வெற்றிக்கு எட்டு வழிகள்/002-010
ஆற்றல்
வெற்றி அனைத்துக்கும் பொருள் இயக்கு நிலையே, ஆற்றலாகும். உயிர்பற்ற நிலக்கரியை அது நெருப்பாக மாற்றிவிடுகிறது; நீரை ஆவியாக மாற்றுகின்றது; மிக எளிய திறமை நுண்திறமையாக வளருவதுவரை அதற்கு உயிரூட்டிப் பலப்படுத்துகிறது; அது அறியாமை மனத்தைத் தொடுகின்ற வேளையில் முன்பு இயங்காத் தன்மையில் உறங்கிக் கொண்டிருந்த ஒன்றை உயிர்ப்புள்ள ஒரு நெருப்பாக மாற்றிவிடுகின்றது.
ஆற்றல் ஓர் ஒழுக்க அறம்; சோம்பல் அதன் எதிர்மறையான மறம். அறம் என்ற நிலையில் ஆற்றல் பண்படுத்த வேண்டியதாகும்; முயற்சியுடனிருக்கத் தன்னைத் தானே எழுச்சியூட்டிக் கொள்வதின் மூலம் சோம்பேறியான மனிதனும் சுறுசுறுப்புள்ளவனாக மாறிவிடலாம். சுறுசுறுப்புடைய மனிதேனாடு ஒப்பிடுகையில் சோம்பேறியானவனை அதில் பாதியளவு கூட உயிருள்ளவனாகக் கொள்ள முடியாது. சோம்பேறி மனிதன் உறக்கத்திலிருந்து தன்னைத் தான் தட்டியெழுப்பு முன்னரே சுறுசுறுப்புடைய மனிதன் குறிப்பிடத்தக்க அளவு வேலையைச் செய்து முடித்துவிடுகின்றான்; சோம்பேறி மனிதன் ஒரு வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கையில், சுறுசுறுப்புள்ளவன் வலியச் சென்று ஐந்தாறு வாய்ப்புக்களைத் தானே வருந்திக் கண்டு பயன்படுத்தி விடுகின்றான். முன்னவன் தன் கண்களைக் கசக்கிக் கொண்டிருக்கின்ற வேளையிலேயே பின்னவன் காரியங்களைச் செய்து முடிக்கின்றான்.
ஆற்றல் மூல ஆற்றல்களில் ஒன்று; அதுவின்றி எதையுமே செய்து முடிக்க வியலாது. செயல் வகைகள் அனைத்திற்கும் அதுவே அடிப்படையான மூலக்கூறு. இவ் உலகம் முழுமையாகப் புரியாததாயினும், சோர்வற்றதாயிருக்கின்ற ஆற்றலின் தோற்றக் காட்சியேயாகும். ஆற்றலே வாழ்வு; ஆற்றலின்றி வாழ்வுமில்லை. ஒரு மனிதன் செயல்படத் தவறுவானேயானால் அவன் இறந்தவனேயாவான். மனத்தைப் பொறுத்த நிலையிலும், உடலைப் பொறுத்த நிலையிலும் மனிதன் செயல்படுதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றானே அன்றி பன்றித்தனமான இளைப்பாறுதல் பெறுதற்காகவன்று. உடலிலுள்ள தசைநார் ஒவ்வொன்றும் முயற்சிக்கான நெம்புகோலாகும். ஒவ்வோர் எலும்பும் நாடி நரம்பும் உழைப்பிற்காகவே உருவாக்கப் பட்டிருக்கின்றன; நேர்மையாகப் பயன்படுத்தப் படுதற்காகவே ஒவ்வோர் இயக்கமும், செயல் திறனும் அமையப் பெற்றிருக்கின்றது. முயற்சிகள் அனைத்தும் செயல்படுதலையே தம் முடிவாகக் கொண்டிருக்கின்றன; செயல்திறங்கள் அனைத்தும் பயன்படுத்தப் படுவதிலேயே வாழ்வில் நிறைவு நிலை ஈய்துகின்றன.
வாழ்வில் சோம்பேறியான மனிதனுக்கு ஆக்கம் இல்லை; மகிழ்ச்சியில்லை; தஞ்சமில்லை; ஓய்வுமில்லை; அவன் நாட்டங் கொள்கின்ற இளைப்பாறுதல் கூட அவனுக்குக் கிடைப்பதில்லை; எனவே, திறமையுடன் முறைப்பாடாக உழைப்பதைத் தவிர்ப்பதால் மிகக் கடுமையான பளுவைத் தன்மீது சுமத்திக் கொள்கின்றான் என்ற பொருள்பட “சோம்பேறியான மனிதனே மிகக் கடுமையாக உழைக்கின்றான்” என்று முதுமொழி பொருட் செறிவுடன் கூறுகின்றது.
ஆற்றல் வாய்ந்த மனிதன் ஒரு நோக்கத்தையோ பல நோக்கங்களையோ செய்து முடிப்பதில் தன்னை முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்கின்றான். நோக்கம் நன்மையான ஒன்றாக இருக்கலாம்; அன்றித் திண்மையான ஒன்றாக இருக்கலாம்; ஆனால், திண்மையாகவிருப்பின், அது தன் முன்கை முட்டியால் சுவரில் குத்தித் தன் கையினையே காயப்படுத்திக் கொள்கின்ற ஒருவனைப் போன்று, செய்பவனையே அழித்துவிடும் அளவிற்கு எதிர்தாக்குகின்ற வகையில் ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். உழைப்பாற்றல் எப்போதும் நன்மையானதே. தன்னோக்கில் செயல்படுத்துகையில் மட்டுமே அது பயனுடையதாகவிருக்கும்; அந்த நோக்கங்களை அடைந்துவிட்டால் அது மகிழ்ச்சி, வெற்றி, ஆக்கம் ஆகியவற்றை உருவாக்குகின்றன.
ஆற்றலே இல்லையெனும் நிலையைவிட ஆற்றல் தவறாகவேனும் செயல்படுத்தப் படுகின்ற நிலை சிறந்ததேயாகும். “வெப்பமாகவோ குறிர்ச்சியாகவோ நான் உன்னை ஏற்றுக் கொள்வேன்; நீ இளஞ் சூடாகவிருந்தால் உன்னை என் வாயினின்றும் நான் உமிழ்ந்துவிடுவேன்” என்று புனித ஜான் அவர்கள் கூறிய தொடர்களில் இது வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கின்றது. உழைப்பாற்றலை உருமாற்றும் செயற்பாடு அதனுடைய நன்மையானதும், தீமையானதுமான கூறுகளில் இருப்பதையே வெப்பத்தினுடையவும், குளிர்ச்சியினுடையவும் உச்ச நிலைகள் இங்குக் குறிப்பிடுகின்றன.
“பெருமளவில் பாவியாக இருப்பவனே பெருமளவில் ஒழுக்கவாணராகிவிடுகின்றான்” என்ற முதுமொழியில் இந்த உண்மை மிக அழகாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றது.
ஆற்றலே உயிர்ப்புடையது. அதின்றி எதையும் செய்து முடிக்கவியலாது; அறமேனும் அங்கிருப்பதில்லை; ஏனெனின், அறமென்பது தீமையைச் செய்யாமலிருப்பதில் மட்டும் அடங்கியிருப்பதன்று. ஆனால், முதன்மையாக நன்மை செய்வதிலேயும் அடங்கியிருக்கின்றது. இதை முயற்சி செய்பவர்கள் இருப்பினும் கூட, ஆற்றல் போதாமையால் தோல்வியடைந்து விடுகின்றனர். அவர்களுடைய முயற்சிகள் ஆக்கமான பயன்களை உண்டுபண்ணப் போதிய வலுவற்றனவாயிருக்கின்றன. அத்தகையோர் தீயநெறி கொண்டவர்களல்லர்; அவர்கள் எப்போதுமே மன மறிந்து கேடு செய்வதில்லை என்பதற்காக நன்மக்கள் தோல்வியுற்றுவிடுவதாக வழக்கமாக அவர்களைக் குறித்துப் பேசப்படுகின்றது. ஆனால், கேடு செய்வதற்கான முன்டு இல்லாமை நன்மை வழி நடப்பதாகாது; அந்நிலை வலுவும் ஆற்றலுமின்றி இருப்பதேயாகும். கேடு விளைத்தற்கான ஆற்றலிருந்தும் நன்மையான வழிகளில் தம் ஆற்றல்களை நெறிப்படுத்த வேண்டுமெனத் தேர்ந்து தெளிபவனே உண்மையில் நல்ல மனிதனாவான். எனவே, ஆற்றல் இல்லாத நிலையில் ஒழுக்க ஆற்றல் இருப்பதில்லை. இருக்கின்ற நன்னெறிப்பான்மை உள்ளுறைவதாகவும், உறங்குவதுமாகவே இருக்கும்; இயக்கச் சத்தியன்றுத் தானே இயங்குகை இல்லாதவாறு போன்று நன்மையுந் தானே நகருவதில்லை.
வாழ்வின் ஒவ்வொரு துறையிலும், உலகப் பொருளியலான திசைகளிலாயினும் சரி, ஆன்மீக திசைகளிலாயினும் சரி, செயல்கள் அனைத்திலும் ஆற்றலே அறிவுறுத்து ஆற்றலாக அமைந்திருக்கின்றது. படைவீரனிடமிருந்து மட்டுமன்றி, ஒவ்வொரு சிந்தனை நிலையிலுமுள்ள ஒவ்வோர் ஆசிரியன் வாயினின்றோ எழுதுகோலினின்றோ பறிக்கின்ற செயலுக்கான அழைப்பு, உறங்கிக் கொண்டிருக்கும் தனது ஆற்றலைத் தட்டியெழுப்பிக் கொண்டு கடமையை ஊக்கத்துடன் செய்யுமாறு மக்கட்கு விடுகின்ற அழைப்பேயாகும். வாழ்வின் கோணங்கள் அனைத்திலுமே ஒரே வகையான ஆற்றல் தேவைப்படுகின்றது; படை வீரர், பொறியியல் வல்லுநர், வணிகர் ஆகியோருக்குரிய விதிகள் மட்டுமே செயல் முறை விதிகள் என்பதில்லை; திருநிலையினர், அறிவர்கள், ஒழுக்கவாணர்கள் ஆகியோரின் கட்டளைகள் அனைத்துமே செயல்முறை குறித்த கட்டளைகளேயாகும்.
“மிகவும் விழிப்புணர்ச்சியுடன் இரு” என்று தம் மாணவர்களுக்குப் பேராசிரியர்களில் ஒருவர் கூறிய அறிவுரை, ஒருவன் கொண்ட குறிக்கோள் கைகூட வேண்டுமெனின் சோர்வற்ற ஆற்றல் இன்றியமையாதது என்பதைச் சுருக்கமான சொற்களில் விளக்கிக் காட்டுவதாயிருக்கின்றது; “ஓயாத விழிப்புணர்ச்சியே விடுதலையின் விலையாகும். ஏதேனும் செய்து முடிக்க வேண்டுமெனின், மனிதன் தானே அதைச் செய்வானாக; அதை ஊக்கத்துடன் பொருதுவானாக” என்று கூறியிருப்பதுவும் அதே ஆசிரியரேயாகும். செயற்பாடு படைப்புத் திறனுடையது, அதை முறைப்படி பயன்படுத்துங்கால் பெருக்கமும், வளர்ச்சியும் தொடர்ந்து வந்துச் சேரும். மேலும் அதிகமான ஆற்றலைப் பெற வேண்டுமெனின், நம்பால் ஏற்கனவே அமைந்துள்ள ஆற்றலை அதன் முழு அளவிற்கு நாம் பயன்படுத்தியாக வேண்டும். இருப்பவனுக்கே மேலும் தரப்படுகின்றது, ஏதேனும் ஒரு கடமையில் ஊக்கமுடன் தனது கையை வைப்பவனுக்கே ஆற்றலும் விடுதலையும் வந்து சேர்கின்றன.
ஆற்றல் படைப்புச் சத்தியுடையதாயிருக்க நன்னோக்குகளை நோக்கி அது திருப்பப்படுதல் மட்டும் போதுமானதாகாது அதனை அக்கறையுடன் கட்டுப்படுத்திப் பேணிக் காக்கவும் வேண்டும். 'ஆற்றலைப் பேணிக் காத்தல்' என்பது எந்த ஆற்றலும் வீணாக்கப்படுவதோ அழிந்துபடுவதோ இல்லை என்ற இயற்கையின் விதியை எடுத்துரைக்கும் தற்காலச் சொல்லாகும்; தன் ஆற்றல்களின் விளைவுகள் பயனுடையதாய் இருக்கவேண்டுமெனின், மனிதன் இந்த அடிப்படையில் அறிவுத் திட்பமுடன் பணியாற்ற வேண்டும். கூச்சலும், பரப்பரப்பும் மிகுதியான அளவு ஆற்றல் வீணாவதேயாகும். இயங்கிக் கொண்டு இருக்கின்ற ஆவியில் இரைச்சல் கேட்பதே இல்லை. தப்பி வெளியேறும் ஆவியே மிகுதியான இரைச்சலை உண்டு பண்ணுகின்றது. திட்பமிக்க வெடிமருந்தே குண்டைக் குறிவைத்த இடத்திற்குச் செலுத்துகின்றது.
மனிதன் தன் ஆற்றல்களைப் பேணிக் காத்துத் தன் குறிக்கோள் நிறைவேற்றுதற்காக அவற்றை ஒருமுகப்படுத்திப் பலப்படுதுகின்ற அளவிற்கு அவன் ஆறுதலும், அமைதியும், ஓய்வும், பெறுகின்றான். கூச்சலைச் சக்தியென்று பொருள் கொள்வது பெரும் மயக்கமாகும். அதட்டி வெருட்டும் புகழேங்கியான பெரிய குழந்தையை யாருமே இயக்க வியலாது. உடலைப் பொறுத்த அளவிலேயே அவன் மனிதன்; ஆனால், மனத்தைப் பொறுத்த அளவில் அவன் ஒரு கைக் குழந்தையேயாகும்; எதையும் செய்ய வலிமையில்லாத நிலையிலும், பிறர்க்குக் காட்ட வேலைப்பாடு இல்லாத நிலையிலும், தான் சாதித்தது என்ன, தான் சாதிக்கக் கூடியது என்ன என்பதை இரைந்து பறைசாற்றுவதன் மூலம் அதை ஈடுசெய்ய முற்படுகின்றான்.
“அசைவற்ற நீர்த்தேக்கம் ஆழமாகவே இருக்கின்றது”; பெரும் உலகின் ஆற்றல் செவிப் புலனாகாதவையாகவே இருக்கின்றன. அமைதி எங்குளதோ அங்கே மிகப் பெரிய ஆற்றலுமுள்ளது. வலிமையான, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆறுதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட மனத்தின் திண்ணமான குறியீடு அமைதியேயாகும். அமைதியான மனிதனுக்கு அவனுடைய தொழில் முறை தெரியும் என உறுதியாக நம்பலாம். அவன் பேசுகின்ற சொற்கள் சிலவே, ஆயினும் அவை பல கூறும். அவனுடைய வழிவகைகள் நன்கு திட்டஞ்செய்யப்பட்டவை; அவை நன்கு சமனாக்கப்பட்ட இயந்திரம் போன்று இயங்குதல் உண்மையேயாகும். முன்னோடும் நெடுந் தூரத்தை அவன் காணுகின்றான்; நேராகத் தன் குறிக்கோள் நோக்கிச் செல்லுகின்றான். இடர்ப்பாடு எனும் பகைவனை அவன் நண்பனாக மாற்றிவிடுகின்றான்; “எதிரி தன் வழித்துணையாகும் போது அவனுடன் ஒத்திணங்க” இவன் நன்கு கற்றுக் கொண்டுவிட்டதால் நலஞ் சேரும் வகையில் அவனைப் பயன்படுத்திக் கொள்கின்றான். கூரறிவு படைத்தளபதியைப் போன்று ஏற்படவிருக்கும் நெருக்கடிகள் அனைத்தையும் அவன் முன்னறிந்து கொண்டவனாகின்றான். அவனுடைய சிந்தனைகளில் தீர்ப்பின் அறிவுரைகளில் அவன் காரணங்களைக் கலந்தாராய்ந்து தற்செயல் நிகழ்ச்சிகள் அனைத்திலுமுள்ள சிறப்பைக் கண்டறிகின்றான். அவன் என்றுமே வியப்பிற்கு ஆளாவதில்லை; என்றுமே பரபரப்படைவதில்லை; தனது சொந்த உறுதிப்பாட்டைப் பாதுகாப்புடன் கொண்டு செலுத்துவதோடு, தனது ஆதரவைப் பொறுத்து உறுதியுடனும் இருக்கின்றான்.
களைப்பினால் செத்துச் செயலற்று நிற்கும் நிலையிலிருந்து வேறுபட்டது அமைதி. அது ஒருமுகப்படுத்தப்பட்ட ஆற்றலின் உச்சியாம். அதன் அடித்தளத்தில் குவிமையப் படுத்தப்பட்ட மனநிலை அமைந்திருக்கின்றது. கலக்கத்திலும், கிளர்ச்சியிலும் மன நிலை சிதறிவிடுகின்றது. அது பொறுப்பிழந்து ஆற்றலோ, சிறப்போ இல்லாதாகி விடுகின்றது. குழப்பமுற்றவனாகவும், சிடுசிடுப்பாகவும் சீற்றமுற்றனாகவும் இருக்கும் மனிதனுக்குச் செல்வாக்கு இருப்பதில்லை. அவன் கடிந்து விலக்குகிறானே அன்றிக் கவருவதில்லை. மெத்தனப் போக்குடைய அண்டை வீட்டுக்காரன் வெற்றியடைவதும், அவனைப் பிறர் நாடிச் செல்வதும், அதேபோது எப்போதுமே பரபரப்பும், கவலையும், தொந்தரவையும் கொண்டுள்ள தான் தோல்வியடைவதும், தன்னைப் பிறர் தவிர்த்து கடப்பதுவும் ஏன் என்று அவன் வியப்புறுகின்றான். அண்டை வீட்டுக்காரன் அமைதியான மனிதனாக இருப்பதாலும் ஆழ்ந்தாய்ந்து செயலாற்றுபவனாக இருக்கின்றான்; மிகுதியான வேலைகளை விரைந்து முடிப்பதன்றி அதை மிகத் திறமையோடும் செய்து முடிக்கின்றான்; மேலும், மிகுந்த தன்னடக்கமும், ஆண்மையும் உடையவனாக இருக்கின்றான். இதுவே அவனுடைய வெற்றிக்கும் செல்வாக்கிற்கும் காரணமாகும். அவனுடைய ஆற்றல் அடக்கியாளப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோது அடுத்த மனிதனின் ஆற்றல் சிதறிச் சின்னாபின்ன மடைகின்றது.
ஆக்கமெனும் ஆலயத்தின் முதல் அடிநிலை ஆற்றலேயாகும்; முதன்மையானதும், சிறப்பானதுமான இந்த ஆற்றலின்றி ஆக்கம் இருக்கவே முடியாது. ஆற்றலில்லையெனின் திறமையில்லை என்றுதான் பொருள்படும். உழைப்பிற்கான இயற்கை விருப்பு அங்கில்லை யாதலால் ஆண்மை மிக்க தன்மதிப்பும், தன்னுரிமையும் இருப்பதில்லை. வேலையில்லாதோரில் பலர் உழைப்பிற்குரிய முதல் இன்றியமையாத ஆற்றல் இல்லாத காரணத்தால் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட முடியாதவர்களாக இருப்பதைக் காணலாம். உடல் கொழுத்தும், மனம் மந்தமாகவும் இருக்கும் மனிதன் இருக்கின்ற தனது போக்கை ஒவ்வொரு நாளும் மிகுதியாக்கி, உழைப்பிற்குத் தன்னை மேலும் தகுதியற்றவனாக்கி, அதன்மூலம் வாழ்க்கைக்கே தகுதியற்றவனாகி விடுகின்றான்.
ஆற்றலுடைய மனிதன் வேலையில்லாததும், இடர்ப்பாடுடையதுமான சிறுசிறு காலங்களைக் கடக்க நேரிடலாம். ஆனால், நிலையாக வேலையற்றிருப்போரில் ஒருவனாகிவிடுதல் அவனுக்கே இயலாத காரியமாகும். அவன் வேலையைத் தேடிக் கண்டுபிடித்து விடுவான்; அல்லது உண்டுபண்ணிக் கொள்வான், ஏனெனின், அவனுக்கு உழைப்பின்மை துன்பந் தரும். உழைப்பு களிப்பூட்டும்; உழைப்பில் களிப்பைக் காணுபவன் நெடுநாள் வேலையற்றிருப்பதில்லை.
சோம்புதலுடையவன் வேலையில் அமர்த்தப்பட விரும்புவதில்லை. அவன் எதுவுஞ் செய்யாது வாளாவிருத்தலின் போதே தன்னியல்புடன் இருப்பவனாகின்றான். முயற்சியைத் தவிர்ப்பது எவ்வாறு என்பதே அவனுடைய முதற் கல்வி, திமிர்ப்புகளில் தழைத்து வளருவதே இன்பத்தைக் குறித்த அவனுடைய கருத்து. அவன் தகுதியற்றவன், வேலைக்கமர்த்தப்படக் கூடாதவன். வேலையின்மை அனைத்தும் செல்வரின் செயல்விளைவே எனக் கூறுகின்ற சமூகப் பொதுவுடைமைக் கொள்கையாளருங் கூடி சோம்பலான, அசட்டையான ஆதாயமற்ற ஊழியராகவே பணிபுரிவதன் மூலம் வேலையில்லாப் படைக்குப் பணிபவரின் எண்ணிக்கையைக் கூட்டுபவரே ஆவர். ஏனெனின், சுறுசுறுப்பான, நேர்மையான உள்ளம் படைத்த மக்கள் அனைவருக்கும் வெறுப்பூட்டுகின்ற சோம்புதல் கீழ்த்தரமான பழிச் செயல்களில் ஒன்றாகும்.
ஆற்றல் ஒரு கலவை உயிர்ப்பாகும். அது தனித்து நிற்பதில்லை. உரம் வாய்ந்த குணவியல்பை உருவாக்கும், ஆக்கத்தை விளைவிக்கும் பண்புகள் இதன் கண் அடங்கியிருக்கின்றன. முதன்மையாகக் கீழ்க்காணும் நான்கு பண்பியல்புக் கூறுகளிலேயே அவை உள்ளடங்கியிருக்கின்றன :
1. முந்தார்வம் | 3. விடாமுயற்சி |
2. விழிப்புணர்ச்சி | 4. அக்கறை |
எனவே, ஆற்றலெனும் அடிப்படை இந்த நான்கு உறுதியான மூலக் கூறுகளடங்கிய கட்டிடமாகும். அவை உறுதியானவை, நீடித்து நிலைபெறுபவை, துன்பத்தின் கொடிய காலநிலையைத் தாங்கும் வண்ணம் திட்டஞ் செய்யப்பட்டவை. அவையனைத்தும் வாழ்விற்கும் ஆற்றலுக்கும் திறமைக்கும் முன்னேற்றத்திற்கும் வழிகோலுபவை.
முந்தார்வம் விலையுயர்ந்த சொத்தாகும். அது நம்பிக்கையைப் படைக்கின்றது. சுறுசுறுப்புடையோராகவும், முந்தார்வமுடையோராகவும், காலம் தப்பாமையைக் கடைப்பிடிப்போராகவும் இருக்கின்ற மக்கள் நம்பிக்கைக்கு உரியவராகின்றனர். அவர்கள் தம் கடமையை ஊக்கத்துடனும், ஒழுங்காகவும் செய்து முடிப்பர் என நம்பலாம். விரைந்து செயலாற்றும் பணிமுதல்வர்கள் தம் பணியாளர்களுக்கொரு வலிமையூட்டும் மருந்தாவர். கடமை தவிர்க்குங் கருத்துடையோர்க்கு ஒரு கசையடியாவர். தம்மைத் தாம் நெறிப்படுத்திக் கொள்ளாதவர்க்கு அவர்கள் நற்பயன் விளைக்கும் ஒழுங்கு முறைக்கான ஒரு கருவியுமாவர். எனவே, தமது பயனுடைமையையும், வெற்றியையும் கையாற்றும் அதே வேளையில் பிறருடைய பயனுடைமைக்கும் வெற்றிக்கும் அவர்கள் உதவுகின்றனர்.
எப்போதும் காலங் கடத்துபவராகவும், எப்போதும் நேரந் தவறுபவராகவும் இருக்கின்ற அசட்டையான தொழிலாளி தனக்கில்லையெனிலும் பிறர்க்கு ஒரு தொந்தரவாகி விடுகின்றான். அவனுடைய பணிகளுக்கு ஆக்க மதிப்பு சிறிதளவே இருப்பதாகக் கருதப்படுகின்றது. முந்தார்வத்தின் ஏவல் பெண்களாகிய தீர சிந்தனையும், தீவிர விரையும் ஆக்கம் அடைவதற்கான பயன்மிக்க கருவிகளாகும். பொது வாணிபப் போக்குகளில் சுறுசுறுப்பு ஒரு செட்டான ஆற்றலாகும். முந்தார்வம் ஆக்கம் விளைவிக்கின்றது. சோம்பேறி எனப் பெயர் பெற்றோர் வாணிபத்தில் என்றேனும் வெற்றியடைந்துள்ளனரா என்பது ஐயப்பாட்டிற் குரியதாகும்.
மனத்தின் செயல் திறன்கள், ஆற்றல் அனைத்திற்கும் விழிப்புணர்ச்சியே காவலனாம். கொடியதும், அழிவு விளைப்பதுமான கூறுகள் எதுவும் உட்புகாமல் தடுக்கும் ஒற்றன் அதுவே. வெற்றி, விடுதலை, ஒளிமை அனைத்திற்கும் நெருங்கிய கூட்டாளியும், காவலாளியும் அதுவே. மனத்தின் இந்த எச்சரிக்கையான நோக்கு இல்லாத நிலையில் மனிதன் மூடனாகி விடுகின்றான். மூடனுக்கு ஆக்கம் வருவதில்லை. தன்னைத் தொந்தரை செய்யுவருகின்ற இழிந்த கருத்துகளும், கொடிய இச்சைகளும் தன் மனத்தின் ஆழ்சிந்தனை, அமைதி, தீர்ப்பு ஆகியவற்றை அடியோடு கொள்ளையிட மூடன் இடந் தந்து விடுகின்றான். அவன் என்றுமே பாதுகாப்புடன் இருப்பதில்லை. அழையாது நுழையும் ஒவ்வொரு கயமைத் தன்மைக்கும் தன் மனக் கதவுகளைத் திறந்து வைத்து விடுகின்றான். தன்னை விரட்டிப் பிடிக்கின்ற ஒவ்வோர் உணர்ச்சி வேகமும் தனது சமநிலையைத் துடைத்து அழித்துவிடும் அளவிற்கு அவன் அத்துணை வலுவற்றவனாகவும், உறுதியற்றவனாகவும் இருக்கின்றான. பிறர் எவ்வாறிருத்தல் கூடாது என்பதற்கு அவன் ஓர் எடுத்துக் காட்டாகும். அவன் எப்போதும் தோல்வியுறுபவனாகவே இருக்கின்றான். ஏனெனின், மூடனாக இருப்பவன் மனிதர் அனைவருக்குமே ஒரு பொல்லாப்பு; அவனை மதிப்புடன் வரவேற்கும் சமுதாயமே இல்லை. வலிமையின் முகடாக ஒளிமை இருத்தல் போன்று வலிமையின்மையின் அடுத்த கோடி மடமை.
சிந்தனையற்ற தன்மையிலும், வாழ்வின் சாதாரண நுணுக்கங்களிலுள்ள பொதுப்படையான தளர்ச்சியிலும் விழிப்புணர்ச்சியின்மை வெளிப்பட்டு விடுகின்றது. மடமையின் மற்றொரு பெயரே சிந்தனையின்மை, பெருவாரியனர் தோல்வி, துன்பம் ஆகியவற்றின் மூல காரணத்திலே அது அமைந்து கிடக்கின்றது. எந்த வகையான பயனுடைமையையும், ஆக்கத்தையும் குறிக்கொள்கின்ற எவனும் தன் செயல்களைக் குறித்தோ, அச் செயல்களால் பிறர்க்கு ஏற்படும் விளைவுகளையும், அவற்றின் எதிர்விளைவாகத் தனக்கே ஏற்படுவனவற்றையும் குறித்தோ கருதாது கண்மூடியாக இருக்க இயலாது. அவன் தனது வாழ்க்கைப் போக்கின் தொடக்கத்திலேயே தற்சார்புப் பொறுப்பென்னும் உணர்ச்சி பெற்று விழிப்புற்றாக வேண்டும். வீட்டிலே, நீதிமன்றத்திலோ, கோயிலின் சொற்பொழிவு மண்டபத்திலோ, மாளிகையிலோ, பள்ளிக் கூட அறையிலேயோ பணப்பெட்டியருகிலோ கூட்டாகவோ தனியாகவோ, உழைப்பில் ஈடுபட்டிருக்கும் போதோ விளையாடும் போதோ, அவன் எங்கெங்கிருப்பினும் அவனுடைய ஒழுகலாறு நன்மைக்கோ தீமைக்கோ அவனுடைய வாழ்க்கை நெறியைப் பாதிக்கும் என்பதை அவன் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், நடத்தையில் ஒரு நுட்பமான வசியம் இருக்கின்றது. அது தொடுகின்ற ஒவ்வோர் ஆண், பெண், குழந்தையிடத்தும் ஒரு முத்திரையைப் பொறித்துச் செல்கின்றது. அம் முத்திரையே மனிதர் ஒருவர் மீதொருவர், கொண்டிருக்கின்ற மனப்போக்கை வரையறுக்கும் கூறாகவும் இருக்கின்றது.
இக் காரணம் பற்றியே ஒன்றுபட்ட சமுதாயம் அனைத்திலும் நற்பழக்க வழக்கங்களைப் பேணி வளர்த்தல் அத்துணை இன்றியமையாமை வாய்ந்ததாக இருக்கக் காண்கின்றோம். உலைவு படுத்துவதும், உடன்பாடற்றதுமான மனக்குறைபாட்டை நாம் நம்முடனே கொண்டு செல்வதாயிருப்பின், நம் காரியங்களில் அது நச்சூட்டும் என்பதைப் பெயரிட்டு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆற்றல் வாய்ந்த திராவகம் நேர்த்தியான உருக்குக் கம்பியை அரித்துத்தின்று அதனுருவத்தைச் சிதைத்து விடுதல் போன்று. நமது முயற்சிகள் அனைத்தையும் மனக்குறைபாடு அழித்து நமது மகிழ்ச்சியையும், ஆக்கத்தையும் சின்னா பின்னமாக்கி விடுகின்றது.
மாறாக, உறுதிப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் மனத்தின் மேம்பாட்டை நாம் நம்முடனே கொண்டு செல்வதாயிருப்பின், நம்மைச் சூழ்ந்திருப்போர் அதைப் புரிந்து கொள்வதோடு கவர்ச்சியும் அடைகின்றனர். அவர்கள் ஏனென்று அறிந்து கொள்ளாமலே நன்னோக்குடன் நம்மை அணுகி வருவர்; நண்பர்களையும், நல வாய்ப்புகளையும் கொணர்ந்து, நம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணப் பேருதவியாகவுமிருப்பர், நம் காரியங்கள் அனைத்திலும் ஆற்றல் வாய்ந்த விளையாட்டாகவும் விளங்குவது அந்த நற்பண்பே ஆகும். அது நம் தவறுகளைக் கூட நேர்படுத்திவிடும்; திறமைக் குறைவுகளின் தீய விளைவுகளை, எண்ணிறந்த குறைபாடுகளை மூடி மறைத்துப் பெரிதும் மட்டுப்பத்திவிடும்.
எனவே, நாம் கொடுக்கின்ற அளவைப் பொறுத்தே உலகத்தின் கைகளிலிருந்து நாமும் பெறுகின்றோம். தீமைக்குத் தீமை, நம்மைக்கு நன்மை. மாசு படிந்த ஒழுக்கத்திற்கு மட்டான செல்வாக்கும், நிறைவற்ற வெற்றியுமே. மேம்பட்ட ஒழுக்கத்திற்கு நிலைபெறும் ஆற்றலும், நிறைவுற்ற வெற்றியுமாம். மூட மனிதன் தோல்வியுறுகின்றபோது பிறரைத் தூற்றுகின்றான். தன் மீது தவறேதும் காணுவதில்லை; ஆனால் அறிவுடைய மனிதன் தன்னைத்தான் கண்காணித்துத் திருத்திக் கொள்கின்றான். அதனால் அவனுக்கு வெற்றி உறுதியாகி விடுகின்றது.
விழிப்புணர்ச்சியும், சுறுசுறுப்புமுடைய மனம் கொண்ட மனிதன், அதன் பயனாகத் தன்னுடைய குறிக்கோள்களை அடையும் விலையுயர்ந்த கருவியைக் கொண்டவனாகிறான். அவன் நிகழ்ச்சிகள் அனைத்திலும், குணவியல்பின் கேடுபயக்கும் தவறுகளுக்கு எதிராக முழு விழிப்புணர்ச்சியுடன் இருப்பான் எனின், எந்த நிகழ்ச்சி, எந்தச் சூழ்நிலை, எந்தப் பகைவன் அவனைப் பின்னொதுக்கிப் போரிட முடியும்? அவன் முறைப்படியான பயனைப் பெறுவதை எவைதாம் தடுத்துவிட முடியும்?
விடாமுயற்சி களிப்பையும், செழிப்பையும் தருகின்றது. ஊக்கஞ் செறிந்த ஆள்வினையுடையராய மக்களே சமூகத்தின் மகிழ்ச்சியுடைய உறுப்பினராவர். தேவைக்கு மிகுந்த பணம் படைத்திருத்தலையே செல்வமெனக் கொண்டால் அவர்கள் எப்போதுமே செல்வராயிருப்பதில்லை. ஆனால், அவர்கள் எப்போதும் சிறிதும் கவலையற்றவராய், களிப்புடையராய் இருக்கின்றார். தாம் செய்வதிலும் தம்மிடம் இருப்பதிலும் மிகுந்த மனநிறைவு காணுகின்றனர். எனவே, பெருமளவில் அருளுடையராய் இருப்பவரையே செல்வரெனப் பொருள் கொண்டால் அவர்களே செல்வராவர்.
மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்ற பொருள்களே மெருகேற்றப் பட்டதாயிருக்கின்றன. மிகுதியாக உழைப்பில் ஈடுபடுகின்ற மக்கள் தம் மெருகையும், மதிப்பாற்றலையும் நன்னிலையில் கொண்டிருக்கின்றனர். பயன் படுத்தப்படாத பொருள்கள் விரைந்து கறைபடுகின்றன; காலம் கொல்வோன், களைப்பாலும் பதனிழந்த பகற்கனவாலும் அழிக்கப் படுகின்றான். ஏனெனில், அறிவு, பயனுடை எனும் வண்மைகள் பெருகிய உலகில், தன் கையாட்சியில் குறுகிய வாழ்வைக் கொண்ட எவரே மிகுதியான நேரம் கொண்டிருக்கக் கூடும்? தீர்க்கமான தலைகளும், நல்ல நெஞ்சங்களும் கொண்ட மனிதர் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணத்தையும் பயனுடனும், களிப்புடனும் செலவிடுகின்றனர்;
இன்னலத்தையும், நன்னிலையையும் ஆள்வினை பெருக்குகின்றது. சுறுசுறுப்புள்ள மனிதன் ஒவ்வோரிரவும் தளர்ச்சியுடன் படுக்கச் செல்கின்றான். அவன் உளைவுபடாது, இனிமையான உறக்கம் கொள்கின்றான். அவன், மகிழ்ச்சியூட்டும் மற்றொரு நாளைய உழைப்பிற்காகப் பொலிவுடனும், வலிவுடனும் மறுநாள் விடிகாலையில் துயிலெழுந்து விடுகின்றான். அவனுக்கு நல்ல பசியும், செரிமானமும் ஏற்படுகின்றன. அவன் பொழுது போக்கில் ஒரு சிறந்த சுவைச் சத்தையும், உழைப்பில் ஒரு நல்ல ஏற்றத்தையும் காணுகின்றான். அத்தகைய மனிதன் மந்தம், சோர்வு இவற்றுடன் என்ன தோழமையைக் கொள்ள முடியும்? சிறிதளவு உழைத்துப் பெருமளவில் உண்ணுபவரையே அத்தகைய பதனிழந்த உணர்ச்சிகள் சுற்றி வளைக்கின்றன. சமூகத்திற்குப் பயன்படுபவர்களாகத் தம்மை ஆக்கிக் கொள்ளும் மக்கள் சமூகத்திலிருந்து தங்கள் முழுப் பங்கான நலம், மகிழ்ச்சி, ஆக்கம் ஆகியவற்றைத் திரும்பப் பெறுகின்றனர். அவர்கள் அன்றாடக் கடமையை மகிழ்வுடையதாக்கி உலகம் முன்னேறும் வகை செய்கின்றனர். அவர்கள் நாட்டின் பொற் சுரங்கம்; மண்ணின் இனிய சாறம்.
“அக்கறை அழியாமையைப் பெறும் வழியாகும். அக்கறையுடையோர் இறந்துபடுவதில்லை. அக்கறை இல்லாதோர் ஏற்கனவே இறந்துபட்டவர்களுக்கொப்பாவர்” என ஒரு பேராசரியர் கூறியுள்ளார். மனம் முழுவதையும் அதன் கடமைக்கென உரிமையாக்குவதே அக்கறையாகும்.
நாம் என்ன செயல்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்தே நாம் வாழுகின்றோம். தாம் செயல்படுத்துவது எதுவாயினும் அதில் உயர்ந்த மேம்பாடன்றி எவ்விதக் குறைபாடு ஏற்படினும் அக்கறை மிக்க மக்கள் மனநிறைவின்மை அடைகின்றனர். அவர்கள் எப்போதும் மேம்பாட்டை அடைந்து விடுகின்றனர். குறைபாடுடைய வினைமுறையில் திருப்தி காணுகின்ற கவனமற்றோரும் அரைமனம் கொண்டோரும் எத்துணையோ பேர் உள்ளனர். அக்கறையுடையோர் தமக்கே உரிய மேம்பாட்டுடன் தனித்துப் புகழொளி வீசுகின்றனர். பயனுடைமை, தொண்டு ஆகிய வரிசைகளில் அக்கறையுடைய மக்களுக்கு எப்போதும் மிகுதியான “வெற்றிடங்கள்” இருக்கின்றன. ஆழ்ந்த அக்கறை கொண்ட ஓர் ஆண்மகனோ பெண்மணியோ ஏதேனும் பொருத்தமான கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் என்றுமே இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை. அத்தகைய மக்கள் அதிநுட்பமுடன் செயல்படுபவர் மனச்சான்றிற்குக் கட்டுப்படுபவர், வருந்தி உழைப்பவர், சிறந்தோர்க்குச் சீர் வழங்க உலகம் எப்போதும் காத்திருக்கின்றது. பருப்பொருள் சார்ந்தனவோ, அறிவாற்றல் சார்ந்தனவோ, ஆன்மீகஞ் சார்ந்தனவோ ஆகிய செயல்கள் எவற்றிலாயினும் சரியே, ஒப்பற்ற மேம்பாடுடைய ஒன்றிற்குரிய முழு விலையை, பொருளாகவோ, புகழாகவோ, நண்பர்களாகவோ, செல்வாக்காகவோ, மகிழ்ச்சியாகவோ, வாய்ப்பாகவோ வாழ்வாகவோ தந்து விட வையகம் எப்போதும் ஆயத்தமாக நிற்கின்றது. நாம் எந் நிலையுடையரேனும் சரியே, எவ்வித ஐயமோ நம்பிக்கைக் கேடோ இன்றி மிகச் சிறந்தவற்றை உலகிற்கு அச்சமிற்றி வழங்கலாம் நமது அக்கறையின் அழிக்க முடியாத முத்திரை ஒரு முறை நம் சரக்குகளின் மீதோ மற்றொருமுறை நம் சொற்களின் மீதோ பொறிக்கப்படுமேயாயின், நமது வாணிபம் தழைத்துச் செழிக்கும், அல்லது நம் வாய்மொழிகள் நிலைத்து வாழும்.
அக்கறையுடைய மக்கள் தமது உழைப்பு, குணவியல்பு ஆகிய இரண்டிலும் நல் விளைவான முன்னேற்றம் காணுகின்றனர். எனவே, அவர்கள் வாழுகின்றனர், தடைப்பட்டுத் தேங்கி நிற்றலே இறப்பு இடையறாத முன்னேற்றமும், என்றும் மேலோங்கும் மேன்மையும் எங்குளவோ அங்கு முயற்சியும், வாழ்வும் தேக்கத்தையும், இறப்பையும் விழுங்கிவிடுகின்றன.
எனவே, முதல் அடிப்படையின் அமைப்பும், வேலைப்பாடும் விளக்கப்பட்டுவிட்டன. அதை நன்கு கட்டி முடித்து உறுதியாகவும், நேராகவும் நிலைப்படுத்துபவன் தனது வாழ்வெனும் வாணிபத்தில் வலிமை வாய்ந்ததும், நிலைபெறுவதுமான அடிப்படை கொண்டவனாவான்.