உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/1 45 படை தலைக்கொண்டது

விக்கிமூலம் இலிருந்து
(1 45 படை தலைக்கொண்டது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

1 45 படைதலைக்கொண்டது

காஞ்சனமாலை செயல்

[தொகு]

பெருந்தகை யண்ணல் பிடிமிசை யேற்றித்
திருந்திழை யணிந்த பரந்தேந் தல்குல்
நீர்மைப் பல்காசு நிழலுமிழ்ந் திமைப்பப்
பார்வை முள்கிய பட்டுநிறம் பயப்பத்
தான மீக்கூரி மேனிவந் தோங்கி 5
அமிழ்துபெய் செப்பி னன்ன வெம்முலை
நுகர்பூங் காமத்து நுதிமுக முரிஞ்சிக்
கடாஅ யானைக் கண்ணக மறைத்த
படாஅத் தன்ன படிவத் தாகிய
வடகப் போர்வையை வனப்பொடு திருத்திக் 10
கடக முன்கைக் காஞ்சன மாலை
உரத்தகை யண்ணல் வரத்திற் பெற்ற
வழிவரு நல்லியாழ் வயந்தகற் கீத்துப்
பொற்படைப் புளகமிசைப் பொங்குஞ் சாமரை
நற்பிடி நடத்தொறு நடுங்குந் தோழியைப் 15
பொற்கொடி மருங்குல் புல்லுவன ளருளிப்

உதயணன் செயல்

[தொகு]

பவனத் தரச னுவனித் தெறிந்த
குந்தக் கடைமணி யுறுதலின் முரிந்த
வலப்பா லெயிற்றின் குற்றமு மலைத்துடன்
வலிந்துமேற் சென்ற கலிங்கத் தரசன் 20
குஞ்சர மருப்பிற் குறியிடப் பட்டுச்
செஞ்சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து
மார்பினது வனப்புந் தோளினது திரட்சியும்
நிறத்தது நீர்மையு நெடுமைய தளவும்
சிறைத்துயர் நீக்கற்குச் செய்த வேடமும் 25
குறிக்கொளற் கமைந்தவை பிறவுந் திறப்பட
வாகிய லமைச்சன் யூகிக் குள்ளவை
சாங்கிய முதுமக டான்றெரிந் துணர
அறிவின் முன்னே செறியச் செய்த
பொறியுடை யோலை பொருக்கென வீழ்த்து 30

சாங்கியத்தாய் வருதலும் வயந்தகன் செயலும்

[தொகு]

மடத்தகை பொருந்திய வயத்தகை மாதரை
நடுக்க மோம்பி விடுக்குநள் போலச்
சார்ந்தன ளாகியவட் கோம்படைக் குறிப்பொடு
நண்ணிய பொழுதிடைக் கண்ணிற் காட்ட
வயந்தக குமரன் மறைத்து நீட்டலும் 35
நயந்த நெஞ்சமொடு நன்கன மடக்கிச்
சேற லாற்றாண் மாறினண் மறைந்தபின்

உதயணன் செயல்

[தொகு]

அங்கண் ஞாலத் தன்புடை யோரைப்
புன்க ணீக்குதல் புகழுடைத் தாதலின்
உங்க ளன்பின் யானுறு நோயினைப் 40
பைங்கண் வேழத்துப் பகடன் றீர்ந்திவள்
செழுங்கடை மழைக்கண் செருக்கயல் புரைய
உண்ணெகிழ்ந்து கலிழ்ந்த வுறாஅ நோக்கிற்
கண்ணெகிழ் கடுநோய் கைவரு காலை
ஈர்வது போலு மிருளுடை யாமத்துத் 45
தீர்திற மறிநேன் றேர்வுழித் தீர்திறம்
வந்துகை கூடிற் றாகலி னின்றிது
நீக்கனின் கடனென மாக்கே ழிரும்பிடி
அந்தோற் செவியினுண் மந்திர மாக
வழிமொழி கூறிய வத்தவர் பெருமகன் 50
கழிபோக் கெண்ணிக் கடவா நின்றோன்
கம்பலைக் கவற்சியிற் கடுங்கொளைக் கொளீஇ
அம்பொடு பிடித்த வில்ல னாகி
ஒராஅ வுரிமைக் கொருபுடை வரூஉம்
வராக னென்னும் வயவனைக் கண்டே 55
வந்தனை யிப்பா லஞ்ச லார்ப்போர்
கள்வ ராதலு முண்டென் கையகத்
தோள்வரிச் சிலையு முடுவார் பகழியும்
தந்தனை யாகியென் றகைவா ளேந்தி
ஊறுண் டெனினு முழையிற் பிரியா 60
தேறிவ் விரும்பிடி யென்னோ டென்றுதன்
நெஞ்ச நெகிழா வஞ்சமனத் தடக்கி
அன்பின்று கிளந்த வருளில் பொருண்மொழித்
தோட்டியின் வணக்கம் வேட்டவன் விரும்பிக்
கொடுஞ்சிலை கொடுத்துக் கூப்பிய கையன் 65
கடுஞ்செல லிரும்பிடிக் கான்முதற் பொருந்தி
ஏற்றம் விரும்பலு மிளம்பிடி யெடுப்பி
ஆற்றன் மன்னன் காற்றெனக் கடாவ
விசையின் வீழ்ந்து வெருளி யாற்றான்
ஆய்பெருங் கடிநகர் வாயிலு நோக்கான் 70
கோமக னுள்வழிக் குறுகலுங் குறுகான்
ஓவிய ருட்கு முருவியைத் தழீஇப்
போயினன் வத்தவன் புறக்கொடுத் தொய்யெனக்

பிரச்சோதனனுடைய வீரர் செயல்

[தொகு]

காவ லாளர் கலக்க மெய்தி
மண்ணக மழித்து மலைத்துச் சிறைகொண்ட 75
நண்ணா மன்ன னாட்ட மோராம்
பண்ணமை பிடிமிசைப் பையர வல்குலை
ஏற்றல் வேண்டுமென் றிரந்தேற் றினமாற்
கூற்ற வாணையெங் கொற்றவன் றலைத்தாள்
என்சொலிச் சேறுமென் றெண்ணுபு நாணினர் 80
வெஞ்செலற் பகழியும் வில்லுந் தழீஇத்
தஞ்சினம் பெருகத் தாக்குநர்ப் பெறாஅர்
பொங்குபுகழ் வேந்தன் வென்றி யேத்தி
விண்ணக மேறி னல்லது விரிநீர்
மண்ணக வரைப்பினெம் மண்ணலைப் பிழைத்தோர்க் 85
கின்னுயிர்க் கேம மாகுத லரிதெனப்
பின்னிலை முனியார் பிடிவழிப் படரக்

உதயணனுடைய வீரர் செயல்

[தொகு]

கரைவேட் டுலாஅங் கருங்கட லழுவத்
திரைவேட் டுலாஅ மினச்சுற வினத்தின்
வத்தவ நாட்டு வித்தக வீரரும் 90
மலைக்கு மாந்தரைத் தலைக்கொண் டோடி
ஐந்தலை நாகத் தழலுறு கண்ணினர்
பைந்தலை துமித்துச் செங்குடர் சிதறிப்
பிடித்த வாளர் மடித்த வாயர்
திருவமர் மூதூர்த் தெருவுங் கோணமும் 95
ஒருவழி யொழியா துயிர்நடுக் குறீஇத்
திரிதர்வர் மாதோ திருநக ரகத்தென்.

1 45 படைதலைக் கொண்டது முற்றிற்று.