உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/1 46 உழைச்சன விலாவணை

விக்கிமூலம் இலிருந்து
(1 46 உழைச்சன விலாவனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

1 46 உழைச்சன விலாவணை

திருநக ரகவயிற் றிறன்மீக் கூரி
ஒருதுணை வயவ ருள்வழித் திரிதர
ஒடிவி றோற்றத் துதயண னூரும்

போர் நிகழ்ச்சி

[தொகு]

பிடிவழிப் படரும் பேணா மள்ளரை
அதிரத் தாக்குதற் கமைக்கப் பட்ட 5
பதிநிலந் தோறும் பதிந்துமுன் னிருந்த
ஐந்நூற் றைம்பத் தைவ ராடவர்
செந்நூற் பத்திச் சேடகக் கையர்
மன்னிய மாதிர மறுவின்று மயங்கி
மின்னுமிழ்ந் ததுபோல் வீசிய வாளினர் 10
கரண நுனித்த வரணக் காப்பினர்
பின்சென் மாந்தரை முன்சென்று விலங்கி
அரதன நாகரிற் சொரிதரு வெகுளியர்
ஏற்றோர்த் தாக்கிக் கூற்றுறை யுலகினுள்
உறைகுவி ராயிற் குறுகுமின் விரைந்தெனச் 15
சிறையழி புனலிற் சென்றுமே னெருங்கி
வேலுங் கணையமும் வீழினு மிமையார்
வீரியத் தறுகணர் வீக்கிய கச்சையர்
ஆர்வ லாள ரார்த்தன ரெறிய
ஓங்குமடற் பெண்ணைத் தீங்குலைத் தொடுத்த 20
விளைவுறு தீங்கனி வீழ்ச்சி யேய்ப்பத்
தளையவிழ் தாமமொடு தலைபல புரளவும்
வேகப் புள்ளின் வெவ்விசைக் குலந்த
நாகப் பிறழ்ச்சியிற் றோண்முத றுணியவும்
அஞ்செஞ் சாந்த மெழுதிய வகலம் 25
ஒண்செங் குருதிப் பைந்தளி பரப்பவும்
குசைத்தொழிற் கூத்தன் விசைத்துநனி விட்ட
பொங்குபொறித் தாரையிற் றங்கல்செல் லாது
குருதிச் செம்புன றவிரா தெக்கவும்
மிகைசெலற் கெழுந்த வேக வெவ்வழல் 30
அகவயிற் சுடுதலி னவிந்த வாற்றலர்
நிலத்தொடு நேரா நெஞ்சினர் போலப்
புலக்கமழ் புண்ணர் விண்ணிடை நோக்கிக்
கொலைப்பெருங் கூர்வாள் கோடுற வழுத்தலிற்
பொறிப்படு வேங்கையிற் குறிப்பிலர் குரங்கவும் 35
மத்தகத் திழிதரு நெய்த்தோர்ப் பெரும்புனல்
மொய்த்துமுகம் புதைதலின் முன்னடி காணார்
மடித்த செவ்வா யழுத்தக் கவ்விப்
பிடித்த வாளொடும் பிறழ்ந்தனர் கவிழவும்
கையொடு துமித்த வைவாள் வாய்மிதித் 40
தற்ற வடியினர் செற்றத்திற் கழுமிக்
கற்ற கரண மற்ற வாக
உரத்தகை மழுங்கி யுள்ளடி யின்றி
மரக்காற் கூத்தரின் மறிந்தனர் விழவும்
மடத்தகை மகளிர் மருங்குல் கடிந்த 45
முலைப்பூ ணழுத்திய மொய்சாந் தகலம்
வாண்முக மழுத்தலின் வயவுநடை சுருங்கிச்
செந்நிறக் குருதியிற் பைந்நிணங் கெழீஇச்
செயிர்த்த நோக்கினர் செங்க ணாடவர்
வியர்த்த நுதலினர் வீழ்ந்தன ரவியவும் 50
சுடரும் வாளினர் சோர்நிண மிழுக்கி
அடர்பூ ணகலத் தரும்படை யுற்றுக்
குடர்க டாக்கக் குழிப்படு களிற்றிற்
படர்கூ ரெவ்வமொடு பதைத்தனர் பனிப்பவும்
தலையுந் தடக்கையுந் தாளு முடம்பும் 55
கொலையமை வில்லுங் கூர்வாய்ச் சுரிகையும்
வேலு மீட்டியுங் கோலுங் குந்தமும்
சேடக வட்டமுஞ் செந்நூற் பாரமும்
தண்டும் வாளுந் தளையிடு பாசமும்
பொங்குமயிர்க் கிடுகும் புளகத் தண்டையும் 60
அரக்குவினைப் பலகையு நிரைத்தவெண் குடையும்
கூந்தற் பிச்சமுங் கோணா வட்டமும்
வாங்குகைத் தறுகண் வாரணப் பிளவும்
பரவைச் செந்திரை விரவுபு முடுகி
அன்ன பிறவு முன்மு னுருட்டிக் 65
கைந்நவி லாளர் காடெறிந் துழுத
செந்நில மருங்கிற் செஞ்சால் சிதைய
மரஞ்சுமந் திழிதருங் கடும்புனல் கடுப்பக்
குருதிச் செம்புனல் போர்க்களம் புதைப்ப
அடங்காத் தானை யவந்திய ரிறைவற் 70
காருயி ரன்ன வரும்பெறன் மடமகள்
வால்வளைப் பணைத்தோள் வாசவ தத்தையை
வலிதிற் கொண்ட வத்தவ ரிறைவனை
நலிதற் கெழுந்த நண்ணா விளையரைக்
கடல்விலக் காழியிற் கலக்க மின்றி 75
அடல்விலக் காள ரார்த்தன ரடர்ப்பவும்

யூகியின் செயல்

[தொகு]

உயிரொன் றாகிய செயிர்தீர் காதற்
றுணைநலத் தோழன் றுயர மறுத்தற்
கிணைமலர்த் தடங்க ணிமையகத் தொடுங்கிய
காட்சியிற் கனையும் வேட்கைய னாகி 80
விம்முறு விழுநகர் வீதியிற் கொண்ட
வெம்முறு படிவநீக்கி யூகி
பிணம்படு பெருங்காட்டுப் பேயு முட்கும்
அணங்கருந் தானத் தஞ்சுதக விரீஇத்
தாழி படுத்துத் தமரையிந் தெளியான் 85
பூழி படுத்த சாதனை யமைவிற்
கற்படை போழினுங் கதுவாய் போகா
தெற்புடம் பறுக்கு மியற்கைத் தாகிக்
கொற்புனைந் தியற்றிய கொலையமை கூர்வாள்
வாய்வயிற் றெய்வம் வணங்குபு கொண்டு 90
தீவயி றார்த்திய திறலோன் போலநின்
காய்வுறு கடும்பசி களைகுவெ னின்றெனைக்
காத்த லோம்பென வாற்றுளி கூறிப்
பத்தி குயின்ற பல்வினைக் கம்மத்துச்
சித்திரச் சேடகஞ்செறியப் பற்றி 95
உற்றோ னுற்ற வுறுகண் டீர்க்கெனக்
கற்றோய் கலிங்கங் கட்டிய கச்சையன்
ஊழி யிறுதி யுட்குவரத் தோன்றி
வாழுயிர் பருகும் வன்கட் செய்தொழிற்
கூற்றம் போல வேற்றவர் முருக்கிக் 100
கடிகமழ் நறுந்தார்க் காவலன் மகளைப்
பிடிமிசைக் கொண்டவன் பெயரு நேரத்து
முடிமுத லண்ணலை முந்தினன் குறுகித்
தொடிமுதற் றிணிதோ டோன்ற வேர்ச்சி
வலமுறை வந்து பலமுறை பழிச்சி 105
நும்பொருட் டாக நெடுந்தகை யெய்திய
வெம்பெருந் துயரம் விடுத்தனை யாகிக்
காட்டகத் தசையாது கடுகுபு போகி
நாட்டகம் புகுக நண்பிடை யிட்ட
இரும்பிடி நினக்கிது பெருங்கடன் மற்றெனப் 110
பிடியோம் படுத்துப் பெருமை யெய்திக்
குடியோம் பியற்கையெங் கோமக னெழுகென
வரத்தொடு புணர்ந்த வாரணக் காவற்
றிறத்தொடு கொடுத்துச் செய்பொருள் கூறிப்
புறக்கொடுத் தொழியும் போழ்திற் றிறப்பட 115

உதயணன் செயல்

[தொகு]

ஒருநாட்டுப் பிறந்த வார்வ மன்றியும்
கருமக் கிடக்கையுங் கலங்காச் சூழ்ச்சியும்
மறைபுறப் படாமையு மறையுண் ணாமையும்
வாசவ தத்தைக்கு வலித்துணை யாய
தாய்மையுந் தவமும் வாய்மையு நோக்கி 120
விடுதற் கருமை முடியக் கூறி
வடிவும் வண்ணமும் படிவமும் பிறவும்
அருந்தவ மகளைத் திருந்து மொழித் தோழன்
உணர வெழுதிய வோலையும் வாங்கிப்
புணர வவள்வயிற்போக கொண்டென 125
ஊகந்த ராயற் காக நீட்டித்

உதயணன் மகிழ்ந்து செல்லுதல்

[தொகு]

தமரது வென்றியுந் தருக்கு நிலைமையும்
உரிய தோழன் சூழ்ச்சிய தமைதியும்
எய்திய வின்பமுங் கையிகந்து பெருக
வையக வரைப்பின் வத்தவ ரிறைவற் 130
கெவ்வந் தீர்க்கென விமையோ ரியற்றிய
தெய்வத் தன்ன திண்பிடி கடைஇ
மன்னிய தோற்றமொடு வடகீழ்ப் பெருந்திசை

வராகன் செயல்

[தொகு]

முன்னிய பொழுதின் முன்னாங் கூறிய
வணங்குசிலை கொடுத்த வலிகெழு வராகன் 135
இரும்பிடி கடாவல னிவனென வெண்ணி
அரும்படை யாள ராருயி ரோம்பி
நயந்துகை விடாஅன் பின்செல் வோனை
எறிபடைத் தானை யேயர் பெருமகன்
உறுபடை யில்லா வொருதிசை காட்டி 140
ஆற்றலும் வென்றியு மறிவு மூன்றும்
கூற்றுத்திறை கொடுக்குங் கொற்றத் தானை
அவந்தியர் பெருமக னடிமுதல் குறுகிப்
பயந்துதான் வளர்த்த பைந்தொடிப் பாவையைச்
சிறையிவ னென்னுஞ் சிந்தையி னீக்கிக் 145
குறையுடை யுள்ளமொடு கொள்கெனத் தந்துதன்
காதலின் விடுப்பப் போகுதல் வலித்தனென்
வணக்க மின்றியான் செய்தனன் றனக்கெனக்
கூறினை சென்மெனத் தேறக் காட்டிப்
படிறிடை மிடைந்த பணிகோ ளீயா 150
ஆன்பாற் செந்தேத் தணியுறு கிளவி
அடுதிற லாற்றா லறியக் கூறப்
பிடிவழிப் படர்ந்து பெயர்ந்தவ னிற்பத்

வாசவதத்தை வருந்தல்

[தொகு]

தொடியுடைத் தடக்கையிற் றொழுதன ளிறைஞ்சி
மீட்டவற் போக்கு மாற்றங் கேட்டே 155
மணிமுதற் கொளீஇய மாண்பொற் சந்தின்
எரிமணி யிமைக்கு மிலங்குபொற் கோணத்துக்
கதிர்நகைக் கோவை கைவினைப் பொலிந்த
மத்தகப் புல்லக நக்குபு கிடந்த
திலகத் திருநுதல் வியர்பொடித் திழியக் 160
கலக்குறு சின்னீர்க் கருங்கயல் போல
நிலைக்கொளல் செல்லா நீர்சுமந் தளைஇப்
பிறழ்ச்சியொ டுலாவும் பெருமதர் மழைக்கண்
அச்ச நோக்கி னச்செயி றணிந்த
நாகப் பிள்ளை யங்கட் பிறந்த 165
ஆவி போல வைதுவெய் துயிராப்
பருவர லுறாஅப் பையு ணெஞ்சினள்
கண்டிரள் வேய்த்தோட் காஞ்சன மாலையைக்
கொண்டிழி கென்னுங் குறிப்பினள் போலச்
செவ்வி யின்றிச் சேயிழை புலம்ப 170

காஞ்சனை உதயணனை வினவுதல்

[தொகு]

எள்ளியது தீர வுள்ளியது முடித்த
உலவாக் கேள்வி யுதயண குமரனைத்
தொகுவிரல் கூப்பித் தொழுவன ளாகித்
தேம்பொதி செவ்வாய்க் காஞ்சனை யுரைக்கும்
பைந்தளிர் பொதுளிய பனிமலர்க் காவிற் 175
செந்தளிர்ப் பிண்டிச் சினைதொறுந் தொடுத்த
பின்னுறு பொன்ஞாண் பெருந்தொடர் கோத்த
பண்ணுறு பல்வினைப் பவழத் திண்மணை
ஊக்கமை யூசல் வேடகையின் விரும்பினும்
திருநலத் தோழியர் சிறுபுறங் கவைஇப் 180
பரவை யல்குற் பல்காசு புரளக்
குரவை யாயங் கூடித் தூங்கினும்
தன்வரைத் தல்லா விம்முறு விழுமமொடு
நோய்கூர்ந் தழுயுமெங் கோமக ணடுங்க
எறிவளி புரையு மிரும்பிடி கடைஇப் 185
பின்வழிப் படருமெம் பெரும்படை பேணாய்
என்வலித் தனையோ விறைவ நீயென

உதயணன் தேற்றல்

[தொகு]

நடுக்கம் வேண்டா நங்கையு நீயும்
அடுத்த காவல னிவளொடு மமர்ந்து
விடுத்தமை யுணரா வீரிய விளையர் 190
தருக்கொடு வந்து செருச்செய றுணிந்தனர்
பணிவகை யின்றிப் பண்டு மின்னதை
அணியிழை மடவோய் துணிகுவெ னாயின்
அரியவு முளவோ வஞ்ச லோம்பெனத்

காஞ்சனமாலை வாசவதத்தையைத் தேற்றல்

[தொகு]

தெரிவன்னஃ கூறிய தெளிமொழி கேட்டே 195
அன்ன தாகிய வருளுண் டாமெனின்
அஞ்சொற் பேதா யதுவிது வாமெனப்
பின்னிருங் கூந்தலொடு பிறழ்கலந் திருத்திக்
கலக்க நீங்கெனக் காஞ்சனை தெருட்டி
நலத்தகை மாதரு நனிநடுக் கொழிய 200
வலத்தினும் வலியினும் வத்தவன் கடாவத்

கொட்டந் தாங்கிய பணிப்பெண்கள் வருந்தல்

[தொகு]

திருமா தேவி பெருநகர் வரைப்பினும்
செருமாண் வென்றிச் செல்வன் பக்கமும்
மையார் கண்ணியை யொய்யா னாகிக்
கையிகந் தன்னாற் காவலன் மகனெனக் 205
காற்றினு மெரியினு மேற்ற வார்ப்பினும்
நாற்றிசை மருங்கினு நண்ணல் செல்லார்
பகலிட மருங்கிற் பருதியைக் கெடுத்த
அகலிடம் போல வச்ச மெய்திப்
படைமலர்த் தடங்கண் பனிசுமந்து வீழ 210
இடைமுலைக் கிடந்த வேக வல்லி
முற்றுறு கழங்கொடு முதலகடு பொருந்திப்
பற்றிடம் பெறாது பாம்பெனப் பதைப்ப
வெருவுறு மஞ்ஞையிற் றெருமந் திகலிப்
பழிப்பில் கம்மியன் பசும்பொனிற் புனைந்த 215
கொடிப்பல விரீஇய கொழுந்துபடு கோலத்துக்
கொட்டங் கொண்டோர் கட்டழ லுயிரா
விட்டகன் றனையோ வேந்தனொ டின்றெமை
மட்டுவார் கோதாய் மறந்தென மாழ்கவும்

அடைப்பை தாங்கியவர் வருந்தல்

[தொகு]

சிறுபுறங் கவைஇச் சீப்பின் வாரிக் 220
குறுநெறிக் கொண்ட கூழைக் கூந்தலுள்
நறுமலர்க் கோதை நான்றுவந் தசைஇ
வடுப்போழ்ந் தன்ன வாளரி நெடுங்கண்
குமிழ்த்தெழு வெம்பனி கோங்கரும் பேய்ப்ப
முகிழ்த்தன் முன்னிய முலைமுதன் முற்றத்து 225
வரித்த சாந்தின் வண்ணஞ் சிதைப்பச்
செறிதொடர் கொளீஇய சித்திரக் கம்மத்துப்
பொறியமை புடைசெவிப் போழ்வாய் மணிக்கண்
அருங்கய லடைப்பை யங்கையி னேந்திப்
பெருங்கட் பேதைய ரிருந்துய ரெய்தவும் 230

கவரியேந்தியவர் வருந்தல்

[தொகு]

மறுவகத் தடக்கிய மதியம் போலச்
சிறுமுகச் சிகழிகை புடைமுதல் புதைஇய
மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின் விளங்கவதன்
ஊர்கோ ளேய்ப்பச் சூழ்புடன் வளைஇய
செம்பொற் பட்டம் பின்றலைக் கொளீஇச் 235
சில்லென கோலத்துச் சிறுகொடி மருங்கிற்
றனிமுத் தணிந்த தண்சாந் தாகத்துப்
பனிமுத் தாலி படைக்கண் கால
வெள்ளிப் பேழை யுள்ளகத் தடக்கி
மணியினும் பொன்னினு மருப்பினும் வல்லவர் 240
அணிபெறப் புனைந்த வமர்பெறு காடசித்
தின்மை செறிவில் சேடக மகளிர்
தன்மை கடுக்குந் தானைக் கச்சையர்
வம்புநெருக் குற்ற பொங்கிள முலையர்
குவளைக் கோதை கொண்ட கூந்தலர் 245
தவளைக் கிண்கிணி ததும்புசீ றடியர்
விளக்குறு மணிக்கை முகட்டுமுதல் வளைத்த
பொங்குமயிர்க் கவரிப் பைந்தொடி மகளிர்
எரியுறு மெழிகி னுள்ளஞ் சோரப்
பரிவுறு நெஞ்சினர் பையாந் தேங்கவும் 250

பணிசெய்யும் கூனர் வருந்தல்

[தொகு]

கண்மிசை மருங்கின் மின்மிளிர்ந் ததுபோற்
றிடர்சே ராகத்துச் சுடர்மணி பிறழ
முத்துற ழாலி தத்துறு கண்ணொடு
பனிப்புறு கிளவியிற் பக்க நோக்கி
மங்கலச் செப்பின் மாண வேந்திய 255
குங்குமங் கொண்ட கூன்வழுக் குறவும்

பணிசெய்யும் குறளர் வருந்தல்

[தொகு]

அருங்கலந் துதைஇப் பெருங்கல மெல்லாம்
பேணி யணிந்த நாணுக் கோலத்துப்
பையர வல்குற் பவழப் பல்காசு
கைபுனை கலிங்கத் தைதுகலந் தொன்றி 260
நீலத் தெண்ணீர் நீந்து மாமையிற்
கோலக் குறுக்கைவாள் கூட்டுட் கழீஇப்
பாலிகை பற்றிய குறள்வழிப் படரவும்

தோழியர் புலம்பல்

[தொகு]

மணிகிடந் திமைக்கு மாட மாணகர்
அணிகிடந் திமைக்கு மகன்பெருங் கோயிலுட் 265
காப்புற வகுத்த கன்னியங் கடிமனை
யாப்புற வகுத்த போர்ப்பெருங் கோணத்துக்
கழறுகா லமைத்துக் கண்ணகன் பரப்பின்
நிழறரு படுகா னீரதிற் புனைந்த
கற்பிறங் கடுக்கத்து நற்குறி யாவையும் 270
படுகற் சுரமும் பாறையும் படுவும்
நடுக லடுக்கலு நறும்பூஞ் சாரலும்
தேனுடை வரையுங் கானகக் குறும்பும்
அருவி யறையு முருவ வேனலும்
குழியுங் குவடும் வழிநீ ரசும்பும் 275
வள்ளியும் வகுத்துஞ் சுள்ளியுஞ் சூரலும்
வழைசேர் வாழையுங் கழைசேர் கானமும்
நாகமு நறையு மூகமு முழுவையும்
கனமா னேறுங் கவரியுங் கரடியும்
மடமான் பிணையு மஞ்ஞையு மகன்றிலும் 280
விடமா நாகமும் வேக யானையும்
கழனியும் பொய்கையும் பழனப் படப்பையும்
தெரிமலர்க் காவு முருவின வாக
அமைக்கப் பட்ட செயற்கருஞ் செல்வத்து
மைதவழ் சென்னிக் கைசெய் குன்றொடு 285
நால்வகை நிலனும் பால்வகுத் தியற்றி
அறவை யல்லது பிறபுகப் பெறாஅ
வளமரந் துறுமிய விளமரக் காவினுட்
கொண்ட கோலமொடு குரவை பிணைஇ
வண்ட லாடுந் தண்டாக் காதல் 290
எம்மையு முள்ளா திகந்தனை யோவென
மம்மர் கொண்ட மனத்த ராகித்
தோழிய ரெல்லாம் பூழியுட் புரளவும்

செவிலித்தாயர் புலம்பல்

[தொகு]

அம்பொன் வள்ளத் தமிழ்துபொதி யடிசில்
கொம்பி னொல்கிக் குறிப்பிற் கொள்ளாய் 295
செம்பொற் கிண்கிணி சிலம்பொ டார்ப்ப
மணிநில மருங்கிற் பந்தொடு மறலிநின்
அணிவளைப் பணைத்தோ ளசைய வாற்றாய்
இன்றீங் கிளவி யொன்றிரண்டு மிழற்றிப்
பண்சுவைத் தொழிந்து பாலி றோன்முலை 300
ஒண்முக விரலிற் கண்முக ஞெமிடி
மாயார் நெடுங்கண் மாலை யாமத்துப்
பையாந்து பொருந்திப் பள்ளி கொள்வோய்
காதற் காளை கானத் தொய்ப்ப்பஃ
போதற் கண்ணே புரிந்தனை யோவெனச் 305
செவிலித் தாயர் வலித் தழவும்

காஞ்சுகி முதியர் வருந்தல்

[தொகு]

கற்ற மந்திரி காட்டவுங் காணாது
பெட்டாங் கொழுகும் பெருமகன் போலவும்
முறைமையிற் றேயு நிறைமதி நீர்மை
நண்புகொ ளொழுக்கி னஞ்சுபொதி தீஞ்சொல் 310
வளைஇய மடந்தையைத் தெளிவன னொழுகி
வெறுக்கை யின்மையிற் றுறக்கப் பட்ட
இளையவன் போலவுங் கிளைஞரும் பிறரும்
கண்டவ ரெல்லாங் கையெறிந்து நகூஉம்
கம்பலைப் பெரும்பழி யெய்திய காவலன் 315
வம்ப மன்னனை வழிதெளிந் தனனென
வெண்ணரை சூழ்ந்த தண்ணுமைப் பறைதலைக்
காஞ்சுகி முதியர் சாய்ஞ்சஞ ரெய்தவும்

சாங்கியத்தாயின் செயல்

[தொகு]

பொன்னணிப் பாவை போகிய புணர்ப்பின்று
தன்னி னாகிய தன்மைத் தென்று 320
தண்டார் வேந்தன் கொண்ட காலை
விடுத்தற் கரிதென நடுக்க மெய்தி
ஓங்கிய வொழுக்கி னுயர்ந்தோர்ப் பேணிச்
சாங்கியந் தாங்கிய சால்பணி படிமை
வருமதி நுனித்த பெருமூ தாட்டி 325
வேக வேந்தன் வெஞ்சம முருக்கிப்
போக வேந்தனைப் போகப் பண்ணிப்
பொருபடை பரப்பி யுருமறைந் துழிதரும்
யூகி யுள்வழி யொற்றுந ளெய்தி
ஆகுபொரு ளோலையி னிருவரு மறிவுற்றுக் 330
கண்கூ டெய்துங் காலங் கூறி
மண்கூட் டாளன் மனைவயின் மறையவும்
இன்னோர் பிறரு மம்மருண் மயங்கிய
உழைக்கல மகளிரு மிழைப்பிரிந் தரற்றவும்
பேராறு மடுத்த பெருங்கடல் போல 335
ஓசை யறியாப் பூசலும் புலம்பும்
ஆரக மருங்கிற் கூரெரி கொளுவ
எதிர்த்த மாந்த ரின்னுயி ரிறுதியும்
கதிர்த்த முறுவற் கன்னியைத் தழீஇ
வத்தவ னகற்சியு மவ்வழிச் செலவும் 340
வித்தக குமரர் வீழ்ச்சியும் பிறவும்
ஒத்தவை யுணர்ந்து முற்றிறைக் குரையார்
பொய்ப்பொரு ளாயினு மெய்ப்பொருட் கண்ணும்
உய்வகை யில்லை வெய்யோன் மாட்டென்
றறிந்தோ ரறிந்தோர் செறிந்தன ராகி 345
வெய்துறு விழுமமொடு விம்மங் கூரச்
செய்வதை யறியார் திரிவராற் பலரென்.

1 46 உழைச்சன விலாவணை முற்றிற்று.