வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி/வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchவ. உ. சி.

முற்போக்கு இயக்கங்களின்

முன்னோடிதிலகரது உறுதியான கருத்து, “சிதம்பரம் பிள்ளை, தமிழ் நாட்டின் தலை சிறந்த வீரம் நிறைந்த விடுதலைப் போராட்ட வீரர்” என்பதாகும் என்று ராஜகோபாலச்சாரியார் 1903இல் எழுதினார்.

சிதம்பரம் பிள்ளை மேன்மை தங்கிய மன்னர்பிரானது பிரஜைகளில் இரு வர்க்கத்தாரிடையே பகைமையையும் வெறுப்பையும் ஊட்டுபவர். (இரு வர்க்கத்தார்—ஆங்கிலேயர், இந்தியர்) அவர் வெறுக்கத்தக்க ராஜத்துரோகி; அவருடைய எலும்புகள் கூட, சாவிற்குப்பின் ராஜத் துவேஷத்தையூட்டும்

என்று பின்ஹே என்ற நீதிபதி வ.உ.சி.யைப் பற்றித் திருநெல்வேலிக் கலகத்திற்குத் தலைமை தாங்கிய குற்றத்திற்காகத் தண்டனையளிக்கும் பொழுது தமது தீர்ப்பில் எழுதினார்.

பாரதி, விஞ்சுதுரை என்ற கலெக்டரோடு, வ.உ.சி. விவாதித்த நிகழ்ச்சியைக் கற்பனை கலந்து இரண்டு பாடல்களாக எழுதியுள்ளார். அவற்றுள், ஒரு பாடலில் விஞ்சுதுரை அடித்து, மிதித்து சிறைக்குள்ளே தள்ளுவேன் என்று மிரட்டுகிறான். அதற்குப் பதிலாக மற்றோர் பாடலில், அடித்தாலும், வெட்டி உடலைத் துண்டு துண்டாக்கினாலும் “இதயத்துள்ளே இயங்கும் மகாபக்தி ஏகுமோ—நெஞ்சம் வேகுமோ” என்று. வ. உ. சி. பதில் சொல்லுவதாக எழுதியிருக்கிறார். கலெக்டர் வின்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்

 நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
   நாட்டினாய்—கனல்—மூட்டினாய்,
 வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
   மாட்டுவேன்—வலி—காட்டுவேன். (நாட்டி)

கூட்டங் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய்,—எமை—தூஷித்தாய்,
ஓட்ட நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய்,—பொருள்—ஈட்டினாய் (நாட்டி)

கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய்,—சட்டம்—மீறினாய்,
ஏழைப் பட்டிங் கிறத்த லீழிவென்றே
ஏசினாய்,—வீரம்—பேசினாய் (நாட்டி)

அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய்,—புன்மை—போக்கினாய்,
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய்,—ஆசை—யூட்டினாய் (நாட்டி)

தொண்டொன் றேதொழி லாக்கொண் டிருந்தோரைத்
தூண்டினாய்,—புகழ்—வேண்டினாய்,
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய்.—சோர்வை—யோட்டினாய் (நாட்டி)

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய்,—விதை—தூவினாய்,
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ?—நீங்கள்—உய்யவோ? (நாட்டி)

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
சொல்லுவேன்,—குத்திக்—கொல்லுவேன்
தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே
தள்ளுவேன்,—பழி—கொள்ளுவேன். (நாட்டி)


கலெக்டர் வின்சுக்கு
ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி


சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம்—இனி—அஞ்சிடோம்
எந்த நாட்டினு மிந்த அநீதிகள்
ஏற்குமோ—தெய்வம்—பார்க்குமோ?

வந்தே மாதர மென்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம்—முடி—தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ ?—அவ—மானமோ ?

பொழுதெல்லா மெங்கள் செல்வங்கொள்ளை கொண்டு
போகவோ?—நாங்கள்–—சாகவோ?
அழுதுகொண் டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ?—உயிர்—வெல்லமோ?

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ?—பன்றிச்—சேய்களோ?
நீங்கள் மட்டு மனிதர்க ளோவிது
நீதமோ?—பிடி—வாதமோ?

பார தத்திடை யன்பு செலுத்துதல்
பாபமோ?—மனம்—தாபமோ?
கூறு மெங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ—இதிற்—செற்றமோ?

ஒற்றுமை வழியொன்றே வழியென்ப
தோர்ந்திட்டோம்—நன்கு—தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம்
மலைவுறோம்—சித்தம்—கலைவுறோம்

சதையைத் துண்டுதுண் டாக்சினு மன்னெண்ணம்
சாயுமோ?—ஜீவன்—ஓயுமோ?
இதயத் துள்ளே விலங்கு மஹாபக்தி
யேகுமோ?—நெஞ்சம்—வேகுமோ?

பிரிட்டிஷ் அரசின் அதிகார வர்க்கம் சிதம்பரம் பிள்ளை மீது கொண்டிருந்த கண்ணோட்டத்தைப் பின்ஹே என்ற நீதிபதியும், விஞ்சும் கூறிய கருத்துக்கள் காட்டுகின்றன. அவர்கள் சிதம்பரம் பிள்ளையை வெறுத்தார்கள். ராஜத்துரோகி என்று கருதினார்கள். அவரையும், அவரது கருத்துக்களையும் அழித்துவிட முயன்றார்கள்.

இந்திய விடுதலையில் ஆர்வமுடையவர்கள் அவரை வீரர் என்று போற்றினார்கள், அவர் விஞ்சுதுரை போன்ற ஆதிக்க வெறியர்களைத் தைரியமாக எதிர்த்ததை இந்தியரனைலருக்கும் முன் மாதிரியாகக் காட்டினார்கள். இந்நிகழ்ச்சியிலிருந்து பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் மனப்பாங்கையும், அதை எதிர்ப்பதற்குத் தேவையான துணிவையும் வ. உ. சி. யின் எடுத்துக்காட்டின் மூலம் சுட்டிக் காட்டினார்கள்: 

ஆதிக்கக்காரர்களின் ஆத்திரத்துக்குள்ளானவர் வ. உ. சி. விடுதலை விரும்பிகளின் அபிமானத்துக்கு ஆளானவர் வ.உ.சி. ஒய்ந்து கிடந்த தமிழகத்தில் விடுதலைப்புரட்சிச் சுவாலையாக ஒளிர்ந்தவர் சிதம்பரம் பிள்ளை.

இளமை வாழ்க்கை

தமிழ் நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கக் காலகட்டத்தோடு சிதம்பரம் பிள்ளையின் இளமை தொடர்புடையது. பிரிட்டிஷ் அதிகாரத்திற்கும், ஆணவ மிரட்டலுக்கும் அஞ்சி, உயிர்ப்பு ஒடுங்கித் தமிழக மக்கள் செயலற்றிருந்த காலம். பிரிட்டிஷ் துப்பாக்கிகளுக்கும், சிறைக் கூடங்களுக்கும், தாக்குமரங்களுக்கும் பயந்து இந்திய மக்கள் சோர்வுற்றிருந்த காலம், பிரிட்டிஷ் சுரண்டல்காரர்கள் நமது செல்வத்தைக் கொள்ளை கொண்டு சென்றார்கள். நமது மக்களது உழைப்பைச் சுரண்டிக் கொழுத்தார்கள். அடிமைகளாக உழல்வதைத் கவிர வேறு வழியின்றித் தமிழ் மக்கள் நடைபினங்களாகத் திரிந்தார்கள்.

இந்நிலையைப் பாரதி ‘போகின்ற பாரதம்’ என்ற பாடலில் வருணிக்கிறார். தேசத்தை மனிதனாகக் கற்பனை செய்து, அம்மனிதனது அவல நிலையை விளக்கி, அவனை ‘போ’ என்று விரட்டுவதாகக் கூறுகிறது ‘போகின்ற பாரதம்’. பாரதி அடிமைத்தனத்தை வெறுத்துப் போராடாத பாரதத்தைக் கடித்து, அதன்மீது வெறுப்பை உமிழ்கிறார்

போகின்ற பாரதம்
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ
பொலிவிலா முகத்தினாய் போ போ போ
பொறியிழந்த விழியினாய் போ போ போ
ஒலியிழந்த குரலினாய் போ போ போ
ஒளியிழந்த மேனியாய் போ போ போ
கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மையென்றும் வேண்டுவாய் போ போ போ
இன்றுயார தத்திடை நாய்போலே
ஏற்றமின்றி வாழுவாய் போ போ போ
நன்றுகூறில் அஞ்சுவாய் போபோ போ
நாணிலாது கெஞ்சுவாய் போ பேர் போ
சென்றுபோன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ
வென்றுநிற்கு மெய்யெலாம் பொய்யாக
விழிமயங்கி நோக்குவாய் போ போ போ
வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறுநூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலிலோத் தியல்கிலாய் போ போ போ
மாறுபட்டவாதமே ஐந்நூறு
வாயில் நீள ஒதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ் சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ டோ போ
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தருமமொன் றியற்றிலாய் போ போ போ
நீதிநூறு சொல்லுவாய்—கா சொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீதுசெய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமைநிற்கி லோடுவாய் போ போ போ
சோதிமிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ

தான் நேசிக்கின்ற பாரத மக்களின் சிறுமைகளைக் கண்டு பாரதி சீறுகிறார். நூற்றாண்டுகளாக அடிமை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நமது மக்களை விழித்தெழுந்து சுதந்திர வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்படி வேண்டுகிறார். சுதந்திரத்திற்காகப் போராடும் வீறுகொண்ட மக்களை ஒரு மனிதனாகக் கற்பனை செய்து, அவனை வா, வா என்று வரவேற்கிறார்.

ஆழ்ந்த அடிமை மோகத்தில் ஆழ்ந்து கிடந்த மக்களை, விழித்தெழச்செய்து, அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடச் செய்து, அவர்களுடைய உள்ளங்களில் மாபெரும் கிளர்ச்சியைத் தூண்ட வேண்டியிருந்தது. மக்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களாக இருந்தார்கள். பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாதென்ற செயலூக்கமற்ற நிலைமையில் மூழ்கியிருந்தார்கள். இத்தகைய மக்களை வீரமூட்டி, உணர்ச்சிகொள்ளச் செய்து, அடிமைத்தனத்தை உதறித்தள்ளும் செயலில் ஈடுபடுத்தி, ஒன்றுபட்ட உணர்ச்சியுடைய ஒரு பெரும் விடுதலைப்படையை உருவாக்குவது, அன்றைய நிலைமைகளில் எளிதான செயலன்று. பொது மக்களை உறக்கத்திலிருந்து எழுப்பி, சுதந்திர முரசின் ஒலி கேட்டுப் போர் வெறி கொள்ளச் செய்து, போர்முனைக்குச் செலுத்தும் கடமையைப் பாரதி மேற்கொண்டார்.

விடுதலையுணர்வின் தொடக்கத்தைப் பாரதி கண்டார். மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்தார்.

இத்தகைய உணர்வு நாட்டின் பல மொழிகள் பேசும் பகுதிகளிலும் தோன்றியது. அதனைப் பாரத நாட்டுக்கொடி வினைப்புகழ்தல் என்ற கவிதையில் வருணித்தார்.

நமது கொடி

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்—எங்கும்
   காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர்—தங்கள்
   நல்லுயிரீந்தும் கொடியினைக் காப்பார் (தாயின்)

அணியணி யாயவர் நிற்கும்—இந்த
   ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ!
பணிகள் பொருந்திய மார்பும்—விறல்
   பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர்! (தாயின்)

செந்தமிழ் நாட்டுப் பொருநர்—கொடுந்
   தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர்—தாயின்
   சேவடிக் கேபணி செய்திடு துளுவர்

கன்னடர் ஒட்டிய ரோடு—போரில்
   காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்
பொன்னகர்த் தேவர்க ளொப்ப—நிற்கும்
   பொற்புடை யாரிந்து ஸ்தானத்து மல்லர்

பூதல முற்றிடும் வரையும்—அறப்
   போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும்—பாரில்
   மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர்

பஞ்ச நதத்துப் பிறந்தோர்—முன்னைப்
   பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்
துஞ்சும் பொழுதினுந் தாயின்—பதத்
   தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும்

சேர்ந்ததைக் காப்பது காணீர்—அவர்
   சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!

தேர்ந்தவர் போற்றும் பாரத—நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)

‘இப்படையில் நான் ஒருவன்’ என்ற பெருமித உணர்வை விடுதலைப்படை வீரர்களுக்கு ஊட்டினார்.

கோழைகளாக, அடிமை மயக்கத்தில் ஆழ்ந்து, அஞ்சி நடுங்குகிற மக்களை விடுதலை வீரர்களாக்கும் பணியை வ. உ. சிதம்பரனார் மேற்கொண்டார். பாரதி கவிதையில் போர்முரசு கொட்டினார். நூற்றாண்டுகளாகத் தன்னம்பிக்கையிழந்து உறங்கிக்கிடந்த மக்களை, நம் நாட்டில், நமக்காக சுபிட்ச வாழ்வமைத்து வாழவேண்டும்’ என்ற புத்துணர்வைப் பாரதி தூண்டினார். அதைச் செயலாக்கும் முயற்சியில் வ. உ. சி. ஈடுபட்டார். இம்மாபெரும் பணியை, சுதந்திரம் கிடைத்தபின் மதிப்பிடுவது அவ்வளவு எளிதன்று. 1908இல் இருந்த மக்கள் உணர்வு, நம்பிக்கைகளை அறிந்து மதிப்பிட்டால், எவ்வளவு பெரிய புரட்சிப்பணியை இவ்விரு தலைவர்களும் மேற்கொண்டார்கள் என்று தெரியும். பாரதியும், வ. உ. சி.யும் மறக்கப்பட்டு வருகிறார்கள். பிரிவினை சக்திகளும், பிளவு சக்திகளும், வ. உ. சி. கப்பலோட்டிய தமிழர் என்று பட்டம் சூட்டி, தமிழர் என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்து, தங்கள் கருத்துக்கேற்ற சித்திரமாக அவரை ஆக்க முயலுகின்றன. பாரதியையோ, நெராக எதிர்க்க முடியாமல் மறைமுகமாகக் கூறி, பாரதியின் செல்வாக்கைக் குறைக்க முயலுகிறார்கள். இந்நிலையில் அவர்களது பிறந்தநாள் விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடுவதும், அவர்களது மாபெரும் செயல்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும் அவசியமாகும்.

குழந்தைப் பருவம்

கருவிலே திருவுடையாராகச் சிதம்பரம் பிள்ளை பிறக்கவில்லை. பிராமணருக்கு அடுத்த உயர்ந்த சாதியான சைவ வேளாளர் சாதியில் பிறந்த எந்தச் சிறுவனையும் போலவே அவர் பிறந்து வளர்ந்தார். 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் ஒட்டப்பிடாரம் என்ற கிராமத்தில் அவர் பிற்ந்தார். இக்கிராமம் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது.

இவ்வூர் கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போராடிய போர்க்களமாயிருந்தது. 1799இல் கட்டபொம்மு வீரப்போர் நிகழ்த்தித் தோற்றுப்போய், பிடிபட்டுத் தூக்கி லிடப்பட்டான். அவனுக்குப் பின், ஊமைத்துரை இடிபட்ட கோட்டையையும் கட்டி, போர்க்கொடி உயர்த்தி மீண்டும் போராடினான். ஆங்கிலேயரது ஆயுதபலம் கோட்டையைத் தரைமட்டமாக்கியது. ஊமைத்துரை மக்கள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினான். அவன் கோட்டையைவிட்டு 1801இல் வெளியேறி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருது சகோதரர்களோடு சேர்ந்து வெள்ளையர் ஆக்கிரமிப்புப் போரில் உயிர் நீத்தான். இப்போராட்டங்களில் விடுதலை வீரர்கள் தோல்வியடைந்த போதிலும், வெள்ளையரை எதிர்த்துப் போராடும் வீரவுணர்வை அது வளர்த்தது. வெள்ளையர் வெற்றி பெற்றுக் கோட்டையை அழித்து, விடுதலை வீரர்களில் பலரைத் துரக்கிலிட்டும், இன்னும் பலரை மனிதவாசமில்லாத தீவுகளுக்கு அனுப்பியும் கொடுமைகள் பல புரித்தனர்.

இப்புத்துணர்வைப் போற்றி நாட்டுப் பாடல்களும் நாட்டுக் கதைகளும் எழுத்தன. அவை மக்கள் மனத்தில் வாழ்ந்தன. இப்பாடல்களைப் பாடக்கூடாதென வெள்ளையர் தடை விதித்தனர். தடையையும் மீறி நாட்டுப் பாடல்கள் நிலைத்த வாழ்வு பெற்றன. இப்பாடல்கள் எதிரொலிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அண்மையான ஒட்டப்பிடாரத்தில் வாழ்ந்த சிதம்பரம் பிள்ளை, சிறு வயதில் இப்பாடல்களைக் கேட்டு, அவற்றின் வீர உணர்வைக் கிரகித்துக் கொண்டார். கட்டபொம்மு, ஊமைத்துரை முதலிய வீரர் கதைகளில் ஈடுபாடு கொண்டார்.

அவர், வீரம் பெருமாள் அண்ணாவி என்ற பரம்பரை ஆசிரியர் நடத்திய திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். தொடக்கப் பள்ளியில் மரபுவழிக் கல்வி கற்றார். அப்பள்ளியில் படிப்பு முடித்ததும், அவருடைய தந்தையார் உலகநாத பிள்ளை அவருக்காக ஒரு நடுநிலைப் பள்ளியைத் தொடங்கினார். அங்கு தமது நண்பர்களோடு ஆங்கிலமும், மரபு வழிப் பாடங்களும் கற்றார். பிறகு இரண்டு ஆண்டுகள் துரத்துக்குடியில் ரோமன் கத்தோலிக்கத் துறவிகள் நடத்திய புனித சேவியர் பள்ளியில் சேர்ந்து கற்றார். பிற்காலத்தில் இந்த நகரம் அவரது தேசியப் புரட்சிப் போராட்டங்களுக்குக் களமாக இருந்தது.

தம் ஊரைச் சுயசரிதையில் குறிப்பிடும் பொழுது கட்டபொம்மன் ஊர் பாஞ்சையின் பக்கத்திலுள்ளது என்று வ. உ. சி. குறிப்பிடுகிறார்.

பள்ளிப் பருவத்தில் அவர் அதிகமாகக் கவனமோ, திறமையோ காட்டவில்லை. அவர் விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டிருந்தார். மரமேறுதல், தாண்டிக்குதித்தல், குதிரையேற்றம், குஸ்தி முதலிய முரட்டு விளையாட்டுக்களில் பயிற்சி பெற்றார். சில வேளைகளில் முரட்டுத்தனத்துக்காகத் தந்தையாரிடம் அடி வாங்கியதும் உண்டு. அடி வாங்கியும், மனம் மாறாத முரட்டு இளைஞராகவே அவர் வளர்ந்தார், இதனை அவர் தமது சுயசரிதையில் நகைச்சுவையோடு கூறுகிறார்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும், உலகநாத பிள்ளை தமது மகனுக்கு, தாலுகா ஆபீஸில் வேலை வாங்கித் தந்தார். தாலுகா அலுவலகக் குமாஸ்தாவுக்குப் பெரிய மதிப்பு இருந்த காலம் அது. ஏனெனில், அக்காலத்தில் இந்தியர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய வேலை தாசில்தார் வேலைதான். தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாக 18 வயதில் நுழைந்தால் 40 வயதில் தாசில்தாராகிவிடலாம். நடுத்தர வர்க்கத்தின் லட்சியம் ‘தாசில்’ வேலைக்குத் தமது மகன் வரவேண்டும் என்பதே. உலகநாதபிள்ளை தாசில் வேலை தன் மகனுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக உள்ளூரிலேயே, தாலுகா அலுவலகத்தில் வேலை வாங்கிக்கொடுத்தார். சிதம்பரம் பிள்ளைக்குப் பிரிட்டிஷ் சேவகம் பிடிக்கவில்லை. பைல்கள் நடுவே பூச்சி போல ஊர்ந்து நடத்தும் வாழ்க்கையை வெறுத்தார். தந்தையின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து ஓர் ஆண்டு போய் வந்தார். அலுவலகக் குமாஸ்தாக்கள், தாசில்தார், இவர்களுடைய அடிமை மனப்பான்மையை அவர் வெறுத்தார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தைப் போராடி வீழ்த்தவேண்டிய கடமையுடைய இளைஞர்கள், பிரிட்டிஷ் ஆட்சி நீடிக்க அவர்களது பணிநிலையங்களில் பணிபுரிவது அவருக்குக் கசந்தது. அவர் தமது தந்தையாரை, வழக்கறிஞர் தொழிலுக்குப் பயிற்சி பெறத் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்ப வேண்டிக்கொண்டார். தந்தையாரும் வழக்கறிஞராதலால், மகனுடைய வேண்டுகோளை மறுக்கவில்லை. உலகநாத பிள்ளை அவரைக் கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் என்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெற அனுப்பி வைத்தார். பயிற்சிக் காலம் முடிந்து தேர்வு எழுதிய பின்னர் ‘சன்னது’ என்ற அனுமதியளிக்கப்பட்டது. ஒட்டபிடாரத்தில் வழக்கறிஞராகப் பணிபுரியத் தொடங்கினார்.

வழக்கறிஞராகப் பணிபுரியும்பொழுது உயர்ந்த ஒழுக்க முறைகளை அவர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்தார். போலீசு அக்கிரமங்கள், பணக்காரர், ஏழைகளுக்குப் புரியும் அநீதிகள் ஆகியவற்றை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட ஏழை களுக்காக இவர் நீதிமன்றங்களில் வாதாடினார். ஏழை களின் துண்டு நிலங்களைப் படைபலத்தால் ஆக்கிரமித்துக் கொள்ளும் ஜமீன்தார்கள், தங்கள் மனம்போல நடக்காத ஏழை எளிய விவசாயிகளை அடியாட்களால் தாக்கும் பணக்காரர்கள் ஆகியோர்மீது போலீசார் வழக்குத் தொடராத போது, அவர்களுக்காக, பணக்காரர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் பணியைச் சிதம்பரம்பிள்ளை செய்து வந்தார். சில சமயங்களில் தந்தை பணக்காரப் பிரதிவாதிக்கும், சிதம்பரம்பிள்ளை பணக்காரரால் ஏமாற்றப்பட்ட ஏழை வாதிக்கும் வாதாடியதுண்டு.

இந்த நடவடிக்கைகளால் பணக்காரர்களும் போலீசாரும் அவர் மீது வெறுப்புக் கொண்டார்கள். ஊழல் மலிந்த பிரிட்டிஷ் ஆட்சியின் போலீஸ் துறையினர் சிதம்பரம் பிள்ளையை ஏதாவது ஒரு வழக்கில் தொடர்புபடுத்தச் சமயம் பார்த்திருந்தனர். ஒரு தலைமைக் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில், சிதம்பரம் பிள்ளையைத் தொடர்புபடுத்தினர். அதனை விசாரித்த ஆங்கிலேய ஜாயின்ட் மாஜிஸ்டிரேட்டு, வழக்கில் எதிரிகள் அனைவரையும் விடுதலை செய்து, பொய் வழக்குப் போட்டதால், எதிரிகளுக்குச் செலவுத் தொகை கொடுக்கவும் தீர்ப்பளித்தார், வெள்ளை மாஜிஸ்டிரேட்டுகூடக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கத் துணியவில்லை, மூன்று சப்மாஜிஸ்டிரேட்டுகள் மீது லஞ்ச ஊழல், கடமை தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளைப் பொதுமக்கள் கொண்டு வந்தனர். சிதம்பரம் பிள்ளைதான் அஞ்சா நெஞ்சினர் என்ற நம்பிக்கையோடு அவரை அவர்கள் தங்களுக்காக வாதாட அழைத்தனர். தற்காலத்திலேயே அதிகாரிகள் மீது வழக்குக் கொண்டுவர மக்கள் அஞ்சுகிறார்கள். அதற்கு வாதாட வழக்கறிஞர்கள் முன்வருவதும் அரிது. ஆனால் 80 ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகளின் செல்வாக்கு அபரிமிதமாயிருந்தது. சிதம்பரம் பிள்ளை அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடியிருந்ததால், மக்கள் தம்பிக்கையைப் பெற்றிருந்தார். வழக்குகள் நடந்தன. மூன்று அதிகாரிகளில் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். இருவர் குமாஸ்தாக்களாகப் பதவிக் குறைப்புச் செய்யப்பட்டனர். இந்த வழக்குக் காரணமாக அதிகார வர்க்கம் முழுவதும் சிதம்பரம்பிள்ளை என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கியது. ஆயினும், அவர் மீது வெறுப்புக்கொண்டு ஏதாவது வழக்கில் மாட்டிவைக்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்த போலீசாரோடு சேர்த்து அவரது கழுத்தை நெரிக்கக் காத்திருந்தனர். திறமைமிக்க தைரியமுள்ள வக்கீல் என்ற புகழ் பரவியதால் அவரது தொழில்முறை நடவடிக்கைகள் அதிகமாயின. 

அவரது தொழிலை விரிந்த அளவில் நடத்தக் கிராமமான ஒட்டப்பிடாரத்திலிருந்து, பல கோர்ட்டுகள் உள்ள தூத்துக்குடிக்குச் சென்று வாழத்தொடங்கினார். தமது தொழில் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் நகரம் தூத்துக்குடியே என்பதை அனுபவத்தில் கண்டார். இந்நகரில்தான், ஏழைஎளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராடிய இளம் வக்கீல் சிதம்பரம்பிள்ளை, இந்திய தேசிய இயக்கம் என்னும் மாபெரும் பிரளயத்தோடு தொடர்பு கொண்டார். அவருக்குத் திலகர், அரவிந்தர், கார்பார்டே, மூஞ்சே, மண்டயம் சீனிவாசாச்சாரியார் (பாரதியின் நண்பர்), பாரதியார் ஆகிய சுதேசிகளின் நட்பு வாய்த்தது ('சுதேசி’ என்ற பெயர், வெள்ளைக்காரர்கள், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஏளனமாக வைத்த பெயர். அதுவே மக்களால் பெருமைக்குரிய விருதாகப் பின்னர் வழங்கப்பட்டது. ஏளனமாக வைத்த பெயர், பெருமைக்குரியதாக ஆகிவிட்டது). தங்கள் வாழ்க்கையைச் சுதந்திரப் போராட்டத்திற்கும் நாட்டுப் பணிக்கும் அர்ப்பணித்த இப்பெரியார்களது நல்லுறவால், சிதம்பரம்பிள்ளை சிறந்த தேசபக்தராக வளர்ச்சி பெற்றார்.

வ.உ.சி. தனது தூத்துக்குடி வாழ்க்கையின்போது பெற்ற நண்பர்களைக் குறித்துப் பின்வருமாறு எழுதினார்:

இவர்கள் எனது நண்பர்கள். இவர்களை நான் நேசிக்கிறேன், மதிக்கிறேன். ஏனெனில் இவர்களுடன் எனக்குக் கருத்தொற்றுமை இருக்கிறது. இவர்களுடைய இலட்சியங்களை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். இவர்கள் தங்கள் வாழ்க்கையை நாட்டுப் பணிக்காக அர்ப்பணித்துள்ளார்கள். அவர்களைப் போலவே நானும் பணிபுரிய விரும்புகிறேன்.

சிதம்பரம் பிள்ளை, பாளையங்கோட்டை சண்முகம் பிள்ளை என்பவரின் உதவியுடன் பத்திரிக்கை ஒன்றை நடத்தினார். அதன் பெயர் ‘விவேகபானு’. இதன் பொருள் அறிவுக் கதிர் என்பது.

தமிழன்பர்கள் பலரோடு சேர்ந்து அவர் திருக்குறள், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய இலக்கிய நூல்களையும், தொல்காப்பியம் என்ற பழமையான இலக்கண நூலையும் ஆழ்ந்து கற்றார். அரசியல் பேச்சுக்களில், இலக்கிய ரசனையுடன் கவர்ச்சிகரமாகப் பேசும் வல்லமை அவருக்கு வாய்த்தது. காவியங்களில் இருந்து மேற்கோள் காட்டாமல் அவர் அரசியல் பிரசாரம் செய்ததில்லை. இதனால் பாமரரையும் பண்டிதரையும் ஒருங்கே கவர்ந்தார்.

பொது வாழ்வு

வ.உ.சி. ஏழைகளது நியாயத்துக்காகப் போராடுகிற வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு பிரிட்டிஷ் ஆட்சியே, ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்குக் காரணம் என்பதை உணர்ந்து, போலீசையும், அதிகாரிகளில் ஊழல்காரர்களையும் எதிர்த்தார். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியையே எதிர்க்கும் இயக்கத்தோடு ஒன்றினார். பிரிட்டிஷ் ஆட்சியையே ஒழிப்பதற்காக மக்களைத் திரட்ட வேண்டும் என்ற திலகர் கொள்கையைக் கடைப்பிடித்துப் பல துறை இயக்கங்களில் ஈடுபடலானார். அவரது பணிகள் விரிவடைந்தன.

மூன்று இயக்கங்களில் அவர் கவனம் செலுத்தினார். அவை கூட்டுறவு இயக்கம், தொழிலாளர் இயக்கம், சுதேசி இயக்கம் என்பவை.

தூத்துக்குடியில் ‘சுதேசிப் பண்டசாலை’ என்ற பெயரில் , சுதேசப் பொருள்களை வாங்க விற்பனை செய்யும் நிறுவனத்தை அமைத்தார். ஒரு நூற்பாலையைக் கட்டி வேலை தொடங்கினார். ‘சென்னை விவசாய சங்கம்’ என்றதோர் அமைப்பையும் தோற்றுவித்தார். இவற்றின் நோக்கம் சுதேசி இயக்கத்தை வலுவாக வளர்ப்பதாகும். இது அந்நியப் பொருள் வணிகத்தைக் குறைத்துப் படிப்படியாக ஒழிப்பதற்கான அடிப்படையாகும்.

இவற்றின் பொது நோக்கம் தொழிலாளி, விவசாயி, நடுத்தர வர்க்கத்தார் ஆகியவர்களிடையே, நம்பிக்கையை வளர்த்து, தேசிய இயக்கம் என்னும் பிரதான வெள்ளத்தில், இந்த நீரோடைகளைச் சங்கமிக்கச் செய்வதாகும். இந்நிறுவனம் ஒவ்வொன்றும் தேசிய இயக்கத்தின் பயிற்சிப் பள்ளிகளாகப் பணிபுரிந்தன.

‘சென்னை விவசாய சங்கத்தின்’ நோக்க அறிக்கையில் கீழ்வரும் வரிகள் காணப்பட்டன:

1 தொழிலாளர், விவசாயிகளது வாழ்க்கைத் தரத்தை மேம்பாடடையச் செய்வது.
2 தொழிலிலும் விவசாயத்திலும், நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி, அவற்றை வளர்ப்பது.
3 நமது மாணவர்களுக்காக சுதேசியத் தொழிற் பள்ளிகள் ஆரம்பித்துப் பயிற்சியளிப்பது.
4 தரிசு நிலங்களை எல்லா மாவட்டங்களிலும் விலைக்கு வாங்கி, விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் நவீன விஞ்ஞான முறைகளில் பயிற்சியளித்து, அவற்றைப் பண்படுத்தி, விவசாய வளர்ச்சிக்குத் தொண்டாற்றுவது.

இந்நோக்கங்கள், நமது பொதுமக்களை ஒற்றுமைப்படுத்தி, செயல்படுத்தி, சுதேசி, சுயராஜ்யம், போராட்டம் என்ற மூன்று அம்ச இயக்கங்களில் ஈடுபட வைப்பவை. ‘சுதேசி பிரச்சார சபை'யின் கிளையொன்று பிற்காலத் தொழிற்சங்கத் தலைவர் வி. சக்கரைச் செட்டியாரின் முயற்சியில் அமைக்கப்பட்டது.

சுதேசி இயக்கத்தின் நோக்கங்களுக்குட்பட்டு, ‘சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’ என்ற ஒரு கப்பல் போக்குவரத்து நிறுவனம் அமைக்க சிதம்பரம்பிள்ளை முற்பட்டார். இந்நிறுவனம் இரண்டு கப்பல்களைக் குத்தகைக்கு எடுத்தோ, விலைக்கு வாங்கியோ கடலில் ஓடவிடுவதெனத் தீர்மானித்தது. இக்கப்பல்களைத் தொடக்கத்தில் உள்நாட்டுக் கடற்கரை வாணிகத்திலும், இலங்கை இந்தியப் போக்குவரத்திலும் ஈடுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

சுதேசிக் கப்பல் கம்பெனி

இந்திய நாட்டுக் கடற்கரை வணிகம் முழுவதும் பிரிட்டிஷ் கம்பெனிகள் கையில் இருந்தது. முதல் சுதேசிக் கப்பல் கம்பெனியை வ. உ. சி. தொடங்கியதும் அவர்கள் தங்கள் வணிகம் போய்விடும் என்று கலக்கமடைந்தார்கள். ஏராளமான கப்பல்களைச் சொந்தமாகக் கொண்ட பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற வெள்ளையர் நிறுவனம் கிழக்குக் கடற்கரையிலிருந்து இலங்கை, ரங்கூன், மலாசியா நாடுகளுக்குக் கப்பல்கள் விட்டது. சுதேசிக் கப்பல்களின் பொருளாதாரப் போட்டிக்காகப் பிரிட்டிஷ் கம்பெனிகள் அஞ்ச, அதனால் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனிக்கு லாபம் கிடைத்தது. பல சுதேசி நிறுவனங்கள் முளைத்துப் பெரிதாகிச் சுதேசி இயக்கத்தின் தாக்கத்தால் பிரிட்டிஷ் கப்பல் போக்குவரத்துத் தொழிலே அழிந்துவிடும் என்று அவர்கள் பயந்தார்கள். இந்தப் பயத்திற்கு உண்மையான அடிப்படை உண்டு.

சுதேசிக் கப்பல் கம்பெனிக்குக் கப்பல்கள் கிடையாது என்று வதந்திகள் கிளப்பிவிடப்பட்டன. வ. உ. சி. பம்பாய்க்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு திலகரின் உதவியால் ஒரு கப்பலை ஏற்பாடு செய்தார். அது இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே சரக்கு ஏற்றிச் சென்றது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி, சரக்குக் கட்டண விகிதத்தைக் குறைத்தது; பயணிகளின் கட்டணத்தையும் குறைத்தது. ஆயினும் இந்திய வணிகர்கள் அதிகக் கட்டணம் கொடுத்தாவது சுதேசிக் கப்பலில் பயணம் செய்யவும், சரக்கு அனுப்பவுமே விரும்பினார்கள். பின் பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் ஒரு பொய்வழக்கைச் சுதேசிக் கப்பல் மீது தொடர்த்தது. சுதேசிக் கப்பல், தங்கள் கப்பலின் மீது மோத வந்ததாகப் புகார் செய்தது. ஆங்கிலேய மாஜிஸ்டிரேட் திருப்தியடையும்படிகூட வழக்கை நிரூபிக்க முடியவில்லை. எல்லா முயற்சிகளிலும் பிரிட்டிஷ் நிறுவனம் தோல்வியடைந்தது.

பின்னர் சிதம்பரம் பிள்ளை, இரண்டு கப்பல்களை பம்பாயிலிருந்து ஒப்பந்தம் செய்தார். காலியா, லாவோஸ் பெயர்களுடைய கப்பல்கள் அவை. பிரிட்டிஷ் நிறுவனம்,சுதேசிக் கப்பல் நிறுவனத்தை அழித்துவிடுவதற்கு எந்த அநியாயமான வழியையும் கடைப்பிடிக்கத் தயங்கவில்லை. அவற்றைச் சிதம்பரம்பிள்ளை பொதுக்கூட்டங்களில் விளக்கினார். மக்களின் ஆதரவைத் திரட்டினார். சதிகள் எதுவும் பலிக்காமல் போகவே நேரடியாகத் தலையிடும்படி ஆட்சியின் அதிகாரவர்க்கத்தைப் பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் வேண்டிக் கொண்டது. சுதேசி நிறுவனத்தைச் சட்டங்களின் துணையோடு அடக்கும்படியும் வ. உ. சி.யைச் சிறைக்கு அனுப்பும் படியும் கேட்டுக்கொண்டது.

பெருந்தடைகளைச் சமாளித்து அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறிக் கப்பல் நிறுவனத்தை நடத்த வேண்டியிருக்கிறது என்ற நெருக்கடி நிலையை அறிந்த சுதேசி நிறுவனத்தின் பங்குதாரர்கள் சிதம்பரம் பிள்ளையை அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அவர்கள் சுதேசி உணர்வைப் பயன்படுத்திப் பெரும் லாபம் சம்பாதிக்கும் ஆசையோடு சுதேசிக் கப்பல் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்கள். கப்பல் நிறுவனம், அரசியல் தெருக்கடிக்குள்ளாவதைக் கண்டு பதறினார்கள். அரசியலையும் வணிகத்தையும் பிரிக்க வேண்டுமென்று யோசனை சொன்னார்கள். சிதம்பரம் பிள்ளை இதற்குச் சம்மதிப்பாரா? கம்பெனி நடத்தியதே அவரது அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி தானே! சுதேசியம், சுயராஜ்யத்திற்கு ஒரு பாதை என்று தானே இம்முயற்சியில் அவர் ஈடுபட்டார். அவர் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைச் சுமுகமாக நடக்க விட்டுப் பிரிட்டிஷ் அரசு கையைக் கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் என்று நம்பினாரா? பணம் போட்டவர்களின் நோக்கம் வேறு. அவர்களது குறிக்கோள் லாபம். வ. உ. சி.யின் குறிக்கோள், இந்திய மக்களின் நம்பிக்கையையும் சுதேசிப் பற்றையும் வளர்த்து, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்துவது.

அந்த நோக்கத்துக்கு முரணாகக் கம்பெனிப் பங்குதாரர்கள், அவரைச் செயலாளர் பதவியிலிருந்து விலகி, சம்பளம் வாங்கும் ஏஜென்டாக இருக்க ஒப்புக்கொள்ளும்படி கோரினார்கள். அவர்களது நன்றிகெட்ட தன்மையை வ.உ.சி. புரிந்து கொண்டு, அவர்களது கோரிக்கையை நிராகரித்தார். ஆனால், அவருடைய நண்பர்கள் ஏஜென்டுப் பதவியை ஒப்புக்கொள்ளும்படியும், அது சுதேசி இயக்க நோக்கங்களுக்கு இடையூறாக இருக்குமானால் சில மாதங்கள் கழித்துப் பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாமென்றும் சொன்னார்கள். நண்பர்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு ஏஜென்டு பதவியை ஏற்றுக் கொண்டார். கம்பெனி நிர்வாகம் அவரைத் தூத்துக்குடிக்கு வெளியே பலநாட்கள் தங்கும்படி செய்தது. அவர் தூத்துக்குடியில் இல்லாத சமயத்தில் தம்முடைய சொந்த ஆதிக்கத்தை முதலாளிகள் அதிகரித்துக்கொள்ள முயன்றார்கள். அது தவிர, தூத்துக்குடிக்கு வெளியே பல நாட்கள் தங்கினால் சிதம்பரம் பிள்ளையால் அரசியல் வாழ்க்கையில் பங்கு கொள்ள முடியாது போய்விடும்.

அரசியல் வாழ்க்கை

பங்குதாரர்களிடம் சம்பளம் வாங்கும் ஊழியனாக எவ்வளவு நாள் வ. உ. சி.யால் உழைக்க முடியும்? லாபம் தவிர நோக்கமொன்றுமில்லாத சுரண்டல்காரர்கள் கப்பல் கம்பெனி நடவடிக்கைகளை, பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டத்தின் ஓர் அம்சமாக நடத்துவதை விரும்பவில்லை. எனவே வ. உ. சி. தானே முயன்று கம்பெனிக்கு இடையூறு வரும் போதெல்லாம் தியாகங்கள் செய்து, சூதுகளையும் வஞ்சகங்களையும் பொதுமக்களிடம் வெளிப்படுத்தி—கண் போலக் காத்துவந்த கம்பெனியிலிருந்து ராஜினாமாச் செய்தார். ஏஜெண்டு என்ற கைவிலங்கை முறித்துவிட்டு, முழுமூச்சோடு அரசியல் வெள்ளத்தில் குதித்தார்.

அவர் சுதேசிக் கம்பெனியிலிருந்து ராஜிநாமாச் செய்த பிறகு நிறுவனத்தின் நிலைமை மோசமானது. சில மாதங்களுக்குப் பிறகு, பாரதியாரின் யோசனைப்படி மறுபடியும், ஏஜெண்டாகப் பணிபுரிய ஒப்புக் கொண்டார். பங்குதாரர்கள் தங்கள் நிபந்தனைகளை வற்புறுத்தவில்லை. இவர் விலகியிருந்த காலத்தில் பிரிட்டிஷ் கம்பெனியின் கப்பல்களில் பொருளேற்றிய பல இந்திய முதலாளிகளை மறுபடியும் சுதேசிக் கம்பெனியின் கப்பல்களில் பொருளேற்றும்படி வேண்டிக் கொண்டார். அவர்களும் அதற்கிணங்கினார்கள்.

அவர் கம்பெனியிலிருந்து விலகிவிட்டதையறிந்து பெருமகிழ்ச்சி கொண்டிருந்த பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் நிர்வாகிகள், மீண்டும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதையறிந்து, கம்பெனியையும் அவரையும் ஒழித்துவிடத் திட்டமிட்டார்கள். அதற்கொரு வாய்ப்பும் கிட்டியது.

பிபின் சந்திர பாலர் என்னும் வங்காள நாட்டின் தலைவர் வங்காளப் பிரிவினையை எதிர்த்து நடந்த கிளர்ச்சியில் மக்களுக்குத் தலைமை தாங்கியதால், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்தார்கள். அவரது விடுதலையை 1908ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் சிறப்பாகக் கொண்டாட துரத்துக்குடியிலும் வேறு பல நகரங்களிலும் வ. உ. சி. ஏற்பாடு செய்தார்.

பணத்தாசை பிடித்த டைரக்டர்களுக்கும் பங்குதாரர்களுக்கும், சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி, வியாபாரத்திற்கு மட்டும் தோற்றுவிக்கப்பட்டதல்ல, அரசியல் மாற்றத்தின் கருவியாகவும் அது செயல்படவேண்டுமென்று வ. உ. சி. எழுதினார்.

மார்ச்சு 9 கொண்டாட்டத்தினால் எழுச்சி பெற்ற மக்களைத் தலைமை தாங்கி வழி நடத்துவதில் எத்தகைய தொல்லை வந்தாலும் ஏற்றுக்கொள்வதென வ. உ. சி. தீர்மானித்தார். கம்பெனி டைரக்டர்களின் எதிர்ப்பையோ, வெள்ளை அதிகாரிகளின் பயமுறுத்தலையோ கண்டு அவர் தயங்கவில்லை.

சுறுசுறுப்பாக மார்ச்சு 9ஆம் நாளைக் கொண்டாடத் தயாரிப்புகள் நடந்தன. மார்ச்சு 9 திருநெல்வேலியில் கொண்டாடப்பட்டது. பத்தாயிரம் மக்கள் தாமிரவருணி பாலத்தடியில் கூடினர். தங்கள் அருமைத் தலைவர்கள் சிதம்பரம் பிள்ளையையும் சுப்பிரமணிய சிவாவையும் கேட்க அவர்கள் திரண்டிருந்தனர்.

சிவா–அரசியல் சன்னியாசி

சிவா சன்னியாசி உடையில் இருந்த அரசியல் தலைவர். அவர் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியில் பார்த்து வந்த வேலையை உதறியெறிந்துவிட்டுத் தமிழ்நாட்டில் பல நகரங்களுக்கும் சென்று, தேசபக்தர்களைச் சந்தித்து, உதிரியாகக் கிடக்கும் அவர்களை ஒரே பெருவெள்ளமாகச் செயல்படத் தூண்டினார். விடுதலை இலட்சியத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவர். இந்திய மக்களிடம் பேரன்பு கொண்டவர். அவரது இலக்கியத்திறமை அவர் நடத்திய ‘ஞானபானு’ மூலம் வெளியானது. அவரது பேச்சுத்திறனைத் தேசவிடுதலை இயக்கத்திற்கு அர்ப்பணித்தார். அவரது திறமைகள் அனைத்தையும் தேசிய விடுதலை இயக்கம் தனக்கென்றே கவர்ந்து கொண்டது. அவருக்கு இணை சிதம்பரம் பிள்ளைதான். இருவரும் இணைந்து சுதேசி இயக்கத்தை வளர்த்தனர்.

விடுதலை முழக்கம் வானில் எதிரொலித்தது. வந்தே மாதரம் என்ற முழக்கம் வெள்ளையரைக் கண்டு அஞ்சிய கோழைகளையும், வீரர்களாக்கியது. அந்நியநாட்டு உடை உடுத்தவர்களை மக்கள் ஏளனமாகக் கருதினர். சலவை செய்வோர் அந்நியத் துணிகளைச் சலவை செய்ய மறுத்தனர். பிரிட்டிஷ் கப்பல்களில் சரக்கு அனுப்பியவர்களின் துணிகளை அவர்கள் துவைக்க மறுத்தனர். நாட்டில் பிரிட்டிஷ்காரர்களை ஆதரிப்பவர்களுக்குச் சவரம் செய்வோர் உடன்படவில்லை. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் வக்கீல், சிதம்பரம்பிள்ளையைக் குறைவாகப் பேசியதைக் கேட்ட நாவிதர் அவருக்குப் பாதிச்சவரம் செய்து அப்படியே விட்டுவிட்டார். வண்டிக்காரர்கள் வெள்ளையர்களை ஆதரித்தவர்களைத் தமது வண்டிகளில் ஏறவிடவில்லை. வ.உ.சி.யின் சொற்கள் மக்களுக்கு ஆணையாயிற்று. தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள், தொழிற்சங்கம் அமைத்துத் தங்கள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் தேச விடுதலைக்காகவும் வேலை நிறுத்தம் செய்தனர். வ.உ.சி. அவர்களது சங்கத்திற்குத் தலைவர்.

இந்த உணர்ச்சிமிக்க நிலையில் திருநெல்வேலியில் மார்ச் 9 இல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம் பிள்ளையும் சிவாவும் பிபின் சந்திரபாலர் விடுதலையை வரவேற்றுப் பேசினார்கள். கூட்டம் அமைதியாக நடந்து கலைந்தது. அதிகாரிகள் மக்களது விடுதலையார்வத்தைக் கண்டு கூட்டத்தைக் கலைக்க முயலவில்லை. அதிகார முறையில் கூட்டம் தடை செய்யப்படவில்லை. சிதம்பரம் பிள்ளையை அழைத்து மார்ச் 9 கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று துரத்துக்குடி மாஜிஸ்டிரேட் வாய்ச் சொல்லால் எச்சரித்திருந்தார். அவ்வாறு எழுதிக்கொடுக்க அவர் மறுத்துவிட்டார்.

விஞ்சும் வ.உ.சி.யும்

கலெக்டர் விஞ்சு தன்னைச் சந்திக்குமாறு சிதம்பரம் பிள்ளைக்கும் சிவாவுக்கும் ஆணையனுப்பினார். இச்சந்திப்பு 1908, மார்ச் 12இல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு பற்றிய ஆதாரங்கள் எதுவும் இப்பொழுது கிடைக்கவில்லை. சந்திப்பு நடந்தவுடன் பாரதியார் விஞ்சு பயமுறுத்தியதாகவும், அப்பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் வ.உ.சி. பதிலளித்ததாகவும் இரு கவிதைகள் எழுதி வெளியிட்டார். அவை மக்களது விடுதலையுணர்வைச் சுவாலை விட்டெரியச் செய்தன. ஏறக்குறைய பாரதி பாடிய முறையில்தான் விஞ்சுதுரைக்கும் சிதம்பரம்பிள்ளைக்கும் இடையே உரையாடல் நிகழ்ந்திருக்க வேண்டும்.

ஏகாதிபத்தியவாதிகளின் அதிகாரவர்க்க மனப்பான்மையையும் அவர்களது விருப்பங்களையும் அதனை எதிர்க்கும் விடுதலை ஆர்வலர்களது உணர்ச்சியையும் இப்பாடல்கள் சித்தரிக்கின்றன.

கோழைப்பட்ட மக்கள், ஏழைப்பட்ட மக்கள், தொண்டொன்றே தொழிலாகக்கொண்டோர், அடிமைப்பேடிகள் இந்நிலையிலேயே மக்கள் இருத்தல் வேண்டும் என்பது ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பம்.

நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை மூட்டினாய், வந்தேமாதரமென்று கோசித்தாய், உண்மைகள் கூறி, “சட்டம் மீறி அடிமைப் பேடிகளை மனிதர்கள் ஆக்கினாய், கண்டகண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய், எங்கும் சுயராஜ்ய விருப்பத்தை ஏவினாய் என்பன, விஞ்சின் குற்றச்சாட்டுகள். இவை பிரிட்டிஷ் சட்டப்படியே குற்றங்கள் அல்ல. அடிமை மக்களை விழிப்படையச் செய்து, விடுதலை விருப்பத்தை அவர்கள் மனதில் தூண்டியதே விஞ்சிற்குக் குற்றமாகப்படுகிறது.

ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தை எதிர்த்து இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்காகக் கப்பலோட்டியது மாபெருங்குற்றம்.

வ.உ.சி. பதிலில் விஞ்சு குற்றமெனக் கூறும் கருத்துக்களைத் தங்கள் உரிமைகள் என வலியுறுத்திக் கூறுகிறார். வந்தேமாதரம் என்று கோஷித்தல், வெள்ளையரைத் தூசிப்பதன்று: எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்; ஆனால் “தாங்களும் மனிதர்கள் என்று உணருவது; மனித வாழ்க்கைக்குரிய உரிமைகளை விரும்புவது குற்றமல்ல என்று சிதம்பரம்பிள்ளை கூறுகிறார். பல பல தொழில்கள் செய்து எங்கள் மிடிமையைத் தீர்ப்பது குற்றமல்ல; ஒற்றுமை வழியே எங்கள் வழி என்று தேர்ந்திட்டோம்; இனி உங்கள் கொடுமைக்கெல்லாம் மலைவுறோம் என்ற உறுதி பிறந்துவிட்டது.

இறுதியாக, விஞ்சின் மிரட்டல்களுக்குத் தேசபக்தன் பணியவில்லை. அவனது தேசபக்தி, மிரட்டல்களுக்கு அஞ்சாதவனாக அவனை மாற்றிவிட்டது.

சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ?—ஜீவன்—ஓயுமோ?
இதயத் துள்ளே இலங்கு மகாபக்தி
ஏகுமோ?—நெஞ்சம்—வேகுமோ?

என்று வீரமுழக்கம் செய்கிறான் தேசபக்தன்.

இவ்விரண்டு பாடல்களில் நாட்டுமக்களின் மனப்போக்குகள் மாறியுள்ளதைப் பாரதி சித்தரிக்கிறார். மாறிய உணர்ச்சி நிலையில் மக்கள் துப்பாக்கிக்கும் சிறைக்கும் அஞ்சவில்லை. அறிவு, துணிவையும் வீரத்தையும் விளைவிக்கிறது.

விஞ்சு ஓராண்டு நன்னடத்தை ஜாமீன் கேட்கிறான். சிதம்பரமும் சிவாவும் அவனது கோரிக்கைக்கு இணங்க மறுக்கிறார்கள். அதற்கிணங்காவிட்டால் மாவட்டத்திற்கு வெளியே சென்று வசிக்கும்படி கூறுகிறான். அதற்கும் இவர்கள் இணங்கவில்லை. விஞ்சு அவர்களை ஜாமீன் காலமாகிய ஓராண்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் வசிக்கும்படி உத்தரவிடுகிறான்.

தீ பரவுகிறது

நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த செய்தி நகர் முழுவதும் பரவியது. தேசபக்தர்கள் சிறை புகுந்ததை நெல்லை நகர மக்கள் அறிந்ததும் வெகுண்டெழுந்தார்கள். விஞ்சின் வரம்பு மீறிய செயலை, வேலை நிறுத்தங்கள், கோபாவேச ஊர்வலங்கள் மூலம் கண்டனம் செய்தார்கள். பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன. போலீசார் மக்களின் மனத்தில் பயமூட்டுவதற்காக, நகரை வலம் வந்தார்கள். மக்கள் ஆவேசங்கொண்டு, அவர்களை லைனுக்குச் செல்லுமாறு விரட்டினார்கள். பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் அறிகுறிகள் அனைத்தும் அவர்களது கோபத்திற்கு இலக்காயின. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக்கொடி இறக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம், நகர்மன்ற அலுவலகம் முதலியன தீக்கிரையாயின. கலெக்டரும் போலீஸ் சூபரின் டெண்டும் உதவிக் கலெக்டரும் சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு விரைந்து வந்தனர்.

உதவிக் கலெக்டர் ஆஷ் தனது கைத்துப்பாக்கியினால் கூட்டத்தை நோக்கிச் சுட்டான். 17 வயதுச் சிறுவன் ஒருவனும் மற்றும் மூன்று இளைஞர்களும் குண்டுகளுக்குப் பலியானார்கள். ஆஷ் சுட்டுப் பலியான மனிதர்களை மக்கள் தூக்கிச் சென்றுவிட்டார்கள். மக்கள் வெள்ளையதிகாரிகளைக் குறிவைத்துக் கல்லெறிந்தார்கள். விஞ்சிற்கு மண்டையில் காயம் ஏற்பட்டது. விசேஷ போலீஸ்காரரைக் கலகத்தை அடக்குவதற்காக விஞ்சு அழைத்தான். இதனைத் தொடர்ந்து போலீசார் தச்சநல்லூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களைச் சேர்ந்த பலபேர் மீது வழக்குத் தொடுத்தனர். சிதம்பரம்பிள்ளையும் சிவாவும் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் அவர்களையே பொறுப்பாக்கி வழக்குத் தொடரப்பட்டது.

விசாரணை

சிதம்பரம்பிள்ளை மீது இ.பி.கோ. 123ஏ செக்‌ஷன்படியும் 153ஏ செக்‌ஷன்படியும் குற்றம் சாட்டப்பட்டது. சிவாவிற்குத் தங்க இடம் கொடுத்தது, அவருக்கு ஆதரவளித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. திருநெல்வேலி அடிஷனல் மாவட்ட மாஜிஸ்டிரேட்டு வாலஸ் வழக்கை விசாரித்தார். அரசாங்கத் தரப்பில் ரகசியப் போலீசார் அறிக்கைகளும் தலைவர்களுடைய பேச்சுக்களின் பகுதிகளும் சாட்சியமாகக் காட்டப்பட்டன. அரசியல் குற்றச்சாட்டுகளை, அரசியல் முறையிலேயே தலைவர்கள் மறுத்தனர். குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுக்கவில்லை. கைதிக் கூண்டில் நின்று அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் மீது குற்றம் சாட்டினர்.

என். கே. ராமசாமி ஐயர் எதிரிகளுக்காக வாதாடினார். ஸ்ரீநிவாசாச்சாரி, சடகோபாச்சாரி, நரசிம்மாச்சாரி, சீனிவாசன் முதலிய வழக்கறிஞர்கள் சிவாவுக்கும் சிதம்பரம் பிள்ளைக்குமாக வாதாடினார்கள். பாண்டிச்சேரியில் வசித்து வந்த மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாரும் பாரதியாரும் வழக்கறிஞர்களை அமர்த்தினார்கள். பாரதியார் விசாரணைச் செய்திகளை நாடு முழுவதும் பரப்பினார். வ.உ.சி.யின் அறிக்கைகளை அச்சடித்து நூலாக வெளியிட்டார். தினசரிகளில் செய்தி வெளியிட ஏற்பாடு செய்தார்.

பூர்வாங்க விசாரணை முடித்து, வழக்கு செஷன்ஸ் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. நூற்றுக்கணக்கான மரியாதைக்குரிய சாட்சிகள் வழக்கில் சாட்சிகளாக வந்தனர். அவர்களுள் பாரதியாரும் ஒருவர். ஆனால் அரசாங்கமோ, போலீஸ் அதிகாரிகளையும் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி ஊழியர்களையுமே சாட்சிகளாகக் கொண்டுவர முடிந்தது. விசாரணைச் செய்திகள் இந்தியா முழுவதும் பரவியது. ‘யுகாந்தர்’ என்ற வங்காளி நாளேடு விசாரணை நடவடிக்கைகளைத் தினந்தோறும் வெளியிட்டது.

தீர்ப்பு

ஜூலை 7ஆம் நாள் நீதிபதி பின்கே தீர்ப்பை வாசித்தார். சிதம்பரம் பிள்ளைக்கு ராஜத் துரோகத்திற்காக 20 ஆண்டுகளும் அரசியல் குற்றவாளியான சிவாவிற்கு இடமளித்ததற்காக 20 ஆண்டுகளும் தண்டனையளித்தார். சிவாவிற்கு 10 ஆண்டுகள் தண்டனை விதித்தார்.

பொது மக்கள் எதிர்ப்பு

சிதம்பரம் பிள்ளைக்கு அப்பொழுது 35 வயது, தந்தையார் உயிர் வாழ்ந்திருந்தார். மனைவியும் இச்செய்திகேட்டு மூளைக் குழப்பமடைந்து, சாகும்வரை பைத்தியமாகவே வாழ்ந்தார். தந்தையும் தாயும் தீர்ப்பு நாளில் 20 ஆண்டுகள் வயது முதிர்ந்தவர்களாகக் காணப்பட்டனர்.

இத்தீர்ப்பு வெளிவந்த வாரத்தில் பாலகங்காதர திலகர் ஆறு ஆண்டு சிறைவாசமும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டார். இத்தண்டனை திலகருடைய ஏடான கேஸரியில் ராஜத்துவேஷத்தன்மை கொண்ட ஒரு கட்டுரை எழுதியதற்காக அளிக்கப்பட்டது.

வ.உ.சி.க்கு வழங்கப்பட்ட கடுமையான தண்டனை குறித்து ‘பெங்காளி’ என்ற ஏடு கீழ்க்கண்டவாறு எழுதியது:

ஒரு நாகரிக ஆட்சி, பின்கேயின் அரசியல் இலட்சியங்களை ஏற்க மறுக்கும் நாள் மிகநல்ல நாளாகும். சுதேசிக் குறிக்கோளுக்காகப் பணிபுரிவது குற்றமென்றால் இந்திய மக்கள் முப்பது கோடிப்பேரும் குற்றவாளிகளே.

‘அம்ருத்பஸார்’ ஏடு எழுதியது:

விடுதலை வேட்கையை வெளியிட்டதற்கு இரண்டு ஆயுள் தண்டனைகள்!
ஸ்ரீ பிள்ளையைத் தவிர வேறு யாருக்கும் இந்த அநீதி இழைக்கப்பட்டதில்லை. நமது தேசிய வீரரின் தியாகத்தின் முன் நாம் தலை வணங்குகிறோம். விடுதலை பெற

வேண்டும் என்ற விருப்பமே ஜட்ஜ் பின்கேயின் நோக்கில் குற்றமாகிவிட்டது.

பாரதியார் சென்னையில் இருந்து வெளியிட்ட இந்தியாவில் தீர்ப்பைக் கண்டித்து எழுதினார். இந்தியா பத்திரிகை அரசாங்க உத்திரவால் மூடப்பட்டது. நமது மாபெரும் கவிஞர் பாண்டிச்சேரிக்குச் சென்று வாழ வேண்டியதாயிற்று. தமது அரசியல் வாழ்க்கையைத் தொடரப் பிரெஞ்சுப் பகுதியான பாண்டிச்சேரிக்குச் சென்று வசிப்பது தவிர வேறு வழியில்லை. நிறுத்தப்பட்ட இந்தியாவை, பகீரத முயற்சி செய்து வெளியிடுவதில் தேசபக்தக் குழுவும் பாரதியாரும் வெற்றியடைந்தனர்.

இங்கிலாந்தில் இந்திய அமைச்சராக இருந்த மார்லி பிரபு, இந்திய வைஸ்ராயாக இருந்த மன்றோ பிரபுவிற்கு எழுதினார்:

தூத்துக்குடி மனிதர்களுக்கு அளித்திருக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்த தபாலில் தீர்ப்பு எனக்கும் கிடைக்கும். இத்தகைய முட்டாள்தனமான தீர்ப்பை நான் ஆதரிக்க முடியாது. இத்தகைய முட்டாள்தனங்களையும், தவறுகளையும் திருத்துவதற்கு முயற்சி செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். அமைதியும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட வேண்டியதுதான். ஆனால் குற்றத்திற்கு மிக அதிகமான தண்டனையால் அமைதியும் ஒழுங்கும் நிலைப்பதற்குப் பதில், நமது நீதித் துறையிலேயே மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.

அப்பீலில், தண்டனை 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள், பின்கேயின் அரசியல் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். தண்டனையை மட்டும் குறைத்தனர்,

உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டனர்:

பிள்ளையின் வாழ்க்கையின் அரசியல் நோக்கம், ஆங்கிலேயர்களை இந்திய அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றுவதாகும். இந்நோக்கத்தை மறைக்கவே அவருடைய மற்ற நடவடிக்கைகள் இருந்தன. அவர் ஒரு ராஜத்துரோகி என்ற பின்கேயின் கருத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

உயர் நீதிமன்றமும் பிள்ளையின் அரசியலை ஒப்புக் கொண்டது. ஆனால் மக்களின் சார்பில் பாரதி, வ.உ.சி.க்கு வாழ்த்துக் கூறினார். ‘சிறைபுகுந்த சிதம்பரம்பிள்ளை தமிழ் கத்தார் மன்னன் என மீள்வார்’ என்ற நம்பிக்கையைத் தமிழக மக்களுக்கு உண்டாக்குகிறார். சிதம்பரம் பிள்ளை சிறையில் இருக்கும் பொழுது, அவரது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தத் தமிழகத்தார் உறுதி கொள்ள வேண்டும் என்று பாரதியார் விரும்புகிறார்.

    வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
           மன்னனென மீண்டான் என்றே
   கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ
           வருந்தலை என் கேண்மைக் கோவே!
   தாளாண்மை சிறிது கொலோயாம் புரிவேம்
           நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
   வாளாண்மை நின் துணைவர் பெறுகெனவே
           வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!

தலைவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனையைக் கேட்டுச் சோர்ந்துபோன மக்களுக்கு உற்சாகம் உண்டாக்குவதற்குப் பாரதி ‘மீண்டும் சீக்கிரம் வருவார்’ என்ற நம்பிக்கையூட்டுகிறார். ‘நாங்கள் நீ போட்டிருந்த திட்டங்களை நீயில்லாத போதும் நிறைவேற்றுவோம்’ என்று மக்கள் சார்பில் நின்று வாக்குறுதியளிக்கிறார். வ. உ. சி. சிறையில் இறைவனுக்குத் தவங்கள் ஆற்றி வரங்கள் பெற வேண்டுகிறார். வெளியிலுள்ள தம் துணைவர்கள் வாளாண்மை (வாள் வீரம்) பெறவேண்டுமென விரும்பித் தவம் இயற்றித் திரும்ப வேண்டுமென பாரதி வாழ்த்துகிறார். இப்பாட்டில் சோகம் இல்லை, வ. உ. சி. சிறை வாழ்க்கையைக்கூட மக்கள் அரசியல் உணர்வு தாழாமல் பாதுகாக்கப் பயன்படுத்துகிறார் பாரதியார்.

அவரது சிறை வாழ்க்கையைத் தமது சுயசரிதத்தில் சிதம்பரம்பிள்ளை வருணிக்கிறார். பின்கே, தமது தீர்ப்பைப் படித்தவுடன் எதிரிகளில் சிதம்பரம் பிள்ளையையும் சிவாவையும் தவிர அனைவரையும் கோர்ட்டிலிருந்து மூன்று மைல்களுக்கப்பாலிருந்த பாளையங்கோட்டை மத்திய சிறைக்குப் போலீஸ் பாதுக்காப்போடு நடத்திக்கொண்டு சென்றனர். தலைவர்களிருவரும் ஒரு குதிரை வண்டியில் சென்றனர்.

அவர்கள் சிறைபுகும் நாளில் திருநெல்வேலியில் மக்கள் கொதித்தெழுந்து தங்கள் எதிர்ப்பை வன்முறையில் வெளியிட்டனர். மார்ச்சு 12இல் நடைபெற்ற செயல்களைவிட வீர மிக்க செயல்கள் ஜூலை 7, 8 நாள்களில் நிகழ்ந்தன. இம்முறை விஞ்சு கூட்டத்தை நோக்கிச்சுட்டான். பலர் உயிரிழந்தனர். சிதம்பரனாரின் நண்பர்கள் தூத்துக்குடிக்குத் திரும்பினர். அங்கே பிள்ளையின் ஆதரவாளர்கள் பெருங்கூட்டமாகச் (செய்தி தெரிந்துகொள்ளக் கூடினர், ஆயிரக்கணக்கானவர் கூடியதால், அதுவே பொதுக்கூட்டமாக மாறியது. ஆஷ் என்ற உதவிக் கலெக்டர் கூட்டத்தைக் கலையுமாறு உத்தரவிட்டான், கூட்டத்திலிருந்த மக்கள் கலையமுடியாதென உறுதியாக மறுத்தனர். அவள் கூட்டத்தைத் தடி கொண்டு தாக்கப் போலீசாருக்கு உத்தரவிட்டான். போலீஸ் படை தடிகளைச் சுழற்றிக் கொண்டு கூட்டத்தைத் தாக்கியது. தேசிய உணர்வு கொண்ட மக்கள் திருப்பித் தாக்கினர். குதிரை மீது ஏறியிருந்த ஆஷ்துரையை அவர்கள் கீழே இழுத்தெறிந்து மிதித்தும் உதைத்தும் இழிவுபடுத்தினர். போலீசாரும் கோபங்கொண்ட, மக்கள் முன்னால் நிற்க முடியாமல் அடியும் கல்லெறியும் பட்டு ஓடினர்.

சிறையிலிருந்த தலைவர்கள் தங்களுக்கு ஆதரவாக விடுதலையுணர்வு கொண்ட மக்களது செயல்களை அமைதியான திருப்தியோடு கேள்விப்பட்டனர். சிறையில் பணிபுரிந்த ஓர் ஆங்கிலேய ஜெயிலர், தேசத் தலைவர்களை அவமானப்படுத்தும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான். யார் யாரெல்லாம் சிதம்பரனாருக்கு உணவு அனுப்பினார்களோ அவர்களையெல்லாம் சிறைக்குள் தள்ளினான், அவருக்கு உணவு கிடைக்காமல் செய்தான், அப்படியும் சிறைக்கு அஞ்சாத பலர், அவருக்கு உணவளிக்க முன் வந்தனர்.

சிறையில் சுகாதார வசதிகளும் பிற வசதிகளும் சராசரி மனித வாழ்க்கை நடத்தவே போதுமானதாக இல்லை. அவர்கள் நேரத்தை இலக்கியம் கற்பதிலும் உயர்நீதி மன்றத்திற்கு அப்பீல் மனுக்கள் எழுதுவதிலும் நண்பர்களுக்கும் வீட்டிற்கும் கடிதங்கள் எழுதுவதிலும் எஞ்சிய நேரத்தைச் சீட்டாடுவதிலும் கழித்தார்கள். சிறையில் கிரிமினல் கைதிகளுக்கு அப்பீல் மனுக்கள் எழுதிக் கொடுத்தும் அவர்களைச் சட்ட விரோதமாகச் சிறை அதிகாரிகள் அடித்து உதைக்கும்பொழுது அதைக் கண்டித்துக் கோஷங்கள் எழுப்பியும் உதவியதால் அவர்களுடைய அன்பையும், ஆதரவையும் அரசியல் கைதிகள் முழுமையாகப் பெற்றிருந்தார்கள்.

சிறை நிர்வாகத்தையே சிதம்பரம் பிள்ளையின் யோசனை கேட்காமல் நடத்த முடியாதென்ற நிலைமை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

அவர்கள் அவரை வேறு சிறைக்கு மாற்றும்படி வேண்டிக் கொண்டனர். வ.உ.சி. கோவைச் சிறைக்கு மாற்றப்பட்டார். ரயிலில் அவரைக் கோவைக்குக் கொண்டு சென்றனர். வழியெல்லாம் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் திரண்டது. அவரை அவர்கள் வாழ்த்தி விடை கொடுத்தனர். அவர் எதற்காகச் சிறைத் தண்டனை பெற்றாரோ, அந்நோக்கங்களுக்காகத் தாங்கள் பாடுபடப்போவதாக உறுதியளித்தனர். கோவையில், விஞ்செல் என்ற ஒரு ஜெயிலர் இருந்தான். அவன் நிறத்திமிர் கொண்டு சுதேசிகள் மீது வெறுப்புக் கொண்ட மனிதன். அவன் சிதம்பரம் பிள்ளைக்கும் அவரது சுதேசி நண்பர்களுக்கும் பல தொந்தரவுகளையும் இடையூறுகளையும் விளைவிப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தான். சுதேசி இயக்கம் அழிந்து போய்விட்டது, தடியடி கொடுத்தது போன்ற செய்திகளைப் பரப்புவான். பத்திரிகைகள் சிறைவாசிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

சிவாவின் வழக்கில் தண்டனையடைந்த நண்பர்கள் சேலத்திற்கு மாற்றப்பட்டார்கள். வ. உ. சி. தனிமையாகக் கோவைச் சிறையில் விடப்பட்டார். அவரை ஜெயிலர் செக்கிழுக்க உத்திரவிட்டான். தவறி விழுந்தாலோ, கால் ஓய்ந்து நின்று விட்டாலோ, சவுக்கால் அடிப்பான். அச்செய்தி பிற சிறைவாசிகளுக்குப் பரவியது. சிறைவாசிகளுக்குத் தேவையானவை அன்பான சொல்லும் புன்னகையும்தான். கசப்பு உமிழ்ந்து பேசுகிற அதிகாரிகளின் சொற்களைக் கேட்டு மனம் குன்றிப் போயிருக்கும் சிறைவாசிகளுக்கு ஆதரவான சொல்லும் அன்பான புன்னகையும் அமுதம் போன்றவை. அதோடு அவர்களுடைய அப்பீல் மனுக்களையும் அவர் எழுதிக்கொடுப்பார். எனவே, சிறைவாசிகள் அனைவரும் அவரை நேசித்தார்கள். அவருக்காக எதுவும் செய்யத் தயாராயிருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் விஞ்செல்லை கழிவோடைக்குள் தள்ளிக் கம்பளியால் மூடி அடித்துவிட்டார்கள். யார் அடித்தார்கள் என்று அவனால் அடையாளம் காணமுடியவில்லை.

கோவைச் சிறையில் இருந்தபோதுதான் ஆஷ் கொலை செய்யப்பட்ட செய்தி வந்தது. ஆஷ் மூன்று இந்திய இளைஞர்களைக் கொன்றுவிட்டான் என்ற செய்தியறிந்ததும் வாஞ்சிநாதன் என்ற இளைஞன் அவனைக் கொல்லுவேன் என்று சபதம் செய்து கொண்டான். தேச விடுதலைக்காக வன்முறையைப் பயன்படுத்துவது தவறில்லை என்ற கருத்துக்கொண்ட இளைஞர் அணியில் சேர்ந்து பயிற்சி பெற்றான். ஒரு கைத்துப்பாக்கியையும் அவர்களிடமிருந்து அவன் பெற்றிருந்தான், விஞ்சிற்குப் பிறகு ஆஷ் கலெக்டரானான். இவன் எங்கோ செல்வதற்காகத் தன் மனைவியோடு ரயிலேறிச் சென்றபோது மணியாச்சியில் ரயில் நின்றது. வாஞ்சிநாதன் அவனையே பின்பற்றி வந்து, அவனைச் சுட்டுக் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டான், போலீசார் கையில் அகப்பட விரும்பாமல், கழிப்பிடத்திற்குள் நுழைந்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தான்.

சிறை டாக்டர், சிதம்பரம் பிள்ளையின் நண்பர். வெள்ளையர்களுக்குத் தெரியாமல் அவரோடு உரையாடுவார். அவர்தான் ஆஷ் கொலையுண்ட செய்தியையும் வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்ட செய்தியையும் வ. உ. சி.க்குக் கூறினார். “இந் நற்செய்தியை வரவேற்கிறேன்” என்று வ. உ. சி. மகிழ்ச்சியோடு கூறினார்.

இரண்டாண்டுகள் கோவைச் சிறையில் இருந்த பின்னர் அவர் 1912 டிசம்பர் மாதம் விடுதலையானார்.

அவர் விடுதலையாவதற்கு முன்னர் சுதேசிக் கப்பல் கம்பெனியின் முதலாளித்துவ டைரக்டர்கள், அக்கம்பெனியைப் பல சாகசங்களால் அழிக்கவும் வ. உ. சிதம்பரம் பிள்ளையைச் சிறைக்கனுப்பவும் முயன்று வெற்றி கண்ட பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கே விற்றுவிட்டார்கள், இச்செய்தி அவர் மனத்தில் பெருங்கவலையை ஏற்படுத்தியது. இவ்வதிர்ச்சியிலிருந்து விடுபட அவருக்குப் பல ஆண்டுகள் ஆயின.

1908லிருந்து 1912 வரை நான்கு ஆண்டுகளில் புரட்சி இயக்கத்தில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. சிதம்பரம்பிள்ளை சிறைக்குச் செல்லும்போது, அவரை வழியனுப்பியது ஒரு மாபெருங்கூட்டம். அவரது தண்டனையைக் கண்டித்து எழுச்சிமிக்க எதிர்ப்பியக்கம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கோவைச் சிறைக்கு மாற்றப்பட்டுக் கொண்டு செல்லப்படும் பொழுது உற்சாகமிக்க கூட்டங்கள் ரயில் நிலையம்தோறும் வழியனுப்பியது.

ஆனால், டிசம்பர் 1912இல் நிலைமை மாறிவிட்டது. தொடர்ச்சியான இயக்கம் மக்கள் உணர்வு நிலைமையைத் தாழாமல் வைத்திருக்கவில்லை. நாலாண்டுக்கு முன் இருந்த உணர்ச்சி நிலை காட்டு வெள்ளம்போல வற்றிவிட்டது, தலைமையைப் பிரிந்த அவை சீர்குலைந்தன. பிரிட்டிஷ் கொடுமைகளை எதிர்க்கத் தலைமை தாங்கும் அணித் தலைமை சிறைக்குள் அடைக்கப்பட்டுவிட்டது.

பாரதியார் எதிர்பார்த்தது போல, “வேளாளன் சிறை புகுந்தான்; தமிழகத்தார் மன்னன் என மீள்வான்” என்ற வாக்குப் பொய்த்துப் போய்விட்டது. அவரைச் சிறை வாயிலில் வரவேற்கக் காத்திருந்தவர் ஒரே ஒருவர்தான். அது அவரது விசுவாசமிக்கப் போராட்டத் தோழர் சிவாதான். சேலம் சிறையில் அவருக்குப் பெரும்வியாதி கண்டதால் விடுதலை செய்துவிட்டார்கள். அவர் சேலம் மாவட்டத்தில் சுதேசி இயக்கத்தில் பல இன்னல்களை ஏற்றுச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரைச் சிறைவாயிலில் வரவேற்க வந்தவர் அவர் ஒருவர்தான்.

மனஞ்சோர்ந்துவிடாமல் அவர் சென்னையில் தங்கினார். அங்கு தன்னைப் போலவே ஊக்கத்தோடு தேசப்பணியிலும், தொழிற்சங்கப் பணியிலும் ஈடுபட்டிருந்த சக்கரைச்செட்டியார், சிங்காரவேல செட்டியார். இன்னும் அணையாத புரட்சிக்கனலாக ஒளிர்ந்து கொண்டிருந்த பாரதியார் ஆகியவர்களோடு தொடர்பு கொண்டார். தமது செல்வமனைத்தையும் நாட்டுப் பணிபுரியும் தொண்டர்களுக்காகவே செலவிட்ட மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார் சென்னையில் தான் வாழ்ந்து வந்தார். அவருடைய பண உதவியும் கிடைத்தது. வ. உ. சி. தமது கோரல் மில் தொழிற்சங்க அனுபவத்தைப் பயன்படுத்திக்கொண்டு தொழிற்சங்கத் தலைவர்களோடு சேர்ந்து பணிபுரிந்தார். சென்னைத் தொழிலாளர் சங்கம் (M.L.U.) மற்றும் பல தொழிற்சங்கங்களை அமைப்பதில் அவர்களுக்குத் துணைபுரிந்தார். தமது கூட்டுறவு இயக்க அனுபவத்தைப் பயன்படுத்தி, சென்னையில் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்தார். ஏழை எளிய மக்களையும் கூட்டுறவு இயக்கத்தில் சேரச் செய்தார்.

அவருக்கு வருமானம் எதுவுமில்லை. வழக்கறிஞராகத் தொழில்புரிய முடியாதபடி சன்னது பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. பல வழிகளில் உலக வாழ்க்கையை நீந்த முயன்றார். மளிகைக்கடை வைத்துப் பார்த்தார். வெற்றி பெறவில்லை. மண்ணெண்ணெய்க்கடை வைத்தார். அதிலும் இழப்பு.

இவரை ஒருமுறை விடுதலை செய்த வாலஸ் என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதியாயிருந்தார். சன்னதைத் திரும்பத் தருமாறு அவருக்கு விண்ணப்பித்தார். வாலஸ் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு, சன்னதைத் திருப்பிக் கொடுத்து வழக்கறிஞராகப் பணிபுரிய அனுமதித்தார்.

சென்னையில் சில ஆண்டுகள் தங்கியிருக்கும்பொழுது வையாபுரிப்பிள்ளை, செல்வ கேசவராய முதலியார், பாரதியார், உ.வே.சாமிநாதய்யர் முதலிய தமிழ்ப் புலவர்களோடு அடிக்கடி இலக்கிய ஆய்வுகள் நடத்துவார். அக்காலத்தில் சில பண்டைய நூல்களை இவர் பதிப்பித்தார். திருக்குறள் அறத்து பாலை ஆய்வுரையோடு பதிப்பித்தார். தத்துவ நூல்கள் சில எழுதினார். ஜேம்ஸ் ஆலன் என்ற அமெரிக்கத் தத்துவாசிரியரின் நூலை மொழிபெயர்த்தார்.

அவரது உடல்நிலை சிறை வாழ்க்கையின் கடுமையான சூழ்நிலையால் சீர்கேடடைந்தது. அரசியல் சூழ்நிலை அவர் சிறைக்குப் போகும்போது இருந்ததுபோல இல்லை. பழைய தலைவர்களின் செல்வாக்குக் குறைந்துவிட்டது. தேசிய இயக்கத்தின் தலைமையில் பொதுக் கொள்கைகள் உருவாகி வந்த காலம் அது. அவற்றில் பலவற்றைச் சிதம்பரம் பிள்ளையால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவர் எப்பொழுதும் விடுதலை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்படவில்லை. அவருக்கு உடன்பாடில்லாத விஷயங்களில்கூட விலகியிப்பாரே தவிர எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. தமது மனச்சாட்சியின் வழிகாட்டுதலைப் பின்பற்றித் தமது இறுதிக்காலம் வரை பயனுள்ள ஏதாவது அரசியல் பணி, இலக்கியப் பணி, சமூக சீர்திருத்தப் பணி இவற்றில் ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு வந்தார்.

கடைசி இருபத்தைந்து ஆண்டுகள் உடல் நலிந்த நிலைமையில், அவர் இலக்கிய ஆய்விலும் வெளியீட்டிலும் நேரம் செலவிட்டார். அவர் பண்டைய இலக்கியங்கள் தமிழ் மக்களது செல்வம் என்றும் அதை ரசிக்கும் வாய்ப்பு சாமானியத் தமிழனுக்குக் கிட்டவேண்டும் என்றும் நம்பி வந்தார். அதற்காக அவற்றை எளிய நடையில் எழுதப்பட்ட உரையோடு வெளியிட ஆர்வம் காட்டினார்.

திருக்குறளுக்கு உரையெழுதியவர்களில் பரிமேலழகர் உரை படித்த பண்டிதர் வியக்க எழுதப்பட்டது. மணக்குடவர் உரை, மக்கள் மொழிக்கு நெருக்கமான நடையில் நேரடியான பொருள் கொண்டு எழுதப்பட்டது. மணக்குடவர் உரையோடு சிதம்பரம்பிள்ளை திருக்குறளின் அறத்துப்பாலைப் பதிப்பித்தார். மணக்குடவர் உரையின் நடை கடினமாக இருக்கும் இடங்களில் எல்லாம் தனது உரையை எளிய நடையில் எழுதினார். திருக்குறளை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும் என்ற பேரார்வத்தால் அவர் திருக்குறள் பதிப்பு வேலையை மேற்கொண்டார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தமிழ் நடை சாதாரணமாக, இலக்கியப் பயிற்சியில்லாத தமிழனுக்கு விளங்காது. ஆகையால், எளிய நடையில் இருந்த பழைய உரையை அடிப்படையாகக் கொண்டு நமது காலத்து மொழிநடை கலந்து உரை எழுதினார்.

இது போலவே தொல்காப்பியத்தைத் தமது உரையோடு பதிப்பித்தார். ஒழுக்க முறையில் மிக உயர்ந்த கருத்துக்கள் கொண்டவர் வ.உ.சி.

நெல்லை மாவட்டத்தில் வேளாளர் என்ற மிக உயர்ந்த சாதியில் பிறந்தவர் அவர். பிராமணர்களைவிடக் கட்டுப்பெட்டியான பழக்க வழக்கங்கள் உடைய சாதியினர் அவர்கள். இவர் தூத்துக்குடியில் அரசியலில் ஈடுபடும் பொழுது, கண்ணில்லாத தாழ்த்தப்பட்டவர்களைத் தம் வீட்டில் வளர்த்துக் கல்வி கற்பித்தார். பிற்காலத்தில் சகஜானந்தர் என்று துறவித் திருநாமம் பூண்ட தாழ்த்தப்பட்ட இளைஞருக்குச் சைவ சித்தாந்தமும் தமிழிலக்கியமும் கற்பித்து, மனம் துணிந்து வீட்டில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்.

இவரது இச்செயல்களுக்காக, அவர் சாதி நீக்கம் செய்யப்பட்டதுமுண்டு. தம் இனத்தில், உள்ள சாதிப் பித்தர்களின் வெறுப்புக்கு ஆளானாரே அன்றி, எல்லா இனத்தவர்களின் அபிமானத்துக்கும் ஆளானார். சிவா பிராமணர்; பூநூலை அறுத்தெறிந்து பிராமண கர்வத்தை விட்டொழித்தவர். இவருக்கு உதவியவர்களில் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரி யார் பிராமணர். வழக்கறிஞர்கள் பிராமணர்கள். இவர்கள் பிராமண குலத்தில் உதித்த தேசப்பற்று மிக்க, சாதிக் கருவம் இல்லாத மேலோர்.

அவருடைய வக்கீல் சன்னது திரும்பக் கிடைத்ததும் கோவில்பட்டிக்குச் சென்று தொழில் தொடங்கினார். பணத்தாசை கொண்ட, அரசியல் கொள்கையற்ற பிராமண வழக்கறிஞர்கள், இவர் மீது பொறாமை கொண்டு அற்பத் தனங்களில் ஈடுபட்டார்கள். அவர் மனம் குன்றித் தம்முடைய அரசியல் வாழ்க்கையின் வேர் போல் இருந்த தூத்துக்குடிக்குச் சென்றார். தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் வருமானம் அமோகமாக இல்லை. தமது ஓய்வை, இலக்கிய ஆய்விலும் தத்துவ ஆய்விலும் செலவழித்தார். தமது சுயசரிதையைச் செய்யுளில் எழுதினார். சில அரசியல் மாநாடுகளில் தலைமையுரை நிகழ்த்தினார்.

தமிழக அரசியல் வரலாற்றிற்கு அவர் ஆற்றிய சிறந்த பணிகள், தம்முடைய சுயசரிதையை எழுதி வெளியிட்டதும் பாரதியாருக்கும் அவருக்குமுள்ள உறவை ‘பாரதியாரும் நானும்’ என்ற கட்டுரையில் எழுதியதுமாகும். பார்த்தால் நூல்கள் 100 பக்கங்களுக்குள் தான் இருக்கும். ஆனால் அவற்றுள் தமிழக அரசியல் வரலாற்றின் துவக்க காலச் சிற்பிகளின் மன ஒற்றுமையும் நேசப்பான்மையும் புரட்சிகர மனப்பான்மையும் வெளியாகின்றன. ‘பாரதியாரும் நானும்’ என்று கட்டுரை, சிதம்பரம் பிள்ளைக்கும், பாரதிக்குமுள்ள ஆன்ம நேயத்தைச் சித்தரிக்கிறது. அக்காலத்து மக்களின் சமுதாய உணர்வைத் தூண்டி வளர்த்த இரு பெருமக்களது தோழமை யுணர்வினை வெளிப்படுத்துகிறது. இருவரும் ஒரு தோழமைக் குழுவின் யோசனைப்படியே தம்தம் கடமைகளை வகுத்துக் கொண்டு அரசியல் பணிபுரிந்தார்கள். சங்கடங்கள் நேர்ந்தபோது இருவரும், பாண்டிச்சேரி, சென்னைக் குழுக்களைக் கலந்து கொண்டே, அவற்றிற்குத் தீர்வு கண்டார்கள். வ.உ.சி.யின் எல்லா தேசிய முயற்சிகளுக்கும், பாரதியின் இந்தியா முதலிய பல பத்திரிகைகளின் ஆதரவு உண்டு. அவ்வாறு ஆதரித்த காரணத்தாலேயே அவை பிரிட்டிஷ் அரசினால் அடக்கப்பட்டன.

வங்காளத்தில் தோன்றிய புரட்சித் தீயைத் தெற்கில் பரவச் செய்தவர்களில் பாரதியும் வ.உ.சி.யும் முக்கியமானவர்கள். அவர்களுடைய சுதேசிக் குழுவில் யாரும் முக்கியத் துவம் குறைந்தவர்களல்லர். ஆனால் அவர்களுள் செயல் வீரத்திலும் கவிதையால் மக்களுக்கு உணர்வூட்டுவதிலும் வ.உ.சி. யும் பாரதியும் இணையற்றவர்கள்.

அவர்கள், தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்து, வளர்த்தவர்கள். அரசியல், சமூகம், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளையும் இணைத்து மக்கள் சமூக உணர்வு நிலையை வளர்த்தார்கள். தொழிலாளரைத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளத் தொழிற்சங்க இயக்கத்தைத் தோற்றுவித்தார் வ.உ.சி. அவரது தமிழக மறுமலர்ச்சி இயக்கம் பரந்த அரசியல் பண்பாட்டுப் பின்னணி கொண்டது. அந்த வழியில் காலத்திற்கேற்ற முன்னேற்றம் காணவேண்டும்.

அவர் வாழ்க்கையின் இறுதி மணி நேரத்தை எப்படிக் கழித்தார் என்று அறிந்துகொள்ளுவது ஒரு சுவையான செய்தியாகும். பாரதியாரின் பாடல்கள் சிலவற்றை நல்ல குரலில் பாடுகிறவர் ஒருவர் பாடக் கேட்டுக்கொண்டே அவர் கடைசி மூச்சிழுத்தார். அவை ‘விடுதலைப் பாடல்’, ‘பாரத சமுதாயம்’ ஆகியன.

விடுதலை விடுதலை விடுதலை

    பறைய ருக்கும் இங்கு தீயர்
         புலைய ருக்கும் விடுதலை!
    பரவ ரோடு குறவருக்கும்
         மறவருக்கும் விடுதலை!
    திறமை கொண்ட தீமை யற்ற
         தொழில் புரிந்து யாவரும்
    தேர்ந்த கல்வி ஞான மெய்தி
         வாழ்வம் இந்த நாட்டிலே

    ஏழை யென்றும் அடிமை யென்றும்
         எவனும் இல்லை சாதியில்
    இழிவு கொண்ட மனித ரென்பது
         இந்தி யாவில் இல்லையே
    வாழி கல்வி செல்வ மெய்தி
         மனமகிழ்ந்து கூடியே
    மனிதர் யாரும் ஒருநி கர்ச
         மான மாக வாழ்வமே

    மாதர் தம்மை இழிவு செய்யும்
         மடமை யைத்கொளுத்துவோம்
    வைய வாழ்வு தன்னில் எந்த
         வகையி லும்ந மக்குளே
    தாதர் என்ற நிலைமை மாறி
         ஆண்களோடு பெண்களும்
    சரிநி கர்சமான மாக
         வாழ்வ மிந்த நாட்டிலே

விடுதலையின் உணர்வுகளைக் கற்பனையாக இப்பாடல் உணர்த்துகிறது. வெறும் கற்பனையைச் சொல்லாத இப்பாடல் விடுதலை யாருக்கெல்லாம் தேவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. பொதுவான சமத்துவம் நிறைந்த ஒரு பொருளாதார அமைப்புத் தேவை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. சோசலிச அமைப்பு என்ற இந்திய அரசியல் அமைப்பைச் சொல்லால் அழைக்கவே, நமது கோடீசுவரர்களின் பத்திரிகைகள் எவ்வளவு எதிர்ப்பைக் கக்குகின்றன. 1921 செப்டம்பரில் எழுதிய பாட்டு, இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருப்பதே மிக முற்போக்கான ஒரு போக்காகும்.

பாரத சமுதாயம்
பல்லவி

 
      பாரத சமுதாயம் வாழ்கவே–வாழ்க வாழ்க!
      பாரத சமுதாயம் வாழ்கவே–ஜய ஜய ஜய! (பாரத)

அனுபல்லவி

     முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
         முழுமைக் கும்பொது வுடைமை
     ஒப்பி லாத சமுதாயம்
         உலகத் துக்குஒரு புதுமை–வாழ்க! (பாரத)

சரணங்கள்

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?–புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?–நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெரு நாடு
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின்றித் தரு நாடு–இது
கணக்கின்றித் தரு நாடு–நித்தநித்தம்
கணக்கின்றித் தரு நாடு–வாழ்க! (பாரத)

இனியொ ருவிதி செய்வோம்– அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்–வாழ்க! (பாரத)

‘எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்’
என்றுரைத் தான்கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும்–ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்–ஆம்ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்–வாழ்க! (பாரத)

எல்லாரும் ஒர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஒர்நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாகும் இந்நாட்டு மன்னர்–நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்–ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்–வாழ்க! (பாரத)

விடுதலை, வருகின்ற புதிய பாரதம், அதற்காக நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சபதம் அனைத்தும் அடங்கிய அவருடைய நெருங்கிய நண்பரான பாரதியின் பாடல்களைப் பலமுறை விரும்பிப் பாடச் சொல்விக் கேட்டுக்கொண்டே உயிர் பிரிந்தார். அப்போது அவருக்கு வயது 64. 🌕