வெற்றி முழக்கம்/39. காதலன் கலைநலம்

விக்கிமூலம் இலிருந்து

39. காதலன் கலைநலம்

தயணனோடு பேசுகிறபோதும், பழகுகிறபோதும் அவன் ஏதோ அரசகுலத்திற் பிறந்த ஓர் இளைஞன் என்ற எண்ணமே இயல்பாகப் பதுமைக்கு ஏற்பட்டது. அவனே தன்னிடத்தில் கூறியிருந்தபடி மாணகன் என்ற அந்தண இளைஞனாக அவனை அவளால் எண்ண முடியவில்லை. அவனோடு பழகப்பழகத் ‘தான் ஓர் அந்தண இளைஞன் என்று அவன் கூறியது பொய்’ என்பதாக ஒரு விதமான நம்பிக்கையும் அவளை யறியாமலே அவள் உள்ளுணர்வில் கலந்து வளர்ந்து வந்தது. அவன் வேண்டுமென்றே உண்மையைத் தன்னிடம் மறைப்பதாகத் தோன்றியது அவளுக்கு. சொல்லும், செயலும், எடுப்பான தோற்றமும், திருநிறைந்த முகச் சாயலும் ஆகிய யாவும் சேர்ந்து உதயணனின் மாறு வேடத்தில் அவளுக்கு ஐயத்தைத் தோற்றுவித்திருந்தன. அந்த ஐயத்திற்கு உரிய விவரமான விடைதான் அவளுக்குப் புரியவில்லை! ‘எதற்கும் அவனுடைய கலைத்திறனைப் பரிசோதித்துப் பார்க்கலாம்’ என்ற கருத்துடன் தன் தோழியாகிய யாப்பியாயினியின் துணையை அதற்காக நாடினாள். மாடத்திலுள்ள பள்ளியறையில் அப்போது பதுமை இருந்தாள்.

நண்பகற்போது ஆகியிருந்தது. யாப்பியாயினியை அழைத்து அவளிடம் தனது கருத்துக்களைக் கூறித் தன் முன்னிலையில் அவற்றை அவனிடம் விசாரித்து விடை கேட்கவேண்டும் என்று கூறினாள் பதுமை. ‘தானே நேருக்கு நேர் அவனைக் கேட்பது அவ்வளவு பொருத்தமாக இராது. மேலும் அவன் மனத்தில் தன்னை ஐயமுறக் காரணமாகும்’ என்றெண்ணியே யாப்பியாயினியைப் பதுமை தானும் அறிய வசதியாக, தன் முன்னிலையிலேயே அவனிடம் பேச்சுக் கொடுத்து அவற்றை அறியுமாறு கேட்டுக் கொண்டாள். தோழியும் அதற்கு ஒப்புக் கொண்டாள். அப்படியே செய்யவும் முற்பட்டாள்.

உதயணன் மாடப் பேரறைக்குள் வந்து அமர்ந்ததும், யாப்பியாயினிக்குப் பதுமை கண்களால் ஏதோ குறிப்புக் காட்டினாள். யாப்பியாயினி அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டு உதயணனை அணுகிப் புன்னகையோடு கேட்கலானாள். “மதிப்பிற்குரிய அந்தண இளைஞரே! தங்களைப் பார்த்தால் இசை முதலிய நுண்கலைகள் பலவற்றிலும் தங்களுக்கு நல்லபயிற்சி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. உண்மையில் தாங்கள் எந்த எந்தக் கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களென நாங்கள் அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறோம். அருள் கூர்ந்து இதற்கு விடை கூறலமா?” என்று பணிவோடு அவனிடம் கேட்டாள். புன்னகையோடு அவள் இவ்வாறு கேட்டதும் அவள் குரலில் இருந்த பணிவு ஒருவிதமான குறிப்புடன் அமைந்திருந்ததையும் கண்டு முதலில் உதயணனுக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது.

இவர்கள் நம்மைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு விட்டார்களோ என்ற அச்சம் ஒரு கணம் அவனை நடுங்கச் செய்தது. அதே நேரத்தில் தன்னிடம் அந்தத் தோழி குத்தலாகவே அப்படிக் கேட்டிருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டே அவனுக்குச் சிறிது சினமும் எழுந்தது. அப்படி இருந்தும்கூட அவன் தான் அந்தண இளைஞன், என்ற வேடத்திற்கு ஏற்றபடியே அவளுக்கு மறுமொழி சொன்னான். மறுமொழியாக அவன் சொன்ன வார்த்தைகளிலேயே அவன் மனத்தில் மூண்ட அந்தக் கோபத்தின் குறிப்பும் இலேசாகத் தொனித்தது. “வேதங்களை நன்கு பயின்ற அறிஞர்கள் பலர் இருந்தால் அவர்களுக்குமுன் என் திறமையையும் வேதநூற் பயிற்சியையும் விளக்கிக் காட்டுவேன்! அந்தண இளைஞனாகிய எனக்கு இதனைத் தவிர வேறு என்ன தெரிந்திருக்க முடியும்? இசை முதலிய கலைகளை என் போன்றார் எவ்வாறு கற்க நேர்ந்திருக்கும் தெரிந்திருந்தும் என்னிடம் நீ இந்தக் கேள்வியை விளையாடுபவள் போலக் கேட்கிறாயே? இது உனக்கே நன்றாக இருக்கிறதா? அந்தணர்களுக்கு வேத நெறியும் வைதீக ஒழுக்கமுமே தலை சிறந்த கலைகள். வேள்வி செய்யவும் அதற்குரிய கருவிகளை இயற்றவும் நான் நன்கு அறிவேன். இசைக் கருவிகளையும் இசையையும் அறிவதனால் எங்கட்கு ஏதும் பெரும் பயன் உண்டோ? என்றோ ஒருநாள் என் மனைவியின் வற்புறுத்தல் பொறுக்க முடியாமல் அவள் நோயாகக் கிடந்த துயரை மறக்கச் செய்வதற்காக ‘குட்முழா’ என்ற இசைக் கருவியை ஒரே ஒருமுறை வாசித்திருக்கிறேன். அதுதான் நான் முதன் முதலாக இசைக் கருவியைக் கையால் தொட்ட நாள்” என்று அழகாகத் தன் நடிப்புக்கு ஏற்ற வார்த்தைகளைப் புனைந்துரைத்தான். இதைக்கேட்ட பதுமை புன் சிரிப்பொன்றை உதிர்த்துக் கொண்டே யாப்பியாயினியின் காதிலே மட்டும் விழும்படியாக “அவ்வளவும் நடிப்பு. உண்மையில் இவர் ஒரு சுவைமிக்க கலைஞராக இருக்க வேண்டும். அதை இப்போதே சோதித்து அறிந்துவிடுவோம். நீ சென்று நான் வாசிக்கும் யாழை எடுத்துக்கொண்டு விரைவில் இங்கே வா!” என்றாள். உடனே தோழி விரைவாகச் சென்று பதுமையின் யாழோடு திரும்பி வந்தாள். யாழைப் பதுமையின் கைகளில் அளித்தாள்.

பதுமை யாழைத் தன் கையில் வாங்கி அதை வாசிக்க முயலுகின்றவள் போலச் சிறிது நேரம் நரம்புகளை மீட்டினாள். வேண்டுமென்றே நரம்புகளில் கெட்ட ஒசையைப் பிறக்குமாறு செய்து தான் அதை வாசிக்க ஆற்றாதவள் போலத் தோழியிடம் அளித்து உதயணன்பாற் கொண்டு சென்று அதனைச் செப்பஞ் செய்து வாங்கி வருமாறு குறிப்பாற் கூறினாள். அவன் இசைக் கலையில் நல்ல பழக்கம் உடையவன் என்பதை எவ்வகையிலாவது வெளிப் படச் செய்துவிட வேண்டும் என்பது பதுமையின் ஆசை. அந்த ஆர்வத் தூண்டுதலினாலேதான் பதுமை இவ்வாறு செய்தாள். யாப்பியாயினி மீண்டும் யாழைக் கையில் வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த உதயணன் பக்கம் சென்றாள். யாழை உதயணனுக்கு முன்னால் பட்டு உறையை விரித்து அதன்மேல் வைத்து விட்டு “இதன் நரம்புகள் தளர்ந்தமையால் இது தனது ஒலி பிழைத்தது. இதனுடைய நரம்புகளை ஏற்ற இடத்தில் அமையும்படி முறுக்கிக் சுட்டிக் கொடுத்தருளல் வேண்டும்” என்று அவனிடம் கூறினாள்.

ஏதோ கவனத்தில் வேறு சிந்தனையில் இலயித்துப் போயிருந்த உதயணன் செவிகளில் அவள்கூறிய வார்த்தைகள் சரியாக விழவில்லை அவள் தனக்கு முன்பு யாழை வைத்திருக்கக் கண்டு வழக்கப்படி தன்னை வாசிக்கச் சொல்லி வேண்டுகிறாள் போலும் என்று எண்ணிக்கொண்டு, “இந்த யாழ் வித்தையோடு எந்த வழியிலும் தொடர்பு இல்லாதது எங்கள் அந்தணர் மரபு. என்னை இப்படி வாசிக்கச் சொல்லி வற்புறுத்தி வருத்துவதைப் பார்த்தால் இனிமேல் யாழ் கற்றுக்கொண்டு விடலாமா என்றெண்ணுகிறேன் யான்?” என்று சற்றே உரத்த குரலில் அவளுக்கு உதயணன் விடை கூறினான். அதைக் கேட்ட பதுமை சிரித்த வண்ணம், “அந்தணர் பெரும! நீ இதனை வாசிக்கவோ அதற்காக வலிய முயன்று கற்கவோ வேண்டாம்! இதிலுள்ள நரம்புகள் தளர்ந்ததனால் இது இனிமை குன்றிப் போயிற்று. சற்றே நரம்புகளை இறுக்கி ஒன்று சேர்த்துக் கொடுத்தால் போதும்” என்று பதுமை திரும்பவும் சாதுரியமாகக் கூறினாள். சூழ்ச்சிகளிலும் பிறர் மன இயல்பை நுட்பமாக ஆராய்ந்து உணர்வதிலும் தேர்ந்தவனாகிய உதயணன், இந்த இடத்தில் தன்னை மறந்து பரவச நிலையோடு, பதுமையின் தந்திரப் பொறியில் மாட்டிக் கொண்டான். -

யாப்பியாயினிக்குக் கூறிய விடையளவில் தான் அவனுடைய நடிப்புப் பயன்பட்டது. யாழ்க் கலையில் பயின்று பழகிப் பழுத்த அவன் கைகள் அவனையும் அவன் நடிப்பையும் மறந்து தாமாகவே மீறிவிட்டன. நரம்புகளை இறுக்கிக் கொடுக்குமாறு பதுமையின் தோழி கேட்டபோது, ‘நான் யாழோடு சற்றும் பழக்கம் இல்லாத அந்தணர்குலத்திற் பிறந்தவன்’ எனத் தான் கூறியதற்கு ஏற்பப் பேசாமல் இருக்க வேண்டும் உதயணன். ‘பாடத் தெரியாது’ என்றவன் கூறியவுடன் சற்றைக்கெல்லாம் அதை மறந்து நரம்பைத் திருத்திக் கொடுக்கச் சம்மதித்தால் அது எப்படி இருக்கும்? ‘யாழோடு பழக்கம் சிறிதும் இல்லாதவனுக்கு அதை எவ்வாறு திருத்தத் தெரிந்தது?’ என்று எண்ணுவார்களே எனவும் நினைக்கத் தவறி உதயணன், நரம்பை இறுக்கிக் கொடுக்கும் எண்ணத்துடனே யாழைக் கையில் எடுத்துவிட்டான். இது அவனது முதல் பலவீனமாயிற்று.

உதயணன் அந்த ஒரு நொடியில் தான் கொண்டிருக்கும் வேடம், தங்கியிருக்கும் இடம், அதற்கு முன் வேடத்திற்கு ஏற்பக் கூறிய பொய் வார்த்தைகள் முதலிய யாவற்றையுமே மறந்து யாழைச் செப்பஞ் செய்யத் தொடங்கிவிட்டான். அவ்வாறு அவன் செப்பஞ் செய்த முறையினாலேயே அவன் உண்மையில் யாழிலே பேரறிஞன் என்பதைப் பிறர் அறிந்து கொள்ளலாம். பதுமைக்கு எதிரில் அவனுக்கு அந்த நுணுக்கமான எண்ணம் நினைவிலே எழாமற் போய்விட்டது. நரம்புகளை ஏற்றபடி இறுக்கிக் கட்டிவிட்டு அவை சரியான முறையில் பண்ணோடு ஒலிக்கின்றனவா என்றும் ஆராயத் தொடங்கிவிட்டான் உதயணன். அவன் முற்றிலும் தன் நிலையையும் தான் நடிக்க வேண்டிய நடிப்பையும் நினையாதவனாகித் தன் கையிலுள்ள பதுமையின் யாழைப் பற்றிய குணக் குற்றங்களைச் சிந்திப்பதில் ஈடுபட்டுவிட்டான்.

அவன் நரம்புகளை இறுக்கியபின் யாழை மீட்டியபோது அதில் பகை நரம்பு ஒலித்தது கண்டு, அந்த யாழை மீண்டும் நன்றாக உற்றுப் பார்த்தான். அப்போது, பட்டுப்போய் நடுவே பொந்து விழுந்து சில நாள் தண்ணிரில் ஊறிய ஒரு மரத்திலிருந்து செய்யப்பட்டது அந்த யாழென்ற உண்மை அவனுக்குப் புரிந்தது. அந்த யாழ் இன்ன வகையால் குற்றமுடையது என்றெண்ணி அவன் அதைத் தோழியின் கையில் நீட்டினான். அதுவரை பதுமையும், தோழியும் அவன் முகத்தையே கூர்மையாகக் கவனித்தவாறே யாழை அவன் திருத்தும் விதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பார்வையில் அவன் யாழைப் பற்றி எண்ணும் நினைவுகளை ஒன்று விடாமல் அவர்களால் ஊடுருவ முடிந்தது. பதுமை ஒரளவு தன் முயற்சியில் வெற்றியும் அடைந்திருந்தாள். அவன் எப்படியும் யாழ் வாசிப்பதில் சிறந்த கலைஞனாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவு இதனால் அவளுக்குக் கிடைத்திருந்தது. அந்த முடிவுக்கு வந்த பதுமை, ‘அவன் நீட்டும் யாழை அவன் கையிலிருந்து வாங்க வேண்டாம்’ என்று கண்பார்வையால் சங்கேதமாக யாப்பியாயினிக்குத் தெரிவித்திருந்தாள். எனவே அவன் நீட்டிய யாழைத் தோழி வாங்கிக் கொள்ளாமல் இருந்து விட்டாள். தன்னிடம் யாழை நீட்டும் உதயணனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “இந்த யாழை வாசித்துத் தீஞ்சுவைப் பாடல் ஒன்று பாடவேண்டும்” எனப் பதுமையின் குறிப்பைத் தோழி அவனிடம் கூறினாள். அவ்வாறு அவள் கூறியதும் உதயணன் எதிரே தொலைவில் அமர்ந்திருந்த பதுமையையும் தோழியையும் மாறி மாறிப் பார்த்தபடியே, “இவள் சிறந்த மதிநுட்பமுடையவள் நமக்கு யாழ் தெரியும் என்பதைப் புரிந்து கொண்டாள்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். “யாழ் வாசிக்கும் விதம் அறியேன் என முன்பே கூறினேனே” என்று மீண்டும் விட்டுக் கொடுக்காமலே அவளுக்கு உதயணன் விடை சொன்னான்; தனக்கு வாசிக்கத் தெரியாது என வற்புறுத்தி நம்பவைக்க முயன்றான். ஆனால் பதுமையின் தோழியா அவன் கூறிய விடையை ஏற்றுக்கொண்டு, அவனைச் சும்மா விட்டு விடுவாள்? மீண்டும் அவனை வற்புறுத்தினாள்.

தோழியும் அவனும் எப்படி வற்புறுத்தல் செய்து கொண்டிருக்கும்போது, பதுமையே வாய்திறந்து அவனோடு பேசலானாள்: “மனத்தைப் புலன்களின் வழியே ஓடவிடாமல் அடக்கி ஒரு நெறிப்படுத்திய அந்தணர்களுக்கு முடியாதது என்றும் ஒரு செயல் உண்டோ? அவர்கள் மனம் வைத்தால் எல்லாக் கலைகளிலும் தங்கள் வன்மையைக் காட்ட முடியும் உங்கள்மேல் நான் கொண்டிருக்கும் எல்லையிலாக் காதலின்மேல் ஆணையிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். இன்ப மயக்கம் அடைந்திருக்கும் நான் கேட்கும்படி நீங்கள் ஒரு பாட்டுப் பாடித்தான் ஆகவேண்டும். மறுக்காமல் பாடியருளுங்கள்” என்று கனிவான மொழிகளால் பதுமை அவனை நேரில் வேண்டிக் கொண்டாள். இதற்குள் மாலை நேரம் ஆகியிருந்தது. சாளரங்களின் வழியே நறுமணத்தோடு கூடிய தென்றற் காற்று உள்ளே குளிர்ச்சியாக வீசியது. அது அவர்கள் காதலுக்குச் சான்று கூறி உதயணன் பாடியாக வேண்டும் என்று கட்டளையிடுவது போலிருந்தது.

உதயணன் பதுமையின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் பாட்டுப் பாடிக்கொண்டே யாழையும் மீட்ட ஆரம்பித்தான். அப்போது அவனுக்கு உஞ்சை நகரிலிருந்து தத்தையுடன் பிடிமேல் வரும்போது தவறிப்போன ‘கோடபதி’ என்னும் தனது தெய்வீக யாழின் நினைவு வந்து விட்டது. அந்த நினைவுடன் பதுமைக்கு முன் அவன் பாடிய பாட்டில் பண்ணும் இசையும் பருந்தும் அதன் நிழலும் போலப் பொருந்தி மிக அழகாக அமைந்துவிட்டன. அமுதம் போலச் செவிக்குள் பாய்ந்த அவன் யாழிசையையும் வாய்ப்பாட்டையும் கேட்டுப் பதுமை வியப்புக் கடலுள் ஆழ்ந்தாள். ‘தும்புரு காமனுக்கு அடுத்தாற்போல யாழிற் சிறந்தவன். தும்புருவுக்கும் அடுத்த இடம், யாழ் வாசிப்பில் மானிட வேந்தர்களில் ஒரே ஒருவனுக்குத்தான் உண்டு. அந்த ஒருவன்தான் உதயணன்!’ என்றெண்ணினாள் பதுமை. ‘ஒன்று, நம்முன் அந்தணனாக அமர்ந்திருக்கும் இவன் உதயணனாக இருக்கவேண்டும்! அல்லது உதயணனைக் காட்டிலும் சிறப்பாக யாழ் வாசிக்கத் தெரிந்த வேறோர் அந்தண இளைஞனாகவே இருக்க வேண்டும்!’ என்று தன் வியப்புக்கு இடையே பதுமை நினைத்தாள். அந்த ஐயத்தையும் தன் மனத்திலிருந்து வெளிச் சென்று விடாதபடி மறைவாகவே வைத்துக் கொள்ள வேண்டுமென்று உறுதி கொண்டாள். அவ்வளவு கலைநலமும் திறமும் உடையவன் தன் உள்ளங்கவர்ந்த காதலனாக இருந்ததில் அவளுக்குத் தனிப்பட்ட உவகை ஏற்பட்டது. பதுமையின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் உதயணன் அன்று மாலையில் பாடிக் கொண்டே யாழ் வாசித்த அந்த நிகழ்ச்சியால் ‘தனக்கு நன்கு யாழ் தெரியும். அதுவரை அறியேன் என்று மறுத்ததெல்லாம் நடிப்பு’ என்று தானே வெளிப்படுத்திக் கொண்டது போல் ஆயிற்று. ஒரு பாவமும் அறியாத, அந்தண இளைஞன் வேடத்தில் ‘மாணகனாக’ இருக்கும் அவனைப் பார்த்த எவரும் அந்தத் தோற்றத்திற்குள் அவ்வளவு திறமை அடங்கியிருப்பதை நம்பவே மாட்டார்கள். மறு நாளிலிருந்து யாழிசையில் தேர்ந்தவன் என்ற முறையில் பதுமை, யாப்பியாயினி ஆகியோர் அவனிடம் நெருங்கிப் பழகும்நேரம் அதிகரித்தது. இருவரும் அவனிடம் யாழ் கற்கும் மாணவிகளைப் போலப் பழகினர். “மறைகளில் தேர்ந்த அந்தண இளைஞரே! உருவத்தைக் கண்டே மனிதர்களின் திறமையை அறிந்து கொள்ளும்படி நான்முகன் மனிதர்களைப் படைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? பயனற்ற கொன்றைக் காய்க்குப் பெரிய உருவத்தையும் பயன் மிக்க பயறுகளின் தானிய மணிகளடங்கிய நெற்றுக்களுக்குச் சிறிய உருவத்தையும் கொடுத்திருக்கிறான். அதேபோல இனிய சுவை மிக்க கரும்பின் உருவையும் பருமனையும் சிறிதாகவும், மூங்கிலைப் பெரியதாகவும் பிரமன் படைத்திருக்கிறான்! யானையை அடக்கியாளும் அளவிற்கு யாழிசையைத் தெய்வீக முறையிலே கற்றிருக்கும் உதயணனைக் காட்டிலும் சிறந்த கலைஞராக நீர் தோன்றுகிறீர். ஆயினும், உருவத்தைக் கண்டே உம் கலைத் திறத்தை அறிந்துகொண்டுவிடுமாறு நான்முகன் உம்மைப் படைக்கவில்லையே?” என்று யாப்பியாயினி மறுநாள் ஆவலோடு அவனிடம் கூறினாள்.