வெற்றி முழக்கம்/58. நன்றியின் நினைவுச் சின்னம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

58. நன்றியின் நினைவுச் சின்னம்

கோசாம்பி நகரத்து வேளாளப் பெரு மக்கள் விளைநிலங்கள் மிக்க சிற்றுார்களும் பிறவசதிகளும் அடைந்து நலம் பெருக வழி செய்தனர், உதயணன் அமைச்சர். இந்நிலையில் கோசாம்பி நகருக்கு அப்பால் நாட்டின் எல்லைப் புறத்திலுள்ள சில சிற்றரசர்கள், உதயணனுக்கு எதிராக மாறுபட்டுக் கலவரம் செய்தமையால், உதயணன் தன் தம்பியர்களாகிய பிங்கல கடகர்களை ஏற்ற படைகளுடன் அங்கே அனுப்பி வைத்தான். மகத நாட்டிலிருந்து வந்த படைத் தலைவர்கள் விடைபெற்றுச் சென்றிருந்தாலும் மகதவீரர்களிற் பலர் இன்னும் கோசாம்பியிலேயே தங்கியிருந்தனர். அவர்களும் உதவிக்குச் சென்று பிங்கல கடகர்களை வெற்றி முழக்கத்தோடு திரும்பச் செய்தனர். பிங்கல கடகர்கள் எல்லைப் புறத்து அரசர்களை வென்றுவிட்டுத் திரும்பியதும் மகதநாட்டு வீரர்களுக்குத் தக்க சீர் சிறப்புக்களைச் செய்து, அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள். ஒரு நல்ல நாளில் பதுமாபதி, கோசாம்பி நகரத்து அரண்மனை அந்தப்புரத்திற்கு வந்து குடி புகுந்தாள். உதயணன் அந்தப்புரத்தைச் சேர்ந்த கட்டிடங்களைப் பதுமைக்காக மேலும் அழகுபடுத்திப் புதுப்பித்திருந்தான். மகத மன்னனின் தங்கை பதுமாபதி, இராசகிரிய நகரத்தின் பெரிய அரண்மனையினும் இந்தப் புதிய அரண்மனையின் அந்தப்புரம் எழில் ஒங்கி விளங்குதல் கண்டு இதை வியந்தாள். நாட்டிலே நல்லாட்சியும், பதுமையுடன் கூடிய இன்ப வாழ்வுமாகத் தன் நாள்களை அமைதியும் பயனும் நிறைந்தனவாகச் செலவிட்டு மகிழலானான் உதயணன்.

கோசாம்பியின் ஆட்சியை அடைந்து இவ்வாறு அமைதியாக வாழ்ந்து வருங்கால், ஒருநாள் அவனுக்குப் பத்திராபதியின் நினைவு உண்டாயிற்று. தன்னையும் வாசவதத்தையையும் சுமந்துகொண்டு உஞ்சை நகரின் நீராடல் துறையிலிருந்து இரவு என்றும் பகல் என்றும் பாராமல் ஓடி வந்து, அந்த யானை வருகின்ற வழியில் இறந்துபோன நிகழ்ச்சியும் கூடவே அவன் நினைவில் தோன்றி உள்ளத்தை உருக்கியது. பத்திராபதி தனக்குச் செய்திருக்கும் நன்றியின் அளவை உள்ளுற நினைத்துப் பார்த்தபோது, எப்படியாவது அந்த நன்றிக்கு அழியாத கைம்மாறு ஒன்று செய்தால் ஒழியத் தன் மனம் திருப்தியுறாது என்று அவனுக்குத் தோன்றியது. இந்த நினைவு ஏற்பட்டவுடனே, காட்டுப் பகுதிகளில் நன்கு பழக்கமுள்ள சிலரை அழைத்துப் பத்திராபதியைத் தான் புதைத்துவிட்டு வந்த இடமும் வழியும் முதலிய விவரங்களைத் தெளிவாகக் கூறி, அந்த இடத்தை அடையாளங்கண்டு அங்கே அகப்படும் அதன் எலும்பு முதலிய பொருள்களை எவ்வாறேனும் தேடிக் கொண்டுவருமாறு கூறினான். அவர்களும் இயன்ற வரையில் தேடிப் பார்த்துக் கொண்டுவர முயற்சி செய்வதாகக் கூறிவிட்டுச் சென்றனர்.

செலுத்த வேண்டியதொரு நன்றியைச் செலுத்தி அமைதியுறாமல், அதைத் தாங்கி மனத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது என்பது பண்புடையோருக்கு மிகப் பெரிய சுமையாகத் தோன்றும். அந்தச் சுமையை உள்ளன்போடு செய்து கழித்தால் ஒழிய, அவர்கள் மனப்பாரம் குறைந்துவிடுவது இல்லை. நன்றிக்கு ஏற்ற இடத்தில் நன்றியைச் செலுத்தத் தவறக்கூடாது’ என்பது சிறந்த பண்பாட்டுக்கு உரிய சின்னங்களில் ஒன்று அல்லவா? உதயணனும் இத்தகைய பண்பாடு நிறைந்தவன். ஆகையால்தான் என்றோ பல நாள்களுக்குமுன் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்திக் கொண்டதோடு அல்லாமல், பத்திராபதி என்னும் யானைக்கு என்றும் நிலைத்து நிற்கும் ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவன் கருதினான். ஒரு விலங்கின் உயிரையும் மனித மனத்தோடு நினைக்கிற பரந்த அன்பு அவனுக்கு இருந்தது.

பத்திராபதி வீழ்ந்த இடத்தைக் கண்டுபிடிப்பதற்காகத் தேடிச் சென்றவர்களும் அவன் கருத்துக்கு ஏற்றபடி வெற்றியையே கொணர்ந்தனர். எலும்பு முதலியன அகப்பட்டுவிட்டது என்றும் பத்திராபதி புதையுண்ட இடமும் தெரிந்து விட்டது என்றும் சென்று வந்தவர்கள் கூறவே, உதயணன் தன் மனக்கருத்தை அவர்களுக்கு விவரித்து உரைக்கலானான். அப்போது பத்திராபதி இறந்து வீழ்ந்த பகுதியிலுள்ள காட்டு வேடர்களும் குறும்பர்களும்கூட அங்கே அழைத்துக் கொண்டு வரப்பெற்றிருந்தனர். தான் கூறுவதை அவர்களும் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டுமென்பது உதயணனின் எண்ணம். “அன்று என் சபதப்படியே என்னையும் வாசவதத்தையும் காப்பாற்றி உஞ்சை நகரிலிருந்து தப்பி ஓடிவருவதற்கு உதவியாக இருந்தது பத்திராபதி என்ற இப் பெண்யானையே! இது எங்களுக்காகத் துன்பமுற்று இடை வழியில் தன் உயிரைத் தியாகம் செய்தது. இதற்குக் கிட்டும்படியான எந்த ஒரு நன்றியையும் நாம் இப்போது செய்ய முடியாதானாலும் நன்றி மறந்து விடுவதும் நல்லது அன்று. எனவே எந்த வகையிலாவது நம் நன்றிக் கடனை மறவாமல், பத்திராபதி இறந்துபோன இடத்தில் அதற்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்பது என் கருத்து. மாடத்தோடு கூடிய பெருங்கட்டடம் ஒன்றை அந்த இடத்தில் கட்டி, அதில் பத்திராபதியின் வடிவத்தை உருவாக்கிக் கோவில் கொள்ளுமாறு செய்ய வேண்டும். கோவிலில் பத்திராபதியின் சிலையுருவத்தைக் கடவுள் மங்கலம் செய்து, முறைப்படி நிலை நாட்டிய பின்னால் காலையும், மாலையும் அங்கே வழிபாடு நடத்தி வருவதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும்” என்று உதயணன் கூறியபோது அவனுடைய அந்த நன்றியுணர்வு மற்றவர் மனத்தை நெகிழச் செய்தது.

இதனுடன் பத்திராபதியின் உயிர் நற்கதி அடைவதற்கு வேறு ஒர் அறத்தையும் அங்கே செய்வது இன்றியமையாதது என்று உதயணன் கருதினான். “வழிச் செல்வோர் நீர் விடாய் தணித்துக் கொள்வதற்கு ஒரு தண்ணீர்ப் பந்தரும், பசித்துவந்த மக்கள் வயிறார உண்டு செல்வதற்காக ஒர் அட்டிற்சாலையும் அதனருகே அமைத்துவிட வேண்டும்” என்று கூறிக் கட்டிடம் அமைக்கும் கலைஞர்களையும் சிற்பிகளையும் அழைத்துவரச் செய்தான் உதயணன். கலைஞர்கள் வந்ததும் அவர்களிடமும் விவரத்தைகூறி முன்பு பத்திராபதி வீழ்ந்த இடமறிந்து வந்து கூறியவர்களோடு அவர்களைக் காட்டிற்கு அனுப்பினான். காட்டில் கலைஞர்களுக்கு எல்லாச் செளகரியங்களையும் ஏற்படுத்தித் தருமாறு அரண்மனை ஏவலாளர்கள் ஆணையிடப் பெற்றனர். பத்திராபதி வீழ்ந்த இடத்தை அடையாளங் கண்டு அதன் எலும்பு முதலிய அரும் பொருள்களைச் சேகரித்துக் கொடுத்தவர்களை இன்மொழிகளால் பாராட்டி, அவர்களுக்கு வேண்டிய பரிசில்களைக் கொடுத்து அனுப்பினான் உதயணன்.

காட்டு வேடர்களுக்கும் குறும்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. பத்திராபதியின் கோவில் திருப்பணி பற்றிய செய்தி, அங்கேயே சென்று மீண்டும் எல்லோர்க்கும் தெரியுமாறு பறை சாற்றப் பெற்றது. இரண்டோர் திங்களில் கோவிலும் சிலையும் வேலை முற்றி நிறைவேறின. கடவுள் மங்கலம் நிகழ்த்துவதற்கு முன்னால் நடுக்காட்டிலிருந்த அந்த இடத்திற்குச் சென்று வருவதற்கு வசதியாகப் பெரிய சாலை ஒன்று அமைக்கப்பட்டது. கோவிலுக்கு வழிபாடு நடத்துகின்றவர்கட்கும், பிறர்க்கும் அங்கேயே அருகில் இருக்கைகள் கட்டப்பெற்றன. மாதந் தவறாமல் திருவிழாக்கள் நடத்துவதற்குப் போதுமான உடைமைகள் கோவிலுக்கு உரிமை செய்து கொடுக்கப் பெற்றன. சிறந்த முறையில் கடவுள் மங்கலமும் ஒருநாள் செவ்வனே நிகழ்ந்து இனிதாக நிறைவேறியது. பத்திராபதி இனிமேல் தெய்வமாகியது.