வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி/பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து
பதிப்புரை

விடுதலைப் போராட்டத்தின் வரலாறாக வாழ்ந்து காட்டிய வீர மறவர்கள் பலர் தமிழகத்தில் பிறந்திருக்கின்றார்கள். ஆனால், விடுதலை உணர்வுக்கு வித்திட்டுத் தமிழகத்தினரைத் தட்டியெழுப்பிப் போராட்டகளத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை வ.உ. சிதம்பரனார் அவர்களையே சாரும்.

விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காகச் சிறையிலடைக்கப்பட்டுக் கொடுமையான தண்டனைகளை ஏற்ற முதல் தமிழர் வ.உ.சி. என்று கூறலாம். நாட்டு விடுதலையில் மட்டுமல்லாது வேறு பல துறைகளிலும் அவரே முன்னவராக இருந்திருக்கிறார். தொழிற்சங்க இயக்கம், கூட்டுறவு இயக்கம், தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் என்று பல்வேறு துறைகளில் முன்னவராகத் திகழ்ந்தவர் வ.உ.சி.

திலகரது தலைமையிலான தீவிர முறைக் காங்கிரஸ் குழுவுக்குத் தமிழகத்தில் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள் வ.உ.சி.யும் பாரதியும் ஆவார்கள். திலகர் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கம் தீவிரமற்றவர்கள் பிடியில் வந்தவுடன் வ.உ.சி. போன்றவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். வ.உ.சி.யைப் பயன் கொள்ளக் காங்கிரஸ் இயக்கம் தவறிவிட்டது.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. சிறையில் இருக்கும் போதே, மக்களுடைய விடுதலை எழுச்சிக்குத் தலைமையேற்ற வ.உ.சி.யைச் சென்னையில் கூடிய காங்கிரஸ் மகாசபை கண்டித்திருக்கிறது. வ.உ.சி. சிறை செல்வதற்கு முன்னர் சூரத் மாநாட்டில் திலகருக்குத் துணையாக நின்றதுடன் தூத்துக்குடியில் தொழிலாளர்களைத் திரட்டிப் பல வேலை நிறுத்தங்களுக்கும் தலைமை தாங்கியிருந்தார். மேலும், அவர் நடத்தி வந்த நெல்லை தேசாபிமான சங்கம் முழு விடுதலை என்ற அடிப்படைத் திட்டத்தைக் கொண்டிருந்தது. அடுத்துப் பல புரட்சியாளர்களிடம் வ.உ.சி. தொடர்பு கொண்டிருந்தார். ஆங்கில அரசின்கீழ் சில பதவிகளைப் பெறுவதையே தொடக்கத்தில் திட்டமாகக் கொண்டிருந்த காங்கிரஸ் இயக்கத்தால் இவற்றை முழுமையாக ஏற்க முடியவில்லை. தொழிலாளர்களையும் பொதுமக்களையும் திரட்டி விடுதலை உணர்வுக்கு வேகமூட்டிய வ.உ.சி.யின் நடைமுறைக்கும் தீர்மானம் போட்டு வேலை வாய்ப்புப் பெற முயன்ற காங்கிரஸ் நடை முறைக்கும் முரண்பாடு இருந்து கொண்டே வந்துள்ளது.

பின்னர், காந்தியின் பல கொள்கைகளையும் நடைமுறைகளையும் ஏற்க அவரால் இயலவில்லை. இடையிடையே காந்தியின் ஒரு சில திட்டங்களை வ.உ.சி. வரவேற்றிருந்தாலும், அவருக்கிருந்த வேறுபாடு தொடர்ந்து நீடித்தது.

தமிழ் நாட்டில் நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) தொடங்கப் பட்டபோது, வேலைவாய்ப்புக்களில் வகுப்பு முறையில் இடம் என்ற திட்டத்தை அவர் நியாயமானதாகக் கருதினார். ஆனால், இத்திட்டத்தைக் காங்கிரசார் எதிர்த்தார்கள். விடுதலை உணர்வில் ஊறித் திளைத்த அவரால் ஆங்கில ஆதரவுப் போக்குக் கொண்ட நீதிக் கட்சியினையும் முழுமையாக ஏற்க முடியவில்லை.

சென்னைத் தொழிலாளர் சங்கம் போன்ற தொழிற்சங்கப் பணிகளில் அவர் முழு ஈடுபாடு காட்டினார். சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு 24 ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்திருத்தார். இந்த நீண்ட காலப்பகுதியில் அவர் முற்போக்கு எண்ணம் கொண்டவராகவே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தக் காலப்பகுதியில் அவர் வறுமையில் வாடினார் என்பது வேதனைக்குரிய செய்தியாகும். முற்போக்கான எண்ணம் கொண்டவரும் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டவருமான வ.உ.சி.க்குத் தமிழகத்தில் இருந்த காங்கிரஸ் தலைமை எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. அவர் இறந்த பிறகுகூட முழுமையான சிறப்புச் செய்யத் தயங்கினர். அதிகார முறையில் எழுதப்பட்ட பட்டாபி சீத்தாராமையாவின் காங்கிரஸ் வரலாறு என்ற நூலில் வ.உ.சி.யைப் பற்றி ஒர் இடத்தில்கூடக் குறிப்பிடவில்லை.

இருப்பினும், வ.உ.சி. மக்கள் உள்ளங்களில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டார். அவருடைய பெயரில் தெரு இல்லாத ஊரோ நகரமோ இல்லை என்று கூறுமளவுக்கு நிலைத்த புகழ் பெற்றிருக்கிறார்.

நாட்டு விடுதலைக்காகக் கடுமையான சிறைத் தண்டனை ஏற்றவர், விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்ட நிலையையும் 1915இல் திலகரைச் சந்தித்து ஜெர்மன் உதவியுடன் இந்தியாவில் புரட்சி நடத்துவது பற்றி விவாதித்ததையும் தொடர்ந்து தொழிற் சங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்ததையும் தமிழ்நாட்டுச் சூழலில் பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் சில கருத்துக்களை ஏற்று உடன்பட்டதையும், ஆனால் அதில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பாததையும் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்ததையும் நுணுகிப் பார்க்கவேண்டும்.

இந்திய விடுதலைப் புரட்சி, தொழிற் சங்க இயக்கம், வேலைகளுக்கு வகுப்பு முறை இடம், தமிழ் மறுமலர்ச்சி ஆகியயாவும் இணைந்த தனியான, முழுமையான அரசியல் இயக்கம் எதுவும் அன்று இல்லாத நிலையில், வ.உ.சி. ஒதுங்கிய வாழ்வு வாழ்ந்தாலும் அவரது சிந்தனையோட்டம் இவை இணைந்த இயக்கமொன்ன்றக் கனவு கண்டிருக்கலாம்.

ஆனால், தமிழகத்தில் இருந்த சில அரசியல் இயக்கங்கள் இதில் ஒவ்வொரு கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. நாட்டு நிலை, தமிழக நிலை இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்த வ.உ.சி. பொதுக் கருத்தொன்றை உருவாக்க விரும்பியிருக்கக்கூடும்.

அன்றைய அரசியல் சூழல் அதற்கு முழுமையான இடம் கொடுக்காவிட்டாலும் இன்னும் இந்தப் பொதுக் கருத்து உருவாக வேண்டியத் தேவை நீடித்து வருகிறது என்று கருதுவோர் இருக்கிறார்கள். இன்றைய அரசியல் நிலை வளர்ச்சி பெற்றிருக்கும் தன்மையையொட்டி, இந்தப் பின்னணி முழுமையாக ஆராயப்படுவது பயன் தருவதாக அமையும்.

வ.உ.சி. போன்று வேறு பல விடுதலை—மறுமலர்ச்சி இயக்தினரின் வரலாறும் வாழ்வும் ஆராயப்பட வேண்டும். பாரதி, சுப்பிரமணிய சிவா, சிங்காரவேலர், திரு.வி.க., சக்கரைச் செட்டியார், ஜீவா, பெரியார் போன்ற பலருடைய வாழ்வு மக்களுக்குத் தெரிய வழிசெய்யப்பட வேண்டும். வேறுபாடுகள் பல இருப்பினும் இவர்கள் பணி தமிழ் மக்களுக்குப் பயனாக அமைந்து பல்வேறு துறைகளில் வழி காட்டியுள்ளது என்பதை மறுப்பார் யாருமில்லை. இவர்களது பணிகளைப் பற்றிய தெளிவான வரையறைகளும் மதிப்பீடுகளும் எதிர்காலத் தலைமுறையினருக்கு ஆக்க முறையிலான அடிப்படைகளாக அமையமுடியும்.

நாடு விடுதலை பெற்ற பிறகு, மாநில—மைய அரசுகள் இத்தகைய முன்னோடிகளின் வரலாறுகளை முழுமையாகக் கொண்டு வர எத்தகைய முன் முயற்சிகளும் எடுக்கவில்லை என்பது வருத்தத்தக்கதாகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் பெரியார் வரை தமிழகத்தில் வாழ்ந்த பலரைப்பற்றிய செய்திகளும் குறிப்புளும் அரசுப் பதிவேடுகளிலும் ஆவணங்களிலும் மிகுதியாகக் கிடைக்கின்றன. இவற்றைத் தொகுப்பதும் முறைப்படுத்துவதும் மதிப்பீடு செய்வதும் நமது கடமையாகும். சில சிறப்பு மிக்க பதிவேடுகள், ஆவணங்களிலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு, விவரங்கள் பலவற்றை அறிய முடியாத நிலையும் தோன்றியிருப்பதைப் பார்க்கிறோம்.

இந்த மாவீரர்களது பணிகளை மக்கள் முன் வைக்க இரண்டு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்வது நல்லது. முதல் கட்டமாக இவர்களைப் பற்றிக் கிடைக்கும் அனைத்துச் சான்றுகளையும் திரட்டி முழுமையாக வெளியிடவேண்டும். இவர்களைப் பற்றிய குறிப்புகள், இவர்களது எழுத்துக்கள். சொற்பொழிவுகள் ரகசியப் போலீசார் குறிப்புகள், அரசு அதிகாரிகளின் அறிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், தொடர் பான ஏடுகளின் செய்திகள், இவர்களுடன் வாழ்ந்தவர்களது கருத்துக்கள் ஆகிய யாவற்றையும் தொகுத்து வெளியிடலாம்.

எந்தத் துறையாக இருப்பினும் சான்றுகளையும் விவரங்களையும் தொகுப்பதே இன்று தனி ஆய்வு முறையாக வளர்ந்து வருகிறது. அடுத்த கட்டம், இந்தச் சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்வதாகும். இப்பணிகளை ஒரு சில தனி மனிதர்களோ, ஆய்வாளர்களோ மட்டும் நிறைவேற்றிவிட முடியாது. பலருடைய கூட்டு முயற்சியும் உழைப்பும் இதற்கு அவசியமாகும். பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் ஒத்துழைத்தால் பணி விரைவும் நிறைவும் பெறும்.

‘மக்கள் வெளியீடு’ இப்பணியில் தனது இயன்ற பங்கினைச் செலுத்த முதல் முயற்சியாகக் கட்டபொம்மனைப் பற்றிய சில குறிப்புக்களைத் தொகுத்து வெளியிட்டது. அந்த மாவீரனைப் பற்றிய செய்திகள் இன்னும் எவ்வளவோ உண்டு. சென்னை ஆவணம், லண்டன் ஆவணம் ஆகியவற்றில் இருக்கும் பதிவேடுகளையும் தொகுத்துத்தரவேண்டும்.

வீரபாண்டியக் கட்டபொம்மன்—ஆய்வுத் தொகுப்பு என்ற நூலின் முதல் பதிப்பு இருப்பில் இல்லாததையடுத்து மேலும் பல புதிய செய்திகளுடன் கூடிய விரிவான பதிப்பு ஒன்றை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபோன்று மற்றவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சான்றுகளையும் மக்கள் வெளியீடு வெளியிட விழைகின்றது. இப்பணியில் அனைவருடைய–குறிப்பாக ஆய்வாளர்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

‘வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி’ என்ற இந்நூல் புதிய அலை என்ற ஏட்டில் 19-12-1976 முதல் 30-1-1977 வரை தொடராக வெளியிடப்பட்டதாகும். இது முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல என்றாலும் வ. உ. சி. அவர்களது வாழ்க்கையின் சிறப்பை இந்நூலில் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றார்.

தமது நூல்களைத் தொடர்ந்து வெளியிட வாய்ப்பளித்து வரும் பேராசிரியர் அவர்களது அறுபதாம் ஆண்டு நிறைவினையொட்டி, அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவரது பத்து நூல்களை அச்சிட ‘மக்கள் வெளியீடு’ ஏற்பாடு செய்துள்ளது. மார்க்சீய ஆய்வுப் பேரறிஞர் நா. வா. அவர்களின் பணி சிறக்க–மேலும் அவர்களிடமிருந்து பல்வேறு துறைகளில் வழிகாட்டுதல் பெறத் தமிழ் மக்களின் சார்பில் ‘மக்கள் வெளியீடு’ விழைகின்றது.

மே. து. ராசு குமார்