ஹாஸ்ய வியாசங்கள்/தீண்டாமை

விக்கிமூலம் இலிருந்து

தீண்டாமை

தீண்டாமையைப் பற்றி மிகவும் கடுமையான விரதம் பூண்ட சுந்தர ஐயர் எனும் ஒரு பிராம்மணர் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்தார். அவர் ஒரு புத்தக வியாபாரி; யாராவது சூத்திரர்கள் தன்னிடம் புத்தகங்கள் வாங்க வேண்டி வந்தால், அவர்கள் வேண்டிய புத்தகங்களை அவர்களிடம் கொடுத்து, அவர்கள் அவற்றின் பொருட்டு பணம் கொடுத்தால், அப்பணத்தை கையில் வாங்காமல், தன் எதிரில் வைக்கச் சொல்லி, இதற்கென்று தன் பக்கத்தில் எப்பொழுதும் சித்தமாய் வைத்திருந்த பஞ்ச பாத்திரத்தினின்றும் உத்தரிணியில் ஜலத்தையெடுத்து அப்பணத்தின் மீது புரோட்சணம செய்து விட்டு, பிறகுதான் அப்பணததைத தீண்டி எடுத்து தன் பைக்குள் சேர்த்துக் கொள்வார். இவ்வழக்கம் நெடுநாளாக நடந்து வந்தது. இதையறிந்த நமது சபாபதி முதலியார், தான் அவரிடமிருந்து ஏதோ ஒரு புஸ்தகம் விலைக்கு வாங்க சமயம் நேரிட்ட பொழுது, கையில் பணத்துடன் ஒரு வெள்ளி பாத்திரத்தில் குழாய் ஜலம் பிடித்துக் கொண்டு சென்றார். சுந்தர ஐயர் வீடு சென்றதும், அவரைக் கண்டு தான் வேண்டிய புஸ்தகத்தின் பெயரைச் சொல்லி அதற்குரிய விலையை அவர் எதிரில் வைக்க, சுந்தர ஐயர், தன் வழக்கப்படி, பஞ்ச பாத்திரத்தினின்றும் உத்தரணியால் ஜலத்தையெடுத்து பணத்தின் மீது புரோட்சித்து, பிறகு அதைத் தட்டிப் பார்த்து எடுத்துக் கொண்டு, தன் பையில் சேர்த்துக் கொண்டு, சபாபதி முதலியார் வேண்டிய புஸ்தகத்தை அவர் கையில் கொடுக்க முயல, சபாபதி முதலியார் சுந்தர ஐயரை அப்புஸ்தகத்தை தரை மீது வைக்கும்படி சொன்னார். சுந்தர ஐயரும் அப்படியே புஸ்தகத்தைத் தரை மீது வைக்க, சபாபதி முதலியார், தன் பின்புறமாக ஒளித்து வைத்திருந்த வெள்ளிப் பாத்திரத்தை எடுத்து, அதிலிருந்த குழாய் ஜலத்தை அபபுத்தகத்தின் மீது கொட்டி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்! அதன் மீது சுந்தர ஐயர், “ஏன் இப்படிப் புஸ்தகத்தின் மீது ஜலம் கொட்டிக் கெடுக்கிறீர்?” என்று கேட்க, சபாபதி முதலியார் “வேறொன்றுமில்லை, நான் தொட்ட பணத்தை நீங்கள் ஜலத்தினால் சுத்தம் செய்து தீண்டிய பிரகாரம், நீங்கள் தொட்ட புஸ்தகத்தை நான் ஜலத்தினால் சுத்தி செய்து எடுத்துக் கொள்ளுகிறேன்!” என்று பதில் உரைத்தார்.

அது முதல் சுந்தர ஐயர் மேற்சொன்ன தீண்டா விரதத்தை விட்டொழித்தனர் என்று கேள்வி.