வெற்றிக்கு எட்டு வழிகள்/007-010

விக்கிமூலம் இலிருந்து

கண்டறியாமலோ ஒப்புக் கொள்ளமலோ இருப்பவனும், அவை சுட்டிக்காட்டப்படுகின்றபோது பொல்லாங்கு கொள்பவனும் திறமை அற்றவனும், தவறான மனச்சார்புடைய மனிதனாவான்.

முன்னேற்ற நோக்குடைய மனிதன் தன் தவறுகளைக் கொண்டும், பிறருடைய தவறுகளைக் கொண்டும் திருந்தி விடுகின்றான். நல்ல அறிவுரையை நடைமுறைப் படுத்திச் சோதனை செய்ய அவன் எப்போதுமே ஆயத்தமாக இருக்கின்றான்; தன் வழிமுறைகளில் என்றென்றும் பெருகுவதான நுட்பத்தைக் குறியாகக் கொள்கின்றான். அது மேன்மைக்கும் மேன்மையான நிறைவு நிலையினையே குறிக்கும். ஏனெனின், நுட்பம் நிறைவு நிலையாகும். ஒரு மனிதனின் தனித் தன்மையுடையவும், நிறைவு நிலையுடைவும் அளவே அவனுடைய நுட்பத்தின் அளவுமாகும்.

பயனோ பயனுடைமையோ ஒருவன் உழைப்பிலுள்ள வழிமுறையின் நேரடி விளைவாகும். முறையாகப் பின்பற்றப் படுகின்றபோது தன் உழைப்புப் பயனுடையதும், ஆதாயமுடையதுமான விளைவுகளுக்கு வந்துறுகின்றது. தோட்டக்காரன் நல்ல விளைச்சலில் வருவாய்த் தேடவேண்டியிருப்பின், சரியான நேரத்தில் விதைக்கவும், நடவும் வேண்டும். எந்த உழைப்பினுடைய விளைவுகள் பயனுடையதாயிருக்க வேண்டுமாயின், அது பருவத்திற்கேற்பச் செய்யப்பட வேண்டும். ஒரு காரியத்தைச் செய்து முடிக்கின்ற வாய்ப்பினைக் கடந்து போக விடுதல் கூடாது.

நடைமுறைப் பயன் கருதா மக்கள், பயனற்றதும், ஒத்துக் கூடாததுமான கோட்பாடுகளால் தம் மனங்களில் சுமையேற்றிக் கொள்கின்றனர். தத்தம் இயல்பின் காரணமாகவே நடைமுறையில் செயற்படுத்த முடியாத கோட்பாட்டுகளைக் கைக் கொண்டு தோல்வியை நாடுகின்றனர். வெறும் பேச்சிலும், தருக்கத்திலுமின்றித் தாம் செய்து முடிப்பதிலேயே தம் ஆற்றல்களை வெளிக்கொணரவல்ல மனிதர் புரட்டல்களையும், இக்கட்டு நிலைகளையும் தவிர்த்து, ஏதேனும் நன்மையான, பயனுடைய விளைவை நிறைவேற்றத் தம்மைச் செயல்படுத்துகின்றனர்.

நடைமுறைக்கு வர முடியாத ஒன்று மனத்திற்கு ஊறு செய்ய இடந் தருதல் கூடாது. அது வீசி எறியப்பட வேண்டும். கைவிடப்பட வேண்டும்; புறக்கணிக்கப்பட வேண்டும். தன் கோட்பாடு எவ்வகைப் பயன் விளைவையும் கொண்டதன்று என்பதை மெய்பித்துக் காட்ட வேண்டுமெனின், அஃது ஒர் அழகான கோட்பாடு எனும் பிடியை அவன் நிலையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அண்மையில் ஒருவர் கூறினார். வாழ்வில் எவ்விதப் பயனும், மெய்ம்மையில் எவ் வகைத் திண்ணமான அடிப்படையும் இல்லாதனவாய் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டனவும், பெயரளவில் “அழகானவை”யாக இருக்கின்ற கோட்பாடுகளைப் பற்றிக்கொண்டிருக்க ஒருவன் விரும்புவானாயின் அவன் உலகியல் சார்ந்த தன் முயற்சிகளில் தோல்வியடைந்தால் வியப்படைதற்கில்லை. ஏனெனில், அவன் நடைமுறைப் பயன் கருதா மனிதனாவான்.

மனிதனின் ஆக்கம் அவன் சமூகத்திற்குப் பயனுடையவனாய் இருப்பதைப் பொறுத்தே அளவிடப்படுகின்றது. செயற்படுவதைப் பொறுத்தே மனிதன் பயனுடையவனாகின்றான்; அவன் விரும்பிக் கடைப்பிடிக்கின்ற கோட்பாடுகளைக் கொண்டன்று.

தச்சன் நாற்காலியைப் படைக்கின்றான். கொத்தன் வீட்டைக் கட்டுகின்றான். கம்மியன் இயந்திரத்தைக் கண்டு பிடிக்கின்றான். அறிவுடையவன் குணவியல்பை உருவாக்குகின்றான். உழைப்பாளிகள், உருவாக்குபவர்கள், செயற்படுபவர்கள், இவர்களே புவியின் உரம் ஆவர்; சமயவாதிகளோ, கோட்பாட்டாளர்களோ, தருக்கவாதிகளோ அல்லர்.

அறிவாற்றல் கோட்பாடாகிய கானல் நீரினின்றும் மனிதன் திரும்பி எதையேனும் செயலாற்றத் தொடங்கட்டும். அதுவும் தன் வலிமை அனைத்தையும் கொண்டு செயலாற்றட்டும்; அதன் காரணமாக அவன் ஒரு தனிப்பட்ட அறிவைப் பெறுகின்றான். ஒரு தனிப்பட்ட ஆற்றல் கைவரப் பெறுகின்றான். தன் தோழர்களின் நடுவே தனக்கெனத் தனிப்பட்ட நிலையையும், ஆக்கத்தையும் அடைந்து விடுகின்றான்.

தொடர்புள்ள விளக்கங்கள் பலவற்றைப் புழங்கவும், அவற்றை இயக்கி ஒன்றாகப் பிணைக்கின்ற தனித்த நியதியுடன் சேர்த்து முழுமையாகப் புரிந்து கொள்ளவும் உதவுகின்ற மனப்பண்பே கவியாற்றலாகும். இது, உருவாக்கவும், கட்டிக்காகவும் ஆற்றலைத் தருகின்ற ஓர் ஆண்மைப் பண்பாகும். ஒரு பெரிய கவிதையினுடையவோ கதையினுடையவோ ஆசிரியர், தமது கதையுறுப்புகளையும், நிகழ்ச்சிகளையும் ஒரு மையமான கதைத் திட்டத்துடன் தொடர்புபடுத்தி, பல கலவையானதும், நிலைபெறுவதுமான ஓர் இலக்கியப்பணியை உருவாக்குகின்றார். பகுத்துணர்வதும், தொகுத்துணர்வதுமான திறமை ஒரே மனிதனிடத்தில் ஒரு சேரப் பொருந்தியிருப்பதே கவியாற்றலாகும். தன் ஆழமான அடிநிலைகளில் விளக்கங்களின் ஓர் அணிவகுப்பையே அவற்றின் சரியான அமைப்பு முறையிலும் உண்மையான இயக்க வரிசையிலும் தன்னகத்தே கொண்டுள்ள மனமே, சிறப்புத் திறமையை அடைந்துவிட வில்லையெனினும் அதை அடுத்துள்ள மனமாகும். ஒவ்வொரு மனிதனும் சிறப்புத் திறமையுடையவானக் இருக்க முடியாது. அவ்வாறு இருக்க வேண்டுவதுமில்லை. ஆனால், தன் சிந்தனைகளிலும், வாணிபத்திலும் முறை உண்டு பண்ணுவதில் கவனமுடன் கருத்தூன்றுவதால் தனது மனத் திறமையை அவன் சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொள்ள முடியும். அவனுடைய நுண்ணறிவு ஆழ்ந்து படரும் போது, அவனுடைய ஆற்றல்கள் மிகுதியாவதுடன், ஆக்கமும் சிறப்படைகின்றது.

வாழ்வில் தான் முயலும் உழைப்பு எத்தகைமைத்தாயிருப்பினும் சரியே, ஆற்றல், சிக்கனம், சால்பு, முறை இவற்றில் தன்னை நிறைவுபடுத்திக் கொள்பவன் தன் வாழ்க்கையின் உழைப்பில் நிலை பேறு கொள்ளும் வெற்றியடைவான். முழு ஆற்றலுள்ளவன், தனது நேரத்தையும் பொருளையும் கவனமுடன் சிக்கனப்படுத்துபவன். தன் வலிமையை, நன்னடத்தையில் பெருக்குபவன். திசை மாறாத சால்பைக் கொண்டொழுகுபவன், முதலில் தன் மனத்தை முறைப்படுத்துவதன் மூலம் தனது உழைப்பையும் முறைப்படுத்துபவன் தோல்வியடைதல் இயலாத காரியமாகும்.

அத்தகைய மனிதனின் முயற்சிகள் நேர்முறையில் செலுத்தப்படுகின்றன; அதுவும், அவை பயனுடையதாக, நன்மை பயப்பதாக இருக்கும் வகையில் ஒருமுகப்படுத்தப்பட்ட ஆற்றலால் செலுத்தப்படுகின்றன. இதற்கும் மேலாகத், தன் முனைப்பின்றியே மதிப்பையும், வெற்றியையும் கொணரும் ஓர் ஆண்மையும், தனித்தன்மையுடைய மேன்மையும் அவனை வந்தடைகின்றன. வலிவற்றவர்களின் நடுவே அத்தகையோன் வந்து தோன்றுதலே அவர்களுக்கு வலிமை ஊட்டும். “வாணிபத்தில் விடா முயற்சியுடனிருக்கும் மனிதனைப் பாருங்கள். அவன் அரசர்களுக்கெதிரே நிற்பானேயன்றி இழி மக்களின் முன்னிற்பதில்லை” என அத்தகையோன் ஒருவனைக் குறித்து ஸ்கிரிப்சர் கூறுகின்றார். அவன் இரப்பதோ, சுணுங்குவதோ, முறையிடுவதோ, பழிப்பதோ இல்லை. ஆனால், அத்துணைக் கீழ்நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாத வகையில் அத் துணைவலிமை, தூய்மை, நேர்மை உடையவனா யிருக்கின்றான். ஆகவே, தன் குணவியல்பின் மேன்மையிலும், செம்மையிலும் உயர்நிலையில் நின்று உலகிலும், மக்களின் மதிப்பீட்டிலும் ஓர் உயரிய இடத்தை வகிப்பவனாகின்றான். அவனுக்கு வெற்றி உறுதியானது; அவனுடைய ஆக்கம் நிலைபேறு கொள்ளும். “வாழ்கைப் போர்க்களத்தில் அவன் நிமிர்ந்து நிற்பானேயன்றி, வீழ்ச்சியடைவதில்லை”.

இரக்கம்

மீதியுள்ள தூண்கள் ஆக்கமெனும் கோயிலின் நடுப்பகுதித் தூண்களாகம். அவையே அதற்கு மிகுதியான வலிமையும், உறுதியையும் அளிக்கின்றன. அதனோடு அதன் அழகு, பயன் இரண்டையும் பெருக்குகின்றன. அதனின் கவர்ச்சியை அவையே பெரிதும் அதிகரிக்கின்றன. ஏனெனில், அவை உயர்ந்த ஒழுக்க நெறித் துறையைச் சார்ந்தனவாக இருப்பதால் பேரழகையும், குணவியல்பு மேம்பாட்டையும் சார்ந்தன வாகவும் இருக்கின்றன.

விலைவில் அழிந்து விதையோ கனியோ விட்டுச் செல்லாத வேரற்ற ஓர் அழகான மலரையொத்து, எளிதில் கண்ணீர் சிந்துவதும், மேலெழுந்தவாரியாக உள்ள மெய்ப்பாட்டை இரக்கமெனத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நண்பனொருவனைப் பிரியும் போதோ, வெளியிலுள்ள ஏதேனும் துன்பத்தைச் செவியுறுகின்ற போதோ நரம்புத்தளர்ச்சி கொண்டாற்போல் அழுதல் இரக்கமாகாது. பிறருடைய கொடுமைகளுக்கும், நீதி இன்மைகளுக்கும் எதிராகத் தோன்றுகின்ற முரட்டுச் சீற்றமும் இரக்க மனத்தின் எடுத்துக் காட்டாகிவிடாது. ஒருவன் தன் மனைவியைத் துன்புறுத்தவோ தன் குழந்தைகளை அடிக்கவோ தன் பணியாள்களைப் பழிக்கவோ வெறுத்து ஏளனமாய்ச் சொல்லம்புகளால் தன் அண்டை அயலாரைப் புண்படுத்தவோ செய்பவன், வீட்டில் கொடுமைக்காரனாக இருப்பவன், அல்லல்படும் மக்களிடம் காட்டும் அன்பு எத்துணை வஞ்சகமானதாக விருக்கும்? அவனை அடுத்துள்ள உலகில் காணக்கிடக்கும் நீதியின்மைக்கும், கல் நெஞ்சத்திற்கம் எதிராகத் தோன்றுகின்ற சீற்றங்கள் எத்துணை ஆழமற்ற மெய்ப்பாட்டை அறிவுறுத்துகின்றன.

அத்தகையோரை எமர்சன் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார் : “போ. உன் குழந்தையிடம் அன்பு செலுத்து. உன் விறகு வெட்டியிடம் அன்பு செலுத்து. நல்லியல்பு கொண்டவனாக, அடக்க முள்ளவனாக இரு. அந்த மேம்பாட்டைக் கொண்டிரு. உனது கடினமான, ஈவிரக்கப் பேராசையை ஆயிரம் மைல்களுக்கப்பாலுள்ள கருப்பு நிற மக்கள் மீது காட்டுவதான நம்ப முடியாத பரிவால் என்றுமே மெருகு பூசாதே. தொலைவிலுள்ளோாக்கு நீ காட்டும் அன்பு வீட்டோர்க்குப் பகையாகம்.”

ஒருவனின் உரைகல் அவனுடைய உடனடியான செயல்களிலே இருப்பதன்றி அவனுடைய முனைப்பாடான மெய்ப்பாடுகளில் இருப்பதன்று. அச் செயல்கள் இடைவிடாது தன்னலமும், பகைமையும், கொண்டதாகக் கூறப்படின், அதாவது வீட்டிலுள்ளோர் அவனுடைய காலடியோசையைக் கேட்டதும் அஞ்சிக் கலங்கவும், அவன் நீங்கியதும் மகிழ்ச்சி தரும் விட்டாற்றியாகக் கருதவுமான நிலையிருப்பின், துன்பப்படுவோர்க்கும், தாழ்த்தப்படுவோர்க்கும் அவன் கூறும் இரக்கச் சொற்கள் எத்துணை பொய்மையானது!

இரக்கமெனும் கிணறு கண்ணீரெனும் ஊற்றைப் பெருக்கக் கூடுமெனினும், பெரும்பாலும் அவ் ஊற்று தன் தேவையைத் தன்னலமெனும் இருண்ட மடுவிலிருந்தே பெறுகின்றது. ஏனெனில், தன்னலம் தடைப்படும்போது, அது கண்ணீராகத் தன்னைக் கரைத்துவிடுகின்றது.

சிணுக்கத்திலும், தீய தன்மையுடைய ஏளனத்திலும், வெறுப்பான பழிப்பிலும், வசையிலும், வக்கணையிலும், சினத்திலும், கண்டனத்திலும், அதே போன்று, நடைமுறை ஆதாரம் எதுவுமின்றிக் கொள்கை அளவினதான, பாவனை செய்து கொள்ளப்படுவதான மெய்ப்பாட்டிலுமே இரக்கமின்மை காணக்கிடக்கின்றது.

தன்னலத்திலிருந்தே இரக்கமின்மை தோன்றுகின்றது. அன்பிலிருந்து இரக்கம் தோன்றுகின்றது. தன்னலம் அறியாமையில் அமிழ்ந்திருப்பது; அன்பு அறிவுடன் தொடர்புற்றிருப்பது. தமக்கெனத் தாம், தனிப்பட்ட குறிக்கோள்களும் அக்கறைகளும் கொண்டவராகவும், தம்மைத் தம் தோழர்களிடமிருந்து தனிப்பட்டவராகக் கற்பனை செய்து கொள்வதும், அவரவர் பின்பற்றும் வழிகளில் தாம் நேரான போக்குடையவராகவும், பிறர் தவறான போக்குடையவராகவும் இருப்பதாகக் கருதிக் கொள்வதும் மக்களிடையே காணப்படும் பொது நிலையாகும். தனிப்பட்ட, தன் காரியத்தில் ஈடுபாடுடைய இத்தகைய வாழ்வினின்றும் மனிதனை உயர்வடையச் செய்து அவன் தன் கூட்டாளிகளின் உள்ளங்களில் அவர்களுடன் ஒன்றுபட்டு எண்ணவும், உணரவும் இரக்கம் வகை செய்கின்றது. அவன் தன்னை அவர்களிடத்திலே வைத்து, அப்போதைக்கு அவர்களாகவே ஆகிவிடுகின்றான். “காயமுற்ற மனிதனிடம் அவன் எவ்வாறிருக்கின்றான் என்று நான் கேட்பதில்லை. நானே காயமைடந்தவனாக மாறிவிடுகிறேன்” என்று மருத்துவமனை வீரன் விட்மேன் இந் நிலையினை விளக்குகின்றார்.

துன்பப்படுகின்ற ஓருயிரை வினவுதலே ஒரு வகையான துடுக்குத்தனமாகும். துன்பப்பாடு எதிர்பார்ப்பது உதவியும் இரக்கச் சிந்தையுமேயன்றிக் காரியமறியும் ஆர்வமன்று. இரக்கச் சிந்தையுடைய ஆண்மகனோ பெண்மணியோ துன்பமுணர்ந்து அதைத் தணிவுறுத்தும் வகையில் தொண்டு புரிகின்றனர்.

இரக்கம் தற்புகழ்ச்சி கொள்ளாது. தற் புகழ்ச்சி எங்கெங்கு உள் நுழைகின்றதோ, அங்கிருந்து இரக்கம் வெளியேறி விடுகின்றது. ஒருவன் அன்பு ததும்பும் தன் செயல்கள் பலவற்றைக் குறிப்பிட்டு விட்டு அதற்கு மாறாகத் தனக்குக் கிடைத்த விருந்தை குறை கூறுவானாயின், அவன் அன்பு ததும்பும் செயல்களைச் செய்தவனாக மாட்டான். இரக்கத்தின் இனிமையாகிய தன்னை மறந்த பணியை அவன் இனித்தான் அடைய வேண்டும்.

இரக்கத்தை அதன், ஆழ்ந்த பொருள் கொண்டு பார்கையில் அது பிறருடைய முயற்சிகளிலும், துன்பங்களிலும் அவர்களுடன் ஒன்றிவிடுவதாகும். அவ்வகையில்தான் இரக்கம் கொண்ட மனிதன் ஒரு கலவைப் படைப்பாகின்றான்; அவன் பல மனிதர்களுள் ஒருவன். ஒரு காரியத்தை அவன் பல மாறுபட்ட கோணங்களிலிருந்து நோக்குவானேயன்றி ஒரே ஒரு கோணத்திலிருந்து மட்டும் நோக்குவதில்லை. அதுவும் தன் குறிப்பிட்ட கோணத்திலிந்து மட்டும் நோக்குவதோடு அமைவதில்லை. அவன் பிறரின் கண்களைக் கொண்டு நோக்குகின்றான்; அவர்களின் காதுகளைக் கொண்டு கேட்கின்றான்; அவர்களின் மனங்களைக் கொண்டு எண்ணுகின்றான்; அவர்களுடைய உள்ளங்களைக் கொண்டு உணர்ச்சியடைகினறான். எனவே, தன்னிலிருந்து பெரிதும் மாறுபட்ட மனிதரையும் அவன் புரிந்துகொள்ள முடிகின்றது. அவர்களுடைய வாழ்க்கையின் பொருள் அவனுக்குப் புலனாகின்றது. நல்லெண்ணம் என்னும் உணர்ச்சியில் அவன் அவர்களுடன் ஒன்றுபட்டவனாகி விடுகின்றான்.

“எளியோர் என் கவனத்தை ஈர்க்கின்றனர்; அவர்களுடைய பசி என்னுடைய பசி, நான் அவர்களுடைய இல்லங்களில் அவர்களுடனேயே இருக்கின்றேன். அவர்களுடைய வறுமையில் நானும் பங்கு கொள்கின்றேன். இரப்போருடைய கந்தலுடைகள் என் உடல்மீது இருப்பன போலுணர்கின்றேன்; அந்த நேரத்திற்கேனும் நான் ஏழையாகவும், இகழ்ச்சிக்குரிய மனிதனாகவும் ஆகி விடுகின்றேன்” என்று பால்ஸாக் கூறியுள்ளார். துன்பப்படுகின்ற ஒருவனுக்குச் செய்யப்படுகின்ற உதவி இறைவனுக்கே செய்யப்பட்டதாகும் என்று பால்ஸாக்கை விடப் பெரியவராகிய ஒருவர் கூறியிருப்பதை இது நினைவுபடுத்துகின்றது.

இரக்கம் எல்லா மனிதர்களின் உள்ளங்களுக்கும் நம்மை அழைத்துச் சென்றுவிடுகின்றது. எனவே, நாம் அவர்களுடன் உணர்ச்சிப் பிணைப்புடையவர்களாகி விடுகின்றோம். அவர்கள் துன்புறும்போது அந்த நோவை நாமும் உணருகின்றோம். அவர்கள் களிப்புடனிருக்கும் போது அவர்களுடன் நாமும், மகிழ்ச்சி அடைகின்றோம். அவர்கள் ஏளனத்திற்கும், தொல்லைக்கும் உள்ளாகும் போது நாம் உணர்ச்சியளவில் அவர்களுடன் ஆழ்ந்து படிந்து அவர்களுடைய தாழ்வுணர்ச்சிகளையும், துயரங்களையும் நம் இதயங்களில் ஏற்றுக்கொள்கின்றோம். பிணைத்து, ஒருமைப்படுத்துகின்ற இரக்கமெனம் உணர்ச்சியுடைய எவனும் சீறி விழுவதும், பழிப்பதுமான செயல்களுடையவானாக என்றுமே இருக்க மாட்டான். அவன் தன் கூட்டாளிகளைக் குறித்துச் சிந்தனையற்ற, கொடுமையான கருத்துகளை என்றுமே வெளியிடமாட்டான். ஏனெனின் இவனுடைய உள்ளத்தின் மெல்லிய இயல்பு காரணமானக அவர்களுடைய துன்பத்தின்போது இவன் அவர்களுடனேயே இருப்பவனாகின்றான்.

துன்பங்கள் சூழ்ந்த மனிதனாகத் துயருடன் தொடர்பு கொள்ளாத எம் மனிதனும் உண்மையான இரக்கம் கொண்டிருக்கமுடியாது. ஆனால், அத் துன்பமும், துயரமும் மறைந்து போயிருக்கவேண்டும். அஃதாவது நிலையான அன்பாகவும், வழக்கமான அமைதியாகவும் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு வாழ்க்கைப் போக்கிலும் உண்மையான இரக்கச் சிந்தையுடைய மனிதர் இருந்து வருகின்றனர் எனும் உண்மையைக் கண்டு களிப்படைகையில், கடுமை, கோபம், கொடுமை இவையனைத்தும் மிகவும் மலிந்து கிடப்பதையும் ஒருவன் காணுகின்றான். கடினமான இக்குணங்கள் அவற்றிற்குரிய துன்பங்களையும் கொணருகின்றன. தம் வாணிபத்திலோ குறிப்பிட்ட பணியிலோ, முழுக்க முழுக்கத் தமது கடினமான மனநிலை காரணமாகவே தோல்வியடையவர் இருந்து வருகின்றனர். சீற்றமும், சினமும் கொண்ட மனிதனோ, தன் நெஞ்சத்தில் கடுமையும், தண்மையும், தன்னலச் சூழ்ச்சியும் கொண்டு இரக்கத்தின் ஊற்றுக் கண்கள் வற்றிவிட்டவனாக இருப்பவனோ, பிற வகையில் திறமை வாய்ந்த மனிதனாக இருப்பினும்கூட, முடிவில் தன் காரியங்களில் அழிவைத் தவிர்ப்பது அரிதாகும். ஒரு நிகழ்ச்சியில் சினந் தோய்ந்த மடமையும், மற்றொன்றில் தண்ணிய கொடுமையும் அவன் காட்டுகின்ற நிலை, அவனுடைய தோழர்களிடமிருந்தும், அவனது தொழிலோடு நெருங்கிய தொடர்புடையோரிடமிருந்தும் அவனைப் படிப் படியாகத் தனித்து ஒதுக்கிவிடும். எனவே, தன்னந் தனியான தோல்வியுடன், ஒருவேளை நம்பிக்கையற்ற மனமுறிவுடன் அவனை விட்டு விட்டு ஆக்கக் கூறுகள் அவன் வாழ்வினின்றும் விட்டொழிந்து விடும்.

எந்த ஒரு வாணிபத் தொடர்புகளில் கூட இரக்கம் ஒரு சிறப்பான ஆக்கக் கூறாகும். ஏனெனில், கடுமையும், தடைகூறும் இயல்பும் கொண்டோரைவிட அன்பும், மகிழ்ச்சியான இயல்பும் கொண்டவருடனேயே, தொடர்வு கொள்ள மக்கள் விரும்பி அவர்களிடம் ஈடுபாடு கொள்கின்றனர். நேரடியாகத் தாமே தொடர்வு கொள்ளும் துறைகள் அனைத்திலும், நடுத்தரமான திறமையுடன் இரக்கச் சிந்தையும் கொண்ட மனிதன், மிகுதியான திறமையிருப்பினும் இரக்கம் அற்றவனாயிருக்கின்ற மனிதனை முந்திவிடுவான்.

ஒரு மனிதன் ஓர் அமைச்சராக இருப்பினும், ஒரு சமயவாணனாக இருப்பினும் அவரிடமிருந்து வெளிப்படுகின்ற கொடுமையான சிரிப்பும், அன்பில்லா மொழியும் அவனுடைய புகழையும், செல்வாக்கையும் மிகவும் ஊறுபடுத்திவிடும். குறிப்பாக அவனுடைய செல்வாக்கையே பெரிதும் பாதிக்கும். ஏனெனின், அவனுடைய நல்லியல்புகளைப் பாராட்டுவோர்கூட, அவன் அன்பில்லாதிருத்தலைக் கண்டு, தமது சொந்த மதிப்பீட்டில் தம்மை அறியாமலே அவனைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

இரக்கம் விலங்குகளும் உட்பட அனைவரும் இயல்பாகவே புரிந்து போற்றுகின்ற உலகின் இயல்பான பண்பாகும். மனிதர் முதல் உயிரினங்கள் அனைத்தும் துன்பத்திற்குட்படுவனவே. துன்பகரமான பட்டறிவின் ஒருமைப்பாடு இரக்கம் என்னும் உணர்ச்சியை உண்டுபண்ணுகின்றது.

தன்னலம் பிறருடைய பொறுப்பில் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள மனிதரைத் துண்டுகின்றது. ஆனால், இரக்கம் தன்னல ஈகத்தால் பிறரைக் காப்பாற்ற அவர்களைத் தூண்டுகின்றது. இத் தன்னலத் ஈகத்தில் உண்மையான, முடிந்த முடியவான இழப்பு எதுவுமே இல்லை. ஏனெனின், தன்னல மகிழ்ச்சிகள் சிறியதும், ஒரு சிலவாகவுமிருக்க, இரக்கத்தின் நன்மைகள், பெரியவும் பல்வகைப் படுவனவாகவும் இருக்கின்றன.

இரக்கம் என்னும் இப் பெரிய அறத்தை நால்வகைக் குணங்கள் உருவாக்குகின்றன. அவை;

1. அன்பு 3. படிமானம்
2. பெருந்தன்மை 4. நுண்புலம்

ன்பு முழு வளர்ச்சியடைகின்ற போது, அது தோன்றி மறையும் உணர்ச்சி வேகமன்று, நிலைபெற்ற குணமேயாகும். பெரும்பாலும் அன்பெனும் பெயரில் அழைக்கப்டுவதாயினும், இடையிடையே தோன்றி மறைவதும், நம்பக்கூடாததுமான உணர்ச்சி அன்பாகாது. புகழுரையைப் பழிப்புரை பின் தொடர்வதாயின் புகழுரையிலே அன்பே இல்லை. இயல்பாயெழுகின்ற கொஞ்சுதலைத் தூண்டுவதாகத் தோன்றுகின்ற அன்பு இயல்பாயெழுகின்ற வெறுப்புடனும் தொடர்பு கொண்டிருப்பின் அந்த அன்பு சிறிதளவே கருத்திற் கொள்ளற்பாலதாகும்.

நன்கொடை தருபவன் பின்பு அதன் மதிப்பீடு தனக்குத் திரும்பக் கிடைக்க வேண்டுமென்று விரும்புவானேயானால், மேம்பட்டதாகத் தோன்றிய பல நன்கொடையும் தன் மதிப்பை இழந்துவிடும். ஒருவன் தனக்கு மகிழ்ச்சியுண்டாக்கும் ஏதேனும் வெளிப்புறத் தூண்டுதல் காரணமாய் மற்ற ஒருவனுக்கு அன்பு செய்தற்பொருட்டுத் தன் உணர்ச்சிகளை எழுச்சியுறச் செய்து சிறிது நேரத்திற்குப் பிறகு அவனுக்கு வெறுப்புண்டு பண்ணுகின்ற ஏதேனுமொரு வெளிப்புற நிகழ்ச்சி காரணமாக அதே மனிதரிடம் அன்பின் மறுகோடிக்குச் சாய்ந்து விடுவதைக் குணவியல்பின் குறைபாடாகவே கொள்ள வேண்டும். அது ஒரு தன்னலச் சூழ்நிலையேயாகும். ஏனெனின், நமக்கு மகிழ்ச்சியூட்டும் ஒருவனுக்கு மட்டும், அதுவும் அவன் மகிழ்ச்சியூட்டுகின்றபோது மட்டும் அன்புச் செயல் செய்வதென்பது அவன் தன்னலத்தை மட்டும் கருதுவதையே காட்டும்.

உண்மையான அன்பு மாற்றப்பட முடியாதது. அதைச் செயற்படுத்த வெளித் தூண்டுதல் தேவையில்லை. அது வேட்கை கொண்ட உயிர்கள் எப்போதும் அள்ளிப் பருகத்தக்க கேணியாகும். அது என்றுமே வற்றுவதில்லை. அன்பு ஒரு வலிமை வாய்ந்த அறமாகும்போது, நமக்கு மகிழ்ச்சியூட்டுவோர்க்கு மட்டும் வழங்கப்படுவதன்று. ஆனால், நமது விருப்பத்திற்கும், கருத்திற்கும் எதிராகச் செயல்படுவோர்க்கும் வழங்கப்படுவதாகும். அஃது இடைவிடாததும், என்றுமே மாறாததுமான மகிழ்ச்சி ஆர்வத்தின் ஒளியாகும்.

மக்கள் எண்ணி இரக்கப்படுகின்ற சில செயல்கள் உள்ளன; அத்தகையவை அன்பில்லாச் செயல்கள். மக்கள் எண்ணி இரக்கப்படாத பிறசெயல்கள் உள்ளன; அத்தகையவை அன்புச் செயல்கள். மக்கள் தாம் மொழிந்த, செய்த கொடுமையான செயல்களுக்காக வருத்தப்படுகின்ற நாள் வந்து சேருகின்றது; ஆனால் அவர் மொழிந்த, ஆற்றிய அன்பான செயல்களுக்கான மகிழ்ச்சியான நாள் எப்போதும் அவர்களுடனேயே இருக்கின்றது.