உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றி முழக்கம்/29. துன்பத்தில் விளைந்த துணிவு

விக்கிமூலம் இலிருந்து

29. துன்பத்தில் விளைந்த துணிவு

ந்த நிலையில் உதயணனுடைய சோர்வு நோக்கி, அவன் நாட்டின்மேல் படையெடுத்து வரக் காத்திருக்கும் பகைவர்கள் கொண்டாட்டம் அடைந்தனர். ‘பகைகள் நம்மைச் சுற்றி நிலவுகிறபோது இவ்வாறிருப்பது நன்றன்று’ என்று கூறினர் நண்பர். ஆருணி அரசன் இந்த நிலையில் படையெடுத்து வந்தாலும் வரலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் படைகளை நாற்புறமும் திரட்டி முன்னேற்பாடாக வைத்தனர் உதயணன் நண்பர். இவ்வாறு கூறிய அவர்கள் கூற்றும் ஆருணி அரசனைப் பற்றிய எச்சரிக்கையும் உதயணன் சற்றே துயரத்தை மறந்து அரசகுமாரனுக்குரிய வீர விழிப்பையும் துணிவையும் பெறச் செய்திருந்தன. இதைக் கண்ட நண்பர்கள் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து முதிர்ந்திருந்த சில அமைச்சர்களைக் கொண்டு, காமத்தின் இழிவையும் கேவலம் ஒரு பெண்மகளை இழந்ததற்காக அவன் இவ்வாறு பெருமிதமிழந்து பேதுறுவது தகுதி இல்லை என்பதையும் அவன் மனத்தில் பதியும்படியாக எடுத்துரைக்கச் செய்தனர். சொல்வன்மை தேர்ந்த அவர்கள் அறிவுமொழி, உதயணன் தன் பெருமிதத்தை உணரும்படி செய்தது. நண்பர்கள் வெற்றி பெற்றனர். உதயணன் துணிவு பெற்றான்.

தத்தையின் பொன்னகையிற் புன்னகை கண்டு பிதற்றிய உதயணன், இப்போது தன் ஆண்மையைப் பற்றி உணரத் தொடங்கிவிட்டான். அது நண்பர்க்கு முழு வெற்றியாக வாய்த்தது. வீர விளைவுகள் இனி அவனிடமிருந்து நிகழுமென நண்பர்கள் எதிர்பார்த்தனர். இங்கே இவ்வாறு முதலில் உதயணன் துயர் பொறாமல் உயிர் நீக்கத் துணிந்ததும், பிறகு நண்பராலும் அமைச்சராலும் தேறுதல் பெற்று நலத்துடன் இருப்பதும், மறைவிடத்தில் வசிக்கும் யூகி, தத்தை முதலியோருக்குத் தக்கோர் மூலம் அவ்வப்போது மறைமுகமாக அறிவிக்கப்பட்டன. உடனே யூகி, தத்தை முதலியோரை அழைத்துக்கொண்டு தான் வேறிடத்திற்குச் செல்லக் கருதினான். வாசவதத்தைக்கும் சாங்கியத் தாய்க்கும் நிலைமையை விளக்கி அங்கிருந்து தாங்கள் வேறிடம் செல்ல வேண்டியிருப்பதன் அவசியத்தையும் கூறினான். அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். உண்ட அளவில் தோற்றமும் மேனி நிறமும் வேற்றுருவமும் அளிக்கும் மாய மருந்து ஒன்றை யூகி தானும் உண்டு, அவர்களுக்கும் உண்ணக் கொடுத்தான். மூவரும் நிறம் மாறிய வேற்றுருவத்தோடு சுரங்க வழியாக அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் தாங்கள் அடைந்த வேற்றுருவத்தை, அந்தணர்களுக்கு உரிய கோலங்களோடு மேலும் புனைந்து மாற்றிக் கொண்டனர். சுரங்கம் அடர்ந்து வளர்ந்திருந்த சந்தனமரக் கூட்டங்கள் செறிந்த ஒர் மலைச் சாரலில் அவர்களைக் கொணர்ந்துவிட்டது. ஆருயிர்க் காதலனுடைய மனநிலையைச் சீர்திருத்துவது ஒன்றே குறிக் கோளாகக்கொண்ட வாசவதத்தை, அதற்காக எவ்விதமான இன்னல்களையும் ஏற்றுப் பொறுத்துக்கொண்டு யூகியைப் பின்பற்றினாள். அவளுடன் துணையாகச் சாங்கியத் தாயும் இருந்தாள். நடந்துசென்று விரைவில் வழிமேல் சினாலயத்தோடு கூடிய பெரியமலை ஒன்றை அடைந்த அவர்கள் அங்கே ஒரு தவப் பள்ளியையும் கண்டு மகிழ்ந்தனர். பூத்த குவளை மலர்களோடு கூடிய புதுநீர்ப் பொய்கைகளும், எரி மலர்ந்தாற் போன்ற பூக்கள் விரிந்த வேங்கை மரங்களுமாக அழகிய சூழ்நிலையோடு அமைந்திருந்தது அந்தத் தவப் பள்ளி. ஆசிரமத்தின் முன்புறத்தில் மா, பலா, வாழை, நாவல், மாதுளை முதலிய மரங்கள் செழித்து வளர்ந்து பசுமை நல்கின. மணல் முற்றத்தில் முனிவர்களும் தயாத மகளிர்களுமாகத் தோற்றமளித்த அந்தத் தவப் பள்ளியை நாடிச் சென்றனர் அவர்கள்.

அங்கே தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களில் ஒருவர் உருமண்ணுவாவின் தந்தை என்பது யூகிக்குத் தெரியும். ஆயினும் மூவரும் முனிவரிடம் தாம் யாரென்பதை விவரிக்காமல் சில நாள் அங்கே தங்கியிருக்க வேண்டிய காரியத்தை மட்டுமே கூறினர். முனிவர் மறுக்காமல் ஒப்புக் கொண்டு இடமளித்தார். யூகி, தத்தை, சாங்கியத் தாய் ஆகியவர்கள் மாய மருந்தினால் பெற்ற மாற்றுருவோடு அங்கே மறைவாக வாழ்ந்து வந்தனர். அகலாமலும் அணுகாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் தவப் பள்ளியில் அவர்கள் பழகி வந்தனர். எப்போதாவது தங்களைப் பற்றித் துருவித் துருவித் தெரிந்து கொண்டுவிட வேண்டும் என்ற ஆவலோடு கேட்டவர்களுக்குச் சாங்கியத் தாய் ஒரு சிறிய பொய்க் கதையைக் கூறிவந்தாள்: “எங்களுடைய தவப் பள்ளியும் சொந்த ஊரும் இங்கிருந்து வெகு தொலைவிலிருக்கின்றன. நாங்கள் மூவரும் உடன் பிறந்தோர். அவன் (யூகி) என் தம்பி. இவள் (தத்தை) என் தங்கை. எங்கள் தாய் தன் முதுமையை நினைந்து தவவொழுக்கம் மேற்கொண்டு எங்களைப் பிரிந்து சென்றனள். இவளை(தத்தையை) மணந்துகொண்ட கணவன் குமரியில் நீராடச் சென்றிருக்கின்றான்” என்று சாங்கியத் தாய் மற்றவர் சற்றும் ஐயுறாதவாறு இந்தக் கதையைக் கூறி வந்தாள். யூகி அந்தண ஆடவன் உருவிலும், தத்தை இளம் அந்தண நங்கை உருவிலும், சாங்கியத் தாய் சற்று முதிர்ந்த அந்தணி உருவிலும் இருந்ததால் அவள் சொல்லை எல்லாரும் ஏற்று நம்பவும் முடிந்தது.

இதற்குள் யூகி, உருமண்ணுவா முதலியோருக்குத் தங்கள் புதிய இடத்தை அறிவித்திருந்தான். இங்கே அரண்மனையில் உதயணனை நண்பர்கள் தேற்றிவிட்டனர். ஆனால் வாசவதத்தையின் தோழியாகிய காஞ்சனமாலை உதயணனைக் காட்டிலும் அதிகத் துயரில் மீளாமல் ஆழ்ந்து விட்டாள். உதயணனைப் போலத் தத்தை உண்மையாக இறந்துவிட்டாள் என்றே அவளும் நம்பி ஏங்கி அழுது கொண்டிருந்தாள். உதயணன் ஆறுதல் அடைந்து விட்டான். இவளை யாராலும் ஆற்ற முடியவில்லை. நெருங்கிப் பழகி நெஞ்சுவிட்டு உறவாடிய பெண் மனம் அல்லவா? அதன் துயர் விரைவில் எப்படி ஆறிவிடும்? ஒரு நாள் அவள் அலறலைச் சகிக்கமுடியாமல், உருமண்ணுவா உண்மையைக் குறிப்பாக அவளுக்கு உரைத்து, யூகி இருக்கும் இடத்திற்கே அழைத்து வந்து அங்கே உயிருடனிருக்கும் தத்தையைக் காட்டிவிட்டான். அப்போது தான் தோழி காஞ்சனமாலையின் துயரம் தணிந்தது. தத்தைக்கு உதவியாக அவளிடமிருக்குமாறு கூறிக் காஞ்சனையை அங்கேயே விட்டுவிட்டு யூகியிடம் விடைபெற்ற பின் உருமண்ணுவா மீண்டும் தலைநகர் திரும்பினான். காஞ்சனை, தத்தை முதலியவர்களோடு தானும் மாறுவேடத்தில் வசிக்கலானாள். உருமண்ணுவாவை யூகி அனுப்பிவிட்டு, அங்கிருந்து தாங்களும் சில நாள்களில் புதிதாக வேறோர் இடம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான். அங்கிருந்து மிக அண்மையில், உருமண்ணுவாவின் தந்தைக்கு நெருங்கிய தோழனாகிய உக்கிர குலவேந்தன் விசயவரனால் ஆளப்படும் சண்பை என்னும் வளம்மிக்க நகரம் இருப்பது அப்போது அவன் நினைவிற்கு வந்தது. கங்கை நதி பாயும் சண்பை நகரம் எங்குமே தனக்கு நிகரில்லாதது. அந் நகரத்து மதில் போல அமைப்பும் தலையழகும் பொருந்திய அகழியோடு கூடிய மதிலரண் பிற இடங்களில் எங்குமே காண்பது அரிது. மதில் வாயில்களைத் தோற்றுவாயாகக் கொண்ட அந் நகர வீதிகள் வனப்பு மிக்கன. அந்நகரில் யூகிக்கு நெருங்கிய நண்பனாகிய மித்திரகாமன் என்னும் வணிகன் இருந்தான். அந்த நகரில் எவருக்கும் தத்தையையும் சாங்கியத் தாயையும் தெரிந்திருக்கக் காரணமில்லை. அநேகமாக மித்திரகாமனைத் தவிர ஏனையோருக்கு யூகியைக்கூடத் தெரிந்திருக்காது எனவே அங்கே சென்று, மறைந்து மறைந்து ஒடுங்கும் இடரின்றிச் சுய உருவிலேயே சிறிது காலம் வசிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தான் யூகி. மித்திரகாமனோ மிகப் பெரிய செல்வன். முட்டில்லாத வளமான வாழ்க்கை அவனுடைய வாழ்க்கை.

சண்பையின் புறநகரில் அவன் வீடு மிகப்பெரியது. பார்க்க எடுப்பும் கவினும் நிறைந்த தோற்றமுடையது. தத்தை, சாங்கியத் தாய் இவர்களோடு சண்பை நகர் சென்றான் யூகி. மித்திரகாமன் அவர்களைப் போற்றி வரவேற்றான். அவன் மனையை அடைந்து அங்கே நலமாகத் தங்கியிருந்தனர் யூகி முதலியவர்கள். எனினும், உதயணனைப் பிரிந்திருப்பது தத்தைக்குத் துயரளித்தது. காஞ்சனையும் சாங்கியத்தாயும் தத்தையின் சோர்வு நீக்கி நல்ல மொழிகளை ஆறுதலாகக் கூறிக்கொண்டிருந்தனர். யூகி அமைதியாக மேலே வகுக்க வேண்டிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். சாங்கியத் தாய் புதுப் பொய்க் கதைகளைக் கற்பனை செய்து கூறவேண்டிய அவசியம் இங்கே ஏற்படவில்லை.