வெற்றி முழக்கம்/22. சயந்தி நகரில் திருமணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

22. சயந்தி நகரில் திருமணம்

திரவனுடைய வெம்மையை ஆற்றிச் சயந்தி நகருக்கு நிழலளிப்பவன்போல விரித்த பூங்கொடிகள் பல தோன்றின. பெரிய முரசங்களின் கடல் போன்ற ஒலிக்கு இடையே, குடமுழாக்களின் கிண்கிணி இசையும் ஒலித்தது. இருவினைப் பழந்துயர்களை வென்ற அருகதேவனுக்கு இந்திர உலகம் வரவேற்பளித்தது போல, உதயணன் தத்தை முதலியோரை மகளிரும் மைந்தருமாகக் கூடிச் சயந்தி நகரத்தினர் மங்கல நிறை குடங்களுடன் எதிர்கொண்டு வரவேற்றனர். இருள் கடிந்து தோன்றும் இளஞாயிறு போலத் துயர் கடிந்து பொலியும் தோன்றலே வருக என்றார் சிலர். சயந்தி நகரினர் தம் அன்பு நிறைவை எல்லாம் உதயணன் வரவேற்பில் காட்டினர். “யானையை மீண்டும் பெறக் கானிற் சென்றபோது பகை மன்னனால் பற்றிக் கொள்ளப்பட்டாய்! இப்போது வெற்றியையும் அதன் சின்னமாக வாசவதத்தையையும் உடன்கொண்டு வந்திருக்கிறாய்! உனக்குப் புதல்வர் போன்ற உன் குடிகளை இனித் துன்பம் நீங்க ஆளவேண்டியது உன் கடமை!” என்று முதுமக்கள் வாழ்த்தினர். அரசன், குடிகள் என்ற உயர்வு தாழ்வு அன்பு வாழ்த்துக்கு ஏது? “திருமால் மார்பில் திருமகள்போல் எங்கள் மன்னன் நெஞ்சில் இடை விடாது உறையும் பேறு உனக்கு எய்துக! நீ வரக்காண யாங்கள் முற்பிறவியில் நல்வினை மிகுதியாகச் செய்திருந்தோம் போலும். பிரச்சோதனனுடைய மகள் மிகச் சிறந்த அழகியெனக் கேள்வியுற்றதுண்டு. அந்த அழகை நேரிலேயே கண்குளிரக் காணச் செய்த எம் அரசன் வாழ்க!” என்று தத்தையைப் பலர் வாழ்த்தினர். அந்த வாழ்த்தில் ‘அவள் தங்கள் நாட்டரசனுக்கு விரைவில் கோப்பெருந்தேவி என்ற மதிப்புக்குரியவள் ஆவாள்’ என்னும் பெருமையும் கலந்திருந்தது. வேறு சிலர், இவ்வளவு நற்செயல்களும் பிழை படாமல் நிகழ்வதற்கு இன்றியமையாதவனாய் இருந்தவன் யூகி என்பதைக் கேள்வியுற்று, அவனை வாயாற வாழ்த்தினர். “நன்றாக வந்த ஒரு பொருள், உலகில் ஒருவர்க்குத் தீதாய் முடிந்தாலும், வியப்பதற்கு இல்லை. தீதாய் வந்த ஒரு பொருள். நன்றாய் முடிந்து நலம் பயத்தலும், அத்தகையது தான். மாய யானையால் நம் மன்னனை வஞ்சகமாகச் சிறை செய்த பிரச்சோதனனுடைய தீமை, நம் மன்னனுக்கு நலமாய் முடிந்ததோடு அல்லாமல், அழகிற் சிறந்த நங்கை தத்தையையும் அளித்திருக்கிறது. மகளைக் கொடுப்போர் முதலில் தீது போற் காட்டிப் பின்பு செய்யும்நலம் இவ்வாறு குறிப்பாகவே இருக்குமோ?”

இப்படிப் பலப்பல எண்ணினர் சயந்தி நகரக் குடி மக்கள். இத்தகைய பல்வகையான ஆரவாரங்களுக்கும் இடையே, அமராபதியிற் புகும் இந்திரனைப்போலத் தத்தை முதலியோர் பின்தொடர உதயணன் அரண்மனையுள் புகுந்தான். உதயணன் சயந்தி நகருக்கு வந்தபின் சில நாள்கள் அமைதியாகவும் இன்பமாகவும் கழிந்தன. உறவும் சுற்றமும் ஒன்று கூடிடக் கழிந்த அந்த நாள்கள், மறக்க முடியாதன. அந்நாள்களிடையே ஒருநாள் வாசவதத்தையின் திருமண நினைவை அம் மணத்தைச் செய்து கொள்வதற்கு உரியவனான உதயணனுக்கு நண்பர்கள் உண்டாக்கினர். அதன் பயனாக அரண்மனைக் கணியன் ஒரு மங்கல நாளை மணத்திற்கு ஏற்றதென்று வகுத்துக் கொடுத்தான். சோதிடநூற் பொருளும் தருக்க நூற்பொருளும் நன்குஅறிந்து தேர்ந்தவன் அந்தக் கணி. அரண்மனையில் அவனுக்குப் பலவகை மரியாதைகள் உண்டு. அவன் கூறிய நாளை நாடறிய எடுத்துரைக்குமாறு வள்ளுவர்கள் ஆணை பெற்றனர். வேற்று நாட்டு மன்னர்களுக்குத் தக்க தூதுவர்கள் மூலமாகத் திருமண ஒலைகள் அனுப்பப்பட்டன. முரசுக் கொட்டிலுள் தெய்வ வழி பாட்டுடனும் அருமையுடனும் பேணப்பெற்று வந்த பெரிய பெரிய முரசங்களைத் திருநாட் காலங்களிலும் படை நாட் காலங்களிலும் மணநாட் காலங்களிலும் யானை மேலேற்றி ஊரறிய ஒலிக்கச் செய்துகொண்டே செய்தி கூறுவது வள்ளுவர் வழக்கம். முரசை நீராட்டிச் சந்தனம் பூசி மாலையணிந்து யானை மேலேற்றிக்கொண்டு உதயணன் திருமண நாளை அறிவிப்பதற்கு வள்ளுவர் பல திசைகளிலும் சென்றனர்.

மன்னன் திருமணச் செய்தி கேட்ட குடிமக்கள் நகரைப் பலவகையாலும் அலங்கரிக்கத் தொடங்கினர். பொன்னிலும் முத்திலும் மணியிலும் பல்வகைத் தோரணங்கள் செய்து பெரு வீதிகள் தோறும் கட்டினர். வீடுகள், பெரு வாயில், வீதித் தொடக்கங்கள், முதலிய இடங்களிலெல்லாம் வாழை மரமும் பாக்கு மரமுமாகக் கட்டி அழகு செய்தனர். நகரிலுள்ள அறச் சாலைகள் எல்லாவற்றிலும் வந்தவர்களுக்கெல்லாம் உணவளிக்கும்படி ஏற்பாடு செய்தனர். இளநங்கையர்களும் ஏவல் மகளிரும் குங்குமம் முதலியவற்றைக் குழைத்து அழகிய வேறு பல வண்ணக் குழம்புகளையும் கொண்டு தெருக்களில் கவர்ச்சியான கோலங்களை இட்டனர். கோவில்களிலும் கோட்டங்களிலும் சிறப்பான வழிபாடுகள் நிகழ்த்தப் பெற்றன. பலவகையிலும் தங்கள் அரசர் திருமண நிகழ்ச்சியிற் பங்கு கொண்டவர்போல நகரை அழகிற்குமேல் அழகு செய்து மகிழ்ந்தனர் மக்கள். திருமண நன்னாள் வந்தது. நகரெங்கும் ஆரவாரமும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்பட்டன. பல நாடுகளின் அரசரும் வந்திருந்தனர். திருமண நீராட்டுவதற்காக அழகிற் சிறந்த கன்னி மகளிர் மஞ்சனநீர் கொண்டுவரப் புறப்பட்டனர். சிலம்புகள் காலில் ஒலி செய்யக் கொடி இடையில் குடத்துநீர் சலசலக்க மஞ்சனநீர் கொண்டு வந்ததற்குப் பிறகு, அவர்கள் நல்ல நாழிகை நோக்கி நீராட்டக் காத்திருந்தனர். நாழிகை நோக்கி இருந்த நாழிகைக் கணக்கர், ஏற்ற நேரம் வந்ததும் கூறினர். தீ வேட்டு மணம் நிகழ்த்தவேண்டிய பொழுதும் வந்து சேர்ந்தது.

முறைப்படி அமைக்கப்பட்டிருந்த திருமணப் பந்தரில் நடுவே மறைவலாளர் மந்திரம் ஒத, மண வேள்வி செய்தான் உதயணன். பக்கத்திலே தத்தை மனக்கோலத்தில் எழுதி வைத்த சித்திரப் பொற்பாவைபோல அமர்ந்திருந்தாள். காமனும் இரதியும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தது போலக் காண்போர்க்குத் தோன்றியது, இக் காட்சி. இடையே அவன் தத்தையைக் கைப் பிடித்து அருந்ததி காட்டிய தோற்றம், காண மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது. அருந்ததி காட்டி, வசிட்டனை வழிபட்டு, நான்முகக் கடவுளை வேள்விக் குழியில் அவனுக்குரிய திசையில் வணங்கினான் உதயணன். தெய்வ நிவேதனங்கள் செய்தவாறே மணச் சடங்குகளை அடுத்தடுத்து இயற்றினான் மணமகனாகிய அவன்.

மணமாகாத கன்னிப் பெண்கள் பலர் உழுந்து, நெல், உப்பு, மலர், வெற்றிலைச் சுருள், சந்தனம் முதலிய மங்கலப் பொருள்களைத் தத்தையின் கையில் அளித்து, ஏழு முறை கணவனைக் கைகூப்பி வணங்கும்படி வேண்டிக்கொண்டனர். காஞ்சனை, தத்தைக்குப் பக்கத்தில் இருந்து, அவள் நாணம் அடையா வண்ணம் உதயணனோடு நெருங்கி உட்காருமாறு செய்தாள். அவளுடைய மெல்லிய மலரை ஒத்த அடிகளைத் தன் கையால் பற்றி அம்மிமேல் வைத்தபோதும், அவள் பூங்கரங்களில் பொரி சிந்தி வேள்விக்கு இடுமாறு செய்தபோதும் இன்ப உணர்ச்சியால் புல்லரிப்பு ஏற்பட்டது உதயணனுக்கு, மணச் சடங்குகள் எல்லாம் முடிந்தபின் தத்தையின் வலக்கையைப் பற்றிக்கொண்டு தீ வலம் வந்தான் உதயணன். முதியோர்கள் நல்லாசி கூறினர். அவளைக் கைப் பற்றி நடந்தபோது, மெல்ல அடிபெயர்த்து வைத்தது, ‘தந்தை, தாய், உறவினரற்ற அந்த இடத்தில் வலிய தன் காதலனை மணம் செய்து கொண்டதை எண்ணி, அவள் தளர்ச்சியடைந்து விட்டாளோ?’ என்று உதயணனுக்குத் தோன்றியது. பலவிதச் சிறப்புக்களுடன் எழில்மிக்கதாக அலங்கரிக்கப்பட்டிருந்த மணவறைப் பள்ளிக்கட்டிலில் ஏறும்போது, இருவருக்குமே எந்தவிதமான தளர்வுமில்லை. நன்றாக அலங்காரம் செய்து தத்தையை உதயணனுடன் அனுப்பிய காஞ்சனை, இதழ்க் கடையில் ஒரு குறும்புப் புன்னகையை நெளியவிட்டுக் கொண்டே நகர்ந்தாள். தலை குனிந்தவாறே உதயணனுடன் பள்ளியறையை நோக்கி நடந்தாள் வாசவதத்தை. இதன் பிறகு ஆறு திங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் சென்றது. உருமண்ணுவாவின் பொறுப்பில் விட்டுச் சென்றிருந்த சயந்தி நகர ஆட்சி எப்போதும் போலக் குடிகள் மகிழ ஆளப்பட்டு வந்தது. உதயணன் அங்கிருந்தும், அப்போதுதான் திருமணமாகியிருந்த அவனுக்கு ஆட்சிப் பொறுப்புக்களைச் செய்தலினால் செயல் மிகுந்து சோர்வு தோன்றும் என்று கருதி, உருமண்ணுவாவே அவ்வாட்சிப் பொறுப்பை மேற்பார்த்து வந்தான். யாவும் இனிதே நிகழ்ந்து வந்தன. திருமணமான பின்பு ஆறாவது திங்களில் செய்வதற்கு உரிய உடன் மயிர் களைதல் என்றோர் சடங்குக்கு ஏற்ற நல்லநாள் வந்தது. சிறப்பாக அச் சடங்கு நிகழ்ந்து முடிந்தபின், எண்ணெய் நீராட்டுப் பெறுதல் மரபு. ஆயிரத்தெட்டுப் பொற்குடங்களின் மஞ்சன நீர் கொண்டுவரப் பெற்றது. உதயணனுக்கு ஆடவரும் தத்தைக்கு ஆயத்துப் பெண்டிரும் எண்ணெய் அணிந்தனர். 'மனையறம் சிறக்குமாறு கற்பால் மாட்சி பெறுக’ என்று வாழ்த்தியவாறே ஆயமகளிர் நெய்யணிந்தனர்.

நெய்யணி நீராட்டு முதலிய யாவும் முடிந்த பின்னர் அறிஞர்களாகிய பெரியோர் பலர், “இச் சடங்குகளெல்லாம் ஆனதும், வழக்கமாகச் செய்வதற்குரிய குலதெய்வ வழி பாட்டையும் நீ செய்தல் வேண்டும்” என்று உதயணனுக்கு எடுத்துக் கூறினர், தெய்வ வணக்கத்திற்குப் பின்னர் நகர் வலம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் உதயணனுக்கு நினைவூட்டினர். உதயணன் அவர் கூற்றை மனமுவந்து ஏற்றுக்கொண்டு அவ்வாறு செய்ய முன்வந்தான். சினாலயத்தில் கோவில் கொண்டிருக்கும் சினதேவனாகிய அருகக் கடவுளைத் தத்தையோடு சென்று வணங்கினான். தெய்வ வணக்கத்திற்குப்பின் இருவரும் மணக்காலத்துக் கொண்ட அதே மணக் கோலம் பூண்டு அரச சின்னங்கள் புடைசூழப் பெருஞ்சிறப்புடன் நகர்வலஞ் செய்தனர். மாடங்களிலும் மாளிகைகளிலும் ஆவணமறுகுகளிலும் சந்திகளிலும் நகர் வலங் காண்பதற்குப் பலர் கூடியிருந்தனர். தத்தையை மணக் கோலத்தோடு பார்க்க வீடுகளின் மேல் மாடங்களில் பெண்கள் பலர்கூடி நின்று கொண்டிருந்தனர். நகரம் முழுவதும் தங்கள் மன்னன் மணக்கோலத்தில் வலம் வருவதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்ந்தது. நகர்வலம் முடிந்த பின்னும் வழக்கமாகச் செய்யும் எண்ணெய் நீராட்டுக்குப்பின் இருவரும் மணவின்பத்தின் நுகர்ச்சியில் திளைத்தனர். நாள் எல்லாம் உவகை நிறையச் சென்றன. உவகை யெல்லாம் உலகில் அவர்களிருவருக்கே உரிமை யாயிற்று.