உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 1/021-027

விக்கிமூலம் இலிருந்து

21. வான்மியூர்ப் பால்வண்ணர்

லக மகா கவிஞர் வரிசையிலே, ஆதி கவி என்னும் புகழுக்கு உரியவர் வான்மீகர். அவர் எழுதிய ராமகாதை ராமனது காலத்திலேயே பாடப்பட்டிருக்கிறது. வான்மீகரது கவித்வம் ஒப்புயர்வற்றது என்பர் வடமொழி தெரிந்தவர்கள்.

அந்த கவித்வத்தைவிட உயர்ந்தது அவர் சொல்கிற கதை. சக்கரவர்த்தித் திருமகனான ராமனது சரிதம், எவ்வளவோ நல்ல பல நீதிகளைத் தன்னுள் கொண்டது. அவைகளை மக்கள் கற்று அதன் மூலமாக நல்லொழுக்கமுடையவர்களாக வாழ உதவுவது. அதிலும் இன்றும் அதிகம் பேசப்படும் உலக சகோதரத்துவத்துக்கே அடிகோலுவதாகவும் இருக்கிறது.

இந்தக் கதை கவிச் சக்கரவர்த்தி கம்பனையும் பரம பக்தனான துளசிதாசனையும் கவர்ந்ததில் வியப்பில்லை. அதனால் தானே ஒரு ராமாயணமும் ஒரு ராம சரித மானஸும் இந்திய மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

ஸரயு நதிக்கரையில் பிறந்து கங்கை நதிக்கரையிலே வளர்ந்த ராமனைக் காவேரி தீரத்துக்கே கொண்டு வந்து, அவனை ஒரு நல்ல காவேரி தீர, ரஸிகனாக ஆக்கியிருக்கிறான், கம்பன். உண்மையிலே ராமன் வடநாட்டை விட்டுத் தென் தமிழ் நாட்டுக்கே குடி வந்து விட்டான் என்றே தோன்றும், இங்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள கோயில்களைக் கணக்கிட்டால்.

ராமன் வந்து விட்டால், ராமனை உருவாக்கிய வான்மீகருக்கு வட நாட்டில் என்ன வேலை? ராமனைத் தேடிக் கொண்டே, அவன் வழியைப் பற்றிக் கொண்டே, வான்மீகரும் இங்கு வந்து விடுகிறார். (பல கோயில்களில் இருக்கும் வான்மீக நாதரை - அதாவது புற்றிடம் கொண்ட பெருமானாக எழுந்தருளியிருக்கும் மூர்த்தங்களைக் குறிப்பிடவில்லை, நான்.) பல தலங்களில், ராமன் இல்லாத தலங்களில் கூடத் தங்கி விடுகிறார், வான்மீக முனிவர்.

தமிழ் நாட்டில் அப்படி அவர் தங்கிய இடங்களில் சிறந்தவை இரண்டு. ஒன்று, சிதம்பரத்துக்குப்பக்கத்தில் உள்ள திருக்கழிப்பாலை. இன்று அங்குக் கோயில் இல்லை.

தியாகராஜர் சந்நிதி

கொல்லிட நதி கொண்டு போய் விட்டதாம். ஆனால் மற்றொரு கோயில் நன்கு நிலை பெற்றிருக்கிறது. அதுதான் திருவான்மியூர். திருவான்மியூரில் உள்ள பால்வண்ண நாதர் கோயிலில் உள்ள மூர்த்தியை மருந்தீசர், அமிர்தேசுவரர் என்று அழைத்தாலும், ஊர் மட்டும் வான்மீகர் பேராலேயே. வான்மியூர் என்று நிலைத்திருக்கிறது.

வான்மீகர் இத்தலத்துக்கு வந்ததே ஒரு ரஸமான வரலாறு. வான்மீகருக்குத் தாம் ஆயிர வருஷ காலம் தவம் பண்ணினோம் என்றும், அது காரணமாகவே ராமாயணம் பாட முடிந்தது என்றும், ராமாயணம் பாடியதனாலேயே அமரத்துவம் பெற்று விட்டோம் என்றும் ஒரு கர்வம்.

இந்த எண்ணத்தோடு வாழும் முனிவரை என்றும் சிரஞ்சீவியாக இருக்கும் மார்க்கண்டேயர் வந்து காண்கிறார் ஒரு நாள், அவரோ அமிர்தகடேசுவரராம் சிவனை வணங்கி, என்றும் அமரனாக இருக்க வரம் பெற்றவர். வான்மீகரைப் பார்த்து, 'அமரத்துவம் பெற ஆயிரம் வருஷம் தவம் செய்ய வேண்டுமா? ஒரு பெரிய காவியமே பாட வேண்டுமா? சிவனை ஒரு நாள் ஒரு பொழுது நினைந்து வணங்கினால் அமரத்வம் சித்தியாகி விடாதா?' என்று வினவுகிறார்.

வான்மீகர் உள்ளத்திலும் சிவனை வணங்கி முத்தி பெறும் விருப்பம் எழுகிறது.

மார்க்கண்டேயரும், 'சரி, நீர் உலகத்தைச் சுற்றி வாரும். எந்த இடத்திலே 'நான் இங்கு இருக்கிறேன்' என்று அசரீரி எழுகிறதோ, அங்கே தங்கித் தவமியற்றும். சிவபெருமான் காட்சி கொடுப்பார்!' என்கிறார்.

அப்படியே செய்கிறார் வான்மீகி. கடற்கரையை அடுத்த ஒரு சிறிய ஊரிலே சிவபெருமான் வான்மீகருக்குத் தரிசனம் கொடுக்கிறார். வான்மீகர் விரும்பிய மூன்று வரங்களையுமே தருகிறார். வரங்கள் அந்த ஊர் அவர் பெயராலேயே நிலைக்க வேண்டும் என்பது ஒன்று. இறைவர் சடாமகுடத்திலே உள்ள கங்கையின் ஒரு பகுதி அங்கு தங்கவேண்டும் என்பது ஒன்று. மேலும் இறைவன் தன் தாண்டவக் கோலங்களை யெல்லாம் காட்டி அருள வேண்டும் என்பது ஒன்று.

அதனால் ஊர் வான்மியூர் என்று நிலைக்கிறது. இறைவன் மகுடத்தில் இருந்து இழிந்த கங்கை ஜன்ம நாசினி, பாப நாசினி, ஞானதயாநி, மோதயாநி என்று ஐந்து திருக்குளங்களில் பொங்கிப் பெருகி நிறைகிறது. வான்மீகருக்குத் தாண்டவ! தரிசனமும் கிடைக்கிறது. இத்தகைய புகழ் பெற்று விளங்கும் ஊரே திருவான்மியூர்.

திருவான்மியூர் சென்னை அடையாற்றுக்குக் கிழக்கே மூன்று மைல் தூரத்தில் கடற்கரையில் உள்ள சிறிய ஊர். ஊர் சென்று சேரும்வரை நல்ல ரோடு உண்டு. கோயில் கிழக்குப் பார்க்க இருக்கிறது. ராஜ கோபுரம் இல்லை, ஆனால் ராயகோபுரம் உண்டு. (ராயகோபுரம் என்றால் கட்டமுனைந்து முற்றிலும் கட்டப்படாமல் விட்ட கோபுரத்தின் அடித்தளம் என்று அறிவோம் நாம் - மதுரையிலும் ஸ்ரீரங்கத்திலும் இந்த ராய கோபுரங்கள் உண்டல்லவா! )

அந்த ராய கோபுரத்தின் அடித்தளம் வாயில் மேல் தளம் வரை வளர்ந்து அப்படியே நின்று கொண்டிருக்கிறது - கோயில் வாசலுக்குக் கொஞ்சம் எட்டியே. இந்தக் கோபுரத்துக்கு வட பக்கத்திலே மிகப் பெரிய தெப்பக்குளம் இருக்கிறது. அதுவே வான்மீகருக்காக எழுந்த பாபநாசினி. ஆனால் நமது பாபங்களைக் கழுவித் துடைக்கப் போதிய தண்ணீர் இருப்பதில்லை அதில் ஆதலால் பாபத்தைக் கழுவக் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்ளாமலேயே கோயிலுள் நுழையலாம்.

கோயிலுள் நுழைந்ததும் நாம் முதலில் காண்பது அம்மை திரிபுரசுந்தரியின் சந்நிதியே, இந்தத் திரிபுரசுந்தரி நல்ல கம்பீரமான தோற்றம் உடையவள். அவளை வலம் வந்து வணங்கிவிட்டுப் பிரதான கோயிலுள் செல்லலாம்.

மேற்கு நோக்கிப் போகும் நம்மை வரவேற்கக் கிழக்கு நோக்கியே இருக்கிறார் தியாகராஜர், நடன மண்டபத்தில், இந்தத் தியாகராஜரே பதினெண் நடனங்கள் ஆடிக் காட்டியவர், வான்மீகருக்கு, வைகாசி மாதத்தில் நடக்கும் உற்சவத்தில் இந்த நடனக் கோலங்களை யெல்லாம் காணலாம் என்கிறார்கள்.

இந்தத் தியாகராஜரை வணங்கிய பின், வடக்கே திரும்பி நடந்தால், மகாமண்டபம் வந்து சேருவோம். அங்கு மேற்கு நோக்கிய சந்நிதியில் இருக்கிறார் மருந்தீசர்.

வேதங்கள் எல்லாம் வழிபட்டதால் வேதபுரி ஈசுவரர் என்றும், காமதேனுவே பால் சொரிந்து அபிஷேகம் ஆட்டியதால் பால்வண்ண நாதர் என்றும் பெயர் பெற்றிருக்கிறார். லிங்கத் திருவுருவில் இருக்கும் இவர் கொஞ்சம் வடபால் சாய்த்திருக்கிறார். ஆம், வடநாட்டிலிருந்து தென்னாடு வந்து தங்கியவர் அல்லவா, வான்மீகர். ஆதலால் அவருக்காகக் கொஞ்சம் வடபால் தலைசாய்த்து, அழைத்திருக்கிறார் போலும்.

காமதேனு பால் சொரிந்து அபிஷேகம் செய்தபொழுது; அதன் குளம்பு வேறே பட்டிருக்கிறது. அதனால் ஒரு பக்கமாகச் சாய்ந்தாரோ என்னவோ? அந்தக் குளம்பு பட்ட வடு வேறே லிங்கத் திருவுருவில் இருக்கிறது.

பால் அபிஷேகம் பண்ணும்போது அந்த வடு தெரிகிறதாம். இந்த லிங்கத்திருவுரு தேவர்கள் பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிழ்தத்திலேயே ஆனவராம். அதனால்தான் அவரை அமுதீசர் என்றும் மருந்தீசர் என்றும் குறிக்கிறார்கள். தேவர் துயர் தீர்க்க எழுந்த மருந்துதானே அமுது. அமுதீசரை வணங்கினால் நமது துயரும் துடைக்கப்படும்தானே. இதைத் தெரிந்தே பாடுகிறார்கள் சம்பந்தரும், அப்பரும்.

பொன்போலும் சடைமேல் புனல்தாங்கிய புண்ணியனே!
மின்போலும் பரிநூல் விடைஏறிய வேதியனே!
தென்பால் வையமெலாம் திகழும் திருவான்மிதன்னில்
அன்பா! உன்னையல்லால் அடையாது எனது ஆதரவே!

என்று சம்பந்தர் பாடினார்.

படங்கொள் பாம்புஅரைப் பால்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதுஒரு கூறனைத்
தொடங்க நின்ற தொழுது எழுவார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே!

என்று அப்பர் பாடுகிறார். தன்னுயிர்க்கு உற்ற ஆதரவாக இறைவனைச் சம்பந்தர் நினைத்தால், நமது வினை மடங்க, அவனையே சரண் புகுகிறார், அப்பர். நாமும் இந்த மருந்தீசனாம் பால் வண்ணனைத் தொழுது திரும்பலாம்.

இக் கோயிலில் செப்புச் சிலை வடிவங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளில் எல்லாம் நல்ல சிறப்புடையது, சோழர் காலத்தே உருவாகிய தென்று கருதப்படுவது, ஆனந்தத் தாண்டவ நடராஜர்தான். அறுபத்து மூவர் எல்லோருமே இங்கில்லை. ஒரு சிலரே செப்புச்சிலை வடிவில் இங்கிருக்கிறார்கள். எல்லோருமே நல்ல இரும்புக் கிராதிகளுக்குள்ளே அடைபட்டிருக்கும் கைதிகளைப் போல, மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் அவர்களை யெல்லாம் கொஞ்சம் எட்டி இருந்து பார்த்தே திருப்தி அடைய வேண்டியதுதான்.

இக்கோயில் நல்ல சோழர் காலத்துக் கோயில். பின்னர் பல பகுதிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். என்றாலும் கோயிலின் பெரும் பகுதி சோழர் காலத்தில்தான் கட்டப் பெற்றிருக்கின்றது என்று தெரிகிறது. அம்மன் கோயில் பழைய நிலையிலேயே இருப்பதால், அங்குள்ள கல்வெட்டுகள் எல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன. அந்தக் கல்வெட்டுகளிலிருந்து இக் கோயிலுக்குச் சோழ மன்னர்கள் நிபந்தங்கள் பல ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

கங்கை கொண்ட சோழன் என்னும் ராஜேந்திர சோழனுக்கு இக் கோயிலிடத்து அதிகச் சிரத்தை என்று அறிகிறோம். அவன் இத்தலத்துக்குப் பல தடவை வந்திருக்கிறான். நிபந்தங்கள் பல ஏற்படுத்தி இருக்கிறான். திரிபுரசுந்தரிக்குத் திருவிளக்கு ஏற்றவும், பால்வண்ணனுக்கு மாலை அணிவிக்கவும். அவன் பொன் நெல் ஆடுகளை யெல்லாம் தானம் வழங்கி இருக்கிறான். அந்திம காலத்தில் அவன் தன் நோய் நீக்கம் விரும்பி, இங்கு வந்து, மருந்தீசரை வணங்கியிருக்கிறான்.

இவன் தன் கால் வழியினனான முதல் ராஜாதிராஜனும், இரண்டாம் ராஜேந்திரனும், ராஜேந்திரனைப் பின்பற்றிப் பல நிபந்தங்கள் ஏற்படுத்தி யிருப்பதாகக் கல் வெட்டுகள் கூறுகின்றன.

சோழ மன்னருக்குப் பின் விஜயநகர மன்னர்களும் இக் கோயிலை நன்கு பரிபாலித்திருக்கின்றனர். இரண்டாம் தேவராயன் காலத்தே அருணகிரி நாதர் இங்கு வந்து இத் தலத்தில் உள்ள முருகனைத் திருப்புகழ் பாடிப் பரவியிருக்கிறார். பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களின் மதி மந்திரியாக இருந்த அப்பைய தீக்ஷிதரும் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். இவரது சிலை கூடக்கோயிலில் இருக்கிறது.

இவ்வளவு சொல்கிறீரே - இந்த வான்மியூரில் வான்மீகருக்கு ஒரு கோயில் இல்லையா என்று நீங்கள் கேட்பீர்கள். இருக்கிறது. ஐயா! இருக்கிறது. ஆனால் அந்த வான்மீகர் ஆலயம் ஊருக்கு வடமேற்கே ஓர் ஒதுக்குப் புறத்தில் இருக்கிறது. ஆனால் அவரது உற்சவ விக்கிரஹம் மருந்தீசர் கோயிலிலேயே இருக்கிறது. வான்மீகியை வணங்கித் திரும்பும் போது, அவர் அளித்த காவியம் நினைவுக்கு வரும். அக் காவியத்தின் சாரத்தை யெல்லாம் வாரி வழங்கிய கவிச் சக்கரவர்த்தி கம்பனுமே ஞாபகத்துக்கு வருவான் அல்லவா?