ஹாஸ்ய வியாசங்கள்/ஓர் பிரசங்கம்

விக்கிமூலம் இலிருந்து

ஓர் பிரசங்கம்

துரப்பாக்கத்து தமிழ் சங்கத்தின் திறப்பு விழாவில் சபாபதி முதலியார் அவர்கள் செய்த பிரசங்கம்:-

“கனவான்களே சபையோர்களே ! உங்கள் சபை காரியதரிசியானவர், இன்றைத் தினம் என்னைத் தமிழில் ஓர் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். தமிழ் பாஷையின் மீது எனக்குள்ள ஆர்வத்தினால் அதற்கு இசைந்தேன். பிரசங்கம் அதிகமாகயிருக்க வேண்டாம் சுருக்கமாயிருந்தால் போதும் என்று அவர் சொன்னபடியால், “ஆத்திச்சூடியிலுள்ள அரும்பொருள்கள்” என்கிற விஷயத்தைப் பற்றிப் பேசலாமென்று தீர்மானித்தேன். ஆத்திச்சூடி என்பது மிகவும் சிறிய புஸ்தகமாயிற்றே அதில் என்னயிருக்கிறதென்று நீங்கள் எல்லோரும் எண்ணலாம். ஆயினும் எனது பிரசங்கம் முழுவதையும் கேட்ட பிறகு ஆத்திச்சூடியில் இவ்வளவு நூதனமான விஷயங்கள் அடங்கி யிருக்கின்றனவாவென்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

முதலில் ‘அறஞ்செய விரும்பு’ என்பதை எடுத்துக் கொள்வோம். சாதாரணமாகத் தமிழ் பண்டிதர்களெல்லாம் அறஞ்செய=தருமத்தைச் செய, விரும்பு=இச்சைப்படு, என்று அர்த்தம் சொல்லுகிறார்கள். இது சாதாரணமான அர்த்தமாகும். இதில் உள்ள சூட்சுமார்த்தம் பலருக்குத் தெரியாது. அறம் + செய + இரும்பு, என்று இதைப் பிரித்துப் பார்த்தால் அப்பொழுதுதான் அது விளங்கும். அறம் என்றால் தச்சர்கள் தட்டான்கள் முதலியோருக்கு மிகவும் உபயோகப்படும் படியான ஒர் ஆயுதம், செய=அதைச் செய்வதற்காக, இரும்பு = இரும்பானது சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறது, என்பது இதன் இரகஸ்யார்த்தமாகும். இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் நினைக்கலாம். அதையும் சொல்லுகிறேன் கேளுங்கள். பூர்வீக விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் சாஸ்திரிகள், இந்தியாவில் முற்காலத்தில் இரும்பு கண்டு பிடிக்கப் படவில்லையென்று, கூறுகிறார்கள். இது தவறு. ஒளவையார் காலத்திலேயே இரும்பானது நமது தமிழ் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது என்று, அறஞ்செய விரும்பு என்பதினால் ரூபிக்கலாமல்லவா?

ஓடுவதொழியேல் (ஓதுவதொழியேல்) என்பது ஆத்திச்சூடியில் மற்றொரு வரியாகும். இதனால் நாம் என்ன அறிகிறோம் என்று ஆராய்வோம். ஓடுவது + ஒழியேல் = எந்நேரமும் ஓடிக் கொண்டிரு என்று அர்த்தமாகும், அதாவது அப்யாசம் செய்து கொண்டிரு என்று பொருள் படும். அதாவது மனுஷ்ய சரீரத்திற்கு வியாயாமம் அதி அவசியம் என்று எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். அதிலும் பெரும் நடையாய் நடப்பது அதாவது ஒடுவது மிகவும் உடம்பிற்கு நன்மையைத் தருகிறது என்று மேநாட்டார் கூறுகிறார்கள். இந்த சூட்சுமம் நமது பாட்டியாருக்கு முன்பே தெரிந்திருக்கிறது; அதனால்தான் “ஓடுவதொழியேல்” என்று நமக்கு புத்திமதி கூறியிருக்கிறார்கள். இதையே வற்புறுத்தும் பொருட்டு மற்றோரிடத்தில் ஒளவையார் “ஓடாமல் (ஓதாமல்) ஒரு நாளுமிருக்க வேண்டாம்” என்றும் கூறியிருக்கிறார்கள்.

பிறகு “இளமையிற் கல்” என்பதை எடுத்துக் கொள்வோம். இளமையில்-கல்=சின்ன வயதில் கல்லை சாப்பிடு என்று அர்த்தம் அதாவது கல்லைத் தின்ன வேண்டுமென்பதல்ல; கல்லைப் போன்ற கடினமான பதார்த்தங்களைப் புசித்தாலும் ஜீரணித்துக் கொள்ளும்படியான அவ்வளவு சக்தியுள்ளவனா யிருக்க வேண்டுமென்று பொருள்; தமிழ் பாஷையை நன்றாயறியாத சிலர் இதற்கு வேறு அர்த்தம் செய்கின்றனர்.

நமது தற்கால ஆத்திச்சூடி புஸ்தகங்களில் “ஈயது விலக்கேல்” (ஈவது விலக்கேல்) என்று அச்சிடப் பட்டிருக்கிறது. ஈ十அது十விலக்கேல், என்று இதைப் பிரிக்க வேண்டும். அப்பொழுது இதற்கு என்ன அர்த்தமாகும்? ஈயை விலக்காகே என்றாம்! ஈயை எடுத்து விடாமல் சாப்பிட்டால் உடனே வாங்கிதான் வரும்! இது சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும் ‘கண்ணாம்பூச்சி’ யாட்டத்தில் அவர்களை “ஈ விழுந்ததா? எறும்பு விழுந்ததா? எடுத்து விட்டு சாப்பிட்டாயா? எடுக்காமல் சாப்பிட்டாயா?” என்று கேட்டால், ஈ விழுந்தால், எடுத்து விட்டு சாப்பிட்டேன் என்றுதான் பதில் சொல்வார்கள். ஆகவே இந்த உண்மை நமது மூதாதையாகிய பாட்டியாருக்குத் தெரியாமலிருக்குமா? ஆகவே அவர்கள் “ஈயது விலக்கு” என்றுதான் எழுதியிருக்க வேண்டும் என்று தோற்றுகிறது.

“உடையது விளம்பேல்” என்பது ஒரு அருமையான வரியாம். இதற்கு அர்த்தம், உன் இடத்திலுள்ள பொருளைப் பற்றி ஒருவருக்கும் தெரிவிக்காதே என்றாம். இதனால் நாம் அறிந்து கொள்ளக் கூடியதென்ன? அக்காலத்தில் கூட வருமான வரியிருந்திருக்க வேண்டுமென்பதாம்! நம்முடைய கையில் இவ்வளவு பொருள் இருக்கிறதென எல்லோர்க்கும் தெரிவித்தால், உடனே அரசாங்கத்தார் அதிக வரி போடுவார்களல்லவா? இக்காரணம் பற்றிதான். அநேகம் பெயர் தற்காலத்திலும் தங்கள் வருமான வரியைக் குறைக்கும் பொருட்டு தங்களிடமுள்ள பொருளை உண்மையாக உரைப்பதில்லை போலும்.

“ஊக்கமது கைவிடேல்” என்பதை எடுத்துக் கொள்வோம். இதற்கு பெரும்பாலர், ஊக்கம் + மது + கைவிடேல் என்று அர்த்தம் செய்கின்றனர், அதாவது ஊக்கத்தைத் தரும்படியான மதுவைக் கைவிடலாகாதென்று! நமது எல்லாமுணர்ந்த ஒளவையார் மது பானம் செய்யும்படி நமக்கு உபதேசிப்பார்களா? மாட்டார்கள். ஆகவே ஊக்கம் + அது.+கைவிடேல் என்று இதைப் பிரித்து அர்த்தம் செய்ய வேண்டும். ஆயினும் இந்த ஊக்கம் எனும் பதத்திற்கு என்ன அர்த்தம் என்று ஆலோசித்துப் பார்த்தேன். நமது சென்னை கலா சங்கத்தார் அச்சிட்ட லெக்சிகன் என்னும் அகராதியைத் திருப்பிப் பார்த்தேன். அதில் உக்கம் என்கிற பதம் அகப்பட்டது. உடனே இதற்கு அர்த்தம் ஸ்பஷ்டமாகி விட்டது. உக்கம் என்றால் கட்டித் தூக்கியெடுக்கும் கயிறு! உக்கம் எனும் பதம் “ஆதி நீடல்” எனும் சூத்திரப்படி ஊக்கம் என்றாயது! இப்பொழுது அர்த்தம் சுலபமாய்த் தெரியலாம். ஏதாவது ஒரு வஸ்துவைக் கட்டித் தூக்கும் கயிற்றைக் கைவிட்டால், அது உடனே கீழே விழுந்து உடைந்து போகுமல்லவா? ஆகவே ஊக்கமது கைவிடேல்! என்று ஒளவையார் கூறியுள்ளார்!

பிறகு “கண்டொன்று சொல்லேல்” என்பதை எடுத்துக் கொள்வோம். கண்டு+ஒன்று+சொல்லேல்= எதையாவது ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்த்தால், அதை ஒருவரிடமும் சொல்லாதே என்ற பொருள்படும், அதாவது நாம் பார்க்கும்படியான சமாசாரங்களை யெல்லாம் இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்-வாய் திறந்து ஒருவரிடமும் கூறலாகாது. இதைத்தான் தெய்வப்புலமை திருவள்ளுவ நாயனாரும் “யாகாவராயினும் நாகாக்க” என்று கூறியுள்ளார், அதாவது வாயைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்-வாய் திறந்து எதுவும் பேசலாலாகாதென்று! இந்த நீதியைக் கடைப்பிடித்துதான் சில பெரிய மனிதர்கள், நியாயஸ்தலங்களில் தாங்கள் கண்ணாரக் கண்டதை ஒன்றும் சொல்லுவதில்லை போலும்!

இனி “சனி நீராடு” என்பதை எடுத்து ஆராய்ந்து பார்ப்போம்; இதற்கு சனிக்கிழமை தோறும் ஸ்நானம் செய் என்று அர்த்தமாகும். இதனால் நாம் நமது முன்னோர்கள் வாரத்திற்கு ஒரு தரம்தான் குளித்தார்கள் என்று அர்த்தம் செய்து விடலாகாது. சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்தார்கள் என்று நாம் அறிய வேண்டும்.

“அரணை மறவேல்” (அரனை மறவேல்) என்பதற்கு சாதாரணமாக தமிழ் ஆராய்ச்சி செய்யாதவர்கள் ஏதோ தவறாக அர்த்தம் செய்கிறார்கள். அதற்குச் சரியான அர்த்தம் என்னவென்றால், அரணையெனும் பூச்சியை, அது சிறியதாயிருந்தாலும் நீ மறக்காதே, என்பதாம். அதை சிறு பாம்பு என்று நினைத்து சிலர் அதைக் கொல்கிறார்கள். அது பெரும் தவறாகும். ‘அரணையைக் கொன்றால் மரணம்’ என்னும் பழமொழி இந்த சந்தர்ப்பத்தில் கவனிக்கத் தக்கது. சில பூர்வீக சாஸ்திர ஆராய்ச்சிக்காரர்கள் திராவிட தேசத்தில் பூர்வகாலத்தில் குதிரைகள் கிடையாது, வெளிநாடுகளிலிருந்து வந்தன, என்று சொல்கிறார்கள். அவ்வெண்ணம் தவறு என்று நாம் ஆத்திச்சூடியைக் கொண்டு ரூபிக்கலாம். “கொள்ள விரும்பேல்” என்பதை எடுத்துக் கொள்வோம். இதற்கு கொள்ளு என்னும் தானியத்தை நீ விரும்பாதே-சாப்பிடாதே-என்று அர்த்தமாகும். கொள்ளு என்னும் தானியம் குதிரைகள் தான் முக்கியமாகப் புசிக்கின்றன என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அந்த கொள்ளை நாம் சாப்பிட்டு விட்டால், குதிரைகள் பாபம் என்ன செய்யும்? ஆகவே கொள்ளை நீ விரும்பாதே என்று ஒளவையார் சொன்னார்கள். ஆகையினால் ஒளவையார் காலத்தில் குதிரைகள் தமிழ்நாட்டில் இருந்திருக்க வேண்டுமென்பதற்குச் சந்தேகமில்லை.

“தையல் சொற் கேளேல்” என்பதற்கு சில பாமரர்கள் பெண்கள் சொற்களைக் கேளாதே என்று அர்த்தம் செய்கின்றனர். ஒளவையார் ஒரு ஸ்திரீயாயிருந்து கொண்டு பெண்கள் சொல்லைக் கேளாதே என்று உபதேசிப்பார்களா? மாட்டார்கள். இதற்கு அர்த்தம் முதலில் எனக்கு புலப்படாமலிருந்தது. பிறகு மிகவும் கவனித்துப் பார்த்த பிறகுதான் வெளிப்படையாயிற்று. தையல் என்பது தொழில் ஆகுபெயராம்; தையற்காரனைக் குறிப்பதாம். அதாவது தையற்காரர்களுடைய சொல்லை நீ நம்பாதே என்று அர்த்தமாகும். தையற்காரர்கள் எப்பொழுதும் சொக்காய் முதலியவற்றிற்கு துணி எவ்வளவு வேண்டுமென்றால், ஒன்றிற்கு இரண்டாகக் கூறுவார்கள்; பிறகு தாங்கள் அதைக் கிழித்து எடுத்துக் கொள்வதற்காக-அதற்காக தையற்காரர்கள் சொல்லை நம்பாதே என்று நமது ஒளவையார் நமக்கு போதித்திருக்கின்றனர்.

“தொன்னை மறவேல் ” (தொன்மை மறவேல்) என்பது இன்னொரு சிறந்த அடியாகும் ஆத்திச்சூடியில். இது என்ன அற்ப சமாசாரம் ஆயிற்றே, இதைப் பற்றி ஒளவையார் ஏன் எழுதினார்கள் என்று முதலில் நான் நினைத்ததுண்டு. பிறகு ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு நான் விருந்து சாப்பிடப் போன போது இதன் சூட்சுமத்தையறிந்தேன். சாப்பாட்டின் கடைசியில் பாயசம் அங்கு வழங்கினார்கள்; ஆனால் தொன்னை போட மறந்து போய் விட்டார்கள். பாயசத்தை இலையில் விட்டால் அது நான்கு பக்கமும் ஓட ஆரம்பித்தது, பக்கத்து இலைக்கும், ஓடிப் போய் எச்சலாக்கிற்று! அப்பொழுது இந்த ஆத்திச்சூடியடி ஞாபகம் வந்தது! தொன்னையை மாத்திரம் மறவாமல் வாங்கிக் கொண்டு வந்து பரிமாறியிருந்தால் இந்த கஷ்டமெல்லாம் வந்திராதே என்று ஒளவையாரைப் புகழ்ந்தேன்! ஆகவே இந்த ஆத்திச்சூடி வரியைப் படித்தவர்கள் எந்த விருந்திலும் தொன்னையை மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

இன்னுமொரு முக்கியமான விஷயம் நாம் ஆத்திச்சூடியில் கவனிக்க வேண்டியிருக்கிறது. தற்காலத்திய மேல்நாட்டு சாஸ்திரிகள், தாங்கள் ஏதோ வைடமின்ஸ் (Vitamins) என்பவைகளைக் கண்டு பிடித்ததாகப் பெருமை பாராட்டுகின்றனர்; இந்த வைடமின்ஸ் விதைகளில் அதிகமாக யிருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த ரகசியம் முற்காலத்திலேயே நமது நாட்டு கிழவிகளுக்குக் கூட தெரிந்திருக்கிறது, இல்லாவிடில் ஆத்திச்சூடியில் “வித்தை விரும்பு” என்று ஒளவையார் எழுதியிருப்பார்களா? வித்தை=விதைகளை, விரும்பு=நீ சாப்பிடு. இதில் மற்றுமொரு சூட்சுமார்த்தமுண்டு; அதாவது விதைகளிருந்தால்தானே பயிர் செய்ய முடியும், ஆகவே வித்தை விரும்பு என்பது ஆத்திச்சூடியில் மிகவும் முக்கியமான ஒரு வரியாம். ஆயினும் இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு, வித்தை விரும்பு என்று சொல்லி விட்டு, “வாதுமைக் கோரேல்” (வாதுமுற் கூறேல்) என்று ஏன் எழுதினார்களோ தெரியவில்லை. எல்லா வித்தையும் விரும்பும்படி உபதேசித்து விட்டு, வாதுமைக் கொட்டையை மாத்திரம் ஏன் வேண்டாமென்று சொல்ல வேண்டும்? இது ஆராயத்தக்க விஷயம்.

கடைசியாக “ஓரம் செல்லேல்” (ஓரம் சொல்லேல்) என்பது ஒரு வரியாம். இதுவும் நம்முடைய சிறுவர்களுக்கு சிறந்த புத்திமதி தருவதாம். தெருக்களில் ஓரமாகச் சென்றால், சாக்கடைகள் முதலிய அசங்கியங்கள் இருக்கும், ஆகவே நடுவில் போவதுதான் சரி, என்று இதனால் நாம் அறிய வேண்டியிருக்கிறது.