வெற்றி முழக்கம்/27. நலம் நாடிய சூழ்ச்சிகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

27. நலம் நாடிய சூழ்ச்சிகள்

ற்பாட்டின்படி வாசவதத்தையும் உதயணனும் இலாவாண நகரத்து அரண்மனையில் தங்கி வாழ்ந்து வந்தனர். அங்ஙனம் அவர்கள் வாழ்ந்து வரும்போது ஒருநாள், “இப்படி முயற்சியின்றி வீணே இருந்துவருதல் அரசர்குடிப் பிறந்தோர்க்கு அழகன்று. ஆகையால் நீ உன் கீழுள்ள குறுநில மன்னர்களையும் பிறரையும் கண்டு, அவர்கள் செவ்வனே ஆட்சி நடத்துகின்றனரா என்று கவனிக்கப் போய் வருதல் வேண்டும்” என நண்பர் அவனுக்குக் கூறினர். உதயணன், வாசவதத்தையைப் பிரிய நேரிடுமே என்று கருதி அதற்கு மறுத்துவிட்டான். நண்பர்கள் அவன் நிலைக்கு வருந்தி, ஒன்றும் செய்ய இயலாமல் வறிதே இருக்க நேர்ந்தது. இது நிகழ்ந்து முடிந்த சில நாள்கள் சென்றபின் வாசவதத்தையே உதயணனிடம் வேட்டையாடும் நிமித்தமாகக் காடு சென்றுவிட்டுத் திரும்பி வரும்போது பல பூக்களாலும் தழைகளாலும் அழகிய மாலை தொடுத்துத் தனக்குக் கொண்டு வருமாறு வேண்டிக் கொண்டாள்.

தத்தையின் வேண்டுகோளை மறுக்க முடியாத உதயணன், வேகமாகச் செல்லவல்ல குதிரை ஒன்றின்மீது ஏறிக் காடு சென்றான். இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தத்தையை உதயணனிடமிருந்து பிரிக்க விரும்பினர் நண்பர். ‘அரசன் இன்ப நுகர்ச்சியில் ஆழ்ந்து பிறவற்றை நோக்கானாயினன்’ என்று காட்டு வேடர்கள் வந்து அரண்மனைக்குத் தீயிட்டுவிடப் போவதாக எங்கும் செய்தியைப் பரப்பினர். தாங்களே சில ஏவலாளர்களை விட்டுத் தத்தை இருந்த அரண்மனையைத் தீக்கு இரையாக்கிவிட்டு, உள்ளிருந்த தத்தையையும் சாங்கியத் தாயையும் அரண்மனையின் அடிப்பகுதி மூலம் யுகி வசிக்கும் இடத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த சுரங்கவழியாக அங்கே அனுப்பிவிட்டனர். எரிந்துபோன அரண்மனையில் தத்தையின் அணிகலன்களை அங்கும் இங்குமாகச் சிதறி அவளும் எரிபட்டு இறந்தனள் என்று உதயணன் நம்புமாறு செய்து வைத்தனர். திட்டத்தில் முழுப்பங்கு கொண்டு உதயணன் நலத்திற்காக உழைக்கும் முக்கிய நண்பர்களைத் தவிர வேறு எவரும், 'தத்தை, சாங்கியத் தாயுடன் உயிரோடு சுரங்க வழியாகத் தப்பிச் சென்று யூகியிடம் உள்ளனள்' என்பதை அறிய வில்லை.

இலாவாண நகர அரண்மனை இவ்வாறு தீப்பட்டு எரிந்துபோன அளவிலே தப்பிச் சென்ற சாங்கியத் தாயும் வாசவதத்தையும் யூகியிருக்கும் இடத்தைச் சென்று அடைந்தனர். முன்பின் தெரியாத அங்கே சாங்கியத் தாயுடன் ஓடி வந்திருந்த தத்தை சிறிது கலங்கினாள். அப்போது சாங்கியத் தாய், “உன் காதற் கணவன் அரசியல் வாழ்வில் உயர்வு பெறவே இத்தகையதொரு சூழ்ச்சி செய்யப்படுகிறதே ஒழிய வேறில்லை” என்று கூறித் தேற்றினாள். அதற்குள் யூகியே வாசவதத்தையின் முன் வந்து அவளுக்குப் பல ஆறுதல் உரைகளைக் கூறி, “இவை யாவும் உன் கணவன் தன்னை உணர்ந்து கொள்ளவும் பிறரால் ஆளப்பட்டு வரும் தன் நாட்டை மீட்கும் உணர்வு பெறவும் பிங்கல கடகர்களாகிய தன் தம்பியர் துயர் போக்க வேண்டுமென்ற கருத்துக் கொள்ளவுமே செய்யப்பட்ட சூழ்ச்சி இது. இந்தச் சூழ்ச்சி நிறைவேற வேண்டி என் பொருட்டும் உன் கணவன் பொருட்டும் சிலநாள் நீ இந்தப் பிரிவைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அருள்கூர்ந்து நீ எனக்கு இவ் வரத்தை அளிப்பாயாக” என்று யூகி தத்தையை வேண்டிக் கொண்டான். அந்த உருக்கமான வேண்டுகோள் தத்தையின் மனத்தையும் கவர்ந்துவிட்டது. இதுவரை தன்னிடம் பேசுபவன் யூகி என்றே அவள் எண்ணவில்லை. சாங்கியத் தாய், படத்தைக் கொண்டுவந்து உதயணனிடம் காட்டியபின் யூகி இறந்துவிட்டான் என்றே எண்ணி வந்தாள் அந்தப் பேதைப் பெண். இதுவரை யூகியை அவள் நேரிற் கண்டதும் இல்லை. இப்போது தன்னிடம் பேசுபவன் உதயணனுக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே அவள் எண்ணினாள். சாங்கியத் தாய் அவளுடைய சந்தேகத்தைப் புரிந்து கொண்டவள்போல, அவனே யூகி என்பதையும் அவன் இறந்ததாக உருவகம் செய்யப்பட்ட படம் வெறும் கற்பனை என்பதையும் மீண்டும் அவளுக்கு விளக்கமாகக் கூறினாள். அது கேட்ட தத்தை நம்பிக்கையுடன் “முன்பு உஞ்சையில் சிறை நீங்க உதவிய நீயிர், என் கணவனுக்கு இன்றும் நலமே நாடுவீர். எனவே நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்து அரசனை வழிக்குக் கொணர்க” என்று கூறி அவர்கள் திட்டத்துக்குத் தானும் ஒத்துழைப்பதாக வாக்குக் கொடுத்தாள் வாசவதத்தை யூகி மனம் மகிழ்ந்து, இனி உதயணன் பழைய துன்பங்கள் நீங்கி நலமுறல் நிச்சயம் என நினைத்தான். வாசவதத்தையும் ஒத்துழைப்பதாக ஒப்புக் கொண்டது யூகிக்கு மேலும் நம்பிக்கை அளிப்பதாயிருந்தது.

காடு சென்றிருந்த உதயணன் இலாவாண மலைச் சாரலிலுள்ள வளம்மிகுந்த பூங்காக்களில் தத்தைக்கு வேண்டிய நறுமண மலர்களையும் தழைகளையும் சேகரித்துக்கொண்டு அதை அவளுக்கு அளிக்கும் ஆவலோடு திரும்பி, விரைவாக நகருக்குப் புறப்பட்டான். தத்தையின் சிறு பிரிவைக்கூட அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னுடைய ஒரே கன்றை நினைத்து மேய்தல் வெளியிலிருந்து ஆர்வத்தோடு திரும்பும் தாய்ப் பசுவின் மனநிலையை ஒத்திருந்தான் அப்போது அவன். உதயணனோடு காட்டுக்கு உடன் வந்திருந்த குதிரைப் பாகன், மரத்தடியில் கட்டப் பெற்றிருந்த இரண்டு குதிரைகளில் அரசனுக்குரிய உயர்ந்த சாதிக் குதிரையைச் சேணம் பூட்டிக் கொண்டுவந்து நிறுத்தினான். பாகன் கையிலிருந்து கடி வாளத்தை வாங்கிக்கொண்டு தாவி ஏறினான் உதயணன். பாகன் கை கூப்பியவாறே அரசனை வணங்கி விலகிநின்று கொண்டான். குதிரை முன் கால்களைக் கொண்டு தாவிப் பாய்ந்து, காற்றிலும் கடுகிச் சென்ற குதிரையின் குளம் பொலி மலைச் சிகரங்களில் பயங்கரமாக எதிரொலித்த வண்ணம் இருந்தது. பாகனுடைய குதிரையும் உதயணனைப் பின் தொடர்ந்தது. குதிரை மலை நடுவிலுள்ள வழியைக் கடந்து நகரை அணுகியபோது உதயணனுக்குச் சில தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. இடது புறத்துக் கண்ணும் தோளும் துடித்தன. சில பறவைகளின் குரல்கள் தீமைக்கு அறிகுறியாக ஒலித்தன. இத்தகைய தீக் குறிகளால் மனங் கலங்கியவாறே குதிரை மேல் வந்து கொண்டிருந்த அவன், தொலைவில் நகரினுள்ளே அரண்மனைப் பக்கமாகத் தெரியும் புகைப் படலங்களைக் கண்டான். இந்தக் காட்சி அவன் கலக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது.

வழியில் ஏற்பட்ட துர்நிமித்தங்களும் புகைக் காட்சியுமாகச் சேர்ந்து ‘ஆருயிர்க் காதலி வாசவதத்தைக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்திருக்குமோ? அவள் நம்மைப் பிரிந்தனளோ’ என்ற அச்சத்தையும் துயரத்தையும் அவனுக்கு ஏற்படுத்தின. இதற்குள் குதிரை நகரின் தலைக்கோட்டை வாயிலை அடைந்துவிட்டது. அவன் மனத்தில் அடக்க முடியாத பரபரப்பு வளர்ந்தது. அருகில் நெருங்கியதும் அரண்மனை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததைக் கண்டான் உதயணன். ‘காட்டு வேடர்தாம் அரண்மனைக்குத் தீக்கொளுத்தினர்’ என்று ஒரு பொய்யை மெய்போலச் செய்வதற்காகச் சில காட்டு வேடர்களை அடித்துத் துரத்துவதுபோலத் துரத்திக் கொண்டே வயந்தகனும் உருமண்ணுவாவும் அங்கே வந்தனர். எதிர்ப்புறமிருந்து குதிரைமீது வரும் உதயணன் நகரிற் புகைகண்டு துயரத்தால் மயங்கிவிடாமல் அவனை ஆற்றக் கருதிய அவர்கள், தலைக்கோட்டை வாசலிலேயே அவனை எதிர் கொண்டு நின்றனர். உதயணன் தான் கொண்டு வந்த மலர்களையும் அரும்புகளையும் சிதறிவிட்டுத் துயரத்தினால் தாக்குண்டு தோன்றினான். அவர்களுக்கு அப்பால் சற்றுத் தொலைவில் வாசவதத்தையின் தோழியாகிய காஞ்சன மாலை அழுது புலம்பி அரற்றிக் கொண்டிருந்தாள். தீ நாக்குகள் போன்ற பேரிதழ்களோடு வடியசெந்தாமரை மலர்கள் செறிந்து பூத்திருக்கும் ஒரு பொய்கையில், அன்னமொன்று தன் சேவலைத் தேடி அலமரல் போல இருந்தது காஞ்சனையின் அப்போதைய நிலை. புன்சொற் கேட்ட பெரியோர் போலக் கருகி வாடியிருந்தது அவள் பொன் மேனி. தன் தலைவியான வாசவதத்தையைப் பற்றிக்கூறி அரற்றியவாறே, அவள் அவலமே உருவாய் நின்று அங்கே அழுது கொண்டிருந்தனள்.

இவ்வாறு வாசவதத்தையை முன்னிலைப் படுத்தி அரற்றிக் கொண்டிருந்த காஞ்சனையின் மொழிகள் அப்போது தான் குதிரையில் வந்து அங்கே நின்ற உதயணன், செவியில் பட்டன. ஏற்கெனவே கலக்கமும் பயங்கரமான சந்தேகமும் கொண்டு வந்திருக்கும் உதயணன், காஞ்சனையின் இந்த அரற்றலையும் வயந்தகனும் உருமண்ணுவாவும் கையைப் பிசைந்துகொண்டு கவலை தோன்ற நிற்பதையும் கண்டான். அடுத்த கணம் வாசவதத்தைக்கு என்ன நேர்ந்ததோ என்ற திகைப்பில் குதிரையிலிருந்தே மயங்கிச் சாய்ந்தது அவன் உடல், வயந்தகனும் உருமண்ணுவாவும் பதறி ஓடி தரையில் விழ இருந்த உதயணனுடலைக் குதிரையிலிருந்தே தாங்கியவாறு எடுத்தனர். உடனே பக்கத்திலிருந்த ஏவலாளன் ஒருவன் ஓடோடியும் சென்று மயக்கத்தை நீக்கும் தன்மை வாய்ந்த கடுங்கூட்டு என்னும் அரிய மருந்தைக் கொண்டு வந்தான். அந்த மருந்தை அளித்து மார்பிற் குளிர்ந்த சந்தனத்தையும் பூசினர். பின் பெரிய ஆலவட்டம் ஒன்றைக் கொணர்ந்து தூயகாற்று அவன் உடலிற் படும்படியாக வீசினர். சிறிது நேரத்தில், “வாசவதத்தை என் உயிரே, நீ எங்குற்றனை?” என்று அரற்றிக் கொண்டே கனவிலிருந்து விழிப்பவன் போலக் கண்விழித்தான் உதயணன். சுற்றியிருந்த நண்பர்கள் சற்றே முகம் மலர்ந்தனர். மெல்ல மயக்கம் தெளிந்தான் அரசன். விழித்தவுடன், “வாசவ தத்தைக்கு என்ன நேர்ந்தது?” என்ற கேள்விதான் அவனிடமிருந்து துயரம் தோய்ந்து ஒலித்தது. வாசவத்தைக்கு நேர்ந்ததை அவனிடம் எப்படி விவரிப்பதென நண்பர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தயங்கினர்.