வெற்றி முழக்கம்/79. மதனமஞ்சிகை எங்கே?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

79. மதனமஞ்சிகை எங்கே?

தனமஞ்சிகையே தன்னுடைய உயிர் என்ற எண்ணம் நரவாண தத்தனுக்கு மேலிடவே, கோமுகன் தகுந்த பரிசுப் பொருள்களுடன் மதனமஞ்சிகையின் தாயாகிய கலிங்கசேனையின் மாளிகையை நாடிச் சென்றான். கலிங்கசேனை கோமுகனை அன்போடும் பெருமதிப்போடும் வரவேற்றாள். கலிங்கசேனையிடம் பரிசுப் பொருள்களை அளித்து, மதன மஞ்சிகையின் பந்து தெருவிற் சென்று கொண்டிருந்த நரவாணன்மேல் விழுந்தது தொடங்கி, அவனுக்கு அவள் மேல் அளவற்ற காதல் ஏற்பட்டிருப்பதுவரை எல்லா விவரங்களையும் விளக்கமாகக் கூறினான் கோமுகன்.

“என் மகள் மதனமஞ்சிகையின்மேல் இந் நாட்டின் இளவரசராகிய நரவாண தத்தருக்குக் காதல் தோன்றியிருக்கிறது என்றால், அது எங்கள் வழிபடு தெய்வம் எங்களுக்கு நாங்கள் வேண்டாமலே தானாகக் கொடுத்த வரம் போன்றது ஆகும். என் மகள் மதனமஞ்சிகை முற்பிறவியில் புண்ணியத்தின் மிகுதி பெற்றவள் போலும். எனவேதான் மதன மஞ்சிகை நரவாண தத்தரை நாயகராக அடைகின்றாள்” என்று தன் மகிழ்வையும் இசைவையும் தெரிவித்தாள் கலிங்கசேனை. கோமுகனை அமரச் செய்துவிட்டுத் தன் உறவின் முறையைச் சேர்ந்தவர்களாகிய மற்ற கணிகையர்களையும் தனியாக ஒன்றுகூட்டி ‘நரவாணனுக்கு மதன மஞ்சிகையை அளிப்பது பற்றி அவர்கள் கருத்து யாது?’ என்பதையும் கலிங்கசேனை விசாரித்தாள்.

மதனமஞ்சிகையை நரவாணனுக்கு மணமுடித்துக் கொடுப்பதைப் பற்றி அவர்களில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லையானாலும், ‘நரவாணனின் தந்தையும் நாட்டின் பேரரசனுமாகிய உதயணனிடம் யாவற்றையும் தெரிவித்துக் கருத்து உடன்பாடு பெற்றுக் கொண்டாலொழிய இதை நாமாகச் செய்துவிடுவது நல்லதன்று’ என்ற புதிய தீர்மானத்தை அவர்கள் கலிங்க சேனைக்குக் கூறினார்கள். கலிங்கசேனைக்கும் அவர்கள் கூறிய படியே செய்வதுதான் சரியென்று தோன்றியது. அவள் உடனே அதை, கோமுகனிடம் வந்து கூறினாள். தான் கூறுவதைக் கேட்டுக் கோமுகன் சினமோ ஆத்திரமோ கொண்டு விடாதவாறு பணிந்த மென்மொழிகளால் இதை அவனிடத்திற் கூறினாள் அவள். எனவே கோமுகன் அவள் கூறுவதிலும் ஒரு விதமான உண்மையும் பொருத்தமும் அடங்கியிருத்தலை உணர்ந்து கொள்ள முடிந்தது. ‘தானும் நரவாணனும்கூட அதுவரை அரசர் உதயணனிடம் அதைக் கூறாமலிருந்தது தவற்றுக்குரியதே’ என்றும் எண்ணி வருந்தினான் கோமுகன். ஆகவே அரசரிடம் அனுமதி பெற்றுக்கொண்ட பின்பு மீண்டும் அங்கே வருவதாகக் கலிங்கசேனையிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான் அவன். புறப்பட்டபின் அங்கிருந்து நேரே அரண்மனைக்குச் சென்ற கோமுகன், உதயணனைச் சந்தித்துக் கூற வேண்டியவற்றைக் குறிப்பாகவும் அமைதியாகவும் கூறினான்.

உதயணன் எல்லாவற்றையும் கேட்டுப் புன்முறுவலோடு “இளமை நெஞ்சங்களுக்கு இத்தகைய காதலுணர்ச்சி இயற்கைதான்! நரவாணனுக்கு மதனமஞ்சிகையினிடம் இத்தகைய கவர்ச்சியும் உள்ளத் தொடர்பும் ஏற்பட்டிருப்பது மெய்யானால் நீ செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் பொருத்தமானவைகளே. நான் இவற்றை மறுக்கவில்லை” என்று கோமுகனுக்கு இணங்கி மறுமொழி கூறினான் உதயணன். உடனே, வாசவதத்தையின் அந்தப்புரம் சென்று, அவளிடமும் அன்று நிகழ்ந்தவற்றை விவரித்தான் அவளும் தன் மகன் நரவாணன், மதனமஞ்சிகையை மணந்து கொள்வதற்குத் தன்னுடைய முழு உடன்பாட்டையும் அளித்தாள். நரவாணன்-மதனமஞ்சிகை திருமணத்திற்கு உதயணன், வாசவதத்தை ஆகிய இரு முதுகுரவரின் சம்மதத்தையும் பெற்றுக்கொண்டு மீண்டான் கோமுகன், உதயணனும் நரவாணனுக்குத் தந்தை என்ற முறையில் மதனமஞ்சிகைக்கு மேலும் பல திருமணப் பரிசங்களை அனுப்பினான்.

விரைவில் ஒரு மங்கலத் திருநாளில் நரவாணன்-மதன மஞ்சிகை ஆகிய இருவர் மனோரதமும் நிறைவேறியது. இன்ப வாழ்க்கை என்ற சுவைமிக்க இலக்கியத்தில் ஈடுபட்டு மகிழலாயினர் அவர்கள். புதிய காதல் வாழ்வின் தொடக்கம் என்பதே, ஒரு புதிய இலக்கியத்தைக் கற்பது போலத்தானே! அந்த இலக்கியத்தை மதனம்ஞ்சிகையும் நரவாணனும் கற்கலாயினர். கோமுகனுடைய நட்பாலும் உதவிகளாலும் தங்களுக்குத் திருமணம் முடிந்தபின் மதனமஞ்சிகை, நரவாண தத்தன் வாழ்க்கை இன்பமாகவும் அமைதியாகவும் கழிந்து வந்த தென்று மேலே கூறப்பட்டது. பல நாள்கள் இவ்வாறே கழிந்துகொண்டிருந்தபோது, கோசாம்பி நகரத்து மக்கள் வழக்கமாகக் கொண்டாடும் பெரிய திருவிழா ஒன்றும் வந்து சேர்ந்தது. நகர மக்களும் அரண்மனையைச் சேர்ந்த மற்றவர்களும் இந்த விழாவைச் சிறந்த முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்து வரலாயினர். தேவருலகத்தைச் சேர்ந்த விஞ்சையர்களும்கூட மகிழ்ச்சியுடனே இந்த விழாவில் வந்து கலந்து கொள்வதாக இதைச் சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

உரிய மங்கல நாளில் முன்பே செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளுடனே இந்த விழாவைக் கோசாம்பி நகரத்தினர் தொடங்கி நடத்தினர். நகரின் எப்பகுதியிலும் விழா ஆரவாரமும் வியப்புக்குரிய இனிய காட்சிகளும் புதுமையும் மலிந்து தோன்றின. வித்தியாதரர் உலகில் நூற்றுப் பத்து அரசர்களைத் தன் ஆணையின் கீழே கொண்டு ஆளும் மன்னனாகிய மானசவேகன் என்னும் விஞ்சையன், கோசாம்பி நகரத்தில் நிகழும் இந்த விழாவைக் கண்டு களிக்க ஆவல் கொண்டு, கரந்த உருவுடனே தோற்றம் மாறி வந்திருந்தான். கோசாம்பி நகரத்தின் தோற்றத்திற்கே தனிப்பட்டதோர் அழகைச் செய்யும் மாடகூட விமானங்களையும், அழகுமிக்க பரிய வீதிகளையும் சோலைகளையும் பூங்காக்களையும், மகிழ்ச்சியோடு பார்த்தவாறே, அவ்வழகிய நகரத்தின் பகுதிகளில் மனம் போனபடி சஞ்சரித்துக் கொண்டிருந்தான் அந்த விஞ்சையன்.

அப்போது விழா நாள்களில் ஒருநாள், மதன மஞ்சிகையோடு ஒரு பெரிய சோலைக்குச் சென்றான் நரவாண தத்தன். விழாக் காட்சிகளைப் பலவாறு அலைந்து கண்ட பின்பு பொழுதை இனிய சூழ்நிலையில் இன்பமாகக் கழிக்கலாம் என்றே அவர்கள் இருவரும் அந்தச் சோலைக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்களைப் பிரிப்பதற்கு விதி, மானசவேகன் என்ற விஞ்சையன் உருவத்திலே இனிமேல் வலைவிரிக்கப் போகிறது’ என்பதை அவர்கள் கண்டார்களில்லை! சோலைக்குள் மஞ்சிகை அங்குள்ள செய்குன்று ஒன்றின் அருகே நின்று அதனுடைய வனப்பை வியந்து கொண்டிருந்தாள். ஏறக்குறைய அதே நேரத்தில் பிறர் கண்ணுக்குப் புலப்படாத கரந்த உருவத்தோடு மானசவேகனும் அந்தச் சோலைக்கு வந்து சேர்ந்தான். செய்குன்றின் அருகே நின்று கொண்டிருந்த மதனமஞ்சிகை, மானசவேகனுடைய கண்களுக்கு ஒரு தேவகன்னிகை போலத் தென்பட்டாள். அவளுடைய வடிவழகு அவனை மிகுந்த மயக்கமுறச் செய்தது. அவன் நெஞ்சில் மோகப் பித்தம் முறுகி வளர்ந்தது. தன் ஆசைத் தீயை அவனால் தணித்துக் கொள்ள முடியவேயில்லை.

‘இப்படிப்பட்ட அழகி தேவருலகிலும் இல்லையே! இவளை அடைந்தால் அல்லவா வாழ்க்கையின் இன்பநோக்கு நிறைவேறும்’ என்று நினைத்தான் மானசவேகன். ‘மதனமஞ்சிகையை எவ்வாறேனும் தன்னோடு அபகரித்துச் சென்றுவிட வேண்டும்’ என்ற எண்ணமும் அவன் மனத்தில் உறுதியுற்றது. இந்த எண்ணத்தோடு சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தான் மானசவேகன். மதனமஞ்சிகையும் நரவாண தத்தனும் அந்தச் சோலையில் சில விளையாடல்களைப் புரிந்தபின் ஓரிடத்தில் களைப்பு மிகுதியால் படுத்திருந்தனர். படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஆழ்ந்த உறக்கம் அவர்களை ஆட்கொண்டு விட்டது. தங்களை மறந்து தூக்கத்தில் இருந்தனர் இருவரும். இந்த உறக்கநிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய மானசவேகன், தன் மந்திர வலிமையினால் நரவாண தத்தனை இன்னும் ஆழ்ந்த உறக்கம் கொள்ளுமாறு செய்துவிட்டு, மதனமஞ்சிகை தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு விடாதபடி அவளை மெல்லத் தன் கைகளில் தூக்கிக்கொண்டு வான் நோக்கி எழுந்தான். மதனமஞ்சிகை மலர்ப் பந்துபோல அவன் கைகளில் இருந்தாள். ஏதும் அறியாதவனாய்க் கீழே உறங்கிக் கொண்டிருந்தான் நரவாணன். மானசவேகன் வானில் மேலே மேலே சென்றான். ‘விஞ்சையருலகம் வருந்தி அழைத்தாலும், வாராத ஓர் அழகின் மாமணியை நான் அங்கே எடுத்துக் கொண்டு செல்கின்றேன்’ என்ற நினைவினால் பூரித்திருந்தான் மதன மஞ்சிகையைத் தூக்கியவாறே வானிற் சென்று கொண்டிருந்த மானசவேகன். தன்னுடைய மனம் அப்போதிருந்த மகிழ்ச்சியினாலும் கிடைத்த உற்சாகத்தினாலும் மேலும் மேலும் விரைவாகச் சென்றான்.