ஹாஸ்ய வியாசங்கள்/தமிழ் மாது படும் கஷ்டம்

விக்கிமூலம் இலிருந்து

தமிழ் மாது படும் கஷ்டம்

நமது தாய் பாஷையாகிய தமிழ் மொழியானது தமிழ் மக்கள் வாயிலேயே மிகவும் துன்புறுகிறது என்பது யாவரும் வியசினிக்கத் தக்க விஷயமே. சுத்தமாகத் தமிழ் பேசுபவர்கள்.சிலரே என்று கூற வேண்டும். இங்கிலீஷ் பாஷை நமது நாட்டில் நுழைந்த பிறகு, தமிழ் கலப்பு பாஷையாகி விட்டது. “அழுதாவது சொல்லு சொல்லியாவது அழு, இாண்டையும் ஒன்றாகச் செய்யாதே” என்று ஒருவர். கூறியபடி, நாம் தமிழாவது பேச வேண்டும், இங்கிலீஷாவது பேச வேண்டும்; இரண்டையும் கலந்து பேசினால், என் செய்வது? இதைப் பற்றி எனது நண்பர் ஒருவர் “”என்னா சார் (sir) டமில் பியூரா (Tamil pure) பேசத் தெரியாதில்லே, லாட்ஸ் ஆப் இங்கிலீஷ் வொர்ட்ஸ் (lots of English words) யூஸ் (use) பண்ராங்க” என்றார்! இந்த கஷ்டத்தை நான் பாரிடம் சொல்வது?

தமிழ் பாஷை மாத்திரம் தெரிந்தவர்கள் கூட, பேசும் பொழுது மிகவும் கொச்சையாய்ப் பேசுகிறார்கள்-அதிலும் முக்கியமாக சென்னைவாசிகளைப் பற்றி கேட்க வேண்டியதில்லை. தமிழில், ஆங்கிலம், தெலுங்கு, இந்துஸ்தானி முதலிய பதங்களைக் கலந்து கதம்ப பாஷையாக்கி விடுகிறார்கள். ஏறக்குறைய திருத்தமாகத் தமிழ் பேசும் யாழ்ப்பாணிகள் சென்னை வாசிகள் பேசும் தமிழைக் கேட்டு, இது தமிழ்தானே என்று ஆச்சரியப் படுகிறார்கள்.

பேசும் பொழுதே இக்கதியென்றால், எழுதும் பொழுது கேட்க வேண்டியதில்லை. காலணா கார்டில் தமிழில் பி.ஏ., பட்டம் பெற்ற ஒருவர் எழுதும் பொழுது, ஒரு பிழைக்கு தம்பிடி கொடுப்பதானால், இரண்டணாவிற்கு மேல் அபராதம் கொடுக்க வேண்டும். ர (மெல்லினம்) ற (வல்லினம்) என்று எழுத்துகளுக்கு பேதமேயில்லை என்று நிரூபித்து விடுகிறார்கள். அன்றியும், ந, ன, எனும் இரண்டு எழுத்துகள் என்னத்திற்கு ஏதாவது ஒன்றே போதும் எனும் கொள்கை யுடையவர்களாயிருக்கின்றனர் பெரும்பாலார். தன் பெயருக்குப் பின் நான்கு எழுத்துகள் (பி. ஏ., பி. எல்.,) பட்டம்! ஒரு தமிழர் தன் பெயரை “றாமசாமி ஐயங்கார்” என்று தமிழில் தன் கடிதத்தின் தலைப்பில் போட்டுக் கொள்ளுகிறார்! தமிழில் அச்சிடுபவர்களாவது இதையெல்லாம் கவனிப்பார்கள் என்றாலோ, அதையும் காணோம். ஒரு தமிழ் விளம்பரத்தில் “சவால் கூருதல்” என்று அச்சிடப்பட்டிருக்கிறது! இதில் இன்னொரு வேடிக்கை யென்னவென்றால், இதை அச்சிட்ட தமிழருக்கு சவால் எனும் இந்துஸ்தானி பதத்திற்கு தக்க தமிழ் பதம் கிடைக்கவில்லை போலும். ‘கேள்வி’ எனும் பதத்தை அவரது செவிகள் கேட்டில்லை போலும்.

மதுரையென்பது செந்தமிழ் நாடு என்று எல்லோராலும் மதிக்கப்படுகிறது. அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உற்சவப் பத்திரிகையில், ஒருவர் பெயர் “வெங்கடாஜல ஐயர்” என்று அச்சிடப்பட்டிருக்கிறது! வேங்கடம் எனும் அசலத் (மலை) தைப் பற்றி அறிந்திருக்கிறேன், வேங்கடம் எனும் ஜலத்தை (நீரை)ப் பற்றி கேள்விப்பட்டதில்லை. இவ்விதமே நமது பண்டாரங்கள், அருணாசலத்தை (அருண + அசலம்) அருணாஜலமாக்கி விடுகிறார்கள். அசலம் என்றால் சலனமில்லாதது என்று பொருள் படும், ஆகவே யாவராலும் அசைக்க முடியாத மலைக்குப் பெயராயது; எந்நேரமும் சலனமுடையதாயிருக்கும் ஜலத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

நமது முனிசிபாலிடியார் தமது பணத்தை மிகவும் சிக்கன மாகச் செலவழிக்க வேண்டியவர்கள் கூட, வீதிகளின் பெயர்கள் எழுத வேண்டிய பலகைகளில், தெரு என்னும் பதமிருக்க, அதற்கு ஒரு எழுத்தைச் சேர்த்து ‘தெருவு’ என்று எழுதி விடுகிறார்கள்!

சிலர் தமிழ் பாஷையை மிகவும் இலக்கணமாகப் பேசுகிறோம் என்றெண்ணி, ‘தேகம்‘ என்பதற்குப் பதிலாக ‘திரேகம்‘ என்று உச்சரிக்கின்றனர்! இவ்விதமே மற்றும் சிலர் விற்குமிடம் என்பதற்குப் பதிலாக விர்க்குமிடம் என்று வரைகின்றனர்.

தமிழர்களாய்ப் பிறந்தவர்கள் தமிழ் பதங்களை உபயோகிப்பதற்கே இக்கதியானால் மற்ற பாஷைகளிலுள்ள பதங்களை உபயோகிப்பதில் நாம் என்ன சொல்லக் கூடும்? “துரெளபதி வஸ்திராபஹரணம்” என்பது ஒரு பாரதக் கதையாம், வஸ்திரம் + அபஹரணம், என்பவை இரண்டு வடச் சொற்களாம்; அதை மாற்றி அநேகப் பத்திரிகைகளில் “துரெளபதி வஸ்திராபரணம்” என்ற அச்சிட்டதைப் பார்த்திருக்கிறேன். இதைப் பிரித்தால் வஸ்திரம் + ஆபரணம் என்றாகும். துரெளபதி வஸ்திராபரணம் என்பது வியாச பாரதத்தில் இல்லாத புதிய கதை போலும்.

தமிழில் பிரசங்கம் செய்யும் பாகவதர்கள் விஷயத்திலேயே இப்படியானால், சாதாரணமாகக் கொச்சையாகப் பேசும் நடிகர்கள் விஷயத்தில் நாம் எப்படி குறை கூறுவது?

நடனம் செய்யும் மாதை “நடினமாது” என்று சங்கத்தில் அழைத்தால், அவள் கதாநாயகனை “”பிராணி நாதா” என்று கூப்பிடுவதில் தவறென்ன? இதற்கும் அதற்கும் சரியாகவிருக்கிறதல்லவா?.

கடைசியாக நமது தமிழ் சங்கீத வித்வான்கள் வேறு பாஷையைக் கொல்லும் விதத்தை கூறி முடிப்போம். ஒரு சங்கீத வித்வான், தமிழர் அவர், சம்ஸ்கிருதமும் தெலுங்கும் கொஞ்சமும் அறியாதவர், தியாகையர்வாள் கிருதி ‘நின்னெவானி’ என்பதைப் பாடிக் கொண்டு வந்தார். அதன் தாத்பர்யம் “ஹே ராமா! உன்னை யார் என்று நிர்ணயிப்பேன்-சிவன் என்பேனா, விஷ்ணுவென்பேனா, பிரம்மன் என்பேனா?” என்பதாம். “சிவுடனோ, மாதவுடனோ” என்பதற்குப் பதிலாக செவிடனோ? மா-தவுடனோ? என்று அரை மணி சாவகாசம் சங்கதிகள் போட்டு பாடினார். தியாகையர்வாள் தீர்க்க திருஷ்டியால் தன் பாட்டை இவ்வாறு கொலை செய்யக் கூடுமென்று தெரிந்திருப்பாராயின் இந்தக் கிருதியை எழுதியேயிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

“எந்துகு நிர்தயா” என்பது ஐயர்வாளுடைய மற்றொரு கிருதியாம். என் மீது கயையில்லாமலிருப்பதற்குக் காரணம் என்ன? என்பது அதற்குப் பொருளாம். இதை “எந்துகு நீ தயா?” ‘உன் தயை எனக்கு என்னத்திற்கு?’ என்று தமிழ் சங்கீத வித்வான்களில் சிலர் பாடுகின்றனர். இந்தப் பாபம் யாரைச் சாருமோ எனக்குத் தெரியாது. உங்களுக்குள் யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து எனக்கெழுதி யனுப்புங்கள்.