வெற்றி முழக்கம்/9. பொருந்தா ஆசை
உதயணனிடம் மீண்டும் கேட்டாள் சாங்கியத் தாய்: “ஒழுக்கம் நிறைந்த நீ, ஆசைப்படத்தகாத சாதாரணக் கணிகையின் மேல் ஆசைப்பட்டாய் என்பது பொருத்தமில்லாமல் இருக்கிறது. இது உனக்குத் தகுமா?” உதயணன் உள்ளம் ஊசலாடியது. ‘உண்மையை இவளிடம் சொல்லி விடலாமா? கூடாதா?’
உதயணன் உள்ளம் ஒரு சுழற்சி நிலையை அடைந்தது. முன்பு தெரிந்த வளாயிருந்தாலும் இப்போது, இவளிருப்பது பகைவன் நிலம். பகைவனுடைய அரண்மனையில் செவிலித் தாயாகப் பணிபுரிகிறாள் இவள். இவளை நம்பி உண்மையை வெளியிட்டு விடுதல் அவ்வளவு நல்லதன்று என்று உள்ளத்தை அடக்கினான் உதயணன். அடக்கியும் பயனில்லை. இறுதி வெற்றி உள்ளத்துக்குத்தான் கிடைத்தது. சாங்கியத் தாயையும் கைவிட்டு விட்டால் இதற்கு உதவி செய்ய வேறு வழியே இல்லை என்ற எண்ணம், அவளிடம் அவனை உண்மைக் காரணத்தைக் கூற வைத்துவிட்டது. ‘நருமதை சம்பந்தம் ஏற்படக் காரணமென்ன? வாசவ தத்தையை உதயணன் எந்த அளவு காதலிக்கிறான்? அந்தக் காதல் நோய் மறைய ஒரு திரையே நருமதை சம்பந்தம்’ என்பதெல்லாம் உதயணன் கூற்றிலிருந்து செவிலிக்கு நன்றாக விளங்கி விட்டன. மனம் விட்டுப் பேசினான் மன்ன குமரன். உருக்கமாக யாவற்றையும் கேட்டாள், சாங்கியத் தாய். உதயணன் பேச்சில் அவள் வெறும் வார்த்தைகளை மட்டும் கேட்கவில்லை. அதில் அவனுடைய சிறந்த உள்ளத்தையும், தத்தையின்பால் அவன் கொண்டுள்ள தெய்வீகக் காதலையும் கண்டு உளம் மகிழ்ந்தாள். உதயணனின் காதலைத் தத்தையிடம் சென்று கூறினால் அவள் தாபம் தணியுமென்பதைச் சாங்கியத்தாய் அறிவாள்.
உதயணன் கூற்று முழுவதையும் கேட்டறிந்துகொண்ட சாங்கியத் தாய், தத்தையின் காதல் துயர் நிலையை அவனும் அறிந்துகொள்ள வேண்டுமென்று அவனுக்குக் கூறத் தொடங்கினாள். தன் காதலியும் தன்னைப் போலவே பிரிவுத் துயரால் வாடுகிறாள் என்பதை அறிவது, அன்புலகில் ஒரு திருப்தியாகுமல்லவா? அது தெரிந்த செவிலி, உதயணன் உள்ளத்திற்கு அந்தத் திருப்தியை அளிக்க இதைத் தக்க இடத்தில் தக்க நேரத்தில் கூறவேண்டியவள் ஆகிறாள். “வேற்றரசர் மணத் தூது விடுத்தார்களென்றறிந்து தன் தந்தையோடு முனிவு கொண்டிருக்கிறாள் நின் தத்தை! நீ மணந்தால் வாழ்வு, கூடாதேல் சாவு இந்த முடிவிற்கு வந்துவிட்டாள் அவள். ‘பிற அரசர் மணத் துது விட்டமையால் அவருள் சிறந்த பேரரசன் ஒருவனுக்கு நுந்தை நின்னை அளிப்பார்’ என்றேன். அதைக் கேட்ட வாசவதத்தை நடுங்கித் துயருற்றாள். காவலாட்டியர் நாவிலெழுந்த விளையாட்டுப் பேச்சுகளையும் அவ்வாறே வேம்பென வெறுத்தாள். ‘தன் மேல் ஐயுற்ற இராமன் இரங்கி வருந்தும் படியாக மண்மகளே இடந்தா என வேண்டி உள்ளே மறைந்த சீதைபோல யானும் செய்வேன்’ என்கிறாள். நீ பிரிய நேர்ந்தால் அவள் நெஞ்சு பொறுக்காது; அது நீறுபூத்துவிடும்” என்றிவ்வாறு தத்தையின் நிலையை உதயணனுக்குச் செவிலி விளக்கினாள்.
சாங்கியத் தாய் உதயணன் உள்ளத்துக்குத் திருப்தியை அளித்தாள். அதே பொருளைத் தத்தைக்காக அவனிடமிருந்தும் பெற்றுக் கொண்டாள். விடை பெற்றுச் சென்றாள். தனியே நின்ற உதயணனிடம் காஞ்சனமாலை வந்து, “இன்று யாழ் கற்கும் நேரம் கழிந்தது, நீங்கள் சென்று வரலாம்” என்று கூறிவிட்டுப் போனாள்.
உதயணன் அவளிடம் தத்தை அன்று செய்ய வேண்டிய யாழ்ப் பயிற்சி முறைகளை விவரித்து விட்டுச் சென்றான். இளவரசர்கள் யாவரும் தத்தம் கலைத் துறையிற் தேர்ந்தனராகையால் விரைவில் அரங்கேற்றம் நடைபெறும். அப்போது வாசவதத்தையின் யாழ் அரங்கேற்றமும் நடைபெறுமென்று அறிந்தே உதயணன் இவ்வாறு கூறினான். காஞ்சனமாலை கன்னிமாடம் நோக்கி நடந்தாள். உதயணன் தன் மாளிகைக்குத் திரும்பினான்.