உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றி முழக்கம்/37. கன்னி மாடத்தில் உதயணன்

விக்கிமூலம் இலிருந்து

37. கன்னி மாடத்தில் உதயணன்

ரண்மனையிலுள்ள பிற கலைஞர்கள் உதயணனுக்கு அவ்வப்போது தேவையான உதவிகளைச் செய்து அவனைக் குறையின்றிப் பார்த்துக் கொள்ளுமாறு தருசகன் கட்டளை யிட்டான். எவராலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாத தன் தந்தையின் புதையலை, அவர் புதைக்கும்போதே பக்கத்தில் இருந்து கண்டவன்போல அவன் எடுத்துக் கொடுத்ததினால், அவன்மேல் மகத மன்னன் தருசகனுக்கு அளவற்ற அன்பும் பற்றும் ஏற்பட்டிருந்தன. பின்னர் ஒருநாள் தருசகனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி உதயணன் ‘அரண்மனையைச் சார்ந்த நிலப் பகுதிகளில் எங்கெங்கே நல்ல நீரூற்றுக்கள் இருக்கின்றன?’ என்பதை அறிந்து கூறினான். இதற்குரிய நூல்களை அவன் முன்பே ஒருமுறை தற்செயலாகப் படித்து வைத்திருந்தான் என்றாலும் நல்ல ஊழ் அவன் பக்கமிருந்து அவனுக்கு வெற்றி அளித்தது என்றே சொல்ல வேண்டும். புதையல் எடுக்கும் வேலையும் நீரூற்றுக்களைக் காணும் வேலையும் இவ்வளவு விரைவில் உடனடியாக ஏற்படும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் அரண்மனைக்கே வந்திருக்க மாட்டான். அவைகளில் எளிமையாகத் தான் வெற்றி கொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையும்கூட அவனுக்கு இருந்ததில்லை. அரண்மனையைச் சேர்ந்த இள மரக்காவினுள் நீர் மிகுந்த பல இடங்களைக் கண்டு பிடித்துக் கூறினான். தண்ணிர் ஊறும் இடம் தரைமட்டத்திற்குக் கீழே எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதையும் நீரின் சுவை, நிறம், அப்பகுதியிலுள்ள மணல், பாறை, மண் முதலிய விவரங்கள் ஆகியவற்றையும்கூட அவன் அறிந்து உரைத்தான். மண்ணுக்குள்ளே புகுந்து பார்த்துவிட்டு வெளிவந்தவனைப்போல உதயணன் இவ்வாறெல்லாம் விவரங்களைக் கூறியது கேட்ட தருசகன், உலகத்தையே தனக்கு உடைமையாகப் பெற்றுவிட்டவன்போல மகிழ்ந்தான்.

உதயணன் இவ்வாறு மாறுவேடங்கொண்டு அரண்மனையிலே கலைஞனாக இருந்து வருவதை உருமண்ணுவா முதலிய மற்ற நண்பர்கள் விரைவில் அறிந்துகொண்டனர். ‘அரண்மனையில் ஏதாயினும் பிழை நேர்ந்து, மாறுவேடத்தி லுள்ள உதயணன் யார் என்று வெளிப்படையாகிவிட்டால், அவனுக்குப் பல தீமைகள் நேருமே’ என்று நண்பர்கள் சிந்தித்தனர். முடிவில் தாங்களும் அவன் இருக்கும் இடத்திலேயே அவனுக்குத் துணையாக இருப்பது நல்லது என்ற திட்டத்துடன் தருசகனின் அரண்மனையில் மாறுவேடத்தோடு வேலை தேடிப் போயினர். முதலில் உருமண்ணுவா நல்ல வேலையொன்றில் அமர்ந்தான். உதயணன் தன் கவனத்திலிருந்து விலகிவிடாதபடி அவனால் பார்த்துக் கொள்ள முடிந்தது. இசைச்சனும் வயந்தகனும் சமய நூல்களிலும் தரும நூல்களிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்களைப்போல நடித்துப் பதுமையின் தாய்க்கு அறநூல்களைப் போதிக்கும் ஆசிரியர்களாக வேலை பெற்று அரண்மனைக்கு வந்தனர். மற்ற வீரர்களிற் சிலர் பதுமைக்கு விதவிதமான மலர் மாலைகளைக் கட்டிக் கொடுக்கும் பணியில் அமர்ந்தனர். இவ்வாறே உதயணனைப்போல அவனோடு வந்த யாவரும் அரண்மனையில் தொடர்பு கொண்டுவிட்ட னர். உதயணன் செல்லும் வழியில் அவனுக்குத் துன்பம் நேராமல் சுற்றியிருந்து காப்பது அவர்கள் கடமை அல்லவா? அந்தக் கடமை யுணர்ச்சிதான் அவர்களையும் அரண்மனையில் தொடர்பு கொள்ளத் தூண்டியது.

மாறுவேடத்தோடு கூடிய நண்பர்களும் அரண்மனைக் கலைஞர்களும் எந்நேரமும் தன்னைச் சூழ இருப்பதை உதயணனும் அறிவான். ஆனாலும் அவர்களில் எவரும் அறியமுடியாதபடி காமன் கோட்டத்திற்குச் சென்று வருவதை மட்டும் அவன் நிறுத்த வில்லை. அதே பழைய மணவறை மாடத்தில் பதுமையும் அவனும் தொடர்ந்து தனிமையிலே சந்தித்து வந்தனர். அவர்களுடைய சந்திப்புக்களின் எண்ணிக்கையைப் போலவே காதலும் வளர்ந்து பெருகி வந்தது. ஆனால் இவ்வாறு சந்திக்கும் சந்திப்பில் உதயணனுக்கு இருந்ததைவிடப் பதுமைக்கு மிகுதியான துன்பங்கள் இருந்தன. நாள்தோறும் மாலையில் காமன் கோட்டத்திற்கு வருவதும் மணவறைக்குள் தனியே சென்று வெகுநேரம் தங்கிவிட்டுத் திரும்புவதும் பிறர் சந்தேகங் கொள்ளத்தக்கவை ஆகும். தோழியரும் காவலர்களும் கோட்டத்திற்கு வெளியே இருக்கின்றனரே என்ற கவலை வேறு பதுமையைத் துன்புறுத்தியது. இந்தத் துன்பம் பதுமைக்குப் புதிய எண்ணம் ஒன்றை அளித்தது. உதயணனை மறைவாகத் தன்னோடு தனது கன்னி மாடத்திற்கே அழைத்துச் சென்று விடுவது என்று துணிவாகத் திட்டமிட்டாள் பதுமை. அவள் எவ்வளவுக்கு எவ்வளவு பெண்மையின் மென்மையான குணங்களைப் பெற்றிருந்தாளோ அவ்வளவுக் கவ்வளவு நெஞ்சுத் துணிவையும் கொண்டிருந்தாள். நினைத்ததைக் கைவிடாமல் செய்து முடிக்கும் திறன் அவளுக்கு இருந்தது. கன்னிமாடத்திற்கு உதயணனை அழைத்துப் போக என்னென்ன சூழ்ச்சிகளைச் செய்ய வேண்டியிருக்குமோ அவற்றைத் தான் எளிமையாகச் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு முழுமையாக இருந்தது.

பதுமை வகுத்திருந்த திட்டம் இதுதான்! ‘ஒருநாள் காமன் கோட்டத்தில் தன் கையால் பலவகை அறங்களைச் செய்வதாகக் கூறிப் பகல்பொழுதிலேயே அங்கு வந்துவிட வேண்டும். வரும்போது சுற்றித் திரைச்சீலை போர்த்து இருவர் அமரத்தக்க பெரிய மூடுபல்லக்கு ஒன்றையும் கொண்டு வரவேண்டும். அன்று முழுவதும் உணவு கொள்ளாமல் விரதமிருந்து வழிபடுவதாகக் கூறிக் காமன் கோட்டத்து மணவறையில் உதயணனோடு பொழுதைக் கழிக்க வேண்டும். பொழுது சாய இருக்கும்போது அறங்களைக் கொடுப்பதாகப் பேர் செய்து முடிந்தபின் மூடு பல்லக்கில் பிறர் அறியாமல் உதயணனோடு தானும் ஏறிக் கொண்டு கன்னிமாடத்திற்குப் புறப்பட்டுவிட வேண்டும்’

இந்தத் திட்டத்தை அவள் குறிப்பாக உதயணனுக்கு முன்பே கூறிவிட்டாள். உதயணனோ, அரண்மனையில் இருக்கும்போது புதையல் எடுக்கும் கலைஞனுக்கு உரிய மாறுவேடத்தோடும், பதுமையைச் சந்திக்க வரும்போது ‘மாணகன்’ என்ற அந்தண இளைஞனாகவும் வந்து போய்க் கொண்டிருந்தான். இந்த இரண்டு வேற்று வடிவங்களையும் மேற்கொண்டு இரண்டு இடங்களிலேயும் தான் உதயணன் என்பது தெரிந்துவிடாதபடி அவன் தன்னைப் பாதுகாத்துக் கொண்டுவந்தான். குறிப்பிட்ட நாளன்று பதுமை, பகலிலேயே காமன் கோட்டத்திற்குப் புறப்பட்டு விட்டாள். தோழிப் பெண்களும், வயது முதிர்ந்த காவலர்களும், தானப் பொருள்களையும் வழிபாட்டுப் பொருள்களையும் ஏந்தி வரும் ஏமல்மகளிரும் உடன் வந்தனர். அவள் ஏற்பாட்டின் படி திரைச்சிலை போர்த்த மூடுபல்லக்கு ஒன்றும் உடன் கொண்டு வரப்பட்டது. காமன் கோட்டத்தை அடைந்ததும் முன் ஏற்பாடாக அந்தப் பல்லக்கை மணவறை மாடத்தின் அருகிலே வைக்குமாறு அதனைத் தூக்கி வந்தவர்களுக்குப் பதுமை கட்டளை யிட்டாள். அவள் சொல்லியபடியே புதுப்பட்டுத்திரை மின்னும் அந்தச் சிவிகை மணவறைக்குப் பக்கத்தில் இறக்கி வைக்கப்பட்டது.

தான் மாடத்தினுள்ளே தனிமையில் விரதம் இருந்து வழிபடப் போவதாகக் கூறி, உடன் வந்த தோழிகளை அங்கங்கே பிரித்து ஒதுக்கிவிட்டுப் பதுமை மாடத்தில் நுழைந்தாள். பழைய இடத்திலேயே உதயணன் மறைந்திருந்தான். பதுமை புன்னகையோடு அவன் முன்னே தோன்றினாள். புன்னகையைப் பதில் புன்னகையாலே வரவேற்றான் உதயணன். அன்றைய பகல்பொழுது அவர்களுக்கு அந்த மாடத்தினுள்ளே கழிந்தது. நேரம் போனதே தெரியவில்லை. காதல் விளையாட்டுக்களிலும் பேச்சிலுமாக மாலைப் பொழுதுவரை கழிந்துவிட்டது. கன்னிமாடத்திற்குப் புறப்பட்டுச் செல்லவேண்டிய நேரம் ஆகி விட்டதைப் பதுமை உணர்ந்தாள். வெளியே அவள் சுட்டிக் காட்டிய இடத்தில் இருந்த சிவிகையை உதயணன் பார்த்து வைத்துக் கொண்டான். அவள் கூற வேண்டியவற்றை எல்லாம் குறிப்பாற் கூறினாள். யாவும் கேட்டுக்கொண்டு உதயணன் தலையசைத்தவாறே குறும்புச் சிரிப்பு ஒன்று இதழ்களில் தோன்ற நடந்து சென்றான். அவன் சிரிக்கும் அழகைக் கண்களால் பருகிக் கொண்டே பதுமை வெளியே சென்றாள். தானங்கள் வழங்குவதாகக் கூறிய செய்தியை மெய்யாக்கிக் காட்டவேண்டிய நாடகம் எஞ்சி இருந்தது. அதுவும் முடிந்துவிட்டால் திட்டம் வெற்றி பெற்றது போலத்தான். பின்பு மூடுபல்லக்கில் காதலனோடு அரண்மனைக்குப் புறப்படுவதற்கு எதுவும் தடையில்லை. பதுமை கோட்டத்தில் இருந்து வெளிப்பட்டு வாயிலை அடையவும், அங்கே காத்திருந்த ஏவல் மகளிர் தானமாக வேண்டிய பொருள்களை வரிசையாகத் தூக்கிக் கொண்டு அவளருகில் வந்து நின்றனர். காவலர்கள் சங்கு முதலிய வாத்தியங்களை முழக்கித் தானம் தொடங்கி விட்டதை அறிவித்து இரவலர்களை அழைத்தனர். ஆடை வகைகளையும், பொன், மணி, முத்து இவைகளால் ஆகிய அணிகலன்களையும் பலவித உணவுப் பொருள்களையும் வருவோர்க்கு எல்லாம் தன் கையாலேயே பதுமை வரையாது வழங்கினாள். வந்திருந்த இரவலர்கள் யாவரும், தத்தமக்கு வேண்டுவனவற்றை வேண்டிய அளவு விருப்பத்தோடு பெற்றுச் சென்றனர்.

அவ்வளவில் மாலை முடிந்து எங்கும் இருள் பரவிற்று. காமன் கோட்டத்தில் இருந்த எல்லா மணி விளக்குகளும் ஏற்றப்பட்டன. பதுமை கோவிலின் உள்ளே இருந்த மணி விளக்கைத் தன் கையாலேயே ஏற்றிவிட்டுப் புறப்படத் தொடங்கினாள். கூட்டமாகப் பதுமையை நெருங்கி வந்த பெண்களை, அவள் தோழி யாப்பியாயினி என்பவள், “எம் அரசி இன்று உண்ணா நோன்பு இருந்து களைப்புற்றிருக்கிறாள். இப்படிக் கூட்டம்கூடி நெருக்கினால் நல்ல காற்றும் அவளுக்குப்படாது” என்று குறிப்பறிந்து கூறி விலக்கினாள். அப்போது முதிய பெண்கள் சிலர், மங்கல வாழ்த்துப் பாடினர். யாப்பியாயினியின் உதவியால் பதுமை தனிமை பெற்றாள். விரைவாக உள்ளே நுழைந்து, உதயணனை மூடு சிவிகையில் ஏற்றிவிட்டுத் தானும் அதே சிவிகையில் ஏறிக் கொண்டாள். குறிப்பாக எல்லாம் தெரிந்து கொண்டிருந்த யாப்பியாயினி “அரசி மிகவும் களைப்புற்றிருக்கின்றமையினால் தனியாக இந்த மூடு பல்லக்கிலேயே ஏறிச் செல்லட்டும்” என்று காவலர்களை நோக்கிக் கூறினாள். காவலர்கள் பல்லக்கைத் துக்கினர். பதுமை பல்லக்கின் திரைச் சீலை காற்றிலே ஒதுங்கி விடாமல் இறுக இழுத்துப் போர்த்தினாள். வண்டோடு கூடிய தாமரை மலர்போல இருந்தது அவள் உதயணனோடு பல்லக்கினுள் இருந்த நிலை. யாப்பியாயினிதான் பதுமையிடம் முன்பே பெற்றிருந்த ஏவலின்படி, “இப் பல்லக்கைத் தேவியின் அந்தப் புரத்திலுள்ள கன்னிமாடத்தில் பதுமையின் பள்ளியறை அருகிலே தவிர வேறு எங்கும் நிறுத்தவோ வைக்கவோ கூடாது” என்று தூக்குபவர்களை நோக்கிச் சொன்னாள். பல வீதிகளையும் சோலைகளையும் கடந்து, சிவிகை அரண்மனையில் பதுமையின் கன்னிமாடத்திற்குள் புகுந்தது. உடன் வந்தவர்கள் வெளியிலேயே தங்கிவிட்டனர்.