ஹாஸ்ய வியாசங்கள்/அம்கு மாலும் நை சாயபு கதை

விக்கிமூலம் இலிருந்து

அம்கு மாலும் நை சாயபு கதை

நமது சபாபதி முதலியார் ஒரு முறை நிஜாம் ராஜ்யத்தின் பிரதான பட்டணமாகிய ஐதராபாத்துக்குப் போயிருந்தார், தன் வேலையாள் சபாபதியுடன், என்று நான் கூற வேண்டியதில்லை. போன மறு தினம் பட்டணத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று விரும்பி, சபாபதியுடன் அப்பட்டணத்திலுள்ள வேடிக்கை வினோதங்களையெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். அப்படி வரும் பொழுது தங்கள் எதிரில் ஒரு வீதியில் பெரிய மாளிகையொன்று புலப்பட்டது. உடனே இவ்வழகிய மாளிகை யாருடையதென்று அறிந்து வரும் பொருட்டு சபாபதியை அதனருகில் அனுப்பினார். அவன் அதற்குள் உக்கா பிடித்துக் கொண்டிருந்த சாயபு ஒருவரைப் பார்த்து, தமிழில், இது யாருடையது என்று கேட்க, அப்பாஷையறியாத அந்த சாயபு சும்மா இருந்தான். பிறகு தன் பாஷை அவனுக்குத் தெரியாதென்று அறிந்தவனாய், சபாபதி சைகையால் கட்டிடத்தைக் காட்டி யாருடையதென்று கேட்டுப் பார்த்தான். அதற்கு அந்த உக்கா சாயபு “அம்கு மாலும் நை சாயபு” என்று பதில் உரைத்தார். உடனே சபாபதி அப்பதிலைக் கேட்டுப் பாடம் செய்து கொண்டு வந்து, சபாபதி முதலியாரிடம் “இந்த மாளிகை அம்கு மாலும் நை சாயபுடையதாம்” என்று தெரிவித்தான். இந்துஸ்தானியில் ஒரு பதமும் அறியாத நமது முதலியார் சரிதான் என்று ஒப்புக் கொண்டு கொஞ்ச தூரம் போனார். அங்கு முன்பு பார்த்ததை விட இன்னும் அழகிய மாளிகை ஒன்று தென்பட்டது. யாருடையது என்று விசாரித்து வர, சபாபதியை அனுப்பினார். முன்பு போல் சபாபதி அங்கு போய்க் கொண்டிருந்த ஒரு பட்டிக்காட்டானைக் கேட்க, அவனும் “அம்கு மாலும் நை சாயபு” என்று தெரிவிக்க, இந்த மாளிகையும் “அம்கு மாலும் நை சாயபுடையதுதான்” என்று சபாபதி தன் எஜமானனிடம் தெரிவித்தான். அதன் பேரில் சபாபதி முதலியார், அம்கு மாலும் நை சாயபு என்பவர், இவ்வூரில் பெரிய பணக்காராயிருக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு போனார். இப்படியே ஒரு பெரிய ஆஸ்பத்திரியும், பள்ளிக்கூடமும் “அம்கு மாலும் நை” சாயபுடையது என்று அறிந்து கொண்டு போனார். கொஞ்ச தூரம் சென்ற பிறகு ஒரு மகம்மதிய சவத்தை, கபரஸ்தானுக்கு (புதைக்கும் இடத்திற்கு) பெரும் திரளான ஜனங்கள் எடுத்துக் கொண்டு போவதைக் கண்டனர். அதன் பேரில் யாருடைய சவம் அது என்று சபாபதியை அனுப்பி விசாரிக்க, அதற்கும் சபாபதி முன் போல் ‘அம்கு மாலும் நை சாயபுடையது’ என்று பதில் கொண்டு வந்தான். அதன் மீது சபாபதி முதலியார், “பெரிய கோடீஸ்வரன், மிகுந்த தர்மசீலன், பரலோகம் செல்ல வேண்டி வந்தது.” என்று கொஞ்சம் துக்கப்பட்டார். பிறகு ஊரையெல்லாம் சுற்றிக் கொண்டு தான் இறங்கியிருந்த வீட்டிற்கருகாமையில் வரும் பொழுது, ஒரு மணமகன் மணக் கோலத்துடன் தன் மாமியார் இல்லம் செல்ல ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். இந்த மணப்பிள்ளை யார் என்று விசாரித்து வரும்படி சபாபதியையனுப்பி விட்டு, தான் இறங்கியிருந்த வீடு போய் சேர்ந்தார். உடனே சபாபதி முன் போல விசாரித்து திரும்பி வந்து, கலியாண மாப்பிள்ளையின் பெயர் “அம்கு மாலும் நை சாயபு” என்று தெரிவிக்க, சபாபதி முதலியாருக்கு பெருங்கோபம் வந்தது. “கொஞ்ச நேரத்திற்கு முன்பு அந்த 'அம்கு மாலும் நை சாயபு’ இறந்து போனார், புதைக்கத் தூக்கிக் கொண்டு போனார்கள், என்று தெரிவித்தாய், இப்பொழுது 'அவர் கலியாண மாப்பிள்ளையாக ஊர்கோலம் வருகிறார்’ என்று பொய் சொல்கிறாயா?” என்று அவன் முதுகில் இரண்டறை கொடுக்க, சபாபதி “நான் என்னாப்பா செய்யறது? எனக்கு சொன்ன பெயரை நான் உனக்கு சொன்னேன்!” என்று அழுது கொண்டே சொன்னான். இதையெல்லாம். பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டு எஜமான், சபாபதி முதலியாரை இவன் என்ன தப்பிதம் செய்தான் என்று வினவ, முதலியார் மேல் நடந்த விருத்தாந்தத்தை அறிவித்தார். அதன் பேரில் இந்துஸ்தானி பாஷை தெரிந்த அவர் “அம்கு மாலும் நை சாயபு” என்று ஒருவருக்கும் பெயரில்லை; அதற்குப் பொருள் என்னவென்றால் “எனக்குத் தெரியாது ஐயா” என்பதாம் என்று அறிவித்தார். அவர் பிறகு வீட்டின் இரண்டாங் கட்டிற்குப் போனவுடன் சபாபதி, முதலியாரைப் பார்த்து,“என்னாப்பா அது! நீயும் கொஞ்சம் இந்துஸ்தானி பாஷை தெரிந்திருந்தால், எனககு பூசை விழுந்திருக்காதே; இன்னைக்கி!” என்றான்.