வெற்றி முழக்கம்/19. வேடர் கேடுகள்

விக்கிமூலம் இலிருந்து
19. வேடர் கேடுகள்

ற்றவர்கள் தன்னைத் திட்டுவதிலிருந்து தப்ப ஒரு வழி கண்ட நிமித்திகன், அதைக் கூறினான். மிக நெருக்கமாக வளைத்துக்கொண்டு தாக்கியதனால், இலவம் புதருக்குள்ளே மறைந்து இருந்த தத்தையும் காஞ்சனையும் வேடர்கள் கண்களுக்குத் தெரிந்துவிட்டனர். அப்படித் தெரிந்து கொண்டவர்களில் அந்த முதிய நிமித்திகனும் ஒருவன். “புதருக்குத் தீமூட்டி விட்டால் இவன் போரை நிறுத்தி விடுவான்” என்று உதயணனைச் சுட்டிக் காட்டிக் கூறினான் அந்த முதிய நிமித்திகன். தன்னை வைதவர்களிடமிருந்து தப்ப இந்த உபாயம்தான் அவனுக்கு வாய்த்தது. அந்த முடிவை யாவரும் ஏற்றுக் கொண்டனர்.

புதருக்குத் தீ வைக்குமாறு கூறிய நிமித்திகன் கூற்றை, வேடர் யாவரும் வரவேற்றனர். ஆயினும் நிமித்திகன் அதனை விளங்கக் கூறுகின்றவரை அவர்கள் செயற்பட்டார்களில்லை. ஏற்கெனவே உதயணன் தங்களை அம்புகளால் வாட்டியதனை நினைக்க நினைக்க அந்த நிமித்திகன்மேல் அவர்களுக்குச் சற்றே வெறுப்புணர்ச்சி தோன்றியிருந்தது. நிமித்திகன் தன் கூற்றை விவரிக்கத் தொடங்கினான். “இலவம் புதரைச் சுற்றித் தீ மூட்டிவிட்டால், உள்ளிருப்பவர்கள் எவ்வாறேனும் வெளிப்பட்டுத்தான் ஆகவேண்டும். அங்ஙனம் வெளிப்படுங்கால் நாம் அவர்களைச் சூழ்ந்து கொண்டு துன்புறுத்த முடியும்” என்று கூறிய பின்பே, நிமித்திகன் சொல்லில் அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. கையிலிருந்த அரணிக் கோல்களைக் கடைந்து தீ மூட்ட முற்பட்டனர் காட்டு வேடர். காய்ந்து பஞ்சு போலிருந்த பூளைப் பூக்களை இடைமடுத்து, அரணிக் கோல்களை உரசிப் பழக்கமுள்ள அவர்கள் தீ உண்டாக்க வெகு நேரமாக வில்லை. “என் புள் நிமித்தம் ஒரு போதும் பொய்யாகாது” என்று சிறிது துணிவுடன் நிமித்திகன் இப்போது வாய்விட்டுச் சொன்னான். மூட்டிய தீயைப் புதரைச் சுற்றிலும் இட்டனர் வேடர். ‘தங்களை வேண்டிச் சரணடைய வேண்டும்; அல்லது வைதவண்ணம் உயிர்விட வேண்டும். இவ்விரண்டொழியப் புதரிலுள்ளோர் வேறெதுவும் செய்வதற்கியலாது’ என்று நினைத்தவாறே சிங்கத்தை வளைக்கும் சிறு நரிக் கூட்டம் போலப் புதரை வளைத்துக்கொண்டு வேடர் துன்புறுத்தலாயினர். தீப் புகை சூழ்ந்து புதரினுள்ளே மூச்சுவிடவும் இயலாது போயிற்று. தழைத்துக் கொழித்துப் பூத்து விளங்கிய பூம்புதர் புகைப்படலங்களில் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. உள்ளே தத்தை காட்டுத் தீயினால் எழுந்த புகையில் அகப்பட்டுக்கொண்டு திக்குமுக்காடும் பெண் மானைப் போல வருந்தினாள். உதயணனின் தனிமை அவள் உள்ளத்தைச் சுட்டது. தன்பொருட்டு அவன் படும் துயர்களின் மிகுதியை அவளால் நினைக்கவும் முடியவில்லை. உள்ளே துயரலைகள் பொங்கி மோதிக்கொண்டிருந்தன. அவள் பெண்மை அவ்வளவு துன்ப மிகுதியைத் தாங்கும் அனுபவத்தைக்கூடப் பெற்றிருக்கவில்லை. தத்தையின் நிலையை அவள் கூறாமலே உணர்ந்துகொண்ட உதயணன், அவளருகில் வந்து அவிழ்ந்துகிடந்த கூந்தலை மெல்லக் கோதியவாறு திருத்தினான். அவள் துயர் தணியச் சில கூறிக் காஞ்சன மாலைக்கு ஒரு பொறுப்பை அளித்தான். “யான் வெளிப் புறஞ் சென்று போர்செய்து வெற்றியுடன் மீண்டு வருகிறேன். அதற்குள் நீங்கள் இருவரும் தீப் பற்றாத ஒரு புறமாக இங்கிருந்து வெளியேறிச் சென்று எங்கேனும் ஒரிடத்தில் ஒளிந்திருங்கள். இவர்களை வெற்றி கொண்ட பிறகு யானும் நீங்களிருக்குமிடம் வந்து சேர்ந்து கொள்வேன்” என்று உரைத்துத் தத்தையைக் காஞ்சனமாலையிடம் அடைக்கலம் போல அளித்தான். ஆனால் இந்த ஆணையைக் காஞ்சனைக்கு இட்டுவிட்டு இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளிப்போந்த உதயணன், இதற்கு அவசியமே இல்லாது போயினதை உணர்ந்தான். அவன் வில்லும் கையுமாக வெளிவந்த வேகத்தைக் கண்ணுற்ற வேடர் இனம், யாளியைக் கண்ட யானை இனம்போலச் சிதறி ஓடிவிட்டது. எனவே, உதயணன் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டான். விரைவாக உள்ளே சென்று தீப் பற்றாத ஒரு சிறு முடுக்கின் வழியே புறப்பட்டுக் கொண்டிருந்த தத்தையையும் காஞ்சனையையும் தானே அழைத்துக்கொண்டு புதரின் வாயிற் புறமாகவே வெளியேறினான் உதயணன்.

தத்தை, காஞ்சனை இவர்களுடன் அவன் புதருக்கு வெளியே சிறிது தொலைவுதான் நடந்திருப்பான். திடுமென்று முன்னேற்பாட்டுடன் பதுங்கியிருந்து தந்திரமாகச் சூழ்வதுபோல் வந்து வளைத்தது வேடர் படை. அப்போது தான் உதயணனுக்கு அவர்கள் சூழ்ச்சி நன்கு புரிந்தது. புதரிலிருந்து தன்னை வெளிப்படுத்துவதற்காகவே அவர்கள் அஞ்சியதுபோல நடித்து விலகியிருக்க வேண்டுமென்று அவன் உணர்ந்தான். முன்னும் பின்னும் பக்கமும் எங்குமே நெருங்கி வளைத்திருந்த படையையும் தன் வில்லையும் மாறிமாறிப் பார்த்தான் அவன். உதயணன் இவ்வாறு பார்த்த குறிப்பைப் புரிந்துகொண்ட வேடர்களில் ஒருவன் மிக்க மதியுள்ளவன். உடனே தன் வில்லில் அம்பு தொடுத்துச் சரியாகக் குறி வைத்து உதயணன் வில்லின் நாணை அறுத்து இரண்டாகத் துண்டித்துவிட்டான். கலைவல்லுநர் பலர் தம் கைத்திறம் விளங்கச் சமைத்த அந்த வலிய வில், நாண் அறுந்து தொங்கியது. சமயமறிந்து செய்த அந்த வேடனின் செயல் உதயணனைத் திகைக்கச் செய்தது. மேலே என்ன செய்வதென்று புரியாது திகைப்புடன் நின்றுகொண்டிருந்தான் உதயணன். வலையில் வீழ்ந்து கட்டுண்ட சிங்கம்போல இருந்தது அவன் நிலை. பாரதப் போரில் அபிமன்யுவைப் போலத் தனியாக நின்று, தன்துயர் நினைந்திருந்தான் அவன்.

துன்பங்கள் தொடர்ச்சியாக நெருங்கி வரும்போது ஆண்மையாளனுக்கு ஒர் அசாதாரணமானதுணிவும் ஏற்பட்டு விடுகிறது. சுற்றி நிற்பவர்களோ ஈவிரக்கமற்ற பகைவர்கள். கையில் இருப்பதோ நாண் அறுந்தபோன வெறும் வில் தண்டு. அச்சமும் வியப்பும் தோன்ற இனம் புரியாத துயரத்துடன் தத்தையும் காஞ்சனையும் அணித்தே நின்றனர். ‘கையில் படையேதும் அற்றவன்’ என்ற போர் அறமும் கருதாது கணைகளைத் தொடுத்தவண்ணமிருந்தனர் வேடர். வெற்று வில்லொன்றே துணையாக, அவர்கள் கணை மாரியைத் தன்னிலிருந்து சிறிது நேரம் விலக்கினான் உதயணன். அவனுடைய இந்த நிலையைக் கண்ட தத்தை, தன் மனத்தில் துயரத் துடிப்புடன் உள்ளங்கவர்ந்த கள்வன் உடலைத் துளைக்குமோ என்று அஞ்சும்படி வேடர் அம்புகளால் தாக்குகின்ற நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்தாள். ஏதோ நினைவு வந்தவள்போலத் தன் முன் கைகளையும் கழுத்தையும் பார்த்தாள். அவள் முகத்தில் நம்பிக்கை சிறிது மலர்ந்தது. தான் அணிந்திருந்த நகைகள் யாவற்றையும் கழற்றினாள். காஞ்சனையை அருகிலழைத்து அவற்றை உதயணன் மூலம் வேடர்கட்கு அளித்து அவர்களுடைய போரை நிறுத்துமாறு வேண்டிக்கொள்ளச் சொன்னாள். காஞ்சனை சற்றுத் தயங்கியபின் மறுமொழி கூறாமல் அவற்றை வாங்கிச்சென்று உதயணன் கையிற் கொடுத்தாள்.

காஞ்சனை விலை மதிப்புமிக்க அணிகலன்களை உதயணன் கையிற் கொடுப்பதையும் அவன் ஒன்றும் புரியாது திகைத்துத் தத்தையிருந்த பக்கம் திரும்பி நோக்குவதையும் கண்ட வேடர், அணிகளுக்கு ஆசைப்பட்டுப் போரைச் சிறிது தளர்த்தினர். தத்தையின் நடுக்கமும் துயர மனநிலையும் உதயணனுக்கு மிக விரைவிற் புலப்பட்டு விட்டன. நொடிக்கு நொடி துன்பம் மிகுந்து நெருக்கும்போது, நினைவுக்கு அளவு கடந்த நுண்மையும் வேகமும் கூர்மையும் எங்கிருந்தோ கிடைத்து விடுகின்றன. உதயணன் நினைவில் சிறியதோர் சூழ்ச்சி மிக விரைவில் உருவாகி விட்டது. அச்சூழ்ச்சியின் திட்டப்படி நடக்க அவன் தயாராயினன். தான் இன்னான் என்பதை உரையாமல் வேடர்களை நோக்கிக் கூறலானான். “காட்டு முழைகளிலுறையும் வலிய தோளையுடைய வேடர்களே, சற்று அருகே வந்து யான் கூறப் போவதைக் கேளுங்கள். பல பெரிய அணிகலப் பொருள்களை முயற்சியால் ஈட்டிப் பிடிமீது கொண்டு, இவ் வழியே வந்த யாங்கள் வாணிகர்கள். வரும்போது இவ்விடத்திற்குச் சிறிது தொலைவில் எங்கள் பிடி நோயால் வீழ்ந்து இறந்து விட்டது. பின்னர் யாங்கள் மிகவும் மனங்கவன்று வழியிலிருந்து சிறிது தொலைவு சென்று ஈட்டிவந்த பெரும் பொருள்களையும் அணிகலன்களையும் ஓரிடத்தில் புதைத்து வைத்திருக்கிறோம். நீங்கள் போரை நிறுத்துவீர்களாயின் பொருளைப் புதைத்த இடத்தை உங்கட்குக் காட்டுகின்றோம். அவைகளை நீங்களே அடையலாம்” என்று கூறி முடித்தான்.

உதயணன் கூற்றைச் செவியுற்ற வேடர் போரை நிறுத்தினர். சுற்றி வளைத்திருந்த வேடர்களை விலக்கிவிட்டு அவர்கள் தலைவன் முன்வந்தான். உதயணனை நெருங்கிய வேடர் தலைவன், “நீ யார் என்பதை எமக்கு விளக்கமாகக் கூறவேண்டும்” என்று மிரட்டினான். இந்த வினாவைக் கேட்ட உதயணன் ஒரு கணம் திகைப்பு அடைந்தான். ஆனால் உறுதியாகக் கடைப்பிடித்தால் ஒழியத் தன் சூழ்ச்சி உடனே வெற்றி பெறாதென்பதை உணர்ந்து, “யாம் உதயணனுடைய வாணிகர். பெரும் பொருளுடன் பிடியில் வந்தோம். இடையில் பிடி வீழ்ந்துவிட்டது. பொருளை வழிக்கு அப்பால் ஒரு பொழிலில் புதைத்து வைத்தோம்” என்று முன் சொன்னதையே மறுபடியும் பொய் கலந்து விளக்கமாக உரைத்தான். தனது இந்த விடையில் வேடர் தலைவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதை அவன் முகக் குறிப்பிலிருந்து உதயணன் அறிந்து கொண்டான். தத்தை கழற்றியளித்த நகைகளையும் அவர்களுக்கு அளித்தானில்லை உதயணன். வயந்தகன், இடவகனுடைய படைகளுடன் துணைக்கு வந்து சேரும்வரை தனக்கும் தத்தை, காஞ்சனை இவர்களுக்கும் வேடர்களால் பெருந்துன்பம் நேராதவாறு பேச்சினாலேயே தடுத்துக் கொள்ளவே உதயணன் இவ்வாறு ஒரு முழுப் பொய்யைச் சொல்ல நேர்ந்தது. அது கருதி உதயணன் செய்த இச் சூழ்ச்சி தக்க பயனை அளித்தது. ‘அவர்கள் வத்தவ நாட்டு மன்னன் உதயணனின் வணிகர்கள்’ என்ற கூற்றைக் கேட்டுச் சற்று மரியாதை கொண்டு, வேடர்கள் துன்புறுத்துவதை முற்றிலும் நீக்கிவிட்டனர். ஆயினும் புதைத்து வைத்துள்ள பொருட்குவையை எவ்வாறேனும் பறித்துக் கொள்ளவே விரும்பினர். பறித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் சிறிது மகிழ்ச்சியும் அடைந்தனர். வேடர் தலைவன், உதயணனை நெருங்கி அவன் மேலாடையாலேயே அவனுடைய இரு கைகளையும் பிணித்துப் “பெரும் பொருளைப் புதைத்த இடத்தைக் காட்டுக” என்று கூறினன். தங்களிடம் உதயணன் சரணடைந்து விட்டமைக்கு அறிகுறியாகவே மேலாடையால் உதயணனைப் பிணித்தான் எயினர் தலைவன். உதயணனும் தன் சூழ்ச்சி வெற்றியுறும் என்ற நம்பிக்கையில் அதனைப் பொறுத்துக் கொண்டான். உதயணன் மெளனமாயிருக்கவே நகைகளைப் புதைத்த இடத்தைக் காட்டுமாறு மீண்டும் அவனைத் தூண்டினான் வேடர் தலைவன். உதயணன் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தான். “நீங்கள் இட்ட நெருப்பின் நடுவே இருந்ததால் மிகவும் வருந்தியுள்ளோம். உடல்முழுதும் காந்துகிறது. நாங்கள் முன்பு தங்கியிருந்த பொழிலில் ஏதோ ஒரு பகுதியிலே பொருள்களைப் புதைத்தோம். தீயால் சிதைவுபட்டுத் தோன்றுகின்ற இங்கே, இப்போது அப் பகுதி எது என்று குறிப்பாகத் தெரியவில்லை. இதுவும் உங்கள் தீயினால் வந்த வினைதான். எனவே அந்த நெருப்பின் வேகம் சற்றுத் தணிந்து ஆறட்டும். ஆறியபின் நாங்கள் புதைத்த இடத்தைக் காட்டுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்” என்று தன்னைக் கூர்ந்து நோக்கும் வேடர் தலைவனின், கழுகுக் கண்களை ஊடுருவியவாறே தலைநிமிர்ந்து மறுமொழி கூறினான் உதயணன். அதற்கு உடன்பட்ட வேடர் தலைவன் “அழல் ஆறியபின் பொருள் புதைத்த இடத்தை நீ காட்டவில்லையாயின் கட்டப்பட்ட உன் கரங்கள் வெட்டப்பெறுவது உறுதி” என்று உதயணனிடம் கடுமையாக மொழிந்தான்.

வேடர் தலைவன் இவ்வாறு கூறியதைக் கேட்ட தத்தை, தீயில் விழுந்த இளந்தளிரென மணவாட்டங் கொண்டு உருகினாள். உதயணன் துயர்சூழ நிற்கிறானே என்ற நினைவில் கண்ணிரைத் துளித்தன அவள் கயல் விழிகள். காஞ்சனை, தத்தையைத் தழுவிக் கொண்டவாறே, “உதயணன் துயரை நின் துயராக எண்ணுபவள் நீ! அவனுடைய உயிர்க்கு ஊறு வரின் நீ இறத்தல் ஒருதலை. தந்தையையும் அவன் பெருஞ் செல்வத்தையும் நீக்கிக் காதலனைப் பின்பற்றி வந்த உன்னை விதி இப்படித்தான் நடத்தும் போலும்” என்று இரங்கிக் கூறினாள். இவர்கள் இவ்வாறு துயரில் அழுந்துவதைக் கண்ட உதயணன் இவர்களுக்கு ஆறுதல் கூற விரும்பினான். உடனே அவன் வேடர் தலைவனையும் மற்றவர்களையும் நோக்கி, “உங்கள் விருப்பத்துக்கு மாறாகாமல் வருத்தந்தவிர்ந்து யாங்கள் புதைத்த பொருள்களைக் காட்ட வேண்டுமென்று கருதினால் இப்போதைக்கு என் கைக்கட்டை அவிழ்த்து விடுங்கள். பின்பு வேண்டுமானால் மீண்டும் கட்டிக் கொள்ளுங்கள். அதில் எனக்கு மறுப்பில்லை. இவளுடைய துயரத்தைத் தேற்றிய பின், தீப்புகை ஆறியதும் பொருள்களைப் புதைத்த இடத்தைக் காட்டுவேன்” என்றனன். அதைக் கேட்ட வேடர்கள் முதலில் மறுப்பதுபோன்று கடுமையாக நடந்து கொண்டாலும் இறுதியில் ‘இவன் நம் கையிற் சிறைப் பட்டவன். பொய் சொல்லித் தப்ப எண்ணி இவ்வாறு கூறியிருப்பானாயின் இவனை உயிரோடு விடமாட்டோம். எனவே இப்போதைக்கு இவன் சொல்வதை யெல்லாம் செய்துதான் வைப்போமே’ என்று கருதிக் கைக்கட்டை அவிழ்த்துவிட்டனர். வலையிலிருந்து விடுபட்டுப் பிணையை நோக்கி ஒடும் கலைமானைப் போலத் தத்தையை நோக்கிச் சென்றான் உதயணன்.