ஹாஸ்ய வியாசங்கள்/ஆஸ்பத்திரி விசாரணை

விக்கிமூலம் இலிருந்து

ஆஸ்பத்திரி விசாரணை

வடஆற்காடு ஜில்லாவில் ஒரு ஆஸ்பத்திரியிருந்தது. அந்த ஆஸ்பத்திரியின் முக்கிய வயித்திய உத்யோகஸ்தர் கொஞ்சம் சோம்பேறி. ஆஸ்பத்திரியை ஒழுங்காய் சுத்தமாய் வைத்துக் கொண்டிருப்பதில் அதிகமான காலத்தைச் செலவழிப்பதில்லை. ஆயினும் வருஷா வருஷம் சென்னையிலிருந்து பிரபல வயித்தியர் ஒருவர் மேற்பார்வை பார்க்க வரும் போது மாத்திரம் விழித்துக் கொண்டு, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார். மேற்கண்டபடி மேற்பார்வை பார்க்கச் சென்னையிலிருந்து ஒரு வயித்திய உத்யோகஸ்தர் ஒரு முறை விஜயம் செய்தார். அவர் நாளைக்கு வரப் போகிறார் என்று தெரிந்தவுடன், இன்றைக்கே ஆஸ்பத்திரியையெல்லாம் சுத்தி செய்து ஒழுங்காக வைத்து வைத்தார்.

மறுநாள் பதினொரு மணிக்கு சென்னை வயித்தியர் வருமுன் ஒரு மணிக்கு முன்பாக தன் ஆஸ்பத்திரியில் எல்லாம் ஒழுங்காகவும், சுத்தமாகவும் இருக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டு வந்தார். அச்சமயம் ஆஸ்பத்திரி நர்சுகள், வேலைக்காரர்கள் முதலியோரெல்லாம் சுத்தமான ஆடை உடுத்திக் கொண்டிருக்கிறார்களா என்று பரிசோதித்துப் பார்த்த பொழுது, கொஞ்சம் வயது சென்ற ஆஸ்பத்திரி மகம்மதிய கேட் ஜவான் மாத்திரம் மிகுந்த பழமையான மிகவும் அழுக்குப் படிந்த கருப்பு தலை குட்டை ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர். உடனே கோபங்கொண்டவராய், அவனைக் கடிந்து “தத்க்ஷணம் அந்த பழய அழுக்கான தலை குட்டையை எடுத்து விட்டு வேறு தலை குட்டை கட்டிக் கொண்டு வந்தாலாச்சு, இல்லா விட்டால், உன்னை உடனே வேலையினின்றும் நீக்கி விடுவேன்” என்று பயமுறுத்தினார். ஜவான் என்ன செய்வான் பாபம்! அத்தலை குட்டை அவனுக்குக் கலியாண காலத்தில் இருபத்தெட்டு வருஷங்களுக்கு முன் மாமியார் வீட்டார் கொடுத்தது. அது முதல் அதை விடாது சலவைக்கும் போடாமல் கட்டிக் கொண்டிருந்தான். அதில் எவ்வளவு துர்க்கந்தமும் அழுக்கும் இருந்ததென நான் சொல்ல வேண்டியதில்லை; இருந்த போதிலும் அந்த பழய தலைகுட்டையை விட அவனுக்கு மனம் வரவில்லை. உடனே உள்ளே போய் தனக்கு பரிச்சயமான ஒருவரிடமிருந்த அங்கவஸ்திரத்தை வாங்கித் தலையில் சுற்றிக் கொண்டான். தன் பழய தலைகுட்டையை சாயங்காலம் வரையில் எங்கே வைத்திருப்பது என்பது அவனுக்குக் கவலை தந்தது. வெளியில் எங்கேயாவது மாட்டி வைத்தால் யாராவது களவு செய்து கொண்டு போய் விட்டால் என்ன செய்வது என்பது பெரிய கவலை; அதன் பேரில் ஆஸ்பத்திரி முழுவதும் சுற்றிப் பார்த்து, ஓரிடத்தில் அதை பத்திரமாய் ஒருவருமறியாதபடி மறைத்து வைத்தான். அது எந்த விடமென்று இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குப் பிறகு தெரிய வரும்.

பிறகு கொஞ்ச நாழிகைக்கெல்லாம் சென்னையிலிருந்து வந்த வைத்தியர் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார். அவர் ‘முக்கியமாக நாம் குடிக்கும தண்ணீரிலும், உட்கொள்ளும ஆகாரத்திலும் சுத்தமாயிருக்க வேண்டும், அப்படியிருந்தால் நம்மைப் பீடிக்கும் வியாதிகளில் நூற்றுக்கு எண்பது பங்கு நம் அருகில் வர மாட்டா’ என்னும் கோட்பாடுடையவர். இதைப் பற்றி அநேகப் பிரசங்கங்களும் செய்தவர், புஸ்தகங்களையும் எழுதியவர். அப்படிப்பட்டவர் ஆஸ்த்திரியில் எல்லாம் சுத்தமாயிருக்கிறதா என்று மேல்பார்வை பார்த்துக் கொண்டு வரும் போது, மற்றெல்லாம் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று நமது ஜில்லா வயித்தியரைப் புகழ்ந்து விட்டு, ஆஸ்பத்திரிவாசிகள் குடிப்பதற்காக வைக்கப் பட்டிருக்கும் தீர்த்தத்தைப் பரிசுத்தம் செய்யும் ஃபில்டர்களைப் (Filters) பரிசோதித்துக் கொண்டு வந்தார். அதில் ஒன்றின் குழாயைத் திருப்பிய பொழுது தண்ணீர் வேகமாக வரவில்லை. என்ன காரணம் என்று கண்டறிய வேண்டி, அதன் மேல் மூடியைத் திறக்க, கருப்பாக ஒரு வஸ்து காணப்பட்டது. கொஞ்சம் சாலேஸ்வரமுடைய அவர், விரலினால் அது இன்னதென்றறிய வேண்டி இழுக்க, கருப்புத் துணியின் முனை ஒன்று அவர் கையிலகப்பட்டது. அதனை மெல்லப் பிடித்து இழுக்க, ஒரு பெரிய தலைகுட்டை ஒரு நாகத்தின் வால் போல் அதனின்றும் வெளி வந்தது. பக்கத்திலிருந்தவர்களெல்லாம் அப்படியே பிரமித்துப் போயினர். அப்படி வெளி வந்த வஸ்து நமது ஜவானுடைய பழய அழுக்குத் தலைகுட்டையென்று இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. வேறே எங்கேயாவது வைத்தால் அதை யாராவது திருடிக் கொண்டு போய் விடுவார்களென்று நமது ஜவான், பத்திரமாயிருக்க வேண்டி அதை அந்தக் குடிக்கும் தண்ணீர் ஃபில்டரில், ஒளித்து வைத்தான்!

அந்த அழுக்குத் தலை குட்டையைத் தீண்டிய அசுத்தம் போக அந்த வயித்தியர் ஐந்து நிமிஷம் சோப் போட்டு கை கழுவினதாகச் சொல்லுகிறார்கள்.

அந்த வருஷம் நமது இந்தியன் வயித்தியருக்கு புரொமோஷன் (promotion) கிடைக்கவில்லை. நமது ஜவானுக்கு மாத்திரம் கிடைத்தது-டிஸ்மிசல்!