உள்ளடக்கத்துக்குச் செல்

வைணவமும் தமிழும்/வைணவ மந்திரங்கள்

விக்கிமூலம் இலிருந்து
10. வைணவ மந்திரங்கள்

எம்பெருமானைக் கிட்டப்பெற்று. அவனுக்கு அநுபவ கைங்கரியங்களைச் செய்து, அவனுடைய முக உல்லாசத்தைப் பெறவேண்டும் என்னும் இச்சையால் சமுசாரத்தில் வெறுப்புக் கொண்டவனாகிய முமுட்சுக்கு-மோட்சத்தில் விருப்பமுடையவனுக்கு ஆன்மசொரூபம்[1] இன்னது என்றும், அவ்வான்மா நலம் அடைவதற்கு உபாயம்(வழி) இன்னதென்றும், அவ்வழியைப் பற்றுவதனால் உண்டாகும் பயன் இன்னது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றைத் தெரிவிப்பனவே “திருமந்திரம்,துவயம், சரமசுலோகம் என்ற மூன்று மந்திரங்கள். இம்மூன்றும் சகல வேதங்களின் சாரமான பொருளைத் தெரிவிப்பதனாலும், இவற்றின் பெருமையை உணராதார் காதில் விழாதவாறு இவற்றை மறைக்க வேண்டியிருத்தலினாலும் இவை மந்திரங்கள்’ என்ற திருநாமம் பெற்றன.

இம்மூன்று மந்திரங்களுள் (1) திருமந்திரம் முக்கியமானது. ஆதலால் இதனை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். “ஒம் நமோ நாராயணாய’ என்பது திருமந்திரம்[2]. இதில்
  1. 1. ஆன்மசொரூபம்-உடலைக் காட்டிலும் வேறுபட்ட ஆன்மா தனக்கும் பிறருக்கும் உரிமையுடையதாயிராமல் ஈசுவரனுக்கே அடிமைப் பட்டவனாய் (சேஷபூதனாய்) இருத்தல்.
  2. 2. இது பதரிகாசிரமத்தில் இறைவன் நரனாகவும் நாராயணனாகவும் அவதரித்து நானுக்கு நாராயணன் உபதேசித்ததாக வரலாறு, பத்ரிகாசிரமம் இமய மலையிலுள்ள திவ்விய தேசம். 108 இல் ஒன்று.
‘ஓம் நமோ'; ‘நாராயணாய என்ற மூன்று பதங்கள் அடங்கியுள்ளன. இவற்றுள் ‘ஓம்’ என்ற பதத்தின் பொருளையே நம நாராயணாய என்னும் மற்ற இருபதங்களும் நன்கு விரிவுபடுத்துகின்றன. இவ்விரு பதங்களின் பொருளையே துவயம் விரிக்கின்றது. துவயத்தின் பொருளையே ‘சரமசுலோகம் மேலும் விரிக்கின்றது. இதனாலும் திருமந்திரத்தின் முதன்மை விளங்குகின்றதன்றோ? மேலும், இத்திருமந்திரம் முக்கியமாக அர்த்தபஞ்சக ஞானத்தையும், நவவித சம்பந்தஞானத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது[1] மேற்குறிப்பிட்ட மூன்றிலும் ‘ஓம்’ என்ற பிரணவம் சேதநனுடைய சேஷத்துவத்தையும்[2] நமஸ் என்ற நடுப்பதம் ஈசுவரனுடைய பாரதந்திரியத்தையும்[3],'நாராயணாய என்பது சேதநன் ஈசுவரனுக்குப் புரிய வேண்டிய கைங்கரியத்தையும்[4]தெரிவிப்பனவாகும்.

‘ஓம்’ என்ற பிரணவம் இரண்டுநிலைகளைக் கொண்டது. சேர்ந்திருக்கும் நிலையில் ஒர் எழுத்தை யுடையது; பிரிந்திருக்கும் நிலையில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துகளை உடையது. இம்மூன்று எழுத்துகளும் மூன்று பதங்களாய் மூன்று பொருள்களைத் தெரிவிக்கும். அகாரம் பகவானையும் அதில் ஏறி மறைந்துள்ள (தொக்கி நிற்கும்) நான்காம் வேற்றுமை (சதுர்த்தி)-அதாவது நாராயணாய என்பதிலுள்ள ஆய’ என்பது-சேஷத்துவத்தின் அநந்யார்ஹத்துவத்தையும்[5] மகாரம் ஞானவானாகிய சீவனையும் (சேதநனையும்)குறிக்கின்றன.

நமஸ்ஸு என்பதை ந+ம: என்று பிரிக்கலாம். இதில் ம; எனக்கு உரியன் என்றும், ந-அல்லன், அஃதாவது ‘எனக்கு நான் உரியன் அல்லன்’ என்றும் பொருள் கிடைக்கின்றது. எனக்கு நான் உரியன் அல்லன் என்பதனால் ‘பிறனுக்கு (ஈசுவரனுக்கு) உரியன்’ என்பது பெறப்படுகின்றது. இம்முறையில் நமஸ் என்ற பதம் ஈசுவர பாரதந்திரியத்தைத் தெரிவிக்கின்றது என்பது தெளிவு.

‘நாராயணாய’ என்ற பதத்தின் பொருள் ‘நாராயணன்’. இப் பதம் வடசொல். இதில் நார+அயன என்ற இரண்டு பதங்கள் சேர்ந்து ஒரு பதமாக உள்ளது. இதற்கு இரண்டு வகையாகப் புணர்ச்சி இலக்கணம் கூறப்படும்.

முதல் வகை : நாரணாம் + அயநம் என்பது, தத்புருஷஸமாஸம், இது வேற்றுமைப்புணர்ச்சி எனப்படும். இது நாரங்களுக்கு அயநமாயிருப்பவன் என்ற பொருளைத் தரும், அயநம் என்ற சொல் உபாயம், பலன், ஆதாரம் என்ற மூன்று பொருள்களை உணர்த்தும். நரனாகிய சீவான்மாவின் கூட்டம் ‘நாரம்’ எனப்படும். எம்பெருமான் சேதநர்களின் கூட்டத்தின் உபாயமாகவும் அநுபவிக்கப்படும் பலனாகவும், தன்னிடமிருந்து சேதாநாசேதநங்களுக்கு ஆதாரமாகவும் ஆகின்றான் என்பது வேற்றுமைப் புணர்ச்சியால் ஏற்பட்டது.
  1. 3. இவற்றின் விளக்கம் வேறோர் இடத்தில் தரப்பெற்றுள்ளது.
  2. 4. சேஷத்துவம்- பிறருக்கு (ஈசுவரனுக்கு) அடிமையாயிருத்தல் என்பது பொருள்.
  3. 5. பாரதந்திரியம்-பரனுக்கு (பகவானுக்கு) அடிமை என்பது பொருள்.
  4. 6. கைங்கரியம்:(கிங்கரன்-வேலையாள்) அவன் செய்யும் தொழில் கைங்கரியம். அதாவது அடிமைத்தொழில், இதனைச் சேதநன் ஈசுவரனுக்குச் செய்வது ஈசுவரனுடைய முக உல்லாசத்தின் பொருட்டு
  5. 7. அநந்யார்ஹத்துவம் - மற்றவருக்கன்றி ஈசுவரனுக்கே உரித்தாயிருத்தல்.
இரண்டாம் வகை: நார+அயநம்+யஸ்ய என்பது, பஹு விரீஹி ஸமாசம். இஃது அன்மொழித்தொகை எனப்படும். இதனால் நாரங்களை அயநமாக உடையவன் என்ற பொருள் கிடைக்கும். அயந’ பதம் பிரவேசிக்கப்படும் பொருள் என்ற பொருளைத் தரும். ஆகவே சர்வேசுவரன் சேதநா சேதங்களைப் பிரவேசிக்கப்படும் பொருளாகக் கொண்டவன் என்று அன்மொழித் தொகையால் ஏற்பட்டது.

மேலும், ‘அயந’ என்ற பதம் வசிக்குமிடம் எனவும் பொருள்படும். எனவே, முற்கூறியபடி முதல் வகை இலக்கணப் புணர்ச்சியால் சேதந - அசேதநங்களுக்கு இருப்பிடமானவன் என்றும், இரண்டாவது வகை இலக்கணப்படி அவற்றைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டவன் என்றும் பெரியோர் பொருள் கூறுவதுண்டு. இவ்வாறாயின் முதற்பொருளில் சேதந அசேதநங்கள் இல்லாதவிடத்திலும் எங்கும் சர்வேசுவரன் உளன் என்று தேறும். இது ‘பஹிர்வியாப்தி’ எனப்படும்.இரண்டாவது பொருளில் சேதநஅசேததங்கள் உள்ளவிடத்தில் தான் இல்லை என்னவொண்ணாதபடி சர்வேசுவரன் கலந்து நிற்பவன் என்று தேறும். இஃது அந்தர்வியாப்தி எனப்படும்.

திருமந்திரத்தின் மூன்று பதங்களில் ‘ஓம்’ என்பதில் ஒர் எழுத்தும் ‘நம’ என்பதில் இரண்டு எழுத்தும், ‘நாராயணாய’ என்பதில் ஐந்து எழுத்துகளும் உள்ளன. இவற்றின் கூட்டுத் தொகை 1+2+3=8 என்றவாறு எட்டு எழுத்துகளாக அமைகின்றது. இதனால் இதனைத் தமிழில் எட்டெழுத்து மந்திரம்’ - என்றும், வடமொழியில் ‘அஷ்டாட்சர மந்திரம்’ என்றும் வழங்குகின்றது. (அஷ்டம்-எட்டு அட்சரம் எழுத்து.

பெருமையும் சிறப்பும் : மந்திரங்கள் அனைத்திலும் சிறந்தது திருமந்திரம். பல சிறப்பான பொருள்களைக் கொண்டது; எல்லாப் பலன்களையும் அளிக்கவல்லது. மாதர்களும், நான்காம் வருணத்தாரும் இதனை அதுசந்திக் கலாம். இந்த மந்திரம் ஒரு முழுமையையும் பெற்றுள்ளது. இவ்வுலகிலுள்ள விண்ணும் மண்ணும் அவற்றிலுள்ள உயிர்களும் பொருள்களும் எம்பெருமானுடைய விபூதிகள். தத்துவமான சரீர-சரீரிபாவனை (உயிர் உடல் உறவு) இதனை நன்கு விளக்கும். இந்த உயிர்களுள்ளு. பொருள்க ளுள்ளும் ஈசுவரன் இருத்தலால் அவற்றை வியாப்பியப் பொருள் என்று வழங்குவர். ஈசுவரன் வியாபகப்பொருள் ஆகின்றான். இங்ஙனம் எல்லாப் பொருள்களிலும் இருக்கும் அவனுடைய இருப்பு வியாப்தி என்றும்,அவன் ஒவ்வொரு பொருளிலும் அந்தர்யாமியாக இருப்பதை வியாப்பித் திருக்கும் விதம் என்றும் கூறப்பெறும். உடலுக்கு உயிர் சத்தைத் தருவதுபோல ஈசுவரனும் ஒவ்வோர் உயிர்ப்பொருளிலும் ஆன்மாவாக இருந்து அந்தந்தப் பொருளின் சத்தை - நிர்வகிப்பதையே பயனாக அமைகின்றான்.

திருமந்திரமாகிய நாராயணபதத்தை அருமறைகளும் விரும்பின. முனிவர்களும் ஆசாரியர்களும் ஆழ்வார்களும் விரும்பினர். ஆசாரியர்களுள் தங்களை வந்தடைந்தவர்கட்கு உபதேசித்து அவர்களை உய்வித்தனர்.

இம் மந்திரத்தின் பொருளான ஈசுவரனைக் காட்டிலும் இம் மந்திரத்தின் பெருமை மிகச் சிறந்தது."வாச்யப்பிரபாவம் போலன்று. வாசகப் பிரபாவம்” (முமுட்சு-14, என்று முமுட் சுப்படியும் பேசும்.(பிரபாவம்-மேன்மை). இத்திருமந்திரத்திற்கு உரியவனாகச் சொல்லப்பெறும் எம்பெருமான் அருகிலில் லாமல் தொலைவிலிருப்பினும் அவனைப்பற்றிக் கூறும் இத் திருநாமம் அருகிலிருந்து தன்னைப் பக்தியுடன் சொன்னவர் களுடையவிருப்பங்களை நிறைவேற்றும்.திரெளபதி "கோவிந்தா!" என்று கூறியதும் அவளுடைய புடவை சுரந்ததல்லவா?

இம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமின்றிச் சொன்னாலும், தம் குழந்தைகட்கு இப்பெயரையிட்டு அழைத்தாலும், பரிகாசமாகவோ, இழிவாகவோ பொரு ளுணர்ச்சியின்றிச் சொன்னாலும் காக்கும் செயலினின்றும் தவறாது. திருமங்கையாழ்வார் இத்திருநாமத்தின் பெருமையை - மகிமையை - “குலந்தரும் செல்வம்” (பெரிதிரு. 11:9) என்ற பாசுரத்தால் வெளியிட் டுள்ளதை நினைக்கலாம்.

(2) துவயம்: எல்லாச் சாத்திரங்களும் ஒருவனுக்குத் தேகத்தாலே பேறு கிடைக்கும் என்று ஒருமுகமாகப் பேசும். திருமந்திரம் ஆன்மாவால்தான் அப்பேறு கிட்டும் என்று கூறும். சரமசுலோகம் ஈசுவரனாலேயே அப்பேறு கிடைக்கும் என்று அறுதியிடும். ஆனால், துவய மந்திரமோ ஒருவனுக்குப்பேறு கிடைப்பது பெரியபிராட்டியாராலே என்று இயம்பும். (முமுட்சு 117) 'துவயம்' என்பதற்கு இர்ண்டு என்பது பொருள்.

ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நம;!

என்பது துவயமந்திரம். இதில் இரண்டு வாக்கியங்கள் அமைந்திருத்தலின் துவயம் என்று திருநாமம் பெற்றது. இந்த இரண்டு வாக்கியங்களும் கடவல்லியில்(கடஉபநிடதம்) இரண்டிடத்திலிருந்து ஒன்று திரட்டி எம்பெருமானால் ’‘வெளியிடப்பெற்றதால் இம்மந்திரம் எல்லாச் சூக்திகளிலும் சிறந்து நிற்பதாகப் பெரியோர்கள் கருதுவர். இதனை ஒருகால் உச்சரித்தாலும் வீடுபேறு வரையிலுள்ள எல்லாப் பலன்களையும் பெறலாம். இதனால் இது ‘மந்திர இரத்தினம்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றது.

இதன் பொருளை விளக்கும்போக்கில் பிள்ளை உலக ஆசிரியர்,

“இதன் முற்கூற்றால், பெரியபிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது; பிற்கூற்றால் அச்சேர்த்தியிலே அடிமை இரக்கிறது.” (முமுட்சு 122)

என்று சூக்தியிட்டு விளக்குவர். இதில் முதல் வாக்கியத்தால் “பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரனுடைய இரண்டு திருவடிகளையும் உபாயமாகப் பற்றுகின்றேன்” என்னும் பொருள் கிடைக்கின்றது. இரண்டாவது வாக்கியத்தால் “பெரியபிராட்டியாரும் ஈசுவரனுமான சேர்த்தியில் என்றும் கைங்கரியத்தைப் புரிவேனாக” என்னும் பொருள் கிடைக் கின்றது. அதாவது முதல் வாக்கியம் உபாயத்தையும், இரண்டாவது வாக்கியம் பலனையும் வெளியிடுகின்றன என்று இதனைச் சுருக்கமாக உரைக்கலாம்.

துவயமந்திரத்தின் முக்கியமான பகுதி பெரிய பிராட்டியார் புருஷகாரபூதை[1]யாகச் செயற்படுவது சேதநன் தான் எம்பெருமானுக்குச் சேஷபூதன்(அடிமை) ஆகவும், எம்பெருமான் தனக்குச் சேஷி (தலைவன்) யாகவும் இருக்கும்
  1. 8. புருஷகார பூதை- தகவுரை கூறுபவள்.
தொடர்பை நன்கு உணர்ந்தவன். ஆயினும், “இவள் தாயாம் தன்மையால் வந்த வாத்சல்யத்தை மிகுதியாக உடையவள்; தந்தையாகிய எம்பெருமானைப்போல் வன்மையும் மென்மை யும் கலந்திராமல் மென்மையே வடிவு கொண்டவள்; பிறர் கண்குழிவு காணமாட்டாத தன்மையள்; தீய மனமுடையவர் களையும் மருவித் தொழும் மனமுடையவர்களாக்குகைக்குத் தக்க செயல் புரிபவள் குற்றமுடையவர்களும் கூசாமல் வந்து காலிலே விழலாம்படி இருப்பவள். ஆண்மையால் வந்த வன்மையோடே தந்தையாம் தன்மையால் வந்த நலம் செயும் தன்மையுடையவனாயும் குற்றங்களைப் பத்துப் பத்தாகக் கணக்கிட்டுக் கொடிய தண்டனைகளை விதிக்கும் செய்கையாலே, குற்றமுடையவர்கள் முன் செல்லக் குடல்கரிக்கும்படி இருக்கும் சர்வேசுவரனைத் தக்க வழிகளாலே குற்றங்கள் அனைத்தையும் மறப்பித்துச் சேர்ப்பிக்கும் தன்மையள். இத்தகையவள் பாவமே செய்து பாவிகளான மக்கள் சர்வேசுவரனைப் பற்றுங்கால் புருஷகாரமாக வேண்டும்[1] என்பது மணவாளமாமுனிகளின் கருத்தாகும். இதனைப் பிள்ளை உலக ஆசிரியர்,

      “நீரிலே நெருப்புக் கிளருமாப்போலே, குளிர்ந்த திரு
      வுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால்
      பொறுப்பது இவளுக்காக” (முமுட்சு 127)

என்று விளக்குவர். பகவான் மிகவும் அருள் நிறைந்த திருவுள்ளத்தனாய் இருப்பினும், சேதநன் செய்த அளவுகடந்த குற்றங்கள், குளிர்ந்த நீரில் நெருப்புப் பிறத்தல் போன்று, அவனுக்குச் சீற்றத்தை உண்டாக்குகின்றன. அச்சீற்றத்தை ’‘மாற்றிக் கொண்டு இவனுடைய குற்றங்களைப் பொறுப்பது பிராட்டியாருக்காகவே என்பதாகும்.

பிராட்டியார் உலகஉயிர்கட்குத் தாயாக இருப்பதால், இவர்களுடைய துக்கத்தைப் பொறாதவராயும் இருக்கின்றார். பகவானுக்குப் பத்தினியாக இருப்பதால் அம்முறையில் அவனுக்கு இனிய பொருளாக இருக்கின்றார். இக் காராணத்தால் இவர் அருள் நிறைந்த புருஷகாரமாக அமைந்து விடுகின்றார். இதனால் இருவரையும் உபதேசத்தால் திருத்துகின்றார். பூர்வசனபூஷணம் இதனை,

'இருவரையும் திருத்துவது
உபதேசத்தாலே' (12)

என்று பகர்கின்றது.

பிராட்டியார் இறைவனை நோக்கிப் பேசுவது; இவனுடைய குற்றங்களைக் கணக்கிட்டு நீர் இப்படித் தள்ளிக் கதவடைத்தால் இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ? உமக்கும் இவனுக்கும் உண்டான உறவு முறையைப் பார்த்தால் ‘உறவேல்நமக்குஇங்குஒழிக்க ஒழியாது’ (திருப்28) என்றவாறு குடநீர் வழிந்தாலும் போகாதது ஒன்றன்றோ? உடைமையாக இருக்கின்ற இவனை அடைதல் சுவாமியான[2] பேறாக அன்றோ இருப்பது ‘எதிர்சூழல் புக்குத்’ (திருவாய் 2.7.6) திரிகின்ற உமக்கு நான் சொல்ல வேண்டுமோ? காப்பாற்ற வேண்டும் என்று விருப்பத்தோடு வந்த இவனைக் காப்பாற்றாத போது ‘எல்லாப் பொருள்களையும் காப்பவர்’ என்ற உம்முடைய தன்மை குலைந்து போகாதோ? அநாதி காலமாக நம்முடைய ஆணையை மீறித் தன் இச்சையின்படி ஒழுகிப் போந்த இவனைக் குற்றங்களுக்கேற்பத் தண்டிக்காமல் நாம் ஏற்றுக் கொள்ளின் நாம் ஏற்படுத்திய சாத்திரங்களின் மரியாதை குலையாதோ? என்றல்லவா நும் திருவுள்ளத்தில் ஒடுகின்றது? அங்கனமாயின் நும்மை நாடி வந்த இவனைக் காக்காமல் இவனுடைய குற்றங்களை மட்டிலும் நோக்கித் தண்டித்தால் உம்முடைய அருட்குணம் நிலைப்பது எவ்வாறு? இவனைக் காப்பாற்றியபொழுதன்றோ உம் அருட்குணம் ஒளிபெறும்? “ இவனைத் தண்டிக்கவில்லையேல் சாத்திரம் நிலையாது; இவனைக் காக்கவில்லையேல் அருள் முதலிய குணங்கள் ஒளி பெறா” என்று அஞ்ச வேண்டா, உம்மைச் சிறிதும் நோக்கிப் பாராது தன்னிச்சையில் செல்பவனிடம் சாத்திரத்தைப் பயன்படுத்துவீர்; உம்மை அன்புடன் நாடி வந்த இவனைப் பாவங்களினின்றும் நீக்கிக் காப்பாற்றுவீர். இப்படிச் செய்தால் சாத்திரமும் பழுது படாது; உம்முடைய அருட்குணமும் உயிர் பெற்றுத் துலங்கும், இவ்வாறு எம்பெருமானுக்கு ஏற்ற பற்பல இனிய சொற்களைப் பகர்ந்து, அவன் சினத்தை மாற்றி, அவனுக்குச் சேதநனிடம் அருள் பிறக்குமாறு செய்வர். இவ்வினிய சொற்களாலும் ஈசுவரனது நெஞ்சம் இளகவில்லையேல், பிராட்டியார் தம் அழகைக் காட்டி அவனைத் தம் வசப்படுத்திச் சேதநனை அங்கீகரிக்குமாறு செய்வர்.

பிராட்டியார் சேதநனை நோக்கிப் பேசுவது: ‘உன் குற்றங்களின் மிகுதியைப் பார்த்தால், உனக்கு ஓரிடத்திலும் காலூன்ற இடம் இல்லை. ஈசுவரன் யாதொன்றாலும் தடை செய்யப்பெறாத சுவாதந்திரனாதலால் குற்றங்களைப் பத்துப் பத்தாகக் கணக்கிட்டும் அறுத்து அறுத்து நுகர்விப்பான். இதற்கு நீ தப்ப வேண்டுமானால் அவன் திருவடிகளில் தலை சாய்க்கையைத் தவிர வேறு வழி இல்லை. குற்றங்கள் நிறைந்த உன்னை அவன் ஏற்றுக் கொள்வானோ? என்ற ஐயம் வேண்டா, ருசி பிறந்த அளவில் உன்னுடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுப்பான்; இனியவையாகவும், கொள்ளுதற்கு ஈடானவு மான குணங்களால் நிறைந்தவன் என்ற புகழ் பெற்றவன். ஆகவே நீ உய்ய வேண்டுமானால் அவனை அடைந்திடுக” என்று நல்லுபதேசம் செய்வார். இதனைப் பிள்ளை உலக ஆசிரியர்,

         “உபதேசத்தால் மீளாதபோது
         சேதநனை அருளாலே திருத்தும்;
         ஈசுவரனை அழகாலே திருத்தும்"[3]

என்று அழகாக விளக்குவர். பெரிய மிடுக்கனும் முரடனுமான அதுமனையே தம் உபதேசத்தாலே பொறுக்குமாறு செய்தவர்”[4] தம் அழகில் சிக்குண்டு தம்மிடம் அளவுகடந்த அன்புடையவனும்,[5] தம் சொல்லின்படி நடப்பவனுமான பெருமானைப் பொறுக்குமாறு செய்வார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

துவயமந்திரத்தின் முதல் வாக்கியத்தில் பூ + மந் + நாராயண + சரணெள+ சரணம்+ ப்ரபத்யே என்ற ஆறு பதங்களும் பதினைந்து எழுத்துகளும் இரண்டாம் வாக்கியத்தில் ஸ்ரீமதே+நாராயண+ஆய+நம: என்ற நான்கு பதங்களும், பத்து எழுத்துகளும் உள்ளன. (3) சரமசுலோகம் : பாரதப் பெரும்போர் தொடங்குவதற்கு முன்னர் கண்ணன் தேர்த்தட்டிலிருந்துகொண்டு காண்டீபனுக்கு உபதேசித்த கீதையில் 18-ஆவது இயலின் இறுதி சுலோகமாக அமைவது (கீதை-18:66)இது. சரமம் - இறுதி.

           “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ!
           அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
           மாசுச : !”

என்பது. இதனை வைணவப் பெருமக்கள் அப்படியே மூன்றாவது மந்திரமாக எடுத்துக்கொண்டு விட்டனர். இந்த சுலோகத்தின் பிண்டப்பொருள் : “சாத்திரங்களைப் பயின்று” சிறப்பான ஞானத்தைப் பெற்றவர்களே கர்மயோகம், ஞான யோகம், பக்தியோகம் ஆகியவற்றைச் செவ்வனே அநுட்டிக்க முடியும். மற்றவர்கள் 'இவற்றை நம்மால் அநுட்டிக்க முடியாது' என்று நினைத்துத் தாம் விலக்கநேரும் ஆதலின் சிறந்த அவ்வுபாயங்களை அநுட்டிக்கக்கடவர். “அதற்கு ஆற்றல் அற்றவர்கள் என்னைச் சரண் அடைந்தால் நான் அந்தந்த அரிய உபாயங்களின் இடத்தில் நின்று அவ்வற்றின் பலனைக் கொடுப்பேன்” என்பது.

இந்த மந்திரத்தில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்கியத்தில் ஸர்வதர்மாந்+பரித்யஜ்ய+மாம்+ ஏகம்+சரணம்:வ்ரஜ என்ற ஆறு பதங்களும், இரண்டாம் வாக்கியத்தில் அஹம் +த்வா+ஸ்ர்வபாபேப்யோ-மோக்ஷயிஷ்யாமி + மாசுச: என்னும் ஐந்து பதங்களும் இரண்டு வாக்கியங்களிலும் முப்பத்திரண்டு எழுத்துகளும் உள்ளன.

துவயத்துக்கும் சரமசுலோகத்துக்கும் உள்ள தொடர்பு: (1)துவயத்தின் முன்வாக்கியம் எம்பெருமானை உபாயமாகப் பற்றுகிறேன் என்பதைச் சொல்லுகின்றது. இதைத்தான் சரமசுலோகத்தின் முன் வாக்கியம் விதிமுகத்தால் விளக்குகின்றது. இங்ஙனம் கட்டளை இடுங்கால் பல தருமங்களை உபதேசித்து அவற்றை நிலைநிறுத்துபவனான பகவானே, மற்ற தருமங்களை விட்டுத் தன்னையே பற்றுமாறு கூறுவதனால் இஃது அவனுக்கு உகந்த தருமம் என்பது புலப்படுகின்றது. இவ்வாறு அவனைப் பற்றும்போது மற்ற தருமங்களை விட்டே பற்ற வேண்டியிருத்தலின் அவற்றின் விடுகையையும், தாம் எம்பெருமானைப் பற்றும் பற்றும் தன் பேற்றிற்கு உபாய மன்று, அவனே உபாயம் என்னும் அவன் உபாயத் தன்மையையும் இவ்வாக்கியம் தெளிவாகத் தெரிவிக்கின்றதைக் காணலாம்.

துவயத்தின் பின் வாக்கியம் பெரிய பிராட்டியாரும் எம் பெருமானும் ஆகிய சோத்தியில் எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக’ என்பதைப் பகருகின்றது. இத்தொண்டு எம் பெருமானை அடையவொட்டாமல் தடைசெய்யும் பாவங்கள் கழிந்த காலத்திலேயே ஏற்படும். அப் பாவங்களின் கழிவைச் சரமசுலோகத்தின் பின் வாக்கியம் தெளிவாகக் கூறுகின்றது. இவற்றால் இரண்டு மந்திரங்களின் தொடர்பு அறியப்படும்.

(2) பாரதப் பெரும்போரில் தேர்த் தட்டில் இருந்த பார்த்தன் தனக்குச் சாரதியாக இருந்த பரந்தாமனைச் சரண் அடைந்து தனக்குமுன் நிற்கும் உறவினர்கள், ஆசாரியர்கள் இவர்களைக் கொல்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி நிலை குலைந்து பரந்தாமனைச் சரணடைந்து தனக்கு இதத்தை உபதேசிக்குமாறு வேண்டினான். அவனும் பார்த்தன்மீது கருணைகொண்டு கீதையின் வாயிலாக ஆன்ம சொரூபத்தையும் கர்ம ஞான பக்திகளாகிய உபாயங்களையும் விரிவாக உபதேசித்தான். இவற்றைச்செவிமடுத்த பார்த்தன் பக்தியோகம் கடினமாயும் காலங்கடந்து பலன் தருவதாயும் இருப்பதைக் கண்டு மீண்டும் கலக்கமடைய, பார்த்தசாரதியும் எளிமையாக மேற்கொள்ளக் கூடியதும் சொரூபத்திற்கு ஏற்றதும், விரைவில் பலன் தரக்கூடியதுமான பிரபத்திநெறியை (சரணாகதி தத்துவத்தை)ப் போதித்தான். இஃது இறுதி உபாயமாக இருத்தலினாலும் கீதையின் இறுதி சுலோகமாக (18:66) அமைந்திருப்பதினாலும் இவற்றைத் தெரிவிக்கும் சுலோகம்’ ‘சரமசுலோகம்’ என்று திருநாமம் பெறுவதாயிற்று.

(3)இச் சுலோகத்தின் முன் வாக்கியம் பிரபத்திக்கு அதிகாரியான சேதநன் செய்யவேண்டியவை இன்னவை என்பதை விளக்குகின்றது. பின் வாக்கியம் உபாயபூதனான தான் (ஈசுவரன்) தன்னைப் பற்றின சேததன் செய்ய வேண்டிய வற்றைத் தெரிவிக்கின்றது. இதற்குச் சேதநனிடம் அமைய வேண்டியவை ஆகிஞ்சன்னியமும் அநந்யகதித்துவமும், ஆகிஞ்சன்யம் என்பது, கன்மஞானபக்திகளாகின்ற மற்ற உபாயங்களின் தொடர்பற்று இருத்தல், அநந்யகதித்துவம் என்பது, ஆன்ம இரட்சணத்திற்கு எம்பெருமானைத் தவிர வேறோர் இரட்சகப்பொருள் அற்றிருத்தல், ஆகிஞ்சன் னியத்தை ‘சர்வ தர்மாந்பரித்யஜ்ய’ என்ற தொடரால் தெரிவிக்கின்றான். அநந்யகதித்துவத்தை மாமேகம் சரணம் விரஜ’ என்ற தொடரில் அறிவிக்கின்றான்.இதனைத்தான் புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ (6.10:10) என்ற திருவாய்மொழிப் பாசுரப் பகுதியில் தெரிவிக்கின்றார் ஆழ்வார்.

இஃதன்றியும் பகவானைப் பற்றும் இப்பற்றுதலைத் தன்பேற்றிற்கு உபாயமாகக்கொள்ளின் எம்பெருமானின் வேறு பட்டதாகிய இப்பற்றுதலில் (அதாவது வேறு உபாயத்தில்) இவனுக்குத் தொடர்பு ஏற்படுகின்றது. இதனால் 'ஆகிஞ் சன்னியம்' நழுவி விடும். ஆதலின் இப்பற்றுதல் உபாயமன்று என்பதை 'ஏக' என்ற பதத்தில் வெளியிடுகின்றான் பகவான். ஆக, இச் சேதநனுக்கு எம்பெருமான் உபாயப் பொருளா யிருப்பினும் ஆகிஞ்சன்னியம், அநந்யகதித்துவம் ஆகிய இரண்டும் கைகூடுதற்பொருட்டு இவன் மற்ற உபாயங்களை விடுகையும், அவனையே உபாயமாகப் பற்றுகையும், அவனைப் பற்றும் பற்றுகையை உபாயமாக நினையாமையும், இவனுக்கு இன்றியமையாது வேண்டற்பாலனவாகும். இந்த ஆகிஞ்சன்னி யமும், அநந்யகதித்துவமும் சித்திப்பதற்காக இவன் செய்ய வேண்டுவன இவையேயாகும். இந்த மந்திரத்தின் முன் வாக்கியம் இவற்றையே தெரிவிக்கின்றது.

(4). சேதநன் இன்றியமையாது செய்ய வேண்டுவது பகவானாகிய உபாயத்தைத் தனக்கு உபாயமாகப் பற்றி இருத்தலேயாகும். இதனை மற்ற உபாயங்களை விடுதலாகின்ற அங்கத்தோடு சேர்த்தே விதிக்கின்றான். இதன் விளக்கம் மற்ற உபாயங்களைச் செய்தற்கேற்ற அறிவு ஆற்றல் உடையவர்கள் மற்ற உபாயங்களைச் செய்தேயாக வேண்டும் என்றும், அவை அற்றவர்களே எம்பெருமானாகின்ற தன்னை உபயமாகப் பற்ற வேண்டும் என்றும் அவன் கூறுகின்றான் என்பதாகச் சில ஆசாரியப் பெருமக்கள் கருதுகின்றனர். இஃது 'அநுவாத பட்சம்' என்று கூறப்பெறும். ஆனால் பிள்ளை உலக ஆசிரியர் அங்ஙனம் திருவுள்ளம் பற்றாது வேறு விதமாகக் கருதுவர். அவர் “மற்ற உபாயங்களைச் செய்வதற்கு அறிவு ஆற்றல்கள் தமக்கு இருப்பினும், ‘நம:' பதத்தில் சொல்லுகிறபடி தம் அத்தியந்த பாரதந்திரியத்திய 14நிலையை அறிந்தே சான்றோர், அவற்றை விட்டே எம்பெருமானைப் பற்றுதல் பொருத்த முடையது” எனக் கருதுவர். இதுவே 'விதிபட்சம்' ஆகும்.

(5). விருப்பத்தினால் நிகழக்கூடியதான இந்தப் பிரபத்தி சாதனத்திற்கு “இதைப்பற்று” என்ற விதியும் தேவை. சுவையுள்ள பாலை நோய்க்கு மருந்தாகக் கொள்ளும்படி கூறினால் நோயாளி அதை விரைவாக உட்கொள்ளுவதற்கு இடம் உண்டாகும் அல்லவா? அங்ஙனமே சொரூபத்திற்குச் சேராததாயும், சிரமப்பட்டுச் செய்யக் கூடியதாயும் உள்ள மற்ற உபாயங்களைப் போலல்லாமல் எளிதாகச் செய்யக்கூடியதாயும் விரும்பத்தக்கதாயுமுள்ள இவ்வுபாய்த்திற்குச் “செய்’ என்னும் கட்டளையும் இட்டால் இதனை விரைவில் மேற் கொள்ளுவதற்கு இடம் தந்து நிற்கும் அல்லவா?


  1. 9. நிவச.பூஷ-7 இன் உரை (புருடோததம நாயுடு பதிப்பு).
  2. 10. சுவாமி-சொம்மையுடையவன் சுவாமி, சொம்-சொத்து, உடைமை.
  3. 11. ரீவச. புஷ14 (புருஷோத்தம நாயுடு பதிப்பு).
  4. 12. அசோகவனத்தில் அநுமன்பிராட்டியை இம்சித்த அரக்கிமாரைத் தம்மைத் துன்புறுத்தியது அரசாணைப்படியேயன்றித் தாமே பிழை செய்திலர் என்று மாருதியைச் சமாதானப்படுத்தினர் என்பது இராமாயண நிகழ்ச்சி.
  5. 13. திருவிம்பால் கொண்டவனாதலால்திற்ால் ஆளன் என்று நகைச்சுவையுடன் கூறுவர் கவிராஜ பண்டிதர் ஜகவீரபாண்டியனார்.