உள்ளடக்கத்துக்குச் செல்

ஹாஸ்ய வியாசங்கள்/சுப வார்த்தை

விக்கிமூலம் இலிருந்து

சுபவார்த்தை

தெற்கில் ராமநாதபுரம் தாலூகாவில் இளவூர் என்று ஒரு கிராமமுண்டு. அந்த கிராமத்தை அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் “எளவூர்” என்ற அழைக்க ஆரம்பித்து, வாழைப்பழம் “வாளப்பளம்” என்று மாறியது போல், ‘எழவூராக’ மாறியது.

இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலார், நாட்டுக்கோட்டை செட்டிமார்கள். அவர்களுள் நெடுங்காலமாக, பேசும் போதெல்லாம் ‘எழவு’ ‘எழவு’ என்னும் பதம், நடமாட வாரம்பித்தது. அதன் பேரில் அங்குள்ள ஒரு வயோதிகர் “இதென்ன நமது பிள்ளைகளெல்லாம் எங்நேரமும் எழவு எழவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, பெரிய பேரெழவாகி விட்டது இந்த வழக்கம், இதை எப்படியாவது நாம் தடுக்க வேண்டும்” என்று எண்ணினவராய், ஒரு கூட்டம போட்டு, அதில் அவவூர் ஜனங்களையெல்லாம் வரவழைத்து, அதில் பிரசங்கம் செய்ய ஆரம்பித்த பொழுது, பெருங் கூச்சலாயிருக்க. “நண்பர்களே!-அடே சத்! -என்ன எழவு பெரிய கூச்சலாயிருக்கிறது!-இந்த பெருங் கூச்சல் எழவில்-நான் பேசுகிற எழவு-எப்படி கேட்கும்?-கொஞ்சம் சந்தடி போடாமலிருங்களையா எழவு!” -என்று உாக்கக் கத்தவே, கொஞ்சம் சந்தடி அடங்கியது. அதன் பிறகு அடியிற் கண்டபடி பிரசங்கம் செய்தார்:-

“நண்பர்களே! நாம் எல்லாம் இப்பொழுது ஒன்றாய்க் கூடியிருப்பது-நம்முடைய ஊரில் பலர், பேசும் போதெல்லாம் எழவு எழவு என்கிற எழவெடுத்த பதத்தை அடிக்கடி உபயோகிக்கிற வழக்கத்தை-எப்படியாவது எழவு-முற்றிலும் ஒழிக்க வேண்டுவதற்காம். நமது வாழ்க்கையில் ஏற்கனவே, துன்ப எழவு, காடாத்து எழவு, இந்த எழவு, அந்த எழவு முதலிய பல எழவுகள் இருக்கின்றன. சாதாரணமாகச் சுபமாகப் பேசும் பொழுதும் இந்த எழவை அடிக்கடி இழுத்துக் கொள்வானேன்? இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் - எழவு - கலியாண விஷயமாய்ப் பேசும் பொழுதும், இந்த எழவெடுத்த வார்த்தையை நம்மவர்கள் உபயோகிக்கிறார்கள் இந்த எழவு எனும் கெட்ட வார்த்தையை நமது பாஷையிலிருந்து, எடுத்து விட்டாலொழிய கம்மைப் பீடித்திருக்கும் இந்த எழவு-நம்மை விட்டுப் போகவே போகாது. ஆதலால் இந்த எழவெடுத்த பதத்தை நாம் இனி பேசும் போது உபயோகிக்கக் கூடாதென்று, நான் பிரேரேபிக்கிறேன்.”

அதன் பேரில் இதை ஆமோதிக்கும்படி, எ. மு. மு. ராமசாமி செட்டியார், கூட்டத்தின் அக்கிராசனதிபதியாகிய த மோ. கந்தன் செட்டியாரால் கேட்கப்பட்டபோது, அவர் “இதென்ன எளவையா, என்னை இளுக்கிறைக!-அவர் பேசிய எளவு என் காதிலே ஒரு எளவும் விழலே-எனக்கோ, காது எளவு கொஞ்சம் மத்திபம், நான் என்ன எளவு பேசரது" என்றார்.

அதன் மீது அங்கிருந்த பஞ்சாட்சர செட்டியார் என்பவர் "ஐயா, அவர் பேசினதெல்லாம் என் காதுலே விளுந்தது! இந்த எளவு என்கிற பதம் பெரிய எளவாகத்தானிருக்கு, அதை விட வேண்டியது முக்கியமான எளவு என்று எனக்கு தோன்றுகிறது” என்றார். அதன் பேரில் வந்திருந்தவர்களெல்லாம் "ஆமாம் ஆமாம் இந்த எளவு ஒழியட்டும்" என்று கத்தி கைதூக்கினார்கள். பிறகு கூட்டம் கலைந்தது, கலைந்தவுடன் அடுத்த ஊரில் இருந்து வந்த ஒரு. சாயபு, தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு செட்டியாரைப் பார்த்து சாமி, இந்த மீட்டிங்லே என்னா தீர்மானம் பண்ணாங்க சாமி?" என்று கேட்க, அச் செட்டியார் "அது என்ன எளவோ எனக்குத் தெரியாது-எல்லாரும் கையைத் தூக்கவே நானும் என் கையே தூக்கினேன்” என்று கூறி விட்டு விரைந்து போய் விட்டார். அந்த சாயபு, எப்படியாவது என்ன தீர்மானம் பண்ணினார்களென்று அறிய விரும்பினவனாய், மற்றெரு செட்டியாரை வழிமறித்து "சாமி! நீங்க சொல்லுங்க சாமி! இந்த மீட்டிங்லே என்னமோ எளவு எளவு இண்ணு பேசனாங்களே அது என்னா சாமி?" என்று கேட்டான். அதற்கு அவர் "இந்த கூட்டத்துலே, எளவு என்கிற பதத்தே, யாரும் உபயோகிக்கக் கூடாது இண்ணு தீர்மானிச்சாங்க! இந்த தீர்மானத்திலெல்லாம் அந்த எளவு நம்மெ விட்டுப் போகுமா என்னா?அந்த எளவு, எங்க ஜாதியே விடவே விடாது! அதை விட சுப வார்த்தையாக எல்லாரும் பேச வேணும் இண்ணு-ஒரு-எளவு-தீர்மானம் பண்ணால் நன்னாயிருக்கும்” என்று பதில் கூறிவிட்டுப் போனார்.

மு ற் றி ற் று