வெற்றிக்கு எட்டு வழிகள்/010-010
தன்னம்பிக்கை பற்றிய எமர்சனின் கட்டுரையை ஒவ்வோர் இளைஞனும் படித்தாக வேண்டும். இதுவரை எழுதப் பெற்றவற்றில் ஆண்மையும் வீரமும் செறிந்த கட்டுரை அதுவேயாகும். அது, வாலிபர்களிடையே காணப்படுகின்ற தன்னைத் தானே குறைவாக மதிப்பிடுதல், தன் இறுமாப்பு என்னும் இருமனப் பிணிகளையும் ஒருங்கே குணப்படுத்துவதற்கெனத் திட்டஞ் செய்யப்பட்டது. நாணமுடையவனுக்கு அவனுடைய தயக்கத்தின் வலுவின்மையையும், பயனின்மையையும் அது எடுத்துக் காட்டுகிறது. தருக்குடையவனுக்கு அவனுடைய செருக்கின் சிறுமையையும், வெறுமையையும் அது புலப்படுத்துவதாகவே இருக்கும். இது வீறுமிக்க விழுப்பத்தின் புதிய புலப்பாடு, பண்டைய திருப்பார்வையுடையோனுக்கு அருள் பாலித்த புலப்பாடு போன்றது.
தன்னம்பிக்கைத் தற்செருக்கெனத் தவறுதலாகப் புரிந்து கொள்ளக்கூடாது. ஏனெனின், ஒன்று எத்துணை உயர்வானதாகவும், மேம்பாடுடையதாகவும் இருக்கின்றதோ, அத்துணை தாழ்வானதாகவும், பயனற்றதாகவும் மற்றது இருக்கின்றது. தன்னம்பிக்கையில் இழிவுடையது எதுவுமே இருக்கவியலாது. அதே போன்று தற்செருக்கில் சிறப்புடையது எதுவுமே இருக்காது.
பழமையான ஒன்றை அடிமைத் தளமாகப் பின்பற்றுதற்குப் பதிலாக ஒரு புதிய எடுத்துக் காட்டாக மாறுகின்ற வகையில் தனது சொந்த முயற்சியையே நம்பும்படி வலியுறுத்துகின்ற தன்னம்பிக்கை அவனுக்குத் தேவைப்படுகின்றது. ஏளனத்தைப் பொறுத்தவரை, ஏளனத்தால் மனம் நொந்துபோகின்றவன் மனிதனே அல்லன். தன்னம்பிக்கை மனிதனின் வலிமையான கவசத்தை ஏளனம், பழிப்பு இவற்றின் அம்புகள் ஊடுருவிச் செல்லவியலாது. அவனுடைய நேர்மையான நெஞ்சத்தின் வெல்ல முடியாத அரணைத் துன்புறுத்தவோ அன்றிப் புண்படுத்தவோ அவை நெருங்க வியலாது. பழிச்சொல்லாகிய கூர்மையான அம்புகளை அவன்மீது மழையெனப் பொழியலாம், ஆனால், அவனுடைய வலிமையான மார்புக் கவசத்தால் அவை திசை திருப்பப்பட்டு அவனருகே தீங்கற்று வீழ்கின்றபோது அவன் அவற்றைக் கண்டு சிரிக்கின்றான்.
“உன்னையே நம்புவாயாக” - “இந்த இரும்பு நாணையே ஒவ்வோர் நெஞ்சமும் மீட்டுகின்றது” என்று கூறுகின்றார் எமர்சன். மனிதர் தம் சொந்த இயல்பான எளிமையையும், இயற்கையான பெருந்தன்மையையும் ஆதாரமாகக் கொண்டிருப்பதற்குப் பதிலாகத் தலைமுறை, தலைமுறைகளாக அவர்கள் இதுவரையில் புறவியலான சூழ்ச்சிகளையே ஆதாரமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். தற்போதும் அவற்றையே ஆதாரமாகக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தம் இயல்பை ஆதாரமாகக் கொள்ளும் உறுதிப்பாடு கொண்டிருந்த ஒரு சிலரே தனிச்சிறப்புக்கு உரியவர்களாக்கப்பட்டு வீரர்களாக மேன்மைப் படுத்தப்பட்டிருக்கின்றனர். தனது சொந்த இயல்பே முனைந்து வெளிப்பட இடந்தரும் துணிவுடையவனும், தனது சொந்த இயல்பான பெறுமானத்தின் மீது நிலைகொள்ளும் வாய்ப்பினைத் தரும் வலிமையான உலோகம் போன்றவனுமே உண்மையான வீரனாவான்.
அத்தகைய வீரத்தை நாடுபவன் வலிைையத் தாங்கியே ஆகவேண்டும். போலி மரபு முறைப் பூச்சாண்டிகளால் அவன் தனது கொள்கைப் பிடியிலிருந்து விலகிவிடக் கூடாது. அவன் தனது நற்பெயருக் காகவோ பதவிக்காகவோ திருச்சபையில் தனது செல்வாக்கிற்காகவோ சமூகத்தில் தனது மதிப்பிற்காகவோ அஞ்சுதல் கூடாது. அவன் நில உலகின் எதிர்முனைகளில் உள்ள நடைமுறை நாகரிகங்களினின்றும் நீங்கித் தன்னுரிமையுடன் நடந்து கொள்வது போன்று, இத்தயக்கங்களினின்றும் நீங்கித் தன்னம்பிக்கையுடன் செயலிலீடுபடவும், வாழவும் அவன் கற்றுக் கொள்ள வேண்டும். அவன் இச் சோதனையைத் தாங்கிய பின்பு அவதூறும், பழியும் அவனைத் தூண்டிவிடவோ, துயர்தரவோ முடியாது தோற்றுவிடுகின்றபோது அவன் உண்மையில் ஒரு மனிதனாகின்றான். சமூகம் முதலில் அவனிடம் நம்பிக்கை வைத்து முடிவில் அவனுடைய சொந்த குணநலன்களுடனே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒருவனாகிவிடுகிறான்.
விரைவிலோ பிற்பட்டோ மனிதர் அனைவரும் அறிவுரைக்காகத் தற்சார்புடைய மனிதேைய நாடுவர். சிறந்த மனங்கள் அவரை ஓர் ஊன்றுகோலாகப் பயன்படுத்திக் கொள்ளாத போதிலும், அவர்தம் பணியையும், பயனையும் உயர்வாகப் பாராட்டி, முன்பு சென்று மறைந்த தெய்வங்களுள் அவருக்கும் ஓர் இடம் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளுவர்.
கல்வியை வெறுப்பதே தற்சார்பின் சுட்டுக் காட்டெனக் கருதிவிடுதல் கூடாது. அத்தகைய மனப்பான்மை, வலிமையின்மையின் கூறுகளைக் கொண்ட முரண்டான தற்பெருமையினின்றும் தோன்றுவதாகுமென்பதோடு, வீழ்ச்சியின் முன்னறிவிப்பும் ஆகுமே அன்றித் தன்னம்பிக்கையின் தனிச்சிறப்புப் பண்புகளாகிய வலிமையின் கூறுகளோ உயர்ந்த பேறுபெறும் உறுதிப்பாடோ ஆகாது. இறுமாப்பையும், பகட்டையும் தன்னம்பிக்கையுடன் தொடர்புபடுத்தவே கூடாது. தற்சார்பு மேன்மையுறச் செய்கின்ற வேளையில் அவை இழிவுபடுத்துகின்றன. பணம், ஆடை, சொத்து, தன்மதிப்பு, பதவி ஆகிய தற்செயல் விளைவுகளையும், துணைப்பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டதே இறுமாப்பு; அவற்றை இழந்துவிட்டால் அனைத்தையும் இழந்துவிடுவோம்.
நேர்மை, தூய்மை, மெய்யார்வம், குணவியல்பு, மெய்ம்மை ஆகிய தலையாய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டதே தன்னம்பிக்கை; எதை இழப்பினும் அஃது ஒரு பொருட்டாகாது. ஏனெனின், இவை என்றுமே இழக்கப்படுவதில்லை. புறப் பகட்டாலும், தற்செருக்காலும் இறுமாப்பு தனது அறியாமையை மறைக்க முயலுகின்றது. அதனோடு எத் திசையிலும் தன்னை ஒரு மாணவனாகக் கருத விரும்புவதில்லை. விரைந்து செல்லும் சிறிய பொழுதிற்குள் அறியாமையிலும் பகட்டிலுமே நிலைகொள்கின்றது. இன்று எத்துணை உயர்வுக்கு அது உயர்த்தப்படுகின்றதோ, நாளை அத்துணைத் தாழ்விற்கு அது வீழ்த்தப்பட்டுவிடும். மறைக்கப்படவேண்டியது எதுவுமே தன்னம்பிக்கையிடம் இல்லை. அதனோடு கற்றுக் கொள்வதற்கும் விருப்பமுடையதாயிருக்கின்றது. தற்செருக்குள்ள இடத்தில் பணிவு இருக்க முடியாதபோது, தன்னம்பிக்கையும், பணிவும் ஒத்தியங்கக் கூடியனவாயிருக்கின்றன. ஏன், அதைவிடக் கூடுதலாக ஒன்றிற்கொன்று சார்புற இணைந்து கொள்ளுவனவாகும். அதனோடு விழுமிய தன்னம்பிக்கை ஆழ்ந்த அடக்கத்துடன் இணைந்திருப்பதையே காணலாம்.
“வீரத்தின் சாரம் தன்னம்பிக்கையேயாகும். மேன் மக்கள் அனைவரும் தற்சார்புடையவரே. நாம் அவர்களை ஆசிரியர்களாகவும், பின்பற்றத் தக்கவர்களாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமேயன்றி, ஊன்றுகோல்களாகவும், உந்து ஆற்றலாகவும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. வேறு எவரையும் பற்றுக் கோடாகக் கொள்ளாது உண்மையின் தனித்த உயர்நிலையின் மீது தனியாக நிற்பவனே மேம்படு மனிதனான வருகின்றான். உடன்தானே உலகம் அவனைப் பற்றுக் கோடாகக் கொள்ளத் தொடங்கிவிடுகின்றது. ஆன்மீகச் சோர்விற்கும் கேடுதரும் தன் தாழ்விற்கும் அவனை ஒரு சாக்குப் போக்காகக் கொள்ளத் தொடங்கி விடுகின்றது; மேன்மக்களின் வலிமையில் நம் தீமைகளைத் தாலாட்டிக் கொள்வதைக் காட்டிலும், அவர்களுடைய ஒளிமிக்க விளக்கெதிரே நம் அறங்களுக்குப் புத்தொளி தருவதே சாலப் பொருந்துவதாகும். பிறருடைய ஒளியை நாம் நம்பியிருந்தால், இருள் நம்மைச் சூழ்ந்துவிடும். ஆனால், நாம் நமது ஒளியையே நம்பியிருப்பின் நாம் அதன் சுடரை வளர்த்தேயாக வேண்டும். நாம் பிறரிடமிருந்து ஒளியைப் பெறுவதும், மற்றவர்க்கு வழங்குவதுமாகிய இரண்டையுமே செய்யலாம். ஆனால், நமது சொந்த விளைக்கைப் புறக்கணித்துத் துருப்பிடிக்க விட்டுவிட்டுப் பிறருடைய ஒளியே போதுமெனக் கருதுவது நம்மை நாம் இருளில் கைவிடப்பட்டவர்களாவோம். என்றுமே நம்மைக் கைவிடாத ஒளி நமது சொந்த உள்ளொளியே.
தன்னம்பிக்கைக்குப் பிறிதொரு பெயராகிய ‘உள்ளொளி’, அச்சத்தால் நடுங்குபவர்களுக்கு எங்கிருக்க முடியும்? நாம் எவ்வாறிருக்கின்றோமோ அதன் அடிப்படையிலேயே நாம் நிலைகொள்ள வேண்டுமே அன்றிப் பிறனொருவன் எவ்வாறிருக்கின்றான் என்பதன் அடிப்படையில் நிலைகொள்ளுதல் கூடாது. பால் குடிப்பதும், பற்றிக் கொள்வதும் பசுங்குழவிக்குத் தேவையே. ஆனால் ஒரு மனிதன் அவ்வாறின்றித் தன் சொந்தக் கால்களைக் கொண்டே நடந்து செல்ல தொடங்கி விடுகின்றான். மனிதர் தாமாகவே அடைவதற்கென அமைக்கப்பட்டிருக்கின்ற ஒன்றைத் தம் கைகளில் தருமாறு இறைவனை வழிபடுகின்றனர். தாம் கடுமையாக உழைத்துப் பெறவேண்டிய உணவைத் தமது வாயில் ஊட்டுமாறு வழபடுகின்றனர். ஆனால், மனிதர் இந்த ஆன்மீகக் குழவிப் பருவத்தை விரைவில் கடந்து விடுவர். தமக்காக வழிபாடு செய்யவும், தமக்கு அறிவுரை கூறவும் புரோகிதருக்கு மக்கள் கூலிகொடுக்காத நிலை வந்தே தீரும்.
தன்னைத்தான் நம்பாத நிலையே மனிதனின் தலையாய தொந்தரையாகும். எனவே, தன்னம்பிக்கையுடைய மனிதன் அரிதான, தனிப்பட்ட காட்சிப் பொருளாகி விடுகின்றான். ஒரு மனிதன் தன்னை ஒரு “புழு”வாகத் தானே கருதுவானாயின், பயனற்ற நெறியைத்தவிர அனிடமிருந்து வேறு என்ன விளைவு ஏற்பட்டு விட முடியும்? “தன்னைத் தானே பணிவுடையவனாக்கிக் கொள்ளுபவன் மேன்மைப் படுத்தப் படுவான்” என்பது உண்மையே. ஆனால், தன்னைத்தானே தரங்குறைத்துக் கொள்ளுபவனுக்கு அந்நிலை ஏற்படாது. மனிதன் தான் இருக்கின்றவாறே தன்னைக் காணவேண்டும். தகுதியற்றது ஏதேனும் தன்னிடமிருப்பின் அதை நீக்கித் தகுதியுடையதை விடாமல் பற்றிக் கொண்டு நம்பிக்கையும் கொள்ள வேண்டும். மனிதன் தன்னைத்தான் தரங்குறைத்துக் கொள்ளும் போது அவன் தரங்குன்றியே விடுகின்றான். அவன் தன்னுயர்வுக்கான வாழ்வு நடத்தும்போதே உயர்வு படுத்தப்படுகின்றான்.
ஓரளவேனும் தன்னம்பிக்கை கொண்டு மனிதனுடைய செல்வாக்கையும், வளப்பத்தையும் குறிப்பிடத்தக்க அளவு பெருக்க முடியாத துறை வாழ்வில் எதுவுமே இல்லை. உலகியல் சார்ந்ததோ சமயஞ் சார்ந்ததோ ஆசிரியர், அமைப்பாளர், மேலாளர், கண்காணிப்பாளர், மற்றும் ஆட்சியும் அதிகாரமும் செலுத்த வேண்டிய பதவியிலுள்ளோர் அனைவருக்கும் இது ஓர் இன்றியமையாத கருவியாகும்.
ஓரளவேனும் தன்னம்பிக்கை கொண்டு மனிதனுடைய செல்வாக்கையும், வளப்பத்தையும் குறிப்பிடத் தக்க அளவு பெருக்க முடியாத துறை வாழ்வில் எதுவுமே இல்லை. உலகியல் சார்ந்ததோ சமயஞ் சார்ந்ததோ ஆசிரியர், அமைப்பாளர், மேலாளர், கண்காணிப்பாளர், மற்றும் ஆட்சியும் அதிகாரமும் செலுத்த வேண்டிய பதவியிலுள்ளோர் அனைவருக்கும் இது ஓர் இன்றியமையாத கருவியாகும்.
தன்னம்பிக்கையின் மேன்மையான நான்கு குணங்களாவன:
1. தீர்மானம் | 3. சீர்மை |
2. திண்மை | 4. தன்னாண்மை |
தீர்மானம் மனிதனை வலிமையுடையவானக்குகின்றது. தடுமாறுபவன் வலுவற்றவனேயாவான். வாழ்வெனும் நாடகத்தில் எத்துணைச் சிறியதாயினும் சிறப்பான பங்கை நடிக்க வேண்டிய மனிதன் தீர்மானமுடையவனாக இருப்பதோடு, தன் பகுதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் வேண்டும். அவன் செயல்படுதற்கான தன் ஆற்றலைக் குறித்து ஐயுறுதல் கூடாது. வாழ்வில் தன் பகுதி என்னவென்பதைத் தெரிந்து அதனில் தன் ஆற்றல் அனைத்தையும் செலுத்தவேண்டும். தான் செயற்படுதற்கும், பாதுகாப்பாக நிலைகொள்தற்கும் ஏதேனும் திண்ணமான அறிவுத் தளத்தை அவன் கொண்டிருக்க வேண்டும்.
தன்னம்பிக்கையின் கண் ஒரு பெரும் மூலக்கூறு இருப்பது உறுதியே. கூறப்படுவன் மதிப்புடையதாயிருக்க வேண்டுமெனின், கூறுவதற்கான உண்மை எதையேனும் மனிதன் கொண்டிருக்க வேண்டும். உண்மையை அறிவுறுத்துவதிலேயே திறமை அனைத்தும் அமைந்து கிடக்கின்றது. அவன், “உண்மையின் அடிப்படையில் உரையாட வேண்டுமேயன்றிக் கிறுக்கர்போலப் பேசுதல் கூடாது.” எப்போதும் கற்றுக் குட்டியாகவே இருக்காமல், ஒரு தேர்ச்சியாளனின் போக்கின்படியே தெளிவுடனும், தீரத் தெரிந்து கொண்ட நிலையிலும் அதனைக் கையாளுமளவிற்கு அதில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்பதைத் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.
தீர்மானமின்மை ஒரு சிதைவுக் கூறாகும். ஒரு நொடித் தடுமாற்றம் வெற்றியின் போக்கையே திருப்பிவிடக் கூடும். தவறிழைத்துவிடக் கூடாதே என அஞ்சி விரைந்து தீர்மானம் செய்ய அஞ்சுபவர்கள், செயற்படும் போது ஏறத்தாழ எப்போதுமே தவறிழைத்து விடுகின்றனர். கருத்திலும், செயலிலும் சுறுசுறுப்புடையோர் தவறிழைக்கும் வாய்ப்புக் குறைவு. மேலும், தீர்மானமின்றிச் செயலிலீடுபட்டுத் தவறிழைப்பதைவிடத் தீர்மானத்துடன் செயலிலீடுபட்டுத் தவறிழைத்தல் சிறப்பேயாகும். ஏனெனின், முன்னதில் பிழைமட்டுமே யுள்ளது, பின்னதில் வலுவின்மையும் சோந்து விடுகின்றது.
மனத்தை விரைவில் திடப்படுத்தித் தீர்மானத்துடன் செயற்பட வேண்டும். ஏற்கனவே திடப்படுத்தப்பட்ட மனத்தைக் கொண்டிருத்தல் அதனினும் நன்று பின்பு தீர்மானம் இயல்புணர்ச்சியாகவும் தானே இயங்கும்.
விரைந்து தீர்மானம் செய்யும் மனத்திலே திண்மை தோன்றுகின்றது. ஒழுக்கத்தின் சிறந்த நெறியிலும் வாழ்வின் சிறந்த வழியின் கண்ணும் இறுதியாகத் தீர்மானம் கொள்ளுதலே உண்மையில் திண்மையாகும். எது நேரினும், தன் கொள்கைகளின் மீது உறுதியாக நிலைக்கும் பொருட்டு ஆன்மா எடுத்துக் கொள்கின்ற சூளுரையே அது. எழுத்திலோ பேச்சிலோ ஏதேனும் சூளுரை எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது தேவையுமில்லை. ஏனெனின், ஒரு நிலைபெற்ற கொள்கையின்பால் நெறி திறம்பாத பற்றுறுதி கொண்டிருத்தலே சூளுரைகள் அனைத்தின் சாறமாகும்.
நிலைபெற்ற கொள்கையில்லாத மனிதன் பெருமளவு சாதனை செய்யவியலாது. சூழ்வினைத் திறமென்பது ஒரு சதுப்பு நிலமும், முள்ளடர்ந்த பாழிடமுமாகும். அங்கு மனிதன் தன் சொந்த ஒழுக்கக் கேடு என்னும் வழுக்குச் சகதியில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டு, தானே உண்டுபண்ணிக் கொள்கின்ற ஏமாற்றங்களென்னும் முள்களால் குத்தப்பட்டுக் காயமடைகின்றான்.
மனிதன் உறுதியான, நிலைபேறுடைய, தீர்மானமுடைய மனம் கொண்டிருக்கவேண்டும். காரியங்கள் அனைத்திலும் பற்றுக்கோடாகக் கொள்வதற்கு பொருந்துவனவும், முரண் கருத்துகளென்னு சிக்கலினுடே நன்கு வழிகாட்டுவனவும், வாழ்வுப் போராட்டத்தில் தீர்க்கமான துணிவைத் தருவனவுமான விதிகளை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அவ் விதிகளைக் கைக் கொண்ட பின்பு, ஆதாயத்தையோ மகிழச்சியையோ விட அவனுக்கு அதுவே தன்மையாக இருக்க வேண்டும். வாழ்வைவிட அது சிறப்பானதாக இருக்கவேண்டும். அவன் என்றுமே அவற்றை விட்டொழிக்காத வரையில், அவை என்றுமே அவனை விட்டொழிவதில்லை என்பதை அவன் காணலாம். பகைவர்கள் அனைவரிடமிருந்தும் அவனைப் பாதுகாக்கும், தீங்குகள் அனைத்திலிருந்தும் அவனை விழிப்பாக விடுவிக்கும். இருள் இடர்ப்பாடுகள் அனைத்தினூடும் அவன் செல்லுகின்ற பாதைக்கு இருளில் ஒளிபரப்பும், துன்பத்தினின்றும் நீங்கி இளைப்பாறுமிடமாகும் உலகின் முரண்பாடுகளினின்றும் விலகும் புகலிடமாகவே அவை அவனுக்கு பயன்படும்.
திண்மையான மனத்தை உண்மையான சீர்மை ஒரு மாட்சிமை பொருந்திய உடையைப் போல் அணி செய்கின்றது. பழிக்கு உடன்படுவானென எதிர்பார்க்கப்படுகின்ற வேளை உருக்குக் கம்பியைப் போன்று நெகிழ்ச்சி அடையாதிருப்பவனும், நன்மையான ஒன்றிற்குத் தன்னைத் தகுதியுடையவனாக்குவதில் எளிதில் வளையும் கோலைப் போன்று அத்துணை ஒசிவான இருப்பவனும், அப் பண்பைக் கொண்டிருத்தலால் பிறரை அமைவுறுத்தி, உயர்த்துகின்ற ஓர் உண்மையான மதிப்பைக் கொண்டிருக்கின்றான்.
விழுப்பமுடைய மனிதனைத் தாழ்வுறுத்தவும், அடிமை கொள்ளவுமியலாது. ஏனெனின், அவன் தன்னைத் தான் தாழ்வுறுத்துவதை, அடிமைப்படுத்துவதை விட்டொழித்து விட்டான். அவனைக் குறைவுபடுத்தும் எந்த முயற்சியையும் அவனின் பார்வையால், ஒரு சொல்லால், அறிவுடைய பொருள் பொதிந்த ஓர் அமைதியால் உடனடியாகத் தகர்த்தெறிந்து விடுகின்றான். வம்பளப்போனுக்கும், தகுதியற்றோனுக்கும் அவனுடைய தோற்றம் ஒரு வசையாகும். அதே வேளையில் நன்மை நாடுவோனுக்கு அது ஒரு வலிமை மிக்க பாறையேயாகும்.
விழுப்பமுடைய மனிதன் மதிப்பிற்குரியவனாக இருப்பதன் காரணம் அவன் தன்மதிப்படையவனாக இருக்கின்றான். மேலும், பிறர் அனைவருக்கும் ஏற்ற அளவான மதிப்பைத் தந்து பெருந்தன்மையுடன் நடத்துகின்றான் என்பதுமாகும். தற்பெருமை தன்னையே நேசிப்பதுடன், கீழிருப்போர் அனைவரையும் அடம் கொண்டு அவமதிப்புடனேயே நடத்துகின்றது. ஏனெனின், தன்னையே விரும்புவதும், பிறரை இகழ்வதும் எப்போதும் ஒரே அளவில் ஒன்றாக இணைந்திருப்பதைக் காண்கின்றோம். எனவே, தன்னையே விரும்பும் பான்மை மிகுதியாய் இருப்பதற்கு ஒப்ப அகந்தையும் மிகுதியாகவே இருக்கும். உண்மையான விழுப்பம் தன்னல மறுப்பிலிருந்து பிறக்கிறது.
அதாவது, நிலைபேறு கொண்ட கொள்கையை நடுநிலையுடன் பின்பற்றுவதலிருந்தே தோன்றுகின்றது. தனது கடமையை நிறைவேற்றுவதில் தனிப்பட்ட நோக்கங்கள் அனைத்தையும் ஒரு புறம் ஒதுக்கிவிட்டு முழுக்க முழுக்கச் சட்டத்தின் முறையே நிலைபேறு கொள்கின்ற பான்மையிலிருந்தே நீதிபதியின் விழுப்பம் தோன்றுகின்றது. நிலையற்றதும், விரைந்து மடிவதுமான அவனுடைய சிறிய தனி மனிதப் பண்பு வெறுமையாகி விடுகின்றது. அதே வேளையில் நிலைத்து நிற்பதும், மாட்சிமையுடையதுமான சட்டம் அனைத்துமாகி விடுகின்றது. ஒரு வழக்கை முடிவு செய்வதில் நீதிபதி சட்டத்தை மறந்து தம் போக்கான உணர்ச்சிக்கும், விருப்பு வெறுப்பிற்கும் உட்பட்டுவிடின் அவருடைய விழுப்பம் மறைந்துவிடும்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு நிலைபேறு கொண்ட விதியின் வழிநின்று செயலிலீடுபடுகின்ற அளவிற்கேற்ப அவன் அமைவடக்கமும், விழுப்பமும் கொண்டிருக்கின்றான். அவ் விதி நேர்முறையானதாகத் தகர்க்கப்பட முடியாததாக இருப்பதுவே இன்றியமையாததாகும். அத்தகைய விதியை மனிதன் பின்பற்றி ஒழுகி, அதனின்றும் தடுமாற்றம் கொள்ளவோ தனி மனிதப் பண்புக் கூறுக்குத் தாழ்வுறவோ செய்யாதிருக்கும் வரையில் படையெடுக்கின்ற பற்றுகள், விருப்பு வெறுப்புகள் ஆசைகள் எத்துணைதான வலிமையுடையனவாய் இருப்பினும், நடுநிலை பிறழா விதியின் வெல்ல முடியாத வலிமையின் முன் அவை வலுவும் பயனும் அற்றனவாகிவிடும். இறுதியில், அவற்றினுடைய கூட்டானதும், தகுதியற்றதுமான குழப்பம் அவனுடைய ஒருமுகமான, மாட்சிமைப்பட்ட நேர்மைக்கு இணங்கிவிடும்.
தன்னாண்மை வலிமையும், நல்ல கட்டுப்பாடும் கொண்ட மனிதனின் பிறப்புரிமையாகும். மனிதர் அனைவரும் தம் உரிமையை நாடி அவற்றைப் பெற முயலுகின்றனர். ஏதேனும் ஒரு வகையில் விடுதலை அடைதலையே அனைவரும் நாடுகின்றனர்.
மனிதன் தனக்காகவோ சமூகத்திற்காகவோ உழைக்க வேண்டும். அவன் நொண்டியாகவோ, சீர்ப்பட முடியாத முடமாகவோ, மனதைப் பொறுத்த அளவில் பொறுப் பற்றவனாகவோ அவன் எதிரிடையாக எதையுமே தர முடியாதவனாய்த் தான் கொண்டிருப்பவை அனைத்திற்கும் பிறரை நம்பியிருப்பதற்காக வெட்கப்பட வேண்டும். அத்தகைய நிலையே விடுதலை என எவரேனும் கருதினால், அதுவே அடிமைத் தனத்தின் கீழ்த்தரமான தன்மைகளில் ஒன்று என்பதை அவன் தெரிந்து கொள்ளட்டும். தற்போதைய நடப்புகளைக் கொண்டு பார்க்கையில், ஒருவன் சாதாரண காலாடியாக இல்லாமல் மதிப்பிற்குரிய சோம்பேறியாக இருப்பினும், சுறுசுறுப்பான மக்கட் கூட்டத்தின் கண் சோம்பேறியாக இருத்தல் மக்கட்குலத்திற்கே வெட்கக் கேடாவதுடன், மேற்கொண்டு மதிக்கப்படத் தக்கதாயில்லாத காலமும் வந்தே தீரும். கையாலோ மூளையாலோ சம்பாதிக்கின்றான். அவன் செல்வனாகவோ எளியவனாகவோ பிறந்திருப்பினும் இதைச் செய்கின்றான்; ஏனெனில்,செல்வம் சோம்பேறித்தனத்திற்குச் சாக்குப் போக்காக முடியாது. உண்மையில், அவை கொண்டுள்ள அரிய திறமைகளைக் கொண்டு சமூக நன்னிலைக்கு உழைக்கும் ஒரு வாய்ப்பாகும். தன்னைத் தான் ஆதாரமாகக் கொண்டவனே விடுதலையும் தற்சார்பும் தன்னாண்மையும் உடையவனாவான்.
இவ்வாறாக எட்டு ஆதாரங்களின் தன்மையும் விளக்கப்பட்டு விட்டன. அவற்றின் கட்டுமானப்பாங்கு, அவற்றின் கலவைப் பொருள்கள், ஒவ்வொன்றும் உருவாக்கப்பட்டுள்ள உலோகப் பொருளின் நால்வகைத் தன்மை, அவை என்ன நிலைமைகள் வகிக்கின்றன, முதலிய அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டு விட்டன. எவ்வாறு கட்டமைக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளாதவன் தற்போது கட்டலாம்; அரைகுறையாகத் தெரிந்து கொண்டிருப்பவன் இன்னும் மிக நிறைவாகத் தெரிந்து கொள்ளலாம். நிறைவாகவே தெரிந்து கொண்டிருப்பவன் ஆக்கத்தில் ஒழுங்கு படுத்துவதிலும், எளிதாக்குவதிலும் இன்பம் காணலாம். நாம் ஒரு கோயிலை எடுத்துக் கொள்வோம்; அதன் தூண்களின் வலிமையை, சுவர்களின் வலுவை, கூரையின் உறுதிப்பாட்டை, அந்த முழுமையில் சிற்பஞ் சார்ந்த அழகையும் நிறையுடைமையையும் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறேதான் வாழ்வின் மேன்மைக்குப் உயர்வுக்கும் வெற்றிக் குரிய எட்டு வழிகளாகும்.
நாம் சுருக்கமாகத் தொகுத்து வெற்றிக்குரிய எட்டு வழிகளையும் அவற்றின் வலிமையுடனும், ஒளியுடனும் மறுமுறையும் காண்போம்.
1) ஆற்றல் – ஒருவன் தன் கடமையை நிறைவேற்றும் பொருட்டு விடாமுயற்சியுடையதும், இடைவிடாததுமான கடுவுழைப்பை மேற்கொள்ளத் தன் உணர்ச்சியைத் துண்டிக் கொள்வது.
2) சிக்கனம் – ஆற்றலை ஒருமுகப்படுத்தல், முதலீடு, ஒழுக்கநெறி இரண்டையுமே பாதுகாத்தல், இரண்டாவதாகக் கூறப்பட்டிருப்பது மனத்தின் முதலீடு; ஆகவே, அதுவே சிறப்பு வாய்ந்தது.
3) சால்பு – நன்னெறியினின்னும் திரும்பாத நேர்மை; இழப்பு அன்றி ஆக்கம் என்ற நோக்கங்கள் அனைத்திலிருந்தும் விலகி வாக்குறுதிகள், உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் அனைத்தையும் சிறிதும் தவறாது நிறைவேற்றுதல்.
4) முறைப்பாடு – நடைமுறை விவரங்கள் அனைத்தையும் ஒழுங்கமைதிக்கு உட்படுவனவாக்கல். அதன் காரணமாகப் பலவற்றை ஒன்றாகக் குறைத்து விடுவதால், தேவைக்கு மிகுதியான உழைப்பினின்றும், களைப்பினின்றும் நினைவாற்றலையும், மனத்தையும் விடுவித்தல்.
5) இரக்கம் – மேதகைமை, பெருந்தன்மை, மென்மை, ஈகை, திறந்த கைனாக, தன்னுரிமை உடையவனாக, அன்புடையவனாக இருத்தல்.
6) இயல்பார்வம் – நிறைந்த நல்லன்பு உடையவனாகவும், முழுமை உடையவனாகவும், வலிமை உடையவனாகவும், உண்மையுடையவனாகவும் இருத்தல். பொது இடத்தில் ஒரு வகை ஆளாகவும், தனிமையில் பிறிதொரு வகை ஆளாகவும் இல்லாதிருத்தல். வெளிப்படையாக நற்செயல்களைச் செய்யும் ஒருவன் அதே வேளையில் மறைவில் தீச் செயல்களைச் செய்யாதிருத்தல்.
7) நடுவுநிலைமை – நீதி தனக்காகவே போராடாது இருபக்கங்களையும் சீர்தூக்கிப் பார்த்து நேர்மையோடியைந்து செயலாற்றுவது.
8) தன்னம்பிக்கை – நிலைபெற்றதும், வெல்ல முடியாததுமான விதிகளின் வழிநின்று வலிமையையும், ஆதரவையும் தன்னகத்தேயே நாடுவதன்றி, எந்த நேரத்திலும் பறித்துவிடப்படக் கூடிய வெளிப்புறக் காரியங்களை நம்பாமலிருத்தல்.
இந்த எட்டு வழிகளின் மீது நடத்தப்படுகின்ற எந்த வாழ்வும் வெற்றிக்குப் புறம்பாக எவ்வாறு இருக்க முடியும்? அவற்றின் வலிமை எந்த உடல் வலிமையோ நுண்ணறிவு வலிமையோ ஒப்புமை காட்ட முடியாத திறத்தனவாகும். இந்த எட்டையும் நிறைவுறக் கட்டமைத்துக் கொள்ளுதல் ஒரு மனிதனை வெல்ல முடியாதவனாக்கி விடுகின்றது. எவ்வாறெனினும், மக்கள் பெரும்பாலும் இக் குணங்களில் ஒன்றிலோ பலவற்றிலோ வலிமையுடையவராகவும், பிறவற்றில் வலிமையற்றவராகவும் இருப்பதைக் காணலாம். இந்த வலுவற்ற கூறுதான் தோல்வியை வரவழைகின்றது. அதாவது, நன்மையானதும், இன்றியமையாததுமான ஏதேனும் குணம் இல்லாமலிருப்பதிலேயே தோல்வியின் காரணத்தைக் கண்டறிய வேண்டுமேயன்றி, அதனைக் கொண்டிருப்பதில் கண்டறியவியலாது.
இந் நூல் காட்டும் பயிற்சியின் படியே தமது வாழ்வுக் கோயிலைக் கட்டத் தொடங்குவோர் இதை மனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு கட்டிடத்தை எழுப்புவதெனின் அதற்குக் காலம் தேவைப்படுகின்றது. செங்கல் மேல் செங்கல், கல்மேல் கல் வைத்துப் பொறுமையோடுதான் எழுப்ப வேண்டும். தூண்கள் உறுதியாக நடப்பட்டு மேல் பூச்சும் பூசப்பட வேண்டும். அதனை முடித்து முழுமையாக்க உழைப்பும், அக்கறையும் தேவைப்படுகின்றன. அதே போன்று, உட்புறமனக் கோயிலாகிய கட்டிடம் கண்ணுக்குப் புலப்படாதது, ஓசையற்றது என்பதற்காக உண்மையாகவும், திடமாகவும் அமைந்திருப்பதில் அதைவிட எந்த அளவிலும் குறைவுடையதன்று.
தோழர்களே! உங்களது குணவியல்பைக் கட்டாக அமையுங்கள், உங்களது வாழ்வெனும் இல்லத்தை எழுப்புங்கள், உங்களது ஆக்கக் கோயிலைக் கட்டுங்கள்.
புலவர் த. கோவேந்தன் டிலிட் 1932
கோவேந்தன் பாடிக் குவிக்கின்றான் நாளடைவில்
பாவேந்தன் ஆய்விடுவான் பார்.
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1963)
பல்லா யிரம்நூல் படித்தறியும் பண்பாளன்;
நல்லார் இணைக்கத்தின் நட்பாளன்; - வல்லான்
எழுதுகின்ற நூல்எல்லாம் இன்தமிழுக்கு ஏற்றம்;
தொழுகின்றேன் கோவேந்தன் தொண்டு.
- அருட்கவி அரங்க சீனிவாசன் (1975)