வ. வே. சு. ஐயர்/பிரிட்டிஷ் போலீசைப் பிணம் ஏமாற்றியது!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchபிரிட்டிஷ் போலீசைப்
பிணம் ஏமாற்றியது!

பிரெஞ்சு ஆட்சியிலே உள்ள புதுச்சேரி நகருக்கு அருகே சின்ன பாபு சமுத்திரம் என்ற ஊர் அந்த ஊர் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் பிரெஞ்சு ஆட்சிக்கும் இடையே உள்ள எல்லைக்கோடாக இருந்தது. அந்த ஊருக்கு அருகே பிரெஞ்சு அதிகாரத்துக்கு உட்பட்ட சிறு கிராமத்திலே உள்ள தனது நண்பர் ஒருவரைப் பார்க்க வ.வே.சு.ஐயர் வந்திருந்தார். தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், இதை ஒற்றர்களால் தெரிந்து கொண்ட பிரிட்டிஷ் போலீசார், அந்த வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். இதை வ.வே.சு.ஐயரும் புரிந்து கொண்டார்.

ஐயர் பேசிக் கொண்டிருந்த வீட்டில் அழுகுரல் ஓசை எழுந்தது. கிராமத்துப் பெரியவர்கள் சாவுச் செய்தியைக் கேட்டதும், ஒருவர் பின் ஒருவராக வந்து துக்கம் விசாரித்து விட்டு அந்த வீட்டின் வாசலிலேயே உட்கார்ந்திருந்தார்கள். இதே நேரத்தில் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களும் அங்கே கூடிவிட்டார்கள்.

கூடிய பெண்கள், அவரவர்களுக்குரிய மனக்குறைகளை ஒப்பாரியாகப் பாடி, மாரடித்துக் கொண்டு, ஒருத்தியை ஒருத்தி அவரவர் கைகளால் சங்கிலி போல இணைத்து, பிணத்தின் முன்னாலே சுற்றிச் சுற்றி வட்டமாக நகர்ந்து கொண்டு, கும்பலாக, உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும் அழுது கொண்டும் இருந்தார்கள்.

சவம் இருந்த இடத்திற்கு எதிரே பந்தல் ஒன்று இருந்தது. அப்பந்தலிலே படர்ந்திருந்த பாகற்கொடியிலே காயும் பழங்களும் காய்த்துத் தொங்கி, பார்ப்பவர்கள் மனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தன.

அந்த இழவு வீட்டின் கும்பலிலே கூடி அழுது கொண்டிருந்த பெண் ஒருத்தி, தன்னுடன் வந்திருந்த இன்னொரு பெண்ணுக்குப் புரியும்படியாக, பாட்டோடு பாட்டாக, "பந்தலிலே பாவக்காய், பந்தலிலே பாவக்காய்" என்று பாடிக்கொண்டே அழுதாள். மூக்கைச் சிந்தித் தரையிலே போட்ட அவளது சினேகிதி; அவளுக்குப் பதில் கூறும் ஜாடையில், 'போகையிலே பாத்துக்குவோம். போகையிலே பாத்துக்குவோம்' என்று பாடி அழுது கொண்டே இருந்தாள்.

இவர்கள் இருவரும் இப்படிப் பாடிய பாட்டைக் கேட்ட வீட்டுக்குச் சொந்தக்காரி, தானும் பாட்டோடு பாட்டாக, ‘அது விதைக்கல்லவோ விட்டிருக்கு, அது விதைக்கல்லவோ விட்டிருக்கு’ என்று எச்சரித்தபடியே அழுது கொண்டிருந்தாள்.

இதற்குள் சாவு வீட்டிற்கு எதிரிலே தாரை, தப்பட்டைகள் முழங்கின. சங்கும் ஊதிக் கொண்டே இருந்தது. சேமகண்டமும் வாசிக்கப்பட்டு அந்த வீடு அழுகுரலோசையுடன் சோகமயமாக இருந்தது.

கிராமத்து மக்களில் சிலர், செத்துப் போனது யாரப்பா? என்று இழவு வீட்டின் திண்ணையிலே உட்கார்ந்து கொண்டிருந்தவர்களைக் கேட்டபோது, “கவுண்டர் வீட்டு விருந்தாளியப்பா அவர், அவருக்கு ஆதரவு யாருமில்லை. ஒண்டிக்கட்டை கலியாணம் ஆகாத தனிக்கட்டை, தனது தம்பியைப் பார்க்க வந்த இடத்தில் திடீரென்று மாரடைப்பு வந்துவிட்டது. போயிட்டாம்பா மனுஷன்” என்று சோகமாகக் கூறி, செய்தியைப் பரப்பிவிட்டார்கள்.

இழவு வீட்டுக்கு வந்தவர்கள் நெருப்பிலே விழுந்த பூப்போல வாடிக்கருகிக்காட்சி தந்தார்கள். அவ்வளவு நல்ல மனிதராம் அவர்!

அப்போது, வ.வே.சு. ஐயர் இந்த வீட்டுக்கு இழவு விசாரிப்பதற்காக வந்திருப்பதாக ஒற்றர்கள் மூலமாகச் செய்தியறிந்த பிரிட்டிஷ் போலீசார் அந்த வீட்டைத் திடீரென்று சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். இதைப் பார்த்த கிராம மக்கள் நம்ம ஊருக்கு வெள்ளைக்காரப் போலீசா? என்று திகைத்து விட்டார்கள்.

பிணம் உள்ள வீட்டுக்குள் போலீசார் சென்று விசாரித்தார்கள். மாரடைப்பால் சின்னக் கவுண்டர் தம்பி மாண்டுபோனார் என்பதைத் தெரிந்ததும் போலீசார், சாவு வீட்டிலே கலவரம் ஏற்படக் கூடாது என்ற பெருந்தன்மையோடு, அவரவர் பூட்ஸ்கள், தொப்பிகளைக் கழற்றிவிட்டு அந்த இடத்திலேயே மண்டியிட்டு ஜபம் செய்து விட்டு, வீதிக்கு வந்து, வீட்டுக்கு வருவோர் போவோரை அடையாளம் பார்த்து உற்று நோக்கிக் கொண்டே இருந்தார்கள்.

அவர்களுக்கு வ.வே.சு. ஐயரை அடையாளம் தெரியாது. அதனால், ஐயர் பாரிஸ்டர் பட்டப் படிப்புக்குச் செய்து கொண்டே விண்ணப்ப மனுவில் லண்டனில் எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்த போட்டோவைப் பெரிய அளவிலே எடுத்து, ஆளுக்கு ஒன்றாக அவர்களது கைகளிலே வைத்திருந்து, ஒவ்வொரு ஆள் முகத்தையும் உற்றுநோக்கியபடியே இருந்தார்கள். எப்படியும் சாவு வீட்டுக்குள்ளே போனவர் வெளியே வந்துதானே ஆகவேண்டும் என்று சாவு வீட்டுத் தெரு வாசலிலும், திண்ணையிலும் அவர்கள் உட்கார்ந்து விட்டார்கள்.

இதற்கிடையே தாரை, தப்பட்டைகள் சங்கோசை, சேமகண்ட ஒலிகளும் எழுந்தன. கிராமத்து மக்களிலே சிலர் போதையோடு மரணக் கூத்தாட்டத்தை ஆடிக் கொண்டே இருந்தார்கள்.

பிரேதம் தூக்கி வரப்பட்டு வீதியிலே இருந்த பாடையிலே வைக்கப்பட்டது. பிணத்தின் நெற்றியிலே திருநீற்றுப் பட்டையும், பெரிய சந்தனப் பொட்டும் வைக்கப்பட்டிருந்தது. கொள்ளிச் சட்டிக்காரன் பிணத்தின் முன்னாலே நின்று கொண்டு அழுதான்!

இவை எல்லாவற்றையும் கண்ட கிறித்துவப் போலீஸார், நமது நாட்டில் மரணமடைந்து விட்டால் இப்படியெல்லாம் ஆடிப்பாடிச் சடங்குகள் செய்வதில்லையே என்று நினைத்து, தமிழ்ப் பிணம் சுடுகாடு போகும் கடைசிக் காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். போலீசாரிலே ஒருவர் பிணம் புதைக்கும் இடுகாடு எங்கே என்று கேட்டார். அதற்குக் கிராமத்து மணியக்காரர். தமிழ் நாட்டில் சிலர் பிணத்தைப் புதைப்பார்கள்; பலர் எரித்து விடுவார்கள். இந்தப் பிணம் வயது மூத்த பிணம் எரிக்கப்படும். அதோ நெருப்புச் சட்டி என்று கொள்ளி போடுபவன் கையிலே இருந்த நெருப்புச் சட்டியைக் காட்டினார்!

சவ ஊர்வலம் புறப்பட்டது! தாரை தப்பட்டைகள் வேகமாக, ஒலித்தன! சங்கும் சேமகண்டமும் வாசிக்கப்பட்டது. பண்டாரம் திருவாசகம் பாடியபடியே அவரவர்களிடம் காசு பெற்று, அவர்கள் பெயரைக் கூறி வாழ்த்திக் கொண்டே நகர்ந்தான்.

சவ வீட்டிலே எல்லாம் பெண்களாகவே இருந்ததால் உள்ளே சென்று விசாரிக்க அச்சப்பட்டு, போலீசாரும் பிண ஊர்வலம் பின்னாலே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.

நூறு பேர்களுக்கு மேல் கும்பலாக வந்த கூட்டத்தில், அரிச்சந்திரன் கல்லருகே பிணம் வந்த போது, பத்து பன்னிரண்டு பேரே இருந்தார்கள். அவர்கள் முகங்களை எல்லாம் திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டு, ஐயரைக் காணாமையால், ஒற்றர்கள் தந்த செய்தி தவறு என்று எண்ணி, தங்களது ஜீப்பிலே ஏறிக் கொண்டு போலீசார் சென்று விட்டார்கள்.

சுடுகாடு வந்தடைந்தது சவம் பாடையைவிட்டு இறக்கிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, வேக வேகமாக வந்த ஒருவர், எல்லா போலீசாரும் ஜீப் வண்டியிலே ஏறிக் கொண்டு போய்விட்டார்கள் என்றார்.

கொள்ளிச் சட்டி ஏந்தி வந்தவன் சுற்றும் முற்றும் மீண்டும் பார்த்தான். பிறகு, பிணத்தின் காதருகே சென்று ஏதோ ரகசியம் கூறுவது போலக் குனிந்தான். செத்துவிட்ட பிணம் போல பாடையிலே படுத்துக்கிடந்தவர் திடீரென எழுந்து நின்றார். பாடை தூக்கிகளும், பின்நடை முன்நடை போட்டவர்களும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு வரட்டிப் படுக்கை மீது கொள்ளிச் சட்டி நெருப்பைக் கொட்டி, கற்பூரம் ஏற்றி நெருப்பை மூட்டி எரித்தார்கள்!

எரிந்தது; வெள்ளையர் ஆட்சி. சுடர் விட்ட சோதியாக வெளிச்சம் தந்தது. இந்திய சுதந்திரம் பாடைதூக்கிகளும், நெருப்புச் சட்டி ஏந்தியும், வ. வே. சு. ஐயரும் அந்த நெருப்புச் சோதியைப் பார்த்து விலா நோகச் சிரித்தார்கள்!

சின்னபாபு சமுத்திரம் ஊரருகே உள்ள சிற்றூரில் தனது நண்பரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தபோது, ஒற்றர்களால் துப்பறிந்து உண்மையைத் தெரிந்து கொண்ட பிரிட்டிஷ் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, அந்தப் போலீஸ் படையை ஏமாறவைக்க, வ.வே.சு. ஐயரும், அவரது ஆபத்துக்கு உதவிய நண்பரும் போட்ட வியூகம் இது.

ஆங்கிலேயர் ஆட்சியை வேரறுக்கும் சுதந்திர உணர்ச்சியுடைய ஊர்மக்களின் மன ஒற்றுமையும் ஐயருக்கு உதவியது. பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவிலே மட்டுமன்று, லண்டன் மாநகரிலேயும் பலதடவை ஏமாற வைத்த சுதந்திரப் போராளி வ.வே.சு. ஐயர். அத்தகைய ஒரு வீர, தீரரின் செயல்களை, வரலாற்றை, அவரது எண்ணங்களை அடுத்து வரும் அத்தியாயங்களிலே படிப்போம்.