வெற்றி முழக்கம்/32. பதுமாபதி வருகை

விக்கிமூலம் இலிருந்து

32. பதுமாபதி வருகை

தயணன் முதலியோர் இவ்வாறு இராசகிரிய நகரத்தில் இருந்து வருகையில் இராசகிரிய நகரத்தார் காமதேவனுக்கு விழாக் கொண்டாடும் நன்னாள் வந்தது. காமன் கோவிலில் நடைபெறும் இந்த விழா ஏழு நாள்கள் தொடர்ந்து நிகழும். இராசகிரிய நகரத்துத் தெருக்கள் தோறும் புதுமணல் பரப்பிக் கைவன்மை மிக்க ஓவியர் தீட்டிய விழாக் கொடிகளை ஏற்றினர் நகர மாந்தர். விழாவுக்குரிய மகிழ்ச்சியும் களிப்பும் நகரின் எல்லாப் பகுதிகளிலும் தொடங்கியது. மகத அரசன் தருசகனுடைய தங்கை பதுமாபதி கன்னிப்பருவத்தின் கட்டழகு மிக்க தோற்றம் படைத்தவள். ஒரு பெரிய மகா காவியத்தின் தலைவிக்கு உரிதாகக் கவிகள் புனைந்து பேசும் எல்லாவித வனப்புக்களும் பொருந்திய எழில் செல்வியாக விளங்குபவள். நாட்டியம், இசை முதலாகிய பல கலைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள். சுற்றிச் சுற்றி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிராமல் ஒரு படியாகச் செல்வ மும் கல்வியும் மிக்க அவளுடைய அழகை உவமை கூறப் புகுந்தால் அதற்கு அதுவேதான் நிகர். நகரில் இந்தத் காமன் திருவிழா நடக்கும் ஏழு நாள்களும் காமதேவன் கோட்டத்திற்குச் சென்று வழிபாடுகள் செய்துவிட்டுத் திரும்புவது பதுமாபதியின் வழக்கம். இந்த ஆண்டிலும் காமன் விழாவில் பதுமாபதி காமன் கோட்டத்திற்கு வரப்போவதைத் தெரிவிப்பதற்காக முரசறையும் வள்ளுவ முதுமகன் அதை நகரத்தார்க்கு உரைத்துச் சென்றான்.

ஆயமகளிரும் தாயத்தாரும் புடைசூழ முதல் நாள் விழாவிற்குக் காமன் வழிபாடு செய்யப் புறப்பட்டாள் பதுமாபதி. தெய்வவழிபாட்டிற்குச் செல்லுகின்றாள். ஆகையால் சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பெற்றுத் தேவகன்னிகைபோல அவள் தோன்றினாள். பாண்டில் வையம் என்னும் வகையைச் சேர்ந்த வண்டிகள் அவள் புறப்படும் வாகனங்களாக இருந்தன. பந்து, பாவை, கழங்கு, சிறு கலசங்கள், பூஞ்செப்புக்கள் முதலிய வழிபாட்டுப் பொருள்களை ஏந்திக் குற்றேவல் மகளிர் உடன் செல்வதற்குக் காத்திருந்தனர். பதுமாபதி அவள் செல்வதற்கென அழகு செய்யப்பட்டு நின்ற வையத்தில் ஏறிக்கொண்டாள். சேவகர்கள் பலர் காவலாகத் தொடர வண்டி புறப்பட்டது. பதுமாபதிக்குத் துணையாக அவளிருந்த வண்டியில் செவிலித்தாயும் உடன் அமர்ந்து கொண்டாள். பிறர் தமக்கு ஏற்ற வாகனங்களில் உடன் வந்தனர். பணிப் பெண்கள் பல வகைப் பொருள்களைச் சுமந்துகொண்டு நடந்து வந்தனர். பதுமாபதி ஏறியிருக்கும் வண்டியின் பாகன் ஆண்மகனாயிருத்தலைக் கண்ட அவளுடைய தோழியாகிய அயிராபதி, அவனைக் கீழிறக்கிவிட்டுத் தானே கோலேந்திப் பாகன் வேலையைச் செய்வாளாயினள். “வண்டி செல்லும் வீதிகளில் அப்போது எதிரே குதிரை, யானை முதலிய விலங்குகளை எவரும் ஒட்டி வருதல் கூடாது” என வீரர் அரசனுடைய ஆணையைத் தெரிவித்தனர். விரைவில் காமன் கோட்டத்தை அடைந்தது பதுமாபதியின் வண்டி. கோவிலில் முன்னேற் பாடாகக் கூட்டம் விலக்கப்பட்டிருந்ததனால் அமைதி நிலவியது. பதுமாபதி இறங்கிக் கோவில் வாயிலிற் புகுந்து உள்ளே சென்றாள். அப்படிப் பதுமாபதி வண்டியிலிருந்து இறங்கும்போது ஓர் அற்புதம் நடந்தது. சித்திர வையத்தை மேற்பார்வை செய்யும் பணியாளன் கோவில் வந்துவிட்டதைக் கண்டு வண்டியை நிறுத்தச் செய்தான். காமன் கோட்டத்திற்குள் இருந்து தாபதப் பள்ளிக்குச் செல்லும் சோலை வழியிலுள்ள ஒரு புன்னை மரத்திற்குப் பக்கத்தில் வண்டி நின்றது. வாசவதத்தையின் நினைவால் மனங்கலங்கி உதயணன் அந்த மரத்தடியில் தன்னை மறந்து, சுற்றுப்புறத்தை மறந்து பித்தன் போல நின்று கொண்டிருந்தான். பதுமாபதி வண்டியிலிருந்து இறங்கும் வழி அவனுக்கு நேர் எதிரே இருந்தது. வெண் முகில் போன்று ஒரு மெல்லிய வெண்பட்டுத் திரைச் சீலை வண்டியின் இறங்கும் வழியை மறைத்து இடப்பட்டிருந்தது. பதுமை இறங்குவதற்கு இருந்தாள். உடனிருந்தவள் திரைச் சீலையை விலக்கிப் பதுமைக்கு வழிவிடுவதற்கு முன்பு தற்செயலாகக் காற்று கொஞ்சம் பலமாக அடித்தது. திரைச்சீலை தானாக விலகிற்று.

புன்னை மரத்தடியில் தன்னை மறந்து நின்ற உதயணனின் கையில், பக்கத்திலுள்ள மாதவிக் கொடி ஒன்றிலிருந்து கிள்ளிய தளிர்க் கொத்து ஒன்று இருந்தது. அப்போது காவலர்கள் அக்கம் பக்கத்திலிருந்தவர்களை விலகிச் செல்லுமாறு குரல் கொடுத்தனர். அக் குரல் உதயணன் காதிலும் விழுந்தது. ‘நேற்று வரை பிறர் இவ்வாறு விலகிச் செல்ல, நான் அரசமரியாதைகளுடன் போதல் வருதல் பெற்றேன். இன்றோ , மற்றவர் வரவிற்காக விலக்கப்படுகிறவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். சக்கரம் கீழ் மேலாகச் சுற்றுவதுபோல் மனித வாழ்வும் இவ்வாறு தான் ஆக்கமும், கேடும் மாறிமாறி வருவது போலும்’ என்று தன் மனத்தில் நினைத்துக்கொண்டே உதயணன் அங்கிருந்து விலகிச் செல்லப் புறப்பட்டான். இப்படி அவன் புறப்படுவதற்காகத் திரும்பிய அதே நேரத்தில்தான். அவன் பார்வைக்கு நேரே இருந்த வண்டியின் திரைச்சீலை விலகிற்று. உதயணன் பார்வை வண்டிக்குள் விழுந்தது. அதிலிருந்த, பெண்ணைப் பார்த்ததும் வாசவதத்தையே உயிரோடு வண்டிக்குள் அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது உதயணனுக்கு. ஒருவேளை காகதுண்டகன் எனும் விசித்திர முனிவன் விரைவிலேயே தன் மந்திர வலிமையால் தத்தையை உயிர்ப்பித்து அனுப்பி விட்டானோ? என்று எண்ணி, வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் உதயணன். அவனுடைய கால்கள் அவளை நோக்கி விரையத் துடித்தன.

தத்தையின் நினைவிலே ஆழ்ந்திருந்த அவனுக்குப் பதுமாபதியே இப்படித் தத்தையாக மாறி உருவிலும் நிறத்திலும் வேற்றுமையின்றித் தோன்றியது வியப்புக்குரியதன்று. இப்படி இமையாமல் மலர்ந்த வண்ணமே நோக்கும் உதயணனுடைய நெடுங்கண்களில், கண்டவரைக் கவரும் ஒரு விதமான அழகு இருந்தது, அந்த அழகு பதுமாபதியை மயக்கம் கொள்ளச் செய்திருக்க வேண்டும். இல்லை யென்றால் அவள் வண்டியிலிருந்து இறங்க வேண்டியதையும் மறந்து, பதிலுக்கு அவனை அப்படிக் கண்களால் பருகிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே! கரை கடந்து வந்த ஒன்றுபடும் இரண்டு மகா சமுத்திரங்களின் சங்கமம்போல் இருந்தது இவர்கள் காமன் கோட்டத்திலே சந்தித்த சந்திப்பு.

‘என் நெஞ்சத்து நிறையை அளந்து பார்ப்பதற்காகக் காமன் என்ற தேவனே இவ்வாறு புன்னை மரத்தடியில் தோன்றி என்னைச் சோதிக்கின்றானோ! அதற்காகத்தான் இப்படி அந்தண இளைஞன்போல் மாறி உருக்கொண்டானோ? என்று எண்ணி மனம் கட்டழிந்து மயங்கினாள் பதுமை. அவள் நெஞ்சில் புகுந்து நிலைத்தான் அவன். மெல்ல மெல்ல தன் சூழ்நிலையை உணர்ந்த பதுமை இந்த உலகிற்கு வந்தாள். “மேல் நடக்க வேண்டியவற்றைக் கவனியுங்கள்” என்று தன் கட்டளை விளங்கும்படியாக ஆயத்தைச் சேர்ந்த பணி மகளிர்களை நீண்ட விழிகளால் ஒருமுறை நோக்கினாள் பதுமை. பின்பு வண்டியிலிருந்து இறங்கிக் கோவிலை வலஞ் செய்யப் புறப்பட்டாள். அவளிடம் இப்போது எவ்வளவோ மாறுபாடுகள் தெரிந்தன. நளினமான காதல் மயக்கம் அவளைக் கட்டுப்படுத்தி யிருந்தது. அன்னங்கள் நாணமடையும் படியான நடையுடன் பதுமை தோழியரோடு கோவிலை வலஞ்செய்யும் அழகை உதயணன் தொலைவில் நின்று கண் இமையாமல் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான். ‘வனப்பு என்னும் தெய்வீக வடிவமோ இது!’ என்று அவன் எண்ணினான்.

கோவிலை வலஞ் செய்து முடிந்தவுடன் பதுமை வழக்கப்படி அந்தணர்க்குரிய பலவகைத் தானங்களைச் செய்ய ஆரம்பித்தாள். முதிய அந்தணர் பலர் விருப்பமுடன் அழைக்கப்பட்டுத் தானங்கள் செய்யப் பெற்றனர். அன்று முதல்நாள் விழாவாகையால் தானங்களைச் சிறப்பாகச் செய்தாள் பதுமை. அப்போது ஆயத்தைச் சேர்ந்த நடுத்தரப் பருவத்தினளான மங்கை ஒருத்தி, பதுமையின் பெருமைகளை இனிய பாடலாக இசையுடன் பாட ஆரம்பித்தாள். அவள் பாடிய புகழுரைப் பாடல்களில் பதுமாபதியின் அழகு மற்ற சிறப்பியல்புகள் ஆகியவற்றைப் பாராட்டியும், அவளுக்குக் கணவனாதற்குரியவன் வத்தவ நாட்டரசன் உதயணனைப் போன்ற தகுதி வாய்ந்தவனாக இருக்க வேண்டுமென்றும் கருத்துக்கள் அமைந்திருந்தன. உதயணன் காலத்தில் அவன் அழகுக்கு நிகரற்ற ஆதர்சபுருஷனாக விளங்கினமையால் கன்னி மகளிர் எவரை யார் வாழ்த்தினாலும் இப்படிக் கூறி வாழ்த்துவது வழக்கமாக இருந்தது. அங்கு நின்ற உதயணன் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டான். அவ்வளவில் முதல் நாள் வழிபாடு நிறைவேறியது. பதுமாபதி முதலியோர் காமன் கோவிலிருந்து அரண்மனை திரும்பினர். பதுமை வண்டியிலேறியபோது தன்னுள்ளம் அங்கு உதயணனிடம் நிற்க, தான் மட்டும் புறப்பட்டுப் போனாள்.

‘சூரியன் மறைவதற்குள் அரண்மனை சென்றுவிட வேண்டும்’ என்று உடன் வந்தோர் அவசரப்படுத்தியதன் காரணமாகத்தான் பதுமாபதி அவ்வளவு விரைவில் புறப்பட நேர்ந்தது. ‘இவள் தத்தையைப் போலிருக்கிறாளே? உறுதியாகத் தத்தைதான் என்று துணியவும் முடிவதில்லையே’ என்றெண்ணி மயக்கத்தோடு நின்றுகொண்டிருந்த உதயணன், கடைசியாக வண்டியைப் பின்பற்றிப் போகும் ‘அயிராபதி’ என்னும் தோழியை வினாவக் கருதிச் சென்றான். “இந்நங்கை யார்? உனக்கு வேறு அவசரமான காரியங்கள் இருப்பினும் இதற்கு நீ என்பால் அன்பு கூர்ந்து அவசியம் மறுமொழி கூறிவிட்டுச் செல்” என்று அவளை வினவினான் உதயணன்.