உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றி முழக்கம்/44. ஓடினோர் கூடினர்

விக்கிமூலம் இலிருந்து

44. ஓடினோர் கூடினர்

கத நாட்டு எல்லையில் பாசறைகளில் தங்கியிருந்த போது நள்ளிரவில் நடந்த உட்பகைக் கலவரத்திற்கு அஞ்சி ஒடிய அரசர்கள் அறுவரும், மகத நாட்டு எல்லையைக் கடந்து வெளியேறும்போது அங்கே மலைத் தொடரின் நடுவே இருந்த ஒரே கணவாய் வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. மலை வழியில் எல்லோரும் சந்திக்கும் படி ஆயிற்று. ஒவ்வொரு அரசனும் மற்றவனைச் சினத்தோடு பார்த்தான். ஒவ்வொருவனுடைய உள்ளமும் மற்றவனைச் சந்தேகித்துக் கொண்டு குரோதத்தினால் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த உள்ளக் கொதிப்பை, அவர்களுடைய கண்கள் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்ட முறையே காட்டியது. ஆனால் படையெடுப்பிற்கு முக்கிய காரணனாகிய விரிசிகனுக்கு மட்டும், ‘தங்களைக் கலைப்பதற்கு என்றே இதில் தங்களைச் சேராத பிறரது சூழ்ச்சி ஏதோ கலந்திருக்கிறது’ என்று தோன்றியது. விரிசிகன் தனக்குத் தோன்றிய இந்த எண்ணத்தைத் ‘தீர விசாரித்து, உண்மையைத் தெரிந்து கொள்வது நல்லது’ என்ற முடிவிற்கு வந்தான். சிரம சாத்தியமான முயற்சியின் பயனாக அந்த மலையடி வாரத்திலேயே ஆறு அரசர்களையும் படைகளோடு தங்கச் செய்து ஒன்று கூட்டினான். அரசர்கள் ஆறு பேரும் தனியே ஒரு பெரிய மரத்தின் நிழலில் தங்கி, முதல் நாள் இரவு நடந்த கலவரங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.

முதலில் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு பேசிய அவர்கள் பேச்சு வளரவளரத் ‘தங்களில் யாருமே முதல் நாளிரவு நிகழ்ச்சிக்குக் காரணமில்லை’ என்ற திடுக்கிடத்தக்க உண்மையைப் புரிந்து கொண்டனர். இறுதியில் முன் இரவில் கலவரம் முடிந்து தாங்கள் கலைந்த போதிலிருந்து குதிரை விற்பவர்கள் என்று கூறி வந்து தங்களோடு சேர்ந்து கொண்டவர்கள் காணாமற் போனது வரை அவர்களுக்கு எல்லா நினைவும் வந்தன. ‘குதிரை வாணிகர்களாக வந்தவர்களே இந்தக் கலவரத்திற்குக் காரணம். அவர்கள் தருசகனாலேயே அனுப்பப் பட்டிருக்கலாம்’ என்று எண்ணியபோது தாங்கள் அவ்வளவு எளிதில் சூழ்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டது அவர்களுக்கே வியப்பையும் வெட்கத்தையும் அளித்தது. அவர்கள் அஞ்சினர். ஆத்திரங் கொண்டு மீண்டும் அங்கேயே ஒன்று கூடி எழுந்தனர். அடக்க முடியாத ஆத்திரத்தோடு மறுபடி மகத நாட்டின் மீது படை எடுக்கத் துணிந்தனர்.

‘நாங்கள் குதிரை வியாபாரிகள். இப்போது தருசகனுக்குப் பகைவர்கள்’ என்ற பொய்யை மிகச் சாதாரணமாகக் கூறித் தங்களை நம்ப வைத்துவிட்டார்களே என்று எண்ணி எண்ணி மனங்கொதித்தனர். ‘இனி முற்றத் துறந்த முனிவர்களேயானாலும் சரி - அவர்களைப் படை நடுவில் விடக் கூடாது. தாங்களும் தங்கள் ஆறு பேருடைய படைகளும் தவிர வேறு எவருக்கும் உள்ளே இடங்கொடுத்து என்று உறுதி செய்து கொண்டார்கள். ஏமாற்றப் பட்டவர்களின் மனக் கொதிப்பும் ஆத்திர வேகமும்தான் உலகிலேயே உவமை சொல்ல முடியாதவைகள். ஒன்று கூடி வந்த தங்களைக் கேவலம் ஒரே ஓர் இரவில் சிதறி ஓடச் செய்த சூழ்ச்சியை நினைக்க நினைக்க நெஞ்சு குமுறிய அவர்கள், பழைய முறைப்படி தத்தம் படைகளை அணி வகுத்துக்கொண்டு மீண்டும் மகத நாட்டு எல்லைக்குள்ளே விரைந்து புகுந்தனர். அமைதிக்கு இடமின்றிப் புயற் காற்றால் பொங்கியெழுகின்ற கடலைப்போல இருந்தது அவர்களது நிலை. இப்படி இரண்டாம் முறையாக அவர்கள் ஒன்றுபட்டு வந்தபோது அங்கங்கே தென்பட்ட அழகிய சோலைகளை இருந்த இடம் தெரியாமல் சூறையாடி அழித்தனர். கமுகு, வாழை முதலிய தோட்டங்கள் அவர்களது ஆத்திரம்மிக்க கைகளிற் சிக்கிச் சிதைந்தன. கருக் கொண்டிருக்கும் தாய் மகள்போலப் பசுமை தவழும் காய்களுடனே விளங்கும் பலா மரக் காடுகள் பாழ்பட்டன. மா மரங்களையும் தென்னை மரங்களையும் படைகளைச் சேர்ந்த யானைகள் ஒடித்துத் தள்ளின. கழனிகளில் முற்றியிருந்த நெற்கதிர்களுக்கு நெருப்பூட்டி விளைபொருள்களை நாசப்படுத்தி மகிழ்ந்தனர் அப் படைவீரர்கள். இந்தச் செய்தி வேகமாகத் தலைநகரத்துக்கு எட்ட வேண்டுமென்றே இப்படி எல்லாம் செய்தார்கள் அவர்கள்.

அஞ்சி ஓடிய பகையரசர்கள் மீண்டும் ஒன்று கூடிப் போர்புரிய வந்து கொண்டிருப்பது இராசகிரிய நகரத்தின் எல்லையிலுள்ள தன் ஒற்றர்கள் மூலம் தருசகனுக்குத் தெரியவந்தது. இச் செய்தி அறிந்ததும், ஒருமுறை கொடிய நோய் ஒன்றினால் துன்புற்று வருந்தியவன், அந் நோய் தீர்ந்த சில நாள்களிலேயே மறுபடியும் அக் கொடிய நோயால் பீடிக்கப்பட்டால் எப்படி இருப்பானோ, அப்படி இருந்தான், தருசக மன்னன். அப்போது, ‘அந்த நிலையில் உடனடியாக என்ன செய்ய முடியும்?’ என்பதே அவனுக்குத் தெரியவில்லை. தோற்று ஓடியவர்கள் ஒன்றுகூடி மீண்டும் திரும்பி வர வேண்டுமென்றால் அவர்களுடைய துணிவும் தன்னம்பிக்கையும் அளவுக்கு அதிகமாக இருந்தாலொழிய அது முடியாது என்று எண்ணி அஞ்சினான் தருசகன். ஆனாலும் தன் மனத் தளர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்வது அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்றதல்ல, என்று கருதி வெளிப்படையாகச் சினங் கொண்டவன்போல நடித்துப் படைத் தலைவர்களிடம் படைகளை விரைவில் திரட்டுமாறு ஆணையிட்டான்.

‘மீண்டும் பகைவர்கள்கூடி வந்துவிட்டார்கள். நம் அரசன் அவர்களை எதிர்த்துப் போர் செய்யக் கருதியிருக்கின்றான்’ என்ற செய்தி படைத் தலைவர்களால் எங்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. அரண்மனையிலேயே வேறொரு பகுதியில் தருசகனுடைய விருந்தினனாகத் தங்கியிருந்த உதயணனுக்கு முதலில் இந்தச் செய்தி தெரியவில்லை. படையெடுத்துப் பகைவர் மறுபடியும் வருவதையும் விரைவில் எதிரிப் படைகள் தாக்கலாம் என்பதையும் தருசகனுடைய ஒற்றர்கள் கூறியவுடன், அதைக் கேட்ட தருசகன் படை திரட்ட ஆணையிட்டிருப்பதை உதயணன் அறிந்தபோது, தருசகனுக்கு இம் முறையும் தான் உதவ வேண்டும் என்றே அவன் எண்ணினான். செய்தியைக் கேள்விப்பட்ட உடனே, தன்னுடன் தங்கியிருந்த உருமண்ணுவா முதலிய நண்பர்களிடம் அதைக்கூறி, “இப்போதும் நாமே முன்னின்று பகைவர் படையை அழித்துத் தருசகனை காப்பாற்ற வேண்டும்” என்று உரைத்தான் உதயணன். மேலே செய்ய இருப்பவை பற்றி நண்பர்களோடு கலந்து ஆலோசித்தான். “விருந்தினனாக வந்து தங்கியிருக்கும் நான், ஏற்கெனவே இந்தப் படையை விரட்டித் தனக்கு உதவி செய்தவன் என்ற கருத்தினால் கூச்சத்தோடு என்னை மறுபடி சிரமப்படுத்த விரும்பாது, தருசகன் இப்போது எனக்கு இச்செய்தியைச் சொல்லி அனுப்பாமல் இருக்கலாம். ஆனாலும் நாம் இதனைக் கேட்டறிந்த பின்னும் வாளா இருத்தல் கூடாது” என்று உதயணன் கூறியதை உருமண்ணுவா முதலியோரும் மறுக்கவில்லை. போரில் தருசகனுக்கு உதவி செய்து, முழுமையாக வெற்றிபெறத் துணைபுரிய வேண்டும் என்ற முடிவை உதயணனைச் சேர்ந்த யாவரும் ஒப்புக் கொண்டனர். உடனே வயந்தகனிடம் தன் கருத்துக்களை விவரித்து, அவற்றையெல்லாம் தூதுவனாகச் சென்று தருசகனிடம் கூறி வருமாறு அனுப்பினான் உதயணன். வயந்தகன், உதயணன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு, தருசகனிடம் அவற்றை எல்லாம் உரைப்பதற்காகத் தூதுவனாகச் செல்லலானான்.

“பிரச்சோதனன் மகளாகிய தன் ஆருயிர்க் காதலி வாசவதத்தை இலாவாண நகரத்து அரண்மனையில் தீப்பட்டு இறந்த நாளிலிருந்தே, உதயணன் வாழ்க்கையின்மேல் வெறுப்புற்றுச் சுற்றி வருகின்றான். எங்கள் அரசனாகிய உதயணன் அவ்வாறு ஊர் ஊராகச் சுற்றி வரும்போதுதான் இங்கும் வரும்படியாக நேர்ந்தது. இங்கு வந்தபோது, உங்கள் மகதநாட்டின்மேல் மாற்றரசர் பலர் கூடிப் படையெடுத்து வந்துள்ளனர் என்பதை நாங்களும் எங்கள் அரசர் பிரானும் கேள்வியுற்றோம். கேள்வியுற்ற உடனே, ‘என் தந்தையாருக்கு நெருங்கிய நண்பராகிய மகத மன்னரின் பகைவர்களை இங்கிருந்து ஓடச் செய்துவிடுவது என் கடமை’ என்று கூறி இரவுக்கு இரவே சூழ்ச்சிசெய்து அவர்களை ஓடிப் போகுமாறு செய்தான், எம் அரசன் உதயணன். ஆனால் அதே பகையரசர்களே இப்போது, மீண்டும் தங்களுக்குள் ஒற்றுமையுற்று மகத நாடு நோக்கிப் படைகளோடு வந்திருப்பதாகத் தெரிகிறது. இச் செய்தியை எம் அரசனிடம் தங்களுக்குள்ள அன்பு காரணமாகக் கூறித் தாங்கள் சொல்லி அனுப்பாவிடினும், நாங்களே நிலைமையை அறிந்துகொண்டோம். பகைவர்கள் மறுமுறையும் படையெடுத்து வந்திருப்பதை எண்ணி நீங்கள் சிறிதும் கலங்க வேண்டியதில்லை. எங்கள் அரசர் பிரானாகிய உதயணனாற் செய்ய முடிந்த எந்த உதவியையும் பிறருக்குச் செய்ய அவர் ஒருபோதும் தயங்குவதே இல்லை. மேலும் தாங்களே தங்கள் படைகளுடனே நேரிற் சென்று இந்தப் பகைவர்களுடன் போரிடுவது தங்களது தகுதிக்கு அவ்வளவு ஏற்றது ஆகாது. போரில் வெற்றி அல்லது தோல்வி என்பது மதில்மேற் பூனையைப் போல ஆகும். யார் பக்கம் வெற்றி, யார் பக்கம் தோல்வி என்பது அறிய முடிந்தது அல்ல. ஒருகால் தோல்வி நம் பக்கம் நேருமானால், ‘தாங்களே நேரில் போருக்குச் சென்றும் பகைவர்கள் வென்றுவிட்டார்களே!’ என்று நாளைய உலகம் தங்களுக்கு அழியாப் பழி ஒன்றை உண்டாக்கிவிடும். நாங்களும் எங்கள் மன்னரும், தங்கள் படை உதவியுடன் மட்டும் இந்தப் போருக்குச் சென்றால் தங்களுக்கு அவ்வாறு எத்தகைய பழியும் ஏற்படுவதற்கு வழி இல்லை. வெற்றியானால் அந்தப் பெருமிதத்தை நாங்கள் தங்களுக்கே அளிப்போம். தோல்வி என்றாலோ அந்தக் களங்கத்தைத் தங்கள் பக்கம் சாரவிடாமல் எங்களிடம் நாங்களே அமைத்துக் கொள்வோம். எனவே மகதவர் பேரரசே! ஆற்றலுடனே ஒன்றுபட்டு வந்திருக்கும் பகைவர்களை வென்று வருவதற்காகத் தாங்களே நேரிற் செல்லவேண்டாம். எங்கள் மன்னர் பிரான் உதயணனுக்குத் தங்கள் படைகள் யாவற்றையும் அளித்துப் போர்முனை நோக்கி அனுப்புங்கள். அதுவே சுலபமான வெற்றிக்கு ஏற்ற வழி! இவை பற்றித் தங்கள் கருத்து யாது என்பதை அறிந்துவரச் சொல்லியே என்னைத் தங்களிடம் தூதுவனாக அனுப்பினார் எங்கள் மன்னர்” என்று உதயணன் தன்னிடம் கூறி அனுப்பியவற்றை எல்லாம் வயந்தகன் தருசகராசனிடம் விளக்கமாக எடுத்து உரைத்தான்.

தன் முன் நின்ற வயந்தகன் கூறியவற்றைத் தருசகன் அமைதியாக இருந்து முற்றிலும் கேட்டான். உதயணனின் கருத்துப்படியே நடந்து கொள்வதுதான் நல்லது என்ற எண்ணமே தருசகனுக்கும் உண்டாயிற்று. அவன் வயந்தகன் கூறியவற்றைப் பூரணமாக நம்பி ஏற்றுக்கொண்டான். இருப்பினும் தன் அவையோர்களிடம் அதைப் பற்றிக் கூறி அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் அறிய வேண்டியிருந்தது. அவசியத்தை உத்தேசித்து அதை அவனால் தவிர்க்க முடியவில்லை. “உதயணன் எப்போதும் நமக்குத் தீமை நினையாதவன். அவன் கூறியனுப்பியிருப்பதை நாம் உறுதியாக நம்பலாம். நம் படைகளை அவனோடு துணைக்கு அனுப்புவதில் எந்தவிதமான தவறும் கிடையாது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று அவன் தன் அவையோர்களைக் கேட்டான். “என்ன இருந்தாலும் நமக்கு உதயணன் வேற்றவன்தானே! எதற்கும், அவன் இவ்வாறு கூறியனுப்பி இருப்பதின் உட்கருத்து எதுவாக இருக்கலாம் என்பதைத் தீர ஆராய்ந்தால் ஒழிய, நாம் இதற்குச் சம்மதிப்பது கூடாது” என்று தருசகனின் அவையைச் சேர்ந்த அறிஞர்கள் அவனுக்குக் கூறினர். ஆனால் தருசகனோ, அவர்களுக்கு உதயணனைப் பற்றிக் கூறித் தக்க சமாதானங்களை எடுத்துச் சொல்லிவிட்டான். “நம்மைவிட உதயணன் பகைவர்களை விரட்டுவதில் சூழ்ச்சித் திறம் மிக்கவன். அவனால் நமக்குத் தீமைவரும் என்பதை நாம் கனவிலும் எண்ண வேண்டியதில்லை” என்று அவன் முடிந்த முடிபாகச் சொல்லியபோது, அவர்கள் மேலும் மறுத்துப் பேச முயலவில்லை. உடனே தருசகன் படைத் தளபதிகளை வரவழைத்து எல்லாப் படைகளையும் போருக்கு ஆயத்தம் செய்ய வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். வயந்தகன் இன்னும் அங்கேயே இருந்தான். தன் தூது வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக அவன் முகம் மலர்ந்தது. தளபதிகள் படைகளை ஆயத்தம் செய்வதற்குப் புறப்பட்டனர்.