உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 1/008-027

விக்கிமூலம் இலிருந்து
8. வாழ்வுக்கு ஒரு வழித் துணை

சில வருஷங்களுக்கு முன் நான் கும்பகோணத்துக்கு வடமேற்கே பதினான்கு மைல் தொலைவில் உள்ள திருப்பனந்தாளுக்குச் சென்றிருந்தேன். என்னுடன் இலக்கிய நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அவருக்குக் கோயில், குளம், மூர்த்தி, தலம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும் என்னுடன் வந்தால்தமிழ்நாட்டின் கலை அழகைக் காணக்கூடும் என்ற நம்பிக்கை.

இருவரும் அங்குள்ள தாடகேச்சுரம் என்ற கோயிலுக்குச் சென்றோம். அங்குள்ள சடையப்பர் சந்நிதிக்கே வந்தோம். சந்நிதியில் வணங்கி எழுந்ததும், இத்தலத்தைப் பற்றி இரண்டு கதை இருக்கிறது, தெரியுமா?’ என்றேன். 'என்ன? சொல்லுங்கள்,' என்றார்.

தாடகை என்று ஒரு பெண் (இராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) நல்ல சிவநேசச் செல்வி. அவள் இந்தத் தலத்தில் இறைவழிபாட்டுக்கு உரிய புஷ்பக் கைங்கர்யம் செய்து வருகிறாள். ஒரு நாள் கட்டிய மாலையோடு இறைவனை அணுகும்போது மேலாக்கு நழுவியிருக்கிறது. அதைச் சரி செய்ய மாலையையே கீழே வைக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறாள் அவள்.

அப்போது இறைவனே அவளது இக்கட்டான நிலையை உணர்ந்து, தம் தலையையே சாய்த்து மாலையை ஏற்றிருக்கிறார். அன்று சாய்த்தவர் தலையை நிமிர்க்கவில்லை. இதனால் ஏதாவது உத்பாதம் விளையுமோ என எண்ணி, அந்த நாட்டு அரசன் சாய்ந்த தலையை நிமிர்த்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். யானை சேனை யெல்லாம் கொண்டு கயிறு கட்டி இழுத்துப் பார்த்திருக்கிறான். இறைவன் அசையவில்லை. தாடகை என்ற பெண் மகளின் அன்புக்காகத் தலை சாய்த்த தலைவன், மற்றொரு ஆண்மகனின் அன்புக்காகக் காத்திருக்கிறான்.

அப்போது திருக்கடவூரிலே, கலையர் என்ற ஓர் அன்பர் குங்கிலிய தூபம் போட்டுவந்த காரணமாகக் குங்கிலியக் கலையர் என்ற பெயரோடு வாழ்கிறார். அவர் ஒரு நாள் திருப்பனந்தாளுக்கு வருகிறார். தலை சாய்த்து நிற்கும் இறைவனைக் காணுகிறார். பின்னர் கயிறு ஒன்றைத் தன் கழுத்தில் கட்டி, அதை இறைவனது லிங்கத் திருவுருவில் மாட்டி இழுக்கிறார்.

யானைக்கும் சேனைக்கும் அசைந்து கொடாத இறைவன், கலயரது அன்புக்குக் கட்டுப்பட்டு நிமிர்ந்து விடுகிறான். மாலை சாத்தும் தாடகையின் மானங்காப்பான் தாழ்ந்த சடையப்பன், கயிறு இட்டு இழுக்கும் கலையன் அன்பில் நிமிர்ந்திருக்கிறான், என்றேன்.

அவர் லேசாகச் சிரித்துவிட்டு, ‘என்ன சார்! கதை அளக்கிறீர்கள். பிரதிஷ்டை செய்த போதிருந்த திருக்கோலத்தோடு ஆடாது அசையாது இருக்கும் இந்த லிங்கத் திருவுரு சாய்ந்ததற்கு ஒரு கதை, நிமிர்ந்ததற்கு ஒரு கதை. எல்லாம் உங்கள் கற்பனையோ?” என்றார்.

'கற்பனையாகவே இருந்தாலும், இது என்னுடைய கற்பனை அல்ல. நம் முன்னோர்கள் கற்பித்த கற்பனையே. கற்பனையே ஆனாலும், மக்கள் அன்புக்கு இறைவன் எவ்வளவு கட்டுப்பட்டவன் என்பதை விளக்க எழுந்த கதை என்று விரித்துரைக்கவாவது நாம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?’ என்றேன்.

பின்னும் சொன்னேன்: 'உம்மைப் போன்றவர்கள், குனிந்ததையும் நிமிர்ந்ததையும் திருப்பனந்தாள் மூர்த்தியைக் கண்டு நம்ப மாட்டார்கள் என்று தெரிந்தே, இன்னொரு தலத்தில் குனிந்தவர் தலையை நிமிர்த்தாமலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறாரே!' என்று விளக்கினேன்.

அப்படித் தலை சாய்ந்த தலைவராம் மார்க்கசகாயர் இருக்கும் தலம்தான் விரிஞ்சிபுரம். வட ஆர்க்காடு மாவட்டத்திலே வேலூருக்கு மேற்கு எட்டு மைல் தொலைவில் உள்ள ஊர். அந்த ஸ்தலத்துக்கே இன்று செல்கிறோம் நாம்.

இங்கு இறைவன் முடி சாய்ந்ததற்கு ஒரு அழகான கதை. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரு போட்டி. தங்களில் யார் பெரியவர் என்று. இவர்கள் தம் சிறுமையை உணர்த்த விரும்பிய சிவபெருமான் 'பொங்கழல் உருவனாக' அண்ணாமலையில் நிற்கிறான். இந்த அண்ணாமலையான் திருவுருவின் அடியையோ முடியையோ யார் முதலில் கண்டறிந்து வந்து சொல்கிறார்களோ, அவர்களே பெரியவர் என்று தீர்மானிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொள்கிறார்கள்.

வராக உருவில் அதலபாதாளங்களையெல்லாம் குடைந்து சென்று, இறைவனது அடியைக் காணாமலேயே திரும்பி விடுகிறார், விஷ்ணு. அன்ன உருவில் வானுலகில் பறந்து முடி காணச் சென்ற பிரமனுக்கும் அதே நிலைதான் என்றாலும், பிரமன் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், தான் இறைவன் முடியைக் கண்டுவிட்டதாகவும் அதற்கு இறைவன் முடியில் உள்ளதாழம்பூவே சான்று என்றும் கூறுகிறார்.

பொய் சொல்லிய பிரமனைப் பூவுலகில் மனிதனாகப் பிறக்கும்படி சபிக்கிறார், இறைவன். அந்த விரிஞ்சனே இந்த விரிஞ்சிபுரத்தில் சம்பு சருமர் என்ற கோயில் அர்ச்சகருக்கும் நயனநந்தினி என்பவளுக்கும் மகனாய்ப் பிறக்கிறான். சிவசருமன் என்ற பெயரோடு வளர்கிறான்.

சிவசருமனுக்கு ஐந்து வயது நிறையுமுன்னே, சம்புசருமன் இறைவன் திருவடி சேர்கிறான். கோயில் பூஜை செய்யும் உரிமையைக் கைப்பற்றத் தாயாதிகள் விரைகின்றனர் சிவசருமன் சிறுவன் என்ற காரணத்தால். ஆனால் இறைவன் அளப்பரிய கருணை உடையவன் ஆயிற்றே. வழித்துணை நாதனான அவன் வழிகாட்டாமல் கை விடுவானா?

கார்த்திகை மாதம் கடைசிச் சனிக்கிழமை இரவு சிவசருமன் தாயின் கனவில் தோன்றி, மறுநாட்காலையில், சிவசருமனைக் கோயிலுக்கு அனுப்பி வைக்கச் சொல்கிறான், இறைவன். விருத்த வேதிய வடிவில் சிவபெருமானே வந்து, சிவசருமனுக்கு உபநயனம் எல்லாம் செய்து வைக்கிறான். பின்னர் கோயிலுள் நுழைந்து பூஜா கைங்கர்யங்களை எல்லாம் தவறுகள் செய்யாமலேயே நிறைவேற்றுகிறான். கடைசியில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய, மங்கள கலசத்தையே தன் கைகளில் எடுக்கிறான்.

நீண்டு உயர்ந்திருந்த லிங்கத்திருவுருவின் முடி பாலகனான சிவசருமனுக்கு எட்டவில்லை. ‘என்ன சோதனை? அன்றுதான் உன் திருமுடியைக் காணவில்லை. இன்றும் எனக்கு எட்டவில்லையே! என்று கதறுகிறான், பழைய விரிஞ்சனான புதிய சிவசருமன். அவ்வளவில் அன்பினால் கட்டுண்ட இறைவன், அவன் தனக்கு அபிஷேகம் செய்யத் தன் தலையையே வளைத்துக் கொடுக்கிறான். அவனது அபிஷேகம் ஏற்ற பின்னும் தலையை நிமிர்த்தாமலேயே நின்று விடுகிறான். ஏன், இன்றுமே அப்படித்தான் நின்று கொண்டிருக்கிறான்.

இந்த அற்புத நிகழ்ச்சியை நினைத்துத்தான் இன்றும் கார்த்திகைக் கடைசி ஞாயிறு உற்சவம் இக்கோயிலில் சிறப்பாக நடக்கிறது. பல அற்புதங்களும் நிகழ்கின்றன. இந்த வட்டாரத்தில் உள்ளவர்கள், முக்கியமாகப் பிள்ளைப்பேறு கிட்டாதவர்களும், பில்லி, சூன்யம், தீக்காற்று முதலியவைகளால் துயர் உறுகிறவர்களும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். அப்படிப் பிரார்த்தித்துக் கொள்கிற பெண்கள் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் கடைசிச் சனிக்கிழமை இரவு இக்கோயிலுக்கு வந்து, சிம்மக் குளத்தில் முழுகி எழுந்து, நனைந்த உடையோடேயே அங்குள்ள மண்டபங்களில் குப்புறப் படுத்துக் கொள்கிறார்கள். தூங்கியும் போய் விடுகிறார்கள்.

அப்போது விருத்த வேதியராக ஒருவர் வந்து, புஷ்பம், பழம், பாலாடை எல்லாம் கொடுப்பதாகக் கனவு கண்டால், அடுத்த ஆண்டுக்குள்ளேயே எண்ணிய எண்ணியாங்கு எய்துகின்றார்கள். தூக்கம் வராமலோ, கனவு காணாமலோ இருப்பவர்களுக்கு இறைவன் அருள் இல்லை என்று தெளிகிறார்கள். அதற்காக அடுத்த வருஷமும் வருகிறார்கள். நோன்பு இருக்கிறார்கள்.சிம்மக் குளத்தில் முழுகுகிறார்கள். விழுந்து வணங்கி அருள் பெறுகிறார்கள்.

சென்ற வருஷம் கார்த்திகைக் கடை ஞாயிறு அன்று நான் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அன்று இப்படிப் பிரார்த்தனை செய்த பெண்கள் இரண்டாயிரம் பேருக்குக் குறைவில்லை என்று கண்டேன்.

'என்ன? எண்ணிப் பார்த்திரோ?' என்றுகேளாதீர்கள். சிம்மக் குளத்தில் முழுகி எழுவதற்கு உரிய சீட்டு நபர் ஒன்றுக்கு எட்டணாக் கட்டணம் கட்டித்தான் பெற வேண்டும். இந்தச் சீட்டு விற்பனைஉரிமையைக் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். அந்த வருஷத்துக் குத்தகைப் பணம் ரூபாய் ஆயிரம். விசாரித்ததில் குத்தகைக்காரருக்கு நஷ்டமில்லையாம். இப்போது என் கணக்கும் சரிதானே. இன்னும் சந்தேகம் உள்ளவர்கள் அடுத்த கார்த்திகைக் கடை ஞாயிறு விழாவுக்கே சென்று பார்த்து விடலாமே.

இந்த விரிஞ்சிபுரத்திலே கோயில் கொண்டிருப்பவர் மார்க்க சகாயரும் மரகதவல்லியும். வழித்துணை நாதர் - பச்சைப் பசுங்கொடி என்ற நல்ல தமிழ்ப் பெயரைத்தான் மார்க்க சகாயர் மரகதவல்லி என்று நீட்டி முழக்கிச் சொல்கிறார்கள். இந்தத்லத்து இறைவன் குடகு நாட்டிலே இருந்து தொண்டை நாட்டுக்கு மிளகு விற்க வந்த சிவநேசன் என்னும் வியாபாரிக்கு வழித் துணையாக வந்து, வழிப்பறி செய்ய வந்த திருடர்களையெல்லாம் விரட்டி அடித்தான் என்பது புராண வரலாறு.

வழித் துணை என்ற பெயர் தான் எவ்வளவு அழகான பெயர். மக்கள்செல்லும் நெறியில் எல்லாம் வழித்துணையாக இறைவன் வருகிறான். செல்லும் வழியிலுள்ள காமம், குரோதம், லோபம் முதலிய திருடர்களை யெல்லாம் வெல்வதற்குத் துணை புரிகிறான் என்று கற்பித்து, இறைவனை வணங்குவதிலேதான் எத்தனை இன்பம். 'பயந்த தனி வழிக்குத்துணை முருகனது வடிவேலும் செங்கோடனது மயூரமுமே' என்று அருணகிரியார் தெரியாமலா பாடுகிறார்!

விரிஞ்சிபுரம் கோபுரம்

இந்த வழித்துணைநாதர் பாலாற்றின் தென்கரையில் உள்ள சிறிய ஊரில் இருக்கிறார். இந்தச் சிறிய ஊரில்தான் மார்க்க சகாயரின் பெரிய கோயில் இருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம், கிரி, காடு முதலிய அமைப்புகளோடும் நாளும் ஞாயிறு வழிபட நிற்கும் காரணத்தால் பாஸ்கரத் தலம் எனவும், பூகைலாயமெனவும் ஸ்தல புராணத்தில் கூறப்படுகிறது. சதுரங்க, பஞ்சாக்கர கோண அமைப்புடைய மாடவீதிகள், அஷ்ட திக்கு மண்டபங்கள் எல்லாம் நிறைந்து, கோயில் அழகாக இருக்கிறது.

கோயிலில் உள்ள கல்வெட்டுகளால் 1239ஆம் ஆண்டில் இரண்டாம் குலோத்துங்கன் பிரதிநிதியாய் இவ்வட்டாரத்தில் ஆண்ட ராஜராஜ சாம்புவராயரால் கோயில் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. பின்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தை உருவாக்கிய கிருஷ்ண தேவராயரால், ராஜகோபுரம் கட்டப்பட்டிருக்கிறது. 1523இல் இந்த நாயக்க மன்னர்கள் மரபில் வந்த சின்னப் பொம்மன் என்ற லிங்கப்ப நாயக்கரால், இக் கோயில் செப்பனிடப்பட்டிருக்கிறது.

இக் கோயிலின் மதில் அழகாக அமைந்திருக்கிறது. 'திருவாரூர்த் தேரழகு, திருவிரிஞ்சை மதில் அழகு என்பது பழமொழி. மதிலில் ஒரு வரிசை நல்ல சிற்ப வடிவங்கள் அமைந்துள்ளன. மலைநாட்டு வணிகராய்ச் சிவபெருமான் பொதிமாடுகளுடன் செல்லும் காட்சி, ராமர் வாலியை மறைந்து நின்று அம்பெய்து வீழ்த்தும் நிலை எல்லாம் சிற்பிகளால் உருவாக்கப் பெற்றிருக்கின்றன. ராஜ கோபுரத்தைக் கடந்து கோயிலுள் நுழைந்தால், முன்னால் பார்த்த சிம்மக் குளம் வந்து சேருவோம். சிம்ம உருவில் வாயில் அமைத்துக் கட்டப் பட்டிருப்பதால், சிம்மக் குளம், சிம்ம தீர்த்தம் எனப் பெயர் பெற்றிருக்கிறது. இதனை அடுத்துள்ள மண்டபத்தைக் கடந்துதான் உள் பிராகாரம் செல்ல வேணும். அதையும் கடந்துதான் அர்த்த மண்டபம், கர்ப்ப கிருஹம் எல்லாம். கோயில் பிராகாரத்திலே இரண்டு பிரசித்தி பெற்ற மண்டபங்கள், தென் பகுதியில் கல்யாண மண்டபம், வட பக்கத்தில் வசந்த மண்டபம்.

இரண்டு மண்டபங்களிலும் உள்ளதுண்களில் எண்ணிறந்த சிற்ப வடிவங்கள், தசாவதாரக் காட்சிகள், சிவபெருமானது பல மூர்த்தங்கள், பஞ்சமுக விநாயகர் முதலிய எண்ணற்ற வடிவங்களைக் கண்டு மகிழலாம், இந்த மண்டபங்களிலே. வேலூர் ஜலகண்டேசுவரர் கோயில் கல்யாணமண்டபம் கட்டிய சின்னப் பொம்ம நாயக்கன் - பெரிய பொம்ம நாயக்கன் என்பவர்களே இம் மண்டபங்களையும் கட்டியிருக்க வேண்டும்.

இக்கோயிலுக்கும் பக்தி சிரத்தை உள்ளவர்கள் கடை ஞாயிறு காலையிலேயே சென்று வணங்கலாம். இல்லை, கூட்டம் என்றாலே எனக்குப் பிடிக்காது என்று சொல்லுபவர்கள், என்றைக்காவது வசதியான ஒருநாளில்சென்று, கோயில், கோபுரம், சிம்மக்குளம், தலை தாழ்த்திய மார்க்க சகாயர். மரகதவல்லி முதலியோரைக் கண்டு வணங்கலாம். செப்புச் சிலை வடிவில் இருக்கும் மரகதவல்லி உண்மையாகவே அழகு கொஞ்சும்பச்சைப் பசுங்கொடி. ஞாயிறு காலை கோயிலுக்குச் சென்று

முளைத்தவரை முளை இடத்தில் முழுத்தவரை,
மகிழ்ந்தவரை முருகன் வேலால்
துளைத்தவரை, எனது பழவினையை
அலைத்தவரை, சுடர்க் குன்றாகக்
கிளைத்தவரை, ஒரு சிறுவன்
கிளையோடு கிளரச் சென்னி
வளைத்தவரை, வழித்துணையாய்
நடந்தவரை வழுத்து வோமே!

என்று பாடி மகிழலாம்.