ஹெர்க்குலிஸ்/ஹெர்க்குலிஸ்/ஆஜியஸ் மன்னனின் தொழுவங்கள்
அந்தக் காலத்தில் ஈலிஸ் நகரத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஆஜியஸ் மன்னனிடம் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இருந்தன. அவைகளில் கறுப்புக் காளைகள் முந்நூறும், சிவப்புக் காளைகள் இரு நூறும் இருந்தன. வெள்ளியைப் போல வெண்மையான முரட்டுக் காளைகள் பன்னிரண்டும் இருந்தன. இநத மயிலைக் காளைகள் மற்றவைகளுடன் மலைகளிலே மேயும்பொழுது, சிங்கம் முதலிய கொடிய விலங்குகள் வந்தால், அவைகள் பன்னிரண்டும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அவ்விலங்குகளைக் கொம்புகளால் குத்திப் போராடும் அளவுக்குப் பலமுள்ளவை. ஆஜியஸ் மன்னனிடம் இருந்தவைகளைப்போல் அவ்வளவு அதிகமான கால்நடைகள் உலகிலே எவரிடமும் இருக்கவில்லை. அவைகள் எல்லாம் பகலிலே மலைக் காடுகளில் மேய்ந்துவிட்டுத் திரும்பி வந்தபின் இரவில் அவைகளை அடைத்துவைப்பதற்காக அம்மன்னன் வரிசை வரிசையாக நூற்றுக்கணக்கான தொழுவங்கள் கட்டியிருந்தான்.
ஆஜியஸ் சூரிய தேவனான ஹீலியஸின் மைந்தன். அதனால் அவன் சில வரப்பிரசாதங்கள் பெற்றிருந்தான். அவனுடைய கால்நடைகளுக்கு நோய்நொடிகள் தோன்றுவதேயில்லை. நன்றாகக் கொழுத்து வளர்ந்த அந்த ஆடுகளும் மாடுகளும் அவனுக்கு வற்றாத செல்வத்தை அளித்து வந்தன. ஆனால், அவைகளுடைய தொழுவங்கள் மட்டும் பல ஆண்டுகளாகச் சுத்தம் செய்யப்படாமலே இருந்து வந்தன. ஒவ்வொரு தொழுவத்திலும் சாணமும், பிழுக்கையும், சண்டும், கூளமுமாகக் குப்பைகள் மலை மலையாகக் குவிந்திருந்தன. ஒவ்வொரு நாளும் அவைகளை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்வதானால், ஆயிரக்கணக்கான வேலைக்காரர்கள் தேவைப்படுவார்கள். அவைகளால் தொழுவங்களிலிருந்த கால்நடைகளுக்கு நோய் நொடிகள் ஏற்படவில்லையாயினும், சுற்றிலும் அக்கம் பக்கங்களில் மக்களுக்குப் பல வியாதிகள் ஏற்பட அவை காரணமாயிருந்தன. அவைகளின் நாற்றம் சுற்றிலும் பல காத தூரம்வரை வீசிக் கொண்டிருந்தது என்பார்கள்.
இத்தகைய துர்க்கந்தம் நிறைந்த தொழுவங்கள் அனைத்தையும் ஹெர்க்குலிஸ் ஒரே நாளில் சுத்தம் செய்ய வேண்டுமென்று யூரிஸ்தியஸ் பணித்தான். இது அவனுடைய ஐந்தாவது கட்டளை. தொழுவங்களில் பல்லாண்டுகளாகச் சேர்ந்திருந்த உரங்களை ஹெர்க்குலிஸ் கூடை கூடையாக அள்ளித் தலையிலே சுமந்து வெளியிலே கொண்டு போய்க் கொட்டுவான் என்று எதிர்பார்த்து, அவன் இந்த இழிவான பணியைக் கொடுத்திருந்தான். எந்த வேலையாயிருந்தாலும், சீயஸ் கடவுளுக்காக ஹெர்க்குலிஸ் செய்து தீரவேண்டியிருந்தது.
எனவே, அவன் ஈலிஸ் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். இரண்டு நாள்களில் அவன் அங்கே போய்ச் சேர்ந்தான். மலைச் சாரலில் ஆஜியஸின் அரண்மனையையும், தனியான ஒரு பெரிய நகரம் போல அமைந்திருந்த அவனுடைய தொழுவங்களையும அவன் பார்த்தான். அங்கே ஒரு பாறையின்மேல் அார்ந்துகொண்டு, எல்லாத் தொழுவங்களையும் ஒரே நாளில் எப்படிச் சுத்தம் செய்வது என்பதைப்பற்றி அவன் சிறிது நேரம் சிந்தித்தான். அருகிலே ஓடிக்கொண்டிருந்த பீனியஸ் என்ற ஆற்றையும், மலைமேலும் அடிவாரத்திலும் மேய்ந்து திரிந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆடுகளையும் மாடுகளையும் அவன் கவனித்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றிவிட்டது. உடனே அவன் பறையை விட்டு எழுந்து அரண்மனைக்குச் சென்று அரசனைக் காண விரும்பினான்.
நீண்ட தாடி மீசைகளுடன், தொண்டு கிழவனாயிருந்த, ஆஜியஸ் மன்னனுடன் அப்பொழுது அவனுடைய குமாரர்கள் இருவரும் இருந்தனர். ஹெர்க்குலிஸ் மன்னனை மிடுக்குடன் பார்த்து, ஆண்டவன் சீயஸ் ஆணையால் உங்களுடைய தொழுவங்களைச் சுத்தம் செய்ய நான் இவ்விடம் வந்துள்ளேன். அரசே!’ என்று கூறினான். ஆஜியஸ் அதைக் கேட்டு ஆனந்தமடைந்து, ‘நல்லதுதான், வீர! ஆனால், அது ஒரு மனிதனால் செய்து முடிக்கக்கூடிய காரியமா என்பதுதான் சந்தேகம். நூற்றுக்கணக்கான ஆள்கள் பல மாதங்களாக அவைகளிலுள்ள குப்பைகளை அள்ளினாலும், இப்பொழுதுள்ளவைகளை விட அதிகக் குப்பைகளே குவிந்திருக்கும்!’ என்றான்.
எப்படியிருந்தாலும் நான் முயன்று பார்க்க விரும்புகிறேன். தொழுவங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கொடுத்தால், தாங்கள் எனக்குப் பரிசாக என்ன கொடுப்பீர்கள் என்று கேட்டான் ஹெர்க்குலிஸ்.
‘பரிசா என்னிடமுள்ள ஆடுகளிலும் மாடுகளிலும் பத்தில் ஒரு பகுதியை உனக்கு அளிக்கத் தயாராயிருக்கிறேன்; அதுவும் மனமுவந்து அளிப்பேன்! என் தொழுவங்கள் சுத்தமானால் போதும்!’ என்று ஆஜியஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.
உடனே ஹெர்க்குலிஸ் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டியது ஒன்றுதான். தொழுவங்களிலுள்ள ஆடு மாடுகளையும், மலையடிவாரத்தில் மேய்ந்துகொண்டிருப்பவைகளையும். மேல் மலைக்கு ஓட்டிச் செல்லும்படி உங்களுடைய பணியாளர்களுக்கு உத்தரவு கொடுங்கள். ஏனெனில், ஹர்க்குலிஸ் சுத்தம் செய்யத் தொடங்கினால், பூமியே அதிரும்! அதனால்தான் முன் கூட்டியே சொல்லி வைக்கிறேன்!’ என்று சொன்னான் மன்னனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தான்.
அப்பொழுது அவன் அருகிலிருந்த அவன் புதல்வர்களில் மூத்தவனான பைலியஸ் என்பவன் ஹெர்க்குலிஸிடம் ஓடிச் சென்று, அவன் கையைப் பிடித்துக்கொண்டு, தன்னை அவனுடைய நண்பனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டான். மாவீரனும் அவனை அன்புடன் அனைத்துக்கொண்டு தங்கள் நட்பு நல்ல முறையில் வளருமென்று நம்புவதாகக் கூறினான்.
ஹெர்க்குலிஸ், தனக்கு ஒரு கோடரியும் மண்வெட்டியும் வேண்டுமென்று சோல்லிவிட்டு, வெளியே வந்தான். அப்பொழுது ஆஜயஸின் பன்னிரண்டு காட்டு வெள்ளைக் காளைகளில் முதன்மையாக விளங்கிய காளை அவனைப் பார்த்துச் சீறிக்கொண்டு பாய்ந்து வந்தது. அவன் எப்பொழுதும் சிங்கத்தோலையே ஆடையாகப் போர்த்திக் கொண்டிருப்பது வழக்கமாதலால் , அத்தோலின் வாசனையை அறிந்து, அவனையே சிங்கமென்று அந்த மாடு கருதிவிட்டது. வெள்ளைக் குன்று உருண்டு வருவது போல் தன்மேல் வந்து பாய்ந்த அக்காளையின் இடப் பக்கத்துக் கொம்பு ஒன்றை ஹெர்க்குலிஸ் இரு கைகளாலும் பிடித்து, அதன் கழுத்தை வளைத்து, தலை தரையில் தோயும்படி தன் உடல் வலியால் அழுத்திப் பிடித்துக்கொண்டான். அப்பொழுதுதான் அந்தக் காளை சிங்கத்தினும் சிறந்த விரன் ஒருவான் இருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டது. சிறிது நேரத்திற்குப்பின், ஹெர்க்குலிஸ் அதை, விட்டு விட்டுத் தன் வேலையைக் கவனிப்பததற்காகப் புறப்பட்டான்.
அரண்மனைக்கு வெளியே வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அரசனும், அவன் குமாாரகளும், ஏவலர்களும் ஹெர்க்குலிஸ் நோாகத் தொழுவங்களுக்குச் செல்லப் போகிறான் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவன், கோடரியையும் மண் வெட்டியையும் எடுத்துக்கொண்டு, ஆற்றின் கரை வழியாக மலைவரை நடந்து சென்றான். பிறகு
வழியில் தான் குறியிட்டிருந்த ஓர் இடத்திற்குத் திரும்பி வந்து, தான் அணிந்திருந்த சிங்கத்தோலைக் கழற்றி
வைத்துவிட்டு, அவன் வேலை செய்யத் தொடங்கினான். முதலில் அவன் ஒரு பெரிய மரத்தை வெட்டிச் சாய்த்து, அதன் கிளைகளையும், அடிமாத்தையும் நீண்ட உருளைக் கட்டைகளாக வெட்டி ஒரு பக்கத்தில் அடுக்கி வைத்தான். பிறகு மண் வெட்டியை எடுத்துக்கொண்டு, அவன் அவன் ஆற்றின் கரையில் ஒரு பகுதியை வெட்டி ஒரு வாய்க்கால் தோண்டத் தொடங்கினான். அந்தப்பக்கத்தில் முன்பு ஒரு வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்த தடத்தை அவன் முதலிலேயே பார்த்துவைத்திருந்தான் தான் தோண்டிய வாய்க்காலை அந்தப் பழைய காலுடன் கொண்டு போய்ச் சேர்த்து, அதன் வழியாகத் தண்ணீர் ஓடும்படி செய்தான். அந்த நீர் தொழுவங்களில் பாய்வதற்கேற்ற சிறு ஓடைகளையும் அவன் விரைவிலே தொட்டுவிட்டான். அதற்கப்பால், அவன் மீண்டும் ஆற்றின் பக்கம் வந்து நின்றுகொண்டு, ஆற்றை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். ‘உயிர்களுக்கெல்லாம் உணவளிக்கும் பீனியஸ் தாயே! என்னை மன்னித்துக்கொள்ளவும்! தேவ கட்டளையை நிறைவேற்ற வந்துள்ள நான் உனக்கு எவ்விதக் கேடும் செய்ய விரும்பமாட்டேன். ஆயினும், சிறிது நேரத்திற்கு உன்னுடைய தெள்ளிய நீர் ஆஜியளின் தொழுவங்களில் வெள்ளமாகப் பாய்ந்து அவைகளைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கின்றது. அதற்காக நீரிலே கட்டைகளை அடுக்கி அனை அமைத்து நீரை இங்கேயே தேக்கிக்கொள்ள உன் அநுமதியை வேண்டுகிறேன்:’ என்று கூறி அவன்
தொழுதுகொண்டே, கட்டைகளை வேகமாக எடுத்து ஆற்றில் அழுத்தி, அனையை அமைக்கத் தொடங்கினான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் அல்லவா! தண்ணீர் அணைப்பக்கத்தில் தேங்கி வாய்க்கால் வழியாகப் பெருவெள்ளமாகப் புரண்டோடத் தொடங்கி விட்டது. தோழுவங்களுக்குள்ளே ஆற்று நீர் அலையும் நுரையமாகப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது! அம்மட்டோடு நிற்காமல் சுற்றிலும் மலையடிவாரம் வரை ஒரே வெள்ளக்காடாகி விட்டது! மரங்கள் செடிகளெல்லாம் வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தன. வெள்ளத்தைப் பார்த்துப் பார்த்து, ஹெர்க்குலிஸ் எல்லையற்ற மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்துகொண்டிருந்தான்.
அன்று மாலைவரை வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்துகொண்டிருந்தது. ஹெர்க்குலிஸின் கையில் துளி அழுக்குக்கூடப் படாமலே, தொழுவங்கள் எல்லாம் துப்புரவாகி விட்டன. மேய்ச்சல் தரைகளும் பரிசுத்தமாக விளங்கின. சுற்றிலும் பூமியே குளிர்ச்சியடைந்து விட்டது. அப்பொழுது ஹெர்க்குலிஸ் ஆற்றில் இறங்கி, அணையை, அகற்றிவிட்டு, கரையை நன்றாக அடைத்து. நீர் முன்போல் ஓடும்படி செய்தான். பின்னர் ஆஜியஸைப் பார்ப்பதற்காக அவன் அரண்மனைக்குச் சென்றான்.
அதற்குள், அவன் யூரிஸ்தியஸின் ஏவலின் பேரிலேயே வந்து தொழுவங்களைச் சுத்தம் செய்தான் என்பதை எவரோ வழிப்போக்கர் மூலம் தெரிந்துகொண்டிருந்தான் ஆஜியஸ். ஹெர்க்குலிஸ் அவனைக் கண்டு, என் வேலை முடிந்தது. உங்கள் பரிசுதான் பாக்கி என்றான்.
பரிசை ஆற்றுக்குத் தான் கொடுக்க வேண்டும்! நீயா தொழுவங்களைச் சுத்தம் செய்தாய்? ஆறல்லவா சுத்தம் செய்தது?” என்று கேட்டான் மன்னன் சிறிது நேரத்திற்குப்பின் அவன் தான் பரிசுபற்றி ஹெர்க்குலிஸிடம் ஒப்பந்தம் எதுவுமே செய்து கொள்ளவில்லையென்றும் கூறிவிட்டான்.
ஹெர்க்குலிஸ், சில பெரியோர்கள் முன்பு விஷயத்தைத் தெரிவித்து, அவர்களை முடிவு கூறும்படி கேட்க வேண்டும் என்று தெரிவித்தான். அவ்வாறு சில நடுவர்கள முன்பு, மன்னன் தன் கால்நடைகளில் பத்தில் ஒரு பகுதியை ஹெர்க்குலிஸுக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்த வாக்குறுதியைப் பற்ற ஹெர்க்குலிஸ் பேசி முடிந்ததும், மன்னனின் மூத்த குமாரன் அது உண்மையென்றும், பேசும் பொழுது தான் சாட்சியாக இருந்ததாகவும் கூறினான். உடனே ஆஜியஸ், கடுங்கோபத்துடன் எழுந்திருந்து, அவனையும் ஹெர்க்குலிஸையும் தன் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுவிட்டு சபையிலிருந்து வெளியே போய்விட்டான்.
ஹெர்க்குலிஸ் அவனுக்குக் காதில் கேட்கும்படியாக ஆஜியஸ், இன்றிலிருந்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளும்! ஹெர்க்குலிஸையே எதிர்த்து விட்டீர்! இன்று கால்நடைகளில் பத்தில் ஒரு பகுதி உமக்கு ஆதாயம்தான். ஆனால் விரைவிலே நீர் இழக்கப் போவது உம்முடைய மகுடத்தையும், சிம்மாசனத்தையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும்! என்று இடிபோல் முழங்கிக் கொண்டு கூறினான்.
பிறகு அவன் ஈலிஸ் நகரை விட்டுக் கிளம்பி மைசீனை நோக்கி நடந்து சென்றான். அவனுக்கு நண்பனாயிருந்த பைலியஸும் தந்தையின் கட்டளைப்படி அந்நாட்டைத் துறந்து வெளியேறினான்.
ஆனால், பிற்காலத்தில் ஹெர்க்குலிஸ், இந்த நிகழ்ச்சிகளை மறக்காமல், ஆஜியஸைத் தாக்கி, அவனைத் தன் வாளுக்கு இரையாக்கிவிட்டான் என்று அவனைப் பற்றிய கதைகள் கூறுகின்றன.