வெற்றி முழக்கம்/35. இருளில் நிகழ்ந்த சந்திப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

35. இருளில் நிகழ்ந்த சந்திப்பு

ண்பர்கள் தொடர்ந்து மேலும் சில அறிவுரைகளை உதயணனுக்குக் கூறினர். “உன் கனவில் பதுமாபதியைக் குறிப்பிட்டுத் தத்தை சினங்கொண்டு ஊடியதாக நீயே கூறுகின்றாய்! எனவே பதுமை கொடுத்த மாலையையும் மற்றவற்றையும் அணிந்து கொள்வது சரியல்ல! உனக்குத் தத்தையின்மேல் மெய்யன்பு இருக்குமாயின் பதுமையின் மேல் ஏற்பட்டிருக்கும் இவ் விருப்பத்தை நீ கைவிடத்தான் வேண்டும்” என்று உதயணனுக்கு உயிர் போன்ற நெருங்கிய நண்பர்கள் நயமாக எடுத்துச் சொன்னவற்றை உதயணன் ஒப்புக் கொள்ளவில்லை. பதுமையின்மேல் அவனுக்கிருந்த மோகத்தை அவ்வளவு சுலபமாக நண்பர்களால் நீக்கிவிட முடியவில்லை. உதயணன் நண்பர்களின் அந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ள மறுத்தான்.

‘இவன் வத்தவ நாட்டுப் பேரரசன் உதயணன் என்று மகத வேந்தன் தருசகனுக்கு அறிமுகம் செய்து வைக்கவே இங்கே உதயணனை அழைத்து வந்தோம். இப்போதோ இயற்கையாகவோ அந்த அறிமுகத்தை நாம் தவிர்த்தாலும், தவிராமல் தானாக ஏற்பட்டே தீரும் போலிருக்கிறது. இப்போது ஊழ்வினையும் ஏயர்குலத்தின் முன்னேற்றத்திற்கே உதவி செய்கிறது. உதயணன், பதுமை காதலால் நாம் எதிர்பார்த்து வந்த மகதநாட்டு அரசனின் உறவு கிட்டினால் நமக்கு அதுவே சிறந்த பலன் ஆகும் என்று எண்ணி நண்பரும் மனநிறைவு பெற்றனர். உதயணனும் பதுமாபதியின் காதலைப் பொறுத்தவரையில் தன் எண்ணத்தைச் சற்றேனும் தளர்த்திக் கொடுக்காமலே இருந்தான்.

‘உதயணன்-பதுமாபதி காதல் உறுதியான மெய்யே’ என்று அறிந்த நண்பர், ‘இனி எவ்வாறேனும் தங்களுக்கு மகத வேந்தனுடைய தொடர்பு கிட்டிவிடும்’ என்று மன நிறைவோடு இருந்தனர். ஆனால். உதயணன் நினைவில் மட்டும் பதுமாபதியின் காதல் ஒன்றே ஓங்கி நின்றது. அவளைப் பற்றியும் அவளுடைய அழகைப் பற்றியும் நினைத்த அளவு, மகத வேந்தனுடனே தனக்கு ஏற்பட வேண்டிய நட்பைப் பற்றி உதயணன் எண்ணவேயில்லை. எவ்வகையில் ஆயினும் பதுமையை மீண்டும் தனிமையில் சந்திக்க வேண்டுமென்ற அடக்க முடியாத ஆசை அவன் மனத்தில் எழுந்தது. தன் மேல் அவளுக்குள்ள காதலின் மிகுதியை ஏற்கெனவே அறிந்து உறுதி செய்து கொண்டதும், இந்த ஆர்வம் இன்னும் தவிர்க்க இயலாதபடி எழுந்ததற்கு ஒரு வகையில் காரணம் என்று சொல்லலாம். இந்த ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துடிதுடித்த அவன் மனம், இதற்கென்று ஒரு திட்டத்தையும் கூட வகுத்துக் கொண்டுவிட்டது.

சில நாள்களில் அந்தி மயங்கிய பிறகு, இரவு நேரங்களிலும் பதுமை காமன் கோட்டத்திற்கு வழிபாடு செய்ய வந்துபோவது வழக்கம். இத்தகைய நாள் ஒன்றில் கோவிலின் உட்புறத்தில் அதிகம் ஒளியற்ற பகுதியாகிய மணவறை ஒன்றில் அவளைச் சந்தித்து விடுவது என்று உதயணன் திட்டஞ் செய்து வைத்துக் கொண்டான். அந்த மணவறைக்குள், பதுமையைப் போன்ற தகுதியாற் பெருமை மிக்கவர்கள் தவிரப் பிறர் நுழைய முடியாது என்பதும், ஒளி மிகுந்திராது என்பதுவும் உதயணனுக்கு ஏற்ற வசதிகளாகப் பட்டன. காமன் கோட்டத்திற்கு வந்தால், என்றுமே அந்த மணவறைக்குள் நுழையாமல் பதுமை திரும்பிச் செல்வது இல்லை என்ற வழக்கமும் உதயணனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவளைத் தனிமையில் சந்திப்பதற்கு இதைத் தவிர வேறு வழி எதுவும் அவனுக்குப் புலப்படவில்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னால், நண்பர்களிடமும் கூறிவிடுதல் நல்லது என்றெண்ணிய அவன் அவ்வாறே கூறினான். “தன் அழகாகிய மத்தினால் என் அன்புக் கயிற்றை இட்டு இடையறாது உள்ளத்தைக் கடைகின்றாள் பதுமை. அவளைத் தனிமையிலே சந்திக்க வேண்டும் என்று என் மனத்தில் எழும் ஆசையை என்னால் அடக்க முடியவில்லை. காமன் கோட்டத்தின் உள்ளே இருக்கும் மணவறை மாடத்தில் அவளைச் சந்திக்கலாம் என்று கருதியிருக்கிறேன். அவள் சிறிதும் எதிர்பாராத நிலையில் இருளிடையே அவள் முன் தோன்ற வேண்டும். அதைக் கண்டு நாணத்தோடு அவள் தலைகுனிந்து நிற்கும் போது அந்த நகை முகத்தின் அழகையும் விழிகளின் குறு குறுப்பையும் கண்களால் கண்டு அனுபவிக்க வேண்டும். நெஞ்சத்தைக் கலக்கித் துடிதுடிக்கச் செய்யும் இந்த ஆசையை எவ்வளவோ முயன்று பார்த்தும் என்னால் நீக்கிவிட முடியவில்லை” என்று உதயணன் கூறி முடித்தபோது உருமண்ணுவா முதலிய அவனுடைய நண்பர்கள் அதைக் கேட்டுத் தயங்கினர்; திகைத்தனர்!

உதயணன் கூறிய திட்டம் நண்பர்களை அஞ்சுமாறு செய்தது. ‘வீரமும் ஆண்மையும் பல்கலை வல்லமையும் பொருந்திய உதயணன்தானா அவ்வாறு கூறுவது?’ என்று கூட ஐயப்பட்டனர் அவர்கள். அவன் கூறிய திட்டம் இடையிலே பிறழ்ந்து விடுமாயின், அதனால் அவனுக்கும் அவனுடன் வந்த நண்பர்களாகிய தங்களுக்கும் எவ்வளவு பெரிய பழி நேரும் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே அவர்கள் நடுங்கினர். உதயணன் திட்டத்தையும் நண்பர்கள் காரணங் காட்டி மறுத்தனர்.

“ஏதாவது தவறு நேர்ந்து சூழ்ச்சிகள் யாவும் வெளிப்பட்டு விடுமானால் நாளைக்கு அறிந்த மனிதர்கள் யார் மேல் குற்றங் கூறுவார்கள்? ‘உதயணன் நண்பர் அவனோடு துறவிகள்போல மாறுவேடங் கொண்டு மகத நாட்டிற்கு அவனை அழைத்துச் சென்றனர். அங்கே உதயணனுக்கு நல்ல நெறி காட்டி முன்னேற்றங் கொடுக்கத் தெரியாமல் பதுமையோடு மறைவாகக் காதல் புரியவே அவனுக்குத் துணைசெய்தனர். இந்த நண்பர்களுக்குச் சிறிதேனும் நுண்ணறிவு இருந்தால் உதயணனைத் தவறான வழிக்குச் செல்ல விட்டிருப்பார்களா இவர்கள்?’ என்றெல்லாம் நாங்கள் எதிர்காலத்தின் பழிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும்! மேலும் நீ கூறுகிறவாறே காமன் கோட்டத்தின் உட்பகுதியிலுள்ள மணவறை மாடத்தில் ஒளிந்து கொண்டு அவள் அதனுள் வரும்போது சந்திக்கிறாய் என்றே வைத்துக் கொள்வோம். பதுமை மாடத்திற்குள் நுழைவதற்கு முன்னால், அவளுடன் அரண்மனையிலிருந்து வரும் காவலர்கள் அதனுள் புகுந்து பரிசோதனை செய்தால் ஒளிந்து கொண்டிருக்கும் நீ அகப்பட்டுக்கொள்ள வேண்டியது ஆகும். நீ இரவலன்போல மாறுவேடத்தில் அங்கே செல்லப் போகிறாய்! ஆனால் உன்னைக் காண்பவர்கள் உனது எடுப்பான தோற்றத்தினையும் முகச்சாயையும் பார்த்தே ‘இவன் இரவலன் இல்லை என்று கண்டுபிடித்து விடுவார்கள். இவைகளை எல்லாம் மீறி மணவறையின் உள்ளே நீ பதுமையைச் சந்திக்கத் திடீரென்று அவள் முன் தோன்றும் போது தனிமையாலும் அச்சத்தினாலும் அவளே ஏதாயினும் கூக்குரல் இட்டுவிடலாம். அந்தக் கூக்குரலைக் கேட்டுத் தோழிப் பெண்களும் காவலர்களும் ‘என்னவோ? ஏதோ?’ என்று திடுக்கிட்டு உள்ளே வந்து விடுவார்களானால் உன்பாடு தப்புவதற்கு வழியில்லை. இன்ன இன்ன துன்பங்கள் எல்லாம் உன் திட்டத்தில் கலந்திருக்கின்றன. இவைகளைத் தவிர்த்து விலக்கிக்கொண்டு சாமர்த்தியமாக நடந்துகொள்ள முடியுமானால் நீ உன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் எங்களுக்கு மறுப்பு இல்லை” என்று நண்பர்கள் உதயணனுக்கு விரிவான மறுமொழி கூறினர்.

நண்பர்களின் மறுமொழியைக் கேட்ட பின்னரும் உதயணன் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. “பதுமைக்குக் காவலராக வரக்கூடிய யாவரும் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களே. அந்தப் புரங்களில் பெண்களோடு பழகும் காவலர்கள் பெரும்பாலும் வயது சென்றவர்களாகவே இருப்பார்கள். பகற்காலம் முழுவதும் வேலை செய்து அலுப்படைந்த அந்தக் காவலர்கள் மாலையில் இங்கே பதுமைக்குக் காவலாக வரும்போது களைப்போடு வருவார்கள். எனவே அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டுவது இல்லை. மேலும் பதுமையை நான் காமன்கோட்டத்து மணவறைக்குள் சந்திக்கப் போவது இருட்டிய பின்புதானே? இருளில் என்னை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. என்னைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்” என்று நண்பர்களுக்கு உதயணன் மறுமொழி கூறினான். அதற்குமேல் நண்பர்களும் அவனை வற்புறுத்தித் தடுக்கவோ மறுக்கவோ விரும்பவில்லை.

உதயணன் தன் விருப்பப்படியோ, பதுமாபதி இரவில் காமன்கோட்டம் வருகின்ற ஒருநாளை அறிந்து முன்னேற்பாட்டோடு இருந்தான். மணவறை மாடத்திற்குள்ளே அவன் ஒளிந்து கொள்வதற்காக நுழைந்தபோது, வயது முதிர்ந்த இரவலன் ஒருவனைப்போல மாறுவேடங்கொண்டிருந்தான். மாறுவேடத்திற்கு உள்ளே அவனுடைய இயற்கையான இளமைக் கோலம் இருந்தது. உதயணனது இந்தச் செய்கையை ஒப்புக் கொள்ளாமல் கருத்து வேறுபட்டதனால் தன் நண்பர்களிடம் அன்று மீண்டும் உதயணன் அதைப் பற்றிக் கூறவில்லை. அவர்களும் அதில் தலையிடவில்லை. அந்தி சாய்கின்ற நேரம். காமன்கோட்டத்துச் சோலையில் ஏற்கெனவே வெயில் நுழையாது. இப்போது அங்கே நன்கு இருள் பரவியிருந்தது. பதுமை ஆயத்துப் பெண்களும் காவலர்களும் புடைசூழ வழிபடுவதற்கு வந்திருந்தாள். ஒலிகளினால் வெளியே பதுமையின் சித்திரவையம் வந்து விட்டதை அறிந்த உதயணன், இன்னும் நன்றாக மறைவில் ஒளிந்து கொண்டான்.

மாறுவேடத்திற்குரிய உடைகளை உள்ளே வந்தவுடன் களைந்துவிட்டு, முதன் முதலாகப் பதுமையைச் சந்தித்த அதே இயற்கையான தோற்றத்தோடு இப்போது இருந்தான். அவன் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கோவிலுக்குள் இருந்து வெளியே பரவிக் கொண்டிருந்த அகில், மலர் முதலியவற்றின் மணம் போலவே அவன் நெஞ்சின் நினைவு மலர்கள் காதல் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. ஆயிற்று! இன்னும் சிறிது நேரத்தில் பதுமை எப்படியும் அங்கே வழிபடுவதற்காகத் தனியே வருவாள். அப்போது மலரின் விரிவு நோக்கிக் காத்திருக்கும் வண்டின் நிலையில் அவன் இருந்தான். தோட்டத்தின் வாயிலில் யாரோ நடந்து வரும் சிலம்புகளின் கிண்கிணி நாதம் அவன் காதுகளில் யாழொலி போலக் கேட்டது. கலின் கலின் என்ற அந்தச் சிலம்போசை வரவர அவனை அவள் நெருங்குவதாகச் சொல்லியது. உதயணனுக்கு உடல் முழுதும் வேர்த்துவிட்டது. பதுமை நெருங்கி வந்தாள். உடன் வந்திருந்த காவலர்கள் வெளியிலேயே அங்கங்கே மரத்தடியில் களைப்பாற அமர்ந்துவிட்டனர். ஆயத்துப் பெண்களும் காமன் கோட்டத்தின் வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்தார்கள். எனவே, பதுமை தான் மட்டும் தனியே வழிபாடு செய்ய நினைந்து கோட்டத்தினுள் நுழைந்திருந்தாள்.

மணவறை மாடத்தின் எதிரே வந்ததும், திடுமென்று அவள் எதிரே, ‘காமதேவனே அந்த இளைஞன் வடிவமாக வந்திருக்கிறானோ என்று எண்ணும்படி உதயணன் இருளிலிருந்து வெளிப்பட்டு நின்றான். ஒரு நொடி, பதுமை திடுக்கிட்டு நடுங்கிக் கூக்குரலிட வாயைத் திறந்துவிட்டாள். சற்றைக்கெல்லாம் அந்த முகத்தை உற்றுப் பார்த்த பின்னர், எதிரே நிற்பவன் தன் உள்ளங் கொள்ளை கொண்ட கள்வன்தான் என்பதைப் பதுமை புரிந்துகொண்டாள். கூக்குரல் இடுவதற்கு மேலெழுந்த நாவு ஒடுங்கியது. பயத்தால் நடுங்கிய உடலில் நாணம் பரவியது. பதுமை தலைகுனிந்தாள். அவள் இதழ்களிலே புன்னகை மென்மலர் பூத்தது. கன்னங்களிலே செம்மை படர்ந்தது. விழிகள் குறுகுறுத்தன. அவள் மாதவிக்கொடிபோலத் துவண்டாள். உதயணன் கரங்கள் கொடியைத் தழுவும் கொழுகொழும்பு போல அவளைத் தழுவின.

உதயணனுடைய அந்தக் கைகள் அவளைத் தழுவிய போது, யாரோ தன்மேல் கூடை கூடையாக அன்றலர்ந்த மல்லிகை மலர்களைக் கொட்டுவதுபோன்ற உணர்ச்சி பதுமைக்கு ஏற்பட்டது. அவள் தன்னை மறந்தாள். உதயணன் வசப்பட்டது அவளுடைய உணர்வு. அலர்ந்த மலரும் ஆவல் நிறைந்த வண்டும் ஒன்றுபட்டது போலாயிற்று அவர்கள் நிலை. எவ்வளவு நேரம் அவர்கள் அதே நிலையில் இருந்தார்களோ? தோழியர்கள் உள்ளம் பதைத்து, உள்ளே சென்ற பதுமையைக் காணவில்லையே! என்று கோட்டத்திற்குள் புகுந்துவரும் ஒலி கேட்டு, உதயணன் இருளில் மறைந்து கொண்டான். பதுமை தன் நிலையை உணர்ந்து கொண்டவளாய், அப்போதுதான் வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே வருபவள்போல அவர்கள் முன்னே தோன்றினாள். மலர்களும் மாலைகளும் அப்படியே இருப்பதைக் கண்ட் தோழி யாப்பியாயினி மட்டும் நுணுக்கமாகச் சிந்தித்துப் பதுமையின்மேல் சிறிது ஐயங்கொண்டாள்.