உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/1 37 விழாக் கொண்டது

விக்கிமூலம் இலிருந்து
(1 37 விழாக் கொண்டது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

அரசகுமரருடைய படையரங்கேற்றல்

[தொகு]

கோலவர் கைதொழக் கோயில் போகி
வேல்கெழு முற்றமொடு வீதியி னீங்கிக்
குஞ்சரச் சேரித் தன்னக ரெய்தி
அன்னற வைகல் சென்ற பின்னர்
முரசுகடிப் பிகுத்த மூரி முற்றத் 5
தரசிறை கொண்ட வகன்கண் வாரியுட்
கையார் கடகத்துக் கதிர்வாட் கச்சையர்
ஐயா யிரவ ரரச குமரரொடு
பொன்றலை யாத்த பொதியிற் பிரம்பின்
வண்ணச் செங்கோல்வலவயிற் பிடித்த 10
எண்ணூற் ற்றுவ ரிளங்கிடை காப்பரொடு
புறஞ்சுற் றமைத்த பிறங்குகடைப் படுகால்
நித்திலந் தொடரிய நிகரில்கம் மத்துச்
சித்திரம் பயின்ற செம்பொன் விதானத்துச்
சந்தனப் பீடிகைச் சார்வணை யேறிப் 15
பன்மயிர்க் கவரியொடு பரிசனஞ் சுற்றப்
பெருமக னிருந்த திருமலி யவையத்துக்
கொற்ற வேந்தன் குடிகெழு குமரரைக்
கற்றவை காட்டும் வத்தவர் கோவெனப்
பல்பெருங் கேள்வி படைத்தோ ரன்ன 20
கல்வி மாந்தர் கலித்த கௌவையில்
ஆப்புறு பாடமொ டருத்தங் கூறி
நாக்கொள் கேள்வி நவிற்றறிக் காட்டி
மண்டல மருங்கிற் கொண்டகம்புகுந்து
படைகெழு தெய்வம்புகலப் பலிவகுத் 25

படைப்பயிற்சியின் வகை

[தொகு]

திடைநாட் பிறையி னேற்றிய திருவிற்
கண்ணா லுறுத்துக் கடவதிற் றாங்கி
எண்ணா லரணமு மீரெண் கரணமும்
துன்னரும் பாசமொடு தொடங்குபு தோன்றி
அரிதியல் சாரியை யந்தரத் தியக்கமும் 30
பொருவின் னாழிகை பூணு மாறும்
செருவா ளாட்டுஞ் சேடகப் பிண்டியும்
சாரியை விலக்கும் வேறிரி வகையும்
இடுக்கட் போதி னேம்பஃ பூமியுள்
வகுத்த வாயில் வகைவகை யிவையென 35
ஒட்டும் பாய்த்துளுங் கரந்தொருங் கிருக்கையும்
செருக்கொள் யானை மருப்பிடைத் திரிவும்
தாழாச் சிறப்பிற் பாழியிற் பயின்ற
காலாட் கரும விகற்பம்ங் காட்டிக்
கருவித் தாக்கினுங் காலாட் சுற்றினும் 40
தனியி னாயினுந் தானையொ டாயினும்
புகவும் போக்கும் பொச்சாப் பின்றிப்
பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி

குதிரையேற்றம் முதலியன

[தொகு]

வண்பரிப் புரவியும் வானெடுந் தேரும்
அண்ணல் யானையும் பண்ணுறுத் தேறி 45
இலைய வினப்பரி கொளீஇச் சிலையின்
மதியோர் புகழ்ந்த மரபியல் வழாமை
நுதியமை நுண்படை நூல்வழிச் சிதறி
மழைத்துளி படினும் வான்றுகள் சூழினும்
விலக்கித் தவிர்க்கும் விற்றொழி லுள்ளிட் 50
டிலக்கத் திண்படை யேறுபல காட்டலும்
தலைத்தேர் யானைக்குத் தருக்கின ராயினர்
படைத்தே ராள பாலக ரிவரென
அவைபுகழ்ந் தெடுத்த வரும்பெறற் கிளவியொடு
தகைமுடி வேந்தன் றாள்புகழ்ந் தேத்தித் 55

பிரச்சோதனன் கூற்று

[தொகு]

தகைசால் சிறப்பிற் றன்னொடு நம்மிடைப்
பகைமுத லாகப் பழிதர வந்த
செற்ற நம்வயிற் கொள்ளான் சிறந்த
சுற்ற மாகச் சூழ்ச்சியின் விளக்கி
நன்றுணர் விச்சை நம்பியர்க் கருளி 60
அன்புவழிப் படுத்த வரச குமரற்குக்
கைம்மா றிதுவெனக் கடவதி னிறையும்
செம்மா ணாற்றச் சிறுமைய மாதலின்
ஒன்பதின் கோடி யொண்பொருள் கொடுப்பினும்
பண்பெனக் கொண்டிவன் பண்டஞ் செய்யான் 65
நங்குடித் தலைமை யிங்கிவற் கியற்றி
நாமிவன் குடைக்கீழ்க் காமுறக் கலந்திவன்
வேண்டியது செய்யு மாண்பல திலமென
மண்முத லிழந்தோற்கு மறுமன மழித்துத்
தன்பதிப் புகுந்து தான்மணம் படுகெனக் 70
குறையுறு கிளவி முறைபல பயிற்றிச்
செயப்படு கருமஞ் செய்ந்நரொ டுசாஅய்
முயற்சி யுள்ளமொடு முந்தவற் போக்கி

பிரச்சோதனன் அந்தப்புரஞ் சென்று கூறல்

[தொகு]

அவைக்கள மெழுந்து குவைக்களம் புக்குக்
குலமகள் பயந்த குடிகெழு குமரர் 75
நிலமக ணயக்கு நீதிய ராகி
வெறுமை நீங்கினர் விச்சையி னமைந்தெனத்
திருநுத லாயத்துத் தேவியர் நடுவட்
பெற்ற நாளினும் பெரும்பூட் புதல்வரைக்
கற்ற நாள்வயிற் கலிசிறந் துரைஇ 80
மகிழ்ச்சிக் கிளவி மழையென விசைப்ப
முகிழ்த்தகை முறுவன் முனிவின்று பயிற்றிக்

உதயணன் சொல்லியனுப்பல்

[தொகு]

கடவர் வகுத்த கரும நாளாற்
கடவதை யாதலின் மடவர லாயத்து
நங்கை கேள்வியு நல்லவைப் படுக்கென 85
வந்துரைத் தனரால் வத்தவன் றமரென

அரசன் வாசவதத்தையின் யாழரங்கேற்றத்திற்கு ஆவன செய்தல்

[தொகு]

வெந்திறல் வேந்தனு நன்றென வருளி
வாயிற் கூத்துஞ் சேரிப் பாடலும்
கோயி னாடக்கஃ குழுக்களும் வருகென
யாழுங் குழலு மரிச்சிறு பறையும் 90
தாழ முழவுந் தண்ணுமைக் கருவியும்
இசைச்சுவை தரீஇ யெழுபவு மெறிபவும்
விசைத்தெறி பாண்டிலொடு வேண்டுவ பிறவும்
கருவி யமைந்த புரிவளை யாயமொடு
பல்லவை யிருந்த நல்லா சிரியர் 95
அந்தர வுலகத் தமரர் கோமான்
இந்திரன் மாணக ரிறைகொண் டாங்குப்
பொருவேன் முற்றத்துப் புரிவனர் புகுதரப்
பாடன் மகளிர் பல்கல னொலிப்ப
ஆடன் மகளி ராயமொடு கெழீஇ 100
வேல்வேந் திருந்த நூல்வேண் டவையத்துத்
துகிர்த்துலா மண்டபத தகிற்புகை கமழக்
கண்டங் குத்திய மண்டப வெழினியுட்

வாசவதத்தையின் யாழரங்கேற்றல்

[தொகு]

டாயுரை வியனகர்த் தமர்பா ராட்ட
ஆயஞ் சுற்ற வணியிழை புகுதந் 105
தொலிபெறு கீதத் தோதை போகிய
பலிகெழு நல்யாழ் பாங்குறத் தழீஇக்
கின்னா கீதத்துக் கேள்வி மாந்தர்
முன்னுற நின்று மூதறி செவிலிநும்
மகண்மா ணாக்கி வணங்கு நும்மென 110
அவைப்பரி சாரங் கடத்துளிப் போக்கி
ஐவகைக் கதியு மற்ற மின்றித்
தெய்வ நல்யாழ் திருந்திழை தைவர
மெய்பனிப் பதுபோன் மொய்யவை மருள
நாற்பெரும் பண்ணு மெழுவகைப் பாலையும் 115
மூவேழ் திறத்தொடு முற்றக் காட்டி
நலமிகு சிறப்பொடு நல்லவை புகழ
இயம்வெளிப் படுத்தபி னிசைவெளிப் படீஇய
எரிமலர்ச் செவ்வா யெயிறுவெளிப் படாமைத்
திருமலர்த் தாமரைத் தேன்முரன் றதுபோற் 120
பிறந்துழி யறியாப் பெற்றித் தாகிச்
சிறந்தியம் பின்குரற் றெளிந்தவ ணெழுவச்
சுருக்கியும் பெருக்கியும் வலித்து நெகிழ்த்தும்
குறுக்கியு நீட்டியு நிறுப்புழி நிறுத்தும்
மாத்திரை கடவா மரபிற் றாகிக் 125
கொண்ட தானங் கண்டத்துப் பகாமைப்
பனிவிசும் பியங்குநர் பாடோர்த்து நிற்பக்
கனிகொ ளின்னிசைக் கடவுள் வாழ்த்தித்
தேவ கீதமொடு தேசிகந் தொடர்ந்த
வேத வின்னிசை விளங்கிழை பாடத் 130

சபையோர் புகழ்தல்

[தொகு]

திருந்திழை மாதர்கொ றெய்வங் கொல்லென
இருந்தவர் தெருளா ரிசைபுகழ்ந் தேத்தி
நூலுஞ் செவியு நுண்ணிதி னுனித்தே
யாழும் பாடலு மற்ற மின்றி
விலக்கும் விடையும் விதியி னறிந்து 135
துளக்கில் கேள்வித் தூய்மையின் முற்றி
வத்தவ நாடன் வாய்மையிற் றருக்கும்
கொற்ற வீணையுங் கொடுங்குழை கொண்டனள்
இறைகெழு குமரரு மேனை விச்சைத்
துறைநெறி போகிய துணிவின ராயினர் 140
தேயாத் திருவ நீயுந் தேரின்
நிலங்கொடை முனியாய் கலங்கொடை கடவாய்
வேள்வியிற் றிரியாய் கேள்வியிற் பிரியாய்
இனையோய் தாணிழற் றங்கிய நாடே
வயிர வெல்படை வானவ ரிறைவன் 145
ஆயிரங் குஞ்சரத் தண்ணல் காக்கும்
மீமிசை யுலகினுந் தீதிகந் தன்றெனத்
தொல்லிசை யாளர் சொல்லெடுத் தேத்தப்

பிரச்சோதனன் செயல்

[தொகு]

புகழார் வெய்திய திகழ்முடிச் சென்னியன்
ஆசில் பாட லமிழ்துறழ் நல்யாழ்க் 150
கேள்வி நுனித்த கீத வித்தகத்
தாசா ரியரொ டரங்கியன் மகளிரை
ஏடுகோ ளாள ரெனையரென் றெண்ணிப்
பேரெழுத் தோலை பெறுமுறை நோக்கிக்
கட்டுடைக் கலனுங் கதிர்முத் தாரமும் 155
பட்டியற் கலிங்கமொடு பாசிழை நல்கி
இலைத்தொழிற் றடக்கைய ளெழுந்தீ கினியெனக்

வாசவதத்தை தந்தையை வணங்கல்

[தொகு]

கலைத்தொழி லவையங் கைதொழப் புக்காங்
கிருந்த விறைவன் றிருந்தடி குறுகிச்
செம்பொ னல்யாழ் சிலதிகைந் நீக்கி 160
அணங்குறை மெல்விரல் வணங்கினள் கூப்பி

பிரச்சோதனன் செயல்

[தொகு]

இறைஞ்சிய மாதரை யெடுத்தனன் றழீஇப்
பிதிர்சுணங் காகமொடு பெருந்தோ ணீவிக்
கதிர்பொற் பட்டமொடு கனங்குழை திருத்தி
ஒண்ணுதன் மாதரை யொருகை பற்றிப் 165
பொன்னிழை தாயுழைப் போகெனப் புகலலும்

இராசமாதேவி மகிழ்தல்

[தொகு]

தான்முன் கண்ட தவற்றின ளாதலிற்
சென்ற வாயிற் கொன்றல ளூடிப்
புலவியிற் கருகிய திருமுக மிறைமகட்
குவகையின் மகிழ்ந்த முறுவல ளாகிக் 170
கடைக்கட் டூதாற் காவலர் கடைஇச்
சுடர்க்குழை பயந்தோள் சொல்லா ணிற்ப

தாயர் மகிழ்ந்து கூறல்

[தொகு]

இன்சொன் மகளி ரெனைப்பல ருள்ளும்
நுந்தை நெஞ்ச நீயுறப் பெற்றாங்
குரக்களி றடக்கிய வோசைத் தாகி 175
வரத்தொடு வந்த வசைதீர் சிறப்பின்
வத்தவ குலத்துத் துப்பெனத் தோன்றிய
தகையொலி வீணையொ டவைதுறை போகி
உருவிற் கொத்த திருவினை யாகிக்
குடிவிளக் குறூஉங் கொடியே வாவென 180
மாத ராயத்து மகள்வயிற் கொளீஇத்
தாய ரெல்லாந் தழீஇயினர் முயங்கிச்
சுற்ற மாந்தர் தொக்கனர் புகல

பிரச்சோதனன் செயல்

[தொகு]

வத்தவ ரிறைவனை வருகெனக் கூஉய்ப்
பொற்கோட் டம்பலம் பொலிய வேறிக் 185
கற்றறி வாளர் சுற்றிய நடுவட்
டாமுயல் வேட்கையின் மாநிலத் துறையுநர்
மரமுதல் சாய மருந்துகொண் டாஅங்கு
நங்குடி வலித்தல் வேண்டி நம்பி
தன்குடி கெடுத்த தகவி லாளனேன் 190
என்மனம் புகல வேண்டி னிவனைத்தன்
மண்மிசை நிறுக்கு மந்திர மிருக்கென
மதிவ லாளர் விதிவகை யிதுவெனத்
தண்ணுஞ் சேனையுந் தகைக்கோ சம்பியும்
பண்டுகண் ணழிந்த பகையினை நீக்கிப் 195
பொன்னு நெல்லும் புரிவின் வழங்குகென்
றொன்றெனப் பயிற்றி யுருமிடித் தன்ன
வென்றி முரசம் வீதிதோ றெருக்கி
முன்யா னிவனை முருக்கலும் வேண்டினென்
பின்யா னிவனைப் பெருக்கலு முற்றனென் 200
எமர னாயி னிறைகொடுத் தகல்க
அமர னாயி னமைவொடு நிற்கென
அடல்வேற் றானை யாருணி யாசற்கு
ஞாலத் தின்னுயிர் வாழ்வோர் நாப்பட்
காலம் பார்க்குங் காலன் போல 205
வெல்போ ருதயணன் வெஃறுணை யாகப்
பல்கோ டியானைப் பாலகன் வருமெனக்
கணக்குத்துறை முற்றிய கடுஞ்சொ லோலை
அரக்குப்பொறி யொற்றி யாணையிற் போக்கி
எண்படைத் தலைவரு மிருபிறப் பாளரும் 210
எண்பதி னாயிர மிளம்பது வாய்களும்
ஏற்றினம் வரூஉ நாற்றங் கழுமிய
மதங்கவுட் பிறந்த கதந்திகழ் படாத்த
ஐந்நூ றியானையு மாயிரம் புரவியும்
எண்பது தேரு மிருவகைத் தொறுவும் 215
நன்மணி யைம்பா னருமதை யுள்ளுறுத்
திரங்குபொற் கிண்கிணி யரங்கிய லாயத்து
நாடக மகளிர் நாலெண் பதின்மரும்
கோடிய லூர்தியுங் கொண்டுவிசி யுறுத்துக்
கோடி விழுநிதி கொண்டகஞ் செறிக்கப் 220
பாடியல் பண்டியொடு படைசெலல் விதித்து
வளங்கெழு தாயத்து வழியடை யாகிய
இளங்கோ நம்பியு மிவனொடு செல்கென
மாண்மொழிக் குருஞி லாணைவைத் தகம்புக
நாள்கொண் டெழுவது நாளை யாமென 225
அமைச்சனுஞ் செவிலியு மமைந்த வகையால்
நாள்கொளற் கிருந்துழி நன்னகர் கேடபக்

பாகீரதியென்பவள் செயல்

[தொகு]

கழிந்த யாண்டுங் கயநீ ராட்டணி
ஒழிந்ததன் றண்ட முயர்கொடி மூதூர்க்
குருதி வெள்ளங் கூலம் பரப்பி 230
அழகுரன் மயங்கி வல்லற் றாக
மதவலி வேழ மைய லுறுத்த
கடவுள் யானெனக் கடவுட் காட்டிப்
பேரிசைக் கடவுட் பெருநகர்த் தோன்றிச்
சேரி யாயத்துச் செம்முதிர் பெண்டிரொடு 235
கட்டறி மகடூஉக் கடிமுறத் திட்ட
வட்ட நெல்லு மாண்பில பெரிதெனக்
குற்ற முண்டெனிற் கூறுமி னெமக்கெனக்
கருங்காற் கலிங்கமொடு காஅழ் கலக்கிப்
பிட்ட வாயள் பெரும்பா கீரதி 240
பொய்ப்பே யேறிப் பொள்ளென நக்கு
முலையிடைத் துளங்கு முத்துற ழாரமொடு
தகையெருத் துரிஞ்சுந் தமனியக் குழையள்
கொடும்பூண் மார்பிற் கூந்தல் பரப்பிப்
பிடிக்கை யன்ன பெருந்தோ ளோச்சி 245
இடிக்குரன் முரசின்மு னெழுந்தன ளாடி
விழாக்கோ ளாளரைக் குழாத்திடைத் தரீஇத்
திருநீ ராட்டணி மருவீ ராயிற்
பிணக்குறை படுத்துப் பிளிறுபு சீறிய
இன்றுஞ் சென்றியான் குஞ்சரம் புகுவலென் 250
றஞ்சி லோதி யணங்குவாய் கூறப்

பெரியவர் அரசனுக்கறிவித்தல்

[தொகு]

பன்றியெறி யுற்ற புண்கூர் ஞமலி
குன்றா வடிசிற் குழிசி காணினும்
வெரீஇ யன்ன வியப்பின ராகி
அலகை மூதூ ரான்றவ ரெல்லாம் 255
உலகந் திரியா வொழுக்கின ராதலிற்
காவன் மன்னற்குக் கதுமென வுரைத்தலிற்

சேனாதிபதி செயல்

[தொகு]

றேவர் சொல்லும தேத்தை யாகென
வெண்முகை யடுத்துப் பைந்தொடு படுத்து
மாத ரங்கையின் மங்கலத் தியற்றிய 260
வாகைக் கண்ணி வலத்திற் சூட்டித்
தானைச் சேரித் தலைப்பெருந் திருவன்
நாணீ ராட்டணி நாளையென் றறைதலும்

நகர் விழாக் கொள்ளல்

[தொகு]

விளையாட் டீரணி விற்றுங் கொள்ளும்
தொலைவின் மூதூர்த் தொன்றின மறந்துராய்த் 265
தோணியு மரமுந் துறைநா வாயும்
நீரியன் மாடமு நீந்தியற் புணையும்
சுண்ணமுஞ் சூட்டுஞ் சுவைநறுந் தேறலும்
செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும்
கண்ணார் பிடிகையுங் கட்டமை யூர்தியும் 270
பண்ணிரும் பிடியும் பண்ணுவனர் மறலிச்
செவ்வி பெறாஅ வைகல ராகி
வான்கிளர்ந் தன்ன வளநீ ராட்டணி
சேணிடை யுறைநருஞ் சென்று காண்புழிப்
புதவகத் துறைந்தோர் போம்பொழு தென்றென 275
உதயண குமரனை யோர்த்துறச் சொல்லி
நூலறி வாளர் நால்வரை விட்டபின்
உவாக்கடற் பரப்பி னொல்லென மயங்கி
விழாக்கொண் டன்றால் வியனகர் விரைந்தென்.

1 37 விழாக்கொண்டது முற்றிற்று.