வைணவமும் தமிழும்/திவ்யப் பிரபந்த இலக்கியப் பெருவிழா
தமிழுக்கு ஏற்றம் அளித்த பெருமை வைணவர்க்கு உண்டு. திவ்வியப் பிரபந்த சேவையன்றி திருமால் திருக்கோவில்களில் வழிபாடு இல்லை. இது தவிர, திவ்வியப் பிரபந்தத்திற்குத் திருக்கோயில்களில் விழா எடுத்து வரும் பெருமை இவர்கட்கு உண்டு. ஆண்டுதோறும் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ஏகாதசிக்கு முன்பும் பின்பும் திருமால் திருக் கோயில்களில் ‘அத்யயன உற்சவம்’ என்னும் இலக்கியப் பெருவிழா நடைபெற்று வருகின்றது. விழா நாட்களில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பகுதிகளையும் ஆசாரியர்கள் அருளிச்செய்த உரைகளையும் நாடோறும் அநுசந்தித்தும், சில பாசுரங்கட்கு அபிநயம் பிடித்தும் பாசுரங்களில் கூறப் பெற்றுள்ள சில செய்திகளை நாடகமாக நடித்தும் அரையர்[1] தாம் உருகுவதுடன் கூடியிருக்கும் மக்களையும் உருக்குவார். இன்று திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்துர், ஆழ்வார்திருநகரி ஆகிய திருத்தலங்களில் இப்பெரிய இலக்கியத் திருநாள் சீருடனும் சிறப்புடனும் நடைபெற்று வருகின்றது. இத்திருநாளில் அரையர் சேவைதான் உயிராய நிகழ்ச்சியாகும். இத்திருநாள் மார்கழி மாதம் வளர்பிறையில் முதல் நாளான பிரதமையில் தொடங்கும் திருவரங்கத்தில் மட்டும் அதற்கு முந்தியநாளாகிய அமாவாசையன்று இரவில் திருநெடுந்தாண்டகச்சேவையுடன் தொடங்கும். இந்த விழாவைப்பற்றிச் சுருக்கமாக ஈண்டுத் தரப்பெறுகின்றது.[2]
இந்த இலக்கியப் பெருவிழா ‘திருமொழித் திருநாள்’ 'திருவாய்மொழித் திருநாள்' என்ற இரு பகுதிகளாக அமைகின்றது. திருமொழிகளையே கொண்ட முதல் ஈராயிரம் பாசுரங்களைப் பகற்பொழுதிலும், திருவாய்மொழி ஆயிரத்தை இராப்பொழுதிலும் சேவிப்பதால் இப்பகுதிகளை முறையே ‘பகல்பத்து’, ‘இராப்பத்து என்று வழங்குவர். கோயிலில் (திருவரங்கத்தில்) இவ்விழா நடைபெறும் முறை ஈண்டுத் தரப்பெறுகின்றது. மார்கழி அமாவாசையன்று இரவு அரையர்கள் பெருமாளுடைய கருவறைக்கு எழுந்தருளி பெருமாளுடைய அருளப்பாடும், வரிசையும் பெற்று தேவகானத்தில் 'மின்உருவாய்' என்ற திருநெடுந்தாண்டகத்தின் முதற்பாசுரத்தைத் தாளத்துடன் அநுசந்திப்பர். பெருமாளிடம் விடைபெற்று வெளிப்போந்து அப்பாசுரத்திற்கு அபிநயம் பிடித்து தம்பிரான்படி வியாக்கியானம் சேவிப்பர். திருநெடுந் தாண்டகம் முதல் பத்துப் பாசுரங்களையும் தம்பிரான் படியையும் சேவிப்பதுடன் அன்றைய நிகழ்ச்சி நிறைவுபெறும்.
முதல் திருநாள் : இன்று அரையர் ‘திருப்பல்லாண்டு’ தொடங்கி வெண்ணெய் விழுங்கி என்ற இரண்டாம் பத்து 9ஆம் திருமொழி முடிய 212 பாசுரங்களைச் சேவிப்பர். எம்பெருமானுக்குக் காப்பிட்டு பெரியாழ்வார் குறிப்பிடும் கண்ணன் அவதாரம், அழகு, சிறுகுறும்பு முதலிய அனைத்தையும் காட்டி ஆய்ச்சியர் யசோதையிடம் கண்ணனின் குறும்புகளை முறையிடுவதோடு நிற்கும். இவற்றுள் ‘பல்லாண்டு, பல்லாண்டு’, ‘அடியோ மொடு” என்று தொடங்கும் முதல் இரு பாசுரங்கட்கு மட்டும் அரையர் அபிநயம் பிடிப்பார், வியாக்கியானம் செய்வார்.
இரண்டாம் திருநாள் : இன்று அரையர் 'ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை' (பெரியாழ். திரு 2-10;1) என்று தொடங்கும் முதல் பதிகம் முதல் ‘துக்கச் சுழலைச் சூழ்ந்து கிடந்த வலை' (மேலது 5-3;1) எனத் தொடங்கும் பதிகம் ஈறாகவுள்ள 250 பாசுரங்களைச் சேவிப்பார். இவற்றுள் கண்ணன்பற்றிய பல செய்திகள் அடங்கும். 'ஆற்றிலிருந்து' (2.10;1), ‘தன்னேர் ஆயிரம் பிள்ளைகளோடு' (3.1;1) என்ற இரண்டு பாசுரங்கட்கு அரையர் அபிநயம் பிடித்து வியாக்கியானம் செய்வார்.
மூன்றாம் திருநாள்: இன்று அரையர் 'சென்னியோங்கு' (5.4;1) என்ற பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை முப்பது, நாச்சியார் திருமொழியில் ‘தையொரு திங்களும்’ (1:1) என்று தொடங்கும் திருமொழி தொடங்கி 'மற்றறிருந்தீர்கட்கு' (12:1) என்று தொடங்கும் பதிகம் முடிய 164 பாசுரங்களைச் சேவிப்பார். இவற்றிலுள்ள நிகழ்ச்சிகளை அநுபவித்து அநுபவிக்கச் செய்து 'சென்னி ஒங்கு தண்திருவேங்கடம்' (பெரியாழ், திரு5,4;1)என்ற பாசுரத்திற்கு அபிநயமும் வியாக்கியானமும் நிறைவு பெற்றதும் அத்திருமொழியின் 2,3,4,5,6 பாசுரங்கள் 7ஆம் பாசுரத்தில்,
- பருப்பதத்துக் கயல்பொறித்த
- பாண்டியர் குலபதிபோல்
- திருப்பொலிந்த சேவடிஎன்
- சென்னியின்மேல் பொறித்தாய்
- பருப்பதத்துக் கயல்பொறித்த
என்பது வரையில் அபிநயத்தோடு பாசுரங்களைச் சேவிப்பார். இங்கு நிறுத்திக்கொண்டு 'திருபொலிந்த சேவடி' ஆகிய பெருமாளுடைய சடகோபனைத் தமது திருமுடியில் ஏற்றிக் கொள்வார். அங்குள்ள ஆழ்வார், ஆச்சார்யர்கள் அனைவருக்கும் அரையர் தமது திருக்கையாலேயே 'சடகோபனை'ச் சாதிப்பார். குழுமியிருக்கும் அனைவருக்கும் சாதிப்பார். இங்ஙனம் சாதித்தபின் பெரியாழ்வார் திருமொழியில் எஞ்சிய 4 1/2 பாசுரங்களைச் சேவித்துப் பெரியாழ்வார் திருமொழியைத் தலைக்கட்டுவர்.
இதன்பின் திருப்பாவை தொடங்கப்பெறும். 'மார்கழித் திங்கள்’ எனத் தொடங்கும் முதற் பாசுரத்தை அபிநய வியாக்கியனங்களுடன் சேவிப்பார். இவ்வியாக்கியானத்தில் பல அரியக் கருத்துகள் மிளிரும். இக்கருத்துகள் அனைத்திற்கும் அபிநயம் காட்டும்போது குழுமியிருப்போர் கண்ணும், செவியும், மனமும் ஒடி அரையரிடம் அணையும்.
நான்காம் திருநாள் : இன்று அரையர் காலையில் பாசுரம் சேவித்தல், அபிநயம் பிடித்தல், வியாக்கியானம் சேவித்தலோடு பிற்பகலில் 'கம்சவதம்’ நாடகத்தையும் நடித்துக் காட்டுவார். நாச்சியார் திருமொழி 'கண்ணன் என்னும் கருந்தெய்வம்' (131) என்ற பாசுரத்திற்கு அரையர் அபிநயம் பிடித்து, வியாக்கியானம் செய்வார். அடுத்த பாசுரத்தைச் (13:2)சேவித்து விட்டு அதற்கு அடுத்த 'கஞ்சனைக் காய்ந்த கருவில்லி' (13:3) என்று மட்டும் சொல்லி நிறுத்துவார். அழகிய மணவாளப் பெருமாள் கம்சனைக் கொன்றதைப் பிற்பகலில் காட்ட எண்ணி, அப்பதிகத்தில் எஞ்சிய பாடல்களைச் சேவிக்காமல் அடுத்த பதிகமான 'பட்டிமேய்ந்த காரேறு’ (14) சேவித்துவிட்டுப் 'பெருமாள் திருமொழியில்' நுழைவார்.
முதற் பாசுரமாகிய 'இருள் இரிய' (1:1) என்பதற்கு அபிநயம் பிடித்து வியாக்கியானம் செய்து எஞ்சிய பெருமாள் திருமொழி முழுவதும், திருச்சந்தவிருத்தம் முழுவதும் சேவிக்கப்பெறும். இன்றைய பாசுரத்தொகை 243. சில திருப்பதிகளில் ‘இருள் இரிய' (1:1) என்பதற்குப் பதிலாக “ஊனேறு செல்வத்து' (1:4) என்ற பாசுரத்திற்கு வியாக்கியானம் உண்டு. பிற்பகலில் முன் நிறுத்திய ‘கஞ்சனைக் காய்ந்த கருவில்லி' (13:3) என்ற நாச்சியார் திருமொழிப் பாசுரத்தை எடுத்துக்கொண்டு அரையர் தம்பிரான்படி வியாக்கியானம் சேவித்து கிருட்டிணாவதாரம் தொடங்கி 'கம்சவதம்' வரை நாடகமாக நடித்துக் காட்டுவார். இப்பதிகத்தில் எஞ்சிய பாசுரங்களையும் சேவித்துத் தலைக் கட்டுவர்.
ஐந்தாம் திருநாள் : இன்று அரையர் ‘திருமாலை’ தொடங்கி 'காவலில் புலனை வைத்து' என்ற முதற்பாசுரத்திற்கு அபிநயம் பிடித்து வியாக்கியானமும் செய்வார். மேலும் (1) ‘பச்சைமாமலைபோல்மேனி’, (2)'வேதநூல் பிராயம் நூறு”, (3) மொய்த்தவல் வினையுள் நின்று, (4) 'பெண்டிரால் சுகங்கள்’, (5) 'மறஞ்சுவர் மதில் எடுத்து’, (6) என்ற பாசுரங்கள் அனைத்திற்கும் 'அரங்கனார்க்கு ஆள் சேய்யாதே’ என்பது வரை அபிநயம் பிடிப்பார் அரையர் அரங்கனார்க்கு ஆள் செய்வதில் நம்பெருமாள் புறப்பாடு, திருஆராதனம், வேத விண்ணப்பம், அருளிப்பாடு உற்சவங்களையெல்லாம் அபிநயத்துக் காட்டி எஞ்சிய திருமாலைப் பாசுரங்கள் அனைத்தையும் சேவிப்பார். இன்றைய பாசுரத்தொகை 67.
ஆறாம் திருநாள் : இன்று தொடங்கப்பெறும் பாசுரம் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பின்' முதற்பாசுரம். இப்பாசுரத்திற்கு அரையர் அபிநயம் பிடித்து வியாக்கியானம் செய்தபின் இப்பதிகத்தின் எஞ்சிய பாசுரங்களையும் சேவிப்பார். அடுத்து திருமங்கையாழ்வாரின் 'பெரிய திருமொழி' தொடங்கும். தொடங்கும் பாசுரமாகிய 'வாடினேன் வாடி’ என்பதற்கே அபிநயமும் வியாக்கியானமும் உண்டு. அபிநயவியாக்கியானங்களுக்குப்பின் அரையர் பெரிய திருமொழியின் மூன்றாம் பத்து ஐந்தாம் திருமொழியாகிய 'வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்’ (3.5) என்ற பதிகம் முடிய 250 பாசுரங்களைச் சேவிப்பார். இவை திருப்பிரிதி, வதரி ஆச்சிரமம், சாளக் கிராமம், நைமிசாரண்யம், சிங்கவேள்குன்றம், திருவேங்கடம், திருஎவ்வுள், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருக்கடல்மல்லை, திருஇடஎந்தை, அட்டபுயகரம், பரமேச்சுர விண்ணகரம், திருக்கோவலூர், திருஅயிந்திபுரம், திருசித்திரகூடம், காழிச் சீராமவிண்ணகரம் என்ற திவ்விய தேசங்களைப் பற்றியன.திருஆலியில்(3.5இன்றையபாசுரங்கள் அடைவுபெறும்.
ஏழாம் திருநாள் :' இன்று பெரிய திருமொழி மூன்றாம் பத்து ஆறாம் திருமொழியில் (3.6) திருவாலிபற்றியது - விழா தொடங்கும். ‘தூவிரிய மலர் உழக்கி' (3.6;1) என்ற பாசுரம் தலைவி வண்டை விளித்துத் தலைவனுக்குத் தன் நிலைமையை உணர உரைக்குமாறு வேண்டுவது. வண்டிற்குக் கொடுத்துள்ள அடைமொழிகளின் பொருள் உணர்ந்து, அபிநயத்தில் கண்டு, இசையில் கேட்டு, மனத்தில் அசைபோட்டுச் சிந்திக்க உரியன. இப்பாசுர அபிநயவியாக்கியானங்கள் நிறைவு பெற்றதும். மேலும் மூன்று பாசுரங்களைச் சேவிப்பார். ஐந்தாம் பாசுரத்தில்,
- வாளாய கண்பனிப்ப
- மென்முலைகள் பொன்அரும்ப
- நாள்நாளும் நின்நினைந்து
- நைவேற்கு ஒ! மண்அளந்த;
- தாளாளா!
- வாளாய கண்பனிப்ப
என்பதோடு நிறுத்திக் கொள்வார். 'மண் அளந்த தாளாளன்' என்பதிலுள்ள கதை பிற்பகலில் நாடகமாக நடித்துக் காட்டப்பெறும். அடுத்த திருமொழி 'கள்வன் கொல்', (37) தொடங்கி 'கைம்மான மழகளிற்றை' (5.6) என்ற திருமொழி முடிய 240 பாசுரங்கள் இன்று சேவையாகும். இவை திருவாலி, திருநாங்கூர்த் திருப்பதிகளாகிய மணிமாடக் கோயில், வைகுந்த விண்ணகரம், அரிமேய விண்ணகரம், திருத்தேவனார்த் தொகை, வண்புருடோத்தமம், செம்பொன் செய்கோயில், திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், காவளம்பாடி, திருவெள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகிய பதினொரு திருப்பதிகள் திருவிந்தளூர், திருவெள்ளியங்குடி, திருப்புள்ளம் பூதங்குடி, திருக்கூடலூர், திருவெள்ளறை, திருவரங்கம் ஆகிய சோழ நாட்டுத் திருப்பதிகள் பற்றியவை:
பிற்பகலில் முன்பு விட்ட ‘மண் அளந்த தாளாளா என்ற சொற்றொடரைக் கொண்டு வாமன திரிவிக்கிரமாவதாரத்தைத் தம்பிரான்படியில் சேவித்து அவ்வவதாரத்தை நடித்துக் காட்டுவார். இதற்குமேல் 'தண்குடந்தை நகராளா!' முதல் பதிக இறுதிவரைச் சேவிப்பார்.
எட்டாம் திருநாள் : இன்று ‘பண்டைநான்மறையும்’ (5.7;1) திருவரங்கம்பற்றிய திருமொழி தொடங்குகின்றது. இப்பாசுரத்திற்கு அபிநயமும் வியாக்கியானமும் முடிந்த பின்னர் அரையர் 'அரங்கம்’ என்ற சொல் பயிலும் இடங்களையெல்லாம் கோவையாக்கிச் சேவிப்பார். அடுத்த இரண்டு பாசுரங்களைச் சேவித்து 4-ஆம் பாசுரத்தில் 'ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான்' என்ற இடத்தில் நிறுத்தி அலைகடல் கடைந்ததைப் பிற்பகலில் நடித்துக் காட்டுவார். இத்துடன் இப்பகுதிக்குத் தம்பிரான்படி வியாக்கியானமும் சேவிக்கப் பெறும் இப்பதிகத்தின் எஞ்சிய பாசுரங்களைச் சேவித்துத் தலைக்கட்டுவார். இன்று பெரியதிருமொழி எட்டாம் பத்து முதல் பாசுரம் 'சிலை இலங்குபொன் ஆழி' (8.1:1) பதிகம் முடிய 250க்கு திருப்பாசுரங்கள் சேவையாகும்.
ஒன்பதாம் திருநாள் : இன்றைய திருநாளை பெரிய திருமொழி எட்டாம் பத்து இரண்டாம் திருமொழி ‘தெள்ளியீர்' (8.2:1) என்ற பாசுரத்துடன் தொடங்கும். இது தாய்ப்பாசுரம், தலைமகளின் நிலை கண்ட தாய் தன்மகளின் இளமையை எடுத்துக் காட்டி இவளை அலைக்கழித்தல் தலைமகளின் இயல்புக்குத் தகாது என்பது பதிகத்தின் உட்பொருள். இனி பத்தாம் பத்து முதல் திருமொழி ‘ஒருநல்சுற்றம்' (10.1:1) என்ற பதிகம் முடிய 200 பாசுரங்கள் அரையரால் சேவிக்கப்பெறும். இதனோடு காலைநிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
பிற்பகல் திருநெடுந்தாண்டகம் சிறப்பு நிகழ்ச்சியாகும். ‘மின்உருவாய்' (1) என்ற முதற் பாசுரத்திற்கு அரையர் அபிநயம் பிடித்து,பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் சேவிப்பார். இப்பாசுரத்திலிருந்து 'பட்டுடுக்கும்?' (11) என்ற பதினொராம் பாசுரம்வரை தம்பிரான்படி சேவிப்பார். இந்தப்பர்சுரம் காதல் கொண்ட மகளின் நிலையைத் தாய் கூறுவதாக அமைந்ததாய்ப் பாசுரம், ‘இவளுடைய நிலைக்கு எவர் காரணம்?' என்று குறி சொல்லும் கட்டுவிச்சியைத் தாய் கேட்பதும், கட்டுவிச்சி கூறும் விடையுமாக அமைந்தது. குறத்தி குறி பார்ப்பதற்காக முத்துகளைப் பரப்பி அதனால் நிகழ்ந்தவற்றையும் நிகழப்போகின்றவற்றையும் பார்ப்பது வழக்கம். இன்று அரையர் குறத்தியாக நின்று 'முத்துக்குறி' பார்ப்பார். அக்குறி பார்க்க அவர் பெருமானிடம் தீர்த்தமும், திருவடிநிலையான சடகோபமும் பெற்று அங்கு எழுந்தருளியுள்ள ஆழ்வார், ஆசாரியகட்கும் குழுமியுள்ளவர்கட்கும் அவற்றைச்சாதிப்பார். இது ‘முத்துக்குறி’என்று வழங்கப்பெறும்.[3]
பத்தாம் திருநாள் : இன்று மீண்டும் அரையர் பெரிய திருமொழிக்குப்போய் 'இரக்கம் இன்றி' (10.2;1)என்ற பாசுரம் தொடங்கி பெரியதிருமொழி இறுதி வரை சேவித்துத் தலைக்கட்டுவார். பின்னர் திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் இரண்டையும் சேவித்து முடிப்பார். இன்றைய பாசுரத்தொகை 224. 'இன்று இரக்கம் இன்றி' (10.2;1) என்ற பாசுர அபிநய வியாக்கியானம் நடைபெறும். இராம ராவணப்போர் முடிந்தது. இராவணன் அழிந்தான்; சில அரக்கர் எஞ்சினர். அவர்கள் தம் தோல்வியை ஒப்புக் கொண்டு பறை கொட்டி 'பொங்கத்தம் பொங்கோ'(10.2) என்ற ஒலிக் குறிப்புத் தோன்றக் கூத்தாடுவதைக் கூறும் பாசுரம் இது.[4]
பிற்பகலில் பெரிய திருமொழியின் சாற்றுப் பாசுரமான 'மாற்றமுள ஆகிலும்'(11.8) பதிகத்தின் இறுதிப் பாசுரமான 'குன்றம் எடுத்து' (11.8;10) என்பதைச் சேவிப்பார். பின்னர் திருநெடுந்தாண்டகத்தின் சாற்றுப் பாசுரமான,
- அன்றுஆயர் குலமகளுக்கு
- அரையன் தன்னை
- அலைகடலைக் கடைந்துஅடைத்த
- அம்மான் தன்னைக்;
- குன்றாத வலியரக்கர்
- கோனை மாளக்
- 'கொடுஞ்சிலைவாய்ச் சரம்துரந்து
- குலம்க ளைந்து வென்றானை (29)
- அன்றுஆயர் குலமகளுக்கு
என்பதைப் பாடும்போது பெருமாள் அருளிப்பாடு இட, இப்பாசுரத்தில் கூறப்பெற்றுள்ள இராவணவதத்தை நடித்துக் காட்டுவார் அரையர். இராவணவதம் முடிந்து, சாற்று முறையை ‘மின்னுமாமழைதவழும்' (30) என்ற பாசுரம் தலைக்கட்டியதும் இலக்கியப் பெருவிழாவின் முதற்பகுதியான திருமொழித் திருவிழா (பகல் - பத்து உற்சவம்) நிறைவு பெறும்.
முதல்திருநாள்: ஏகாதசியன்று பெருமாள்அதிகாலையில் கருவறையிலிருந்து புறப்பட்டுப் பரமபத வாசல் வழியாகத் திருமாமணி மண்டபத்தை நோக்கி எழுந்தருள்வார். கிழக்குக் கோபுரவாசல் எதிரில் உள்ள மண்டபத்தில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமாதுசர் ஆகிய மூவரும் பெருமாளை எதிர்கொள்வர். அவர்கட்கு எதிரில் அரையர் ‘உயர்வற உயர்நலம் உடையவன்’(1.1:1) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தைத் தொடங்குவார். நம்மாழ்வார் பெருமாள் பக்கல் எழுந்தருள, அனைவரும் திருமாமணிமண்டபம் அடைவர். ஒவ்வொரு நாளும் இவ்வாறே அன்றைய பதிகத்தின் முதல் பாசுரத்தை ஆழ்வார் முன் அரையர் சேவித்து ஆழ்வாரைப் பெருமாள் பக்கல் எழுந்தருளச் செய்வது வழக்கமாக உள்ளது.
அன்று மாலை அரையர் அபிநயம் பற்றித் தம்பிரான்படி வியாக்கியானம் சேவிப்பார். அதனோடு நம்பிள்ளைஅருளிய ‘ஈடு' என்னும் திருவாய்மொழி வியாக்கியானத்தின் 'மகாப் பிரவேசம்’ என்னும் தோற்றுவாய் (அவதாரிகை) மூன்றாம் திருமகள் கேள்வனையும், (ஶ்ரீய;பதி)-முதல் பாசுரத்தின் வியாக்கியானத்தையும் சேவிப்பார் முதல் பாசுரம் ஆழ்வார்தம் மனத்தை விளித்துக் கூறுவது. இதில் பிரணவ எழுத்துகள் உம,அ பயின்று வந்துள்ளமை நோக்கத்தக்கது. உ-எழுத்து திருமகளைக் குறிக்கும் மங்கல எழுத்தோடு பிரபந்தம் தொடங்கும். ஈட்டின் 'மூன்றாம் திருமகள் கேள்வன்' அளவால் சிறியது. இதில் பொதுவாக நம்மாழ்வாருடைய நான்கு பிரபந்தங்களிலும் (திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய் மொழி, பெரியதிருவந்தாதி) கூறப்பெற்றுள்ள பொருள்கள், அவற்றிலுள்ள இராமாயணக் கருத்துகள், திருவாய்மொழியில் கூறப்பெறறுள்ள பொருள் இவற்றைக் கூறி அப்பொருளின் சுருக்கம் முதல் திருப்பதிகத்தின் சுருக்கம் முதல் அடி என முடிப்பார் ஈட்டாசிரியர்.
அரையர் இப் பாசுரத்தைச் சேவித்து, அபிநயம் பிடித்து, ‘மூன்றாம் திருமகள் கேள்வனையும்' ஈடுவியாக்கியானத்தையும் சேவித்தபின் முதல் பத்து முழுவதையும் இசையோடு சேவிப்பார்.
இரண்டாம் திருநாள் : இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள், திருவாய்மொழி இரண்டாம் பத்து, 'கிளர் ஒளி இளமை' (2.10:1) என்ற பாசுரத்திற்கு அபிநய வியாக்கியானம் சேவிக்கப்பெறும்.இது திருமாலிருஞ்சோலை மலையை இளமைப் பருவம் நீங்குவதற்கு முன்பே அடைவது சிறந்தது என்று கூறுவது.
மூன்றாம் திருநாள் : இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி மூன்றாம் பத்து. 'ஒழிவில் காலமெல்லாம்' (3.3;1) என்னும் பாசுரத்திற்கு அபிநய வியாக்கியானம் சேவிக்கப்பெறும். இந்தப் பாசுரம் 'அடிமை எக்காலத்தும் எவ்விடத்தும் எந்நிலைமையிலும் எம் பெருமானுக்கே உரியது ; அத்தகைய அடிமை செய்வது என் கடமை' என்ற கருத்தை வலியுறுத்துவது.
நான்காம் திருநாள் : இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி நான்காம் பத்து. 'ஒன்றும் தேவும்’ (4.10;1)என்ற பாசுரத்தின் அபிநய வியாக்கியானம் சேவிக்கப் பெறும் அர்ச்சாரூபத்தில் எம்பெருமானைத் திருக்குருகூரில் கண்ட ஆழ்வார் 'இவனை உலகோர் அநுபவியாமல் உள்ளனரே' எனக் கழிவிரக்கம் கொள்ளுகின்றார் இப்பாசுரத்தில்'
ஐந்தாம் திருநாள் : அரையர் இன்று சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி ஐந்தாம் பத்து. 'எங்ஙனேயோ அன்னை மீர்காள்!' (5.5;1) என்ற பாசுரத்தின் அபிநய வியாக்கியானம் சேவிக்கப்பெறும். திருவாய்மொழி அபிநய வியாக்கியானங்களில் இதுவே முதல் அகப்பொருள் பாசுரம், தாய்[5] மகளை நோக்கி “நீ எம்பெருமானை உலகு அறிய ஆசைப்படுவது உனக்கும் அவனுக்கும் இழுக்கு தருவதாகும். பெண்ணிற்கு உரிய நாணம் துறந்து உன் ஆசையை வெளிப்படுத்தல் ஆகாது. அவ்வாறு வெளிப்படுத்திய பின்பும் அவன் வாராதிருப்பதால் உலகோர் அவனை இரக்கம் அற்றவன் எனக் கூற ஏதுவாகும்; அவனுக்கு உண்டாகும் பழிச் சொல் நம்மையும் சாரும் அன்றே?” என்று கூறிச் சினம் கொள்ளுகின்றனர். உருவெளிப்பாடு கண்ட தலைவியின் விடையாக அமைவது இப்பாசுரம்.
ஆறாம் திருநாள்: இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி ஆறாம் பத்து. அபிநயவியாக்கியானம் 'உலகம் உண்ட பெருவாயா' (6.10:1) என்ற பாசுரத்திற்கு இத்திருவாய் மொழியில் திருவேங்கடமுடையானின் குணங்களைக் கூறி, இதன் இறுதிப் பாசுரத்தில் அவனைச் சரணம் அடைகின்றார்.
ஏழாம் திருநாள்: அரையர் இன்று சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி ஏழாம் பத்து. அபிநயவியாக்கியானம் ‘கங்குலும் பகலும்' (7.2;1) என்ற பாசுரத்திற்கு இது தாய்ப் பாசுரம். இன்று ஆழ்வார் பெண்கோலம் கொண்டிருப்பார். முன்நாளில் திருமாலிடம் சரணம் அடைந்ததும் இன்னமும் உலகத்தொடர்பு அற்றுத் திருமாலை அடையவில்லையே என்று தலைவனை அடையாத தலைவியின் நிலையை அடைகின்றார் ஆழ்வார். எம்பெருமானோ, 'ஆழ்வார் இப்பிரபந்தத்தைத் தலைக்கட்ட வேண்டும்; அதுவரையில் அவருக்கு ஆறுதல் அளிப்பது எவ்வாறு?' என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆழ்வார் இதனை அறியாமல் பிரிவுத் துயரால் நலிந்து செயல் மறந்து, மயக்கத்தில் இருந்தார். அது கண்ட நற்றாய் தலைவனிடம் முறையிடுகின்றாள். தாயாகிய அரையருக்கோ ஆழ்வாரைத் காட்டிலும் துயர் அதிகம்; ‘இவள்திறத்து என் செய்கின்றாயே?’ என்று மன்றாடுவது உருக்கமான பகுதி.
இப்பதிகம் ஐந்தாம் பாசுரம் சேவிக்கும்போது ‘அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே!' என்ற விளி வருகின்றது. இப்போது அரையர் தம் சேவையை நிறுத்தி அவுணன் இரணியனின் உடலைக் கீண்ட நரசிங்க அவதாரக் கதையை நாடகமாக நடத்திக் காட்டி, பெருமானுடைய தீர்த்தத்தையும் சடகோபனையும் குழுவாக (கோஷ்டியாக) உள்ள அடியார்கட்குச் சாதித்துவிட்டுப் பிறகு எஞ்சியப் பாசுரங்களைச் சேவிப்பார்.
எட்டாம் திருநாள் : அரையர் இன்று சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி எட்டாம் பத்து. அபிநய வியாக்கியானம் 'நெடுமாற்கு அடிமை செய்வேன்போல்'(8.10;1) என்ற பாசுரத்திற்கு இப்பதிகம் எம்பெருமானுக்கு அடிமையாக இருத்தலினும், அவன் அடியாருக்கு அடிமையாக இருத்தல் உயர்ந்தது என்ற கருத்து பற்றியது.
ஒன்பதாம் திருநாள் : இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள் ஒன்பதாம் பத்து. அபிநயவியாக்கியானம் ‘மாலை நண்ணித் தொழுது' (9.10;1) என்ற பாசுரத்திற்கு திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்வது இப்பாசுரம்.
பத்தாம் திருநாள் : இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள் பத்தாம் பத்து. விழாமுறையில் முந்தைய நாட்களினின்றும் சிறிது வேறுபாடு உண்டு. ஆழ்வாரைக் காலையிலேயே திருமஞ்சனம் (நீராடல்), செய்வித்துத் திருத்துழாமாலை அணிவிப்பர். 'சந்திரபுஷ்கரிணி' அருகில் 'ஸ்ரீரங்கராஜஸ்தவம்' 'உத்தர சதகம்' சேவிப்பர். இச்சேவை நிறைவெய்தியதும் 'பட்டரைப் பிரம்மரதம்' ஏற்றி வரிசைகளுடன் அவருடைய திருமாளிகைக்குக் கொண்டு சேர்ப்பர். பெருமாள் திருமணிமண்டபத்திற்கு எழுந்தருளியதும் அரையர் அபிநய வியாக்கியானம் செய்வது 'தாளதாமரைத்தடம்' (10.1,1) என்ற பாசுரத்திற்கு. ஆழ்வாருக்குத் தாம் பரமபதம் போவது உறுதியாகத் தெரிந்தது. தாம் அங்குப் போகும் வழி புதிது; பழகிய உடலையும் உலகையும் விட்டுப் புதுஉடல் கொண்டு புதிய இடத்திற்குப் போகையில், எம்பெருமானே வழித்துணை என்கின்றார்.
பத்தாம்பத்தில் முதல் எட்டுப்பாசுரங்களையும் அரையர் சேவித்தபின் ஆழ்வாரைத் தம் கைத்தலத்தில் ஏந்திக் கொண்டு ‘சூழ்விசும்பு பணிமுகில் (10.9) என்ற பதிகத்தின் ஒவ்வொரு பாசுரத்தையும் இருமுறை சேவிக்கப் பெருமாளிடம் கொண்டு விடுவார். ஆழ்வாரைப் பெருமாள் திருவடியில் கிடத்தி ‘முனியே! நான்முகனே’ (10-10) என்ற பதிகத்தின் ஒவ்வொரு பாசுரத்தையும் இருமுறை சேவிப்பார். இதனோடு அரையர் சேவை நிறைவு பெறும் பிரபந்தத்தைத் கட்டடியதும், பெருமாள் 'அரையரைப் பிரம்மரதம்' ஏற்றி வரிசைகளுடன் அவருடைய திருமாளிகைக்குச் சேரவிடுவார். அதன்பிறகே தம் கருவறைக்கு எழுந்தருள்வார்.
அன்றிரவு பெரிய கோவிலுக்குள் ஒரு மண்டபத்தில் இயற்பாவையும், திருவரங்கத்து அமுதனாரின் இராமாநுஜ நூற்றந்தாதியையும் இயலாக இசை நாடகம் இன்றிச் சேவிப்பார். இச்சேவை நிறைவெய்தியதும் மறுநாள் பகல் 'அமுதனாரைப்பிரம்மரதம்' ஏற்றி வரிசைகளுடன் அவருடைய திருமாளிகை சேர விடுவார். இத்துடன் இலக்கியப்பெருவிழா நிறைவேறுகின்றது.
- ↑ அரையர்-அரசர் ஆழ்வார்களின் சார்பாளர்களாக இருந்து இவர்கள் இத்திருப்பணியைச்செய்வதால் ஆழ்வார் பாசுரங்களுக்கு இவர்கள் அரசர் ஆகின்றனர். பாசுரங்களைச் சொல்வதால் இவர்கள் அரசர் எனப் பெற்றனர். இவர்களை 'விண்ணப்பம் செய்வார்' 'நம்பாடுவான்' என்றும் குறிப்பிடுவதுண்டு. திருவரங்கப்பெருமானே இங்கனம் சேவிப்பவர்கட்கு 'அரையர்' என்ற விருதை அளித்ததாக உடையவர் அருளிய கோயில் ஒழுகு (Temple manual) என்ற நூலால் அறியக் கிடக்கின்றது.
- ↑ விரிவாக அறிய வேண்டுவோர் இவ்வாசிரியரின் ‘ஆன்மிகமும் அறிவியலும் என்ற நூலில் (8வது கட்டுரை) காணலாம். (கழகத்தில் கிடைக்கும்).
- ↑ ஆழ்வார் திருநகரியில் இன்று 'அக்கும் புலியின் அதளும்' (9.6:1) முந்துற உரைக்கேன் (9.8:1 என்ற பாசுரங்களுக்கு அபிந வியாக்கியானம்; நாளையே முத்துக்குறி.
- ↑ ஆழ்வார் திரு நகரியிலும், ஶ்ரீவில்லிபுத்துளரிலும் இப்பதிகவியாக்கியானம் இல்லை.
- ↑ தலைவிக்கு ஐவகைத் தாயர் இருப்பதாகக் கொள்ளுதல். தமிழ்க்கவி மரபு. பெற்றதாய், ஊட்டும் தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய். இவர்களேயன்றி தாய் முறையில் உள்ள அனைவரையும் விளித்துக் கூறுகின்றாள்.