வெற்றிக்கு எட்டு வழிகள்/003-010

விக்கிமூலம் இலிருந்து

சிக்கனம்

இயற்கை அன்னை வெறுமையை அறியமாட்டாள். விரயமும் அவள் அறியமாட்டாள். இயற்கையின் சிக்கனத்தில் ஒவ்வொன்றும் பேணிக் காக்கப்பட்டு நற்பணிக்காகத் திருப்பப்படுகின்றது. உடலின் கழிவுப் பொருள்கள் கூட வேதியமுறையில் உருமாற்றப் பெற்றுப் புது உருவங்களைக் கட்டுதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை ஒவ்வொரு கழிவையும் அழிப்பதென்பது அதை ஒழித்துவிடுவதன்று. ஆனால், உருமாற்றுகையின் மூலமே அதைச் செய்கின்றது. அதாவது, அதைப் பண்படுத்தித் தூய்மைப்படுத்தி அழகுள்ள, பயனுள்ள, நன்மையுள்ள செயலுக்குப் பயன்படும் வண்ணமே அதைச் செய்கின்றது.

இயற்கையில் உலகியல் முறையாக இருக்கின்ற அதே சிக்கனம், மனிதனிடத்தில் ஒழுக்கநெறிப் பண்பாக இருக்கின்றது; அவன் அப் பண்பைக் கொண்டே தன்னுடைய ஆற்றல்களைப் பாதுகாத்துச் செயல்களின் அமைப்பின் மூலம் ஓர் இயக்க உறுப்பாக தன்னைக் கொள்கின்றான்.

செல்வநிலைச் சிக்கனம் வாழ்க்கை முறையின் ஒரு சிறு பகுதியேயாகும். முழுக்கவும் மனஞ் சார்ந்ததாகவும், அதன் உருமாற்றங்கள் உயிரியல் சார்ந்ததாகவும் இருக்கின்ற மெய்யான சிக்கனத்தின் சடப்பொருள் சார்ந்த ஓர் அடையாளமெனலாம். செல்வநிலைச் சிக்கனக்காரன் செம்பிற்கு வெள்ளியும், வெள்ளிக்குப் பொன்னும், பொன்னிற்குப் பணத்தாள்களுமாகப் பரிமாற்றம் செய்து பணத்தாள்களை வங்கிக் கணக்கில் எண்களாக மாற்றி விடுகின்றான். பணத்தை இவ்வாறு மிகவும் விரைவாகக் கை மாற்றத்தக்க உருவங்களில் மாற்றிக் கொள்வதால் தன் காரியங்களின் பொருளாதார நிருவாகத்தில் அவன் பயனடைகிறான்.

பருப்பொருளியலிலே மனவியலிலோ காரியங்கள் அனைத்திலும் பாழ்படுதல், பயனின்றிக் குவித்துவைத்தல் இவைகளுக்கிடையேயுள்ள நடுத்தரமான பாதையே உண்மையான சிக்கனமாகும். பணமாயினுஞ் சரி, மனவாற்றலாயினுஞ் சரி வீணாக்கப்படுகின்ற ஒன்று ஆற்றலற்றதாக ஆக்கப்பட்டு விடுகின்றது. செல்வ நிலையிலோ மன நிலையிலோ ஆற்றலைப் பெற வேண்டுமெனின் அது தொகுக்கப்படத்தான் வேண்டும்; ஆனால் முறையாகப் பயன்படுத்துவதும் சேகரிப்பைப் பின்தொடர வேண்டும். பணத்தையோ ஆற்றலையோ சேகரிப்பது கருவியே; பயன்படுத்துவதே செயலின் வெற்றி. மேலும், பயன்படுத்துதலே ஆற்றலை உண்டு பண்ணுகின்றது.

கீழ்க்காணும் ஏழு செயல்களிலும் நடுநிலையான பாதையைக் கண்டு பிடிப்பதிலேயே பல்வகையான சிக்கனமும் அடங்கியிருக்கின்றது. அவை பணம், உணவு, உடை, பொழுதுபோக்கு, ஓய்வு, காலம், ஆற்றல்.

பண்டமாற்றின் அடையாளம் பணம்; அது கொள்முதல் ஆற்றலை காட்டுகின்றது. செல்வச் செழிப்பினைப் பெறவேண்டுமென்று துடிப்பவனும், அதே போன்று கடன் இல்லாதிருக்க வேண்டுமென்று விரும்புபவனும், எப்போதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் நடைமுறை முதலுக்குச் சிறு பகுதியை விட்டுவைக்கும் வகையிலோ எந்த நெருக்கடி வரினும் கையில் தயாராகச் சிறு சேமிப்பைக் கொண்டிருக்கும் வகையிலோ, தனது வருவாய்க்கேற்பச் செலவினைப் பங்கிடுதல் எவ்வாறு என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிந்தனையற்ற செலவினத்தில், பயனற்ற மகிழ்ச்சிகளிலோ கேடு தரும் சொகுசுகளிலோ செலவிடப்படுகின்ற பணம் பாழ்படுகின்றது. ஆற்றல் சிதைவுறுகின்றது. மேலும், நமது அன்றாட வாழ்வின் விளக்கங்களைப் பெரிதும் மேற்கொள்ளுகின்ற ஆற்றலுமாகும். ஊதாரி ஒருபோதும் செல்வவானாக இயலாது. ஆனால், அவனைச் செல்வங்கள் வந்தடையினும் அவன் விரைவில் ஏழையாகிவிடுவான். கஞ்சன் எத்துணைதான் பொன்னைப் பதுக்கி வைத்திருப்பினும், அவனைச் செல்வன் என்று கூறிவிட முடியாது. ஏனெனின், அவன் மேலும் மேலும் விரும்புகின்றான். பயன்படாது கிடக்கும் அவனுடைய பொன் கொள்முதல் சக்தியை இழந்துவிடுகின்றது. செட்டானவரும், முன்மதியுடையோருமே செல்வங்களைப் பெறுகின்ற வழியில் செல்வராகின்றனர். ஏனெனின், செட்டாகச் செலவிடும் அவர்கள் கவனமாகச் சேமித்து வளர்ந்து வரும் தங்களுடைய தகுதிக்கேற்பத் தங்களது செல்வச் செழிப்பையும் சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொள்கின்றனர்.

செல்வனாக வேண்டிய வறிய மனிதன் கீழ்ப்படியிலிருந்து தொடங்க வேண்டுமேயன்றித் தனது தகுதியை மிகவும் மிஞ்சிய ஏதோவொன்றைப் பெற முயற்சி செய்வதன் மூலம் செல்வச் செழிப்புள்ள தோற்றம் கொள்ள வேண்டுமென்று விரும்பவோ, முயலவோ கூடாது. கீழ்ப்படியில் எப்போதும் மிகுதியான வாய்ப்பு இருப்பதுடன் அது தொடங்குவதற்கு மிகவும் பாதுகாப்பான இடமுமாகும். ஏனெனின், அதைவிடக் கீழ்ப்பட்டது அங்கு எதுவுமில்லை. ஒவ்வொன்றும் மேற்பட்டதுவே. வாணிபத்துறையில் ஈடுபடும் பல வாலிபர்கள் வெற்றிக்கு இன்றியமையாதது எனத் தாம் மடமையாகக் கருதுகின்ற வீறாப்புப் பேச்சாலும், பகட்டாலும் விரைவில் கவலையடைகின்றனர். ஆனால், அது பிறரை அன்றி அவனையே ஏமாற்றி விரைவில் அழிவுக்கு வழிகாட்டுகின்றது. எத்துறையாயினும் சரியே ஒருவனுடைய தகுதியையும், குறித்து மிகைப் படுத்துப்பட்ட விளம்பரத்தைக் காட்டிலும் அடக்கமானதும், உண்மையானதுமான தொடக்கமே வெற்றியை உறுதியாக்குகின்றது. முதலீடு சிறு அளவினதாக இருப்பின், தொழிற்படும் எல்லையும் சிறு அளவினதாகவே இருக்க வேண்டும். முதலீடும், வாய்ப்பும், கையும், கையுரையுமாகும். அவை பொருந்த வேண்டும். நமது முதலீட்டை அதன் நடைமுறைச் ஆற்றலெனும் வட்டத்திற்குள் நாம் ஒருமுகப்படுத்தினால் போதுமானது. அந்த வட்டம் எத்துணை தான் எல்லை கட்டப்பட்டிருப்பினும், வளர்ந்து வரும் ஆற்றலின் இயக்கவிசை வெளிப்பட முனையும்போது வட்டம் தொடர்ச்சியாகப் பரந்து விரிந்து கொண்டுதாணிருக்கும்.

உணவு, உயிர்க்களை, உயிர் ஆற்றல், உடல், மனம் இரண்டினுடையவும் வலிமை இவற்றைக் காட்டுகின்றது. பிற அனைத்தையும் போலவே உண்பதிலும், குடிப்பதிலும் கூட ஒரு நடுத்தரமான பாதையிருக்கின்றது. ஆக்கந் தேடவேண்டிய மனிதன் நன்கு பேணி ஊட்டப்பட வேண்டியதுதான்; ஆனால், அளவை மிஞ்சி ஊட்டப்படுதல் கூடாது. கஞ்சத்தனத்தாலோ துறவு பூண்பதாலோ தன்னுடலைப் பட்டினி போடுபவன் தன் மனவாற்றலைக் குறைத்துக் கொள்பவனாகின்றான். அதோடு, தன்னுடலை எந்த வலிமையான பேறும் பெறுதற்கான கருவியாகாத நிலையில் மிகவும் தோல்விக்கே ஏற்ற நிலையான நோயுற்ற மனநிலையை நாடுகின்றான்.

பெருந்தீனிக்காரன் மிகைப்பட உண்பதிலேயே தன்னை அழித்துக் கொள்கின்றான். முரட்டுத்தனம் ஊட்டப் பெற்ற அவனுடைய உடல், நோயையும் தீய தன்மையையும் ஈர்க்கின்ற நச்சுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற களஞ்சியமாகின்றது. மேலும், மேலும் விலங்குத் தன்மையுடையதாகவும், குழப்பமுற்றதாகவும் மாறித் திராணி அற்றதாகவும் ஆகிவிடுகின்றது. மிகையூண் ஆவல் கீழ்த்தரமானதும் விலங்கினப்பாங்கும் உடையது.

ஊணிலும், குடியிலும் நடுநிலைப் போக்குடையோரே சிறந்த உழைப்பாளர்களும், மிகவும் வெற்றியுறும் மக்களுமாவர். மிகைப்படாமல் போதுமான அளவு ஊட்டம் எடுத்துக் கொள்வதால் அவர்கள் உச்ச நிலையான உடல், மனத் தகுதி பெறுகின்றனர். இவ்வாறு நடுநிலைப்போக்கை மேற்கொள்வதால் அவர்கள் வாழ்க்கைப் போரை ஊக்கத்துடனும், களிப்புடனும் போரிடும் ஆற்றலைப் பெறுபவராகின்றனர்.

உடை, உடலுக்கான உறையும், பாதுகாப்புமாகும். ஆனால் இந்தச் செட்டான குறிக்கோளினின்றும் அது அடிக்கடி பின்னிழுக்கப்பட்டுப் பயனற்ற பகட்டிற்கான கருவியாக்கப்படுகின்றது. இங்குத் தவிர்க்கப்பட வேண்டிய ஆரவார ஆடை மெத்தனமும், பகட்டுமாகும். வழக்கத்தைப் புறக்கணிக்கவியலாது. புறக்கணிக்கப்பட வேண்டியதுமில்லை. சிறப்பு அனைத்தும் துப்புரவிற்கேயாகும். அழுக்குடை அணிந்து, தலைமுடியும் வாரிக் கொள்ளாத ஆணோ பெண்ணோ தோல்வியையும், தனிமையையும் விரும்பி அழைப்பவரே ஆகின்றனர். ஒரு மனிதனின் ஆடை அவன் வாழ்வில் வகித்து வருகின்ற நிலைமையுடன் இசைவு படுவதாக இருக்கவேண்டும். அது நல்ல தரத்தில் ஆக்கப் பெற்றதாயிருக்க வேண்டும். நன்கு தைக்கப் பெற்றதாகவும், பொருத்தமுடையதாகவும் இருக்க வேண்டும். ஒத்துப் பார்க்கையில் புதிதாகவே இருக்கின்ற உடையைக் களைந்து எறிந்துவிடுதல் கூடாது; அதை நன்கு அணிந்து பயன்படுத்த வேண்டும். ஒரு மனிதன் ஏழையாகவிருந்து நைந்துபோன உடையணிந்திருப்பினும் அது தூய்மையாகவும், அவனுடைய உடல் முழுவதும் தூய்மையாகவும் இருக்குமெனின், அவன் தன்மதிப்பையோ பிறர் காட்டும் மதிப்பையோ இழந்து விடுவதில்லை. ஆனால், உடையில் அளவுகடந்த சொகுசிற்கு வழிகாட்டுகின்ற பகட்டு ஒரு பழிச்செயலாகும். அறநெறி கொண்ட மக்கள் அக்கறையுடன் அதைத் தவிர்க்க வேண்டும். குவித்து வைப்பதில் பணத்தை விரயம் செய்கின்ற செல்வர் ஏழ்மையை நாடுபவராகின்றனர்; ஏனெனின், அது விரயமாகும்; விரயம், இன்மைக்கு வழிகாட்டி விடுகின்றது. இவ்வாறு கருத்தின்றிச் செலவிடப்படுகின்ற பணத்தை நன்முறையில் பயன்படுத்தலாம். ஏனெனின் ஈகை மிகவுயர்ந்தது.

பகட்டாகத் தேவையின்றி ஆடையணிவதைக் காட்டிலும் அவர்கள் கல்வியும், முன்னேற்றமும் அதிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கொள்வர். அதன் காரணமாக இலக்கியம், கலை, விஞ்ஞானம் இவை ஊக்குவிக்கப்படுகின்றன. உண்மையான பண்புநயம் மனத்திலும், நடத்தையிலுமே இருக்கின்றது. அறத்தாலும், அறிவுக்கூர்மையாலும் அணிசெய்யப்பட்ட மனம், புறப்பகட்டாக உடலை அணிசெய்து கொள்வதால் தனது கவர்ச்சியை அதிகரித்துக் கொள்ள முடிவதில்லை. உடனடிப் பயனற்றவகையில் அணிசெய்வதில் செலவிடப்படுகின்ற பொழுதை அதைவிடப் பயன் தரும் வகையில் செலவிடலாம். பிற காரியங்களில் உள்ளதைப் போன்றே உடையிலும் எளிமையே சிறந்தது. பயனுடைமை, வசதி, உடலழகு இவற்றைப் பொறுத்த அளவில் எளிமை மேம்பாட்டின் உச்சநிலையை அடைந்து விடுகின்றது. அதோடு உண்மையான சுவையையும், பண்படுத்தப்பட்ட நடத்தை நயத்தையும் காட்டுகின்றது.

பொழுது போக்கு, வாழ்வின் இன்றியமையாத காரியங்களில் ஒன்றாகும். ஒவ்வோர் ஆண்மகனும் பெண்மணியும், குறிப்பிடத்தக்க அளவு பொழுதை ஒதுக்கி வைக்கின்ற ஏதேனும் திட்டமான பணியை வாழ்வின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

மதிக்கப்பட்ட குறிப்பட்ட காலங்களில்தான் பொழுது போக்குக்காகவும், ஓய்வுக்காகவும் அவன் அதனின்றும் திரும்ப வேண்டும். ஒருவனின் கருத்தூன்றிய பணியில் ஆற்றல் மீதுர, உடல், மனம் இரண்டிலும் பெருமளவு கிளர்ச்சியைப் பெறுதலே பொழுதுபோக்கின் நோக்கமாகும். எனவே, அது ஒரு கருவியே அன்றிச் செயலாற்றலாகாது. இதை எப்பொழுதும் கருத்தில் கொள்ள வேண்டும். வாழ்வில் நோக்கம் எதுவுமின்றி வாழ்வை விளையாட்டுகள், மகிழ்ச்சிகள் இவற்றின் தொடர்ச்சியான வரிசையாக ஆக்கிவிடுதல், உயிர்வாழும் மக்களை அப்படியே தலைகீழாகத் திருப்புவதாகும்; அது சலிப்பையும், நலிவையும் உண்டு பண்ணுகின்றது. அதைச் செய்யும் மக்களே மாந்தர்களில் மிகவும் மகிழ்ச்சியற்றவராவர். அவர்கள் சோர்வு, அலுப்பு, முன்கோபம் இவற்றால் துன்புறுகின்றனர். சுவைச்சத்துச் செரிப்புக்கு உதவுமேயன்றி உணவாகக் கொண்டால் நோயுண்டு பண்ணும். அதே போன்று உழைப்பின் நடுநடுவே உற்சாக மூட்டிக் கொள்ளப் பொழுது போக்கேயன்றி, வாழ்வின் பணியாகவே அதைக் கொண்டுவிட்டால் துன்பத்திற்கு அது வழிகாட்டிவிடும். ஒரு மனிதன் தனது அன்றாடக் கடமையை முடித்து விடுவானேயாயின், அவனுடைய உழைப்பு, மகிழ்ச்சி இரண்டும் களிப்பிற்கான ஒரு கருவியாகிவிடும். 

ஒருவனின் நேரம் முழுவதையும் உழைப்பிற்கோ பொழுது போக்கிற்கோ ஒதுக்கிவிடாது, அவை ஒவ்வொன்றிற்கும் நேரத்தையும், இடத்தையும் பகிர்ந்து பல்லாண்டு பயனுடன் வாழ்தற்கு வேண்டிய இன்றியமையாத மாறுதல்களால் வாழ்வை நிரப்பிக் கொள்வதே உண்மையான சிக்கனமாகும்.

உழைப்பிற்குப் பின்பு வலிமையைத் திரும்பப் பெறுதற்காகவே ஓய்வு. தன் மதிப்புள்ள ஒவ்வொரு மனிதனும் தனது உறக்கத்தை ஓய்வு நிறைந்ததாகவும், இனிமையானதாகவும் ஆக்கவும், துயிலுெழுவதைப் புத்துணர்ச்சியுடையதாகவும், மகிழ்ச்சியுடையதாகவும் ஆக்கவும் ஒவ்வொரு நாளும் போதுமான அளவு உழைக்கவேண்டும்.

போதுமான அளவு உறக்கங்கொள்ள வேண்டியதுதான்; மிகுதியான அளவு கூடாது. ஒரு புறம் அளவிற்கு அதிகமாக நுகர்வதோ மற்றொருபுறம் இழந்து விடுவதோ இரண்டும் கேடு பயப்பனவே. ஒருவனுக்கு எத்துணையளவு உறக்கம் தேவைப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ளுதல் எளிதான காரியமேயாகும். முன்னேரம் படுக்கச் சென்று முன்னேரம் எழுவதால் அவனோ அவளோ முழு வலிமையைத் திரும்பப் பெறுதற்கு எத்துணை மணிநேரம் தேவைப்படுகின்றது என்பதை விரைவில் நுட்பமாக அறிந்து ஒழுங்குசெய்து கொள்ளலாம். உறக்கங் கொள்கின்ற மணி நேரங்களைக் குறைத்துக் கொண்டால் தூக்கம் மிகமிக ஆழ்ந்ததும், இனிமை உடையதாகவும் துயிலெழுதல் மிகமிகச் சுறு சுறுப்பும், மகிழ்ச்சியுடையதாகவும் இருப்பதைக் காணலாம். தமது பணியில் செழித்துக் கொழிக்க வேண்டியவர்கள் பழிக்கத்தக்க தளர்ச்சிக்கும், அளவிற்கதிகமான உறக்கத்திற்கும் இடங்கொடுக்கலாகாது.

வாழ்வின் உண்மையான குறிக்கோள் பயனுடைய உழைப்பேயன்றி, இளைப்பாறுதலாகாது. உழைப்பின் பயன்களை எய்துதற்குச் சார்பான உதவியளிப்பது வரையில்தான் இளைப்பாறுதல் நன்மை தருவதாகவிருக்கும். சோம்பலும் ஆக்கமும் என்றுமே கூட்டாளிகளாக முடியாது. ஒன்றுக் கொன்று என்றுமே உறவு கொள்ள முடியாது. சோம்பேறி என்றுமே வெற்றியை ஓடிப்பிடிக்கவியலாது. ஆனால், தோல்வி அவனை விரைவில் ஓடிப்பிடித்து அவனைத் தோற்கடித்துவிடும். பெருமளவு உழைப்பிற்கு நம்மைத் தகுதியுடையவராக்கிக் கொள்வதற்கு ஓய்வே அன்றி, சோம்பலூட்டி நம்மைக் கெடுத்துக் கொள்வதற்காகவன்று. உடல் வலிமையைத் திரும்பப் பெற்றுவிடுகின்ற மாத்திரத்திலேயே ஓய்வின் பயன் நிறைவேறி விடுகின்றது. உழைப்பிற்கும், ஓய்விற்குமிடையே நிறைவான சமநிலையைக் கொண்டிருத்தலே நலன், மகிழ்ச்சி, ஆக்கம் இவற்றைப்பெறக் குறிப்பிடத்தக்க உதவி செய்வதாய் அமையும்.

காலம் என்பது நாம் அனைவரும் சமமான அளவில் கொண்டிருக்கும் ஒன்றாகும். எந்த மனிதனுக்கும் தனிப்படையாக நாட்பொழுது நீடிக்கப்படுவதில்லை. எனவே, அதன் விலையுயர்ந்த நிமியங்களைப் பயனற்ற பாழ்காரியங்களில் வீணே கழித்து விடாது நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். தன்னல நுகர்ச்சியிலும், இனிமை நாட்டத்திலும் காலத்தைக் கழிப்பவன், விரைவில் முதுமைப் பருவத்தை எய்தி விடுகின்றான். அவன் எதையும் சாதித்து நிறைவேற்றுவதில்லை. வந்து போகின்ற நிமியங்களைப் பயனுடைய நாட்டங்களால் நிறைவாக நிரப்புபவன் புகழிலும், அறிவிலும் முதுமையடைகின்றான். ஆக்கம் அவனிடம் நிலைப்பேறு கொள்கின்றது. பாழ்படுத்தப் பட்ட பணத்தை திரும்பப் பெற்றுவிடலாம்; ஆனால் பாழ்படுத்தப்பட்ட காலத்தை என்றுமே திரும்பப் பெறமுடியாது.

“காலம் பொன்னாகும்” என்பது ஒரு முதுமொழி. அதேபோன்று, அதனைப் பயன்படுத்துகின்ற வகையைப்பொறுத்து அது நலம், வலிமை, திறமை, சான்றாண்மை, அறிவு முதலியவையுமாகின்றது. அதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டிடுமெனின் வருகின்ற நொடிகளை நன்கு பயன் படுத்திக் கொள்ளவேண்டும்; ஏனெனில், ஒரு முறை அவை கடந்து சென்றுவிடின், என்றுமே அவற்றைத் திரும்ப வரவழைத்துக் கொள்ள முடியாது. நாள் பொழுதைப் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். உழைப்பு, ஓய்வு, உணவு, பொழுதுபோக்கு ஒவ்வொன்றையும் குறித்த பொழுதில் செய்தாக வேண்டும். ஆயத்தம் செய்வதற்கான பொழுதைத் தவிர்க்கவோ புறக்கணிக்கவோ கூடாது. தனது பணிக்குத் தனது மனத்தை ஆயத்தம் செய்து கொள்வதற்காக நாட்பொழுதின் ஏதேனும் சிறுபகுதியைப் பயன்படுத்துவதின் மூலம் ஒரு மனிதன் எதைச்செய்வதெனினும் சரியே; அதை நன்முறையிலும், மிக வெற்றிகரமாகவும் செய்து முடிப்பான்.