உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 2/வெண்காடு மேவிய விகிர்தன்

விக்கிமூலம் இலிருந்து
13

வெண்காடு மேவிய விகிர்தன்

பேய் அடையா, பிரிவு எய்தும்
பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம் பெறுவர்,
ஐயுறவேண்டா ஒன்றும்,
வேய் அனதோள் உமைபங்கன்
வெண்காட்டு முக்குள நீர்
தோய் வினையார் அவர் தம்மைத்
தோயாவாம் தீவினையே

என்பது ஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகத்தில் ஒரு பாட்டு. பாட்டு நல்ல சுவையானது. மயங்கி நையும் உள்ளத்துக்குத் தெம்பு கொடுக்கும் பாட்டு. இந்தப் பாட்டைச் சுற்றி ஒரு வரலாறு. வரலாறு இது தான். பெண்ணாகடத்திலே நல்ல சைவ வேளாளராக வசிக்கிறார் அச்சுத களப்பாளர். நீண்டகாலமாக அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒரு குறை, புத்திரப் பேறு இல்லையே என்று. ஆதலால் திருத்துறையிலே வசித்த தனது குலகுருவாகிய அருணந்தி சிவாச்சாரியாரிடம் விண்ணப்பித்துத் தம் குறை நீங்க வேண்டி இருக்கிறார். அவருக்குத் திருமுறைகளிடத்து நிரம்ப நம்பிக்கை. ஆதலால் திருமுறை ஏட்டை எடுத்து அதற்குப் பூசனை செய்து அதில் கயிறு சாத்துகிறார். கயிறு சாத்துதல் என்றால், ஏட்டை அவிழ்த்து இறைவனை நினைத்து ஏட்டின் கயிற்றை ஏதாவது ஒரு பக்கம் வரும்படி இழுப்பது. அப்படி இழுத்த பக்கத்தில் இருக்கிற பாடலைப் படிப்பது. அதில் எதை வேண்டி நின்றோமோ, அதற்கு ஊன்றுகோலாக ஒரு கருத்து நிற்கும். அப்படிக் கயிறு சாத்திப் பார்த்ததில் அன்று வந்த பாட்டுத்தான் 'பேயடையா பிரிவு எய்தும்' என்ற ஞானசம்பந்தரது தேவாரம், அந்தத் திருப்பாட்டிலே 'பிள்ளையினோடு உள்ள நினைவு ஆயினவே வரம் பெறுவர், ஐயுற வேண்டா ஒன்றும்' என்றிருக்கவே அச்சுத களப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியோடு, திருவெண்காட்டுக்கு வருகிறார் தம் மனைவியுடன். அங்குள்ள சுவேதவன ஈசுவரரது கோயிலில் நுழைகிறார். அங்குள்ள சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம் எல்லாவற்றிலும் முழுகி எழுகிறார். வெண்காடரையும் பிரம்ம வித்யா நாயகியையும் வழிபடுகிறார்.

சில நாட்கள் சென்றதும் ஒருநாள் இரவில், இறைவன் அச்சுத களப்பாளரின் கனவில் தோன்றி, 'இப் பிறவியில் மகப்பேறு எய்தும் பாக்கியம் உனக்கில்லையே' என்கிறார். அச்சுதகளப்பாளரும் ‘பரவாயில்லை , புத்திரப் பேறு அரசர்களுக்குத்தான் மிகமிக அவசியம். என் போன்றாருக்கு அவ்வளவு முக்கியமில்லை தான். என்றாலும், பெரிய நாயகியின் திருமுலைப்பாலுண்டு அருள்ஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளையின் திருவாக்கு அடியேன் வினை காரணமாகப் பொய்த்துப் போகிறதே என்றுதான் வருந்துகிறேன்' என்கிறார். அவ்வளவுதான்; சுவேதவன ஈசுவரருக்கு ரோசம் வந்து விடுகிறது. அச்சுத களப்பாளரது பழவினைகளைக்களைகிறார். அவர் மனைவி கருவுற்று நல்லதொரு ஆண்மகனைப் பெற்றெடுக்கிறாள். மெய்கண்டார் என்னும் தீக்ஷாநாமம் பெற்று சைவ சித்தாந்தத்தின் தலையாய நூலான சிவஞான போதத்தையே இயற்றுகிறார்.

இத்தகைய பெருமகனைப் பெறுவதற்கு காரணமாகி இருந்தது ஞானசம்பந்தர் தேவாரம். அந்த தேவாரத்தில் சிறப்பாக இருப்பது முக்குளநீர்; அந்த முக்குளம் இருப்பது வெண்காடர் கோயில். அந்த கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

இந்த திருவெண்காடு சீகாழிக்குத் தென் கிழக்கே ஏழு எட்டு மைல் தூரத்தில் இருக்கிறது. சிகாழியிலிருந்தும், வைத்தீசுவரன் கோயிலில் இருந்தும் காரிலோ, பஸ்ஸிலோ இல்லை வண்டியிலோ, எளிதாகச் செல்லலாம். அவகாசம் இருந்தால், செல்லும் வழியிலிருந்து கொஞ்சம் விலகி விலகிச் சென்று, திருமங்கை ஆழ்வார் அவதரித்த திருஆலித் திரு நகரையும் திரு நாங்கூர்த் திருப்பதிகளையும் அங்குள்ள பெருமாள், ஆழ்வார்களையும் தரிசித்து விட்டுச்

வெண்காடு மேல வாசல்

செல்லலாம். இந்தத் திருவெண்காடு முத்திநகர், ஞானவனம், ஆதி சிதம்பரம், பேரரங்கம், தருமகோடி என்றும் இன்னும் எண்ணற்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தது அந்த நாளில், என்று தலவரலாறு கூறும். இங்குள்ள சுவேதவன ஈசுவரர் கோயிலுக்கு மேல வாயில் வழியாகவும் செல்லலாம். கீழ வாயில் வழியாகவும் செல்லலாம். இரண்டு வாயிலும் எப்போதும் திறந்தே இருக்கும். இரண்டு வாயிலிலும் இரண்டு கோபுரங்கள் உண்டு. தாம் வழக்கம்போல், கோயிலை வலம் வந்து கீழவாயில் வழியாகவே நுழைவோம்.

கோயில் பெரிய கோயில். கோயில் மதில் கிழமேல் 792 அடி நீளம், தென்வடல் 310 அடி என்றால் கொஞ்சம் கற்பனை பண்ணியும் பார்த்துக் கொள்ளலாம் தானே. கோயிலுள் நுழைந்து நீண்டு பரந்து திறந்தவெளியைக் கடந்ததும் வந்து சேருவது, சமீப காலத்தில் நாற்பதினாயிரம் ரூபாய் செலவில் உருவான கல்யாண மண்டபந்தான். எல்லாம் ஒரே சிமிண்ட் மயம். வர்ணங்களை வேறே வாரித் தெளித்திருக்கும். அதில் உள்ள வண்ண விஸ்தாரங்கள் எல்லாம் இருபதாம் நூற்றாண்டு ரகத்தைச் சேர்ந்தவை. இங்கே நீண்ட நேரம் இருந்து பார்க்கும் கலை அழகு இல்லை.

நாம் இங்கு வந்தது முக்குளநீரில் நம்மைத் தோய்த்துக்கொள்ளவே. அப்படி முக்குள நீரில் தோய் பவர்களை தோயாவாம் தீவினை என்பதுதானே நாம் அறிந்த உண்மை. ஆதலால் ‘விறுவிறு' என்று கோயிலின் வலப் பக்கத்தில் உள்ள சூரியகுளம், அக்கினி குளத்திலும் இடப் பக்கம் உள்ள சந்திர குளத்திலும் இறங்கி முங்கி முழுகலாம்.

ஆனால் நமக்கு முன்னமேயே அந்த ஊரில் உள்ளவர்கள் பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும், சோப்புத் தேய்த்துக் குளிப்பதற்கும் இந்தக் குளங்களையே உபயோகித்துக் கொண்டிருப்பர். அதோடு நிரம்பவும் தாராளமாகக் குடங்களை விளக்குவர், வேட்டி சேலைகளைத் துவைப்பர். ஆதலால் நம் போன்றோருக்குக் குளத்தில் குளிக்க உற்சாகம் இராது. ஆகவே, நீரை அள்ளித் தலைமேல் தெளித்தே நம் தீவினைகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் குளங்களில் பெரியது சந்திர குளம்தான். அக் குளத்தின் கீழ்க்கரையிலேயே மிகப் பெரிய வட விருக்ஷம் அதாவது ஆலமரம் இருக்கிறது. இம்மரத்தடியில் செய்யப்படும் ஜபதபம், தானம், பிதிர்க்கடன் எல்லாம் நல்ல பயன் தரும் என்கிறார்கள். இத்தலத்துக்கு, இந்த வட ஆலைத் தவிர, அம்மை ஆலயத்தின் பக்கம் இருக்கும் வில்வமும், அகோர மூர்த்தியின் பின்புறம் இருக்கும் கொன்றையும் தல விருட்சங்கள். முக்குளம் உடைத் தாயிருப்பது போல, மூன்று மரங்களையும் உடையதாக இருக்கிறது இக்கோயில்.

இனி இக்கோயிலினுள் நுழைந்து சுவேதவனப் பெருமாளை வணங்கி வெளியில் வரலாம். வெண்காடரை வணங்கிய பின் உட்பிரகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றலாம். அங்கேதான் மேலப் பிராகாரத்தில் இத்தலத்துக்கே சிறப்பான அகோர சிவம் தெற்கு நோக்கி நிற்கிறார். அவரை எதிர் நோக்கியே காளியம்மை சந்நிதி இருக்கிறது. இருவருமே நம் உள்ளத்தில் அச்சத்தை எழுப்புகிறவர்கள்தான். காளியையாவது மற்றக் கோயில்களில் கண்டு வணங்கியிருப்போம். அகோர சிவனை இங்கு மாத்திரம்தான் பார்க்கிறோம்.

கருநிறமும், மணிமாலை புனை அழகும்,
வளை எயிறும், கவினச்செய்ய
எரிசிகையும், நுதல்விழியும், நடைக்கோல
இணையடியும் இலக, எட்டுக்
கரநிலவ மணி, பலகை, வெண்டலை வாள்
கடிதுடி ஏர்சூலம் ஏற்று,
வெருவ மருத்துவனை அடர் அகோர சிவன்.

என்றே தலபுராணம் இவரை வர்ணிக்கிறது என்றால் அதிகம் சொல்வானேன். சிவபெருமானை நல்ல சாந்த சொரூபியாய் அனுக்கிரஹ மூர்த்தியாகத்தான் பல தலங்களிலும் பார்த்திருப்போம். சம்ஹார மூர்த்தியாக இருக்கும்போது கூட முகத்தில் ஆங்காரம் இருக்குமே தவிர, பயங்கரம் இருக்காது. சாது மிரண்டால் என்ன ஆகும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆம்! இங்கு சிவனாம் சாதுமிரண்டே அகோர சிவனாக இருக்கிறார். அந்த அகோர சிவன் உருவான வரலாறு இதுதான். மருத்துவன் என்று ஓர் அசுரன் இறைவனை நோக்கித் தவம் பண்ணி, வர பலமும் வலியுடைய சூலாயுதத்தையுமே பெற்றவன். அவன் வழக்கம்போல் தேவர்களுக்கு இடுக்கண் செய்கிறான், தேவர்களோ பயந்து தேவர் உலகை விட்டே ஓடி வந்து இத்தலத்தில் வேற்றுருவத்தில் நின்று தவஞ்செய்கிறார்கள். அங்கேயும் வந்து துன்புறுத்த முனைந்து விடுகிறான் மருத்துவன். சிவபெருமானோ முதலில் சாந்தமாக மருத்துவனைத் துரத்தி விரட்ட ரிஷபதேவரையே அனுப்புகிறார். ஆனால் அவனோ சிவபிரானிடம் பெற்ற 'சூலாயுதத்தினால் ரிஷபதேவரது கொம்புகளை முறித்து, காதுகளை அறுத்துத் துரத்தி விடுகிறான். அவரும் வந்து முறையிட பிறக்கிறது கோபம் சிவனுக்கு. அந்தக் கோபமே அகோர சிவனாக உரு எடுக்கிறது. மருத்துவன் பேரில் பாய்கிறது; அவனை சம்ஹரிக்கிறது. அப்படி உருவான அகோர சிவமே கோயிலுக்குள் மேலப் பிராகாரத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறார். நல்ல சிலை உருவில், ஏன், உற்சவ மூர்த்தமாகச் செப்புச் சிலை வடிவிலுங்கூட நிற்கிறார்.

இந்த அகோர சிவனுக்கு இடப்பக்கம் உள்ள தாமிர சபையிலே இருக்கிறார் நடராஜர் சிவகாமியுடன். சிதம்பரத்தில் உள்ளது போலவே ரகசியம், சபை எல்லாம் இங்கும் இருக்கிறது. இது ஆதி சிதம்பரம் அல்லவா? நடராஜ தரிசனம் செய்த பின் வெளிப் பிராகாரத்துக்கே வரலாம். மேல் வாயிலில் உள்ள கூடகோபுரம் மிகவும் அழகானது. நல்ல சுதை வேலைகள் நிரம்ப உடையது. இந்த வெளிப் பிராகாரத்தின் மேற்குக் கோடியிலே அம்மை பிரம்ம வித்தியா நாயகியின் கோயில். இந்த அம்மையை வணங்கி வெளிவரும்போது அம்மை சந்நிதானத்துக்கு வடபக்கம் உள்ள புதனையுமே வணங்கி விடலாம். இதன்பின் நூற்றுக் கால் மண்டபம் வரை நடந்து அங்குள்ள ஆறுமுகப்
அகோர சிவம்

பெருமானையும் தரிசிக்கலாம் , இவர்களைத் தவிர இங்கு கண்டு வணங்க வேண்டியவர்கள் தல விநாயகரான பெரியவாரணப் பிள்ளையார், துண்டி விநாயகர், காட்சி விநாயகர், காசி விசுவேசுரர் முதலியவர்கள் எத்தனையோ உண்டு. கோயிலைச் சுற்றும் போதே இவர்களையும் தரிசித்து வணங்கி விட்டு வெளியே வரலாம்.

இங்கு வெண்காடர் வரப் பிரசித்தி உடையவர் என்பதை முன்பே காண்போம். மார்க்கண்டனைப் போல் எட்டு வயதிலே மரணம் என்றிருந்த சுவேத கேதுவுக்காக, யமனுடைய வலிமை அழித்து சுவேத கேதுவுக்கு நித்யத்வம் வழங்கியவர் இவர் என்றும், பின்னார் வேதராசி என்ற பிராமணனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி நீங்க வகை செய்தவர் இவர் என்றும் தலவரலாறு கூறும். இவரைப் பூஜித்து அருள் பெற்றவர்களோ, இந்திரன், ஐராவதம் முதலியோர். இவற்றை எல்லாம் விரிக்கில் பெருகும். இக்கோயிலுக்கு ஞான சம்பந்தர் மாத்திரம்தான் வந்தார் என்றில்லை. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எல்லோருமே வந்திருக்கிறார்கள். வெண்காடரைத் துதித்துப் பாடியிருக்கிறார்கள்.

தூண்டு சுடர்மேனித் தூநீறு ஆடி, சூலம்கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம்
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து,
பொற் சடைகள் அவைதாழப்புரிவெண்நூலர்
நீண்டு கிடந்து இலங்கு திங்கள்சூடி
நெடுந்தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் வேண்டுநடை நடக்கும் வெள்ளேறு ஏறி
வெண்காடு மேவிய விகிர்தனாரே

என்பது அப்பர் தேவாரம். சுந்தரருக்கோ இந்த வெண்காடரைக் கண்டதும் சந்தேகத்தின் பேரில் சந்தேகம் எழுந்திருக்கிறது. ஆதலால் கேள்விமேல் கேள்வியாகப் போட்டுத் தள்ளி விட்டார். ‘விடங்கராகித் திரிவதென்னே? விடை ஏறித் திரிவதென்னே? விண்ணுளீராய் நிற்பதென்னே? விடம் மிடற்றில் வைத்ததென்ன?' என்பது அவர் கேட்ட கேள்விகளில் சில. இத்தனை கேள்விகளுக்கும் விடை பெறாமலா திரும்பியிருப்பார்? ‘விருந்தினனாகி வெண்காடு அதனில் குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையை' விளக்கினார் மணிவாசகர். பின்னர் பட்டினத்தார் என்று பெயர் பெற்ற வெண்காடர் இத்தலத்துக்கு வந்து சிவ பூஜை செய்யும் பேறுபெற்றார் என்பது வரலாறு.

இக்கோயிலின் சரித்திர ஏடுகளைப் புரட்டினால் இன்னும் என்ன என்ன தகவல்கள் எல்லாமோ கிடைக்கும். இக்கோயிலில் சுமார் எண்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ராஜராஜன், கங்கை கொண்ட சோழன், ராஜாதி ராஜன், முதற் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன் முதலிய சோழ மன்னர்கள், சுந்தர பாண்டியன், குலசேகர பாண்டியன், விக்கிரம பாண்டியன் முதலிய பாண்டிய கல்வெட்டுக்களில் ஒரு கல்வெட்டில் 'வடகரை நாங்கூர் நாட்டு, நாங்கூர் ஸ்ரீ திருவெண்காடு உடைய தேவர் ஆலயம்' என்று இக்கோயில் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடு ராஜாதிராஜ வள நாடென்று பெயர் பெற்றிருக்கிறது. சில கல்வெட்டுக்கள் ஆடவல்லார், பிச்சதேவர், இடபவாகன தேவர் உருவங்களைப் பிரதிஷ்டை செய்ததை அறிவிக்கின்றன. சில கல்வெட்டுகளிலிருந்து வளத்து வாழவிட்டான் சந்தி, குலசேகரர், தொண்டைமான் சந்தி முதலிய கட்டளைகளின் பெயர்கள் புலப்படுகின்றன. ஆடரங்கம், ஆரியக் கூத்து நடந்ததை யெல்லாம் இக்கல்வெட்டுக்கள் கூறும். இன்னும் எண்ணிறந்த தகவல்கள் சரித்திர ஆராய்ச்சியாளர்க்குக் கிடைக்கும்.

இத்தலத்துக்குச் சென்று முக்குள நீர் தோய்ந்தால் தோயாது தீவினைகள் என்பர் சம்பந்தர், ஆனால் அப்பரோ 'வெண்காடே, வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டலாமே' என்றே கூறியிருக்கிறார். நாம் அப்பரோடு சேர்ந்து 'வெண்காடா!' என்று கூவி அழைத்து நம் வல்வினைகளை நீக்கி வீடு திரும்பலாம்.