்பவே

2. உபகாரகப் படலம்[தொகு]

38[தொகு]

மேதகு நற்றொழில் செய்வான் கருத்தா வியன்கருவி
தீதில் கரணம் செயப்பட்ட தாகுந் திறற்கருமம்
யாதனி னீங்கு மவதிய தாம்இட மாதாரமாம்
கோதறு கோளிமன் கொள்பவ னாகுங் கொடியிடையே

39[தொகு]

வரைநின் றிழிந்தங்கொர் வேதியன் வாவியின் கண்மலிந்த
விரைநின்ற பூவைக் கரத்தாற் பறித்து விமலனுக்குத்
துரைநின்ற தீவினை நீங்கவிட் டானென்று சொல்லுதலும்
உரைநின்ற காரக மாறும் பிறக்கும் ஒளியிழையே

40[தொகு]

காரணந் தான்தெரி தான்தெரி யாக்கரு மந்தலைமை
ஆரணங் கேயைந் துளகருத் தாஅச லஞ்சலமாம்
பூரண மாகும் அவதிபுறமக மாங்கரணம்
சீரணங் கார்வங் கிடப்பிரப் பாங்கோளி தேமொழியே

41[தொகு]

பற்றொடு வீடே யிருபுறந் தான்தெரி தான்தெரியா
நற்கருத் தாத்தீ பகமாங் கருமம் நான் காதாரமேற்
பொற்பமர் சேர்வு கலப்புப் புலனொ டயலென்பதாம்
கற்பு மலியு மிருபத்து மூவகைக் காரகமே

42[தொகு]

ஆதிய தான்தெரி யாக்கருத் தா அதல் லாக்கருத்தா
ஆதிய தாறொடு மூன்றும் பெறுமென்பர் ஆதியையே
ஓதினர் தான்தெரி யாக்கரு மத்திற்(கு) ஒழிகருமம்
மேதகு மூன்றிரண் டாறுநான் காமென்பர் மெல்லியலே

43[தொகு]

மூன்றைந்தொ டாறு கரணம் பெறும் முரட் கோளியதே
மூன்றிரு மூன்றொடு நான்காந் தருமுறை யால் அவதி
தோன்றுமைந் தாம் மற்றை யாதார மேழின்க ணேயென்பவாம்
வான்றிக டெய்வ வடநூற் புலவர்தம் வ்வாய்மொழியே

உபகாரப்படலம் முற்றும்.

தொகைப் படலம்[தொகு]

44[தொகு]

நாமங்க ளிற்பொருந் தும்பொருள் நற்றொகை அத்தொகைக்கண்
தாமங் கழியுமுன் சாற்றிய வேற்றுமை வேற்றுமையைச்
சேமங்கொள் சார்பாக வெய்திய சொல்லுஞ் சிலவிடத்துப்
போமங் கதன்பொருள் தன்னையெல் லார்க்கும் பொருட்படுத்தே

45[தொகு]

தற்புரு டன்பல நெற்கன்ம தாயந் தாங்கியசீர்
நற்றுவி குத்தொகை நாவார் துவந்துவம் நல்லதெய்வச்
சொற்பயன் மாந்தர்க ளவ்விய பாவமி தென்றுதொன்மை
கற்பக ம்பபகர்ந் தார்தொகை யாறும் கனங்குழையே.

46[தொகு]

எழுவாய் முதலெழு வேற்றுமை யோடு மெழுந்தடையில்
வழுவாத நஞ்சொடெட் டாந்தற் புருடன் வளர்துவிகு
தழுவார்ந்த எண்மொழி முன்னாய் வருந்தத் திதப்பொருண்மேல்
குழுவா ரொருமையொப் புப்பன்மை யொப்புக் குறியிரண்டே.

47[தொகு]

இருமொழி பன்மொழி பின்மொழி யெண்ணோ டிருமொழியெண்
மருவும் விதியர் ரிலக்கண மற்றைச் சகமுன்மொழி
பரவும் திகந்தரா ளத்தொகை யென்னப் பலநெற்றொகை
விரியுமொ ரேழவை வேற்று மொழிப்பொருண் மெல்லியலே

48[தொகு]

முன்மொழிப் பண்பு மிருமொழிப் பண்பு மொழிந்தமைந்த
பின்மொழி யொப்பொடு முன்மொழி யொப்பும் பிணக்கொன்றிலா
முன்மொழி நற்கருத் தும்முன் மொழிநற் றுணிவுமென
நன்மொழி யார்கன்ம தாரய மாறென்ன நாட்டினரே

49[தொகு]

முன்மொழி யவ்வியஞ் சேர்தொகை பேர்முன் மொழித்தொகையே
சொன்மொழி யவ்விய பாவம் மருவும் துவந்துவமும்
வன்மொழி யாமித ரேதரம் வாய்ந்த சமாகாரமாம்
நன்மொழி யானுரைத் தார்கள் சமாசம் நறுநுதலே.

50[தொகு]

வேற்றுமை யும்மை வினைபண் புவமையொ டன்மொழியென்(று)
ஆற்றுந் தொகைசெந் தமிழணர்க ளாறென்பர் ஆய்ந்தபண்பில்
தோற்று மளவு வடிவு நிறஞ்சுவை சொல்பிறவும்
ஏற்று மிருபல் லளவு நிறையெண் பெயரும்மையே.

51[தொகு]

அன்மொழி நற்றொகை யிற்றொகும் போதுமல் லாவிடத்தும்
நன்மொழிப் பின்பு நடுவுங் கெடுநன் கொரோவிடத்து
முன்மொழி யீறு கெடும் பன்மை யாகும் முரட்பொருள் கோள்
பின்மொழி முற்சொற் பிறிதோர் மொழியொ டிருமொழியே.

தொகைப்படலம் முற்றும் .

தத்திதப்படலம்[தொகு]

52[தொகு]

அன்னிய னீன னிகனேயன் வான்வதி யம்மிகரம்
வன்னு அகரத்தொ டானாளன் மானக னாதிமற்றுந்
துன்னிய சீர்த்தத் திதத்தின் பிரத்தியஞ் சுவ்வென்பது
மன்னு மரபு பிழையாம லெங்கும் வரப்பெறுமே.

53[தொகு]

உண்ணு மிதனா லுரைக்கு மிதனை யுடையனிது
பண்ணு மிதனைப் பயிலு மிதிற்பயன் கொள்ளுமித்தால்
எண்ணு மிதனை யிதனுக்கு நாயக னீங்கிருக்கும்
நண்ணு மிதனை யிதையொக்கு மிங்குள னன்னயத்தே.

54[தொகு]

மகனிவ னுக்கிய ளுக்கிந்த வர்க்கத் தினனிவனைத்

தகவிய தேவ னெனும்யாவ னென்றுநற் றத்திதங்கள்
நிகழும் பிற பொரு ளின்கண்ணு நிற்கும் நினைந்தவற்றைப்
புகன்மலி தெய்வப் புலவர்க்கும் பொச்ச மடக்கரிதே.

55[தொகு]

மையம் புதுவுகம் வல்லள வாதி குணக்குறிப்பில்
வையம் வலிநெடு வாதிபின் னாம்மன்கன் னானன்வன்னாள்
ஐய மவனமவள் மிம்முத லாகுந் திரப்பியத்திற்
பைய மதிக்க வுலகத் தவர்க்குப் பயன்படவே.

56[தொகு]

அச்சியொ டாட்டி யனியாத் தியத்தி தியாளொடள்ளி
இச்சி யாதியும் பெண்மைத் தெளிவாம் எழில்வடநூல்
மெச்சிய வாகாராந் தத்தினு மூர்ப்பின்னு மிக்க ஐயாம்
நச்சிய ஈகாரந் தானே குறுகும் நறுநுதலே.

57[தொகு]

முந்திய வர்க்கங்க ளைந்தினு முன்னொன்றின் மூன்றடங்கும்
பந்தியில் தெய்வ மொழிமுதல் யவ்வேல் பகருமிய்யாம்
வந்திடும் லவ்விற் குகரமு மாகும் வரில்ரகரம்
அந்த இரண்டொ டகரமு மாமென்பர் ஆயிழையே.

58[தொகு]

முதலொற் றிரட்டிக்கு முப்பத்தொன் றெய்திடின் முன்பினிஃ
திதமிக்க வைந்தாமெய் யாகுந் தனியே யிதனயற்குப்
பதமிக்க சவ்வரு மெண்ணான்கு தவ்வாமுப் பானுறுமுன்
றதனுக்கு லோபமும் யவ்வொடு கவ்வு மறைவர்களே.

59[தொகு]

கூட்டெழுத் தின்பின் யரலக்கள் தோன்றிடிற் கூட்டிடையே
ஓட்டெழுத் தாகப் பெறுமொ ரிகாரம் வவ் வுக்கொருவ்வாம்
மீட்டெழுத் துத்தமி ழல்லன போம்வேறு தேயச்சொல்லின்
மாட்டெழுத் தும்மித னாலறி மற்றை விகாரத்தினே.

தத்திதப்படலம் முற்றும்

தாதுப் படலம்[தொகு]

60[தொகு]

மன்னிய சீர்வட நூலிற் சரபச வென்றுவந்து
துன்னிய தாதுக் களின்போலி போலத் தொகுதமிழ்க்கும்
பன்னிய தாதுக் களைப்படைத் துக்கொள்க முன்னிலையின்
உன்னிய வேவ லொருமைச்சொல் போன்றுல கிற்கொக்கவே.

61[தொகு]

நடவடு செய்பண்ணு நண்ணுபோ சிந்தி நவிலுண்ணிரு

கிடவிடு கூறு பெறுமறு கொள்ளழை வாழ்கிளைவெல்
கடநடு தங்கு கசிபொசி பூசு மிகுபுகுசெல்
இடுமுடி யேந்துகொல் இவ்வண்ண மற்று மியற்றிக்கொள்ளே.

62[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=வீரசோழியம்&oldid=1062994" இருந்து மீள்விக்கப்பட்டது