வைணவமும் தமிழும்/அணிந்துரை

விக்கிமூலம் இலிருந்து
(வைணமும் தமிழும்/அணிந்துரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அணிந்துரை
டாக்டர் எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன்

இணைப்பேராசிரியர், வைணவத் துறை,

சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 600 005

வைணவம் என்பது மிகமிகத் தொன்மையான மதம். வடமொழியிலமைந்த வேதங்களிலும் மிகமிகத் தொன்மையான தமிழ்நூலான தொல்காப்பியம் முதலான நூல்களிலும் வைணவம் தொடர்பான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

வைணவத்தைப் பற்றியும் அதன் தத்துவக் கொள்கை களைப் பற்றியும் பண்டைக் காலத்திலிருந்தே ஆயிரக் கணக்கான நூல்கள் எழுதப் பெற்றுள்ளன. வைணவ ஆசார்யர்கள் அருளியுள்ள நூல்களை அடிப்படையாகக் கொண்டோ, அல்லது அந்நூல்களுக்கு விளக்கங்களாகவோ பல்லாயிரக்கணக்கான நூல்கள் தோன்றியுள்ளன. ஆயினும் வைணவம்பற்றிய செய்திகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் படிப்பதற்கு ஏற்ப முழுநூல் ஒன்று இதுவரை இல்லாமலே இருந்தது. அக்குறையை அருங்கலைக்கோன், பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் “வைணவமும் தமிழும்” என்ற இந்நூல் மூலம் தீர்த்துவிட்டார் என்றே கூறலாம்.

அறிவாலும் அகவையாலும் முதிர்ந்தவர். ஏறக்குறைய நூறு நூல்களுக்குமேல் எழுதியவர் என்பது போன்ற பல பெருமைகளைப் பெற்ற ரெட்டியாரவர்கள் ஏற்கெனவே தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் “வைணவச் செல்வம்” என்ற இரு நூல் தொகுதிகளை வெளியிட்டிருந்தாலும் தற்போது வெளிவரும் “வைணமும் தமிழும்” என்ற இந்நூல் மிக எளிய நடையில் வைணவத்தின் கூறுகள் அனைத்தையும் விளக்கும் வகையில் பதினாறு இயல்களாக அமைந்துள்ளது.

“வைணவமும் தமிழும்” என்ற தலைப்பில் இந்நூலில் அமைந்துள்ள முதல் இயலில் தொல்காப்பியம் முதல் பற்பல பண்டைத் தமிழ் இலக்கியங்களில் வைணவம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் ஒருங்கே எடுத்துக் காட்டப் பெறுகின்றன. திருக்குறள் வைணவத்தையே பகருகின்றது என்று ஆசிரியர் அகச்சான்றுகளுடன் நிலை நாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடவுள் வாழ்த்து அதிகாரத்திலுள்ள “ஆதிபகவன்” “இறைவன்” முதலிய சொற்கள் நாராயணனையே குறிக்கும் என்று ஆசிரியர் விளக்கியுள்ள விதம் மிகவும் நயமாகவும் பாராட்டத்தக்க வகையிலும் அமைந்துள்ளது.

‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ என்ற தலைப்புள்ள இரண்டாம் இயலில் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துள் அமைந்துள்ள பிரபந்தங்கள் குறித்த விவரங்கள் தரப் பட்டுள்ளன. ஆனால் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துள் அமைந்துள்ள முதல் பிரபந்தமான திருப்பல்லாண்டைத் தனி பிரபந்தமாகக் கொள்ளாமல் பெரியாழ்வார் திருமொழியின் ஒரு பகுதியாகவே கணக்கிட்டிருப்பதை ஏற்க முடியவில்லை. இது குறித்து ஶ்ரீ உ.வே. மஹாவித்வான் பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமிகள் ஏற்கெனவே பல கட்டுரைகளை எழுதித் தெளிவு பிறப்பித்திருக்கிறார்கள். பெரியாழ்வார் திருமொழியில் முதல் பத்தில் ஒன்பது திருமொழிகள் மட்டுமே இருந்தால் அதை ஒரு பத்தாகக் கணக்கிட முடியாது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் பெரியாழ்வார் திருமொழியில் “சீதக்கடலுள்” என்று தொடங்கும் (இரண்டாம்) திருமொழியில் இருபது பாசுரங்கள் அமைந்துள்ளபடியால், மொத்தத்தில் முதல் பத்தில் ஒன்பது திருமொழிகள் அமைந்திருந்தாலும் நூறுபாசுரங்கள் இடம் பெற்றுவிடுகின்றபடியால் அதை ஒரு பத்தாகக் கொள்ளக் குறையேதுமில்லை. மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தினமாலையில் வேதத்திற்கு ஒம் என்பதுபோல் திவ்வியப் பிரபந்தங்களுக்குத் திருப்பல்லாண்டு என்பது தனியொரு பிரபந்தம் எனக் கொள்ள முடியாது என்று ஆசிரியர் கூறுகிறார். திருப்பல்லாண்டு என்பது பெரியாழ்வார் திருமொழியின் முதல் பதிகமாக இருக்குமானால் அதற்குத் தனியாகத் ‘திருப்பல்லாண்டு என்ற பெயர் ஏற்பட்டிருக்காது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பற்பல பதிகங்களைக் கொண்ட எந்த திவ்வியப் பிரபந்தத்திலும் பதிகத்திற்குத் தனியான பெயர் வழங்குவதில்லை. முதல் பாசுரத்தின் முதல் சொல்லே பதிகத்தின் தலைப்பாகக் குறிப்பிடப்படும். உதாரணமாகப் பெரியதிருமொழியில் முதல் பதிகத்தில் நாராயணநாமத்தின் பெருமை கூறப்பட்டாலும் அப் பதிகத்திற்குத் தனிப்பெயர் வழங்குவதில்லை. “வாடினேன் வாடி” என்றே அப்பதிகம் குறிப்பிடப்பெறும். இதே போல் மற்ற பிரபந்தங்களிலும் காணலாம். அப்படியிருக்கும்போது திருப்பல்லாண்டு தனி பிரபந்தம் அல்ல என்றால் அதுவும் “பல்லாண்டு பல்லாண்டு” என்று குறிப்பிடப்பட்டிருக்குமேயன்றி “திருப்பல்லாண்டு என்ற தனிப்பெயரால் குறிப்பிடப்பட்டிருக்க முடியாது. மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தினமாலையில் “வேதத்துக்கு “ஓம்” என்னுமது போல் "ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும்” என்று அருளிச் செய்து உள்ளமையால் அது தனி திவ்வியப் பிரபந்தமே என்பது உறுதியாகிறது. மேலும் பெரியாழ்வார் திருமொழியில் முதல் நானூறு பாசுரங்களுக்குப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்கியானம் செல்லரித்துவிட்டதனால் அந்த நானூறு பாசுரங்களுக்கு மட்டும் மணவாளமாமுனிகள் வியாக்கியானம் செய்துள்ளார் என்பதை நூலாசிரியரும் வேறோர் இயலில் எடுத்துக் காட்டியுள்ளார். அப்படி மணவாளமாமுனிகள் அருளிச் செய்த வியாக்கியானம் "வண்ணமாடங்கள்சூழ்” என்று தொடங்குகிற பதிகம் முதற்கொண்டுதான் உள்ளது. திருப்பல்லாண்டுக்குப் பெரியவாச்சான் பிள்ளை உரையே உள்ளது. இதுவும் திருப்பல்லாண்டு தனி திவ்வியப் பிரபந்தமே என்ற கருத்தையே உறுதிப்படுத்துகிறது. பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ஓரிடத்தில் “திருப்பல்லாண்டுதொடங்கிட”என்று அருளிச்செய்துள்ளமையால் அதைத் தனி திவ்யப்பிரபந்தமாகக் கொள்ள முடியாது என்று ஆசிரியர் கூறுகிறார். இது திருப்பல்லாண்டு தனி திவ்யப் பிரபந்தமே என்பதை உறுதிப்படுத்துமேயன்றி வேறல்ல, ஈடு முப்பத்தாறாயிரப்படி உரையில் “பொய்ந்நின்றஞானமும் தொடங்கி இவ்வளவும் வர ...”என்றருளிச் செய்யப்பட்டுள்ளது. திருவிருத்தமும், திருவாய்மொழியும் தனித்தனி திவ்யப் பிரபந்தங்களாக இருக்கச் செய்தேயும் அருளிச் செய்தவர் ஒருவரே என்ற காரணத்தால் நம்பிள்ளை அவ்வாறு அருளிச் செய்துள்ளது போலவே பெரியவாச்சான் பிள்ளையும் அருளிச்செய்துள்ளார் என்று கொள்வதில் தடையேதுமில்லை. மேலும் “பல்லாண்டு பல்லாண்டு தொட்ங்கி” என்றருளிச் செய்யாமல் "திருப்பல்லாண்டு தொடங்கி” என்றருளிச் செய்வதிலிருந்தே பெரியவாச்சான் பிள்ளை திருப்பல்லாண்டைத் தனி திவ்வியப் பிரபந்தமாகக் கருதியிருந்தார் என்பது உறுதியாகிறது. வேதாந்த தேசிகர் அருளிச் செய்ததாகக் கருதப்படும் பிரபந்தசாரம் எனும் நூலில் திருப்பல்லாண்டு தனி திவ்வியப் பிரபந்தமாகக் கொள்ளப்படாததை நூலாசிரியர் தமது கருத்துக்கு ஆதாரமாகக் காட்டுகிறார். ஆனால் திருமடல்களை பல பாடல்களாக வேதாந்த தேசிகர் பிரித்துள்ளது இலக்கண மரபுக்குச் சேராததாகையால் தவறு என்று முடிவுகூறும் ஆசிரியர் திருப்பல்லாண்டு விஷயத்திலும் அவ்வாறே கொள்ளக் குறையேதுமில்லை. இப்படிப்பட்ட சில தவறான கருத்துக்கள் இடம் பெற்றுள்ள காரணத்தினாலேயே பிரபந்தசாரம் எனும் நூல் வேதாந்த தேசிகர் அருளிச் செய்ததாக இருக்க முடியாது என்று ப்ர, அண்ணா ஸ்வாமி நிலை நாட்டியுள்ளார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

“பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்” என்ற தலைப்பில் அமைந்துள்ள மூன்றாம் இயல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பரகாலன் பைந்தமிழில் அகப் பொருள் துறைகள் எவை என்று ஆசிரியர் எடுத்துக் காட்டும்போது அவருடைய நுண்மாண் நுழைபுலம் நன்கு வெளிப்படுகிறது. பாசுரங்களில் அமைந்துள்ள சொற்களின் நயத்தை பூருவாசாரியர்கள் அருளிச் செய்துள்ள வியாக்கியானங்களின் நடையில் அருமையாக விளக்கியுள்ளார்.

“பன்னிரு ஆழ்வார்கள்” என்ற தலைப்பில் அமைந்துள்ள நான்காம் இயலில் ஆழ்வார்களுடைய வரலாறுகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஆனால் சம்பிரதாயக் கருத்துக்கு முரணாக நம்மாழ்வாரை அனைத்து ஆழ்வார்களுக்கும் பிற்பட்டவராகக் காட்டியிருப்பதை ஏற்க முடியவில்லை.

‘திவ்வியப் பிரபந்த இலக்கியப் பெருவிழா” என்ற ஐந்தாம் இயலில் திருவரங்கம் பெரிய கோயிலில் நடைபெறும் அத்யயன உற்சவத்தைப் பற்றி ஆசிரியர் மிகவும் விளக்கமாக வரைந்துள்ளார். அவ்வுற்சவத்தின்போது ஒவ்வொருநாளும் நடைபெறும் அரையர்சேவையைப்பற்றிய குறிப்புகளும் விளக்கமாக இடம் பெற்றுள்ளன.

“வைணவ உரைவளம்” என்ற ஆறாம் இயலில் திவ்வியப் பிரந்தங்களுக்கு அமைந்துள்ள வியாக்கியானங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. -

“வைணவ ஆசாரியர்கள்” என்ற ஏழாம் இயலில் ஓராண்வழி ஆசார்ய குரு பரம்பரைகள் தரப்பட்டுள்ளன. தென்கலை குருபரம்பரை வடகலை குருபரம்பரை ஆகிய இரண்டையுமே விளக்குகின்ற ஆசிரியர் நம்பிள்ளையின் சீடரும் ஈடுமுப்பத்தாறாயிரப்படியை ஏற்படுத்தியவருமான வடக்குத் திருவீதிப்பிள்ளையை நடாதூரம்மாளின் சீடராகக் குறிப்பிட்டுள்ளதும் வடக்குத் திருவீதிப்பிள்ளையின் தகப்பனார் பெயர் பிள்ளை உலகாசிரியர் என்று குறிப்பிட்டுள்ளதும் வியப்பாக உள்ளது. அவர் தம்முடைய குமாரருக்குத் தகப்பனாரின் பெயரையே இட்டிருக்கலாம் என்று ஆசிரியர் குறிப்பிடுவது மேலும் வியப்பைத் தருகிறது. கந்தாடைத் தோழப்பர் நம்பிள்ளையின் குணநலன்களை வியந்து கொண்டாடி உலகாசிரியர் என்ற பட்டத்தினை வழங்கினார் என்றும், வடக்குத் திருவீதிப்பிள்ளை தமது குமாரருக்குத் தமது ஆச்சார்யருடைய அத் திருநாமத்தையே சூட்டினார் என்றும் மணவாளமாமுனிகள் உபதேசரத்தின மாலையில் (51,52) அருளிச் செய்துள்ளதற்கு மாறாக இக்கருத்து உள்ளது. மணவாள மாமுனிகள் தமது இறுதிக் காலத்தில்தான் துறவறம் மேற்கொண்டார் என்று ஆசிரியர் எழுதியுள்ளதும் மாமுனிகளின் வரலாற்றைப் பகரும் யதீந்த்ரப்ரவணப்ரபாவம் என்னும் நூலிலுள்ள செய்திகளுக்கு மாறாகவுள்ளது.

“வைணவ சீலர்கள்” என்ற எட்டாம் இயலில் மற்றுமுள்ள ஆசாரியர்கள் பலரைப் பற்றிய செய்திகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஆசாரியர்கள் பலரைப்பற்றிய அரிய செய்திகள் இவ்வியலில் இடம்பெற்றுள்ளன. இவ்வியலில் பட்டர் அனந்தாழ்வானுக்கு ஸ்ரீவைஷ்ணலக்ஷணம் கூறியதாக உள்ளது. பட்டரிடம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் பற்றிக் கேட்க பட்டர் அந்த ஸ்ரீவைஷ்ணவரை அநந்தாழ்வானிடம் அனுப்பி வைத்ததாகவும் அந்த ஸ்ரீவைஷ்ணவலக்ஷணத்தைப் பற்றிக் கூறியதாகவும்தான் குருபரம்பரையில் உள்ளது.

தொடர்ந்து வைணவசமயத் தத்துவங்கள் (9). வைணவ மந்திரங்கள் (10)இருவகை ஞானங்கள் (1) வீடுபேற்றிற்குரிய வழிகள் (12) நலம் அந்தம் இல்லதோர் நாடு (13) ஆகிய இயல்களில் புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமான வைணவக் கொள்கைகள் மிகவும் எளிய நடையில் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர் வழங்கியுள்ளமை இந்நூலின் சிறப்பான அம்சமாகும்.

மேலும் சம்ப்ரதாயங்கள் சில (14,15) வைணவ திவ்யதேசங்கள் (16) ஆகிய இயல்களிலும் மிகவும் அரிய கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. வைணவர்கள் நெற்றியில் அணிந்து கொள்ளும் திருமண்காப்பு எம்பெருமானுடைய திருவடிகள் அல்ல என்பது ஆசிரியர் கூறும் புதுமையான கருத்து.

மேலே கூறியுள்ளபடி ஒரு சில கருத்து வேற்றுமைகள் இந்நூலில் அமைந்திருந்தாலும் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்வதற்குப் பயன்படும் முழுமையான நூல் இது என்பதில் துளியும் ஐயமில்லை. ஆசிரியரின் அறிவுத்திறனும் ஆய்வுத்திறனும் நூல்நெடுகிலும் வெளிப்படுகின்றன. தமது முதிய வயதிலும் அயராமல் பாடுபட்டு இப்படிப்பட்ட தொண்டினில் ஆசிரியர் ஈடுபட்டு வருவதற்கு வைணவ உலகம் கடமைப்பட்டுள்ளது.மேலும் பல்லாண்டுகள் பூரண உடல் நலத்துடன் வாழ்ந்திருந்து இதுபோல் மேலும் மேலும் பற்பல தொண்டுகள் செய்யும் வல்லமையைப் பேராசிரியர் சுப்புரெட்டியார் அவர்களுக்கு அருளுமாறு கீதாசார்யன் திருவடிகளை நினைந்து வேண்டுகிறேன்.

வயதிலும் ஞானத்திலும் இளையவனான அடியேனையும் ஒரு பொருளாக்கி அணிந்துரை எழுதும் வாய்ப்பை நல்கிப் பெருமைப் படுத்திய ரெட்டியார் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஶ்ரீவைஷ்ணவபாததூளி
வேங்கடகிருஷ்ணதாஸன்