வைகையும் வால்காவும்/அறிமுகம்

விக்கிமூலம் இலிருந்து

அறிமுகம்


“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று வள்ளுவரைப் போற்றிப் புகழ்கின்றான் புதுயுகத்து மாகவிஞன் பாரதி.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்து, தனது காலச் சமுதாயக் கோட்பாடுகளையும், வாழ்க்கை நெறிகளையும், என்றைக்கும் பொதுவான அறமுறைகளையும் வகுத்து அவர் அருளிய நூல் நிலைபேறுடையதாய், தமிழிலக்கியக் கருவூலத்தின் மாமணியாய்த் திகழ்கின்றது.

மனித சமுதாயத்தின் பன்னெடுங்காலமாக அறங்கள், சட்டங்கள், பண்பாடுகள் எனப் போற்றப்பட்ட பல நிதிகளை, கட்டுப்பாடுகளை, மிகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களைக் கால காலமாக வருத்தி, ஊமைகளாக்கி அவர்களது முதுகில் மிகச் சிலர் ஏறிச் சவாரி செய்வதற்குச் சாதகமாக இருந்த பல கோட்பாடுகளை, விதிகளை அக்டோபர் புரட்சியின் மூலம் 'சடசட'வென நொறுக்கி எறிந்துவிட்டு மனித குல வரலாற்றிலேயே முதன் முறையாகப் பாட்டாளி மக்களின் கையில் செங்கோலை ஈந்து புத்தறம் வகுத்தவர் லெனின், இவர் வள்ளுவர் காலத்துக்கு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு பிற்பட்டவர்.

எனவே வள்ளுவரிலிருந்து புறப்பட்டு இலெனினுக்கு வந்து சேர சமுதாய வரலாற்றில் சுமார் இரண்டாயிரமாண்டுக் காலமாகிறது.

வள்ளுவர் அற நூல் வகுத்த ஆன்றோர், இலெனின் புதியதோர் உலகத்தையே போராடிப் படைத்த புரட்சித் தலைவன். சமுதாயப் புரட்சித் தத்துவத்தை விளக்கிப் பல நூல்களை இயற்றிய ஆசான்.

எனவே, இவ்விருவரையும் ஒப்புக் காண்பது எளிதான பணியன்று. இப்பணிக்கு இருவரது நூல்கள், கொள்கைகள் ஆகியவற்றில் தெளிவும், புலமையும் வரலாற்று ஞானமும் கட்டாயம் தேவை.

ஏனெனில் இது வள்ளுவர் சிறப்பைக் கூறப் புகுந்த நூல் அல்ல. அவர் நூலின் அடிப்படையாய் இலெனின் பெருமையை உணர்த்தும் நூலென்பதே பொருத்தம் என்பது என் கருத்து.

என் அருமை நண்பர் 'தமிழ்ப்பா நிலவு' கோவேந்தன் நூறு குறட்பாக்களைப் பெய்து, முதலிரண்டடியாக்கி, அவ்வடிகளின் பொருளியைபுக்கு ஏற்றவாறு இலெனினது சாதனைகள் கொள்கைகளைப் பின்னீரடிகளில் அடியில் எழுதி வெண்பா வடிவில் தந்துள்ளார்.

இவற்றில் வள்ளுவர் நூலிலும் இலெனினது வரலாற்றுச் சாதனைகளிலும் கோட்பாடுகளிலும் நூலாசிரியருக்குள்ள சிறந்த புலமை தெளிவாகப் புலனாகின்றது.

“பிறர்க்கின்னா” என்ற குறளடிகளுடன், “ஏழையர் இன்னலில் இன்புற்றார் வெங்கொடியர் பீழையுறப் பேர்த் தான் லெனின்” என்று லெனினைப்பற்றி இசைவுற எழுதிய குறளும், “எண்ணித் துணிக கருமம்" “காலம் கருதி இருப்பர்” “இவறலும் மாண்பிறந்த” “ஓர்ந்து கண்ணோடாது” “பெருமைக்கும் ஏனைச்” “ஊழையும் உட்பக்கம்” “இன்பம் விழையான்” “எண்ணிய எண்ணியாங்கு” “பிணி இன்மை” முதலிய குறள்களைக் கொடுத்து பின்னிரு அடிகளில் இலெனினைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பவைகளும் சமயமறிந்து பாராட்டத் தக்கவை.

சங்க நூல்கள் இலக்கணங்கள் முதலாக இன்றைய தமிழிலக்கியம் வரையில் ஆழ்ந்த புலமையும் உலகின் இன்றைய புரட்சிப் போக்குகளிலும் அவற்றைப் பிரதிபலிக்கும் நவீன இலக்கியங்களிலும் பெரும் ஈடுபாடும் தெளிவும் கொண்ட த.கோவேந்தன் இன்னும் பல புதிய பணிகளில் ஈடுபட்டுத் தமிழுக்கும், நாட்டு மக்களுக்கும் பெருந் தொண்டாற்றுவார் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

அவர் முயற்சிகள் வெற்றி பெறுக என வாழ்த்துகிறேன்.

சென்னை,

கே. சி. எஸ். அருணாசலம்

26-4-1972.