உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/1 32 கரடு பெயர்த்தது

விக்கிமூலம் இலிருந்து
(1 32 கரடு பெயர்த்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

பிரச்சோதனனை நோக்கி உதயணன் கூறல்

[தொகு]

… * பொருள் புரி நூலும்
அலகை சான்ற வுலக புராணமும்
பலவகை மரபிற் பாசண் டியர்கள்
சலசல மிழற்றுஞ் சமய விமற்பமும்
இசையொடு சிவணிய யாழி னூலும் 5
நாடகப் பொருளும்….
உப்பாற் பொருளு முட்கொண் டடக்கி
உளப்பா டுடைமை யுதயண னுரைத்தலும்

பிரச்சோதனன் உட்கோள்

[தொகு]

இனைத்தோ ரிளமையொ டெனைப்பல கேள்வியும்
தவத்தது பெருமையிற் றங்கின விவற்கென 10
மருட்கை யுற்றதன் மனம்புரிந் தருளி

வியந்த அரசன் விளம்பல்

[தொகு]

எம்முடை யளவையிற் பண்புறப் பேணி
நுன்பதிப் பெயர்க்கு மளவையி னும்பியர்
நின்வழிப் படுகென மன்னவ னுரையாக்
குலங்கெழு குமரரைக் குற்றே லருளிக் 15
கலந்தவ ணின்ற கட்டுரைக் காலத்துத்

உதயணனும் வாசவதத்தையும்
தம்முள் ஒருவரையொருவர் நோக்குதல்

[தொகு]

தென்கட லிட்டதோர் திருமணி வான்கழி
வடகட னுகத்துளை வந்துபட் டாஅங்கு
நனிசே ணிட்ட நாட்டின ராயினும்
பொறைபடு கருமம் பொய்யா தாகலிற் 20
சிறைபடு விதியிற் சென்றவட் குறுகி
மதியமு ஞாயிறுங் கதிதிரிந் தோடிக்
கடனிற விசும்பி னுடனின் றாங்குப்
பைந்தொடிச் சுற்றமொடு தந்தை தலைத்தாள்
ஆயத் திடையோன் பாசிழைப் பாவை 25
யானை மிசையோன் மாமுடிக் குருசில்
இருவரு மவ்வழிப் பருகுவனர் நிகழ

அரசன் கூற்று

[தொகு]

யாதனிற் சிதைந்ததிவ் வடற்பெருங் களிறென
வேழ வேட்டம் விதியின் வினாய
கதிர்முடி வேந்தன் கண்ணிய நுண்பொருட் 30
கெதிர்மொழி கொடீஇய வெடுத்த சென்னியன்
மன்னவன் முகத்தே மாதரு நோக்கி
உள்ளமு நிறையுந் தள்ளிடக் கலங்கி

இருவர் செய்திகள்

[தொகு]

வண்டுபடு கடாஅத்த வலிமுறை யொப்பன
பண்டுகடம் படாஅ பறையினுங் கனல்வன 35
விடற்கருந் தெருவினுள் விட்ட செவ்வியுட்
டுடக்குவரை நில்லாது தோட்டி நிமிர்ந்து
மதக்களி றிரண்டுடன் மண்டி யாஅங்
கில்வழி வந்ததம் பெருமை பீடுறத்
தொல்வழி வயத்துத் தொடர்வினை தொடர 40
வழுவில் போகமொடு வரம்பின்று நுகரும்
உழுவ லன்பி னுள்ளந் தாங்கி
இழையினுங் கொடியினு மிடியினும் பிணங்கித்
தேனினும் பாலினுந் தீஞ்சுவைத் தாகிக்
குலத்தினுங் குணத்தினுங் கூடிய வன்பினும் 45
இனத்தினும் பிறவினு மிவ்வகை யிசைந்த
அமைப்பருங் காதலு மிமைப்பினு ளடக்கி
ஒருவயிற் போல வுள்ளழி நோக்கமொ
டிருவயி னொத்தஃ திறந்த பின்னர்த்

உதயணன் செயல்

[தொகு]

தாரணி வேந்தன் றலைத்தா ணிகழ்ந்தது 50
காரண் மாகக் காத றேறி
ஓர்ப்புறு நெஞ்சந் தேர்ச்சியிற் றிருத்திப்
பேர்த்தவன் வினவிய பெருங்களிற் றிலக்கணம்
போர்த்தொழில் வேந்தன்முன் பொருந்தக் காட்டி
நீல யானை நெஞ்சுபுக் கனன்போற் 55
சீல விகற்பந் தெரிந்தன னுரைக்கலும்
அது முன் னடக்கிய மதியறி பாகரொ
டங்கை விதிர்த்தாங் கரசவை புகழப்

பிரச்சோதனன் செயல்

[தொகு]

பைந்தொடிச் சுற்றமொடு பரிசனம் போக்கி
விழுநிதி யடுத்த கொழுமென் செல்வத்துக் 60
கணக்கரை வியன்கரக் கலவறை காக்கும்
திணைத்தொழி லாளரைப் புகுத்துமி னீங்கெனப்
புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி
நிலந்தோய் புடுத்த நெடுநுண் ணாடையர்
தானை மடக்கா மான மாந்தர் 65
அண்ணாந் தியலா வான்றுபுரி யடக்கத்துக்
கண்ணி நெற்றியர் கைதொழூஉப் புகுதரக்
களிறுவழங்கு தடக்கையிற் காண்வரக் கொண்ட
வெள்ளேட் டங்கண் வித்தக மெழுதிய
கடையெழுத் தோலைக் கணக்குவரி காட்டி 70
முன்னுறு கிளவியிற் பண்ணுறப் பணிக்கலும்

கணக்கர் முதலியோர் உதயணனுக்காகக்
குஞ்சரச்சேரி மாளிகையில்
பல பொருள்களைத் தொகுத்தல்

[தொகு]

பன்மணி விளக்கும் பள்ளிக் கட்டிலும்
பொன்னி னடைப்பையும் பூரண கலசமும்
கவரியுங் கடகமுங் கதிர்முத் தாரமும்
நிகரின் மாண்கல நிதியொடு நிறைந்த 75
ஆரியச் செப்பும் யவனமஞ் சிகையும்
பொன்செய் பேழையொடு பொறித்தாழ் நீக்கி
நன்கனம் படுத்து நகுமலர் பரப்பி
விரைவிரி யாளர் புரைவுறப் புணர்த்த
பண்டம் புதைத்த வண்டுபடு வளநகர் 80
மடையரு மகளிரு மல்லரு மமைச்சரும்
கடையருங் கணக்கருங் காப்பரு முளப்பட
இறைவினை திரியாப் பழவினை யாளரை
வழிமுறை மரபிற்றந் தொழின்முறை நிறீஇ
வாய்மொழி விதியின் மேவன வெல்லாம் 85
நோக்கி மன்ன நுவலருங் காப்பின்
அணிந்தது நகரெனப் பணிந்தவ ருரைக்கலும்

பிரச்சோதனன் செயல்

[தொகு]

குஞ்சரச் சேரிக் குமரற் கியற்றிய
வெண்சுதை நல்லி லுறையு ளாக
இடம்புகு தக்கன் றிருத்த னெடிதெனப் 90
பேரியல் வையம் பின்செல வருளி
வீரிய வேந்நன் விடுத்தகம் புக்கபின்

உதயணன் செயல்

[தொகு]

விட்டுழல் யானை யச்ச நீக்கி
வெறிகோள் பண்ணியுந் தொழிறலைப் பெயர்த்தவன்
கலிகொ ளாவணங் கைதொழப் போகி 95
அரைமதி யிரும்பொடு கவைமுட் கரீஇ
பீலி சுற்றிய வேணு வெண்காழ்
யானை யிளையரைத் தானத்துப் பிணிக்கெனத்
தகைமலி வேழந் தலைக்கடை யிழிதந்
தகம்புக் கன்னா லரசவை விடுத்தென். 100

32. கரடு பெயர்த்தது முற்றிற்று.