பெருங்கதை/1 54 வயந்தகன் அகன்றது
- பாடல் மூலம்
1 54 வயந்தகனகன்றது
அந்தி வருதல்
[தொகு]கரந்தன ரொடுங்கிய கடும்பகல் கழிந்தபிற்
பரந்த வானம் பசலை யெய்த
அழலுமிழ் கதிரோ னத்தஞ் சேர
நிழலுமிழ் செல்வ னிலாவிரித் திமைப்ப
வான்றோ யிஞ்சி வளநகர் வரைப்பிற் 5
றேன்றோய் கோதைத் திருநிலை மகளிர்
வெள்ளி விளக்கத் துள்ளிழு துறீஇப்
பள்ளி மாடத்துப் பரூஉச்சுடர் கொளீஇக்
காடி கலந்த கோடிக் கலிங்கம்
கழும வூட்டுங் காழகி ன்றும்புகை 10
முழுநிலா மாடத்து முடிமுத றடவக்
கேள்வித்துறை போகி வேள்வி முற்றிய
அந்த ணாளர் தந்தொழி றொடங்கப்
பால்வெண் குருகின் பன்மயிர்ச் சேவல்
பூம்பொறிப் பெடையைப் புலவி யுணர்த்திப் 15
பொறிப்பூம் பள்ளி புகாஅ தயல
மதிதோய் மாடத்து மழலையம் புறவொடு
வெள்ளிவெண் மாடத்துப் பள்ளி கொள்ளும்
பசும்பொ னகரமர் விசும்புபூத் ததுபோல்
செழுஞ்சுடர் விளங்குஞ் சிறுபுன் மாலை 20
வையெயிற்றுத் துவர்வாய வாசவ தத்தைதன்
தார்ப்பூண் மார்பிற் றந்தை கடிமனைச்
சீர்ப்பூண் களைந்த சில்லென் கோலமொடு
நிலாவெண் முற்றத்துலாவி யாடிச்
செம்முது செவிலியர் கைம்முதற் றழீஇய 25
சாலி வாலவிழ் பாலொடு கலந்த
தமனிய வள்ளத் தமிழ்த மயிலாள்
யானையும் புலியுங் கூன்றஃ கரடியும்
அரிமா னேறு நரிமான் சூழ்ச்சியும்
… வுங் காட்டமொ டெனையவை பிறவும் 30
தந்நுரைக் கிளவியிற் றந்துறை முடித்த
தன்னிணை யாயம் பன்னொடி பகரச்
செவியிற் கேட்குஞ் செலவஞ் செய்யாது
நண்ணிய தோழியொடு கண்ணிற் காணக்
கலவ மஞ்ஞை கவர்குரல் பயிற்றி 35
இலவங் கொம்புதோ றிறைகொண் டீண்டப்
பொறிவரி யிரும்புலிப் போத்துநனி வெரீஇ
மறியுடன் றழீஇய மடமா னம்பிணை
துள்ளுநடை யிரலையொடு வெள்ளிடைக் குழுமப்
பிடிக்கணந் தழீஇய பெருங்கை யானை 40
இடிக்குர லியம்பி யெவ்வழி மருங்கினும்
நீர்வழிக் கணவரு நெடுங்கைய வாகிக்
காரிரு முகிலிற் கானம் பரம்பச்
செழுநீர்ப் பொய்கையுட் கொழுமலர் கூம்பப்
புள்ளினங் குடம்பை சேரப் புல்லென 45
அம்புறு புண்ணி னந்திவந் திறுப்ப
வயந்தகன் கூற்று
[தொகு]ஓங்கிய பெரும்புக முருமண் ணுவாவுறை
தேங்கமழ் திருநகர்த் திசையு மெல்லையும்
ஆற்ற திடரு மவ்வழி யுள்ள
பொல்லாக் குறும்பும் போகுதற் கருமையின் 50
காலை நீங்கிய மாலை யாமத்துப்
பனிப்பூங் கோதையொடு தனித்தன மியங்கின்
அற்றந் தரூஉமஃ தமைச்சிழுக் குடைத்தென
உற்ற தோழ னுதயணற் குரைக்கும்
கொடியணி நெடுமதிற் கொற்றவன் மடமகள் 55
பிடிமிசை யிருந்து பெருங்கவின் வாடி
வருத்த மெய்திய வண்ணமும் வழிநடந்
தரத்த மார்ந்த வஞ்செஞ் சீறடி
கோவத் தன்ன கொப்புளங் கூர்ந்து
நோவ வொல்கி நொசிந்த மருங்குலள் 60
அமிழ்துற ழடிசி லயிலா வசைவொடு
நவைகொண் டழிந்து நடுக்க மெய்தித்
தாங்க லாற்றா டளர்தலு மாங்கே
உலைவில் பெரும்புகழ் யூகி யொட்டார்
நிலவரை நிமிர்வுறு நீதி நிறீஇக் 65
கூற்றுறழ் மொய்ம்பி னேற்றுப்பெய ரண்ணல்
பரந்த படையொ டிருந்தினி துறையும்
புகலரும் புரிசைப் பொருவில் புட்பகம்
இருளிடை யெய்திப் பொருபடை தொகுத்துக்
காலை வருவேன் காவ லோம்பிப் 70
போகல் செல்லாது புரவல விருவென
உள்ளத் துள்பொரு ளுணர்ந்தோன் போல
வள்ளிதழ் நறுத்தார் வயந்தக னுரைத்த
மாற்றங் கேட்டே மன்னவன் மனமுவந்
உதயணன் கூற்று
[தொகு]திற்றுங் கேளென மற்றவற் குரைக்கும் 75
கொடியணி நெடுமதிற் கொடிக்கோ சம்பிப்
படியணி நெடுங்கடைப் பகலங் காடியுள்
ஊறுகளி யானை யொருங்குட னேற்றி
வீறுபடு கோலமொடு வியனகர் விழவணி
கொண்ட காலைத் தண்டப் பாற்படுத் 80
தென்னணி பெருங்கலந் தன்னணிந் தேற்றிய
குற்றமில் பெரும்புகழ்க் கோப்பெருந் தேவி
கொற்றக் கோயிலுண் மற்றுப்பிற ரின்றித்தன்
பெருமலர்ச் சீறடி யிருநிலத் தியங்கத்
தண்ட வேந்தன் றமரா நமக்கெனக் 85
கொண்ட கொள்கையுங் குறிப்பினது நிலைமையும்
யானை வாரியுஞ் சேனை வீடும்
அடுத்தனை யாராய்ந் தறிய வென்வயின்
நெடித்தல் செல்லாய் விடுத்த னீயென
விடுத்தனன் விடுத்து வேந்த னிருந்த 90
அந்தக் கோட்டியுண் மந்திர மாகப்
பெரும்பொரு ளிதுவெனப் பொருந்தக் கூறி
அரும்பெறல் யூகியு முருமண் ணுவாவும்
வயந்தகன் வரினு நயந்தனன் றெரியா
திருக்க தானென நெறிப்படக் கூறிக் 95
குறிப்பெழுத் தோலை பொறிப்புனைந் தொற்றிய
அம்மடி யன்றியு மாகு மெய்ம்மொழி
வருவோர்க் கறியக் கூறி மற்றென்
செருவில் வேந்தன் செய்கை யென்ற
பின்ன ரல்லது துன்னின ரிவரெனத் 100
துணியப் பெறாயெனத் துணிந்தியான் கூறிய
பணிவகை யுண்டது பண்டைக் காலத்
தின்றிந் நிலைமைக் கன்றது நினைப்பின்
அற்றத் தருமென வுற்ற தோழற்
கடையா ளருண்மொழி யறியக் கூறிப் 105
படையாள் கடுந்தொழிற் பற்றா மன்னன்
பாவையைத் தழீஇப் பண்ணுப்பிடி யேற்றி
எய்தா வரும்பொரு ளெய்திய பின்றைப்
பொய்வகை புணர்த்த புணர்ப்பும் போந்தபின்
செய்வகை யறிதற் பொருட்டுஞ் சேனையுள் 110
உய்வகை மற்றவ னொழிந்த வுறுதியும்
உறுதி யோரான் பிறிதுநினைந் தொற்றிக்
குஞ்சரங் கடாஅய்க் கொணர்மின் சென்றெனும்
வெஞ்சின வீரன் வெகுட்சியும் வெகுட்சியின்
விடுத்த பல்படை பெயர்த்தற் பொருட்டா 115
நம்படை யொழிந்த வண்ணமும் வெம்படைக்
காவல னாடு கங்கு னீங்கிச்
சார வந்த தன்மையுஞ் சார்ந்தபின்
அரும்பொறி யழிந்த வெந்திரம் போல
இரும்பிடி வீழ்ந்தத னின்னுயி ரிறுதியும் 120
இற்ற விரும்பிடிப் பக்க நீங்கி
இடுக்க ணெய்தி யிலங்கிழை மாதர்
நடக்க லாற்றா ணடுக்க மெய்திக்
கடக்கருங் கானத்துக் கரந்த சேக்கையும்
சேக்கையு ணின்றுநீ சென்ற செலவும் 125
வாய்ப்பக் கூறி வாட்படை தொகுத்து
வையம் பூட்டி வழிவரல் விரைந்தென்
எவ்வந் தீர விருள்கழி காலைக்
கோற்குறி யெல்லையுட் குறிவழி வம்மென
வாட்டிறல் வத்தவன் வயந்தகற் போக்கிப் 130
உதயணன் செயல்
[தொகு]பணிவரை மார்பன் றனிய னாகி
வேழ வேட்டத்து வீழ நூறி
அருஞ்சிறை யெய்தி யாப்பொடு புக்க
பெருஞ்சிறைப் பள்ளிப் பேரிருள் போலும்
தும்பப் பெருங்கடற் கின்ப மாகி 135
மாந்தளிர் மேனி யேய்ந்துபுணை யாக
நீந்துதல் வலித்த நெஞ்சின னாகிக்
கணையொடு திரிதருங் காமன் போலத்
துணைநல மாதரைத் தோழியொடு துயிற்றித்
துஞ்சல் செல்லான் வெஞ்சின விடலை 140
வாள்வலங் கொண்டு காவ லோம்ப
வரிநிறக் கோம்பி வாலிமிழ்ப்பு வெரீஇ
எரிமல ரிலவத் திருஞ்சினை யிருந்த
அலந்த மஞ்ஞை யாமங் கூவப்
புலர்ந்தது மாதோ புரவலற் கிரவென். 145
1 54 வயந்தகனகன்றது முற்றிற்று.