வெற்றி முழக்கம்/48. உதயணன் சம்மதம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

48. உதயணன் சம்மதம்

திரவனை நோக்கி மலர்கின்ற பூக்களைப்போலப் பெண்ணின் உள்ளமும் காதல் என்ற மாபெரும் ஒளிப் பிழம்பை நோக்கி ஒரே ஒரு முறைதான் மலர முடியும். வாழ்விலும் அந்த முதற் காதலின் மலர்ச்சியைத் தொடர்ந்ததாகவே பின் வாழ்க்கை அமைய வேண்டும். நிறங்களைப் பிரித்தெடுக்க முடியாமல் ஏற்ற இடங்களில் ஏற்றவாறு கலந்து தீட்டிய ஒருவகை எழிலோவியம் போன்றதுதான் காதல். முதலில் வரைந்த அந்த ஒவியத்தை அழித்து, அதற்குப் பயன்பட்ட அதே வர்ணங்களை வைத்து வேறோர் ஒவியம் எழுத இயலாதல்லவா? இதேபோல் காதல் வாழ்விலும் உள்ளத்து உணர்ச்சிகள் ஒரே ஒருமுறை குறிப்பிட்ட இரண்டு ஆண்பெண் மனங்களுக்குள்ளேதான் சங்கமம் ஆகமுடியும். உடைக்க முடியாத, விலக்க இயலாத உணர்வுக் கலப்புத் தான் அந்த அற்புத சங்கமம். மாணகன் மனத்தில் தன்னை அடைக்கலம் செய்துகொண்ட பதுமையும் அப்போது இதே நிலையில் இதே உறுதியோடுதான் இருந்தாள். திகைப்போடு அதை வெல்ல வேண்டிய திடமும் அவளிடம் இருந்தது. ஆனால் மாணகனும் உதயணனும் ஒருவர்தான் என்பதை அவள் அதுவரை அறிந்துகொள்வதற்கு இயலவில்லை.

தருசக வேந்தனால் அனுப்பப் பெற்ற அமைச்சன், தக்க நேரமறிந்து உதயணனைச் சந்தித்து வணங்கினான். உதயணன் அமைச்சனுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு அவனைத் தன் எதிரிலிருந்த ஆசனத்தில் அமரச் செய்தான். அப்போது உதயணன் தோழராகிய வயந்தகன் முதலியோரும் அங்கே வந்து அமர்ந்து கொண்டனர். வந்த அமைச்சனுடைய முகக் குறிப்பிலிருந்து அவன் ஏதோ முக்கியமான ஒன்றைப் பற்றிப் பேசிச் செல்வதற்கு வந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் உதயணன். கூற வந்த செய்தியைச் சொல்லத் தொடங்கலாம் என்ற கருத்துப் பொதிந்த பார்வை ஒன்றை அமைச்சனை நோக்கி உதயணன் செலுத்தினான்.

அமைச்சனுக்கும் அந்தப் பார்வை புரிந்திருக்க வேண்டும். அவன் தான் வந்த காரியத்தைப் பற்றிப் பவ்வியமான முறையில் உதயணனிடம் பேச்சை ஆரம்பித்தான். “வத்தவர் பேரரசே! எம்மரசன் தருசகன் என்பாற் கூறி அனுப்பிய செய்தி இது! ‘உலகைச் சூழ்ந்து வேலியிட்டுள்ள கடல் தன் வரம்பு கடந்து பொங்கி நிலை தளருமேயானால் உலகத்தோடு மட்டுமின்றி அதிலடங்கிய வானளாவிய மலைகளையும் தன்னுள் ஆழ்த்தி அடக்கிக் கொண்டு விடும். உலகத்தைக் காத்து அரசாளும் மன்னனும் தன் சொந்த வாழ்க்கையில் இன்ப துன்பப் பேருணர்வுகளில் சிக்கி உழலும் நிலை நேரிடுமாயின், அவனால் காக்கப்படும் உலகமும் கலக்கம் அடைய வேண்டியதாகும். வாசவதத்தையை இழந்து துன்பமுறும் தங்கள் மனமும் எவ்வளவு நாள் அந்தத் துன்பத்தோடு அரசாட்சிப் பொறுப்பையும் தாங்கிக் கொள்ள இயலும்? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். மேலும் எங்கள் நாட்டிற்கு வரும்போது நீங்கள் தனிமையாக வந்தீர்கள். கைம்மாறு செலுத்தி அமைத்துக் கொள்ள முடியாத அவ்வளவு பெரிய உதவியை எங்கள் நாட்டிற்கும் எங்கள் மன்னனுக்கும் செய்து காப்பாற்றினர்கள். தத்தையை இழந்து தனிமையான வாழ்வில் சோகமுற்றிருக்கும் தங்களை அந்தச் சோகத்திலிருந்து எங்கள் மன்னர் மீட்க விரும்புகின்றார். உங்களுடைய நட்பை எங்களோடு என்றென்றும் நிலைத்திருக்கச் செய்து கொள்வதுடன் உங்களைத் தம்முடைய நெருக்கமான உறவினராகவும் எம் அரசர் ஆக்கிக் கொள்ள விரும்புகிறார். இது எங்கள் வேந்தர் பிரானின் மனப்பூர்வமான விருப்பம். ‘இதைக் கூறித் தங்கள் கருத்தை அறிந்து கொண்டு வருவதற்காகவே என்னை அனுப்பினார்.” அமைச்சன் தான் வந்த கருத்தை இவ்வாறு உதயணனிடம் உரைத்தான்.

அமைச்சன் தான் கூறவேண்டியவற்றை முடிந்தவரை தெளிவாகத்தான் கூறியிருந்தான். உதயணனும் தன் கலக்கங்களுக்கு இடையேயும் அதனைத் தெளிவாகப் புரிந்துகொண்டான். ‘பதுமையைத் தனக்கு மணஞ் செய்து கொடுக்கத் தருசக வேந்தன் ஆவல் கொண்டிருக்கிறான்’ என்பதை உதயணன் அதன் மூலம் விளங்கிக் கொண்டான். எதிர் பார்த்ததுதான். உதயணனுடைய மறுமொழிக்காக அமைச்சன் காத்துக் கொண்டிருந்தான். உதயணன் சற்று நேரம் அவனுக்கு மறுமொழி கூறாமல் அமைதியாக இருந்தான். ‘அமைச்சன் கூறிய தருசகனின் விருப்பம் எதனால் ஏற்பட்ட விளைவு’ என்பதைச் சிந்தித்தபின்பே, அவன் இது பற்றி முடிவு செய்ய வேண்டியிருந்தது.

சாதகமோ, பாதகமோ எதையும் சிந்தனைக்குப் பின்னரே அங்கிகரிக்கும் இயல்புடையவன் உதயணன். இராஜ தந்திரங்களில் அது முதன்மையானதும் ஆகும். “பொதுவாழ்வின் சிந்தனை வேறு அரசியல் வாழ்வின் சிந்தனை வேறு. பொதுவாழ்வில் நல்லவற்றின் நன்மையும், தீயவற்றின் தீமையும் ஆகிய இவ்வளவே சிந்தனைக்குப் போதுமானவை. அரசியல் வாழ்வில் எங்கும் எதனுள்ளும் சூழ்ந்து ஆழ்ந்து சிந்திக்கும் நுட்பமான உளப்பண்பு வேண்டும். நல்லவற்றுள்ளே தீமையுண்டா, தீயவற்றுள்ளே நன்மை உண்டா என முரண்படச் சிந்திக்கும் இயல்பும்கூட அங்கே அவசியம் வேண்டும். எனவே, பதுமையைத் தான் மணந்து கொள்ள வேண்டும் என்ற தருசகனின் அந்த வேண்டுகோளைப் பற்றி உதயணன் தீர்மானமான ஒர் எண்ணங் கொள்ள இயலவில்லை. காமன் கோட்டத்தினுள் பதுமையைத் தான் சந்தித்ததும் அங்கு மணவறை மாடத்தில் அவளோடு பழகியதும் எப்படியாவது தருசகனுக்குத் தெரிந்து விட்டதோ? என்றும், ‘மணந்து கொள்ளவேண்டும், என்று எண்ணி வந்த கேகயராசனோ இறந்து போனான். இனிப் பதுமையை உதயணனுக்குத்தான் மணம் செய்து வைப்போமே என்று அலட்சியமாகக் கருதித் தருசகன் இப்படிச் செய்தானோ?’ என்றும் பலப்பல விதங்களாகத் தனது சிந்தனையை ஓட விட்டுக் கொண்டிருந்தான் உதயணன். இத்தனை சிந்தனைகளுக்கும் இடையில் அவனுக்கு ஒரு விதமான மகிழ்ச்சியும் இருந்தது. அது பதுமை தனக்குக் கிடைக்கப் போகிறாள் என்ற மகிழ்ச்சிதான்!

தனிமையிலே கண்டு பழகிக் காதல் கொண்டு தான் விரும்பிய பதுமையே தன்னை வந்து சேரப்போகிறாள் என்று எண்ணும்போது அது முன்செய்த பெருந்தவத்தின் விளைவோ என்று தோன்றியது உதயணனுக்கு. உள்ளுற அளவற்ற களிப்பு. ஆனால், அந்த மகிழ்ச்சியைப் புறத்தே தெரியாமல் மறைத்துக் கொண்டான் அவன். தருசகன் கூறி அனுப்பிய செய்தியிலே தனக்கு விருப்பம் இருந்தும், இல்லாததுபோலத் தன் எதிரில் இருக்கும் அமைச்சனிடம் நடிக்கலானான் உதயணன். சம்மதத்திற்குரிய செய்தியே ஆனாலும், எடுத்த எடுப்பில் அமைச்சனிடம் தன் இசைவைக் கூறிவிட உதயணனுக்கு விருப்பமில்லை. வருத்தந்தோய்த குரலில் அமைச்சனை நோக்கிப் பேசினான் அவன். “விருப்பத்தோடு காதலித்து மணந்துகொண்ட பிரச்சோதன மன்னனின் மகள் தத்தையை நெருப்புசூழ மாய்ந்து போகும்படி பறிகொடுத்தேன்! ஆருயிர் நண்பன் யூகியையும் இழந்தேன்! இப்படியெல்லாம் தாங்க முடியாத துன்பங்களை நான் அடைந்த பின்னும், உயிரைத் தாங்கிக் கொண்டு வாழ்கின்றேன். இப்படி நடைப்பிணமாக நான் வாழ்வதில் பொருளே இல்லை. என்னுடைய நெஞ்சுரம்தான் என்னை இன்னும் துணிந்து வாழச் செய்து கொண்டிருக்கிறது. தத்தைக்குப் பின்னால் வேறொருவரிடம் என் அன்பைச் செலுத்த முடியாதவனாக இருக்கிறேன் நான்! உங்கள் அரசரின் வேண்டுகோள்படி பதுமையை மணஞ்செய்து கொள்ள நான் துணிவேனானால் உலகம் என்னை இகழ்ந்து பழிக்காமல் விடாது. ‘தத்தையும் யூகியும் இறந்த பின்பு அவர்களுக்காகச் சிறிதளவும் சிறிது காலமும் மனம் நோகாமல் நான் மட்டும் இன்ப வாழ்வு வாழ விரும்புகிறேன்’ என்று உலகம் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டு பேசும். எனவே, உங்கள் மன்னர் கூறும் கருத்திற்கு இசைய முடியாத நிலையில் நான் இருக்கிறேன்” என்று இவ்வாறு போலித் துயரத்தை உட்கொண்டு நடிப்புக் குரலில் உதயணன் அமைச்சனுக்கு மறுமொழி தந்தான்.

தன்னைத் தேடித் தருசகனிடமிருந்து வந்திருக்கும் அமைச்சனின் மனக்கருத்தை ஆழம் பார்ப்பதற்காக உதயணன் நடித்த இந்த நடிப்பை அமைச்சன் உண்மை என்றே நம்பினான். எவ்வகையிலாயினும் உதயணனைச் சம்மதிக்கச் செய்துவிட வேண்டும் என்ற அழுத்தமான எண்ணத்துடன் உதயணனுக்கு ஆறுதல் கூறி இசைவு பெறும் முயற்சியில் அவன் இறங்கினான். பின்பு சிறிது நேரம் கழித்து, அவனது அந்த முயற்சிக்காகக் கட்டுப்பட்டு மறுக்க முடியாத நிலையில் வேண்டா வெறுப்பாகச் சம்மதிப்பவன் போல மனம் நெகிழ்ந்து இசைவு தெரிவித்தான் உதயணன். “அரசே! தாங்கள் எல்லா விதத்திலும் ஒப்புயர்வற்ற மறக்குடியிலே தோன்றிய பேரரசர். இவ்வாறு நெஞ்சம் கலங்குதல் தங்கள் போன்றோர்க்கு அழகன்று. நீங்கள் எம் அரசனின் இந்த வேண்டுகோளை எவ்வாறேனும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்” என்று மீண்டும் வேண்டினான் அமைச்சன். “பேரரசனாகிய தருசகராசனும், உங்களைப் போன்ற அறிவுத் துறையில் தலைசிறந்த அமைச்சரும், இப்படி என்னிடம் வேண்டும்போது, இனியும் நான் மறுப்பது நன்றாக இருக்காது. உங்கள் கருத்திற்கு இசைவு தராவிடில், வீணாக உங்களுக்கு மனக் கலக்கத்தைக் கொடுப்பதற்கு நான் காரணம் ஆவேன். அவ்வாறு உங்களைக் கலக்கப்படுத்தும் எண்ணம் எனக்குச் சிறிதளவும் இல்லை. ஆகையால் நான் இசைந்துதான் ஆகவேண்டும்போல் இருக்கிறது” என்று மனக்கருத்து இல்லாமல் ஏனோதானோ என்று சம்மதிப் பவனைப் போலத் தன் சம்மதத்தைக் கூறி நிறுத்தினான் உதயணன்.