வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி/நாளேடுகளில் செய்திகள்
இணைப்பு–3
சுதேசியமும் வ. உ. சி.யும்
நாம் அன்னிய நாட்டுச் சாமான்கள் வாங்குதலாகிய கொடிய செய்கையை முற்றிலும் விலக்கி, ஜாஸ்தி விலை கொடுத்தாகிலும் சுதேசிய சாமான்களையே வாங்க வேண்டு மென்றும், இவ்விதமாய் நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து நம்முடைய கைத்தொழிலை ஆதரித்தாற்றான் நாம் தற்காலம் நஷ்டத்திற்குட்பட்ட போதிலும் பிற்பாடு மிகுந்த இலாபத்திற்குள்ளாவோமென்றும், இவ்விதந்தான், ஜெர்மனி அமெரிக்கா, ஜப்பான் இவை போன்ற நாடுகள் தற்காலம் பெருமை பெற்று விளங்குகின்றனவென்றும், தற்காலத்தில் இந்தியாவிலுள்ள 30 கோடி ஜனங்களில் கோடி ஜனங்கள் ஒருவேளை வடிகஞ்சியினால் ஜீவிக்கின்றார்களென்றும்,112 கோடி ஜனங்கள் வரை அதுவுமில்லாமல் மிகவும் வருந்தியிருக்கிறார்களென்றும், மேலும் இந்தியாவில் பெரும்பான்மையோர் விவசாயத்தையே நம்பி, வர்த்தகத்தையும், கைத்தொழிலையும் முற்றிலும் மறந்து மிகவும் சோம்பேறிகளாய்த் திரிகின்றார்களென்றும், முன்னிருந்த நிலைமைக்கு அனைவரும் ஒருங்கு சேர்ந்து பாடுபட்டு நமது கைத்தொழிலையும், வர்த்தகத்தையும் நாளடைவில் அபிவிருத்திச் செய்யப்புகின், அங்ஙனமே நமக்கு நற்காலம் பிறந்து நமது அவாக்களையெல்லாம் முற்றிலும் தீர்த்துக் கொள்ளலாமென்றும், இன்னும் இவை போன்ற இந்தியா சம்பந்தமான அநேக காரமான விஷயங்களை எல்லாம் எடுத்துக் கூறிக் கடைசியாகப் பொது நன்மைக்காகச் சென்னையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதேசீய நிதிக்கு ஜனங்களனைவரும் சந்துஷ்டியான காலங்களில் அவர்களாலியன்ற பொருளுதவி செய்ய வேண்டுமென்றும் கூறி முடித்தார்.
சுதேசமித்திரன், 12 அக்டோபர் 1906
திருநெல்வேலி ராஜத் துவேஷக் கேஸ்களில் சிஷைகள்
ஒருவருக்கு 10 வருஷமும், மற்றவருக்கு ஆயுசு பரியந்தமும் தீபாந்தர சிக்ஷை?, நினைக்கையிலேயே மயிர்க்கூச்செரி கிறது; கைநடுங்குகிறது. இந்தத் துக்கத்தைத் தென் இந்திய ஜனங்கள் முக்கியமாய் சிதம்பரம் பிள்ளையை அறிந்த தமிழ்நாட்டு ஜனங்கள் எப்படிச் சகிப்பார்கள்? ராஜத்துவேஷக் குற்றங்கள் நம் தேசத்தில் இதுவரையில் அடிக்கடி நேரிடுவதில்லை. நமக்கு ஆப்த நேசராய், தமது ஜன்ம தேசம் முதலிலும் இந்தியா இரண்டாவதுமாய்த் தமது இருதயத்தில் குடிகொண்டிருக்கிறதென்று சொல்லிக் கொண்டு வந்த லார்ட் கர்ஸான் ஏழு வருஷம் ஆட்சி நடத்தினதின் பலனாக ராஜத் துவேஷக் குற்றங்கள் நேரிட்டு, ஆங்கிலேய மாஜிஸ்ட்ரேட்டுகளால் தண்டிக்கப்பட்டு வருகின்றன. ஒரு கேசிலும் இந்தக் கொடுமையான சிக்ஷைகள் விதிக்கப்படவில்லை. பாலகங்காதர திலகர் 1897ஆம் வருஷத்தில் தண்டிக்கப்பட்டபோது–அவருக்கு 112 வருஷங் கடுங்காவல் விதிக்கப்பட்டது. பிறகு ஒரு வருஷமாகக் கவர்மெண்டால் குறைக்கப்பட்டது. பிறகு நேரிட்ட கேஸ்களிலும், ஒரு வருஷம் இரண்டு வருஷம் காவல் தண்டனை விதிக்கப்பட்டதேயன்றி இந்தப் பயங்கரமான சிக்ஷைகள் விதிக்கப்பட்டதில்லை. பம்பாய் ராஜதானியில் ஒரு பத்திராசிரியர் மிகுந்த வயது சென்றவர் அவரை ஸெஷன் ஜட்ஜி 14 வருஷம் தீபாந்தர சிக்ஷை செய்தார். அது ஹைகோர்ட்டில் ஒரு வருஷமாக மாற்றப்பட்டது. பஞ்சாப்பிலும் வங்காளத்திலும் ராஜத்துவேஷக் குற்றங்கள் செய்தவர்களுக்கும் இப்படிப்பட்ட தண்டனைகள் இல்லை. “ஸ்வராஜ்யா” என்ற பம்பாய்ப் பத்திரிக்கைக்கு இரண்டு குற்றங்களுக்கு 3 வருஷம் கடுங்காவல் விதிக்கப்பட்டது. ராஜத்துவேஷக் குற்றஞ் செய்ததாக விசாரிக்கப்பட்ட இந்தியர் எவரும் இதுவரையில் தண்டனையடையாமல் விடுபட்டதாக நாமறியோம். ஒவ்வொரு கேஸிலும் கடுமையான தண்டனையே விதிக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி கேஸ்களிலும் கொடுந்தண்டனை விதிக்கப்படுமென்றே ஜனங்கள் சொல்லிக் கொண்ட போதிலும், இப்படிப்பட்ட அசுரத் தண்டனைகளை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. கவர்ன்மெண்ட் பக்கம் கேஸ்களை நடத்தின மிஸ்டர் பெளவல், இது வரையில் சென்னை ராஜதானி ராஜபக்தி நிறைந்த தேசமாயிருந்தது; ராஜத் துவேஷக் குற்றம் செய்து விசாரணைக்கு வந்தவர்களேயில்லை; ஆகையால், இந்த ராஜதானி அதன் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், சிவா, சிதம்பரம்பிள்ளை கேஸ்களில் பலமான சிஷைகள் விதிக்கப்பட்டு, இனி ராஜத் துவேஷமுள்ளவர்கள் வெளிக்கிளம்பாமல் செய்ய வேண்டுமென்று ஜட்ஜியைக் கேட்டுக் கொண்டார். அப்படிக் கேட்டுக் கொண்டவர்கூட இப்படிப்பட்ட தண்டனை களை மனத்தில் எண்ணியிருக்க மாட்டார். கவர்ன்மெண்ட் வக்கீல் அப்படிக் கேட்டுக் கொண்டிராவிட்டாலும் மிஸ்டர் பின்னி குறைவான தண்டனைகள் விதித்திருக்க மாட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சுதேசமித்திரன், தலையங்கம் 10 ஜூலை 1908
ஆங்கிலேயரும் வருந்தினர்
தேசபக்தர் சிதம்பரனாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நியாயத்திற்கும் சட்டத்திற்கும் விரோதமானது. பிள்ளை யவர்களின் தியாகம் மகத்தானது. பிரட்டீஷ் சாம்ராஜியத்தின்பால் நல்லெண்ணம் உள்ளவர்கள் கூட, இந்தக் கொடுந் தண்டனையை வரவேற்கமாட்டார்கள்.
ஸ்டேட்ஸ்மன், கல்கத்தா
வங்காளமும் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையும்
ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்கு மரணபரியந்தம் தீபாந்திர சிக்ஷை விதிக்கப்பட்ட செய்தி கேட்டுக் கல்கத்தா பத்திரிகைகள் அனைத்தும் அலறுகின்றன. இப்படிப்பட்ட கொடிய தண்டனைகளால் பிரிட்டீஷ் நீதியதிகாரத்திற்கே பெரும் அபகீர்த்தி உண்டாகுமென்றும், இப்படித் தண்டனை விதித்த மிஸ்டர் பின்லோவை மேற்படி கேஸில் ஜட்ஜாயிருக்கும்படி சென்னை கவர்ன்மெண்டார் நியமித்தது மிகவும் ஆச்சரியமாய் இருப்பதாயும் ‘அமிர்தபஜார்’ பத்திரிகை சொல்கின்றது. பாபு சுரேந்திரநாத் பானர்ஜியின் பத்திரிகையாகிய “வங்காளி”யும் இவ்வாறே கூறுகின்றது. இதுபோலவே வங்காளத்து இந்தியப் பத்திரிகைகளெல்லாம் கூறுகின்றன. ஆனால் ஆங்கிலோ இந்தியன் பத்திரிகைகள் மட்டும் ஒன்றும் பேசாமல் இருக்கின்றன.
சுதேசமித்திரன், 10 ஜூலை 1908