வெற்றி முழக்கம்/14. சினமும் சிந்தனையும்

விக்கிமூலம் இலிருந்து

14. சினமும் சிந்தனையும்

தத்தையை உதயணன் தன் நாடு நோக்கிப் பிடிமேல் கொண்டு செல்வதை அறிந்தும் அதைப் பிரச்சோதனனிடம் கூற அஞ்சினர், காவல்வீரர். காவல்வீரர் பலரும் இவ்வாறு அஞ்சி என் செய்வதென்று அறியாமல் திகைத்திருந்தபோது வில்லும் அம்பும் உதயணனிடம் பறிகொடுத்துவிட்டு அவனிடமிருந்து மன்னனுக்குச் செய்தி கேட்டு வந்த வராகன் படமாடக் கோவிலில் இருந்த அரசனைக் காணக் கடுகி ஓடினன். “அரசர் பெருமானைக் கண்டு சில அவசரச் செய்திகளைக் கூறவேண்டும். சமயமறிந்து வருக” என்று வாயிற் காவலனிடம் கூறி யனுப்பிவிட்டு, ஓடிவந்த இளைப்பால் மேல் மூச்சு வாங்க வாயிற்கடையில் நின்றான் வராகன். காவலன் உள்ளே சென்றான். அரசன் படமாடக் கோவிலுள்ளே அப்போது ஒரு நிமித்திகனுடன் பேசிக் கொண்டிருந்தான். ‘காற்றும் மழையுமாக எழுந்த நிலை ஊருக்கு முதலில் மிக்க துயரத்தையும் பின்னர் நினக்கு இன்பத்தையும் தரும்’ என்று நிமித்திகன் அரசனுக்குக் கூறினான். இவ்வாறு குறிப்பாகக் கூறிய நிமித்திகனிடம் பிரசசோதனன் இக்கூற்றைத் தனக்கு நன்றாக விளக்கி உரைக்கும்படி வேண்டினான்.

அப்போது வாயிற்காவலன் பரபரப்பும் அவசரமும் தோன்ற வணங்கியவாறு உள்ளே வந்தான். “வந்தவன் முகத்தில் தோன்றும் பரபரப்பைக் கண்ட மன்னன் ‘வந்த காரியம் யாது?” என அவனிடம் வினவினான். வாயிற் காவலன் பணிந்த குரலில், “வாசவதத்தைக்குக் காவல்வீரராக உள்ளவர்களில் ஒருவனாகிய வராகன் வாயலிலே நிற்கிறான். அவன் தங்களிடம் உடன் கூறத்தக்க செய்திகள் சில உளவாம்” என்றான். அரசியல் உண்மைகளை அந்தரங்கமாக ஆராயும் போதும் மகளாகிய தத்தையைப் பற்றிய செய்தி என்றால் கேட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான் பிரச்சோதன மன்னன். தத்தையினிடம் அவனுக்கு உள்ள அன்பு அத்தகையது. ஆகவே நிமித்திகனோடு உரையாடிக் கொண்டிருந்தாலும், “வராகனை உடனே வரச்சொல்?” என்றுகூறிக் காவலனை அனுப்பினான். காவலன், அரசனுக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்தும் வணக்கமும் அளித்துச் சென்றான். காவலன் சென்ற சிறிது நேரத்திற்குள் வராகன் நடுக்கங்கலந்த அச்சமும் பரபரப்பும் உள்ளவனாய் உள்ளே வந்தான். வந்தவன் அரசனுக்கு ஏழுகோல் எல்லை தள்ளி மரியாதையாக நின்று வணங்கினான். அவன் முகத்தோற்றத்தையும் நடுக்கத்தையும் கண்ட மன்னன், இவன் கூற வந்திருக்கும் செய்தி துயரம் விளைக்கக் கூடியதாய் இருக்க வேண்டும் என்று எண்ணி அவனைத் தனக்கு மிகப்பக்கத்தில் இருகோல் எல்லையுள் அழைத்தான். வராகன் நெருங்கி வந்ததும், “வந்தது யாது கூறவோ? அதனை விரைவில் கூறு” என்று ஆணை பிறந்தது.

தரையில் முடிதோய மன்னனை வணங்கி எழுந்த வராகன், தயங்கித் தயங்கி நின்றானே ஒழிய வாய்திறந்து நடந்ததைக் கூற அஞ்சினான். “நெஞ்சில் அஞ்சாது நிகழ்ந்ததைக் கூறு” என்று இடிமுழக்கம் போன்ற குரலில் மீண்டும் ஆணையிட்டான் பிரச்சோதனன். இப்போது வராகனுக்குச் சிறிது துணிவு பிறந்தது. அரசன் தன் உயிருக்கு அபயமளிப்பான் என்ற நம்பிக்கையும் தோன்றியது.

நிகழ்ந்தவற்றை ஒவ்வொன்றாகக் கூறினான்: “உதயணன் தத்தையுடன் பிடியேறித் தன் நாடு நோக்கிச் செல்கிறான். பின்பற்றிச் சென்ற நம் படை மாற்றார் படையால் அழிந்து தடை யுற்றது. யான் விரைந்து பிடியைப் பின்பற்றி நெருங்கினேன். ‘தத்தையை என்பால் அடைக்கலம் அளித்த உங்கள் வேந்தர் பிரானுக்கு என் வணக்கத்தைக் கூறுக’ என்று கைகூப்பி விட்டுக் காற்றென விரைவுடன் பிடியைச் செலுத்தி மறைந்தான் உதயணன்” என்று வராகன் கூறியதும் பிரச்சோதனனுடைய விரிந்த மலர்விழிகள் சிவந்தன. புருவங்கள் நெரிந்தன. முகத்தில் சினத்தி எழுந்து பரவிப் படர்வது தெரிந்தது. உதயணன் துரோகம் செய்துவிட்டான் என்பது அவனுக்கு விளங்கிற்று.

“உதயணனை எதிர்த்து உடனே நம்படை புறப்படட்டும் எள்ளி விளையாடுகிறதுபோலும் இளமை. நல்ல பண்புள்ளவன் என் நம்பினேன். நம்பிக்கையைச் சிதைத்து விட்டான் வத்தவர் கோன். நான் யாரென அறியான்போலும். செல்லட்டும் நம் படை. அந்தச் சிறு மன்னனைப் பிடித்து இழுத்து வாருங்கள்.” இவ்வாறு சினங்கொண்டு முழங்கினான் பிரச்சோதனன். சினம் என்பது வேகமாகப் பற்றிப் பரவும் காட்டுத் தீயைப் போன்றது. பண்பட்ட உள்ளம் படைத்தவர்கள்கூட அதற்கு மிகவிரைவில் உட்பட்டு விடுகின்றார்கள். பிரச்சோதன மன்னன் மிகச்சிறந்த நாகரிகப் பண்புடையவனாக இருந்தும் ஒரு நொடியில் தன்னை இழந்து சினத்திற்கு அடிமைப்பட்டு விட்டான். அரசன் நிலையையும் அப்போது அவனுக்கு இருந்த சினத்தினால் ஏற்பட இருக்கும் விளைவுகளையும் நன்கு அறிந்துகொண்ட அவனுடைய முதன் மந்திரி சாலங்காயணன், அமைதியாகச் சில அறிவுரைகளைக் கூறினான். “உதயணன் செய்தது என்னவோ தவறுதான்! அதற்காக அவனைச் சிறை செய்தலும் கிளைஞரிடமிருந்து பிரித்தலும் பெரிய காரியமல்ல. அவைகளை நீ விரும்பின் நின்னால் எளிதிற் செய்ய முடியும். ஒன்று நீ சிந்திக்க வேண்டும். ஆராய்ந்து பார்த்தால் வாசவதத்தைக்கு உதயணன் எவ்விதத்திலும் குறைந்தவன் ஆகான். குலம், குணம், நட்பு, நிலம் முதலியவற்றாலும் அவன் நின்னை யொத்த அரசனே. அவன் தத்தையைக் கொண்டு சென்று மணந்து கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. ஊழ்வினை அவ்வாறு அமையும் போது அதனைப் பழிப்பதிலும் பயன் இல்லை. எனவே சினக்கொண்டு படையெழுப்புதல் சிறந்த வழி அன்று. மனத்தில் பகை இருக்குமானால் இப்போது அதை வெளிக்காட்டல் வேண்டா. பின்பு வேறு வழியாகத் தத்தையுடன் உதயணனை மீட்க முயல வேண்டும். உடனடியாக இவ்வாறு போர் மேற்கொள்வது அறிவுக்கு ஏற்றது அன்று” என்று விரிவாகவும் கருத்துள்ளடங்கியதுமாகச் சாலங்காயணன் கூறிய ஆறுதல் பிரச்சோதனன் மனத்தில் அழுத்தமாகப் படிந்து விட்டது. அமைச்சன் கூறிய ஆறுதலால் மனந்தேறிய பிரச்சோதன மன்னன், தன் கோப்பெருந்தேவிக்கு இச் செய்தி மற்றவர்களால் அறிவிக்கப்படுமுன் பக்குவமாகத் தானே சென்று அறிவிக்க விரைந்தான்.

இவ்வளவும் நதிக்கரையில் அரசனுக்கென அமைக்கப்பட்டிருந்த படமாடக் கோவிலில் நடந்தன. தேவியைக் காணப்போகுமுன் முரசறையும் வள்ளுவனைக் கூப்பிடச் செய்து மழைப்பொழுதாகவும் பனிபொருந்தியதாயும் உள்ள இம் மாலையில் தீர்த்தத் துறையிலிருந்து நகர் செல்ல வேண்டாவென மக்கள் யாவர்க்கும் முரசறைத்து அறிவிக்கவும், காலையில் நகர் போகவேண்டுமென்று பணிக்கவும் செய்யுமாறு கூறிச் சென்றான். சென்றவன் நேரே திருமா தேவியின் சிங்காரப் பள்ளியறையுள் நுழைந்தான். நீர்த் துறையில் அரசன் விடுதிக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த அச்சிங்கார மாளிகை பலவகை அணிகளுங்கொண்டு பார்ப்போர்க்குக் கவின் கொடுத்து விளங்கியது. மன்னன் வரவறிந்து எதிர்கொள்ள வந்த பெருந்தேவியின் மனமோ, கலவரமும் திருப்தியும் கலந்து ஒரு நிலையில் நில்லாமல் சுழன்று கொண்டிருந்தது. உதயணனே காப்பாற்றுவதனால், தன் மகள் தத்தைக்குத் தீது நேராது என்ற திருப்தி இருந்தது. ஆனால் உதயணன் தத்தையைத் தன் நாடு கொண்டு ஏகுவான் என்ற நினைவே கனவில் கூடத் தேவிக்கு இல்லை.

பலவித எண்ணங்களுடன் தேவி மன்னனை வரவேற்றாள். உணவு முடிந்தபின் வந்த செய்தியை விரிவாகக் கூறக் கருதினான் பிரச்சோதனன். அன்று உணவே வேண்டியிருக்கவில்லை மன்னனுக்கு. இருந்தாலும் தான் உண்ண மறுத்தால் திருமா தேவி ஐயுற நேரும் என்பதற்காக ஏதோ ஒருவாறு உணவை முடித்தான். இருவரும் பள்ளி மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். சிந்தனையைப் பொறுத்த வரையில் இருவருக்கும் ஒன்றும் புரியாத கலவரமொன்று உள்ளே குழம்பிக் கொண்டிருந்தது. தான் சொல்ல வந்ததைப் பக்குவமின்றி எடுத்த எடுப்பில், ‘உதயணன் தத்தையைக் கொண்டு ஓடிவிட்டான்’ என்று கூறிவிட்டால் தேவிக்கு என்ன நேருமோ என்று அஞ்சிய மன்னன் மிகவும் நயமான ஒரு வழியைப் பின்பற்றி அதை அவளுக்குக் கூற முடிவு செய்தான். “தத்தையை உதயணன் மணப்பது பற்றித் தேவியின் கருத்து யாது?” என முன்பின் தொடர்பில்லாத ஒரு கேள்வியைத் திடீரென அவளிடம் கேட்டான் அரசன். இந்தக் கேள்வியினால் கோப்பெருந்தேவியின் திருவுளக் குறிப்பை அறிய விரும்பிய பிரச்சோதன மன்னன், அவள் மறுமொழி கூறாமலிருப்பது கண்டு இன்னும் தெளிவாக, “தத்தைக்கு யாழ் கற்பித்த பெருந்தகையன் உதயணனுக்கே அவளை மணம் செய்து கொடுத்து அவன் நாட்டிற்கு அனுப்பலாம் என்று கருதுகிறேன். நீ யாது கருதியிருக்கிறாய்? இது நினக்கு மகிழ்ச்சியைத் தரும் செய்திதானா?” என்று மீண்டும் கேட்டான். இக் கேள்வி மூலமே அவள் விருப்பத்தை அறியத் திட்டமிட்டிருந்தான் அவன். தேவி இது கேட்டு முகமலர்ந்தாள். அவள் உடன்பாடு அரசனுக்கு அம் மலர்ச்சியினாலேயே புலனாயிற்று.

“யானையை மதமடக்கி வந்த அன்று, முதன் முதலாக அவனைக் கண்டபோதே, அவன் இளமைபொலிவு என் மனத்திற் பதிந்துவிட்டது. அன்றே அவன் தத்தைக்கு ஏற்ற கொழுநனெனக் கருதினேன் யான். குற்றமற்ற அரசர் குடியிலே தோன்றிய கோக் குமரன் ஆதலின், அவனுக்குத் தத்தையை ஏற்கும் தகுதியிலும் குறைபாடில்லை” என்று மறுமொழி கூறினாள் கோப்பெருந்தேவி. அவள் மனம் உதயணன் தத்தைக்குரியவனாவதைத் தடுக்கும் நிலையில் இல்லை. மகிழவே செய்கிறது என்று தெளிந்தபின் பிரச்சோதனன் அன்று நடந்ததைக் கூறத் தொடங்கினான். “தத்தை வத்தவ குமரனொடு அவன் நாடு சென்றுவிட்டாள்” என்று மன்னன் கூறிய மொழிகள் திருமாதேவியின் செவிகளிலே நெருப்பென நுழைந்தன. பெண்ணைப் பிரிந்த பெற்றவள் பெருந் துயரங்கொண்டாள். ஆவி பதைத்து அழுதாள். ஆறாகத் துயரம் அவலமாக உருக்கொள்ள அரற்றினாள். தத்தையின் பிரிவு அவளை வாட்டியது.

அசுணம் என்ற விலங்கு இசையைக் கேட்டு இன்புறும்; பறையொலி கேட்டுத் துன்புறும். தத்தையை உதயணனுக்கு மண முடிக்கலாம் என்ற செய்தி கேட்டின்புற்ற தேவி, அடுத்து அவள் வத்தவ குமரனுடன் அவன் நாடு சென்றனள் என்பது கேட்டு அளவிட இயலாத துயரம் கொண்டாள். கூற்றுவனின் கொடும்பாசத்தால் தான் கட்டப்பட்டது போன்ற பயங்கரப் பிரிவுணர்ச்சி தத்தையின் பிரிவுச் செய்தி கேட்டபோது அவளுக்கு உண்டாயிற்று. பெற்றவள் அவ்வாறு துயர்கொண்டது பெருவியப்புக்குரியது அல்லவே? ஆயினும் பிரச்சோதனன் மகளைப் பிரிந்த மனத் துயரம் தீர அவளைத் தேற்றினான்.

“தாம் வேண்டும் காதற் கொழுநனோடு செல்லாது பெற்றோரிடத்துத் தங்கியிருக்கும் மகளிர் உலகில் எவ்விடத்தும் இலர். கடலில் பிறந்த முத்து அணிவோர்க்கு அல்லாமல் கடலுக்கு ஒருபோதும் பயன்படுவது இல்லை. தத்தையும் நமக்கு அப்படிப்பட்ட உரிமை மட்டும் உடையவள்தானே? இதற்காக நீ மிகவுங் கவலுதல் தகுதியுடைய செயல் அன்று” என்று அவன் கூறிய தேற்றுரைகள் தேவிக்கு ஒருவாறு ஆறுதல் அளித்தன. துயர் சற்றே விலகியது.

வான்மதி இழந்த மீனினம் போல, வாசவதத்தை இல்லாத துயரம் பெற்றவளை மட்டுமன்று, அந்தப் பெருநகர் முழுவதையும் பற்றி வாட்டியது. நீராடும் துறையில் காலையில் இருந்த ஆரவாரம் இப்போது போன இடம் தெரிய வில்லை. ஒரே சூனிய அமைதி குடிகொண்டிருந்தது. தூரத்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக நகரில் தெரிந்த புகைப் படலங்கள் மேகத்தோடு கலந்து கொண்டிருந்தன. காற்றும் குளிரும் சூழப் பெய்துகொண்டிருந்த சிறு மழைகூட - வான் மகள், தத்தையின் பிரிவுத்துயர் பொறாது கண்ணிர் பெருக்குவது போலிருந்தது. மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்ட வான அரங்கின் வட்டவடிவமான கருநீலப் பெருவெளி எங்கும் துயர் நிறைந்து தோன்றியது, அந்த நகருக்கு. மன்னனும் திருமாதேவியும்கூட ஒருவாறு தத்தம் துயர வெள்ளத்தை மறந்துவிட்டனர்.

நீராட்டு விழா இன்பமயமாக ஆரம்பித்துத் துன்பமயமாக முடிந்துவிட்டது. முதலில் இன்பம். நடுவும் இறுதியும் துன்பம்.