ஹாஸ்ய வியாசங்கள்/சகுனம் பார்த்த கதை

விக்கிமூலம் இலிருந்து

சகுனம் பார்த்த கதை

சென்னையில் கதிர்வேலு முதலியார் என்று ஒரு முதலியார் இருந்தார். அவர் சகுனங்களையெல்லாம் கவனிப்பதில் மிகவும் ஈடுபட்டவர்; வீட்டை விட்டு புறப்படும் பொழுது யாராவது தும்மினாலும் சரி, இருமினாலும்சரி, மழை தூறினாலும் சரி, பூனை குறுக்கே வந்தாலும் சரி, அன்று புறப்படவே மாட்டார். அப்படிப்பட்டவர் இருந்த வீட்டில் தெய்வ கதியால் தனிஷ்டா பஞ்சமியன்று ஒரு சாவு நேர்ந்தது. அதன் பேரில் புரோகிதர்கள் கூறிய படி, தன் வீடு முழுதும் சாற்றி விட்டு வேறு வீட்டில் குடியிருந்து வந்தார். மூன்று மாதங்கள் கழிந்தவுடன், ஜோஸ்யர்களைக் கேட்டு ஒரு நல்ல நாளாக நியமித்துக் கொண்டு அன்றைத் தினம் தன் சம்சாரத்துடன் தன் பழய வீட்டிற்கு மறுபடியும் குடி புக வேண்டுமென்று தீர்மானித்தார். சகுனங்களெல்லாம் நன்றாய் இருக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்து, தன் வேலைக்காரியாகிய லட்சுமி என்பவளை அழைத்து “எங்கள் பழய வீட்டு சாவியை உன்னிடம் கொடுக்கிறேன்; நாங்கள் காலை 9-மணிக்கு அங்கு வருவோம், அதற்கு முன்பாக நீ போய் அதைத் திறந்து, உள்ளே உட்கார்ந்து கொண்டிரு; நாங்கள் 9-மணிக்கு வந்து வெளியில் கதவைத் தட்டுகிறோம், அப்பொழுது உள்ளிருந்து உன் குரலைக் கொடு; அப்பொழுது நீ யார் என்று நான் கேட்கிறேன்; நான்தான் ‘லட்சுமி’ என்று நீ பதில் சொல்லிக், கதவை திறந்து எங்களை வரவழை” என்று சொல்லிக் கொடுத்தார்.

லட்சுமியும் அவர் சொன்னபடியே ஒரு மணிக்கு முன்பாக அப் பழய வீட்டிற்குப் போய் கதவைத் திறந்து வீட்டையெல்லாம் பெருக்கி, சுத்தம் செய்து விட்டு, தெருக் கதவைச் சாத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அச்சமயம் அவள் இங்கிருப்பதை யறிந்து அவளது தமக்கை (தன் புருஷனை சிறு வயதிலேயேயிழந்த அமங்கிலி) அந்த வீட்டிற்குப் போய்க் கதவைத் தட்ட, லட்சுமி தன் தமக்கையின் குரலைக் கேட்டு, கதவைத் திறந்து கொண்டு வந்து என்ன விசேடம் என்று வினவ, “உன் பெண் குழந்தைக்கு தேள் கொட்டி விட்டது, அம்மா, அம்மாவென்று துடித்து அழுகிறாள். உனக்கு தேள் கடிக்கு ஏதோ மந்திரம் தெரியுமாமே, உடனே போய் குழந்தையை கவனி” என்றாள். அதன் பேரில் லட்சுமி, தான் போய் சீக்கிரம் திரும்பி வந்து விடலாமென்று எண்ணினவளாய், “நான் போய் பார்த்து விட்டு வருகிறேன், அது வரையில் நீ இந்த வீட்டிற்குள் கதவைச் சாத்திக் கொண்டு இரு” என்று சொல்லி விட்டு, தன் தமக்கையை அங்கிருக்கச் செய்து தான் வேகமாகத் தேள் கொட்டின தன் சிறு குழந்தையைக் கவனிக்கப் போனாள். அவள் வீடு கொஞ்சம் தூரம் அவள் போய் குழந்தையை மந்திரித்து விட்டு சமாதானம் செய்து விட்டுத் திரும்புமுன், நம் கதிர்வேலு முதலியார் தன் சம்சாரத்துடன் இவ்வீட்டிற்கு லக்னமெல்லாம் பார்த்துக் கொண்டு வந்து சேர்ந்தார். வந்தவுடன் தான் முன்பு ஏற்பாடு செய்தபடி, கதவைத் தட்ட, முதலில் உள் இருந்து பதில் ஒன்றும் வரவில்லை. பிறகு பலமாய்த் தட்ட உள்ளிருந்தவள் யார் அது? என்று ஒரு குரல் வந்தது. இதேது புதிய குரலாய் இருக்கிறதென சந்தேகித்தவராய், கதிர்வேலு முதலியார் உள்ளே இருக்கிறது யாரம்மா? என்று கேட்டார். கொஞ்ச நேரம் பதில் வரவில்லை. அதன் பேரில் உரத்த சப்தமாய் “யார் அது? லட்சுமியா?“ என்று கேட்க, - உள்ளிருந்து “அல்ல“ என்று பதில் வந்தது, அதன் பேரில் கொஞ்சம் கோபம் கொண்டவராய் “பிறகு யார் அது உள்ளேயிருப்பது” என்று கேட்க, உள்ளிருந்தவள், “லட்சுமியின் அக்காள்!” என்று உரக்க பதில் உரைத்தாள். லட்சுமி தேவியாகிய ஸ்ரீதேவியின் அக்காள் யாரென்று நான் இதை வாசிக்கும் நண்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியதில்லை. பிறகு கதிர்வேலு முதலியார் தன் கோபத்தையும் துக்கத்தையும் அடக்கிக் கொண்டு, கதவைத் திறக்கச் சொல்லி உள்ளே நுழைந்து, யார் இந்த புது பெண்பிள்ளையென்று கவனிக்கும் பொழுது, அமங்கிலி எதிர்பட்டாள். அது முதல் “இனிமேல் சகுனம் பார்ப்பதில்லை” யென்று கதிர்வேலு முதலியார் தீர்மானித்ததாகக் கேள்விப் பட்டேன்.