வைணவமும் தமிழும்/நலம் அந்தம் இல்லதோர் நாடு
13. நலம் அந்தம்
இல்லதோர் நாடு
‘முத்திநிலை' அல்லது ‘வீடுபேறு' பற்றிச் சமய நூல்கள் பலபடியாகப் பேசும். வைணவம் இதனைப் புருஷார்த்தம்’ என்று குறிப்பிடும். வைணவசமயக் கருத்தின்படி வீடு ஒருதனி உலகம். இதனை நம்மாழ்வார்,
புலனைந்தும் மேயும்
பொறி ஐந்தும் நீங்கி
நலம்அந்தம் இல்லதோர்
நாடு புகுவீர்! (திருவாய் 2.8:4)
என்று குறிப்பிட்டு அவ்வுலகத்திற்குச் செல்லுமாறு ஆற்றுப் படுத்துவர். இங்கு 'நலம் அந்தம் இல்லதோர் நாடு’ என்பதில் 'அந்தம் இல்லது' என்பதை நலம் நாடு என்ற இரண்டிற்கும் சேர்த்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அந்தம் இல்லதோர் நாடு அழிவில்லாத ஒப்பற்ற நாடு நலம் அந்தம் இல்லதோர் நாடு - அழிவில்லாத இன்பத்தையுடைய நாடு. நாடும் அழிவில்லாதது; அதனை அடைந்தார்க்கு உண்ட ாகும் இன்பமும் அழிவில்லாதது என்பது அறியத் தக்கது.
நம்மாழ்வாரைப் பின்பற்றியே பரிமேலழகரும் தமது திருக்குறள் உரையில் பலவிடங்களில் வீட்டினை 'அந்தமில் இன்பத்து அழிவில்வீடு’ என்று எழுதிச் செல்வர். வைணவ சமயம் கூறும் வீடுபற்றிய கருத்து தமிழகத்தின் பழங் கொள்கையேயாகும். திருவள்ளுவரும்,
மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3)
என்ற குறளில் வீட்டை (மோட்சத்தை) நிலம் என்றார்.இதனால் வீடு (மோட்சம்) ஒர் உலகம் என்பது, திருவள்ளுவர் கருத்து என்பது தெளிவு. இக்கருத்தினையே அவர் “வரன் என்னும் வைப்பு" (24) எல்லா உலகத்திலும் மேம்பட்ட வீட்டுலகம், 'வானோர்க்கு உயர்ந்த உலகம்' (346) - தேவர்களாலும் அடைய முடியாத வீட்டுலகம்: “வானம்"(353) வீட்டுலகம் என்று மேலும் விளக்குவர்.இறுதியில் கூறப்பெற்ற வானம் தத்துவ ஞானம் பெற்றவர் அடையும் இடமாகக் குறிப்பிடப்பெற்ற 7. இங்கு வானம்’ விட்டுலகத்தைக் குறித்து தத்துவ ஞானம் பெற்றவர்கட்கு இவ்வுலகத்தைவிட வீட்டுலகம் அண்மையில் இருப்பதாகத் தோன்றும். இதனையே நம்மாழ்வாரும்,
பொன்னுலகு ஆளிரோ?
புவனிமுழுது ஆளிரோ (6.8:1)
என்ற திருவாய்மொழியில் இக் குறிப்பினை வெளியிட் டுள்ளதைக் காணலாம். மேலும், இந்த ஆழ்வார் வீட்டினை வைகுந்தம் (1.2:11:2.5:11:4.4:11:5.10:11)என்றும், 'இலங்குவான்' (3.8:11)"பொன்னுலகு” (7:1) என்றெல்லாம் தம் திருவாய். மொழியில் குறிப்பிட்டுள்ளமையையும் காணலாம்.
ஆழ்வார் பெருமக்கள் 'வீடு’ என்பதைப்பற்றிக் கூறியுள்ள கருத்துகளைக் காண்போம். இந்த உடலை விட்டுப் பிரியும் ஆன்மா கதிரவன் மண்டலத்தைப் பிளந்து கொண்டு அவ்வழியே சென்று பரமபதம் என்னும் நாட்டை அடைவதாகும், ஆங்கே ஆராஅமுதத்தை அநுபவிப்பதாகவும் அவ்விடத்தைவிட்டு ஒரு நாளும் திரும்பி வருவதில்லையாகவும் அதுவே வைகுந்தம் என்பதாகவும் திருமங்கையாழ்வார் குறிப்பிடுவர்.
தேர்ஆர் நிறைகதிரோன்
மண்டலத்தைக் கீண்டுபுக்கு
ஆரா அமுதம்
அங்குஎய்தி - அதினின்றும்
வாராது ஒழிவது
ஒன்று உண்டே? (சி. திருமடல் கண் 7,8)
என்ற அவரது சிறிய மடல் கண்ணிகளால் இஃது அறியப்பெறும். மேலும் அவர்,
மன்னும் கடுங்கதிரோன்
மண்டலத்தின் நன்னடுவுள்
அன்னதோர் இல்லியின்
ஊடுபோய்- வீடென்னும்
தொன்னெறிக்கண் சென்றாரைச்
சொல்லுமின்கள் (பெ.திரு மடல் கண் 1617)
சண்ட மண்டலத்தி னுாடு
சென்று வீடு பெற்றுமேல்
கண்டு வீடு இலாத காதல்
இன்பம் நாளும் எய்துவீர்! (திருச்சந்த-67)
[சண்ட மண்டலம் சூரிய மண்டலம்]
என்று கூறுவர்.
இருள் அகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு
ஏற்றிவைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான்
-பெரியாழ் திரு.49:3
என்று இவ்வீட்டைக் காட்டுவர் பெரியாழ்வார். வீட்டுல கைப்பற்றி ஆழ்வார்களின் கருத்துகள் யாவும் உபநிடதக் கருத்து களுடனும் வைணவ ஆகமக் கருத்துகளுடனும் ஒத்துள்ளமை கருதத் தக்கது.மேலே ஏறுவதற்குச் சாதனமாக இருப்பது ஏணி; இங்கு எம்பெருமான் உபாயகமாக இருப்பதைக் காட்டுகின்றது. 'பரமபதம்' ஏறுமளவும் எம்பெருமான் உபாயமாக இருப்பான்; அதன்பிறகு உபேயமாகி விடுகின்றான் என்பது அறியப்படும். ஆன்மா வீட்டுலகம் செல்லும் நெறியை வைணவ சமயம் 'அர்ச்சிராதிமார்க்கம்' என்று குறிப்பிடும். முத்தியை அடையும் ஆன்மா உடலைவிடும்போது சுழுமுனை (சுஷ முனை) என்றை நாடி வழியாய் வெளிக்கிளம்பி மோட்சத்திற்குப் போகும் வழியாகும் இது. அர்ச்சிஸ் முதலான தேவதைகளைக் கொண்டிருக்கும் வழி என்பது இதன் சொற்பொருள். அர்ச்சிஸ் என்பது அங்கியங்கடவுள்; நெருப்புக்கு இறை 1. வேதாந்த தேசிகரின் விளக்கம் : ஆழ்வார் பாசுரங்களிலும் உபநிடதங்களிலும் ஆழங்கால் பட்ட வேதாந்த தேசிகர் இதனைத் தெளிவாக விளக்குவர். மோட்சத்தை அடையும் ஆன்மா இவ்வுடலைவிட்டு வெளியேறி சூக்கும உடலுடன் செல்லுங்கால் அக்கினி தேவதை பகலின் தேவதை சுக்கில பட்சதேவதை, உத்தராயணதேவதை, வர்ஷ(மழை) தேவதை, வாயுதேவதை, கதிரவன், திங்கள், மின்னலின் தேவதைகள், வருணன், இந்திரன் பிரசாபதி என்ற தேவதைகள் வழிகாட்டி நடத்திச் செல்லுங்கால், தான் மேற்கொண்ட் வினையின் பலனாகவும் கடைப்பிடித்த வழியின் மகிமையாலும் சில இன்பங்களைப் பெற்று இறுதியில் வைகுந்தத்தை அடையும். அங்கு ஆன்மாஇடைவிடாது இறையநுபவத்தைப் பெற்று அதிலேயே மண்டிக் கிடக்கும் (தே.பி. 67,68)
2. திருநாடு செல்லும் ஆன்மா : திருநாட்டிற்குச் செல்லும் ஆன்மாவுக்கு நடைபெறும் பணிவிடைகளையும் மரியாதைகளையும் சூழ் விசும்பு அணி முகில்” (திருவாய் 109) என்ற திருவாய்மொழியில் பரக்கப் பேசுகின்றார் ஆழ்வார். தமக்குக் கிடைக்கப்போகும் பேற்றை கற்பனையில் கண்டு பேசுகின்றார். r
நாரணன் தமரைக் கண்டு உகந்து மேகங்கள் மங்கல வாத்திய ஒலிபோல் முழங்கும்; ஆழ்கடல்கள் ஏழும் திரைகளாகிய கைகளை எடுத்துக் கூத்தர்டும். ஏழு த்வீபங்களும் மாமலைகளை ஏந்தி நிற்கும் (1),
மேகங்கள் விசும்பில் பூரண கும்பங்களாக அமையும். கடல்களும் நிரந்தரமாக ஆர்த்து நிற்கும். அந்தந்த உலகிலுள் ளார் பெரிய மலைகளைத் தோரணங்களாக ஒழுங்குபடுத்தித் தாங்களும் தொழுவர் (2).
அர்ச்சிராதிகள் எனப்படும் ஆதிவாஹிகள் கைபடைத்த பயன் பெற்றோமென்று பூமாரி பொழிந்து தொழுது நிற்பர்; து.ாபத்தையும் காட்டுவர். ஆங்காங்குள்ள முனிவர்களும் மெளனவிரதத்தைத் தவிர்த்து, இங்கே எழுந்தருள வேண்டும்; “இங்கே எழுந்தருள வேண்டும்’ என்று நல்வரவு கூறி உபசரிப்பர் வைகுந்தத்திற்கு இதுவே வழி என்று இருபக்கமும் நின்று கொண்டு இசைப்பர் (3)
தேவர்கள் பூமியை அளந்தவன் தமர் செல்லுகின்ற வழிகளிலெல்லாம் தோப்புகளைச் சமைத்துத் தங்கும் இடங்களை ஏற்படுத்துவர்; அதிர்குரல் முரசங்கள் எங்கும் ஒலிக்குமாறு செய்வர் (4)
வருணன், இந்திரன், பிரசாபதி ஆகிய தேவர்கள் 'போதுமின், எமதிடம் புகுமின்’ என்று வேண்டுவர். இந்நிலையில் கின்னரர்களும் கருடர்களும் கீதங்கள்பாடுவர். மேலுலக வைதிகர்கள் தாங்கள் புரிந்த தேவபூசைகளின் பலன்களைக் காணிக்கையாக்குவர் (5)
இந்நிலையில் விரைகமழ் நறும்புகை எம்மருங்கும் பரவும். திருச்சின்னங்களும் சங்குகளும் எம்மருங்கும் ஒலிக்கும். ஒளி மிக்க நயனங்களையுடைய தேவமாதர்கள் ஆழியான் தமரை நோக்கி 'வானகம் ஆள்மின்கள்’ என்று குளிர நோக்கி அன்புடன் வாழ்த்துவர். இப்பாசுரத்தில் ‘வாளொண்கண் மடந்தையர்' என்ற தொடரிலுள்ள அடைமொழியின் கருத்தை நம்பிள்ளை 'தேசாந்தரத்தில் நின்றும் போந்த பிரஜையை (குழந்தையைத்) தாய்மார்கள் குளிரப்பார்க்குமாப்போலே, ஒளியையுடைய அழகிய கண்களாலே குளிர நோக்கினபடி' என்று விவரிப்பர். (6)
இவர்களை அடுத்து - மருத்துகளின் கூட்டமும், வசுக்களின் கூட்டமும் ஆன்மாக்கள் போகும் இடம் எங்கும் தொடர்ந்து சென்று பல்லாண்டு பாடுவர்.(7)
பிரகிருதி மண்டலத்திற்கு அப்பாலும் பரமபதத்திற்குப் புறம்பாகவும் நிற்கும் நித்தியசூரிகளும் முத்தர்களும் நல்வரவு கூறி எதிர்கொண்டு அழைப்பர் (8)
வைகுந்தம் புகுந்த அளவில் திருவாசல் காக்கும் முதலிகள் 'எமது இடம் புகுதும்' என்று உகந்து வரவேற்பர் 'மண்ணவர் வைகுந்தம் புகுதல் பெரும்பேறு' என்று சொல்லி வியப்பர் (9)
‘இவர்கள் இவ்விடம் வந்து சேர்ந்தது நமது பேறு' என்று கூறித் தம்தம் இடங்களில் வந்தவர்களின் திருவடிகளை விளக்குவர். வைணவர்கட்கு நிதியான திருவடி நிலைகளையும், திருச்சூரணத்தையும், பூரண கும்பங்களையும், மங்கல விளக்குகளையும் ஏந்திக் கொண்டு வருவர் மதிமுக மடந்தையர். ‘மதிமுகமடந்தையர்' என்ற தொடரின் உட்கருத்தை ஈட்டாசிரியர் 'தேசாந்திரம் போன பிரஜை வந்ததால் தாய்முகம் குளிர்ந்திருக்குமாப்போலே பூரண சந்திரன் போலே இருக்கிற முகங்களையுடையவர்கள் வந்து எதிர் கொள்வர்' என்று விளக்குவர் (10)
3. மடைப்பள்ளி வந்த மணம் : இந்த உலகில் மிக்க உயரத்திலமைந்த இடத்தை அடைவதற்குப் படிகளை அமைத்து அவற்றின் வழியாக ஏறிச் செல்வதை நாம் அறிவோம். அறிவியல் வளர்ந்துள்ள இக் காலத்தில் மின்விசையால் இயங்கும் சாதனத்தின் மூலம் விரைவாக மேலேறுகின்றோம். அங்ஙனமே, பரமபதம் என்னும் வீட்டுலகினை அடைவதற்குரிய ஒன்பது நிலைகளைப் படிகளாகக் கற்பித்து விளக்குவர். வேதாந்த தேசிகர் தமது ‘பரமபத சோபானம்’15 (சோபானம்-படி என்ற பிரபந்தத்தில், அவர் கூறும் படிகள்: (1) தத்துவங்கள் முதலியவற்றை வகுத்து - அறிதல் ; (2) மனம் தளர்தல்; (3) உலக இன்பத்தில் ஆசை அறுதல், (4)தம் தீவினைகளின் மிகுதியால் இனிவரக் கிடக்கும் நரக அநுபவம் முதலிய இடர்கட்கு அஞ்சுதல், (5) எம்பெருமான் வீடுபேற்றினை அருள்வதற்குக் காரணமான வழியைக் கடைபிடித்தல்; ( 6) இவ்வுடலினின்றும் ஆன்மா வெளியேறுதல் (7) ஆன்மா அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்; (8) வைகுந்தம் என்னும் திவ்விய உலகினை அடைதல், (9) அங்கு எல்லாம்வல்ல இறைவனைக் கண்ணாரக் கண்டு களித்து அநுபவித்து அந்தப் பேரின்பத்தில் மூழ்கிக் கிடத்தல் -
இந்தத் தத்துவங்கள் யாவும் இடைப்பிள்ளையாகி வந்த எம்பெருமானால் உரைக்கப் பெற்றவையேயாகும். இவற்றின் கருத்தை எம்பெருமானார்.இராமாநுசர் தமது மாபாடியத்தில் (ஸ்ரீபாஷ்யம்)? தெளிவாக்கியுள்ளார். இவற்றையெல்லாம் இராமாதுசருடைய திருமடைப்பள்ளியில் அந்தரங்கத் தொண்டு செய்து எல்லா இரகசியப் பொருள்களையும் ஐயம் திரிபறப் பெற்றவர் கிடாம்பியாச்சான், அவர் வழியாக வந்தது இவண் கூறப்பெறும் சம்பிரதாய வழி. எனவே,
மடைப்பள்ளி வந்த மணம் எங்கள்
வார்த்தையுள் மன்னியதே7
என்று உள்குழைந்து பணிவன்புடன் உரைப்பர்துப்புல் புலவர் திருவரங்கத்தில் எம்பெருமானாரின் திருமடைப்பள்ளியில் அடிமைத் தொழில் செய்தமையால் கிடாம்பியாச்சான் ‘மடைப்பள்ளி ஆச்சான்’ என்ற திருநாமத்தாலும் வழங்கப்பெறுவர்.
4. வைகுந்தம்: முமுட்சு நிலையை அடைந்த சிவான்மா முத்தராய்ச் சேரும் இடம் இது. இந்த இடம் ஆநந்தம் அள விறந்து ஒப்பற்றதாக இருக்கும் பான்மையது. இங்கு திவ்விய கற்பகச் சோலைகள், நானாவித மலர்கள் நிறைந்த பூங்காக்கள் திவ்விய இளமரக்காக்கள், திவ்விய செய்குன்றங்கள், நீராடும் திவ்விய தடாகங்கள், பற்பல போக நிலைகள் முதலியவை நிறைந்திருக்கும். இங்கு மிகவும் இடமகன்ற நிரதிசய ஆநந்தமயமான திருமாமணி மண்டபம் ஒன்று உண்டு. இது உபயவிபூதியிலுள்ளவர்களும் ஒரு மூலையில் அடங்கும்படியான : மிக்க விசாலமானது. இங்குள்ள பொருள்கள் யாவும் சுத்த சத்துவத்தாலானவை. இங்குக் காலம் நடையாடாது; காலை மாலை, பகல், இரவு, இன்று நேற்று என்ற நிலைகள் இங்கு இல்லை. முன் பின் என்ற நிலை இங்கு உண்டு. வீடுபேறு அடைவதற்கேற்ற உபாயங்களை அநுட்டித்து அவன் திருவருளைப் பெற்ற முமுட்சுகள்தாம் இந்தநீள் விசும்பினை அடையமுடியும்.இவர்கள் இந்தப்பூவுலகிற்குத் திரும்பி வருதல் இல்லை. இதனால் இது மீளா உலகம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. பிரளய காலத்தில் இவர்கட்கு அழிவு இல்லை. இறைவன் திருவுளப்படி இவர்கள் எந்த உருவத்தையும் மேற்கொள்வர்.
5. பரமபதநாதன் : இவன் வீற்றிருக்கும் இடம் மேற்குறிப்பிட்ட திருமாமணி மண்டபம். இவன் வீற்றிருக்கும் சீரிய சிங்காதனம் - அரியணை - அற்புதமான கோப்புடையது. பன்னிரண்டு இதழ்களையுடைய நானா சக்தி மயமான திவ்விய செந்தாமரைப் பூவின்மீது விசித்திரமான கட்டிலைக் கொண்டது. இந்தக் கட்டிலின்மீது பல்லாயிரம் சந்திரர்களை உருக்கி வார்த்தாற்போன்ற குளிர்ந்த தன்மையுடைத்தான திருமேனியையுடையதனாய், கல்யாண குணங்கட்கு அந்த மில்லாமையினால் அனந்தன் என்ற திருநாமம் உடையனாய், எல்லாவித அடிமைத் தொழில் புரிபவர்க்கெல்லாம் உபமான நிலமாயிருத்தலால் சேஷன் என்னும் திருநாமமுடையவனாகிய திருஅனந்தாழ்வானாகிய படுக்கையில் வெள்ளிமலையின் உச்சியில் பல்லாயிரம் பகலவன் உதித்தாற்போல் இருக்கும் ஆயிரம்பணாமுடி மண்டலமாகிய சோதி மண்டலத்தின் நடுவில்தான் பரமபத நாதன்-பரவாசுதேவன் வீற்றிருப்பான்; அருள் தேவியான பெரிய பிராட்டியார் வலப்பக்கத்திலும், பொறைதேவியான பூமிப்பிராட்டியாரும் ஆனந்ததேவியான நீளாப்பிராட்டியாரும் இடப்பக்கத்திலும் இருப்பர். இங்கு ஆனந்தன், கருடன், விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) முதலான நித்திய சூரிகளும், இவ்வுலகத்தளைகளினின்றும் விடுபட்டமுத்தரும் அநுபவித்தற்குரியனாய் இருப்பன். வைகுண்ட நாதனுக்கு உருவம் உண்டு. அது திவ்விய மங்கள விக்கிரகம் எனப்படும்.
கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்துள்ளே
வெண்பல் இலகுசுடர், இலகு
மகர குண்டலத்தன்;
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்
நான்கு தோளன், குனிசார்ங்கன்
ஒண்சங்கு கதைவாள் ஆழியான்
ஒருவன் ... (திருவாய் 8.8:1)
[கனிந்து பழுத்து: உள்ளே அகவாயிலே இலகுவிளங்குகின்ற;
இலகுவிலகு - மிக விளங்கி அசைகின்ற; கொண்டல் -
மேகம்; குனி - வளைந்த]
என்ற நம்மாழ்வார் பாசுரப் பகுதியில் இந்தத் திருமேனி காட்டப்பெறுகின்றது. வேதாந்த தேசிகரின் 'தயாசதகத்தில்' இந்த எம்பெருமானின் திருக்கோலம் நன்கு காட்டப் பெறுகின்றது. இடக்கால் தொங்கிய நிலையிலும், வலக்கால் மடிந்த நிலையிலும் இருக்கும். வலக்கை வலது முழங்காலிலும், இடக்கை அனந்தாழ்வான் உடலில் தாங்கிய படியும் இருக்கும் பின்புறத்திலுள்ள இரண்டு கைகளில் திருவாழியும் திருசங்கும் பொலிவு பெறும்.
6. பரமபதத்தில் சீவன்நிலை : முத்தி நிலையிலுள்ள சீவான்மாவுக்குப் பசி, நீர் வேட்கை முதலியன இல்லை. பாவம், முதுமை, துன்பம், இறப்பு முதலியவை அவனை நெருங்கா - முத்தி அடைந்த சீவனின் நிலையை ஆறு உவமைகளால் விளக்குவர் சுவாமிதேசிகன் (1) இராகு என்னும் பாம்பு பற்றிவிட்ட பிறகு கதிரவனின் ஒளி அதிகமாகும். (2) அழுக்கடைந்து நின்ற தரளம் தூய்மை செய்யப் பெற்றபிறகு தன் இயல்பான ஒளியுடன் ஒளிர்கின்றது. (3) கடலில் சென்ற கலம் திசை தப்பிச் சென்று கரைசேர்ந்தவுடன் அதிலுள்ள பயணிகள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. (4)காட்டுத் தீயில் சிக்கித் தவித்து நிற்கும் மதகரி தெய்விகமாய் தீ அணைந்தால் அதினின்றும் வெளியேறியவுடன் அஃது அடையும் மகிழ்ச்சி கூறுந் தரம் அன்று. (5) மடலூரும் தலைவன் தலைவியர் தம் விருப்பம் நிறைவேறப் பெற்றதும் பெருமிதம் கொள்வர். (6) ஒர் அரசன் தன் பிழையால் சிறிது காலம் ஒரு சிறையில் இருக்கப் பெற்றுப் பின்பு பிழையற்றவன் எனத் தீர்ந்து சிறை நீங்கி மீண்டும் தனது அரசுரிமையைப் பெற்றால் அவன் ஆனந்தக் கடலில் மூழ்கி நிற்பான்.அங்ஙனமே இதுகாறும் ஆன்மாவானவன் உண்மையான சொரூபத்தை அறியாமல் செய்து மறைத்து வந்த பிரகிருதியின் உறவு நீங்கப்பெற்றதும் ஆன்மா வைகுந்தத்தில் எம்பெருமானுடன் கலந்து அவனுக்கு அடிமை செய்து ஆனந்தத்தை அநுபவிக்கின்றது. (தே.பி. 151)
கண்டேன் கமல
மலர்ப்பாதம்; காண்டலுமே
விண்டே ஒழிந்த
வினையாயின எல்லாம்
தொண்டே செய்து
என்றுதொழுது வழியொழுகம்
பண்டே பரமன்
பணித்த பணிவகையே (திருவாய்.10.4:9)
[கமலம்- தாமரை, விண்டேபிளவுபட்டு; தொண்டு
அடிமைத் தொழில்; பண்டே முன்பே பணித்த_அருளிச்
செய்த]
என்று செம்மாந்து நிற்கின்றது.
ஒழிவில் காலமெல்லாம்
உடனாய் மன்னி
வழுவிலா அடிமை
செய்ய வேண்டும். (3.3:1)
என்று ஆராத ஆசை நிறைவேறப் பெற்றதைக் கண்டு பெருமிதம் கொள்ளுகின்றது. இந்த அநுபவம் - பகவததுபவம் - ‘பரிபூர்ண பிரம்மாநுபவம்' என்று வேதாந்த நூல்களால் பேசப்பெறும்.