உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 1/016-027

விக்கிமூலம் இலிருந்து

16. நின்ற ஊர்ப் பூசல் அன்பன்

செயற்கரிய செய்த திருத்தொண்டர் அறுபத்து மூவர் வரலாற்றைச் சேக்கிழார் பெரிய புராணமாகவே பாடியிருக்கிறார். அந்த அறுபத்து மூவரில் ஒருவர் பூசலார் நாயனார். அவர் வாழ்ந்த ஊர் திருநின்ற ஊர். காஞ்சீபுரத்துக்கு வடகிழக்கே இருபது மைல் தொலைவில் இருக்கிறது.

காஞ்சியில் இருந்து அரசு செய்தவர்களில் பேரும் புகழும் பெற்றவன் ராஜசிம்மன் என்னும் பல்லவமன்னன். அவனுக்கு ஓர் ஆசை. தன்னுடைய ஆட்சிக் காலத்திலேயே கைலாச நாதருக்கு ஒரு கோயில் கட்டி முடிக்க வேண்டும் என்று அளவற்ற செல்வம் படைத்த அவன் நினைக்கிறான். அவன் ராஜ்யத்தில் வாழும் மக்கள் எல்லாம் துணை புரிகிறார்கள். கோயில் உருவாவதற்குக் கேட்பானேன்?

இப்படிக் கைலாசநாதருக்கு ராஜசிம்மன் கோயில் கட்ட முனைந்திருப்பதை அறிகிறார், பூசலார். இவருக்கும் ஆசை பிறக்கிறது, தாமும் ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று. இவரோ பரம ஏழை. தொண்டு கிழம். அன்றாட வாழ்க்கையே மிகவும் சிரமம். இவர் எப்படிக் கோயில் கட்டுவது?

அவருக்கு ஒன்று தோன்றியது. ஏன் தம்முடைய உள்ளத்துக்குள்ளேயே ஒரு கோயில் கட்டக் கூடாதென்று, எண்ணிய எண்ணத்தை நிறைவேற்ற முயல்கிறார், இந்தப் பூசலாரும். ராஜசிம்மன் கோயில் கட்டக் கால்கோள் செய்த அன்றே, இவரும் தன் மனத்துள் கட்டும் கோயிலுக்குக் கால்கோள் நடத்துகிறார்.

மன்னன் ஏவலால் பொன்னும் பொருளும் வந்து குவிகின்றன. சிற்பிகள் வேலையைத் துவக்குகின்றனர். மதில் எழுகிறது. மகா மண்டபம் உருவாகிறது. அர்த்த மண்டபம் கட்டப்படுகிறது. கர்ப்ப கிருஹம் நிர்மாணம் ஆகிறது. அதன் பேரில் விமானம் எழுகிறது. இரண்டு வருஷ காலமாகக் கோயில் கட்டும் வேலை ஜரூராக நடக்கிறது, கச்சியிலே.

பூசலார்

பூசலாரும் சளைக்கவில்லை . இவரது கோயிலிலும் மதில், மண்டபம், கர்ப்பகிருஹம், விமானம் எல்லாம் உருவாகின்றன- யாதொரு செலவும் இல்லாமலேயே.

ராஜசிம்மன் கோயில் கட்டி முடிந்ததும் கைலாசநாதரைப் பிரதிஷ்டை செய்ய நாள் குறிக்கிறான். அதே நாள் அதே முகூர்த்தத்தையே பூசலார் தாம் கட்டிய கோயிலிலும் இறைவன் பிரதிஷ்டைக்குக் குறித்துக் கொள்கிறார்.

பிரதிஷ்டை நடக்க இருப்பதற்கு முந்திய நாள் இரவு, மன்னன் ஏற்பாடுகளையெல்லாம் கவனித்து விட்டுத் தன் அரண்மனை திரும்புகிறான். அரிய காரியம் ஒன்றைச் சிறப்பாகச் செய்து முடித்த நிறைவோடு அமளி சேர்கிறான்.

இரவு நடுச்சாமம். அரசனது கனவில் கைலாசநாதர் தோன்றுகிறார். மன்னனைப் பார்த்து, 'ராஜசிம்மா! நாளை உதயத்தில்தானே பிரதிஷ்டை? அந்தப் பிரதிஷ்டைக்கு நான் வரமுடியாது போல் இருக்கிறதே. இன்னொரு கோயிலில், ஆம்! நீ கட்டிய கோயிலை விடப் பெரியதொரு கோயிலில் அதே நேரத்தில் பிரதிஷ்டை என்று ஏற்பட்டிருக்கிறதே. நான் அங்கு செல்ல வேணுமே. ஆதலால், உன் கோயில் பிரதிஷ்டையை இன்னொரு நாளைக்கு மாற்றி வைத்துக் கொள்ளேன்' என்று சொல்கிறார்.

இதைக் கேட்டு ராஜசிம்மன் விலவிலத்துப் போகிறான். 'ஸ்வாமி! அப்படி என்னுடைய கோயிலை விடப்பெரிய தொக கோயிலை எங்கே யார் கட்டியிருக்கிறார்கள்?' என்று மிக்க ஆதங்கத்தோடு கேட்கிறான்.

கனவில் வந்த கைலாசநாதரும், 'அதுவா, பக்கத்தில்தான். திருநின்ற ஊரிலே பூசலார் என்ற அன்பன் கட்டியிருக்கிறான்!' என்று சொல்லி மறைந்து விடுகிறார்.

அவ்வளவுதான். மன்னன் எழுகிறான். மந்திரி பிரதானிகளை யெல்லாம் அழைக்கிறான். கேள்வி மேல் கேள்வி கேட்கிறான். எல்லோருமே பூசலார் கட்டிய கோயிலைப் பற்றி அறிய முடியவில்லை . ஆதலால் உடனே புறப்படுகிறான், ராஜசிம்மன் - திருநின்ற ஊரை நோக்கி. மந்திரி, மக்கள் எல்லோருமே அரசனைத் தொடர்ந்து செல்கிறார்கள்.

பலபல என்று விடிகிறபோது திருநின்ற ஊரில் வந்து சேருகிறார்கள். அங்கே கோயில், பிரதிஷ்டை. என்ற ஆர்ப்பாட்டம் ஒன்றையும் காணோம். ஊர் மக்களிடம் விசாரித்தால், 'பூசலாரா? அந்தக் கிழமா கோயில் கட்டியிருக்கிறது?' என்று ஏளனமாகவே பேசுகிறார்கள். திரும்பவும் கேட்டால், 'அவரா ,அவர் ஊருக்கு மேற்கே உள்ள குளக்கரையில் உட்கார்ந்திருப்பார்!' என்கிறார்கள்.

விரைந்து சென்றால், அங்கே ஒரு மரத்தடியில் பூசலார் பதும் ஆசனத்தில் யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். அவரை அணுகி, 'பெரியவரே! பெரியவரே! நீர் கட்டியிருக்கும் கோயில் எங்கே?' என்று கேட்கிறான், ராஜசிம்மன். அவரோ, 'என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். நான் கட்டிய கோயிலில் இப்போது தான் பிரதிஷ்டை நடந்து கொண்டிருக்கிறது!' என்கிறார்.

விவரம் கேட்டால், அவர் தம் உள்ளத்திலே கோயில் கட்டிய! கதையையும் அதில் பிரதிஷ்டை நடந்த விதத்தையும் விரிவாகவே கூறுகிறார்.

அரசன் பூசலார் அடியில் வீழ்ந்து, 'அன்பரே! இறைவன் நான் பொன்னாலும் மண்ணாலும் கட்டிய கலைக் கோயிலை விட, உம்முடைய மனக் கோயிலே பெரிது என்று உவந்து, உம் கோயில் பிரதிஷ்டைக்கே வந்திருக்கிறார்,' என்று கூறுகிறான். பூசலாரும் இறைவனது பேரன்பை வியக்கிறார். நினைந்து நினைந்து இறைவனைத் தொழுகிறார். இவரையே -

நீண்ட செஞ்சடையினார்க்கு
        நினைப்பினால் கோயிலாக்கிப்
பூண்ட அன்பு இடை அறாத
        பூசலார் பொற்றாள் போற்றி!

என்று சேக்கிழாரும் மகிழ்ந்து பாடுகிறார். 'மாசிலாப் பூசலார் மனத்தினால் முயன்ற கோயில்'கச்சியில் ராஜசிம்மன் அமைத்த கற்றளியிலும் சிறந்தது என்று இறைவன் கருதுகிறான் என்பது கதை.

சில வருஷங்களுக்கு முன்பு, மேல் நாட்டு அறிஞர் பலர் கூடிச் சமய உண்மைகளை எல்லாம் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர், ஒரு கூட்டத்தில். அந்தக் கூட்டத்துக்குச் சென்ற நானும் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன், வாயே திறவாமல்.

அங்கிருந்த மேல் நாட்டு அன்பர் ஒருவர் என்னையும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று கேட்டார். அந்தச் சமயத்தில் எனக்கு நினைவு வந்த இந்த ‘நின்றவூர்ப் பூசல் அன்பன் நினைவினால் அமைத்த கோயிலைப் பற்றிய கதையைக் கொஞ்சம் கண் மூக்கு எல்லாம் வைத்துச் சொன்னேன்.

இதைக் கேட்ட ஓர் அறிஞர் என்னைக் கேட்டார், 'நண்பரே! இவ்வளவும் உண்மையாய் நடந்ததா?' என்று.

நான் சொன்னேன், 'சேக்கிழார் பொய்யே கொல்ல அறியாதவர் ஆயிற்றே. அவர் நடந்ததை யெல்லாம் நடந்தபடியே சொல்லும் புலவர் அல்லவா? அதோடு காஞ்சி கைலாசநாதர் கோயில் வேறே இருக்கிறதே. மேலும் திண்ணனூர் என்று இன்று வழங்கும் திருநின்ற ஊரில் இருக்கும் கோயிலில் இருப்பவர் இருதய கமல ஈஸ்வரர் என்று பெயர் பெற்றவர் ஆயிற்றே. ஆதலால் இவ்வளவு நேரம் சொன்னது அத்தனையும் அப்படியே நடந்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன், நான்!' என்றேன்.

அப்போது அறிஞர் சொன்னார்: 'அன்பரே! இப்படி யெல்லாம் நடந்து, அதையே உங்கள் சேக்கிழார் சொல்லியிருந்தால், அவர் ஒரு சரித்திர ஆசிரியர் என்ற . பாராட்டுக்கு மட்டுமே உரியவர். இப்படி ஒன்றுமே நடவாதிருந்து, அத்தனைவிஷயத்தையும் கற்பனை பண்ணிக் கதை சொல்லியிருந்தால் இந்த அரிய கற்பனைக்கு மேலே ஒரு கற்பனை உலக இலக்கியத்திலே கிடையாதே. உள்ளத்தில் இறைவன் இருக்கிறான் என்பதை எல்லாச் சமயவாதிகளும் தான் சொல்கிறார்கள், அந்த உண்மையில் அழுத்தமான நம்பிக்கை இல்லாமலேயே. அப்படி இருக்க, இந்த உண்மையை விளக்க, இப்படி ஒரு கற்பனைக் கதையையே உங்கள் சேக்கிழார் உருவாக்கி இருந்தால், உலகமே அவருக்குத் தலை வணங்கி நிற்க வேண்டுமே!' என்றார்.

உண்மைதானே. 'இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என்று பாடிய மாணிக்கவாசகரையும், 'மனத்தகத்தான்' என்று பாடிய அப்பரையும் விஞ்சியிருக்கிறார், இந்தப் பூசலார் - மனத்திலேயே கோயில் ஒன்றைக் கட்டி.

இந்தப் பூசலார் நெடிது நாள் நினைத்துச் செய்த இந்த மனக் கோயிலின் ஞாபகார்த்தமாகப் பின் வந்தவர்கள் ஒரு கோயில்

பக்த வத்சலக் கோயில்

கட்டிபிருக்கிறார்கள். அந்தத் திரு நின்ற ஊரிலே. சென்னை - அரக்கோணம் இருப்புப்பாதையில், திண்ணனூர் என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன். அங்கு இறங்கித் தெற்கு நோக்கிச் சிறிது தூரம் நடந்தால் (ஆம், நடக்கத்தான் வேண்டும் - வண்டி எல்லாம் ஸ்டேஷனில் எளிதில் கிடைக்காது) பெரிய கோபுரத்தோடு கூடிய கோயில் ஒன்றில் இருக்கும் பக்தவத்சலர் வழி மறிப்பார்.

நமக்குத்தான் சைவ வைணவ பேதமே கிடையாதே. ஆதலால் வழிமறிக்கும் பக்தவத்சலரையே தரிசிக்கலாம், முதலில். இவரையே நின்றவூர் நித்திலம் என்று மங்கை மன்னன் பாடிப் பரவி மகிழ்ந்திருக்கிறான். இந்தப் பக்தவத்சலனையே பத்தராவிப் பெருமாள் என்று அழகாக அழைப்பார்கள்.

இத்துடன் அங்குக் கோயில் கொண்டிருக்கும் தாயாரை ஸ்ரீமத்ஸவித்ரீ நாயகி என்று வடமொழியில் நீட்டி முழக்கிக் கூறினால் நிரம்பவும் அருமையாக என்னைப் பெற்ற தாயார் என்றே அழைப்பார்கள், நல்ல தமிழில் அன்பர்கள்.

இந்தப் பக்தவத்சலன் கோயிலில் ஸ்ரீனிவாச விமானம் உண்டு. வருண புஷ்கரணி உண்டு. விருத்தக்ஷீர நதிக்கரையிலே உள்ள இந்தப் பெருமாள் வருணனுக்கே பிரத்தியக்ஷமானவர் என்பது புராண வரலாறு.

பெருமாளையும் தாயாரையும் வணங்கிவிட்டுப் பின்னும் கிழக்கே வந்தால், ஒரு சிறிய கோயிலைப் பார்ப்போம். கோயில் வாயிலில் கோபுரம் இருக்காது. உள் நுழைந்ததும், தகரக் கொட்டகை ஒன்றே நமக்குத் தென்படும். இந்தச் சின்னஞ்சிறிய கோயிலில் இருப்பவரே இருதயாலய ஈசுவரர். அவரது துணைவியே மரகதாம்பிகை. இந்த அம்பிகை பின்னமுற்றிருப்பதால் பூசை இல்லை. புதிய சிலா உருவம் தயாராக இருந்தும், இன்னும் பிரதிஷ்டை ஆகவில்லை.

கோயிலில் கர்ப்ப கிருஹத்துக் குள்ளேயே பூசலாரும் சிலை உருவில் இருக்கிறார். மனத்துள் வைத்துப் பூஜித்தவரைக் கர்ப்ப கிருஹத்துள் வைத்துப் பூஜிக்கிறார் இருதயாலயர். இந்தக் கோயிலில் செப்புச் சிலை வடிவிலும் பூசலார் இருக்கிறார். அவரையே பார்க்கிறீர்கள் படத்தில், நீங்களும் நானும் அவரது இருதயத்தில் இருந்த இருதயாலாபரைக் காணத் துடிப்போ மல்லவா? ஆதலால் அவர் லிங்கத் திருவுருவில் பூசலார் மார்பிலே நெஞ்சுக்கு வெளியே இருக்கிறார்.

அரிய கற்பனை கற்பனையாகவே இருந்திருக்கலாமே, இப்படிக் கேலிக் கூத்தாக ஓர் உருவம் அமைந்திருக்க வேண்டாமே என்று தோன்றும். இக்கோயிலில் நால்வர், சோமாஸ்கந்தர், பிக்ஷாடனர் எல்லாம் இருக்கிறார்கள். இவர்களை யெல்லாம் விஞ்சியவராய்ப் பத்தவத்சலராம் மகா விஷ்ணுவே மோஹினி உருவிலும் இருக்கிறார். ஒன்றரை அடி உயரத்திலே உருவானவர்தான், என்றாலும் நல்ல அழகான திரு உரு. மோஹினியின் முன்னழகைவிடப் பின்னழகு (ஆம், பின்னல் அழகுதான்) பிரமாதம்.

இக் கோயில் அன்று பூசலார் உள்ளத்தில் ஒளிந்திருந்தது போல், இன்றுமே நின்ற ஊரிலே ஓர் ஒதுக்குப்புறத்திலேயே இருக்கிறது. இருந்தாலும் இக்கோயிலைத் தேடிப்பிடித்துத் திருப்பணி செய்திருக்கிறார் ஓர் அம்மை. அவர்தான் தேவகோட்டை சீதை ஆச்சி என்பவர். கோவை மில் அதிபர் திரு. சோமசுந்தரம் செட்டியாரின் தாயார். அவர் பூசலார் பக்திக்குத் தலை வணங்குவது போல், இந்தச் சீதை ஆச்சியின் 'பக்தி சிரத்தைக்கு மே தலை வணங்கலாம்.

இந்தத் திருநின்றவூர், பூசலார் பத்தவத்சலர் என்ற இருவரால் மட்டுமே பிரசித்தி அடைந்தது என்றில்லை. இந்த ஊரிலே இருந்த ஒரு ரஸிகர், கொடை வள்ளல் காளத்திவாணர் என்பவராலும் இலக்கியப் பிரசித்தி பெற்றிருக்கிறது.

இந்த நின்றைக் காளத்திவாணர் புலவர்களை ஆதரிக்கும் வள்ளல். ஆதலால் வறுமையால் வாடும் புலவர்கள் எல்லாம் இவரைத் தேடி வருவதுண்டு. அப்படி வருகிறான் ஒரு கவிஞன்.

நீண்ட நாளாக வறுமையுடன் போராடிய அவன், நின்றையூர் நோக்கி வருகிற வழியில் இருட்டி விடுகிறது. நின்றையூருக்கு அயலிலே உள்ள ஒரு சிறு கிராமத்தின் சத்திரத்தில் தங்குகிறான். அங்குள்ளவர்களும், காளத்திவாணரின் கொடையையும் ரஸிகத் தன்மையையும் பாராட்டிப்பேசுவதையெல்லாம் கேட்கிறான். ஒரு நம்பிக்கை பிறக்கிறது உள்ளத்தில்.

மறுநாட் காலை காளத்திவாணரைக் கண்டுவிட்டால், தன் வறுமை தன்னை விட்டுத் தொலை தூரத்தில் ஓடிவிடுமே. ஐயோ, பாவம்! அது இன்றைக்கு ஒரு நாளாவது நம்மிடம் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பரிவுடன் நினைக்கிறான் தன்னைத் தொடர்ந்து வந்த வறுமையை. இந்தப் பரிவு ஒரு பாட்டாகவே வெளிவருகிறது அந்தச் சத்திரத்தில் அன்றிரவு.

நீளத் திரிந்து உழன்றாய்
நீங்கா நிழல்போல
நாளைக்கு இருப்பாயோ?
நல்குரவே! - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால்
நீ எங்கே? நான்எங்கே?
இன்றைக்கே சற்றே இரு!

என்பது பாட்டு.

நின்றைக்கே செல்லலாம், நாமும் - நினைப்பினால் கோயில் செய்த பூசலாரை நினைத்துக் கொண்டே. அங்குள்ள பக்தவத்சலரை, என்னைப் பெற்ற தாயாரை, இருதயாலயரை, மரகதவல்லியை வணங்கலாம். அதுவரையில் நாம் செய்த பழவினைகளும் நம்மோடு இருந்து விட்டுப் போகட்டுமே என்று அவைகளிடம் கொஞ்சம் அனுதாபமும் காட்டலாம்தானே.