ஹாஸ்ய வியாசங்கள்/அசந்தர்ப்பங்கள்

விக்கிமூலம் இலிருந்து

அசந்தர்ப்பங்கள்

அடியிற்கண்ட அசந்தர்ப்பமான சந்தர்ப்பங்கள் என் மனோ சஞ்சாரத்தினால் நிர்மாணிக்கப்பட்டவைகளல்ல - வாஸ்தவத்தில் என் கண்ணாரக் கண்டதும் காதாரக் கேட்டவைகளுமே.

(1) மொஹரம் பண்டிகையென்பது மஹம்மதியர்களைச் சார்ந்தது; அதிலும் ஷிய்யா (Shiah) வகுப்பினரைச் சேர்ந்தது. இது அவர்களால் மிகவும் துக்ககரமாகக் கொண்டாடப்படுவது. இதில் ஹிந்துக்கள் சேர்வதே ஒரு அசந்தர்ப்பம்; அந்த ஹிந்துக்கள், பஞ்சாக்களை எடுத்துக் கொண்டு போகும் போது நாகசரம் வாசிப்பது, இன்னும் அதிக விசேஷமானதாம். சில வருடங்களுக்கு முன் சில ஹிந்துக்கள் இவ்வாறு மொஹரத்தின் எட்டாம் நாளாகிய “நவாப்பீலி”யன்று, இவ்வாறு பஞ்சாக்களை எடுத்துக் கொண்டு நாகசர வாத்தியத்துடன் ஊர்வலம் வரும் பொழுது, அந்த நாகசரக்காரன் “ராம! நீ சமானமெவ்வறு?” என்னும் தியாகையர் கிருதியை வாசித்துக் கொண்டு போனான்! இந்த அசந்தர்ப்பத்தை என்னென்று சொல்வது? (2) சில நாட்களுக்கு முன்பாக எனக்கு ஒரு நாடக விளம்பரம் கிடைத்தது. அதில் அல்லி அர்ஜூனா நாடகத்தை நடத்தப் போகிற விஷயம் கண்டிருந்தது. அதில் அப்துல் காதர் சாயபு அர்ஜுனனாக நடிப்பார் என்று பிரசுரித்திருந்தது. நாடகம் மத சம்பந்தமான நாடகம், நாடக பாத்திரம் பரம சிவபக்தனான அர்ஜுனன், அதை நடிப்பவனோ ஒரு மகம்மதியன்! அந்த ஆக்டர் நன்றாய் நடித்திருக்கலாம், அதைப் பற்றி நான் கூற வரவில்லை. இந்த அசந்தர்ப்பத்தைப் பற்றியே கூற வந்தேன். ஒரு கிருஸ்து மத சம்பந்தமான ஒரு நாடகத்தில வைஷ்ணவ பாகவதர் நடிப்பது எவ்வளவு பொருத்தமின்மையாகும்! (3) மேற்கண்ட அசந்தர்ப்பத்திற்கு சமானமாக வேறொன்றைத்தான் கூறக் கூடும். அது என்னவென்றால், நந்தனார் நாடகத்தில், கறுத்த மேனியையும், செம்பட்டை மயிரையும், முகத்தில் தாடியையும், மீசையையும், அரையில் ஒரு கிழிந்த அண்டையும் உடையவனாயிருக்க வேண்டிய ஒரு நாடக பாத்திரத்தில், ஒரு சிறு பெண், தலையில் நடுவில் வகிடு எடுத்து, மயிரை காதுக்குக் கீழாக கிராப் (crop) செய்து கொண்டது போல் அணிந்து, உடம்பை கணுக்கால் வரையில் வஸ்திரங்களால் மூடி, நடித்ததேயாம். 4) “பெயர் கங்கா பவானி குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை” என்று ஒரு பழமொழியுண்டு. சில வருடங்களுக்கு முன் ஒரு பிச்சைக்காரக் கிழவி, பிச்சைக்கு அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவாள், அவள் “தாயில்லாத கிழவியம்மா! ஒரு பிச்சை போடம்மா” என்று கூவிக் கொண்டே வருவாள். தாயில்லாத கிழவி என்பதே ஒரு விசேஷம்! குழந்தைகளெல்லாம் “தாயில்லாக் கிழவி வந்திருக்கிறாள், பிச்சை போட வேண்டும்” என்று அவளுக்கு முக்கியமாகப் பிச்சை போடுவார்கள்! ஒரு நாள் அவளுடைய பெயர் என்னவென்று நான் வினவ, “தர்மாம்பாள்” என்று பதில் உரைத்தாள். தர்மாம்பாள் என்பது தர்மசமவர்த்தினி என்னும் அம்மனுடைய பெயராம். தர்ம தேவதையே பிச்சையெடுக்க நேரிட்டது கலிகாலக் கொடுமையால்! பெயரிலாவது கொஞ்சம் பொறுத்த மிருக்கலாகாதா? எனனுடைய நண்பர் ஒருவர் இருந்தார்; அவர் கிறிஸ்தவர், பெயர் மாத்திரம் “சிவ சுப்பிரம்மண்யம்” அந்தப்படி, பிச்சையெடுக்கும் இக்கிழவியின் பெயர் தர்மாம்பாள்! (5) சென்ற வருடம் “வள்ளி மணம்” என்னும் பேசும் படக்காட்சி ஒரு இடத்தில் காட்டப்பட்டது. வள்ளி மணம் என்பது ஒரு சுபமான விஷயத்தைப் பற்றிய கதையென்பதைப் பற்றி இங்கு எழுத வேண்டியதில்லை. அதில் ஆரம்பக் காட்சியில் வள்ளி வேடம் பூண்ட ஸ்திரீ தலை மயிரை விரித்துப் போட்டுக் கொண்டு பிரலாபிக்கிறாள்! நமது நாட்டில் ஸ்திரீகள் தலை மயிரை விரித்துப் போட்டுக் கொண்டு அழுவது, தங்கள் கணவன் இறந்த சமயத்தில்தான் என்பதை நான் தெரிவிக்க வேண்டியதில்லை. ஷேக்ஸ்பியர் மஹாகவியின் நாடகங்களின் முதல் காட்சியில் பின் வரும் முக்கிய விசேஷத்தை முன்னதாகவே குறிக்கிறார் என்பது அவரது நாடகங்களை தற்சமயம் நடிக்கிறவர்களுக்கு நன்றாய்த் தெரியும். இந்த டாக்கியை அமைத்தவர்களுடைய கொள்கை, வள்ளி தேவிக்கு கடைசியில் கலியாணமாகப் போகிறதென்பதை முதல் காட்சியில் அவள் தலைவிரி கோலமாய் அழுவதினால் காட்ட வேண்டுமென்பது போலும். (6) சில வருடங்களுக்கு முன்பு ஒரு சமயம் இங்கிலாந்திலிருந்து வந்த ஒரு சீமானுக்கு நல்வரவாக ஒரு கொண்டாட்டம் நடந்தது. அச்சமயம், அச்சீமானை நடுவில் நிறுத்தி, ஊர்கோலமாக, பார்க்கைச் சுற்றி வர ஆரம்பித்த பொழுது, முதலில் பாண்டு வாத்தியக்காரர்கள் வாசித்துக் கொண்டு போக ஏற்பாடு செய்தனர். ஊர்கோலம் ஆரம்பித்த பொழுது, அதை ஏற்பாடு செய்தவர்கள், ஊர்கோலம் போகும் பொழுது ஏதாவது சவுக்கமாக மார்ச் (March) வாசிக்க வேண்டுமென்று பாண்டு தலைவனுக்குச் சொல்ல, அவன் அப்படியே ஆகட்டுமென்று தலையசைத்து விட்டு, கிறிஸ்தவர்கள் இறந்த பிணத்தை எடுத்துக் கொண்டு போகும் பொழுது மெல்ல வாசிக்கும் டெட் மார்ச் (Dead march) எனனும் பாட்டை வாசிக்க ஆரம்பித்தான்! அங்கிருந்த அநேகம் இந்துக்களுக்கு இந்த மர்மம் தெரியாது. சில வெள்ளைக்காரர்கள் இதென்ன கோரம் என்று அதன் விவரத்தைக் கூறிய பின்தான் அங்கிருந்தவர்கள் பாண்டுகாரனுக்கு புத்தி சொல்லி அதைத் தடுத்தனர். அந்த பாண்டுகாரனுக்கு அந்தப் பாட்டு தெரியுமேயொழிய எந்த சந்தர்ப்பத்தில் அதை வாசிப்பது, என்று தெரியாது; என்ன செய்வான் பாபம்! (7) ஒரு சமயம் ஒரு நாடக சபையில் சீதா கல்யாணம் எனும் நாடகமானது வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. அந்நாடகத்தில் ஸ்ரீராமராக வேடம் பூண்ட இளைஞன் நல்ல சாரீர சம்பத்துடையவன், அன்றியும் அவன் ஸ்வராஜ்ய கட்சியைச் சார்ந்தவன், அநேகம் ஸ்வராஜ்ய பாட்டுகளை நன்றாய்ப் பாடும் திறமையுடையவன். சீதா கலியாண நாடகத்தில் ஸ்ரீராமர், வில்லை ஒடித்த காட்சி ஆடிய பொழுது, வில் முறிந்தவுடன் சீதை ராமருக்கு மணமாலை சூட்டிய உடன், ஏதோ மங்களகரமான ஓர் பாட்டை மேற்கண்ட ஆக்டர் பாடினான். அது முடிந்தவுடன், கரகோஷம் செய்த ஜெனங்கள், அவனை “பண்டிட் மோதிலால்” பாட்டைப் பாடும்படி ஒரே கோஷ்டமாய்க் கூச்சலிட்டார்கள் அதற்கிசைந்து ஸ்ரீராமர் சீதையிட்ட மணமாலையுடன் பண்டித மோதிலாலைப் பறி கொடுத்தோமே, என்று அழுது கொண்டே பாடினான்! எனக்கு வேறொன்றுமில்லை, சந்தர்ப்பத்திற்கேற்றபடி வேறு எப்பாட்டையாவது பாடச் சொல்லாது, மணமகனை மடிந்தவர்க்காக அழச் சொல்லத்தானா கேட்க வேண்டுமென்பதுதான்! (8) தென் இந்தியாவில் “ஜெய்” கோஷம் போடும் வழக்கம் சில வருஷங்களுக்கு முன்பு கிடையவே கிடையாது. மஹாத்மா காந்தியவர்களின் பெயர் இங்கு பிரபலமான பிறகுதான் “மஹாத்மா காந்திக்கு ஜெய்!” என்கிற சப்தம் பரவி, இங்கு ஜெய கோஷமும் பரவியது. இக்கோஷம் மன்னர்களுக்கோ அல்லது பெரியார்க்கோ ஜெயமுண்டாகுக! என்கிற சந்தர்ப்பத்தில் சாதாரணமாய் வட் நாட்டில் வழங்குவதாம். இதை அறிந்தோ அறியாமலோ “கிளாவர் பீடிகி ஜெய்!” “இஸ்பெட் பீடிகி ஜெய்!” “அரிச்சந்திரா மயான காண்டத்துக்கு ஜெய்” என்று சென்னையில் பல வீதிகளில் தினம் ஜனங்கள் கோஷ்டம் போடுகிறார்கள். இவைகளை யெல்லாம் பலரறியப் பிரசுரம் செய்ய வேண்டுமென்றால் வேறு வகையில்லாமலா போயிற்று? (9) ஒரு முறை சென்னையில் ஒரு வினாயகர் கோயிலில் கும்பாபிஷேகமோ அல்லது ஏதோ ஒரு முக்கியமான உற்சவம் நடந்தது. அன்று உற்சவ தினம் சாயங்காலம் அக்கோயில் தர்மகர்த்தர்கள் அக்கோயிலின் மண்டபத்தில் ஒரு பாகவதரைக் கொண்டு ஒரு கதை ஏற்படுத்தினார்கள். கதை “ராமதாஸ்” சரித்திரம்! எனக்கு சைவ வைஷ்ணவத் துவேஷம் என்பது கொஞ்சமேனும் இல்லை என்பதை எனது நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். ஆயினும் இங்கு நான் எடுத்துக் கூற வந்ததென்ன வென்றால், வினாயகர் கோயிலில் பகவத் கதை வைத்துக் கொள்ளும் பொழுது சைவபரமாக ஏதாவது கதை வைத்துக் கொள்ளக் கூடாதா? ராமதாஸ் கதையாகிய வைஷ்ணவ சம்பந்தமான கதையைத்தான் பொறுக்கி எடுக்க வேண்டுமா? என்பதுதான். சமயோசிதமாக இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் தக்க படி ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதுதான் என் அபிப்பிராயம். இதற்காக நான் நேரிற்கண்ட நாடக சம்பந்தமான ஒரு அசந்தர்ப்பத்தைக் கூறி இவ்வியாசத்தை முடிக்கிறேன். (10) ஒரு முறை விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஒரு சபையார் வள்ளி மணம் என்னும் நாடகத்தை நடத்தினார்கள். அதில் சுப்பிரமணியர் வயோதிகனாக வேடம் பூண்டு வள்ளியின் மனதைப் பரிசோதிக்கிற காட்சி ஒன்றுண்டு என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்கள். அக்காட்சியில் வயோதிகர் புசிப்பதற்காக, வள்ளி தேனும், தினை மாவும் கொண்டு வருகிறாள். காட்சி நடக்கும் இடமோ காடு, வள்ளியோ வேடுவ ஜாதியில் வளர்ந்து வந்த பெண்; கதை நிகழ்காலமோ கிருத யுகம்! அச்சமயத்தில் வள்ளி தேனும் தினைமாவும் கொண்டு வந்த பாத்திரம், 1933 ஆம் வருஷம் சைனா தேசத்தில் செய்யப்பட்ட பீங்கான் கோப்பை இந்த சந்தர்ப்பத்தில் வேறு தக்க பாத்திரம் கிடைக்கா விட்டால், ஒரு இலையிலாவது அதைக் கொண்டு வந்திருக்கலாகாதா எனறு யோசித்தேன்!