உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றி முழக்கம்/5. வயந்தகன் வந்தான்

விக்கிமூலம் இலிருந்து

5. வயந்தகன் வந்தான்

யூகியோடு உஞ்சை நகர் வந்திருந்த வயந்தகன் மாறு வேடத்துடனே பிரச்சோதனனுடைய புதல்வர்களாகிய பாலகுமரன் முதலியோருக்கு உற்ற நண்பனாகி அரண்மனையில் வசித்து வந்தான். அங்ஙனம் வசித்து வருங் காலையில் ஒருநாள் பாலகுமரனுக்காக உதயணனிடம் வயந்தகன் சென்று வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைத்தானே வயந்தகனும் ஆவலாக எதிர்பார்த்திருந்தான். பாலகுமரன், உதயணனுடைய மாணவனல்லவா? அதனால் மலர் மாலைகள், சந்தனப்பேழைகள், தங்கநிறக் கலிங்கங்கள் (பட்டாடைகள்) முதலிய பொருள்களைக் கொண்ட காணிக்கையுடன் வயந்தகனை அவன் உதயணனிடம் அனுப்பி வைத்தான். வயந்தகன், பாலகுமரனது காணிக்கையோடு குஞ்சரச்சேரியிலுள்ள உதயணனின் மாளிகை சென்றடைந்தான். உதயணனைக் காணத் தன்னை இளவரசன் அனுப்பியுள்ளமையை அங்குள்ள காவலன் மூலமாக அவனுக்குக் கூறியனுப்பினான். பாலகுமரனின் காணிக்கையோடு காண வந்திருக்கும் மாறுவேடத்திலுள்ள வயந்தகனை உள்ளிருந்து வெளியே வந்த உதயணன் நன்றாகக் கூர்ந்து நோக்கினான். உதயணனுக்கு அந்த முகத்தை அடிக்கடி பார்த்துப் பழகியிருப்பது போலத் தோன்றியது. சிந்தித்த வண்ணம் அந்த முகத்தை ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்த உதயணன் பக்கத்தில் நிற்கும் காவலனை மறந்து, ‘இவனை எங்கேயோ பார்த்துப் பழகினாற்போல இருக்கிறதே’ என்று வாய் விட்டுக் கூறிவிட்டான். கூறிய தோடல்லாமல் வியப்புமிக்க பார்வையுடன் வயந்தகனை மெல்ல நெருங்கினான். காவலன் வேற்றவனாக இடையிலிருப்பதை உணர்ந்து கொண்ட வயந்தகன், தன் மாற்று வேடம் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காக, “இல்லை அரசே தாங்கள் என்னை அறிந்திருக்க நியாயமில்லை” என்று கூறி மழுப்பினான். உடனே உதயணன் அந்த ஆராய்ச்சியிலிருந்து மீண்டான். வயந்தகனுக்குப் போன உயிர் திரும்பிவந்தது. காவலன் இப்போது வெளியேறினான். காவலன் போனானோ இல்லையோ, வயந்தகன் ஒரே தாவாகத் தாவி, உதயணனைத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான். நண்பர்கள் நிகழ்ந்தவற்றை எல்லாம் விரிவாகப் பேசிக் கொண்டனர். யூகியின் திட்டங்களை எல்லாம் உதயணனுக்கு வயந்தகன் கூறினான். பாலகுமரனுக்கு நண்பனாகத்தான் அரண்மனையில் இருப்பதையும் உதயணனிடம் கூறினான். உடனே உதயணன் தன் மாணவனாகிய பாலகுமரனுக்கு ஓர் ஒலையை எழுதி, (மாறுவேடத்திலுள்ள வயந்தகனை) அவனுடைய நண்பனைத் தனக்கு உதவி செய்யும் பணியாளனாகத் தன் மாளிகையில் அமர்த்திக் கொண்டதாக அதில் குறிப்பிட்டு அனுப்பிவிட்டான். அதன் விளைவாக வயந்தகனும் உதயணனும் ஒன்று சேர்ந்தனர். வயந்தகன் உதயணனோடேயே இருந்தான்.

தத்தையின் நினைவால் உதயணன் வாட்ட முற்றிருந்த காட்சி இரங்கத்தக்கதாயிருந்தது. கள்ளுண்டவன் வெறியுற்றதுபோலத் தத்தையைக் கண்ட நாளையே நினைத்து ஏங்கினான் உதயணன். தீமுகத்தில் இட்ட மெழுகு போலக் கரைந்தது அவன் உடல்கட்டு. தாய்முகங் காணாது பிரிவுத் துயருழக்கும் கன்றைப்போல வாசவதத்தையின் பிரிவினால் அவன் வாடினான். உய்வதற்கு அரிய துன்பம் அவனைப் பிடித்து அலைத்து ஒரு நிலையின்றிச் செய்தது. இந்த நிலையில் முன்பு தன் உடற்கட்டைக் கண்டவர்கள் தன்னைக் காண நேரின் ஐயமுறவும் கூடும். ஆகவே இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்ற பயம் வேறு அவனை அலைத்தது. வயந்தகனின் உதவியை நாடினான் உதயணன்.

இத்தருணத்தில் வயந்தகன் வெளியே சென்று, அரண்மனை மதிலோரத்தில் வேற்றுருவில் இருந்த யூகியின் ஒற்றர்களைக் கண்டு நிகழ்ந்தவற்றை யெல்லாம் கூறி விட்டு மாளிகைக்குத் திரும்பினான். கோட்டைக் காவலர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மதிலோரத்தில் பதுங்கியிருந்த அந்த ஒற்றர்கள் செய்திகளை யறிந்துகொண்டு யூகி இருக்குமிடம் சென்றனர். திரும்பி வந்த வயந்தகனிடம் உதயணன் தன் நிலையை வெளிப்படையாகக் கூறி, அதற்கு ஒரு வழி சொல்லுமாறு வேண்டிக்கொண்டான். வயந்தகனும் உதயணன் நிலையைப் புரிந்துகொண்டான். இருவரும் கூடிச் சிந்தித்தனர். முடிவில் ஒரு வழி புலப்பட்டது. ‘உதயணனுடைய இந்த வாட்டம் வாசவதத்தை காரணமாக ஏற்பட்டதன்று; வேறோரு பெண் காரணமாக ஏற்பட்டது. என்று மற்றவர்கள் எண்ணும்படியாகச் செய்துவிட வேண்டும். வாசவதத்தை காரணமாக ஏற்பட்டது என்ற உண்மை வெளிப்பட்டால்தானே ஆபத்து? அதை வெளிப்படாதபடி செய்யவே இந்தச் சூழ்ச்சியைக் கண்டுபிடித்தனர் நண்பர்கள். இந்தச் சூழ்ச்சி நாடகத்தை வெற்றிகரமாக நடித்து, உதயணன் தப்புவதற்கு இப்போது ஒரு கணிகை மகள் தேவைப்பட்டாள். அத்தகைய ஒருத்தியை அறிந்து அழைத்து வர வயந்தகன் அனுப்பப்பட்டான். வயந்தகன் அதற்காக உஞ்சை நகருக்குள் சென்றான். உஞ்சை நகரத்துக் கணிகையருள் தலை சிறந்தவளும் தலைக்கோற் பட்டம் பெற்றவளுமாகிய நருமதை என்னும் நாடகக் கணிகையை இதற்கு ஏற்றவளாகக் கருதி முடிவு செய்தான் வயந்தகன். இந்த முடிவுடன் கணிகையர் சேரிக்குச் சென்ற அவன் நருமதையைச் சூழ்ச்சியிற் சிக்கவைப்பதற்காக ஒரு பொய்க் கதையைக் கட்டிவிட்டான். ‘அன்றொரு நாள் உதயணன் யானையின் மதத்தை அடக்கி விட்டு வீதிவழியாக வரும்போது, அவனை எதிர்ப்பட்டு அவன்மேல் அளவிலா வேட்கை கொண்டரற்றும் நருமதையின் வீடு யாது?’ என்று அந்தக் கற்பனைச் சரட்டுடன் அவள் வீட்டை அறிந்து கொள்ளும் வினாவையும் முடித்துவிட்டான். அந்த வினாவால் அங்குள்ளவர்களிடம் அவளுடைய வீட்டை அறிந்துகொண்டு நூற்றொரு பொன் மாசைகளை எடுத்துக்கொண்டு (மாசை-ஒருவகை நாணயம்) அவள் வீட்டினுள் நுழைந்தான். இவ்வாறு நுழைந்த வயந்தகனை நருமதையின் நற்றாய் வரவேற்று உபசரித்து, இருக்கையில் அமரச்செய்தாள். வயந்தகன் வந்த காரியத்தை அவளிடம் கூறினான். அவள் அதற்காக மிகவும் மகிழ்ந்தாள்.