வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி/மறு அச்சுக்கான பதிப்புரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மறு அச்சுக்கான பதிப்புரை

இந்த நூலின் முதல் பதிப்பு வெளியான சில வாரங்களில் பேராசிரியர் நா. வா. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். இப்போது 18 ஆண்டுகள் கடந்து மறு அச்சு வெளியிடப்படுகிறது.

இதனை நூலாக்கும்போதே, பல மாறுதல்களைச் செய்ய வேண்டிய தேவைகள் உருவாகியிருந்தன. பேராசிரியர் அவர்களும் அத்தகைய திருத்தங்களைச் செய்யவே விழைந்தார்கள்.

பேராசிரியர் நா. வா. அவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, பத்து நூல்கள் வெளியிட இருந்த முனைப்பில், நான் அவருக்குக் கொடுத்த நெருக்குதல்களால், இந்த மாற்றங்கள் அப்போது இயலாததாகிவிட்டன. ஆனால், அடுத்த பதிப்பில் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை ஒட்டியே நீண்டதொரு பதிப்புரையை அப்போது நான் எழுதினேன். ஆனால், பேராசிரியர் நா. வா. அவர்களால் எப்போதுமே இந்த மாற்றங்களைச் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று யாருமே அப்போது எண்ணிப் பார்க்கவில்லை.

இருப்பினும், பேராசிரியர் நா. வா. அவர்கள் இருந்திருந்தால் எத்தகைய மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டிருந்திருப்பாரோ அதையும் மிஞ்சும் அளவில் இந்தப் பணிகளைப் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியம் அவர்களும் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களும் தற்போது மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய அவர்களது நூல்கள் பலவும் மக்கள் வெளியீடு வழியாகவே வெளிவருகின்றன என்பதும் பெருமையே தருகிறது. இந்தப் புதிய பணிகளால் வ.உ.சி. ஆய்வுகள் மேலும் செழுமையடைந்திருக்கின்றன —செம்மைப் பட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்கேற்ப இந்த நூலில் சில மாறுதல்கள் தேவைதான் என்றாலும், பேராசிரியர் நா வா. அவர்கள்தம் படைப்பாகவே மறு அச்சு செய்யப்படுகிறது.

பேராசிரியர் நா. வா. அவர்களின் எழுத்துக்கள் யாவற்றையும் தொகுப்புகளாகக் கொண்டுவரவேண்டுமென்ற எண்ணத்தில், முன்னர் நூல்களாக வெளிவந்திருந்த பல படைப்புகள் மறு அச்சு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. நோக்கம் நல்லதுதான் என்றாலும், தொகுப்புப் பணியின் சுணக்கத்தால், ஒரு தலைமுறையினரின் பயன்பாட்டிலிருந்து அவரது படைப்புகளை மறைத்துவிடக்கூடாது என்பதால், சில நூல்களை மறு அச்சு செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றாலும், தொகுப்பு முயற்சிகள் முழு முனைப்புடன் தொடரும்.

மே. து. ரா.