பெருங்கதை/1 43 ஊர் தீயிட்டது

விக்கிமூலம் இலிருந்து
(1 43 ஊர் தீயிட்டது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

1 43 ஊர் தீயிட்டது

யூகி சொல்லியதை உதயணனுக்கு வயந்தகன் கூறல்[தொகு]

எண்ணமொ டிருந்தோன் கண்ணியது கருதி
யாத்திரைக் கமைந்தன பாற்பட வடக்கிப்
போகுபொரு ளுணர்ந்து பாகுசெயற் கெய்தி
நயந்தெரி நாட்டத்து வயந்தகன் கூறும்
பாகிய லுள்ளத்துப் படிமந் தாங்கிய 5
யூகி சூழ்ந்த வுரைப்பருஞ் சூழ்ச்சி
வாய்திறந் தின்றிது கோமகற் குரையெனக்
கூறின னருளிக் குறிப்பிற் கேண்மதி
செறுநர் சிறையகப் பட்டன னாயினும்
உறுவலி நாகத் தொற்றிடம் பார்த்தல் 10
அறைகடன் ஞாலத் திறைகட னாதலின்
நம்மை யெள்ளிய வெம்மை வேந்தன்
சூழ்ச்சி வெள்ளத் தாழ்ச்சி யெய்தி
ஒன்னா தோருந் துன்னின ராடும்
நெடுநீர் விழவிற் படைபிடித் தோரைக் 15
கடிமுறை கடிவ தல்ல தில்லென
இடுமணி யானை யெருத்த மேற்றி
அடன்முர சறைந்தமை யறிந்தன மாதலின்
உத்தரா பதத்து மொப்புமை யில்லாப்
பத்திரா பதியைப் பண்ணமைத் தியற்றித்
தான்மேற் கொண்ட தனமைய னாதலின்
நூன்மேற் சூழ்ந்த நுனிப்பில் வழாமைச்
செருவடு வேந்தனும் பெருநடுக் கெய்த்தஃ
தொகைகொண் மாடத் தகநகர் வரைப்பின்
நகைகொண் முறுவ னந்நாட் டாட்டியர் 25
புகையெரி பொத்திய புணர்ப்புவகை யுண்மையின்
ஊர்வயிற் கம்பலை யல்ல தொருவரும்
நீர்வயிற் கம்பலை நினைக்குந ரில்லை
இல்லை யாதலின் வெல்சமம் பெருக்கி
வேந்தற் கோடல் வியனாடு கெடுத்தல் 30
ஆங்கவன் மகளை யருஞ்சிறை வௌவுதல்
மூன்றனு ளொன்றே காய்ந்தவர் கடுந்தொழில்
தோன்றக் கூறிய மூன்றி னுள்ளும்
முன்னைய விரண்டு முடியா மற்றவன்
அரும்பெறன் மடமக ளமிழ்ந்துபடு தீஞ்சொல் 35
ஏசுவ தில்லா வெழில்படு காரிகை
வாசவ தத்தைக்கு வலத்த னாகிச்
செந்தீ வெம்புகை யிம்பர்த் தோன்றலும்
அந்தீங் கிளவியை யாண்மையிற் பற்றிக்
காற்பிடி தன்னொ டேற்றுக வேற்றலும் 40
வேற்படை யிளையர் நாற்பெருந் திசையும்
வாழ்க வுதயணன் வலிக்கநங் கேளெனப்
பாழினு முழையினுங் காழில் பொத்தினும்
ஒளித்த வெம்படை வெளிப்பட வேந்தி
மலைக்குந ருளரெனின் விலக்குந ராகித் 45
தொலைக்கு நம்படை துணிந்திது கருதுக
இமைத்தோர் காணா வியற்கைத் தாக
அமைக்கப் பட்ட வணிநடை மடப்பிடி
நண்ணா மன்ன னாடுதலை மணந்த
ஐந்நூற் றோடுத லாற்றா தாயினும் 50
முந்நூற் றெ.ழுபது முப்பது மோடி
வீழினும் வீழ்க வேதனை யில்லைக்
கூழினு முடையினுங் குறிப்பின ராகிய
நாட்டுப்புற மாக்களும் வேட்டுவத் தலைவரும்
குறும்பருங் குழீஇய குன்றுடைப் பெருநா 55
டறிந்தோர்க் காயினு மணுகுதற் கரிய
அரிய வாயினு முரியவை போல
இயற்றினன் பண்டே கவற்சி நீங்கி
இன்ன னென்று தன்னறி வுறீஇப்பின்
குற்றப் படினு மற்ற மோம்பிப் 60
போதத்தி னகன்று சாதத்தின் வ.ழிநின்
றடுகளிக் குரவைசே ரார்கலி யாளர்
நடுகற் படப்பை யிடுகற் சீறூர்
கண்கூட் டிருந்த வைம்பதிற் றிரட்டிப்
புல்பரந்து கிடந்த கல்லதர் கடந்தபின் 65
தமரன் மாக்களைத் தருக்கி னூறும்
அமரடு நோன்றா ணமருள ரவ்வயின்
இன்னவை பிறவுந் தன்மனத் தடக்கித்
தானவ ணொழிக மானவ னகரில்
இழுக்குடைத் தென்னு மெண்ணமுண் டாயினும் 70
வழுக்குடைத் ததனை வலித்த னீங்குக
யாவை யாயினும் யான்றுணி கருமம்
தீய தின்மை தெளிகவெம் பெருமகன்
யூகி யென்னு முரைபரந் தோடப்
புல்வா யினத்திற் புலிபுக் காங்குக் 75
கொல்வாள் வீசிக் கூற்றுத்தலை பனிப்ப
வெல்போர் வேந்தன் வீரரைச் சவட்டி
எய்தப் போதுவ லேத மாயினும்
ஐய மின்றி யான்றுணி கருமம்
செய்யா னாயின் வைய மிழக்கும் 80
மையல் யானை மன்னவன் றானென
இயைந்த தோழ னெண்ணிய கருமம்
வயந்தக குமரன் வத்தவற் குரைப்பத்

உதயணன் செயல்[தொகு]

தானும் யானுந் தீதில மாயின்
வானும் வணக்குவ மேனைய தென்னென 85
முறுவல் கொண்ட முகத்த னாகி
நறுநீர் விழவி னாளணி யகலம்
பூண்சேர் மார்வன் காண்பான் போலக்
கடைப்பிடி யுள்ளமொடு மடப்பிடி கடைஇக்
கோமக ளாடும் பூமலி பெருந்துறை 90
அகலா தணுகாது பகலோன் விண்முனிந்
திருநில மருங்கி னிழிதந் தாங்குப்
பெருநலந் திகழுந் திருநலக் கோலமொடு
செய்குறிக் கருமந் தெவ்வப் பட்டுழித்
தாக்குந ரசாஅய்ப்பொர நேர்க்குந ரிரிவுழி 95
இருவரு மவ்வழிப் பருவர றீரப்
பெருவலிக் கிளையிற்கூடுவது போல
விண்ணக மருங்கிற் கண்ணகன் றுராஅய்
மண்ணக மறிக்கு மதுகைத் தாகிப்
பாருடைப் பவ்வம் பருகுபு நிமிர்ந்த 100
நீருடைக் கொண்மூ நெகிழாக் காலொ
டெண்டிசைப் பக்கமு மெதிரெதிர் கலாஅய்க்
கண்டவர் நடுங்கக் கடுவளி தோன்றலிற்

யூகியின் செயல்[தொகு]

கனவிற் கண்ட கண்ணார் விழுப்பொருள்
நனவிற் பெற்ற நல்குர வன்போல் 105
உவந்த மனத்தின் விரைந்தெழுந் தியூகியும்
மறையத் திரிதரு மாந்தர்க் கெல்லாம்
அறியக் கூறிய குறியிற் றாகப்
பத்திரா பதத்துப் பகையமை போர்வை
உட்குவரு முரச முருமுறழ்ந் ததிரக் 110
கொட்டினன் கொட்டலுங் கொள்ளென வுராஅய்

யூகியின் வீரர் செயல்[தொகு]

எவ்வெத் தானத்துங் கவ்வை தோற்றி
உதயண குமரனும் யூகியும் வாழ்கெனப்
புதைவா ளுரீஇப் பூசல் விளைத்தலும்

கள்ளமங்கையர் தீயிடுதல்[தொகு]

மட்டணி மூதூர் மனைதொறு மரீஇய 115
கட்டணி கூந்தற் கள்ள மங்கையர்
அட்டிலு மறையும் விட்டெரி கொளுவலின்

தீப்பட்ட ஊரில் நிகழும் நிகழ்ச்சிகள்[தொகு]

எட்டெனக் கூறிய திசைதிசை தொறூஉம்
ஐந்தலை யுத்தி யரவுநா ணாக
மந்தர வில்லி னந்தணன் விட்ட 120
தீவா யம்பு திரிதரு நகரின்
ஓவா தெழுமடங் குட்குவரத் தோன்றி
அரும்புன லாடா தகவயி னொழிந்த
பெரும்பரி சாரத்துப் பெண்டி ரெல்லாம்
நறுநெய் தோய்ந்த நார்நூல் வெண்டுகிற் 125
செறிமென் கச்சை சேர்ந்த வல்குலர்
அசல மஞ்ஞையி னணிநிறந் தழீஇப்
பசலை பாய்ந்த திதலைத் தித்தி
அசைந்த வவ்வயி றடையத் தாழ்ந்த
கொடுங்காற் குண்டிகைக் கொட்ட மேய்ப்ப 130
அறாஅ தொழுகு மம்முலை யாரம்
பொறாஅ வாயினும் புடைத்த லானார்
ஆற்றல் வேந்த ன்றற நோக்கி
வேற்று வேந்தர் புகுந்தன ருளர்கொல்
கூற்ற வேழங் குணஞ்சிதைந் ததுகொலென் 135
றீற்றுப் பெண்டி ரிளமகத் தழீஇ
ஊற்றுநீ ரரும்பிய வுள்ளழி நோக்கினர்
காற்றெறி வாழையிற் கலங்கிமெய்ந் நடுங்கி
ஆற்றேம் யாமென் றலறின ரொருசார்
போதுகொண் டணியிற் பொறுக்க லாற்றாத் 140
தாதுகொண் டிருந்த தாழிருங் கூந்தலர்
கருங்கே முண்கண் கலக்கமொ டலமரப்
பெருஞ்சூற் பெண்டிர் பேரழ நோக்கி
வருவோர்க் கண்டு வணங்கின ரொருசார்
தவழும் புதல்வரை யொருகையாற் றழீஇப் 145
பவழஞ் சேர்ந்த பல்கா ழல்குலர்
அவிழ்ந்த பூந்துகி லங்கையி னசைஇ
நகைப்பூங் கோதையொடு நான்ற கூந்தற்கு
மிகைக்கை காணாது புகைத்தீ யெறிப்பப்
படைத்தோன் குற்ற மெடுத்துரைஇ யிறக்கேம் 150
அங்கித் தேவ னருளென வயன்மனைப்
பொங்குநீர்ப் பொய்கை புக்கன ரொருசார்
பறைந்திடை சோர்தரு பசலை வெண்ணரைக்
குறைந்த கூந்தலர் கோசிகம் போலப்
புள்ளி விதிர்த்த வுள்ளுறு மேனியர் 155
பைசொரிந் தன்ன பாலி றோன்முலை
நரைமூ தாட்டியர் நடுக்க மெய்திக்
காலிடு தளர்ச்சியர் கண்பிற ராகக்
கோலொடு தளர்ந்து கூட்டுந ரின்றி
ஆதி முற்றத்து வேதிகை முட்டிச் 160
சுழலு நெஞ்சமொடு துயர மெய்தி
அழலின் முற்ற மடைந்தன ரொருசார்
சீப்புள் ளுறுத்துத் திண்ணெழுப் போக்கிக்
காப்புள் ளுறுத்த கடிமதில் வாயிற்
கால்கடி யாளர் வேல்பிடித் தோடி 165
ஆணை யாணை யஞ்சன்மின் கரவொடு
பேணல் செல்லாது பெருந்தீப் படுத்த
நாணில் பெண்டிரை நாடுமின் விரைந்தென
ஆய்புகழ் வேந்த னரசத் தாணிக்
கோயில் காவல் கொண்டன ரொருசார் 170
எப்பான் மருங்கினு மப்பா லவரவர்
பெருந்துய ரெய்திக் கரிந்துகண் புதைப்ப
நறுநெய் பயந்த நன்னகர் முத்தீ
மறுமைக் கெண்ணிய மயலறு கிரிசை
அந்தணர் சேரியு மருந்தவர் பள்ளியும் 175
வெண்சுதை மாடமும் வேந்தன் கோயிலும்
தெய்வத் தானமொ டவ்வழி யொழியத்
தண்ணறுங் காழகி னுண்ணயிர் கூட்டி
அம்புகை தவழ்ந்த வரக்குவினை மாடமும்
வெம்புகை தவழ்ந்து வேந்துகண் புதைப்ப 180
வால்வளை மகளிர் மணிநிலத் தமைந்த
கால்வளர் சாலி யாய்பத வரிசிப்
பொன்செய் கிண்கிணிப் புதல்வ ராடும்
கம்பலை வெரீஇக் கவரல் செல்லா
அம்பலக் கொடுங்கா ழசைத்த யாப்பின் 185
கிடையும் பூளையுங் கிழியும் பஞ்சியும்
படையமைத் தியற்றிய மடையணிப் பள்ளியுட்
பிணிக்குரல் பயிற்றும் பேடையைக் காணா
தணிக்கட் புறவி னைம்பாற் சேவல்
எரிவளை புகையிடை யிறகுவிரித் தலற 190
மேலெழு பேடை மீண்டுவந் தாடக்
கீழெழு செந்தீக் கிளைபிரித் தழற்ற
மாமயிற் பெடையொடு மகளிர் நாப்பட்
டூவி மஞ்ஞை தோகைவிரித் தகவ
ஏற்றுரி முரசி னிறைவன் மூதூர்க் 195
காற்றுத் துணையாகக் கனலெரி கவரப்
படலணி வாயின் மடலணி வேயுள்
இடையற வில்லா விருக்கையிற் பொலிந்த
பன்னா றாயிரம் பாடிக் கொட்டிலும்
முந்நூ றாயிர முட்டிகைச் சேரியும் 200
ஐந்நூ றாயிரங் கம்மவா லயமும்
சேனை வேந்தன் சிறப்பினொ டிருந்த
தானைச் சேரியுந் தலைக்கொண் டோடிக்
கானத் தீயிற் கடுகுபு திசைப்ப
ஏனை மாடமு மெழுந்தன்றா லெரியென். 205

1 43 ஊர் தீயிட்டது முற்றிற்று.